-டிசே தமிழன்
அலெக்ஸ், மகிழ்ச்சியென்பது மனித உறவுகளால் மட்டும் ஏற்படுவதில்லையெனச் சொல்லியபடி, ஆபத்துக்கள் பற்றி எதுவும் அஞ்சாது இயற்கையின் அடியாழத்தை நோக்கி தேடிச் சென்றவன் நீ. இனி தப்புவதற்கு எந்த வழியுமில்லையென மரணத்தை துளித்துளியாக வரவேற்றபோதும் உன்னருகில் இருந்த தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டுக்கொல்லாது, உனக்கு மிக விருப்பமான இயற்கையைப் போலவே சாவையும் இயல்பாகவே ஏற்றுக்கொண்டாய். இறுதியில் கூட, இந்த வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன் எனத்தான் உன்னை 24 வயதில் மரணம் தழுவியபோது வாக்குமூலமாய் விட்டுச் சென்றாய். எந்தப்பொழுதிலும் வாழ்வின் மீதான அவநம்பிக்கையைப் பற்றி நீ பேசவில்லையென்பதால்தான் இன்னும் என் மனதிற்குள் ஆழப்பதியமாகிப் போகின்றாய்.
வசதியான குடும்பப் பின்னணி, பல்கலைக்கழகத்தில் உயர்ந்த பெறுபேறு என எல்லாம் கிடைத்தபோதும், ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் வாழ விரும்பியதில்லை. நீ விரும்பியது இயற்கையோடு ஒன்றித்து வாழும் ஒரு நாடோடி வாழ்க்கை. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில், எல்லாவற்றையும் தமது உடமைகளாக்கும் காலத்தில் - முக்கியமாய் அமெரிக்கா போன்ற மேற்கு நாட்டில்- இது அவ்வளவு சாத்தியமானதுமல்ல. அறுபதுகளில் உச்சமும் ஈர்ப்பும் கொண்ட ஹிப்பிகளின் வாழ்தல் முறை எப்போதோ முடிந்துவிட, நீ தொண்ணூறுகளில்தான் உன் அலைதலை ஆரம்பிக்கின்றாய்.
தேரோவும், ஜாக் லண்டனும், தால்ஸ்தோயும் உனக்கு மிக நெருக்கமானவர்கள் என்றாலும், 'இளம் பயலே உன் வாழ்வில் செய்வதற்கு ஏதேதோ எல்லாம் இருக்கும்போது ஏன் இப்படி பாலைவனங்களில் அலைகிறாய்?' என ஒருவர் கேட்கும்போது, 'இந்த degree, career, எல்லாம் 20 நூற்றாண்டின் கண்டுபிடிப்புக்கள், இவை எல்லாவற்றுக்கும் முன்னர் நமக்கு வேறொரு வாழ்விருந்தது' எனச் சிரித்தபடி சொல்வதற்கு நீ கற்ற புத்தகங்கள் மட்டும் காரணமாயிருக்காது. நீ அவற்றைத் தாண்டியும் உன் சிறகுகளை விரிக்கத்தொடங்கி விட்டிருந்தாய் என்பதை எங்களுக்கு ஆழமாய் உணர்த்துகின்ற இடம் அது.
அலெக்ஸ், நீ வனாந்தரங்களையும், பாலைவனங்களையும், ஆறுகளையும் தேடி எந்த இலக்குமில்லாது அலைவதற்கு முன், உனது சேமிப்பிலிருந்த 24,000 டொலர்களையும் ஒரு உதவி நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டு போனவன் என்பது மட்டுமின்றி, உனது கார் ஒரு ஆற்றுக்குள் சிக்குகின்றபோது காரை மட்டுமில்லை, உன்னிடமிருந்து எஞ்சிய காசையும் எரித்துவிட்டே செல்கின்றாய். பணம் என்பது மனிதர்கள் உருவாக்கிக்கொண்டதே அன்றி, அது எப்போதும் எம்மை தொந்தரவுபடுத்தியபடி, பிற மனிதர்களை புரிந்துகொள்ள தடங்கலாக இருக்குமென மிகத்தெளிவாகப் புரிந்து பணம் என்பதையே நிராகரித்தவன். எனினும் ஒருபோதும் நீயுனது நாடோடி வாழ்க்கையில் கிடைத்த எந்த வேலையைச் செய்ய மறுத்தவனுமில்லை. ஒருவகையில் கூட்டுழைப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடியவனும் கூட.
