கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பயணக்குறிப்புகள் - 06 (India)

Sunday, April 12, 2015

இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப் பாடல்!

புத்தகக்கண்காட்சியினுள் ஒரு கடையைக் கண்டபோது நண்பரொருவர் உள்ளே இருக்கின்றாரா எனத் தேடிப் பார்த்தேன். அவரோடு அவ்வளவு பரிட்சயமில்லை என்றாலும், அவரது படைப்புக்களை ஏற்கனவே வாசித்து ஒருவித நெருக்கத்தை உணர்ந்திருந்தேன். பிறகு அவர் ஊடகமொன்றில் வேலை செய்யத் தொடங்கியபோது என்னையும் அதில் எழுத அழைத்திருந்தார். எனக்கு அவர் படைப்புக்கள் பிடிக்கும் என்றாலும், அவர்பணிபுரிந்த இடத்தின் அரசியல் -முக்கியமாய் ஈழத்தமிழர் குறித்த அதன் நிலைப்பாடு- உடன்பாடில்லாததால் நேரடியாகக் காரணத்தைச் சொல்லாது மென்மையாக மறுத்துவிட்டிருந்தேன். ஒருநாள் புத்தகக் கண்காட்சியில் தற்செயலாய், எனக்குச் சென்னையைச் சுற்றிக்காட்டிக்கொண்டிருந்த நண்பரின் பைக்கில் ஏறும்பொழுதில், நான் தேடிக்கொண்டிருந்த இந்த நண்பரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரோடு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தபோது இரவு வீட்டுக்கு வாருங்கள், வீட்டில் எவரும் இல்லை. இரவிரவாய்/விடியவிடிய ஆறுதலாய்க் கதைக்கலாம் என அழைத்தார்.

நானும், மற்ற நண்பரும் தங்கியிருந்த விடுதியிற்கு முதலில் போய், அங்கிருந்து எங்கள் முடிவைச் சொல்கின்றோம் என புறப்பட்டோம். நாங்கள் பிறகு அவரை அழைத்தபோது, அவரும் மற்ற நண்பர்களும் டாஸ்மாக்கில் ஓய்வெடுப்பதாகச் சொன்னார்கள். நாங்களும் ஓய்வெடுக்கத்தான் விரும்புகின்றோம், அது விடுதியாயிருந்தாலென்ன? டாஸ்மாக்காயிருந்தாலென்ன? களைப்புப் போக்க ஓரிடம் இருந்தால் போதுமென சைதாப்பேட்டையிற்குப் போனோம்.


நாங்கள் டாஸ்மாக்கை அடைந்தபோது, நம் நண்பர் இன்னுஞ்சில நண்பர்களோடு சேர்ந்து முதலாவது அமர்வை முடித்திருந்தார். இரண்டாவது அமர்வைத் தொடங்குவதற்குள் இரவு பத்து மணியாகிவிட்டது, அரங்கை மூடிவிடவேண்டுமென ஊழியர்கள் அடிக்கடி வந்து நினைவுபடுத்திக் கொண்டிருந்தார். பகிர்வதற்குத் தேவையான ஆயத்தங்கள் இருந்தால் எங்கும் வாசிப்பை நிகழ்த்தலாம் என்பதால் அங்கே தேவையானவற்றை வாங்கிக்கொண்டு நண்பரின் வீட்டுக்குப் புறப்பட்டோம். நான்கைந்து பைக்குகளில் அந்த இரவில் ஏதோ இந்தத் தெருக்களே எங்களுக்குச் சொந்தமென்ற நினைப்பில் நாமெல்லோரும் போய்க்கொண்டிருந்தது உற்சாகமாயிருந்தது. வாசிப்பு அரங்கில் இருந்த மற்ற நண்பர்களுக்கு இரவிரவாய் இலக்கியம் கதைக்க விருப்பமிருந்தாலும், அவரவர் இல்லாள் பிறகு அவர்களின் இல்வாழ்வையே கேள்விகளால் வேள்வி செய்துவிடுவார்களே என்ற பதற்றங்களுடன் தத்தம் வீடுகளை நோக்கி நகரத்தொடங்கினர்.

ஓர் அறையில் நாம் கொண்டுவந்தவற்றைப் பரப்பிவிட்டு, சுவர்களில் சாய்ந்திருந்தபடி பேசத்தொடங்கினோம். எப்போது பசிக்கிறது என்றாலும் சொல்லுங்கள் உடனே சோறு வைத்துவிடலாம் என்றார். அப்போதுதான் 'ஐ' படம் வந்திருந்தது. நண்பர் படம் பார்த்து மெர்ஸலாயிருந்தார். நான் பார்த்த திரைப்படங்களில் இதுவல்லவா படம், எமி ஜாக்சனின் முன் எந்த அழகியும் நிற்க முடியாதென்றார். ஆக, அப்படியாக 'ஐ' படத்தின் பாடல்களைப் பின்னணியில் இசைக்கவிட்டபடி பேசிக்கொண்டிருந்தோம். 'மெட்ராஸில்' ஏதோ விளிம்புநிலைப் பாத்திரத்தைக் கொண்டுவிட்டதாய் எல்லோரும் கூறுகின்றீர்களே, சத்தமேயில்லாதே ஷங்கர் அந்தப் பாத்திரத்தை 'ஐ' யில் கொண்டுவந்துவிட்டாரென உற்சாகமாயப் பேசிக்கொண்டிருந்தார். நான் அப்போது 'ஐ' படத்தைப் பார்க்கவில்லை. பின்னர் அதை ஏவிஎம் தியேட்டரில் பார்த்தபோது சாதாரண ஒரு படத்தை, திருநங்கைகளை கேவலமாகச் சித்தரித்தன் மூலம் இன்னும் மோசமான ஒரு திரைப்படமாக்கிவிட்டனர் என்ற விம்பமே எனக்குள் தங்கியது என்பது வேறுவிடயம்.

