கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வேப்பம்பூ குறிப்புகள்

Tuesday, December 29, 2015

Road Song

சில நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கதையொன்றைப் பின் தொடர்ந்து செல்கின்ற குறும்படம், Road Song . திருவண்ணாமலைக் கோயிலில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த ஒருவர் பழனிக்கு முருகனை வழிபடச் செல்கின்றார். அங்கே சாப்பிடும் பப்பாசியின் உருசியில் மயங்கி, அந்த பப்பாசி மரத்தின் வகையைத் தேடி பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கின்றார். இறுதியில் கேரளாவில் கடற்கரையோரத்தில் அந்த பப்பாசி வகையைக் கண்டுகொள்ளும்போது மகிழ்ச்சியில் பாடுகின்றார். அவ்வாறு அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தவரை அந்தக் கடற்கரையோரம் வந்த போர்த்துக்கேயர் தங்கள் கப்பலில் ஏற்றிச் செல்கின்றனர். அவ்வாறு வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்ட இந்தத் தமிழர் ஸ்பெயினில் ஒரு கிராமத்தில் வாழ்நாள் முழுதும் பாடி இறுதியில் அங்கே இறந்தார், புதைக்கப்பட்டார் என்கின்ற ஒரு ஜதீகக் கதை இப்போதும் ஸ்பெயினில் இருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. இந்தக் கதையைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் தொடருவதே இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தை இயக்கியது பினு பாஸ்கர். நண்பர் அய்யனாரின் பங்களிப்பும் இதில் இருக்கின்றது. அய்யனாரின் ஊடாக இத்திரைப்படத்தில் தயாரிப்பாள (கனடாவிலிருக்கும்) நண்பரினூடாக எனக்கு இந்த படம் வெளிவந்த காலத்தில் கிடைத்துமிருந்தது. நாங்கள் அப்போது 'சுடருள் இருள்' நிகழ்வை நடத்திக்கொண்டிருந்ததால், அந்த நண்பர் மிகுந்த உற்சாகத்தோடு தொலைவிலிருந்து என் வீட்டுக்குக் கொண்டு வந்து இப்படத்தைத் தந்திருந்தார். அடுத்து வரும் நிகழ்வில் இதைத் திரையிடுவதாகவும் அவருக்கு உறுதியளித்துமிருந்தேன். அவரும் தானும் நிகழ்வில் வந்து பங்குபெறுவதாய்க் கூறுயுமிருந்தார். தொடர்ச்சியாக 'சுடருள் இருளை' நிகழ்த்தமுடியாது நாளாந்த வாழ்க்கையிற்குள் சிக்கித் தவிர்த்தபோது இத்திரைப்படத்தை திரையிட முடியாதும், இடையில் நண்பரொருவரிடம் பார்க்கக் கொடுத்து அது திரும்பி வராமலும் போய்விட்டது.

இப்போது இத்திரைப்படத்தை இன்னொருமுறை பார்க்கும்போது அந்த ஜதீகக்கதையினூடாக ஸ்பெயினில் கிராமங்களிலிருக்கும் மக்களின் வாழ்க்கை அவர்களின் நாட்டாரியல் இசை என பலவற்றினூடாக இத்திரைப்படம் பயணிப்பதாய்த் தோன்றுகின்றது. அன்றைய காலத்தைப் போலவல்லாது இயற்கையின் மீது அளப்பெரிய காதல் வந்துள்ள இன்றைய காலத்தில் அன்று பார்த்ததை விட இப்படம் இன்னும் என்னைக் கவர்கின்றது.

ஒரு விடயத்தைத் தேடிப்போகும்போது அது நிச்சயம் கிடைக்கவேண்டும் என்றில்லை. சிலவேளைகளில் அதன் பொருட்டு நிகழ்த்தும் தேடல்/பயணம் நமக்குள் நாமறியாத வேறு பல திறப்புக்களைச் செய்யக்கூடும். நிதானமும் அமைதியும் கைகூடும்வேளையில் இக்குறும்படத்தின் ஒளிப்பதிவும், இசையும், இவற்றோடு உடன்வரும் தேடலும் உங்களுக்கும் என்னைப் போல நெருக்கமாகக் கூடும்.

Chekele

இசை கொண்டாட்டமானதுதான், அதற்குள் ஒரு வரலாறு இருப்பதும், கடந்தகாலத்தில் வாழ்ந்த சாதாரண மனிதர்கள் ஒரு பாடலினூடாக நினைவுகூரப்படுவது என்பதும் இன்னும் அழகானதுதானல்லவா? Chekele என்கின்ற இப்பாடல் ஒரு பழைய வரலாற்றைச் சொல்கின்றது. வறுமையினாலும், சாதியமைப்பினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் கதை இப்பாடலினூடாக வெளிவருகின்றது. 

தோட்டங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலை செய்து, விளைச்சலின் பெரும்பகுதியை நிலச்சுவாந்தர்களுக்கு உரிய நேரத்துக்கொடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குப் பயந்து சாத்தன் மற்றும் நீலி இருவரும் காட்டிற்குள் ஓடித் தப்புகின்றனர். அங்கே அவர்கள் தம் காதலைக் கண்டு கொண்டு வாழ்வை இனிதாக வாழ்ந்தனர் என்பது இப்பாடலின் பின்னாலிருக்கும் ஒரு கதை.

நாட்டார் பாடல் என்பதால் இதற்கு பல்வேறு வகையான இசை வகைமைகளும் இருப்பதும் தவிர்க்கமுடியாது. செவ்வியல் இசையிலிருக்கும் பாடலை Hard Rock ல் கேட்பதும் வித்தியாசமானதுதான். கொண்டாட்டமான இசையோடு,, மறைக்கப்பட்ட அல்லது எல்லோரும் கேட்க மனம் அவ்வளவு இசையாத ஒரு கதையும் கலக்கும்போது இசைக்கும் ஓர் அரசியல் வந்துவிடுகின்றது.



Joy

David Russellன், 'Silver Linings Playbook', 'American Hustle', 'Fighter' போன்ற படங்கள் எனக்குப் பிடித்தமானவை. அதிலும் 'Silver Linings Playbook', 'American Hustle' போன்றவற்றைப் பார்த்தே ஜெனிபர் லோரன்ஸின் தீவிர இரசிகனாவன். 'Joy' முற்றுமுழுதாக ஜெனிபர் லோரன்ஸின் படம். ஒரு பெண் தன் தனிப்பட்ட வாழ்க்கைத் தத்தளிப்புக்களோடு தான் விரும்பிய ஓரிடத்தை அடைகின்ற முயற்சியே இப்படம். ஏதோ ஒன்று குறைந்ததாய் அல்லது தவறவிடப்பட்டதாய் உணர்ந்த திரைப்படம் என்கின்றபோதும் நம் வாழ்வே அப்படியே கழிந்துகொண்டிருப்பதால் இதில் பெரிதாகக் குறையேதுமில்லை.

கூட வந்த நண்பர் தன் அனுபவங்களுக்கு அருகில் வரும் ஒரு திரைப்படம் என்று நினைவுகூர்ந்தார். முற்றுமுழுதான வெள்ளையின மக்களுக்கு மத்தியில் ஒரு தொழில் தொடங்கியபோது சந்தித்த நெருக்கடிகள் அவருக்கு நினைவு வந்திருக்கலாம். கிறிஸ்மஸ் இரவாயினும் படம் வெளிவருமன்றே இந்தப் படத்தைப் பார்க்கத் தேர்ந்தெடுத்ததே ஜெனிபர் லோரன்ஸிற்காக மட்டுமே.  இந்த வயதிலேயே என்னமாய் நடிக்கிறார் என்று ஒவ்வொரு படத்திலும் அவரை வியந்து பார்த்தபடியிருக்கின்றேன்.

அலையும் நினைவுகள்

Saturday, December 19, 2015

நேற்று எலிஸபெத் தனது நண்பர் ரிச்சர்ட் பற்றிப் பகிர்ந்திருந்தார். Eat, Pray, Love நூலை வாசித்ததவர்களுக்கு ரிச்சர்ட்டை எலிஸபெத் இந்தியாவிலுள்ள ஆச்சிரமத்தில் சந்திப்பது பற்றிய பகுதிகள் நினைவிருக்கக் கூடும். எலிஸபெத்தின் கடந்தகாலத்தில் உறைந்துவிட்ட மனதை ரிச்சர்ட்டே சற்று அதட்டிக் கதைத்து நிகழ்காலத்திற்குக் கொண்டுவருவார். பிறகான காலத்தில் எலிஸபெத்தும் ரிச்சர்ட்டும் அமெரிக்காவில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது அவர்கள் கிராமப்புறமாய்க் காரில் போகும்போது, சனநடமாட்டமற்ற ஒரு வீட்டை உடைத்து உள் நுழைகின்றனர். எலிஸபெத் 2ம் மாடியிற்குப் போவதற்கான ஏணியைப் பிடித்துக்கொண்டிருக்க, ரிச்சர்ட் வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு யன்னலினூடாகவும் குழந்தை போல மகிழ்ச்சியாக எட்டிப் பார்த்தார் என -இப்போது இறந்துவிட்ட- ரிச்சர்ட்டை எலிஸபெத் நினைவுகூர்கின்றார்.

இதேமாதிரி வீடுகளிற்குள் களவாக நுழைந்து பார்ப்பதை கொண்டாட்டமானதாய் ஒரு திரைப்படத்தில் (பெயர் மறந்துவிட்டது) பார்த்தது நினைவுக்கு வருகின்றது. ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாய் எங்கோ ஓரிடத்தில் சந்தித்து நட்பாகின்றனர். பின்னர் இருவரும் வெவ்வேறு நகர்களுக்கு road trip செல்கின்றனர். ஒவ்வொரு புதிய நகரிலும் காணும் ஒரு குடும்பத்தைத் தெரிவுசெய்து, அவர்கள் வசிக்கும் வீடுகளை நோட்டம் விட்டு, பிறகு அந்தந்தக் குடும்பங்கள் வெளியே போகும்போது வீடுகளை நுட்பமாய் உடைத்து உள்நுழைவார்கள். அங்கேயே பல்வேறு தோற்றங்களுடன் வேடமிட்டு கலவியும் செய்கின்றனர் . ஓரிருமுறை வீட்டின் சொந்தக்காரர்கள் திரும்பிவர அரைகுறையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடித்தப்புவார்கள். அதிலொரு காட்சியில் முதிய தம்பதிகள் திரும்பிவர இவர்கள் அரைநிர்வாணமாய் நிற்கும் காட்சியைப் பார்த்து அவர்கள் திடுக்கிடுவதை இப்போதும் நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கக்கூடியது.

ருகி முரகாமியின் புதிய கதையான Scheherazade ல் இப்படி வீடுடைத்து உள்ளே நுழையும் கள்ளப் பழக்கம் பற்றியே அதிகம் விபரிக்கப்படுகின்றது. தன் பதின்மங்களில் ஒரு இளைஞன் மீது காதல்கொண்டு Scheherazade அவனது வீடு எப்படியிருக்குமென ஒருநாள் பாடசாலை நேரத்தில் அவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைகின்றார். அவ்வாறு நுழைந்து வெளியே வரும்போது ஏதாவது ஒருபொருளை அந்தப் பையனின் நினைவாக ஒவ்வொருமுறையும் எடுத்தும் கொண்டுவருவார். ஒருகட்டத்தில் அப்படி வீட்டிற்குள் அத்துமீறி நுழைவது இவருக்கு நிறுத்தவே முடியாத விளையாட்டாய் ஆகிவிடும். அதேசமயம் தான் அந்தப் பையனின் வீட்டுக்குள் நுழைவதை அவன் அறியவேண்டும் என்பதற்காய் சில பொருட்களை நுட்பமாய் விட்டுவிட்டும் வருவார். ஒருகட்டத்தில் தான் இப்படி அத்துமீறி நுழைவது கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸால் மாட்டவேண்டிவருமோ என்ற பயமும் Scheherazadeற்கு வருகின்றது. இந்த தொடர்ச்சியான நிகழ்வு எப்படி பின்னர் நிறுத்தப்படுகிறது என்பதை முரகாமி சுவாரசியமாகச் சொல்லியிருப்பார்.

இதேபோன்றுதானோ உலகில் செல்வந்தர்களாகவும்/செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருப்பவர்கள் சிலவேளைகளில் கடைகளில் பொருட்களைத் திருடச்செய்வதை அறியும்போது நினைப்பதுண்டு. பெறுமதியான எந்தப் பொருட்களை வாங்க பணமிருந்தும் ஏன் மிகச்சாதாரண பொருட்களை திருடுகிறார்கள், பிறகு பிடிபடுகின்றார்கள் என்று யோசிப்பதுண்டு. அது ஒரு குறுகுறுப்பான அவ்வளவு எளிதில் நிறுத்தமுடியாத செயல் போலும். அது ஒருவகையான "வியாதி' எனச் சொல்பவர்களும் உண்டு.

ஒரே ஒழுங்கில் எல்லாவற்றையும் வாழ விரும்புவர்களுக்கோ அல்லது சட்டம்/ஒழுக்கத்திற்குக் கட்டுப்படுபவர்களுக்கோ இவ்வாறான விடயங்களை அவ்வளவு எளிதாக விளங்கிக்கொள்ளவும் முடியாது.

(Oct, 2014)

வீடு by Warsan Shire

Sunday, December 13, 2015

-தமிழாக்கம்: டிசே தமிழன்

வீடு சுறாவின் வாயாக ஆகாதவரை
வீட்டைவிட்டு எவரும் வெளியேறுவதில்லை
முழுநகரும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணும்போதே
நீங்கள் நாட்டெல்லையை நோக்கி ஓடுவீர்கள்
உனது அயலவர்கள் உங்களை விட வேகமாக ஓடுகின்றனர்
அவர்களின் மூச்சில் இரத்தவெடில் அடிக்கிறது.
பழைய ரின் தொழிற்சாலையின் பின் கிறக்கமாய் முத்தமிட்ட
உங்களோடு பள்ளிக்கு வந்த பையன்
இப்போது தன்னைவிட உயரமான துவக்கை காவிக்கொண்டிருக்கின்றான்;
வீடு உங்களைத் தங்க அனுமதிக்காத போதே
நீங்கள் வீட்டைவிட்டு அகல்கின்றீர்கள்.
நெருப்பு காலின் கீழும்
சூடான இரத்தம் வயிற்றிலுமென
வீடு உங்களைத் துரத்தாதபோது
எவரும் வீட்டினிலிருந்து நீங்குவதில்லை.
கூர்மையான கத்தி உங்கள் கழுத்தை பயமுறுத்தாவரை
இப்படி நிகழுமென நீங்களொருபோதும் நினைத்ததுமில்லை.
உங்கள் கீதத்தை உங்களது மூச்சுக்கடியில் காவியபடி
விமானநிலைய கழிவறைகளில் உங்கள் பாஸ்போர்ட்டைப் பக்கம் பக்கமாய் அழுதபடி கிழித்து
நீங்கள் இனி என்றுமே திரும்பிப் போவதில்லையென உறுதிப்படுத்துகின்றீர்கள்.
நீங்கள் விளங்கிக்கொள்ளத்தான் வேண்டும்
எவரும் கடல், நிலத்தைவிட பாதுகாப்பென்று உணராதவரை
தங்கள் குழந்தைகளைப் படகுகளில் ஏற்றுவதில்லை
ரெயின்களுக்கு அடியினுள் பதுங்கியபடி
எந்த ஒருவரும் தங்கள் பாதங்களை எரித்துக்கொள்வதில்லை
டிரக்குகளின் வயிற்றுக்குள் இரவையும் பகலையும் கழித்தபடி
பத்திரிகைகளை சாப்பிட்டபடி
மைல்கள் கடப்பது பயணம் என்பதைவிட
வேறொரு அர்த்தம் தராதவரை
எந்த ஒருவரும் இப்படிப் பயணிப்பதில்லை;
எவரும் பாதுகாப்பு வேலிகளுக்குள் தவழ்வதுமில்லை
எவரும் அடிவாங்க விரும்புவதுமில்லை.
எவரும் அகதி முகாங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை
அல்லது உடல் நோகும்வரை உடல் பரிசோதனையை விரும்புவதில்லை
அல்லது சிறை.
எரிந்துகொண்டிருக்கும் நகரொன்றைவிட
சிறை பாதுகாப்பானது
எனெனில்
உங்கள் தந்தையைப் போலத் தோன்றும்
இரவு சிறைக்காவலர்
டிறக் வண்டி நிரம்பிய ஆண்களை விட பாதுகாப்பானவர்
யாரும் உங்களை அங்கிருந்து அகற்றிவிட முடியாது
யாரும் உதைக்க முடியாது
யாருடைய தோலும் அவ்வளவு தடிப்பாக இருக்காது.
நாடு திரும்புங்கள் கறுப்பர்களே
அகதிகளே
ஊத்தை குடிவரவாளர்களே
தஞ்சம் கோரியவர்களே
எங்கள் நாட்டை உறிஞ்சாதீர்கள்.
கைகளை வெளியே விட்ட கறுப்பர்கள்
கெட்ட வாசமுடையவர்கள்
நாகரீகந் தெரியாதவர்கள்
தங்கள் நாட்டைக் கெடுத்தது காணாதென்று
நம் நாட்டையும் சிதைக்க வந்திருக்கின்றார்கள்
என்ன மாதிரியான வார்த்தைகள்
கேவலமான பார்வைகள்
முதுகின் பின் கரைகின்றன
சிலவேளைகளில் அது
விலா எலும்புகள் முறிக்கப்பட்டதை விட
இதமாக இருக்கிறது
அல்லது இந்த வார்த்தைகள்
பதினான்கு ஆண்கள்
உங்கள் கால்களுக்கிடையில் இருந்ததை விட
மென்மையாக இருக்கிறது
அல்லது
இந்த நிந்தனை
சிதைவுகளை விட
எலும்புகளை விட
துண்டு துண்டாக்கப்பட்ட குழந்தையொன்றின் உடலைவிட
விழுங்குவதற்கு எளிதாக இருக்கிறது
நான் வீடுநோக்கி போகவிரும்புகிறேன்
ஆனால் வீடென்பது
சுறாவின் வாயைப் போன்றது
துப்பாக்கியின் உருளையைப் போன்றது.
கடற்கரையை நோக்கித் துரத்தாதவரை
வீட்டை விட்டு எவரும்வெளிக்கிடுவதுமில்லை.
மேலும் ஆடைகளை விட்டுவிட்டு
பாலைவனத்திற்குள்ளால் தவண்டபடி
சமுத்திரங்களுக்குள் தத்தளித்தபடி
விரைவாக ஓடும்படி வீடு சொன்னது;
மூழ்குதல்
காப்பாற்றுதல்
பட்டினியோடு இருத்தல்
மன்றாடுதல்
கெளரவத்தை இழத்தல்
எல்லாவற்றையும் விட நீங்கள் உயிரோடு இருத்தல் அவசியம்
பிசுபிசுப்பான ஒரு குரல் காதிற்குள்
போ!
என்னை விட்டு ஓடு!
நான் என்ன ஆகுவேன் எனத் தெரியாது
ஆனால் வேறெந்த இடமும்
என்னை விடப் பாதுகாப்பானது !
எனச் சொல்லும்வரை
எவரும் வீட்டை விட்டு நீங்குவதில்லை.

