கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பயணக்குறிப்புகள் - 02 (India)

Friday, February 27, 2015


நேற்று மாலை புத்தகக்கண்காட்சி சிற்றரங்கில் சுகுமாரனின் உரையைத் தவறவிட்டாலும், அவருடனான வாசகர் கேள்வி-பதில் வேறெங்கும் போகவிடாது அங்கேயே அமர்த்தி வைத்திருந்தது. வாசல்வரை தமிழகத்து வாசகரிடையே வந்த அரசியல் கவிதைகளை ஈழத்துக் கவிஞர்களே தெருவிற்கு அழைத்து வந்தார்களென அதற்குரிய இடத்தையும் வழங்கியிருந்தார். பின்னர் ஷர்மிளாவின் ஈழத்துப் படைப்புக்கள் தமிழகத்து இலக்கியப் பரப்பில் நிகழ்த்திய செல்வாக்கு என்பது பற்றிய கேள்விக்கும் சுகுமாரன் விரிவாகப் பதிலளித்தார். தமிழ் படைப்புலகு என்பது எப்போதும் தமிழகத்தைத் தாண்டாதது போல பலர் உரையாடவும்/பேசுகின்ற காலத்தில் சுகுமாரன் போன்றவர்கள் எப்போதும் நம்பிக்கை தரக்கூடியவர்கள். மேலும் மனுஷ்யபுத்திரன் 2009 அழிவைப் பற்றிய சேரனின் 'எங்கள் காலத்தில்தான் ஊழி நடந்தது' கவிதையை நினைவுபடுத்தியிருந்தார். அந்தக் கவிதை எந்தக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதென்றாலும் சேரன் அந்தக் கவிதையை 2009 முன்பான காலத்திலேயே எழுதியிருந்தார் என்பது ஒரு திருத்தத்திற்காய்க் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

இடையில் 'விருபா' ஒரு ஸ்டாலில் நிற்கின்றேன் ஒருவர் உங்களைச் சந்திக்க விரும்புகின்றார் என அழைப்பும்\மெசேஜூம் செய்திருந்தார். போனபோது 'தமிழினி' வசந்தகுமாரை சந்திக்க முடிந்தது. என்னை எப்படித் தெரியும் எனக் கேட்டபோது ஜெயமோகன் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார் என்றார். அது உண்மை என்றால், இனி 'காலம்' செல்வம் 'டேய் உன்னைப் பற்றி ஜெயமோகன் இப்படிச் சொன்னார்' என்று சொல்வதையும் நம்பவேண்டி வரும் போலிருக்கிறது.

மாலை, பெசண்ட் நகர் 'ஸ்பேசில்' ஓவியர் ராமனுஜம் பற்றிய சி.மோகனின் சிறப்புப் பேச்சைக் கேட்பதற்காய் ஹஸீனும் நானும் போயிருந்தோம். சி.மோகனின் உரை மிகச் சிறப்பானது என்றால் (ராமனுஜத்தை முக்கிய பாத்திரமாய்க் கொண்டு சி.மோகன் நாவலும் எழுதியிருக்கின்றார்) அங்கே பல்வேறு ஓவியர்களை தட்சிணாமூர்த்தி, மருது, அப்ராஜிதன், டக்ளஸ், நடேஷ் போன்றவர்களை ஒரேசேர சந்திக்கவும் உரையாடவும் முடிந்தது சிறப்பு. எனக்காய் புத்தகக் கண்காட்சி வந்து சந்தித்த வாசுவின் அன்பு இரண்டாம் முறை சந்தித்தபோது இன்னும் அதிகரித்தது போன்ற உணர்வு. என்ன நிகழ்ச்சி தொடங்க முன்னர் 4.00 மணிக்கு வந்து அவருடன் 'தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை என்று மட்டும் சற்று கவலைப்பட்டேன்.

அப்படியே ஜெயபாலனின் வீட்டுக்குப் போய் குரக்கன்மா புட்டும், பெசண்ட் நகர் பீச்சில் வாங்கிய மீனில் செய்யப்பட்ட குழம்பும் பொரியலும் சாப்பிட்டு நுளம்புகளோடு போராடி படுத்து விடிகாலை சூரியனைப் பார்க்க பீச்சிற்குப் போய், அங்கே சூரியனோடு இளங்குமரிகளைப் பார்த்து இரசித்து முருகன் இட்லி கடையில் வெங்காய்த் தோசையும் தேநீரும் குடித்துவிட்டு வந்திருக்கின்றோம். ஜெயபாலன் அடிக்கடி ஒரு வசனத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றார். நானும் இனிவரும் காலங்களில் அதைப் பயன்படுத்தி என்னையொரு ஃபீனிக்ஸ் பறவையாக்கலாம் என நினைக்கின்றேன். பாரதியாரின் பாதிப்பிலிருந்து வெளியே வர சங்கக் கவிதைகளே நிறைய உதவியென உலாத்தலில்ஜெயபாலன் சொல்லிக்கொண்டுபோக இலக்கிய உரையாடலாய் அது கிளைத்தெழும்பியது.