உன் பயணங்களில் சந்தித்த மனிதர்கள் எவருமே உன் இந்த இயல்பான நிலையை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ளவே இல்லை. ஆனால் அவர்களுடன் நீ பழகிய சொற்ப காலங்களுக்குள் -உனக்கு இயற்கையோடு இருக்கும் அளவற்ற காதலை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் கூட- உனது குதூகலமான நடத்தைகளால் கவர்ந்திழுக்கப்படவே செய்திருக்கின்றார்கள். ஆகவேதான் பாலைவனத்தில் தற்செயலாய் சந்திக்கும் ஒருவர், நீ அலாஸ்காவிற்கான உனது பயணத்தைத் தொடரும்போது, உன்னைத் தத்தெடுக்கின்றேன் என்கின்றார். உனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், அலாஸ்கா பயணம் முடிந்தபின் வந்தபின் இதுகுறித்து யோசிக்கின்றேன் எனப் புன்னகைக்கிறாய். உண்மையில் நீ அலாஸ்காவில் இருந்து திரும்பிவந்தாலும் இந்தத் 'தத்தெடுத்தலை' ஏற்கப்போவதில்லையென நாமனைவரும் அறிவோம்.
மிகுந்த வசதியான பெற்றோரை, உனக்கு மிக நெருக்கமான சகோதரியைப் பிரிந்துவந்து, அவர்களையே மாதக்கணக்கில் தொடர்பே கொள்ளாது காற்றைப் போல வீசும் திசைக்கேற்ப அலைந்துகொண்டிருந்த நீ எப்படி ஒரு தத்தெடுத்தலை, அதன் மூலம் உனக்கு வரப்போகும் சொத்தை ஏற்றுக்கொள்வாய்? எதையும் உடைமையாக்கக்கூடாது எனத்தானே, இருந்த சொற்ப பணத்தையே அலட்சியமாய் எரித்துவிட்டு நடந்துகொண்டிருந்தவன் என்பதை அவர் அறியார் அல்லவா? உனக்கு சொத்தென இருந்தவற்றை மட்டுமல்ல, உனது அடையாளங்கள் எல்லாவற்றையும் உதறித்தள்ளியவன். கடனட்டைகளிலிருந்து உன்னை யாரென காட்டக்கூடிய அடையாள அட்டைகள் வரை எல்லாவற்றையும் கிழித்தும் நெருப்பில் போட்டும் எரித்து கடந்தகாலச் சுவடுகளை உதறித்தள்ளியவன். சந்திக்கும் எவரும் உன் பெயரிலிருந்து உனது பூர்வீகத்தைக் கண்டுவிடக்கூடாதென்பதற்காய் அலெக்ஸ் என்ற புதிய பெயரைக் கூட நீயாகத்தானே தேர்ந்தெடுத்துக்கொண்டாய்.
உனது இந்த அலைச்சலையும், இயற்கையின் மீதான பெருவிருப்பையும், நீ வழியில் சந்தித்த ஹிப்பிகளால் கூட முற்றுமுழுதாக விளங்கிக்கொள்ள முடியவில்லை அல்லவா? சிலவேளைகளில் உனது இளவயதும், எல்லாவற்றையும் முற்றுந் துறந்த நிலையும், அவர்களைக் கூட யோசிக்க வைத்திருக்கவும் கூடும். உனது வாழ்க்கையைப் பின் தொடர்ந்து பார்க்க விரும்பிய சிலர், நீயுன் சிறுவயதுகளில் பிணக்குப்பட்ட பெற்றோரையும், அவர்களின் பொய்களையும் கண்டுதான் இத்தகைய விளிம்பிற்குப் போயிருக்கலாமெனச் சொல்கின்றார்கள். அது ஒரு காரணமாய் இருக்கலாமெனினும், அது மட்டுமே இப்படி உந்தித்தள்ளியிருக்காதென நம்புகின்றேன். உன்னைவிட இன்னும் ஆழமான பாதிப்பிற்குப் பெற்றோரினால் உள்ளாக்கப்பட்ட எல்லோருமா இப்படி காசு, அடையாள அட்டையென எல்லாவற்றையும் எரித்துவிட்டு அடையாளமின்றி இயற்கையோடு ஒன்றிக்க விரும்புகின்றனர்? நிச்சயம் இதைத்தாண்டிய வேறு காரணங்கள் இருந்திருக்கவேண்டும். இயற்கையின் மர்மச்சுழல் உனக்குள் சுழித்தோடியிருக்கவேண்டும். அது உன்னை எதையும் கவலைப்படாது தன்போக்கில் இழுத்துச் சென்றிருக்கவேண்டும்.