On the Road

Sunday, November 22, 2015


சாலி என்கின்ற ஓர் இளம் எழுத்தாளனின் எல்லையற்ற பயணமே இத்திரைப்படம். எழுதுவதற்கான அனுபவங்ளுக்காய் 'ஒழுக்கம்' எனச்சொல்லப்படும் எல்லாவற்றையும் மீறி, தெருக்களில் பயணிக்கின்ற குறிப்புகளின் வழியே காட்சிகள் படிமங்களாகின்றன. ஒரு எதிர்பாராத சந்திப்பில் சாலி, டீனைச் சந்திக்க கூடவே அவர் ஒரு பயணத் தோழமை ஆகின்றார். சாலி, தான் தெருக்களில் கடந்துபோகும் அனைத்து அனுபவங்களையும் -டீனின் சொந்த வாழ்க்கை உட்பட- பதிவுசெய்கின்றார். அளவற்ற குடி, எல்லையற்ற போதைப்பொருள் பாவனை, தற்பால், கூட்டுக்கலவி உள்ளிட்ட கட்டுக்கடங்கா காமமென 'ஒழுக்கம்' என வரையறுக்கப்பட்ட அனைத்து மதிப்பீடுகளையும் மீறுகின்றதாய் அனுபவங்கள் விரிகின்றன. தோழமையிற்காய் தன் மனைவியின் அன்பை நிராகரிக்கின்ற, தன் காதலி விரும்புகிறார் என்பதற்காய் நண்பனையும் படுக்கையறைக்குள் அழைக்கின்ற, நம் கற்பனையிற்கும் அப்பால் இருக்கின்ற மனிதர்கள் இத்திரைப்படத்தில் வந்துகொண்டேயிருக்கின்றார்கள்.

அப்படியிருந்ததும் ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் இந்த நட்பு மெக்ஸிக்கோப் பயணத்தில் நிராகரிக்கப்படுவதும், அதை இன்னொருவிதமாய் சாலி நியூ யோர்க்கில் வைத்து நுட்பமாய் பழிவாங்குவதும், கட்டுக்கடங்காத இளமை வாழ்வு ஒரு 'பக்குவமான' நிலையை நோக்கிச் சென்றடைகின்ற தருணங்கள் அவை. ஆனால் அந்தக் குற்றவுணர்வே சாலியை 'பேய்த்தனமாய்' ஒரு நாவலை எழுதவைக்கிறது. அது இன்னொருவகையில் நண்பனின் கடந்தகாலத் தோழமையிற்கு மனம் கனிந்து நன்றி கூறுகின்ற நிகழ்வு எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஜாக்கின் (Jack Kerouac) சொந்தவாழ்வின் இன்னொரு தெறிப்பாகவே சாலி என்னும் எழுத்தாளன் இருக்கிறார். தனக்கு இயல்பாய் ஏற்படும் தற்பால் விருப்பைக் கண்டுகொண்டு, நண்பனுடன் பகிர்கின்ற அலன் கிங்ஸ்பெக்கும் இதில் வருகிறார். ஜாக்கின் நண்பனான டீனின் மீது அளவற்ற காதல் வைக்கும் அலன் கிங்ஸ்பெக்கின் காதல் நிராகரிக்கப்படுகிறது. 'தற்கொலையின் எல்லைவரை சென்று வாழ்வின் அழகான தருணங்களை விரும்புவதால் மீளவும் வாழ வந்திருக்கின்றேன்' என அலன் சொல்கின்ற இடம் அற்புதமானது. 21 வயதிலிருக்கும் அலன் உலகைத் திரும்ப வைக்கின்ற கவிதையை தன் 23ம் வயதில் எழுதிவிடுவேன் என்கின்ற அவரின் தன்னம்பிக்கை அவ்வளவு எளிதில் எவருக்கும் வாய்த்தும் விடாது.
ஜாக்கிற்கு அலனோடு இருந்த நட்பைப் போல, வில்லியம் பாரோஸோடு இருந்த தோழமையும் பலரும் அறிந்ததே. 'பீட் ஜெனரேசனில்' இவர்கள் மூவரின் பங்களிப்பும் முக்கியமானது. ஜாக்கின் On the Road போல, வில்லியம் பாரோசின் Naked Lunchம், அலன் கிங்ஸ்பெக்கின் Howlம் 'அடிக்கடி 'பீட் ஜெனரேசனிற்கு' உதாரணம் காட்டப்படுபவை.
எப்போதும் Road movie எனப்படும் genre என்னை வசீகரிப்பவை. அதிலும் ஒரு எழுத்தாளனாய் வரத் துடிப்பவனின் பயணம் இன்னும் கவரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மேலதிகமாய் இந்தத் திரைப்படத்தை இதே genre ஜச் சேர்ந்த 'மோட்டார் சைக்கிள் குறிப்பு'களை இயக்கிய வால்டர் சாலிஸ்சே திரைப்படமாக ஆக்கியுமிருக்கின்றார் என்பதால் இன்னும் உற்சாகத்துடன் பார்க்க முடிந்தது. சாலியினதும், டீனினதும் தெருப்பயணங்களில் கூடவே பயணிக்கின்ற மரிலூவாக நடித்திருக்கின்ற Kristen Stewart அப்படி அசத்துகிறார். Twilight போன்ற வகைப்படங்களில் மட்டுமே நடிக்க முடியும் என்கின்ற விம்பத்தை மிக எளிதாக Kristen இதில் உடைத்தும் விடுகிறார்.
ஜாக் தொடர்ச்சியாக எழுதிய மூலப்பிரதி பல்வேறு திருத்தங்களின் பின்னரே, முதன்முதலாக நூலாக அச்சிடப்பட்டது. அண்மையில் இந்நாவலின் 50வது வருட நிறைவு ஆண்டில், அசல் பிரதி வெளியிடப்பட்டிருக்கிறது. மூலப்பிரதியில் விலத்தப்பட்ட காமம் சார்ந்த பகுதிகளும், உண்மையான நபர்கள் (முதற்பதிப்பில் மாற்றப்பட்டிருக்கின்றன) விபரங்களும் இப்போது எல்லோரின் பார்வையிற்கும் பொதுவில் வெளிவந்திருக்கின்றன. இப்படமும் அந்த மூலப்பிரதியை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கின்றது. Bernardo Bertolucciயின் 'The Dreamers' ற்குப் பிறகு இந்தளவு காமம் ததும்பும் காட்சிகளை இந்தப் படத்திலேயே பார்க்கின்றேன்.
எழுதுவதற்காய், எழுத்தாளனாய் மாறுவதற்காய் இப்படி முழு வாழ்க்கையையும் பணயம் வைக்கவேண்டுமா எனக் கேள்விகள் நமக்குள் எழலாம். ஜாக் போன்றவர்களின் சொந்த வாழ்க்கையை விட, அவர்கள் தம்மை அழித்தெழுதிய பிரதிகள் நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை. அதுவே நம்மை ஜாக் போன்றவர்களை வியப்புடன் பார்க்க வைக்கிறது; மனம் நெகிழ்ந்து அவர்கள் மீது இன்னும் காதல் கொள்ளச் செய்கிறது.

பயணக்குறிப்புகள்- 10 (India)

Thursday, November 19, 2015

-முரண்களுக்குள் விரியும் அழகிய தருணங்கள்

நானும் ஹசீனும் குடநாட்டு உணவகமொன்றில் பொளிச்சமீனையும் புட்டையும் உருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்தார், ஷோபா சக்தியோடு நிற்கின்றோம் வருகின்றீர்களாவென்று. ஷோபாவும், ஹசீனோடும் என்னோடும் பேசினார். அடுத்தநாள் காலையே இராமேஸ்வரம் பக்கமாய் அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் படப்படிப்பிற்குப் போகவேண்டியிருக்கிறது என்றார். சிலநாட்களில் ஹசீன் இலங்கையிற்கும், ஓரிரு வாரங்களில் நான் கனடாவிற்கும் திரும்பவேண்டியிருந்ததால் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாதென்று புறப்பட்டோம். நாங்கள் நின்றது இன்னொரு முனையில். ஒருமாதிரியாக திசைகளைத் துழாவித் துழாவி எக்மோர் பக்கமாய்ப் போய்ச் சேர்ந்தோம்.

நீலகண்டன், அமுதா, சித்தார்த் தவிர்த்து அங்கே ஏஞ்சல் கிளாடி, லிவிங் ஸ்மைல் வித்யா, கவின்மலர், சுகுணா திவாகர் என நிறைய நண்பர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். வழமைபோல ஷோபாவோடு அரசியலே பேசினேன். 'ஆயுத எழுத்து' வாசித்துவிட்டீர்களா?' என்றேன். அதுகுறித்து சற்று விரிவாகப் பேசினோம். நாமிருந்த 'நிலை' அப்படியென்பதால் அவற்றை இங்கே இப்போது பகிர்வதும் அவ்வளவு நல்லதுமல்ல. அ.முத்துலிங்கம் ஒருகதையில் கிரனைட்டின் கிளிப்பைக் கழற்றிவிட்டு எறிந்துவிளையாடியதை எழுதியதில் ஒரு 'லொஜிக்' இருக்கிறது என்றார் ஷோபா. தனது முகநூலில் இதுகுறித்து ஒருவிவாதத்தில் -ராகவனைத் தவிர- வேறு யாரும் விளக்கம் சொல்லலாம் என தான் எழுதியதையும் ஷோபா நினைவுபடுத்தினார்.

நல்லவேளையாக நான் அப்பொழுது 'பதினொராவது பேயை' வாசித்திருக்கவில்லை. தனக்கும் அ.முத்துலிங்கத்திற்கும் 'கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்' நட்பு இருப்பதாகச் சொல்லும் ஷோபா இந்தக் கதையிற்கும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கலாம், யார் கண்டார்? அ.முத்துலிங்கத்தை ஒருகாலத்தில் ஏன் எங்களின் பிரச்சினைகள் பற்றி எழுதுவதில்லை என்று அவர்மீது நிறைய விமர்சனக்கல்லெறிந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், அவரின் 'பதினொராவது பேயை' வாசித்தபின், எறிந்த கற்களையெல்லாம் பொறுக்கியெடுத்து எனக்கு நானே எறிந்துகொள்கிறேன், தயவு செய்து எங்களின் பிரச்சினைகள் பற்றி கொஞ்சக்காலம் எழுதாமல் இருங்களேனென இறைஞ்சலாம் போலிருக்கிறது.

ஷோபா, பழைய இயக்கக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். சில இயக்க ஆட்களின் பெயரைச் சொல்லிக் கேட்டபோது எனக்குத் தெரியாமல் இருக்கிறதெனச் சொன்னேன். 'இவன் இப்படித்தான் அந்தக்காலத்தில் நாங்கள் சின்ன ஆட்களாய் இருந்தோம் எனச் சொல்லித் தப்பிவிடுவான்' எனச் சொன்னார். நான் ஒருபோதும் எந்த விவாதத்திலும் இப்படிச் சொன்னதேயில்லை. நீங்கள் யாரோ சொன்னதை நான் கூறியதாய் நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள் என மறுத்தேன். இதையே ஒரு 'சாட்டாக' ச் சொன்னால், ஷோபாவிடமும் இந்திய இராணுவத்திற்குப் பிறகு ஈழத்தில் இல்லாத உங்களைவிட எங்களுக்கு நிறையத் தெரியுமென அவர் கூறுவதையே நாங்கள் மறுக்கமுடியும். நான் இதையும் செய்யப்போவதில்லை.

இடையில் ஷோபா தொடர்ந்து நிறையப் பேசிக்கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த ஒரு நண்பர் 'என்ன ஆகாசவாணி முடிந்து ரூபவாஹினி தொடங்கிவிட்டதா?' என நகைச்சுவையாகத்தான் சொன்னார் என்றாலும் நான் அவரை இடைமறித்து, 'நாம் தமிழர் போன்ற எங்கள் அரசியலைக் குத்தகையிற்கு எடுத்த தமிழகத்து ஆட்கள் எதைக் கதைத்தாலும் கேட்கின்றீர்கள், ஏன் எங்களின் சொந்தக்குரலிலேயே நமது கதைகளைக் கேட்கக் கஷ்டமாயிருக்கிறது? எனக் கேட்டதும் நினைவிலிருக்கிறது..

அரசியல் கதைத்தால் இறுதியில் போகுமிடம் வெறுமையானதே என்று தோன்றியதாலோ என்னவோ நான் ஏஞ்சல் கிளாடி பக்கம்போய் அவரின் நாடக/திரைப்பட அனுபவங்களைக் கேட்கத் தொடங்கினேன். என்னை யாரென்று தெரியாமலே, நான் அவர் கொரியாவிற்குப் போனது, வாடகையிற்கு வீடு கிடைத்துவிட்டதா என ஏற்கனவே அறிமுகமானவர் போல நிறையக் கேட்க அவருக்குச் சற்று வியப்பாயிருந்தது.

கிளாடி, மிஷ்கினின் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நடித்த தன் அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார். தான் சந்தித்தவர்களில் அற்புதமான இயக்குநர் மிஷ்கின் எனவும், தன்னைத் தொடர்ந்து நிறையப் புத்தகங்களை வாசிக்க உற்சாகப்படுத்தியவர் அவர் எனவும் சொன்னார். எனினும் தான் அப்படியொரு புத்தகப்பிரியை இல்லை என்று சற்று கவலைப்பட்டார். புத்தகங்களை பெருமளவு வாசிக்காதிருப்பது ஒரு பிரச்சினையேயல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிடயங்களில் விருப்பம் இருக்கும். நீங்களொரு performer,அது உங்களுக்கு மகிழ்ச்சி தருமெனில் அந்தத் திசையிலே நீங்கள் பயணிக்கலாம்தான் அல்லவா எனச் சொன்னேன்.

தொடர்ந்து மிஷ்கினின் படங்கள் பற்றி உரையாடியபோது, நீலகண்டன் மிஷ்கினின் படங்கள் என்கவுண்டருக்கு ஆதரவானது போன்ற நிலைப்பாட்டை உடையவை. 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' என்பவற்றைப் பார்த்த மக்களிற்கு அது இததகைய நிலைப்பாட்டுக்கு இன்னும் ஊக்கமளித்திருக்கும் எனச் சொன்னார். அது, ஒரளவு சாத்தியம் உள்ளதென்றாலும் என்கவுண்டருக்கு ஆதரவான அவற்றைவிட மோசமான திரைப்படங்கள் தமிழ்ச்சூழலில் இருக்கினறதெனச் சொன்னேன். ஏதோ ஒருவகையில் கருணையை நம்மிடம் கோரும் மிஷ்கினின் கதாபாத்திரங்களினூடாக மிஷ்கின் என்கவுண்டருக்கு ஆதரவானவர் என்ற விம்பத்தை உருவாக்கிக்கொள்ள இப்போதும் என் மனது இடங்கொடுக்கவில்லை.

