கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஓர் இசைக்கலைஞனின் பயணம் (Passenger)

Tuesday, December 27, 2016

Passenger இசைக்குழுவின் மைக் ரோஸன்பர்க்கின் (Mike Rosenberg) 'Let her go' என்கின்ற பாடல் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றது. ஒரு பில்லியனுக்கு மேலாய் YouTubeல் கேட்கப்பட்டுமிருக்கின்றது. பாடலின் பிரபல்யமோ அல்லது  வெற்றியோ அல்ல என்னைக் கவர்ந்தது. மைக் கடந்து வந்த பாதை பற்றியே பேச விரும்புகின்றேன். மேலும் மைக் தேர்ந்தெடுத்த இசைவகையான Folk எனக்கு மிகப் பிடித்தமானதும் கூட.

மைக்கும் இன்னொரும் நண்பரும் சேர்ந்த 5 பேர் கொண்ட இசைக்குழுவை 2003ல் தொடங்குகின்றார்கள். முதலாவது அல்பத்தை 2009ல் வெளியிட்டபின் இந்த இசைக்குழு பிரிகின்றது. மைக் தனித்துப் பாடப் போகின்றார். கஷ்டமான காலம், தெருக்களில் பாடி தன் வாழ்க்கையை நடத்துகின்றார் என்றபோதும், இசையின் மீதான பித்தத்தை விடாது இருக்கின்றார். ஒரு கட்டத்தில் இசையிலிருந்து முற்றிலுமாய் வெளியேறுவோமா என்று மிகுந்த அழுத்தத்திற்குள் போனபோது ஆஸ்திரேலியாவிற்குப் போய்ப் பாட வாய்ப்புக் கிடைக்கிறது.

அங்கே கிடைத்த நண்பர்கள் மற்றும் வாய்ப்புக்கள் மூலம் இசையை உயிர்ப்புடன் வைத்திருந்து தொடர்ந்து இசைத்தட்டுக்களை வெளியிடுகின்றார். 'Let her go' பாடல் மைக்கை உலகம் முழுதும் எடுத்துச் சென்று, பெரும் வாய்ப்புக்கள் அவரின் கதவைத் தட்டினாலும், இன்னமும் பழைய நண்பர்களோடு சேர்ந்தே புதிய பாடல்களைத் தயாரிக்கின்றார். ஒரு வெற்றியால் எதுவும் மாறுவதில்லையென்கின்றார். எனக்கு எது மகிழ்ச்சியாகவும் இதமாகவும் இருக்கின்றதோ அந்தச் சூழலிலேயே இருக்க விரும்புகின்றேன் எனவும் சொல்கின்றார்.

ஒருகாலத்தில் தன்னை உயிர்ப்புடன் வைத்த தெருக்களை நினைவில் வைத்து இன்று இவ்வளவு பிரபல்யம் கிடைத்தபின்னும் அங்கே சென்று பாடுகின்றார். பெரும் இசைக்கச்சேரிகளில் கல்நதுகொள்ள எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை, எனவே அவ்வாறு சந்தர்ப்பம் வாய்க்காதவர்க்காய் தெருக்களிலேயே தான் பாடுவது தனக்குப் பிடித்தமானது என்கின்றார்.

மைக் கடந்து வந்த பாதையில் நாம் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கும் போலவே தோன்றுகின்றது. எழுத்தாளர், கலைஞர் என்பவர்க்கு மட்டும் என்றில்லை, எவராயிரும் எதுவாயினும் அவருக்குப் பிடித்ததைச் செய்வதே மிகவும் சிறந்தது. நம்மில் அநேகருக்கு நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையிற்கும் வாழ விரும்பும் வாழ்விற்குமிடையில் இடைவெளி இருப்பதை அறிவோம்.

இன்றைக்கு கனடாவில் பெரும்பாலானோன மக்களின் ஆண்டு வருமானம் சராசரியாக 35Kல் இருக்கின்றது என்றால், கலைஞர்களில் பெரும்பாலானோரின் சம்பளம் 25Kற்கும் குறைவாக இருக்கிறதென்று ஒரு கட்டுரையில் வாசித்தேன். ஆனால் அவர்கள் இத்தனை குறைந்த வருமானத்துடன் ஏன் அதைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்றால் அவர்கள் எதைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அது பிடித்தமாயிருக்கின்றது. பிடித்தமாயிருக்கிறதென்பதற்காய் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை சுமுகமாயிருக்கிறது என்பதில்லை. எல்லா ஏற்ற இறக்கங்களோடும் அவர்களுக்குப் பிடித்த வழியில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள், அவ்வளவுதான்.