அலெக்ஸ், நீ அலாஸ்காவில் இருந்து ஒருவேளை தப்பி வந்திருந்தால் நிச்சயம் உனது பெற்றோரை அவர்கள் செய்த தவறுகளைக்கூட மன்னித்து அரவணைத்திருப்பாய். உனக்கு நெருக்கமான தங்கை விழிகள் விரிய விரிய உனது அலைச்சலைப் பற்றி கேட்க இரவிரவாய் இருந்து விபரித்திருத்துமிருப்பாய். எனெனில் உனது பயணங்களோடு நீ ஒரு முதிர்ச்சியான ஆணாக வளர்ந்துகொண்டேயிருந்தாய். எல்லாவற்றையும் சகிக்க மட்டுமில்லை, எல்லோரையும் நேசிக்கவும் கற்றுக்கொண்டிருந்தாய். நீ மெக்ஸிக்கோ எல்லையைக் கள்ளமாய்த்தாண்டி திரும்பி வரும்போது பொலிஸ் உன்னை ரெயினிலிருந்து உதைத்து எறிந்தபோதும் அவர்களை மன்னித்துவிடக்கூடியவனாகவே இருந்தாய்.
ஆனால் எல்லாவற்றையும் உதறித்தள்ளியெறிந்த உனக்கு அதிகாரத்தைச் சுழித்துவிட்டுப் போகவும் தெரியும். ஆகவேதான் ஒரு நதியைக் கடப்பதற்கு வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டுமென பொலிஸ் கூறும்போது, ஒரு நதியைக் கடப்பதற்கும் அனுமதி வேண்டுமா என நம்பமுடியாதபடி திரும்பத் திரும்பக் கேட்கின்றாய். பின்னர் அவர்களின் அனுமதியைப் பெறாமல், நதியைப் படகில் உன்பாட்டில் கடக்கவும் செய்கின்றாய். இயற்கையைக் கூட தன் அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அரசுக்கு எதிராய் எறிந்த கல்தானன்றோ இந்த நதி கடத்தல்?
உனது மென்மனதை அறிந்தவர் எவரும் உன்னை அவ்வளவு எளிதில் பிரிந்துசெல்லவும் விடமாட்டார்கள். பாலைவனத்தில் அலைகையில் ஒரு பெண்ணுக்கு உன்மீது காதல் வருகிறது. என்னையே முழுதாகத் தருகிறேன் என ஒரு கிறிஸ்மஸ் நாளில் அவள் கூறுகின்றபோது, 'பதினெட்டு வயதே தாண்டாத ஒரு சின்னப் பெண் நீ, இது நல்லதல்லவென' மறுக்கவே செய்கின்றாய். நாடோடிகளாய் அலைபவர்கள் எல்லோரும் உடல்/உடலுறவு போன்றவற்றில் தறிகெட்டுத்தான் இருப்பார்கள் என்ற பொதுப்புத்தியை இந்தச் செய்கையின் மூலம் நிராகரிக்கவே செய்கின்றாய். ஆனால் அந்தப் பெண்ணை அப்படியே மனமொடிந்துபோக விடவும் நீ விரும்பவில்லை. ஆகவேதான் அவளோடு சேர்ந்து அந்த நள்ளிரவில் எல்லோருக்கும் முன்னிலையில் உங்களிருவருக்கும் பிடித்த பாடல்களைப் பாடுகின்றாய். அவள் என்றேனும் ஒருநாள், இன்னொரு ஆணுடன் உறவில் இருக்கும்போது உன்னை நெகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்ளாமலா போகப்போகின்றாள் அலெக்ஸ்?