ஆனால், நேற்று 'என்னை அறிந்தால்' பார்த்தபோது,'பெரும் நடிகர்கள்' நடிக்கும் இதுபோன்ற படங்களே மிகவும் ஆபத்தானவை. இவை குறித்த எல்லாம் நாம் உடனே எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டும் என்றே தோன்றியது. கெளதம் வாசுதேவன் எடுத்த படங்களில் தெரியும் பொலிஸ்/இராணுவம் மீதான பெருமிதங்கள் எல்லாம் சகித்துக்கொள்ளத்தக்கவையல்ல. கெளதம் வாசுதேவன் இன்னொரு மணி ரத்தினம் போன்றவர். இருவரும் நம்மை நெகிழ வைக்கக்கூடிய காதல் கதைகளை மிகுந்த அழகியலாக எடுக்கக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் இப்படி அரசு/இராணுவம்/தேசியப் பெருமிதங்களில் திளைத்து எடுக்கும் படங்கள் அருவருக்கச் செய்பவை மட்டுமல்ல, கோபத்தை வரச்செய்பவை.

அதிலும் நான் மிகவும் மதிக்கும் ஒரு நண்பர், 'என்னை அறிந்தால்' பார்த்துவிட்டு 'இது காக்க காக்கவிற்கும் வேட்டையாடு விளையாடுவிற்கும் நடுவில், அடித்துத் தூள் பரப்புகின்றார் கெளதம்' என்று எழுதியபோது இந்தப்படத்தைப் பார்க்காமலே யோசிததேன்; ஏற்கனவே வந்த இந்த இரண்டு படங்களுமே ஆபத்தானவை. இந்த இரண்டு படங்களுக்கு இடையில் வருகின்ற 'என்னை அறிந்தால்' இன்னும் மிக ஆபத்தாக அல்லவா இருக்கும் என்று. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு என்கவுண்டரை மிகமோசமாய் ஆதரித்த படம் என்பதோடு வேட்டையாடு விளையாடு, விளிம்புநிலையினரான தற்பாலினரையும் வில்லன்களாய் சித்தரித்தமையை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.

அழகியலை ஒரு காரணமாய்க் கொண்டு, நாம் அவை மூடிமறைக்கும் அரசியல் தவறுகளை மன்னிக்கவோ மறந்துவிடவோ முடியாது. அது நமக்கு நெருக்கமாய் இருக்கும் அ.முத்துலிங்கமாய் இருந்தாலென்ன, கெளதம் வாசுதேவனாய் இருந்தாலென்ன, நமது எதிர்ப்புக்களைப் பதிவு செய்தாகத்தான் வேண்டும்.

ஹொட்டலில் மதுபானவிடுதியை மூடும் நேரம் நெருங்கிவிட்டதென்றனர். இன்னும் சாப்பிடவில்லை என புகாரி ஹொட்டலுக்கு சாப்பிடச் சென்றோம். அங்கேயும் பொலிஸ் எப்போது உணவகத்தை மூடுவார்கள் என வெளியில் குழுமி நின்றார்கள். நான் பாஸ்போர்ட்டை எடுத்துவரவில்லை. கூட வந்த நண்பருக்கோ இந்தியாவில் நிற்பதற்கான ஒழுங்கான பத்திரங்களே இல்லை. தன் வாழ்நாளில் இப்படி நேரம் பிந்திச் செல்வது இதுதான் முதல் தடவை என்றார் பதற்றத்துடன். பொலிஸ் சைரன்களோடு நிற்கும் தெருக்களை விலத்தி விலத்தி சந்துகளுக்குள்ளால் போய்க்கொண்டிருந்தோம். அப்படி வழிமறித்தால் சூட்டிங் முடிந்து போகின்றோம். பாதை தவறிவிட்டதெனச் சொல்லச் சொன்னார். எனக்கு முன்பு இந்திய இராணுவ நேரம் இப்படித்தான் இயக்கக்காரர் மோட்டார்சைக்கிள்களில் குச்சொழுங்கைகளில் புகுந்து பாய்வது நினைவுக்கு வந்தது. ஆகக்குறைந்து அப்போது போலல்லாது , இப்போது சிறைக்குள் போட்டாலும், மண்டையில் போட்டுத் தள்ளமாட்டார்கள் என்கின்ற சிறு நிம்மதி இருந்தது.

ஷோபா என்னை தன் பிற நண்பர்களிடம் அறிமுகப்படுத்தியபோது, நானும் இவனும் (ஃபேஸ்புக்கில்) முரண்பட்டுக் கொண்டேயிருப்போம். ஆனால் இவனில் மதிப்பிருக்கிறது என்றே அறிமுகப்படுத்தினார். முரணியக்கமே நம்மை வாழ்வில் ஏதோ ஒருவகையில் முன்னகர்த்துகின்றது மட்டுமின்றி முரண் உரையாடல்களின் பின் ஒரு மெல்லிய நேசம் இருப்பதை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுகொண்டிருக்கின்றேன்.

நான் ஏற்கனவே பொளிச்சமீனை புட்டோடு சாப்பிட்டிருந்தாலும் இன்னொருமுறை புகாரியிலும் சாப்பிட்டேன். நாங்கள் சாப்பிடச்சொல்லி வற்புறுத்தியபோதும் ஷோபா அப்போதும் சாப்பிடாமலே இருந்தார். பார்சல் கட்டிக்கொண்ட ஷோபா நிற்குமிடத்திற்குப் போயாவது சாப்பிட்டிருப்பாரா என்று சற்று கவலை வந்தபோது எந்த முரண் உரையாடலும் எனக்கு நினைவுக்கு வரவில்லை.

அலைந்து திரிந்தவனின் கதை

Friday, November 13, 2015

-டிசே தமிழன்

லெக்ஸ், மகிழ்ச்சியென்பது மனித உறவுகளால் மட்டும் ஏற்படுவதில்லையெனச் சொல்லியபடி, ஆபத்துக்கள் பற்றி  எதுவும் அஞ்சாது இயற்கையின் அடியாழத்தை நோக்கி  தேடிச் சென்றவன் நீ. இனி தப்புவதற்கு எந்த வழியுமில்லையென மரணத்தை துளித்துளியாக வரவேற்றபோதும் உன்னருகில் இருந்த தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டுக்கொல்லாது, உனக்கு மிக விருப்பமான இயற்கையைப் போலவே சாவையும் இயல்பாகவே ஏற்றுக்கொண்டாய். இறுதியில் கூட, இந்த வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன் எனத்தான் உன்னை 24 வயதில் மரணம் தழுவியபோது வாக்குமூலமாய் விட்டுச் சென்றாய். எந்தப்பொழுதிலும் வாழ்வின் மீதான அவநம்பிக்கையைப் பற்றி நீ பேசவில்லையென்பதால்தான் இன்னும் என் மனதிற்குள் ஆழப்பதியமாகிப் போகின்றாய்.

வசதியான குடும்பப் பின்னணி, பல்கலைக்கழகத்தில் உயர்ந்த பெறுபேறு என எல்லாம் கிடைத்தபோதும்,  ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் வாழ விரும்பியதில்லை. நீ விரும்பியது இயற்கையோடு ஒன்றித்து வாழும் ஒரு நாடோடி வாழ்க்கை. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில், எல்லாவற்றையும் தமது உடமைகளாக்கும் காலத்தில் - முக்கியமாய் அமெரிக்கா போன்ற மேற்கு நாட்டில்- இது அவ்வளவு சாத்தியமானதுமல்ல. அறுபதுகளில் உச்சமும் ஈர்ப்பும் கொண்ட ஹிப்பிகளின் வாழ்தல் முறை எப்போதோ முடிந்துவிட,  நீ தொண்ணூறுகளில்தான்  உன்  அலைதலை ஆரம்பிக்கின்றாய்.

தேரோவும், ஜாக் லண்டனும், தால்ஸ்தோயும் உனக்கு மிக நெருக்கமானவர்கள் என்றாலும்,  'இளம் பயலே உன் வாழ்வில் செய்வதற்கு ஏதேதோ எல்லாம் இருக்கும்போது ஏன் இப்படி பாலைவனங்களில் அலைகிறாய்?' என ஒருவர் கேட்கும்போது, 'இந்த degree, career,  எல்லாம் 20 நூற்றாண்டின் கண்டுபிடிப்புக்கள், இவை எல்லாவற்றுக்கும் முன்னர் நமக்கு வேறொரு வாழ்விருந்தது' எனச் சிரித்தபடி சொல்வதற்கு நீ கற்ற புத்தகங்கள் மட்டும் காரணமாயிருக்காது.  நீ அவற்றைத் தாண்டியும் உன் சிறகுகளை விரிக்கத்தொடங்கி விட்டிருந்தாய் என்பதை எங்களுக்கு ஆழமாய் உணர்த்துகின்ற இடம் அது.

லெக்ஸ், நீ வனாந்தரங்களையும், பாலைவனங்களையும், ஆறுகளையும் தேடி எந்த இலக்குமில்லாது அலைவதற்கு முன், உனது சேமிப்பிலிருந்த 24,000 டொலர்களையும் ஒரு உதவி நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டு போனவன் என்பது மட்டுமின்றி, உனது கார் ஒரு ஆற்றுக்குள் சிக்குகின்றபோது காரை மட்டுமில்லை, உன்னிடமிருந்து எஞ்சிய காசையும் எரித்துவிட்டே செல்கின்றாய். பணம் என்பது மனிதர்கள் உருவாக்கிக்கொண்டதே அன்றி, அது எப்போதும் எம்மை தொந்தரவுபடுத்தியபடி, பிற மனிதர்களை புரிந்துகொள்ள தடங்கலாக இருக்குமென மிகத்தெளிவாகப் புரிந்து பணம் என்பதையே நிராகரித்தவன். எனினும் ஒருபோதும் நீயுனது நாடோடி வாழ்க்கையில் கிடைத்த எந்த வேலையைச் செய்ய மறுத்தவனுமில்லை. ஒருவகையில் கூட்டுழைப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடியவனும் கூட.

உன் பயணங்களில் சந்தித்த மனிதர்கள் எவருமே உன் இந்த இயல்பான நிலையை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ளவே இல்லை. ஆனால் அவர்களுடன் நீ பழகிய சொற்ப காலங்களுக்குள் -உனக்கு இயற்கையோடு இருக்கும் அளவற்ற காதலை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் கூட- உனது குதூகலமான நடத்தைகளால் கவர்ந்திழுக்கப்படவே செய்திருக்கின்றார்கள். ஆகவேதான் பாலைவனத்தில் தற்செயலாய் சந்திக்கும் ஒருவர், நீ அலாஸ்காவிற்கான உனது பயணத்தைத் தொடரும்போது, உன்னைத் தத்தெடுக்கின்றேன் என்கின்றார். உனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், அலாஸ்கா பயணம் முடிந்தபின் வந்தபின் இதுகுறித்து யோசிக்கின்றேன் எனப் புன்னகைக்கிறாய். உண்மையில் நீ அலாஸ்காவில் இருந்து திரும்பிவந்தாலும் இந்தத் 'தத்தெடுத்தலை' ஏற்கப்போவதில்லையென நாமனைவரும் அறிவோம்.

மிகுந்த வசதியான பெற்றோரை, உனக்கு மிக நெருக்கமான சகோதரியைப் பிரிந்துவந்து, அவர்களையே மாதக்கணக்கில் தொடர்பே கொள்ளாது காற்றைப் போல வீசும் திசைக்கேற்ப அலைந்துகொண்டிருந்த நீ எப்படி ஒரு தத்தெடுத்தலை, அதன் மூலம் உனக்கு வரப்போகும் சொத்தை ஏற்றுக்கொள்வாய்? எதையும் உடைமையாக்கக்கூடாது எனத்தானே, இருந்த சொற்ப பணத்தையே அலட்சியமாய் எரித்துவிட்டு நடந்துகொண்டிருந்தவன் என்பதை அவர் அறியார் அல்லவா? உனக்கு சொத்தென இருந்தவற்றை மட்டுமல்ல, உனது அடையாளங்கள் எல்லாவற்றையும் உதறித்தள்ளியவன். கடனட்டைகளிலிருந்து உன்னை யாரென காட்டக்கூடிய அடையாள அட்டைகள் வரை எல்லாவற்றையும் கிழித்தும் நெருப்பில் போட்டும் எரித்து கடந்தகாலச் சுவடுகளை உதறித்தள்ளியவன். சந்திக்கும் எவரும் உன் பெயரிலிருந்து உனது பூர்வீகத்தைக் கண்டுவிடக்கூடாதென்பதற்காய் அலெக்ஸ் என்ற புதிய பெயரைக் கூட நீயாகத்தானே தேர்ந்தெடுத்துக்கொண்டாய்.

னது இந்த அலைச்சலையும், இயற்கையின் மீதான பெருவிருப்பையும்,  நீ வழியில் சந்தித்த ஹிப்பிகளால் கூட முற்றுமுழுதாக விளங்கிக்கொள்ள முடியவில்லை அல்லவா? சிலவேளைகளில் உனது இளவயதும், எல்லாவற்றையும் முற்றுந் துறந்த நிலையும்,  அவர்களைக் கூட யோசிக்க வைத்திருக்கவும் கூடும். உனது வாழ்க்கையைப் பின் தொடர்ந்து பார்க்க விரும்பிய சிலர், நீயுன் சிறுவயதுகளில் பிணக்குப்பட்ட பெற்றோரையும், அவர்களின் பொய்களையும் கண்டுதான் இத்தகைய விளிம்பிற்குப் போயிருக்கலாமெனச் சொல்கின்றார்கள். அது ஒரு காரணமாய் இருக்கலாமெனினும், அது மட்டுமே இப்படி உந்தித்தள்ளியிருக்காதென நம்புகின்றேன். உன்னைவிட இன்னும் ஆழமான பாதிப்பிற்குப் பெற்றோரினால் உள்ளாக்கப்பட்ட எல்லோருமா இப்படி காசு, அடையாள அட்டையென எல்லாவற்றையும் எரித்துவிட்டு அடையாளமின்றி இயற்கையோடு ஒன்றிக்க விரும்புகின்றனர்? நிச்சயம் இதைத்தாண்டிய வேறு காரணங்கள் இருந்திருக்கவேண்டும். இயற்கையின் மர்மச்சுழல் உனக்குள் சுழித்தோடியிருக்கவேண்டும். அது உன்னை எதையும் கவலைப்படாது தன்போக்கில் இழுத்துச் சென்றிருக்கவேண்டும்.

அலெக்ஸ், நீ அலாஸ்காவில் இருந்து ஒருவேளை தப்பி வந்திருந்தால் நிச்சயம் உனது பெற்றோரை அவர்கள் செய்த தவறுகளைக்கூட மன்னித்து அரவணைத்திருப்பாய். உனக்கு நெருக்கமான தங்கை விழிகள் விரிய விரிய உனது அலைச்சலைப் பற்றி கேட்க இரவிரவாய் இருந்து விபரித்திருத்துமிருப்பாய். எனெனில் உனது பயணங்களோடு நீ ஒரு முதிர்ச்சியான ஆணாக வளர்ந்துகொண்டேயிருந்தாய். எல்லாவற்றையும் சகிக்க மட்டுமில்லை, எல்லோரையும் நேசிக்கவும் கற்றுக்கொண்டிருந்தாய். நீ மெக்ஸிக்கோ எல்லையைக் கள்ளமாய்த்தாண்டி திரும்பி வரும்போது பொலிஸ் உன்னை ரெயினிலிருந்து உதைத்து எறிந்தபோதும் அவர்களை மன்னித்துவிடக்கூடியவனாகவே இருந்தாய்.

ஆனால் எல்லாவற்றையும் உதறித்தள்ளியெறிந்த உனக்கு அதிகாரத்தைச் சுழித்துவிட்டுப் போகவும் தெரியும். ஆகவேதான் ஒரு நதியைக் கடப்பதற்கு வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டுமென பொலிஸ் கூறும்போது, ஒரு நதியைக் கடப்பதற்கும் அனுமதி  வேண்டுமா என நம்பமுடியாதபடி திரும்பத் திரும்பக் கேட்கின்றாய். பின்னர் அவர்களின் அனுமதியைப் பெறாமல், நதியைப் படகில் உன்பாட்டில் கடக்கவும் செய்கின்றாய். இயற்கையைக் கூட தன் அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அரசுக்கு எதிராய் எறிந்த கல்தானன்றோ இந்த நதி கடத்தல்?

னது மென்மனதை அறிந்தவர் எவரும் உன்னை அவ்வளவு எளிதில் பிரிந்துசெல்லவும் விடமாட்டார்கள். பாலைவனத்தில் அலைகையில் ஒரு பெண்ணுக்கு உன்மீது காதல் வருகிறது. என்னையே முழுதாகத் தருகிறேன் என ஒரு கிறிஸ்மஸ் நாளில் அவள் கூறுகின்றபோது, 'பதினெட்டு வயதே தாண்டாத ஒரு சின்னப் பெண் நீ, இது நல்லதல்லவென' மறுக்கவே செய்கின்றாய். நாடோடிகளாய் அலைபவர்கள் எல்லோரும் உடல்/உடலுறவு போன்றவற்றில் தறிகெட்டுத்தான் இருப்பார்கள் என்ற பொதுப்புத்தியை இந்தச் செய்கையின் மூலம் நிராகரிக்கவே செய்கின்றாய். ஆனால் அந்தப் பெண்ணை அப்படியே மனமொடிந்துபோக விடவும் நீ விரும்பவில்லை. ஆகவேதான் அவளோடு சேர்ந்து அந்த நள்ளிரவில் எல்லோருக்கும் முன்னிலையில் உங்களிருவருக்கும் பிடித்த பாடல்களைப் பாடுகின்றாய். அவள் என்றேனும் ஒருநாள், இன்னொரு ஆணுடன் உறவில் இருக்கும்போது உன்னை நெகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்ளாமலா போகப்போகின்றாள் அலெக்ஸ்?