மைக் ஒருகட்டத்தில் அழுத்தங்களினால் இசையை விட்டு விலகியிருந்தால், அவரின் அழகான பாடல்களை நாமின்று கேட்டுக்கொண்டிருக்கமுடியாது. எனது இசையைக் கேட்க 10,000 பேர் வந்தாலும் அவர்கள் அனைவரும் அங்கும் தொலைபேசியின் சிறிய திரையின் மூலமே என்னைப் படமெடுக்கவே பெரும்பாலும் முயல்கின்றார்கள், நேரடியாக இந்த அனுபவத்தை இரசிப்பதைத் தவிர்த்து விடுகின்றார்கள் என்று இன்றைய தொழில்நுட்பம் நம்மை விழுத்தும் வலை பற்றியும் மைக் கவலைப்படுகின்றார்.

ஒரு பாடலின் மிகப்பெரும் வெற்றி உங்களை அடுத்த அல்பம் செய்வதற்கு மிகுந்த அழுத்ததைத் தருகின்றதா எனக் கேட்கும்போது, வெற்றி என்பது மகிழ்ச்சி தரும் செய்திதான். ஆனால் அடுத்தும் பரவலான வரவேற்புக் கிடைத்தால் சந்தோசந்தான். ஆனால் அதை விட என் பாடல்களைக் கேட்பவர்கள் என் பாடல்களோடு இன்னும் நெருக்கமாவது குறித்தே அதிகம் அக்கறைப்படுவேன் என்கின்றார்.

'Let her go' என்பது தனது காதலொன்றின் முறிவின்போது எழுதப்பட்டதென்கின்றார். ஆனால் இப்போது பார்க்கும்போது அதன் துயரத்தை விட இந்தப் பாடலின் மூலம் ஒரு இதமான சம்பவமாக அது மாறியிருக்கின்றது என்பதையே அவதானிக்கின்றேனென மைக் கூறுகின்றார்.

பிடித்த எதையும் செய்யும்போது அவை சிலவேளைகளில் தோற்றுப்போனாலும், ஒருபோதும் அதற்காய் வருந்தும் நிலை ஏற்படாது என்றுணரும் எவரும் வெற்றி/தோல்விகளில் அவ்வளவு தோய்ந்து போகாது மைக் போலவே தமக்கான பாதையில் நடந்துகொண்டிருக்கவே செய்வர்.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

பனி

Monday, December 26, 2016


வ‌ன் ப‌ழைய‌ கிங்ஸ்ட‌ன் தெரு, 401 நெடுஞ்சாலையோடு இணைகின்ற‌ ப‌குதியில் ந‌ட‌ந்து கொண்டிருந்தான். மெல்லிய‌தாக‌ப் பெய்த ப‌னி, அணிந்திருந்த‌ க‌றுப்ப‌ங்கியின் மேல் ம‌ல்லிகைப் பூவைப் போல‌ விழுந்து க‌ரைந்து போய்க்கொண்டிருந்த‌து.  வான‌த்தை மூடியிருந்த‌ க‌ருஞ்சாம்ப‌ல் போர்வை ஒருவ‌கையான‌ நெகிழ்வை மாலை நேர‌த்துக்குக் கொடுக்க‌, இலைக‌ளை உதிர்த்த‌ ம‌ர‌ங்க‌ள் த‌லைவிரிகோலமாய் வானை நோக்கி எதையோ யாசிப்ப‌து போல‌வும் தோன்றிய‌து. தானும் எல்லா இழைகளும் அறுந்து தனித்துவிடப்பட்ட தனியன்தானோ என்கிற வெறுமை இவ‌னுக்குள் ப‌ர‌வ‌த் தொட‌ங்கிய‌து. தலைவிரிக்கோல ம‌ர‌ங்க‌ளைப் போன்று, பனித்திடலில் இரு கால்கள் புதைய ந‌ட‌மாடும் ம‌ர‌ந்தானோ தானும் என உருவ‌கித்துக் கொண்டான்.