அலாஸ்காவில் மூன்று மாதங்களுக்கு மேல் கழித்தபின் உனக்கான உணவெல்லாம் தீர்ந்தும் விடுகின்றன. வேட்டையாடுவதற்கான விலங்குகளும் குறைந்துவிட்டன. நீ திரும்புவதற்கான வழிகளும் அடைபட்டுவிட்டன. பசி, உன் வாழ்வைக் கொஞ்சம் கொஞ்சமாய் தின்னவும் தொடங்கிவிட்டது. நீ பசிக்காய் சாப்பிட்ட அலாஸ்கா உருளைகிழங்கெனப்படும் ஒருவகை செடியிலிருக்கும் விஷம், நீ சாப்பிடும் எதையும் சமிபாடு அடைவதையும் தடுக்கின்றது.
மரணம் நிச்சயமான நிலைமையில் நீ எடுத்துக்கொள்கின்ற ஒரு புகைப்படத்தையும் இறுதியில் எழுதிய வாக்கியங்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிடவும் முடியாது. இன்றும் அலாஸ்காவில் நீயொரு காலத்தில் தங்குவதற்கெனத் தேர்ந்தெடுத்த பஸ்ஸையும், நீ சென்ற வழித்தடங்களைத் தேடியும் பல நூற்றுக்கணக்கானவர்கள் சென்று கொண்டேயிருக்கின்றார்கள். ஒருவகையினருக்கு உன் வாழ்வு முட்டாள்தனமானதாகவும், இன்னொரு சாராருக்கு உன் வாழ்வு ஒரு வியத்தகு சாகசமாகவும் இருக்கின்றது. ஆனால் இந்த எல்லா வகையினரையும் தாண்டி உனது சகோதரி ஓரிடத்தில் குறிப்பிடுவதுபோல, சிலருக்கு 80 வயதிருந்தால் கூட சாத்தியமாகாத வாழ்வை, நீ 24 வயதிற்குள்ளேயே சாத்தியமாக்கிவிட்டுப் போயிருக்கின்றாய் என்பதல்லவா உண்மை.
எதையும் மேனிலையாகம் செய்வது எனக்குப் பிடித்தமானது அல்ல, அவ்வாறே நீ தேர்ந்தெடுத்த வழியையும் நான் மேனிலை செய்யப்போவதில்லை. வாழ்க்கை என்பதை எந்தவகையானது என்றாலும், ஒருவர் அவருக்குப் பிடித்தமாதிரி வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதே என்னளவில் முக்கியமானது. அந்தவகையில் உனக்குப் பிடித்த வாழ்க்கையை நீ வாழ்ந்திருப்பாய் என்றே எண்ணுகின்றேன். இயற்கையை நேசிப்பவன் அவ்வளவு எளிதில் தற்கொலையை நாடமாட்டானென -பட்டினியால் அணுஅணுவாய் வேதனைப்பட்டுத்தான் இறந்திருப்பாய் என்றபோதும்- உன்னை நீயே சுட்டுக்கொல்லவில்லை என்பது வாழ்வில் எதன்பொருட்டும் நம்பிக்கையை இழந்துவிடாதீர்களென நீ பிறருக்குக் கற்றுத்தருகின்ற ஒரு பாடம்.
என்றோ ஒருநாள் அலைந்து திரியும் ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுப்பேன் எனவே என் மனம் எப்போதும் சொல்லிக்கொண்டேயிருக்கின்றது. அது சாத்தியமாகுமா இல்லையா என்பதை நானறியேன். அப்படி சாத்தியமாகின், அலெக்ஸ் உன்னையும் என்னை வழிநடத்தும் ஒரு முன்னோடியாக எனக்குள் இருத்திக்கொள்வேன். உன் கதையை அறிந்துபோகின்ற வழித்தடங்கள் எங்கும் என் கண்களிலும் ஈரம் கசிந்துகொண்டிருந்ததை நீ மட்டுமே அறிவாய் அலெக்ஸ்.
(அலெக்ஸ் எனப்படும் Christopher McCandless பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபின் தனது நாடோடி வாழ்வைத் தொடங்குகின்றார். பயணத்தின் நீட்சியில் அலாஸ்காவில் பட்டினியின் நிமித்தம் மரணத்தை தழுவிக்கொள்கிறார். அவரது உடல் சிலவாரங்களின் பின் காட்டுமான் வேட்டைக்காய்ச் சென்றவர்களால் கண்டுபிடிக்கப்படுகின்றது. இவரைப் பற்றி 'Into the wild' என்ற தலைப்பில் முதலில் நூலாகவும், பின்னர் அதேபெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது)
(நன்றி: 'ஆக்காட்டி' - இதழ் 08)