அலாஸ்காவில் மூன்று மாதங்களுக்கு மேல் கழித்தபின் உனக்கான உணவெல்லாம் தீர்ந்தும் விடுகின்றன. வேட்டையாடுவதற்கான விலங்குகளும் குறைந்துவிட்டன. நீ திரும்புவதற்கான வழிகளும் அடைபட்டுவிட்டன. பசி, உன் வாழ்வைக் கொஞ்சம் கொஞ்சமாய் தின்னவும் தொடங்கிவிட்டது. நீ பசிக்காய் சாப்பிட்ட அலாஸ்கா உருளைகிழங்கெனப்படும் ஒருவகை செடியிலிருக்கும் விஷம், நீ சாப்பிடும் எதையும் சமிபாடு அடைவதையும் தடுக்கின்றது.

மரணம் நிச்சயமான நிலைமையில் நீ எடுத்துக்கொள்கின்ற ஒரு புகைப்படத்தையும் இறுதியில் எழுதிய வாக்கியங்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிடவும் முடியாது. இன்றும் அலாஸ்காவில் நீயொரு காலத்தில் தங்குவதற்கெனத் தேர்ந்தெடுத்த பஸ்ஸையும், நீ சென்ற வழித்தடங்களைத் தேடியும் பல நூற்றுக்கணக்கானவர்கள் சென்று கொண்டேயிருக்கின்றார்கள். ஒருவகையினருக்கு உன் வாழ்வு முட்டாள்தனமானதாகவும், இன்னொரு சாராருக்கு உன் வாழ்வு ஒரு வியத்தகு சாகசமாகவும் இருக்கின்றது. ஆனால் இந்த எல்லா வகையினரையும் தாண்டி உனது சகோதரி ஓரிடத்தில் குறிப்பிடுவதுபோல, சிலருக்கு 80 வயதிருந்தால் கூட சாத்தியமாகாத வாழ்வை, நீ 24 வயதிற்குள்ளேயே சாத்தியமாக்கிவிட்டுப் போயிருக்கின்றாய் என்பதல்லவா உண்மை.

எதையும் மேனிலையாகம் செய்வது எனக்குப் பிடித்தமானது அல்ல, அவ்வாறே நீ தேர்ந்தெடுத்த வழியையும் நான் மேனிலை செய்யப்போவதில்லை. வாழ்க்கை என்பதை எந்தவகையானது என்றாலும், ஒருவர் அவருக்குப் பிடித்தமாதிரி வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதே என்னளவில் முக்கியமானது. அந்தவகையில் உனக்குப் பிடித்த வாழ்க்கையை நீ வாழ்ந்திருப்பாய் என்றே எண்ணுகின்றேன். இயற்கையை நேசிப்பவன் அவ்வளவு எளிதில் தற்கொலையை நாடமாட்டானென -பட்டினியால் அணுஅணுவாய் வேதனைப்பட்டுத்தான் இறந்திருப்பாய் என்றபோதும்- உன்னை நீயே சுட்டுக்கொல்லவில்லை என்பது வாழ்வில் எதன்பொருட்டும் நம்பிக்கையை இழந்துவிடாதீர்களென நீ  பிறருக்குக் கற்றுத்தருகின்ற  ஒரு பாடம்.

என்றோ ஒருநாள் அலைந்து திரியும் ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுப்பேன் எனவே என் மனம் எப்போதும் சொல்லிக்கொண்டேயிருக்கின்றது. அது சாத்தியமாகுமா இல்லையா என்பதை நானறியேன். அப்படி சாத்தியமாகின், அலெக்ஸ் உன்னையும் என்னை வழிநடத்தும் ஒரு முன்னோடியாக எனக்குள் இருத்திக்கொள்வேன். உன் கதையை அறிந்துபோகின்ற வழித்தடங்கள் எங்கும் என் கண்களிலும் ஈரம் கசிந்துகொண்டிருந்ததை நீ மட்டுமே அறிவாய் அலெக்ஸ்.


(அலெக்ஸ் எனப்படும் Christopher McCandless பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபின் தனது நாடோடி வாழ்வைத் தொடங்குகின்றார். பயணத்தின் நீட்சியில் அலாஸ்காவில் பட்டினியின் நிமித்தம் மரணத்தை தழுவிக்கொள்கிறார். அவரது உடல் சிலவாரங்களின் பின் காட்டுமான் வேட்டைக்காய்ச் சென்றவர்களால் கண்டுபிடிக்கப்படுகின்றது. இவரைப் பற்றி  'Into the wild' என்ற தலைப்பில் முதலில் நூலாகவும், பின்னர் அதேபெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது)


(நன்றி: 'ஆக்காட்டி' -  இதழ் 08)

கனடாத் தேர்தல் - 2015

Sunday, October 18, 2015


ருகின்ற திங்கட்கிழமை (Oct 19) கனடாவிற்கான தேர்தல் நடக்க இருக்கின்றது.  தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டபோது  என்டிபி (புதிய ஜனநாயகக் கட்சி) முன்னணியில் நின்று, இடையில் வலதுசாரிகளான பழமைவாதக்கட்சியினர் ஓட்டத்தில் முன்னே போக, இப்போது லிபரல் கட்சியினர் முன்னணியில் நிற்பதாய் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. கருத்துக்கணிப்புக்கள் நடத்தும் நிறுவனங்கள், அவர்கள் சாம்பிள்கள் எடுக்கும் புவியியல் பின்னணி என்பவறிற்கும் ஓர் அரசியல் உண்டென்பதையும் ஒருபக்கம் நினைத்துக்கொள்வோம்.

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது (வாக்களிக்காமல் விடுவதும் கூட) அவரவர் உரிமை என்பதால் எவரையும் இந்தக் கட்சியிற்குத்தான் வாக்களியுங்கள் என வற்புறுத்த முடியாது. ஆனால் யாரைத் தேர்ந்தெடுத்தால் எமக்குக் குறைந்த பாதிப்பு என்றவகையில் சிந்தித்து வாக்களியுங்கள் என வேணடுமானால் சொல்லலாம்.


மக்கு எப்போதும் தங்குவதற்கு ,வாடகை கொடுத்து இருக்கக்கூடிய இடமொன்று இருப்பதோ அல்லது  (மோட்கேஜ் கட்டியபடி சொந்தமாகிக்கொண்டிருக்கும்) ஒரு வீடு இருப்பதோ என்பது நல்ல விடயமே. நாளை ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்குவதோ அல்லது இருக்கும் வீட்டை விட சொகுசான வீட்டைத் தேடிச் செல்வதில் கூட தவறில்லை. அதை ஒருவரின் தனி விருப்பமாக எடுத்துக்கொள்வதில் எந்தப் பிரச்சனையுமில்லை.

ஆனால் அதேசமயம் எமக்குத் தங்குவதற்கு ஒரு வீடு இருப்பது என்பதற்காய் எல்லோரும் அப்படித்தான் வாழ்கின்றார்கள் என நினைப்பதில்தான் சிக்கல்கள் இருக்கின்றன. இன்னமும் நிறையப்பேர் ஒரு ஒழுங்கான தங்குமிடம் இல்லாது அலைபவர்களாகவும், தமது வருமானத்தில் பெரும்பாகத்தை வீட்டு வாடகைகளுக்குக் கொடுப்பவர்களாகவும், அவர்களின் வளரும் பிள்ளைகள் வறுமைக்கோட்டிற்குக் கீழாகவும் இருக்கின்றார்கள் என்பதையும் ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.

கடந்த மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வென்ற பழமைவாதக் கட்சி வருமானம் குறைந்தவர்கள் வசிக்கக்கூடிய பொது வீட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தபடியே வந்திருக்கின்றது. அவ்வாறான வீடுகள் தேவையான மக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருந்தபோதும் அவர்களின் தேவையை நிவர்த்தி செய்யப்படாமலே இருக்கின்றது. இன்னமும் 90,000 மக்களுக்கு மேலே இந்த வீடுகளுக்கான 'காத்திருப்புப் பட்டியல்களில்' இருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. அதுபோலவே வீடற்றவர்களுக்கான தங்குமிடல்களையும் பல்வேறு இடங்களில் இந்த அரசு மூடியிருக்கின்றது. ஆகவே நமக்குத் தங்க ஓரிடம் இருக்கின்றது என்பதற்காய், மற்றவர்களுக்கும் இடமிருக்கின்றதென எண்ணாது, நமக்கு சிறுவயதில் சொல்லித்தந்த ஒரு மனிதனுக்கு அவசியமான உணவு/உடை/உறையுள் என்ற அடிப்படை வசதிகளாவது சக மனிதர்களுக்கும் இருக்கின்றதா என சற்று யோசிப்பதில் தவறிருக்காதெனவே நினைக்கின்றேன். அதை வழங்கக்கூடிய, அந்த மக்கள் மீது அக்கறையுள்ள ஓர் அரசைத் தேர்ந்தெடுங்கள் எனச் சொல்ல வருகின்றேன்.

இதேபோன்று, நாம் உழைத்துக்கொண்டிருப்பவர்களாய் இருப்பின் நமது சம்பளம் எவ்வளவானாலும் இருக்கட்டும். ஆனால் அடிப்படைச் சம்பளம் (ரொறொண்டோவில்)  $11.25/hr இருக்கின்றது. அதை என்டிபி கட்சி தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் கனடா முழுவதற்குமான அடிப்படைச் சம்பளமாக $15.00/hr  வரும் வருடங்களில் உயர்த்துவதாய்க் கூறுகின்றனர். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது ஒரு முதலாளித்துவ நாடு. ஆகவே நமது ஆசைகளை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டிருப்பார்கள். கனவுகள் எட்டுந்தொலைவில்தான் இன்னுமின்னும் கடுமையாய் உழை என்றே சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவ்வாறான கனவுகளைப் பின் தொடர்ந்து செல்கின்றவர்களை அவர்களின் சுயவிருப்பு என்ற பெயரில் ஏற்றுக்கொள்வதிலும் பிரச்சினையில்லை. ஆனால் அதேசமயம் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யமுடியாதவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

மேலும் புதிய குடியேற்றவாதிகளான நாமெல்லோரும் அடிப்படைச் சம்பளத்திலேயே வேலை செய்தவர்களாகவும்(செய்பவர்களாகவும்) இருந்திருக்கின்றோம். மாணவராக இருக்கும்போதே 17/18  வயதில் வேலை செய்யத்தொடங்கிய என்னைப் போன்றவர்களுக்கும் இதே அடிப்படைச் சம்பளமே வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போதும் நிலைமை மாறவில்லை அப்படியே இருக்கின்றது. ஆகவே அடிப்படைச் சம்பளத்தைச் சற்று உயர்த்தி எல்லோருக்கும் கொடுப்பதில் நாமெதையும் இழக்கப்போவதில்லை. அவ்வாறு அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தச் செய்யும் கட்சிகளுக்கு எமக்கு வாக்களிப்பு கூட நமது ஜனநாயக் கடமைகளில் ஒன்றெனச் சொல்லலாம்.



ன்னொரு முக்கிய விடயம், மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும்போது இருக்கும் கற்றலுக்கான செலவு. ஒவ்வொரு வருடமும் அது உயர்ந்து உயர்ந்து வானை முட்டுமளவிற்குச் செல்கின்றது. அதைவிட நாம் படிப்பதற்காய் எடுக்கும் கடனைத் திரும்பிக் கட்டத்தொடங்கும்போது கடன் தந்த அரசு, அதற்குப் பெரும் விகிதத்தில் வட்டியையும் வசூலிக்கின்றது. வாங்கிய கடனை திரும்பியளிப்பதில் எந்த மனஞ்சுணங்கலுமில்லை. ஆனால் அந்த வட்டி பிறகு குட்டிப் போட்டு வாங்கிய கடனுக்குக் கிட்டவாகக் கூட சிலவேளைகளில் வந்துவிடுகின்றது.

உண்மையில் இதன் நிமித்தமே ஒருகாலத்தில் மேற்படிப்புப் படிக்க விரும்பியபோது இன்னுமின்னும் கடனைக் கூட்டிச் செல்லவேண்டுமா என்ற சோர்வில் படிப்பதைத் தவிர்த்திருந்தேன்.  புதிய ஜனநாயக் கட்சி, படிப்பிற்காய்த் தரும் கடனுக்காய், அறவிடப்படும் வட்டியை தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் 7 ஆண்டுகளுக்குள் இல்லாமற் செய்வோம் எனக் கூறுகின்றார்கள். அது நல்ல விடயம். லிபரலும், புதிய ஜனநாயக்கட்சியினரும் மாணவர்களுக்காய் மில்லியன்கணக்கில் புதிய மானியங்களை (Grants) உருவாக்குவதாய்ச் சொல்கின்றார்கள்.

பழமைவாதக் கட்சியினருக்கு இதுகுறித்து அவ்வளவு அக்கறையில்லை. அவர்களுக்கு கனடாவில் இருப்பவர்கள் எல்லோரும் தங்களைப் போல பணக்காரர்கள் என்று நினைப்பு. ஒன்றை மட்டும் அவர்கள் சொல்கின்றார்கள், இதுவரை 60 வாரப்படிப்பிற்கு அரசு  கடன் கொடுத்ததை 34 வாரப் படிப்பிற்கும் கடன் எடுக்க உதவி செய்வோம் என்கின்றார்கள். ஆக இருக்கின்ற கடனை இன்னும் எப்படி நீட்சிக்கலாம் என்பது அவர்களின் கொள்கையாக இருக்கின்றது.

இன்று முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாய் கனடாவில் இருப்பது பூர்வீகக்குடிப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் காணாமற்போவது. இது குறித்து எந்தவிதமான அக்கறையையும் இப்போதிருக்கும் பழமைவாதக் கட்சி எடுக்கவில்லை. புதிய ஜனநாயக் கட்சியும், லிபரலும் தாம் ஆட்சியிற்கு வந்தால் உடனேயே ஒரு விசாரணைக்குழுவை அமைப்போம் எனச் சொல்கின்றார்கள்.  பூர்வீகக்குடிகளின் நிலத்தையே நாமெல்லோரும் பகிர்ந்துகொண்டிருக்கின்றோம். அவர்களின் இன்றைய நிலைமையோ மிகுந்த கவலைக்கிடமானது. கடந்தகால வெள்ளை மேலாதிக்கம் எப்படி அவர்களை திட்டமிட்டு ஒடுக்கியதென்று எளிய உண்மையை விளங்கிக்கொண்டால் இன்று அவர்கள் கேட்கும் அடிப்படை உரிமைகள், அவர்கள் வாழும் நிலஞ்சார்ந்த இடங்களை இனியேனும் ஆக்கிரமிக்காதல் என்பவற்றை விளங்கிக்கொள்ளும் ஓர் அரசு நமக்கு வேண்டியதாயிருக்கின்றது.

சூழலியல் நம் எல்லோருக்குமான பொதுவான பிரச்சினை. பழமைவாதக் கட்சியினருக்கும் சூழலியலுக்கும் எட்டாப் பொருத்தம். கனடாவிற்குள் நிலத்தினூடாக போகும்/ போகப்போகும் எல்லா பெரிய எண்ணெய்க் குழாய்களையும் கிறீன் கட்சி நிராகரிக்கின்றது. என்டிபியினரும்  பெரும்பாலும் கிறீன் கட்சியைச் சார்ந்தே நிற்கின்றனர். லிபரல் கட்சியினர் தேர்ந்தெடுத்த சில திட்டங்களை மட்டும் எதிர்க்கின்றனர். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போல, நாம் மட்டும் இந்தப் பூமியில் வாழ்ந்தால் போதாது, எமக்கு அடுத்த சந்ததிகளைப் பற்றியும் கொஞ்சம் யோசிப்பதோடு மட்டுமில்லாது எல்லோருடனும் சேர்ந்து இப்பூமியை இயன்றவரை பாதுகாப்போம்.


றுதியில் எனது அரசியலை பொதுவில் முன்வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கங்களுமில்லை. எனக்கு இங்கே வாக்களிக்கும் உரிமை கிடைத்தபோது முதன்முதலில் லிபரல் கட்சியிற்கு வாக்களித்திருக்கின்றேன். அதற்குப் பிறகு எனது வாக்கு எப்போதைக்கும் புதிய ஜனநாயக் கட்சியினருக்கே இருந்திருக்கின்றது. நான் கடந்தமுறை இருந்த தொகுதியில் ஒரு தமிழர் போட்டியிட்டபோதும் அவர் பழமைவாதக் கட்சியினராக இருந்ததால் -இப்போது கனடாத்தேர்தலில் நாகரீகமாகப் பேசப்படும் இனத்துவ வாக்கையும்- நிராகரித்திருக்கின்றேன்.