முன்னோரு காலத்தில் அவர் என்னை வேறு யாரோ ஒருவராக நினைத்து முரண்பட்டு பதிவுகளில் எழுதியதை அவருக்கு நான் இன்னும் நினைவுபடுத்தவில்லை. அவரது கணனியிலிருந்தே இதை எழுதுகிறேன். அதற்கும் நன்றி.தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சோடா விளம்பரத்தில் அதை குடித்துவிட்டு எதையோ எழுதி அனுப்பினால் அஸினைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கின்றது என்கின்றனர். அதற்கும் மும்முரமாக முயற்சிக்கவேண்டும்.
சில விடயங்களைச் செய்யவேண்டுமெனத் தொடங்கிய பயணத்தில் நினைத்தவற்றை இன்னும் செய்து முடிக்கவில்லை. ஆனால் எதிர்பாராத தருணங்கள் பலதை இந்தப்பயணம் எல்லா முரண்பாடுகளுடனும் தந்துகொண்டிருக்கின்றது. இதுவும் அழகானதுதானல்லவா?

(ஜனவரி 17)

பயணக்குறிப்புகள் - 01 (India)

Wednesday, February 25, 2015

னோ தெரியவில்லை, பெருநகரங்கள் என்னை அவ்வளவாய்க் கவர்வதில்லை. என் வாழ்வில் முக்கியமான அல்லது மீண்டும் போய் வாழப் பிரியப்படும் ஒரு காலத்தைக் கொழும்பில் சில வருடங்கள் கழிந்திருந்தாலும், பெருநகர் என்பதால் அல்ல, அங்கு சந்திக்க நேர்ந்த மனிதர்களாலேயே எனக்கு அந்த நகர் பிடித்திருந்தது. புலம்பெயர்ந்த பின் கொழும்பிற்குப் போகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை உடனடியாக வெளியேறிப் போய்விடவேண்டும் என்ற எண்ணத்தையே அது பிறகு தந்தபடி இருந்திருக்கின்றது. ஆனால் சென்னை என்ற பெருநகரம், அத்தனை நெரிசலுக்குள்ளும், சத்தங்களுக்கும் , புழுதிக்குள்ளும், புகைக்குள்ளும் அப்பால் என்னைக் கழுத்தைப் பிடித்து தள்ளாதிருந்தது என்பது என்னளவில் ஓர் அதிசயமே. இதேயே அங்கு சந்தித்த நண்பரிடம் கூறியபோது நான்கைந்து வாரங்கள் தொடர்ந்து சென்னையில் தங்கியிருந்து பார், வேறொரு வகையான அனுபவம் கிடைக்கும் என்றார். அது எவ்வகையான அனுபவம் என்று அவரும் சொல்லவில்லை. நானும் நான்கைந்து வாரங்கள் தொடர்ந்து சென்னையில் தங்கவுமில்லை.

சென்னையிற்கு வந்திறங்கிய தொடக்கத்தில் நண்பரொருவரின் மோட்டார் சைக்கிளில் பகல்களிலும் இரவுகளிலும் சென்னையின் புகையையும், புழுதியையும் அனுபவித்தபடி அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது, சென்னை பெண்களுக்கான நகரில்லை எனச் சொன்னேன். நமது இலக்கியவாதிகள் வெளிநாடுகளுக்கு கொஞ்சநாட்கள் வந்துவிட்டு, வெளிநாட்டு வாழ்வைக் கரைத்துக்குடித்தமாதிரி எழுதுவதைப் போலத்தான் நான் சொன்னது என்பது பின்னர் புரிந்தாலும், எம்மைப் போல நினைத்த இடத்தில் தேநீர் குடிக்கவும், எந்த இடமென்றாலும் சுதந்திரமாய்ச் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தவர்களையும் பார்த்தபோதுதான் இப்படியான ஓர் அவதானத்தைச் சொன்னேன்.

ஆனால் பெருநகரம் பெரும் சுதந்திரத்தைப் பெண்களுக்கு அளித்திருந்திருக்கின்றதெனப் பெண்களே பதிவு செய்திருக்கின்றனர் என்பது பிறகு நினைவில் வந்தது. புலம்பெயர் வாழ்வு குறித்து ஆண்களாகிய நாம் எதிர்மறையான கருத்துக்களைப் பதிவுசெய்து கொண்டிருந்தபோது, வசந்தி ராஜா போன்ற பெண்கள் அன்றே 'தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தரப்பட்ட சுதந்திரம்' இந்த வாழ்வெனக் கொண்டாடியிருக்கின்றனர். பின்னர் சென்னையில் எழுந்தமானமாய் பஸ்களில் எந்தத் திசையென்று பார்க்காது அலைந்தபோதும், Coffee Day போன்றவற்றில் புகுந்தபோதும் பெண்களை நிறையப் பார்க்க முடிந்தது. எனினும் இரவு பத்து மணிக்கு மேல் பீச் போன்ற பொதுஇடங்களிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்ற ஒருவகையான 'ஊரடங்குச் சட்டம்' இருக்கும் நகரில், ஒரு பெண் அதன்பிறகு இரவில் இயல்பாய் நடமாடித் திரியமுடியுமா எனவும் தெரியவில்லை.