ந்த வீட்டிற்குச் சென்றாலும் உடனே கைவைப்பது புத்தக அலுமாரிகளில்தான். நாங்கள் பேசிக்கொண்டிருந்த அறையிலே நண்பரின் புத்தக அலுமாரியுமிருந்தது. போர்ஹேஸையும், மார்க்குவெஸையும் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தாலே இந்த வாழ்வுக்குப் போதுமென்றார். நிறைய சிறு சஞ்சிகளைகள் -சி.செல்லப்பாவின் எழுத்து- உட்பட அவரின் சேகரத்திலிருந்தன. வாசக மனதுதான் எவ்வளவு அற்புதமானது. போர்ஹேஸ் எந்தப் பொழுதிலும் மார்க்வெஸ்ஸின் படைப்புக்களைப் பாராட்டியதில்லை. ஆனால் நம்மால் இருவரையும் மனமுவந்து ஏற்று பக்கத்திலிருத்தி வாசிக்கமுடிகிறது என நினைத்துக்கொண்டேன்.


நேரம் ஆக ஆக, நண்பர் தன் கடந்தகாலங்களில் மூழ்கிக்கொண்டார். சிலரோடு நிறையப் பழகினாலும் மனந்திறந்து பேச முடியா கண்ணுக்குத் தெரியாத் தடைகள் இருக்கும். நானும் நண்பரும் இதுதான் நம் முதல் சந்திப்பு என்ற நினைப்பில்லாது நிறைய நெருக்கமான விடயங்களை பகிரத் தொடங்கினோம். அவர் தன் பாடசாலை நாட்களில் மூழ்கத்தொடங்கினார். முக்கிய இரண்டு இலக்கியவாதிகளின் உச்சக்கட்டத்தில் அவர்களோடு நெருக்கமாய் பழகமுடிந்தது தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றார். இந்த வருடத்து வாசிப்பிற்கு 'கரம்ஸோவ் சகோதரர்களும்', 'மகா பாரதமும்' போதும் என்றார். நான் ஜெயமோகன் எழுதுகின்ற 'வெண்முரசா' என்றேன். இல்லை, இது பழைய மகாபாரதம் என மறுத்தார். பின்னர் நண்பர் சில இதழ்கள் வெளியிட்ட சிறுபத்திரிகையைப் பார்த்தபோது, அவர் என்னைவிட ஒவ்வொரு இதழிலும் ஜெயமோகனை நிறையத் திட்டியெழுதியிருந்தது தெரிந்தது. பரவாயில்லை இந்த விடயத்தில் கொஞ்ச நல்லவனாக நான் இருக்கின்றேன் என்ற 'அற்ப திருப்தி' வந்தது. நண்பரோடு பழகிய கொஞ்சநேரத்திலேயே கண்டுகொண்டது, அவர் எதையென்றாலும் முழுமையாக அனுபவிக்கக் கூடியவர். அதில் தன்னைத் தோய்த்துக் கரைத்துவிடக்கூடியவர். எனக்கும் அப்படி இருப்பதிலே மிகுந்த விருப்பமெனினும் அடுத்து என்ன அடுத்து என்ன என அலைபாயும் மனது இன்னமும் எனக்கு உரித்து.

நேரம் நள்ளிரவைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. எங்களோடு இருந்த நண்பருக்கு தூக்கம் வருவதாகக் கூற, நண்பர் சோறு வைத்து, அப்பளம் பொரித்து, ஏற்கனவே வைத்திருந்த கறிகளுடன் சாப்பிடத்தொடங்கினோம். சில இலக்கியவாதிகள் பற்றிப் பேச்சு வந்தது. அவர்களில் சிலர் பெண்களோடு நடந்துகொண்டவிதம் பற்றி பேச்சும் வந்தது. இவர்களின் தனிப்பட்ட வாழ்வு எங்களுக்கு முக்கியமா என்று அதை விலத்தி நான் வந்தபோதும், பாதிக்கப்பட்டவர்கள் அதை பொதுவெளியில் பேசும்போது நாம் அவர்களின் பக்கம் நிற்கவேண்டியது அவசியம் என்பதில் எனக்கெந்த மாற்றுக் கருத்துமில்லை. மேலும் இவ்வாறு நடப்பதற்கும், இலக்கியம் படைப்பதற்கோ வாசிப்பதற்கோ எந்தத் தொடர்பும் இருக்கவேண்டிய அவசியமுமில்லை. இது எல்லாச் சாதாரண மனிதர்களும் செய்யக்கூடியதுதான். 'இலக்கியவாதி' என்ற ஒரு 'அடையாளம்' எளிதாய் இவற்றுக்கு உதவுகிறது. அவ்வளவே. ஆகவேதான், எவரெனினும் தான் ஒருவர் இலக்கியவாதி எனக் கூறி தன்னை மேனிலையாக்கம் செய்வதை தொடர்ந்து நிராகரித்துக்கொண்டே வருகின்றேன்