இடைக்கிடை grass roots movement ஆன  No One Is Illegal மேதின ஊர்வலங்களில் முன்வைக்கும் 'our votes on the streets'  என்பதை ஏற்றுக்கொண்டு எந்தக் கட்சியிற்கும் எனது வாக்கில்லை என நிராகரித்துமிருக்கின்றேன். சிலவேளைகளில் கட்சியின் கொள்கைகள் ஒரளவு உடன்பாடாக இருந்தாலும், நானிருந்த தொகுதியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்(கள்) சரியில்லை என்பதால் வாக்களிக்காதும் இருந்திருக்கின்றேன்.

சோகம் என்னவென்றால் நான் கனடாவிற்கு வந்ததன்பிறகு கனடா பொதுவிற்குமோ அல்லது (என்) மாகாண அளவிலோ நான் நிறையத்தடவைகள் வாக்களித்த புதிய ஜனநாயக் கட்சியினர் ஒருபோதும் வென்றதே இல்லை என்பதுதான்.

ஆனாலென்ன நம்பிக்கைதானே வாழ்க்கை. தோற்றுக்கொண்டிருப்பதில் கூட நிறையக் கற்றுக்கொள்ளலாம் அல்லவா?

இலுப்பைப்பூ குறிப்புகள்

Wednesday, October 14, 2015

Tracks & Wild
Into the Wild நூலாகவும், பின் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டபின் வந்த ஒரு ஆவணப்படத்தில் (Back to the Wild ), 'Chris was so close to become a great adventurer' என ஒருவர் கூறுவார். உண்மையில் கிறிஸ், அலாஸ்காவிலிருந்த அந்த ஆற்றைக் கடந்திருந்தால், -பட்டினியால் இறந்திருக்காது- தனது சாகசப் பயணத்தின் கதையை எங்களுக்கு விரிவாகக் கூறியிருப்பார். Into the wild ஐப் போல Tracks மற்றும் Wild என பயணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூற்களை வைத்து, இரண்டு திரைப்படங்கள் கடந்த வருடங்களில் வெளிவந்திருந்தன. இந்த இரண்டிலும் இருக்கும் விசேட அம்சம் என்னவென்றால், இந்த சாகசப்பயணங்கள் பெண்களால் தனித்துச் செய்யப்பட்டிருப்பது.

Tracks ஆஸ்திரேலியாப் பாலைவனங்களினூடாக இந்துசமுத்திரத்தின் கரையைத் தேடி கிட்டத்தட்ட 9 மாதங்களாய் 1977ல் ஒரு பெண்ணால் செய்யப்பட்ட 2700 கிலோமீற்றர்கள் நீண்ட சாகசப் பயணம். மூன்று ஒட்டகங்களுடனும், ஒரு நாயின் துணையுடனும் செய்யப்பட்ட பயணம் அது. ஒட்டகங்களே இல்லாத ஆஸ்திரேலியாவில் இந்தப் பெண் எப்படி ஒட்டகங்களைப் பெறுகிறார் என்பதும், எப்படி அவற்றை நீண்ட பயணங்களுக்காய் பழக்குகின்றார் என்பதும் சுவாரசியமானது.

PCT எனப்படும் Pacific Crest Trail, மெக்ஸிக்கோவினதும் கனடாவினதும் எல்லைகளைத் தொடும் அமெரிக்காவிலிருக்கும் நீண்ட ஹக்கிங் பாதை. 'Wild' என்று பெயரிடப்பட்டதிற்கிணங்க பயணம் மட்டுமல்ல, இந்தப் பெண்ணின் வாழ்வில் நடக்கும் விடயங்கள் பலவும் கூட 'wild' ஆகவே இருக்கின்றன. சிறுவயதில் வன்முறையான தகப்பனைப் பார்ப்பதிலிருந்து, பிறகு மிக நெருக்கமாயிருக்கும் தாயாரை புற்றுநோயிற்குப் பலிகொடுப்பது, அதன் தொடர்ச்சியில் அதீத போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல், எண்ணற்ற அந்நியர்களுடான உடலுறவென ஒரு தறிகெட்டலையும் வாழ்விலிருந்து சட்டென்று ஒரு மீட்சிக்காய் இந்தப் பயணத்தை இப்பெண் மேற்கொள்கின்றார்.

Into the Wild, Tracks, Wild போன்றவற்றைப் பார்க்கும்போது நாம் செய்த பயணங்களோ அல்லது நாம் செய்யவேண்டுமென கற்பனை செய்திருக்கும் பயணங்களோ ஒன்றுமேயில்லையெனப் போலத்தோன்றுகின்றது.


The festival of insignificance

ந்த நாவல் தொடங்குமிடம் மிகவும் சுவாரசியமானது. தெருவில் நடந்துபோகும் பெண்ணின் தொப்புளைப் பார்த்து அதிலிருந்து ஆராய்ச்சி தொடங்குகின்றது. பெண்ணின் மார்பை, பிருஷ்டத்தை, தொடையை, தொப்புளை இவற்றில் எதை ஒருவன் முதலில் பார்க்கப் பிரியப்படுகின்றானோ, அவனின் காமம் எப்படியென அலசி ஆராயப்படுகின்றது. பின்னர் நாவலின் இடையில் தேவதைகளுக்கு தொப்புள் இல்லையெனச் சொல்லப்படுகிறது. அவ்வாறான ஒரு தேவதையே ஏவாள் எனவும் அவளுக்கு ஒருபோதும் தொப்புளே இருந்திருக்காது என ஒரு உரையாடலில் வரும். எனெனில் அவள் எவரினதும் தொடர்ச்சியில்லை. நேரடியாக 'ஆக்குபவரினால்' உருவாக்கப்பட்டவள். ஆனால் ஏவாளுக்குப் பிறகு பிறந்த எல்லோருமே தொப்புள்(கொடி) என்ற இணைப்பின் மூலம் காலங்காலமாய் தொடர்புபட்டிருக்கின்றோம். ஆகவேதான் எம்மால் எந்த வரலாற்றின் நினைவுகளிலிருந்தும் எளிதாய்த் தப்பிவிடமுடிவதில்லை என மிலன் குந்தேரா எழுதிச் செல்வார்.

எனினும் ,மிகச் சிறந்த படைப்பாளிக்கும் வீழ்ச்சியுண்டு. 'The Festival of Insignificance'ன் முக்கியத்துவத்தை முதல் வாசிப்பில் தவறவிட்டிருக்கலாமென இரண்டாந்தடவை வாசித்தபோதும், மிலன் குந்தேராவின் எழுத்தின் சரிவே இந்நாவலிற்குள் தெரிந்தது. 86 வயதாகிய மிலன் குந்தேராவின் இந்த நாவலின் முதற் பக்கங்களை வாசிக்கத் தொடங்கியபோது, இளமை ததும்பும் ஒரு கதையை மார்க்வெஸ் பிற்காலத்தில் 'Memories of My Melancholy Whores' எழுதியபோல எழுதப்போகின்றார் என்றே எதிர்பார்த்தேன்; நினைத்தது தவறாகிப்போன நாவலிது.

The Girl in the Spider's Web

Stieg Larsson பற்றி அறியாதவர்கள் அவ்வளவு இருக்கமாட்டார்கள். 'The Girl with the Dragon Tattoo', 'The Girl Who Played with Fire','The Girl Who Kicked the Hornets' Nest' என்கின்ற மூன்று நாவல்களும் மில்லியன்கணக்கில் விற்கப்பட்டதும், சுவிடிஷில் அவை படமாக்கப்பட்டு, இறுதியில் ஹொலிவூட்காரர்களாலும் The Girl with the Dragon Tattoo' ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டு அண்மையில் வெளிவந்திருந்தது.

அநேக எழுத்தாளர்கட்கு நிகழ்வதுபோல Stieg Larsson 2004ல் இறந்தபின்னே அவரின் துப்பறியும் திகிலான நாவல்கள் பிரபல்யம் பெற்றன என்பது துரதிஷ்டவசமானது. இப்போது இந்நாவல்களின் தொடர்ச்சியாக இன்னொரு எழுத்தாளரான David Lagercrantzஐ கொண்டு 'The Girl in the Spider's Web' எழுதப்பட்டு இம்மாதம் வெளிவருகின்றது. ஏற்கனவே Stieg தனது 50வது வயதில் மரணமுற்றபோது நான்காவது நாவலில் 200 பக்கங்கள்வரை எழுதியுமிருந்தார்.

புதிய புத்தகத்திற்கான முன்னோட்டமே இது. நாவலிலிருந்து 2 அத்தியாயங்களை புத்தகங்களாக்கி தந்தும் கொண்டிருந்தனர். David Lagercrantz இம்மாதம் ரொறொண்டோவிற்கு வரவுமிருக்கின்றார். நாவலின் முக்கியபாத்திரமான Lisbeth Salander போல எல்லாப் பெண்களும் தங்களை உருமாற்றியிருந்தனர். கறுப்பு நிற லெதர் ஜாக்கற், நீண்ட காலுறையுடன், காதிலும் மூக்கிலும் என கூர்மையான ஆபரணங்களையும் அணிந்துமிருந்தனர். நண்பொருவர் அவர்களுக்கருகில் போய் நின்று என்னைப் படங்காட்டச் சொன்னார். ஏற்கனவே சுவிடீஷில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படங்களைப் பார்த்து மிகத் தீவிரமான வன்முறையாய் இருக்கிறதே என இடைநடுவில் பார்ப்பதையே பயத்தில் கைவிட்டவன் நான். அதையறிந்தபின்னும் இந்தப் பெண்களின் அருகில் போக, அவர்கள் கத்தியையோ, கைத்துப்பாக்கியையோ உருவ என்னுயிரைப் பணயம் வைக்க எனக்கென்ன விசரா என்ன?


னடா வந்த பதினேழாவது வயதில்தான் மைக்கல் ஜாக்சனின் "They Don't Care About Us" என்ற பாடலை முதன்முதலில் கேட்டிருந்தேன். அப்போது முகிழ்ந்திருந்த காதலில் என்னை நேசித்த பெண் ஒரு காஸெட் முழுக்க மைக்கல் ஜாக்சனின் பாடல்களைப் பதிவு செய்து தந்திருந்தார். அந்தக் காதல் சொற்ப காலங்களே நீண்டிருந்தாலும், மைக்கல் ஜாக்சனின் கஸெட் நீண்டகாலமாகவே என் வசமிருந்தது. திரும்பவும் அந்த ஞாபகங்களை 2Cellosன் இந்தப்பாடல் நினைவுபடுத்திவிட்டது. அந்தக் காதலை மட்டுமல்ல, இந்தப் பாடல் ஒளிப்படமாக்கப்பட்ட விதமும், கடந்துவந்துவிட்டேன் என நினைத்தாலும் கடக்கவே முடியாத போர்க்கால நினைவுகளையும் கிளறிவிட்டன.

எங்கோ இருப்பவர்களின் சொகுசான பொழுதுபோக்கான போர் என்ற சதுரங்க ஆட்டத்திற்காய் யார் யாரெல்லாம் பலியாக்கப்படுகின்றனர் எனபதை இந்தப் பாடல் காட்சிப்படுத்துகின்றது. ஒவ்வொரு காய் நகர்த்தலும் நிகழும்போது எங்கோ ஓரிடத்தில் குண்டுகள் வெடிக்கின்றன, நகரங்கள் சுற்றிவளைக்கப்படுகின்றன, துப்பாக்கி முனைகளால் மக்கள் சுவடுகளின்றி அழிக்கப்படுகின்றனர்.

இருண்டகாலங்களில் இசையே வெறுமையாய் மிஞ்சுகின்றது. இங்கேயும் இறுதியில் இசைக்கலைஞர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் அவர்களின் இசை ஒலித்தபடியே இருக்கின்றது. நிகழ்ந்த எதையும் மறக்காமலும், நிகழ்ந்த எல்லாவற்றின் சாட்சியங்களுமாய்...!

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' மற்றும் மலைமகளின் 'புதிய கதைகள்'

Tuesday, October 13, 2015

கிளிநொச்சியிலிருந்த 'அறிவமுது' புத்தகசாலையில்தான் தமிழ்க்கவியின் 'இனி வானம் வெளிச்சிரும்' நாவலையும், மலைமகளின் 'புதிய கதைகள்' தொகுப்பையும் வாங்கி வாசித்திருக்கிறேன். 'இனி வானம் வெளிச்சிரும்' நாவல் தன் பிள்ளைகள் ஒவ்வொருவராய் யுத்தகளத்திற்குப் போவதையும் அங்கு மாள்வதையும் மிகுந்த துயரத்துடன் ஒரு தாயின் பார்வையிலிருந்து விபரிக்கிறதென்றால், மலைமகளின் 'புதிய கதைகள்' போராட்டக் களத்தில் நிற்கும் பெண்ணின் பார்வையிலிருந்து தன் அனுபவங்களைப் பேசுவதாய் இருக்கின்றது.

முக்கியமாய் நம் ஈழப்போராட்டத்தில் பெரும் வகிபாகத்தைப் பகிர்ந்த பெண்களின் பங்களிப்புக்கள் மிகவும் குறைவாகவே பதிவு செய்யப்பட்ட சூழலில் இத்தகைய பதிவுகள் எத்தகை முக்கியத்துவம் என்பதை உணர்ந்தாக வேண்டும். மலைமகளின் புதிய கதைகளில் மட்டுமின்றி, மலைமகள் தொகுப்பாளர்களில் ஒருவராய் இருந்த 'வேருமாகி விழுதுமாகி' யில் கூட களத்தில் நிற்கும் பெண்களின் வெளிக்களம் சார்ந்து மட்டுமின்றி, உடல் சார்ந்த அவதிகளும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மழைக்காலத்தில் பங்கருக்குள் இடுப்பளவோ/கழுத்தளவோ வெள்ளத்தோடு, பெண்களுக்கு வரும் மாதாந்திர உதிரப்பெருக்கோடு போரிடும் பெண்ணின் நிலையை அவ்வளவு எளிதாய் எவரால் கடந்துபோய்விட முடியும். போரென்பதை வெளியில் மட்டுமின்றி தம் உடலோடும் செய்யவேண்டிய பெண்களின் அனுபவப்பகிர்தல்களும் இந்நூற்களில் தொடர்ந்து வந்தபடியேயிருக்கும். 'வேருமாகி விழுதுமாகி' ஜெயசுக்குறு சண்டையில் பெண்கள் தனித்தியங்கிய களங்களையும் அங்கே அவர்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களையும் மிக விபரமாகப் பதிவு செய்கிறது.

யாழில் நிகழ்ந்த பெரும் இடம்பெயர்வுக்கு முன், சுன்னாகம் பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாலிருந்த புத்தகசாலையில்தான் முதன்முதலாக மலரவனின் 'போருலா'வும் புதுவையின் 'நினைவழியா நாட்களும்' வாங்கியது நினைவிருக்கிறது. மலரவனின் 'போருலா' ஒரு கெரில்லா யுத்தம் எப்படி இருக்கும் என்பதைவிட அதற்கான தயார்ப்படுத்தல்கள் எப்படியிருக்குமென்பதை பதிவு செய்த முக்கிய நூல். அவ்வாறே 'வேருமாகி விழுதுமாகி' வாசித்தபோது நாம் கற்பனையில் நினைக்கும் போர்க்களங்கள் அல்ல அவையென்கின்ற யதார்த்தத்தை நம் முகத்தில் ஓங்கி அறையச் செய்திருந்தது.

எப்போதும் ஒருபக்கத்தைப் பார்க்கத் தெரிந்த அல்லது அதை மட்டும் பேசத்துடிக்கும் நாம், கஸ்தூரி,பாரதி, வானதி போன்றவர்களைப் பற்றிப் பேசுவது மிகவும் அரிது. அதிலும் எப்போதும் சொல்வதைப் போல, கஸ்தூரி இன்றிருந்தால் மிகப்பெரும் ஆளுமையாக இருந்திருப்பார் என்பதை அவரது இருபதுகளில் எழுதிய கவிதைகளும்/கதைகளும் சேர்ந்த தொகுப்பான 'கஸ்தூரியின் ஆக்கங்களை' வாசித்தவர்கள் அறிந்துகொள்ள முடியும் (அவர் இறந்தபின்னரே இத்தொகுப்பு வந்ததென நினைக்கிறேன்). ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவர் என்றெல்லாம் நாம் உரையாடத்தேவையில்லை, ஆகக்குறைந்தது அடையாளங்களை மீறி அவரவர்க்கான இடங்களை நாம் அவரவர்க்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென நினைத்துக்கொள்கிறேன்.