சென்னையில் எதையும் உள்வாங்கிக்கொள்ள முடிந்த எனக்கு இரண்டே இரண்டு விடயங்களோடு மட்டும் எப்போதும் போராடிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது. நினைத்த இடத்தில் சிறுநீர் கழிப்பதைக் கூட இயல்பாய் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதிலும் சில சந்துகளில் புத்திசாலித்தனமாய் 'இங்கே சிறுநீர் கழிக்காதீர்' என்பதை எழுதியதோடு அல்லாது, எல்லா மதக்கடவுளரின் அடையாளங்களையும் இணைத்திருந்தனர். எவ்வளவுதான் இயற்கை உபாதை ஒருவரை வதைத்தாலும், கடவுளின் முகங்களில் மேல் சிறுநீர் கழித்திடவா முடியும்? ஆனால் இரவாகி வெளிச்சமுமில்லாது போகும் சமயத்தில் யாராவது இதையெல்லாம் கவனிக்காது சிறுநீர் கழித்துவிட்டால் பாவம் கடவுளரால்தான் என்ன செய்துவிட முடியும்.

உள்வாங்கிக்கொள்ள முடியா விடயம் எனச் சொன்னது சிறுநீரைக் கண்ட இடத்தில் கழிப்பதையல்ல. காதைச் செவிடாக்கும் வாகனங்களின் ஒலியைத்தான். ஹோனை எங்கும் அழுத்தி அழுத்திப் பழகியதோலோ என்னவோ ஆட்களோ/வாகனமோ இல்லாதபோது கூட அடித்துக்கொண்டிருந்தார்கள். கூடவே இருந்த நண்பரொருவர், பயம் காரணமாக ஹோனை அழுத்தியழுத்தி, அவசியமில்லாத இடங்களில் கூட அடிப்பது ஒரு உளவியல் பிரச்சினையாகப் போய்விட்டதென்றார். தவறுதலாக தன் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட கடவுளர், ஒலிக்கும் ஹோனையெல்லாம் சட்டென்று வேலை செய்யாதுபோகும்படி சபித்துவிட்டால் எப்படி இந்தப் பெருநகரம் இயங்கும் எனவும் யோசித்தும் பார்த்தேன்.

மற்றொரு விடயம், காறித் துப்புவது. இடம், வலம், மேல், கீழ் என்றில்லாது எல்லாத் திசைகளிலிருந்தும் காறித் துப்பிக்கொண்டிருந்தார்கள். அதுவும் நேரெதிரே நடந்து வந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் எந்த அச்சமுமில்லாது நடக்கும் நம் காலின் முன்னே காறித்துப்பிவிட்டுச் சென்றுகொண்டிருந்தார்கள். 'பாதகம் செய்வோரைக் கண்டால் பாப்பா, காறி உமிழ்ந்துவிடு' என்று பாரதி சொல்லியிருக்கின்றார். ஒவ்வொரு முறையும் இவ்வாறு நிகழும்போது நிறையப் பேருக்கு நான் பாதகம் செய்திருக்கின்றேன் என்றுதான் என்னைத் தேற்ற வேண்டியிருந்தது.

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், எத்தனையோ வகையான மக்களை அரவணைத்து இந்தச் சென்னை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றதே என்பதில் அதன் மீது வியப்பே வந்தது. மேலும் பிற பெரு நகரங்கள் போல என்னைப் பலவந்தமாய் வெளியேற்றாது இன்னும் கொஞ்சக்காலம் தங்கலாமே எனப் பரிவாகத்தான் இந்நகரம் கேட்டது.

நம் காதலிகள் மீது நமக்கு எவ்வளவு பிரியம் இருந்தாலும் அவ்வப்போது விடப்படுகின்ற இடைவெளிகள் மூலந்தான் நம் நேசத்தின் வண்ணங்களை இன்னும் ஆழமாய் அறிந்துகொள்ளமுடியும். ஆகவே சென்னையே நான் மீண்டும் வருவேன். காதலிகளைப் பிரிந்து வாழ, காதலர்களால் சங்ககாலத்திலிருந்து இன்றுவரை அவ்வளவு எளிதாய் முடிவதுமில்லை.

(பெப்ரவரி 03)