இலக்கியம்/கலைகளில் ஆர்வமும், ஈடுபாடும் இருக்கின்றவர்களால், எளிதாய் எந்த மனிதரினதும் உள்மனதிற்குள்ளும், அவர்களின் நுண்ணுணர்வுகளில் தளங்களிற்குள்ளும் போய் இறங்குவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமில்லை. நண்பரும் ஓரிடத்தில் கூறினார், எந்த வீட்டுக்குத் தான் சென்றாலும், அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கின்றதா, சண்டைபிடித்துக்கொண்டு வாழ்கிறதா என எளிதாய்க் கண்டுபிடிக்க முடியும் என்று. மேலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பகிரமுடியாத சில விடயங்களையும் நீட்டித்துச் சொன்னார். இது சற்று உயர்வுநவிற்சியாக இருந்தாலும், எப்போதும் பிரச்சினைகளுள்ள மனிதர்களுக்குள், அன்புக்காய் ஏங்கிக்கொண்டிருப்பவர்களிடையும் நாம் இலகுவாய் நெருக்கமாகிவிட முடியும். எனவே 'இலக்கியவாதிகள்' எனப்படுவோர் பலரின் வாழ்வில் குறுக்கிடுவது/இடையீடு செய்வது பிறரை விட இன்னும் எளிதாகிவிடுகின்றது.

வ்வாறு எங்கெங்கோ தீவிரமாய்ப் போய்க்கொண்டிருந்த உரையாடலில் என்னோடு வந்திருந்த நண்பர் 'உண்டகளைப்பு தொண்டனுக்கும் உண்டு' என்று நம் இலக்கிய சம்பாசணையிலிருந்து விலகி தூங்கச் சென்றுவிட்டார். நான் இந்த நண்பருக்கு கேரளாவுக்குப் போகும் என் பெருங்கனவை விரித்துச் சொல்லிக்கொண்டிருந்தேன். திருவனந்தபுரத்திலிருக்கும் விஷ்ணு கோயில்களுக்கு எல்லாம் நிச்சயம் போகவேண்டும் என்று கூறிவிட்டு, ஒரு மலையாள பக்திப் பாடலை இசைக்கவிட்டார்.

அது- கண்ணன் முதல் நாளிரவில் தன் லீலையைச் செய்துவிடடுப் போனபின், அடுத்த நாள் காலையில் ருக்மணி(?)யின் கோலத்தைக் கண்டு அவரின் தோழி இரவு நடந்ததைக் கண்டுபிடிப்பதைப் பற்றிய பாடல். நண்பர் மலையாளப் பாடலை சொல் பிரித்து பொருள் வகுத்து சொல்லச் சொல்ல, ஒருகட்டத்தில் அவர் விளக்கப்படுத்தமுன்னரே எனக்கும் சற்று மலையாளம் விளங்கியதுமாதிரி உணர்ந்தேன். ஏதோ இனி அஸினோடு மலையாளத்திலேயே சம்சாரிக்க முடியுமென்ற மகிழ்ச்சி கணப்பொழுதில் மனதில் வெட்டிவிட்டுப் போனது.

நண்பர் தூங்கப்போவாமா எனக் கேட்டார். நீங்கள் செல்லுங்கள், நான் இணையத்தில் கொஞ்சநேரம் சஞ்சாரித்துவிட்டு வருகின்றேன் எனச் சொன்னேன். பொழுதும் விடியத் தொடங்கியிருந்தது. யன்னலுக்குள்ளால் வெளியே பார்த்தபொழுது யாரோ சிலர் தெருவை கூட்டத் தொடங்கியிருந்தனர்.

பயணத்தின் அழகு என்பதே எதிர்பாராத் தருணங்களில்தான் வெளிப்படுகின்றது. இப்படியாக ஓரிரவு நெருக்கமானதாவும், மனம்விட்டுப் பேசக்கூடியதாகவும் மாறிப்போனது மகிழ்ச்சியாக இருந்தது.

2 comments:

தனிமரம் said...

ஆஹா அருமையாக இருக்கின்றது பகிர்வு .கொஞ்சம் பதிவின் நீளத்தை குறைக்கலாம் சகோ! தொடருங்கள் கேரளாவில் விஸ்ணு கோவில் பார்த்தீர்களா?,,

4/12/2015 02:20:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி. பகவதி அம்மன் கோயில்களைப் பார்த்திருந்தேன், விஷ்ணு கோயில்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை.

4/16/2015 09:43:00 AM