வரும் ஆண்டில், தமிழ்க்கவியின் -இறுதி யுத்தக்களத்தை பின்னணியாகக் கொண்ட - புதினமான 'ஊழிக்காலமும்' (தமிழினி பதிப்பகம்), மலைமகளின் புதியகதைகள் (வடலி பதிப்பகம்) மீள்பதிப்பும் வெளிவருகின்றன (மலைமகளும் இப்போது இல்லை). ஒரு யுத்தத்தை எதிர்கொள்வது என்பது எவ்வளவு கடினமானது. மேலும் அதை ஒரு பெண்ணாக இருந்து எதிர்கொள்வது இன்னும் எவ்வளவு கொடுமையானது என்பதை அறிவதற்கேனும் இவ்விரு நூற்களையும் ஏற்கனவே வாசித்தவனென்ற வகையில் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். ஆகக்குறைந்தது யுத்தத்திற்குள் வாழாது அது குறித்து ஆவேசமாய்ப் பேசுபவர்களை ஒருகணமாவது நிதானமாய் நின்று யோசிக்க இவை ஏதோ ஒருவகையில் உதவக்கூடும்.

(2013)

காகிதப்பூ குறிப்புகள்

Tuesday, September 29, 2015

 தீபன் (Dheepan)

தீபன் படம் பல சிக்கலான விடயங்களைப் பேச முயல்கின்றது. ஷோபா, காளீஸ்வரி மற்றும் சிறுமியாக நடித்தவரின் நேர்த்தியான நடிப்புடன், திரைப்படமாக்கமும் சிறப்பாகவே இருக்கின்றது. எனினும் விளிம்புநிலை மனிதர்களை முக்கிய பேசுபொருளாகவும், கதாபாத்திரங்களாகவும் கொண்ட இப்படம் யாருடைய குரலாக ஒலிக்கின்றதென்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. எந்தப் படமாயினும் அது நிறைவுறும்போது நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அது எடுத்துக்கொள்ளும் விடயத்திற்கு genuineவாக இருப்பதை உணரும்போது அப்படத்தை நமக்கு நெருக்கமானதாய்க் கொள்ளமுடியும்.
உதாரணமாய் பிரசன்ன விதானகேயின் With You Without You, 'தீபன்' திரைப்படம் போலவே மிகச்சிக்கலான விடயத்தை இன்னும் சிக்கலான பாத்திரங்களினூடாகப் பேசுகின்றது. ஒரு முன்னாள் இராணுவத்தினன், தனது சக இராணுவத்தினர் ஒரு தமிழ்ப்பெண்ணை கூட்டாய்ப்பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு வரும்போது, பொய்ச்சாட்சியம் கூறுகின்றவன் என்கின்ற பெரும்பான்மை இனப்பாத்திரம் அத்திரைப்படத்தில் ஒருவருக்குக் கொடுக்கப்படுகின்றது . அதே நபர் பின்னர் ஒருகட்டத்தில் தமிழ்ப்பெண்ணைத் திருமணஞ்செய்யும்போது எழும் கேள்விகளும், அறச்சிக்கல்களுமே அப்படத்தின் அடிநாதம். ஆனால் இத்தகைய குழப்பமான சூழலுக்குள் With You Without You முடியும்போது கூட, அதற்குள் ஒடுக்கப்பட்டவருக்காய் ஒலிக்கும் ஒரு குரலை ஒருவர் எளிதாக அடையாளங்கண்டு கொள்ளமுடியும்.

ஆனால் தீபன் படம் அகதிகள்/குடிவரவாளர் என்கின்ற விளிம்புநிலை மக்களின் கதையைக் கூறமுயன்றாலும் அதன் genuineவான குரலை விளிம்புநிலை மக்களுக்குச் சார்பாகக் கண்டுகொள்ள என்னால் முடியாதிருந்தது என்பது ஒரு கவலையான விடயமெனத்தான் கூறவேண்டும். இன்று உலகமெங்கும் -முக்கியமாய் ஐரோப்பாவில்- அகதிகள் பிரச்சினை பற்றியெறியும்போது, அகதிகள் சார்பானதும் அக்கறையுமானதுமான ஒரு திரைப்படமாய் அவ்வளவு எளிதாய் தீபனை முன்வைக்கமாட்டேன்.

பருக்கை

வீரபாண்டியன் எழுதிய 'பருக்கை' நாவலை கடந்த சில வாரங்களாக வாசிக்கத் தொடங்கி நேற்றிரவுதான் முடித்திருந்தேன். இவ்வளவு நாட்கள் நீண்டதற்கு இந்நாவலின் பேசுபொருள் முக்கியம் என்பதாலும், அதேசமயம் நாவலாக அது உருப்பெறவில்லை என்பதாலும் இழுபட்டுக்கொண்டிருந்தது. மேலும் 'பருக்கை' சாகித்ய அகடமியின் 'யுவ புரஸ்கர்' விருதையும் பெற்றது என்பதால் - வேறு சில நாவல்களை இடையில் கைவிட்டதுபோல - கைவிடாது தொடர்ந்து ஆறுதலாக வாசித்துக்கொண்டிருந்தேன்.

நாவலின் முக்கியம் என்பது, கிராமங்களிலிருந்து பெருநகரங்களுக்கு படிப்பிற்காய் வரும் மாணவர்களின் தங்குமிட, உணவுப் பிரச்சினைகள் பற்றியது. மேலும் நாவல் தமிழில் முதுகலை படிக்கும் மாணவர்களைச் சுற்றிச் சுழல்வதால் (சென்னைப் பல்கலைக்கழகம்?) தமிழ்ச்சூழல் பற்றிய சூழலை கொஞ்சமேனும் அறிவது சற்றுச் சுவாரசியமாக இருந்தது.

நாவலில் பசி பற்றியே அநேக பக்கங்களில் பேசப்படுகின்றது. ஏழ்மையின் காரணமாக படித்துக்கொண்டே பல மாணவர்கள் திருமண/பிறந்தநாள் விழாக்களில் உணவைப் பரிமாறுபவர்களாக இருக்கின்றார்கள். படிக்கும் செலவிற்கான கொஞ்சப் பணமும், சாப்பிடுவதற்கான உணவும் கிடைக்குமென்றே மாணவர்கள் இந்த வேலைக்குப் போகின்றார்கள். ஆனால் அதிகவேளைகளில் இறுதியில் உணவு முடிந்து சாப்பிடமுடியாது போகின்றது அல்லது உணவிருந்தும் வயிறு விரைவில் நிரம்பி விரும்பியதைச் சாப்பிட முடியாது போய்விடுகின்றது.

பசி என்பது எத்தகைய அவலமானது என்பதை இந்த நாவல் கொண்டு வந்திருந்தாலும், ஒரே மாதிரியான சம்பவங்கள் ஒரே மாதிரியான உரையாடல்கள் வருவதால் மிகுந்த அலுப்பாக இருந்தது. தமிழில் முதுகலை படித்து இப்போது மேற்படிப்பில் ஆய்வாளராக இருக்கும் வீரபாண்டியனுக்கு தமிழில் 'கூறியது மீளக்கூறல் குற்றம்' என்பது தெரியுமெனவே நம்புகின்றேன். திரும்பித் திரும்பி ஒரே சூழலில் ஒரேமாதிரியான விடயங்களை கூறினால் கூட, அதை வேறுவகையான வடிவங்களில் சொல்ல முயற்சிக்காது நாவல் ஒரேமாதிரியே நீண்டு முடியும்போது நாவலில் பாத்திரங்கள் எப்போது பந்தி முடிந்து தாம் பசியாறலாம் என்று காத்திருப்பதுபோல வாசிக்கும் நமக்கும் எப்போது நாவல் முடியும் என்ற அலுப்பே வருகின்றது.

இந்த நாவலை பாண்டிச்சேரி எம்.கண்ணன் திருத்திக் கொடுத்திருந்ததாகவும், பதிப்பாளர் 60-70 பக்கங்கள் எழுதிக்கொண்டிருந்தபோதே பதிப்பாக்கலாம் என உற்சாகம் கொடுத்ததாகவும் வீரபாண்டியனின் நேர்காணல் ஒன்றில் வாசித்தேன். முதன்முதலில் நாவல் எழுதும் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத விடயங்கள் இவை. ஆனால் இதை 250 பக்கங்கள் நீளும் நாவலாக எழுதாது இன்னும் சுருக்கி நூறுபக்கங்களுக்குள் திருத்தமான குறுநாவலாக பிரசுரித்திருக்கலாம் என்ற எண்ணமே வந்திருந்தது.

என்கின்றபோதும் திருவண்ணாமலையில் செங்கம் என்ற ஊரிலிருந்து வறுமையான குடும்பத்திலிருந்து வந்த ஒருவரின் நாவலுக்கு, தமிழ்ச்சூழலில் சிலரால் நிறுவப்பட்ட 'அழகியல்' வடிவங்களை மட்டும் பொருத்திப் பார்ப்பதிலும் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. உரையாடல்களில் தகுந்தமாதிரி பழமொழிகளையும் சொலவடைகளையும் பாவிக்கும் வீரபாண்டியன், இன்று நாவல்கள் மட்டுமில்லை, சிறுகதைகள் கூட உரையாடல்களில் பெரும்பகுதி தங்கியிருப்பதிலிருந்து நகர்ந்துவிட்டதென்று புரிந்துகொள்வாராயின் 'பருக்கை'யை விட இன்னும் செறிவான நாவல்கள் அவரிடமிருந்து முகிழக்கூடும்.

Irrational Man

ம்முறையும் வூடி அலன் ஏமாற்றவில்லை. பின் நவீனத்துவத்தை பயில்வதன் ஆர்வமுள்ள மாணவனாகிய என்னை எப்போதும் இருத்தலியம் அதேயளவிற்கு ஈர்த்துக்கொண்டேயிருக்கின்றது. இருத்தலியத்தை பல பின் அமைப்பியலாளர்/ பின் நவீனத்துவர்கள் நிராகரித்தபோதும் இரண்டுமிடையில் ஏதோ ஒருவகையான ஊடாடல் இருப்பதை அல்லது அவ்வாறு நினைத்துக்கொள்வது எனக்குப் பிடித்தமானது. அதேபோன்று பின் நவீனத்துவம் புத்தரிடமிருந்து நிறைய எடுத்துக்கொண்டிருக்கின்றது என்றே என் வாசிப்புக்களின் அடிப்படையில் நம்புகின்றேன், அவை பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கின்றதா/ விவாதிக்கப்பட்டிருக்கின்றதா என்பதும் என் இன்றைய தேடலாக இருக்கின்றது.

இப்படத்திலும் காண்ட், ஹெடெக்கர், சார்த்தர், சிமோ தீ பூவாவிலிருந்து தஸ்தயேவ்ஸ்கி(குறிப்பாய் 'குற்றமும் தண்டனையும் ') வரை நிறையப் பேர் சாதாரண உரையாடலில் வந்துகொண்டிருக்கின்றனர். தத்துவம் என்பது பெரும்பாலும் verbal masturbation போன்றது, அதற்கும் யதார்த்தத்திற்கும் ஒருபோதும் தொடர்பில்லையென தத்துவம் கற்பிக்கும் பேராசிரியர் சொல்லிக்கொண்டிருப்பார். நமது இருத்தல் குறித்தும், நமக்கு கற்பிக்கப்பட்ட ஒழுக்கம் குறித்தும், நாம் எதனை அறங்களாகக் கொள்ளமுடியுமென தொடர்ச்சியாக கேள்விகளை எழும்பிக்கொண்டிருக்கும் ஒரு சுவாரசியமான திரைப்படம்.

இமையத்தின் 'எங் கதெ'

Wednesday, September 23, 2015


ம் தமிழ்ச்சூழலில் நல்ல படைப்புக்கள் கவனிக்கப்படாது ஒதுக்கப்படுவதும், 'சுமாரான' எழுத்துக்கள் உயர்வுநவிற்சியாக்கம் செய்யப்படுவதும் காலங்காலமாக நிகழ்ந்து வருகின்றவைதான். அந்தவகையில் இமையத்தின் 'எங் கதெ' யிற்கு வழங்கப்பட்ட/வழங்கப்படுகின்ற மதிப்பீடுகள் சற்று அதிகமோ எனத்தான் இக்(குறு)நாவலை வாசித்து முடித்தபோது தோன்றியது.

'எங் கதெ' அதற்குரிய பலவீனங்களுடன் ஒரு புதிய வகை எழுத்தை முன்வைத்ததா என்றால் அதுகூட நிகழவில்லை. இவ்வாறான தனியன்களின் குரல்களாக அண்மையில் ஒலித்த 'மஞ்சள் வெயில்', 'கானல்வரி', 'மூன்றாம் சிலுவை' போன்றவற்றிற்கு இருந்த கவித்துவமான/தனித்துவமான நடைகூட 'எங் கதெ' யில் சாத்தியப்படவில்லை. இறுதியில் விநாயகம் அடைகின்ற 'தரிசனத்தை'க்' கூட எஸ்.பொ 50களிலேயே 'தீ'யில் தொட்டுவிட்டார். எப்போதும் ஈழத்தமிழரின் படைப்பென்றால் ஒரளவு அலட்சியமாக இருக்கும் தமிழக வாசகர்க்கு வேண்டுமானால், ஜெயமோகன் 'கன்னியாகுமரி'யில் கூட இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கின்றார் என்று இந்தப்பொழுதில் நினைவுபடுத்திவிடலாம்.

உறவுகளுக்கிடையில் வரும் துயரமாயிருந்தாலென்ன, துரோகமாயிருந்தாலென்ன அது ஆணுக்கும் பெண்ணுக்கும் வலியையும் உளைச்சலையுமே தரக்கூடியவை. அதிலெந்த சந்தேகமும் எழப்போவதில்லை. அதுபோலவே ஒவ்வொருவருக்கும் இந்த உறவுகள் குறித்துச் சொல்ல தனித்துவமான கதைகளும் நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதை ஒருவரை குற்றவாளியாக்குவதன் மூலந்தான் நம்முடைய நியாயங்களையோ, ஏமாற்றங்களையோ சொல்லவேண்டுமென்ற அவசியமில்லை.

விநாயகத்திற்கு கமலாவுடனான உறவு வரும்போதும் ஊரும் உலகமும் சொல்கின்ற அதே விசமான வார்த்தைகளைத்தான், பின்னர் விநாயகம் கமலா மீது அவநம்பிக்கை உருவாகும்போது, கமலாவின் விம்பம் மீது வீசச் செய்கின்றார். இழந்துபோன உறவுக்காய் காலம் முழுக்க ஏங்கிக்கொண்டிருப்போர் என்று ஒருவகையினர் இருக்கின்றார்கள். அதுபோல உறவொன்றில் இருக்கும்போது வேறு உறவுகளை நாடிப்போகின்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றார்கள். இதற்கு இடைநடுவில், இருக்கும் உறவொன்றே போதுமென்று நிம்மதியடைபவர்களும் நிறையப்பேர் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தமக்கான நியாயங்களையும், விருப்பங்களையும் எந்தப் புள்ளியில் நின்றாலும் சொல்லக்கூடியவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் சொல்லும் கதை எதுவாயினும் அதற்கு நியாயமிருப்பினும் அது இன்னொருவரை மிதித்துப்போட்டுத்தான் எழுதவோ/சொல்லப்படுமாயின் அது குறித்து நிறையக் கேள்விகள் எனக்கு வரவே செய்யும். அதுவே எங் கதெ'யை வாசிக்கும்போது தோன்றியது.


உறவுகளில், ஒருவர் எவ்வளவோ நிராகரிப்புக்களையோ, அவமானங்களையோ செய்தால் கூட, திரும்பித் திரும்பி அந்த நபரை நோக்கிச் செல்வதற்கான -வெளியே இருப்பவர்களால் விளங்கிக்கொள்ளமுடியா- காரணங்கள் பலருக்கு இருக்கக்கூடும். ஆனால் அதை விநாயகம் போன்றவர்கள் கமலாவை 'வேசி' என அழைத்துக்கொண்டோ, தன்னை அவர் பாவித்திருக்கின்றார் எனத் திட்டிக்கொண்டோ திரும்பத் திரும்பப் போகின்றபோது வினாயகத்தின் நேசம் எத்தகையதென்ற கேள்விகளே எழும்புகின்றன. அது கமலா எந்தப் பொழுதிலும் விநாயகத்தால் நிராகரிக்கப்படமுடியாதவர் என்பதை விட, சீண்டப்பட்ட ஒரு ஆணின் பழிவாங்கும் உணர்ச்சியே நமக்குத் தெரிகின்றது.

தொடக்கத்திலேயே சமூகத்தால் அவ்வளவு ஏற்றுக்கொள்ளப்படாத ஓர் உறவையே வேண்டி நிற்கும் விநாயகம், பின்னாட்களில் கமலா தனக்கான ஒரு தேர்வைத் தேர்ந்தெடுக்கும்போது, கமலாவை குற்றவாளியாக்கி வாசகர் முன் வைப்பதன் மூலம் அவர் மீண்டும் பொதுச்சமூகம் எப்படி சிந்திக்குமோ அப்படியே சிந்திக்கப்பார்க்கின்றார். எத்தனையோ ஆண்கள் கமலாவை நேசிக்க விரும்பியபோதும் கமலாவின் தேர்வு விநாயகமாய், ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. அப்படியொரு தேர்வின் மூலமே விநாயகத்தால் கமலாவுடன் நெருக்கமாகிப் பழக முடிகின்றதென்றால், அவ்வாறே கமலா இன்னொரு தேர்வை நோக்கி நகரும்போது அது ஏன் அவ்வளவு தவறாகி விடுகிறது.

மலாவிற்கு தேர்வென்பதே ஒருபோதும் இருக்கவில்லையென்றால், விநாயகம் ஒருபோதுமே கமலாவின் வாழ்விற்குள் நுழைந்தே இருக்கமாட்டார். இந்த முக்கிய புள்ளியை விநாயகம் கண்டடைவதாய் நாவலின் இறுதிப் பகுதி அமைந்திருக்குமானால் நாவல் இன்னும் எனக்கு நெருக்கமாகிவிட்டிருக்கும். எஸ்.பொ 50களில் வைத்த முடிவையே இங்கே முடியும்போது விநாயகம் எடுக்கும்போது இவ்வளவு நேரமும் கமலாவை இந்தளவிற்கு வெறுத்திருக்கவே தேவையில்லை எனவே தோன்றுகின்றது.

ஆண்களாகிய எமக்கு விநாயகத்தின் வாழ்வோடு ஒத்திசைந்துபோகக்கூடிய நிகழ்வுகள் எங்கேயாவது ஒரு காலப்பகுதியில் நடந்திருக்க முடியும். நமக்கு வழங்கப்பட்ட புறக்கணிப்புக்களையும், மெளங்களையும் கண்டு மிகுந்த உத்தரிப்பை நாம் அடைந்திருக்கவும் கூடும். காலம் என்கின்ற அருமருந்தன்ன விடயம் ஆற்றுவதற்கு கைவசம் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், நாம் அவர்கள் மீதான நேசத்தையும் வெறுப்பின் மூலமோ/விஷவார்த்தைகளாலோ அன்றி, நமக்கு அவர்கள் தந்துவிட்ட அருமையான பொழுதுகளின் மூலமே அவர்களை நினைவுகொள்ளல் சாலவும் சிறந்தது.

'நீ யார்கூட வேணுமின்னாலும் இரு. எப்படின்னாலும் இரு. ஆனா உசுரோடு இரு. இதுதான் என் ஆச' என விநாயகம் இறுதியில் வந்தடையும் புரிதலுக்கு அவர் எடுத்துக்கொண்ட பாதைதான் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

நீ தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதைகள் எனக்கு உவப்பானவை இல்லை. ஆனால் எனது நேசத்தின் திசைகள் எப்போதும் உன்னை நோக்கி விரிந்தபடியே இருக்கும். உன்னை நினைவுகொள்வது கூட உன்னை வெறுப்பதாலோ, உன்மீது மூர்க்கம் கொள்வதாலோ அல்ல; உன்னோடு இருந்த இனிமையான காலங்களால் அவற்றை நினைவுகூர்வேன் என விநாயகம் இடைநடுவிலேயே முடிவுசெய்து இறுதியில் இந்த மேற்கூறிய முடிவுக்கு வந்தடைந்திருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?


( நன்றி: கூகுள் தேடல், இமையத்தின் புகைப்படம்)

புதிய அனுபவங்களுக்கான சில வரைபடங்கள்

Monday, September 21, 2015

(ஊர்வசியின் 'இன்னும் வராத சேதி', ஒளவையின் 'எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை', கீதா சுகுமாரனின் 'ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை'  ஆகிய தொகுப்புக்களை முன்வைத்து...)


ன்றைய காலத்தில் கவிதைகளின் வகிபாகம் என்னவாக இருக்கின்றது? கவிதைகளை யார் வாசிக்கின்றார்கள் அல்லது யாருக்காக எழுதப்படுகின்றன. கவிதைகள் என்றில்லாது ஏனைய எல்லாக் கலைப்படைப்புக்களுக்குமாய் இந்தக் கேள்விகளை நாம் எழுப்பிப் பார்க்கலாம்.  எண்ணற்ற இலத்திரனியல் உபகரணங்கள் சூழ்ந்திருக்க, இன்னொரு பக்கத்தில் நமது ஆசைகள் தினமும் பெருக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், கலைக்கான இடம் என்னவென்று யோசிக்க வேண்டியிருக்கின்றது. இந்த இயற்கையைப் போல கலைப்படைப்புக்களுக்கும் நமதான வாழ்க்கைவெளியில் மிதந்தபடியிருக்கின்றன. எந்த ஒருவரால் நின்று நிதானித்து இயற்கையை இரசிக்கமுடிகிறதோ, அவர்களால் கலைகளை உள்வாங்குவதும் எளிதாக அமைந்துவிடுகிறது.

கவிதைகளை வாசிக்க பொறுமையான  ஒரு சூழலே வேண்டியிருக்கின்றது. நல்லதொரு கவிதையை பறந்துகொண்டிருக்கும் ஒரு பறவைக்கு உவமித்துப் பார்க்கின்றேன். அதன் பறத்தல் என்பது கணந்தோறும் வெவ்வேறு நிலைகளில் இருப்பதைப் போல, சிறப்பான ஒரு கவிதை வாசிக்கும் ஒவ்வொருபொழுதும் புதுப்புது வாசிப்புக்களை நமக்குத் தரக்கூடும். நீங்கள் சரியான கணத்தில் ஒரு கவிதையின் ஆன்மாவை பிடித்துவிட்டீர்களென்றால், கவிதையென்று பறக்கும் பறவை, உங்களுக்கு தன் ஞாபகமாய் ஒரு சிறகைக் கூட தந்துவிடக்கூடும்.

ஒரு கவிதை, வாசிக்கும் எல்லோருக்கும் ஒரேவிதமான வாசிப்பைத் தரவேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. பறவையின் பறத்தலுக்கு அதன் இறக்கைகள் மட்டும் காரணமாய் அமைவதில்லை.  அது பறந்துகொண்டிருக்கும் வெளியில் வீசும் காற்றோ, பொழியோ மழையோ கூட பறத்தலைத் தீர்மானிக்கக் கூடும். அதுபோலவே, ஒரு கவிதையை வாசிக்கும்போது நாம் இருக்கும் சூழல்,  நமக்கு அந்தப்பொழுதில் வாய்க்கின்ற மனோநிலை என்பவை நம் வாசிப்பைப் பாதிக்கக்கூடும். எனவேதான் ஒரு சமயம் எமக்குப் பிடிக்காத அல்லது தவறவிட்ட கவிதை பின்னொருமுறை வாசிக்கும்போது மிகப்பிடித்தமாகிப் போய்விடுகின்றது. இதை எப்படி இவ்வளவு காலமும் தவறவிட்டிருந்தோம் என மனது வியந்து பார்க்கிறது.

இங்கே ஊர்வசியின் 'இன்னும் வராத சேதி', ஒளவையின் 'எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை', கீதா சுகுமாரனின் 'ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை' ஆகிய தொகுப்புக்களை எடுத்துக்கொள்கின்றேன்.  அவை குறித்து தொகுத்து சில கருத்துக்களைச் சொல்லவேண்டியிருப்பதால் அவற்றுக்கிடையிலான பொதுவான தன்மைகளைப் பேசுவதாக இது அமையக்கூடும்.  என்றாலும், ஒவ்வொரு தொகுப்பும் அதன் அதனளவில் தனித்துவமானவையே என்பதை முதலிலேயே குறிப்பிட விரும்புகின்றேன்.


ர்வசி 35 வருடங்களுக்கு மேலான காலத்தில் 25ற்கும் குறைவான கவிதைகளே எழுதியிருக்கின்றார் .  குறைவாக எழுதுதலில் நிறைவைக் காண்பவராகவோ அல்லது எழுதும் மனோநிலை வாய்க்கும்போது மட்டும் எழுதுகின்ற ஒருவராகவோ ஊர்வசி இருக்கக்கூடும்.

ஊர்வசியின் கவிதைகளில் அநேகமானவை பிரிவையும், காத்திருப்பையும், தனிமையையும் முன்னிறுத்துகின்றன. காத்திருப்பு என்பது வருடங்களில் மட்டுமில்லை தசாப்தங்கள் தாண்டியும் நீள்வதை அவரின் கவிதைகளில் நாம் காணலாம். 80களில் ஈழப்போராட்டம் பல்வேறுதிசைகளில் முளைவிட்டெழும்ப காதலனிற்காய் காத்திருப்பதிலிருந்து அவரது தனிமை தொடங்குகின்றது.  காதலன் அல்லது நண்பன் தன் தலைமறைவு வாழ்க்கையில் அவ்வப்போது வந்து சேருவதற்காய் தன் வீட்டில் தனித்திருப்பதிலிருந்து தொடங்கி, 2000ம் ஆண்டளவில் வேறொருவனுடன் நடந்து திரிகையிலும்  பழைய காதலனை இன்னும் நினைப்பதாய்க் கூறுகையில், முடிவுறாத காத்திருப்புக்களின் துயரமும், வெறுமையும் நமக்குள்ளும் படிகின்றன.

ஊர்வசியில் தொடக்க காலக்கவிதைகளில் உள்ள இந்தப் பிரிவும் காத்திருப்பும் நமக்கு சங்ககாலக் கவிதைகளை நினைவுபடுத்துகின்றன. போருக்காகவோ பொருள் ஈட்டுவதற்காகவோ தூரதேசம் போகும் துணைகளின் வருகையிற்காய் காத்திருக்கும் சங்ககாலப் பெண்களின் சாயல்கள் ஊர்வசியின் கவிதைகளில் தெரிகின்றனர். ஆனால் அதேபெண்கள் இங்கே போராட்டப் போகின்ற ஆண்களுக்குக் காத்திருந்த நிலையிலிருந்து மாறி,  பின்னர் போராட்ட இயக்கங்களில் இணைய விரும்பும் மனக்கிடக்கைகளையும் வெளிப்படுத்துகின்றனர்.  'ஏன் இன்னமும் நான் வீட்டுக்குள்/ இருக்க வேண்டும்? / என்ன/ நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு?' என ஊர்வசி ஒரு கவிதையில் முன்வைப்பது வீடுகளிலிருந்து வெளியேறி போராட்டக்களங்களங்களுக்கு  வந்துவிட்ட, இன்றைய பெண்களின் முதல் பறத்தலை.

காத்திருப்புக்களே ஊர்வசியின் முக்கிய பேசுபொருளாக கவிதைகளில் இருப்பினும் அதனூடு அன்றைய அரசியல் நிலவரங்களையும் அவர் சொல்லிப் போகின்றார். நமது இயல்பான வாழ்வு முறை மெல்ல மெல்ல ஒடுக்குமுறையும் கண்காணிப்பும்  சேர்ந்து பதற்றமாகிக் கொண்டுபோவதைப் பதிவுசெய்கின்றார்.

நேரடியாகவே அரசியலைப் பேசும் கவிதையான 'சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம்' கவிதை:
'ஐயா, என்னை அடைத்து வைத்திருக்கின்றீர்கள் /நான் ஆட்சேபிக்கவும் முடியாது/ சித்திரவதைகளையும்/ என்னால தடுக்க முடியாது/ எனெனில்/நான் கைதி / நான் கோருவது விடுதலை எனினும் /உங்கள் வார்த்தைகளில் /'பயங்கரவாதி'
எனத் தொடங்குகின்ற கவிதையை 84ல் எழுதினாலும் இன்றும் பொருந்தக்கூடிய ஒன்று. பல்லாண்டுகளாய் பல்வேறு காரணங்களுக்காய் சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் பலருடைய குரல் இதுவாகும். அதேபோல் 'இடையில் ஒருநாள்'  ஒரு தலைமறைவுப் போராளி வீடு வந்துசென்றபின், இராணுவம் வந்துசெய்கின்ற சித்திரவதைகளை சித்தரிக்கின்றது. 'நீ போய்விட்டாய் நாள் தொடர்கிறது' எனக் கவிதை முடியும்போது அந்த தலைமறைவுப் போராளிக்குத் தெரியாத, தாங்கள் படும் கஷ்டங்களைச்  சொல்ல விழைகிறது.  ஆயுதமேந்திப் போராடப் போனவர்கள் மட்டுமில்லை, பொதுசனங்களாய் இருந்தவர்களும் கண்காணிப்புக்களையும், விசாரணைகளையும் எதிர்கொள்ளவேண்டிய அவலச்சூழலின் ஒரு தெறிப்பாக இக்கவிதை இருக்கிறது.

இன்னொரு நேரடி அரசியல் கவிதை, 2014ல் எழுதப்பட்ட 'நேற்று நடந்தது' என்கிற கவிதை. இது ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிவுற்ற பின்னர் வந்த பெரும் வெற்றிடம் குறித்துப் பேச விழைகிறது. போராட்டப்போன தம்பி இறந்துவிட்டானா இல்லை காணாமற்போய்விட்டானா அல்லது சிறையில் இருக்கின்றானா என்ற பல்வேறு வினாக்கள் தொக்கு நிற்க இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றது. பல்லாயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் வரலாற்றில் எந்த சுவடுகளுமின்றி அழிக்கப்பட்ட காலத்தில் ஒரு  சிறு சாட்சியம் இது.

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊர்வசியின் கவிதைகளில் அநேகம் ஏதோ ஒன்றிற்கான காத்திருப்பாகவோ அல்லது எவருடைய வருகையிற்கான எதிர்பார்ப்பாகவோ இருக்கின்றன. அதுவே இன்னொருவகையில் 'இன்னும் வராத சேதி' என இத்தொகுப்பிற்கான தலைப்பாகவும் ஆகியிருக்கின்றது. 80களில் யன்னல் ஓரங்களில் எவரினதோ வருகையிற்காய் அமைதியில் உறைந்து காத்திருப்பதாய்க் கவிதைகளில் சித்தரிக்கப்பட்டாலும் இரண்டாயிரத்திற்குப் பின்பான கவிதைகளில், இனி நிகழவே முடியாத சந்திப்புக்களின் சலிப்பை மீறி, உயரப் பறப்பதற்கான அவாவே ஊர்வசியில் மேவி நிற்கின்றன. ஆகவேதான், காத்திருப்பை விலத்தி "இனி நான் பறப்பேன்/  ஒரு மரக்கிளை போதும்/இடையிடையே ஓய்வெடுக்க" என ஒரு சுய பிரகடனத்தைச் செய்கின்றார்.


கீதா சுகுமாரனின் 'ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை'  தொகுப்பு  அகவெளிகள், மூத்தோள், கடத்தல் என மூன்று பகுதிகளாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அகவெளியிலுள்ள கவிதைகள் சிலதில் ஏதோ ஒன்றிற்காய் அச்சப்படுகின்ற மனதாய் 'அங்குமிங்கும்', 'குற்றவுணர்வு' மற்றும் 'சுமை' போன்ற கவிதைகள் இருக்கின்றன. கீதாவின் கவிதையில் நிறையப் பாம்புகள் வருகின்றன. ஆனால் அது ஆண்களின் கவிதைகளில் சித்தரிக்கப்படுகின்ற காமத்திற்கு நிகர்த்த ஒன்றாக இல்லை.  அச்சத்தையும் குற்றவுணர்வையும் பெருக்கியபடி கீதாவின் கவிதைகளில் அரவங்கள் நெளிந்தபடியிருக்கின்றன.

அதேபோன்று அகவெளிகளிலுள்ள கவிதைகள் பல, இயல்பான நேசத்தை வேண்டி நிற்பதோடு  அல்லாது அது கிடைக்காத தருணங்களில் எழும் வெப்பியாரங்களையும் சித்தரிக்கின்றது. ஊர்வசியின் கவிதையான 'பேசப்படாத மெளனங்களில்'தன் துணையை கிணற்றடிக்கு அழைத்துச் சென்று, நிலவு மறையும்வரை நள்ளிரவுக்கப்பாலும் பேசிக்களிக்கும் தருணம் அமையாது, வீட்டுக்கதவு இறுக்கி அறைந்து மூடப்படுவதைப்போல், கீதாவின் 'உறவு' கவிதை... 'அவனுக்கு/ எரியும் அடுப்பும் நீல விளக்கும் சூழும்/ நான்கு சுவர்கள் மட்டுமே விருப்பு' என வீட்டுக்கு வெளியே உலாத்த விரும்பும் ஒரு பெண்ணின் மனது காட்டப்படுகின்றது.

தொழில்நுட்பம் மிக உச்சத்திலிருக்கும் இந்தக்காலம் மனிதர்களுக்கு எல்லாவற்றையும் வீட்டுக்குள் கொண்டுவந்துவிடுகின்றது. ஆனால் அதுவே  மனிதர்களை இன்னும் தனிமைப்படுத்தவும் செய்கின்றது.  அநேக பெண்களுக்கு வீடு ஒரு சிறையாக இருக்கின்றது அல்லது அங்கே தாம் இயல்பின்றி இருப்பதாய் எண்ணச் செய்கின்றார்கள். வெளியே விரிந்துகிடக்கும் உலகில் தமது காலடிகளைப் பதிக்க விரும்புகின்றனர். அது நிகழாத சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களுக்குள்  மருகவும் குறுகவும் செய்கின்றனர் என்பதேயே  கீதாவினதும் ஊர்வசியினதும் கவிதைகள் ஏதோ ஒருவகையில் சொல்ல முயல்கின்றன.

கீதாவினது கவிதைப்பிரிப்புக்களில் என்னை அதிகம் வசீகரித்தது, மூத்தோள் பகுதியிற்குள் இருக்கும் கவிதைகள். இதில் புராண/இதிகாசங்களில் வருகின்ற பெண் பாத்திரங்கள் மீள்வாசிக்கப்படுகின்றார்கள்.  இதுவரை காலமும்  முக்கிய மையங்களாய் இருந்த ஆண் பாத்திரங்களைத் தவிர்த்து,  விளிம்புநிலையிலிருந்த பெண் பாத்திரங்கள் இதில் முன்னிநிலைப்படுத்தப்படுகின்றனர். இது ஒருவகையான பின்நவீனத்துவ சிறுகதையாடல்களின் வாசிப்பெனவும் எடுத்துக்கொள்ளலாம். சீதையும் நல்லதங்காளும் 'இருவர்' கவிதையில் அவர்களுக்கு நிகழ்ந்த வாழ்க்கைச் சம்பவங்களினால் தொடர்படுத்தப்படுகின்றனர். இன்னொரு கவிதையான 'தரமதி அரிச்சந்திரனில்' சந்திரமதி எனப்படுகின்ற தரமதியும் கஸ்தூரிபாயும் ஒப்பிடப்படுகின்றனர். அதிலும் 'ஒரேயொரு பொய்யாவது சொல்லியிருக்கலாம்/ ஒரேயொருமுறை வாக்கு தவறியிருக்கலாம்/ குடிதான் மூழ்கிவிட்டதே/........ கஸ்தூரிபாயாவது தப்பியிருப்பாள்' என்று முடிகின்ற இடம் வலிமையானது.  ஆண்களின் கெளரவங்களுக்காய் அவர்களின் கொள்கை வீம்புகளுக்காய்  சிலவேளை  இறுதியில் பலியாக்கப்படுவதும் பெண்களே என்பதையும் இந்தக் கவிதை சுட்டிநிற்கின்றது.

இந்தச் சிறுகதையாடல் இன்னும் உச்சம் பெறுவது  'நீதியின் மனைவி' கவிதையில்,
'என் அனுமதியின்றி /புத்தனைத் தேர்க்காலிட்டவனே /ஈடுசெய்ய /தேர்களுமில்லை /புதல்வர்களுமில்லை/கொலையென்றானபின் /மகனும் /கன்றும் ஒன்றுதான்
தாயென்றானபின்/நானும் பசுவும் ஒரே நிறம்/எனது மணிதான் எங்கே?'
என்கின்ற கவிதையில் ஒலிக்கின்ற நியாயத்திற்கு யாரால் பதில் சொல்லமுடியும்? கன்றின் கொலைக்கு தன் மகனைப் பலிகொடுக்கின்ற மன்னன், தன் மகனை இழந்து தவிக்கின்ற அன்னைக்கு எந்த நீதியைக் கொடுப்பான்? ஆக நாம் அறம், நீதி என்று நினைத்த அல்லது கற்பிக்கப்பட்ட விடயங்களில் கூட இன்னமும் கேட்கப்படாத கேள்விகள் இருக்கின்றன அல்லவா?

தலைவிகள் மற்றும் தலைவிகள் -02 கவிதைகளில், ஆண்களின் உலகில் பெண்களுக்கான இடம் எதுவெனக் கேட்கின்றன. தலைவிகள் கவிதையில் மன்னர்கள் வெல்லும்போது, பொருள் கொடுக்கும்போது அவர்களை மறந்துவிடாது விதந்து  பாடப்பட்ட பாடல்கள் இன்றும் இருக்கும்போது, அம்மன்னர்களின் மனைவிகளுக்கு பெயரற்ற முகங்கள் மட்டுந்தானே  எஞ்சி இருக்கின்றன எனக் கேட்கப்படுகின்றது.

அதுபோலவே 'ஆதிமந்தி', 'ஆட்டனத்தி', 'மருதி' எனப் பெயரிடப்பட்ட இம்மூன்று கவிதைகளில் ஒரு முக்கோணக்காதல் கூறப்பட்டு, மருதி என்னும் பெண் தற்கொலை செய்வது குறித்துப் பேசப்படுகின்றது.
இவ்வாறு மூத்தோள் என்ற பகுப்பில் நிறையப் பெண்கள் வருகின்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே அவர்களுக்கென சொல்லப்பட்டிருக்கும் கதைகளிலிருந்து விலத்தி,  வேறு கதைகளைக் சொல்பவர்களாய், நம் மனச்சாட்சியை அசைக்கும் கேள்விகளை எழுப்புவர்களாய் கீதாவின் கவிதைகளில் புதிதாய் முளைத்து வருகின்றனர்.


ஒளவையின் கவிதை என்றவுடன் எனக்கு உடனே எப்போதும் நினைவுக்கு வருவது
'எனது இருப்பை/ உறுதிப் படுத்த/ பிறந்த மண்ணின் எல்லையைக் கடந்தேன்/இறுதியாக/ பாதங்களில் ஒட்டியிருந்த செம்மண்ணையும்/தட்டியாயிற்று/
செம்மண்ணும் போயிற்று/ எம் மண்ணும் போயிற்று/ போ' என்கின்ற எல்லை கடத்தல் கவிதை.

தமது வீடுகளை, பூர்வீகக் கிராமங்களை, ஏன் நாடுகளின் எல்லைக் கோடுகளைத் தாண்டிய துயரில் இருக்கும் எவருக்கும் எளிதில் நெருக்கமாகிவிடக்கூடிய ஒரு கவிதை இது.

எந்த வயதென்று இல்லாது எல்லாப்பெண்கள் மீதும் பாலியல் வன்முறைகள் நடக்கும் நமது காலத்தில், ஓளவை  'என்னுடைய சிறிய மலர்' கவிதையில் பெண் குழந்தைகளை வெளியாட்களிடம் மட்டுமல்ல, அவரவர் தந்தைகளிடமும் மாமாக்களிடமும் கூட கவனமாயிருக்கும்படி எச்சரிக்கை செய்கின்றார்.


ஈழத்தில் இறுதி ஆயுத போராட்டத்தில் நிகழ்ந்த பேரழிவுகளை 'மீதமாக உள்ள வாழ்வு' மற்றும் 'அஞ்சலி' கவிதைகள் பாடுகின்றன. இதே ஒளவைதான் ராஜினி திரணகமவினதும், விஜிதரனினதும் படுகொலைகள் பற்றித் துயரத்துடனும் எழுதியிருக்கின்றனர். இழப்பென்பது, உயிரிழத்தல் என்பது அது யாரென்றாலும் எந்த அரசியல் நம்பிக்கையுடன் இருக்கின்றார்களோ அதைத்தாண்டி நம் மனங்களை வேதனைப்படுத்துபவை. மரணங்களை எந்தக் கவிஞராலும் கொண்டாட முடியாது. ஆகவேதான் ராஜினி திரணமகா, விஜிதரன் போன்ற பொதுமக்களில் ஒருவராக பொதுமக்களளோடு நின்றவர்களின்  மரணங்களை நினைவுகூர்ந்து ஓளவையால் எழுதமுடிகிறது. இறுதிப்போர்க்காலங்களில் போராளியாக நின்ற இசைப்பிரியா போன்ற பல நூற்றுக்கணக்கான பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரமான மரணங்களைப் பற்றியும் அதே துயரத்துடனும், வலியுடனும் பதிவு செய்யமுடிகின்றது. அறம் பிறழாத படைப்பாளி என்பவர்கள், இப்படித்தான் எல்லா அரசியல் நம்பிக்கைகளையும் தாண்டி ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் நின்று பேசமுடியும். குரலற்றவர்களுக்கான குரல்களாய் இருக்க முடியும்.

ஓளைவையின் கவிதைகள் முக்கிய கவிதைகளாக 'சொல்லாமல் போகும் புதல்வர்கள்' மற்றும் 'வீடு திரும்பிய என் மகன்' என்பவற்றைப் பார்க்கின்றேன். போராடப் போவதற்காய் சொல்லாமல் போகும் புதல்வர்கள், இயக்கங்களில் இணைந்துவிட்டு திரும்பும்போது எப்படி எல்லா மென் உணர்வுகளையும் தொலைத்த மகன்களாய் மாறுகின்றார்கள் என்பதை மிக அற்புதமாய்க் காட்டுகின்றார். இரண்டு வெவ்வேறு கவிதைகளுக்கு இடையில் எப்படி காலமும் மனிதர்களும் முகங்களைத் தொலைத்துவிட்டன/ர் என்பதை நாம் கண்டுணரமுடியும்.

சொல்லாமல் போகும் புதல்வர்களைப் பற்றி தாயிற்கு சோகம் நெஞ்சை அரித்தாலும் ' மகனே/சிட்டுக்குருவியைப் போலத்தான் பறந்தாய்!/ ஆயினும் காலம் உன்னை வளர்த்திருக்கும்/ மனிதநேயத்தை இழந்துவிடாதே/ மக்களை இன்னும் நேசிக்கப் பழகு' எனத்தான் சொல்கின்றார்.

பின்னர் 'வீடு திரும்பிய மகனில்'  எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப்போவதைத் தாய் பார்க்கின்றார்
'நண்பனைச் சுட்டுவிட்டு வந்து/ வீரம் பேசினான்/ விடுதலை பற்றி/ ஆயுதம் பற்றி/ எல்லைப் புற மக்களைக் கொல்வதைப் பற்றி/ நிறையவே பேசினான்' எனச் சொல்லிவிட்டு 'இப்போது நான்/ தாயாக இருத்தல் முடியாது/ என்று தோன்றுகின்றது/ ...துரோகி என்று/என்னையும் புதைப்பானோ/ஒரு நாள்?' எனத் தாயே தன் மகனைப் பார்த்து அஞ்சுமளவிற்கு சூழல் கொடூரமாய் மாறுகிறது.

எங்கள் எல்லோரினதும் விடுதலைக்காய்த்தான் பிள்ளைகள் துப்பாக்கி தூக்கினார்கள் என்று போராளிகளை அரவணைத்த தாய்களை, தலைமேல் தூக்கிக் கொண்டாடிய மக்களை பிறகொருகாலத்தில் எதற்காகத்தான் இவர்கள் துப்பாக்கி தூக்கினார்கள் என்று வருத்தபடவைக்கும் அளவிற்கு அல்லவா, நமது இயக்கங்கள்  அனைத்தும் பிற்காலத்தில் மாறியிருந்தன.

ஊர்வசியும், ஒளவையும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் எழுத வந்தவர்கள் என்பதற்கப்பால்,இவர்கள் இருவரினதும் தொடக்க கால அநேக கவிதைகளில் ஊடுபாவுகின்ற 'காத்திருப்பு' என்ற புள்ளி கவனிக்கத்தக்கது. ஒளவையும் அரசியல் நிமித்தம் தலைமறைவுக்குப் போகின்ற நண்பனுக்காய்/காதலுக்காய் காத்திருப்பதையும், தான் நினைத்த காதல் சிலவேளைகளில் தடம்மாறிப்போவதையும் பதிவு செய்கின்றார். ஆயுதப்போராட்டமும், தீவிர கண்காணிப்பும் தொடங்குகின்ற 80களில் பெண்களின் இருப்பு அல்லது வகிபாகம் குறித்த சில முக்கிய புள்ளிகளையாவது ஒளவையினதும் ஊர்வசியினதும் கவிதைகளில் நாம் கண்டுகொள்ளலாம். அதேவேளை போராட்டப்போகின்ற ஆண்களுக்கு துணைநிற்கின்ற இவர்களின் கவிதைகள், அதே ஆண்களுடனான நேசத்தில் அசமத்துவம் வருகின்றபோதும், அவற்றையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. முக்கியமாய் ஒளவை தன் கவிதைகளில் போராட்டத்திற்கான ஆதரவு நிலையை மட்டுமில்லாது அது திசைமாறிப் போய்க்கொண்டிருந்தபோதும் நேர்மையாகப் பதிவு செய்திருக்கின்றார். அதேபோன்று போராட்டங்களைத் திசை திருப்பியவர்கள் மீது விமர்சனம் வைத்தபோதும், போராட்டத்திற்கான காரணங்கள் இன்னமும் இருப்பதை மறைக்கவோ அல்லது போராட அர்ப்பணிப்புடன் போய் மரணித்தவர்களையோ நினைவுகூரவோ அவர் தயங்கவில்லை என்பதையும் அண்மையில் எழுதப்பட்ட  கவிதைகள் சொல்கின்றன.

'சரணடைந்த உங்களிடம்/ஆயுதம் இல்லை/விழிகள் ஒளி இழந்திருந்தன/இதழ்கள் உலர்ந்து காய்ந்திருந்தன./ எல்லாவற்றையும் இழந்தபின்/ சிறு வெள்ளைத் துகில்/உடல் மறைக்க/கொலைக்களத்தில்/யுத்த வெ(ற்)றிக்குப் பலியிடப்பட்டீர்கள்
பாழும் வெளி அது/பசித்திருந்ததோ உடல் புசிக்க'
என்றேதான் ஒளவை எழுதுகின்றார்.


ர்வசியினதும் ஓளவையினதும் கீதாவினதும் கவிதைகளை வாசிக்கும்போது உறவுகள் என்பது ஒருபோதுமே மகிழ்ச்சியையோ இதத்தையோ தரமாட்டாதோ என யோசிக்க வைத்தது. இது அவர்களின் கவிதைகள் என்றில்லாது பொதுவான ஆண்/பெண் கவிஞர்கள் எழுதும் அநேக கவிதைகளை முன்வைத்தும் இதைக் கேட்கலாம். மிகுந்த உற்சாகந்தரும் நேசம் பிறகேன் சலித்துப் போகின்றது?அல்லது நாங்கள் நிறையக் கனவுகளை யதார்த்ததிற்கு பொருந்தாது கண்டுகொண்டிருகின்றோமா? அல்லது பிரிவையும் துயரத்தையும் எழுதினால்தான் அவை கவிதைகளாகும் என்று ஒருவகையான கற்பிதங்களுக்குள் சிக்கியிருக்கின்றோமா? என எல்லோரும் சேர்ந்து யோசித்துப் பார்த்தால் நல்லது.

காதலை எழுதுவதென்றால் கூட நம்மோடு இருந்து பிரிந்துவிட்டுப் போன காதலையோ அல்லது நமக்கு நிகழச் சாத்தியமற்ற  நேசத்தைத்தானே ஏதோ ஒரு துயர் தொக்குநிற்க எழுத விழைகிறோம். நம்மை சிலிர்க்க வைக்கும் அல்லது நமக்கான பொழுதுகளுக்கு வர்ணங்களை வாரியிறைத்துக்கொண்டிருக்கும் இதமான காதலை ஏன் நாம் அவ்வளவு எழுதுவதில்லை அல்லது ஏன் எழுதத் தயங்குகின்றோம் என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பிப் பார்க்கலாம்.

படைப்புக்களைத் தொகுப்பாக்கும்போது அவற்றில் எல்லாமே சிறந்த படைப்புக்களாய் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கமுடியாது. நாம் எளிதாய்க் கடந்துவிடமுடியாத சில படைப்புக்கள் இருந்தாலே அது ஒரு கவனிக்கத்தொரு தொகுப்பாக என்பதாகவே என் வாசிப்பை வைத்திருக்கின்றேன். இந்தத் தொகுப்புக்களில் சில கவிதைகளாக முழுமைபெறாத மற்றும் வடிவங்களில் சட்டென்று முறிந்துபோகின்ற கவிதைகளும் இருக்கின்றன. ஆனால் இவற்றை மீறி எனக்கு இந்தத் தொகுப்புக்கள் அனைத்தும் பிடித்திருக்கின்றன. ஒவ்வொன்றயும் பலதடவைகளுக்கு மேலாய் வாசித்தபோதும் அலுத்துப்போகாத  வாசிப்பு அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கையில் வாழ்வதற்கான உயிர்ப்பை உலர விடாதிருக்கின்றனர். இன்னமும் சேதி வராவிட்டால் பரவாயில்லை இனி பறக்கப்போகின்றேன் -அவ்வப்போது ஓய்வெடுக்க ஒரு கிளை மட்டும் போதும்- என்கின்றனர். எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை என்றாலும் எல்லா வலிகளையும் தமது துயரங்களாகப் பார்க்கும்  கனிந்த மனதுடையவர்களாகவும் இருக்கின்றனர்.

பெண்களுக்கான சுதந்திரமே ஆண்களாகிய நம்மையும் பலவற்றில் இருந்து விடுதலை செய்யக்கூடும் என்ற திசையில் நின்று யோசித்துப் பார்க்கின்றேன். அந்தவகையில் இந்தத் தொகுப்புக்களில் பெண்கள் தமது விருப்புக்களின் பறத்தல்களை நிகழ்த்திக்காட்டுகின்றனர். நாமும் அவர்களின் கவிதைகளினூடு சிறகை விரிக்கும்போது புதிய அனுபவங்களுக்கான சில வரைபடங்களை கண்டடையவும் கூடும்.


(நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2015 இதழ்)