இன்ன‌ கார‌ண‌ம் என்றில்லாது க‌ண்க‌ளிலிருந்து நீர் க‌சிய‌த்தொட‌ங்கும‌ள‌வுக்கு மிகவும் நெகிழ்ந்திருந்தான். க‌ண்ணீரைக் கையால் துடைக்காது, அது விழுகின்ற‌ ப‌னியோடு சேர்ந்து க‌ரைந்து போய்க்கொண்டிருந்ததை அச‌ட்டை செய்து ந‌ட‌ந்த‌ப‌டியிருந்தான். மெல்லிய‌ தூற‌லாய் விழும் ப‌னியை நாவை நீட்டி ருசிப்ப‌து அவ‌னுக்கு எப்போதும் பிடித்த‌மான‌ செய‌லென்ப‌தால் இன்றும் ப‌னியைச் சுவைத்துப் பார்த்தான். உவ‌ர்ப்ப‌து போல‌ப்ப‌ட்ட‌து. இது ப‌னியில் இய‌ல்ப‌ல்ல‌வே, த‌ன் நினைவுதான் அதைக் க‌ச‌ப்பாக்கிற‌து போலும் என‌ எண்ணிக்கொண்டான். இப்ப‌டியே நெகிழ்ந்த‌ நிலையில் தொட‌ர்ந்தும் ந‌ட‌ந்துபோனால், வாக‌ன‌ங்க‌ள் நூறு கிலோமீற்ற‌ருக்கு மேலாய் விரையும் நெடுஞ்சாலையில் குதித்துவிட‌க்கூடுமென‌ அஞ்சி இட‌துப‌க்க‌ வீதியிற்குள் இற‌ங்கினான். 86ம் இல‌க்க‌ ப‌ஸ் வ‌ந்துகொண்டிருந்த‌து, ச‌ட்டென்று ஏறி அத‌னுள் அம‌ர்ந்து கொண்டான்.

அவ‌ன் க‌ன‌டாவிற்கு வ‌ந்து இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாகி விட்ட‌ன‌. இல‌ங்கையில் இருந்து வெளிநாடுக‌ளுக்கு ஒழுங்கான‌ விஸா இல்லாது வ‌ரும் அனைவ‌ரைப் போல‌வே அவ‌னும் வ‌ந்து சேர்ந்திருந்தான். வ‌ருகின்ற‌ வ‌ழியில் க‌ள்ள‌ங்க‌ள் செய்த‌த‌ற்கு ப‌ய‌ப்பிட்ட‌தை விட‌, க‌ன‌டாவிற்கு வ‌ந்த‌பின் ப‌ய‌ண‌த்திற்காய் ப‌ல‌ரிட‌ம் வாங்கிய‌ க‌ட‌ன் காசுதான் இன்னும் அச்சுறுத்திய‌து. அது போதாதென்று இவ‌னின் தாயார், 'வெளிநாட்டுக்குப் போய் மாறிவிடாதை, உன‌க்குப் பின் இர‌ண்டு த‌ங்க‌ச்சிமார் இருக்கின‌ம் என்ப‌தை ம‌ற‌ந்துவிடாதே' என‌ அடிக்க‌டி நினைவுப‌டுத்தியுமிருந்தார். அம்மாவின் இந்த‌ ந‌ச்ச‌ரிப்புத் தாங்காம‌லே, 'அங்கை போன‌வுட‌னையே ஒவ்வொரு காலையும் ஒரு த‌ங்க‌ச்சிக்கென‌ தாரை வார்த்து, உழைத்துக் காசு அனுப்புகிறேன் க‌வ‌லைப்ப‌டாதைய‌னை' என‌ எரிச்ச‌லுட‌ன் இவ‌ன் சொன்னான்.

மொன்றிய‌ல் விமான‌ நிலைய‌த்தில்தான் முத‌லில் வ‌ந்திற‌ங்கினான். 'எங்கே பாஸ்போர்ட்?' என‌க் கேட்க‌, இல‌ங்கையில் உள்நாட்டுப் போர் தீவிர‌மாக‌ ந‌ட‌க்கின்ற‌தென‌ச் சொல்லி க‌ன‌டா இமிக்கிரேச‌னில் இர‌ண்டு கைக‌ளையும் உய‌ர்த்தினான். கிரேஹ‌வுண்ட் ப‌ஸ் எடுத்து அடுத்த நாள் ரொறொண்டோவிற்கு வ‌ந்து சேர்ந்திருந்தான். இவ‌னுக்குத் தெரிந்த‌ உற‌வினொருவ‌ர் ரொறொண்டோவில் இருந்த‌து ந‌ல்ல‌தாய்ப் போய்விட்ட‌து. ஓர் அறையுள்ள‌ அபார்ட்மெண்டில் ஏற்க‌ன‌வே இருந்த‌ மூன்று பேருட‌ன் நான்காவ‌து ஆளாக‌ இணைந்தான். ரொறொண்டோ போயிற‌ங்கிய‌ இர‌ண்டாம் நாளே, த‌ன் தாய் கூறிய‌தை ம‌ற‌ந்துவிடாது, 'அண்ணை என‌க்கொரு வேலை எடுத்துத் தாங்கோ' என‌ உறவுக்காரரிடம் கேட்டான். 'உன்ர‌ வ‌ய‌சுக்கு ஸ்கூலுக்குப் போற‌தை முத‌லில் பார். இல்லாட்டி பிற‌கு எங்க‌ளைப் போல‌ கிச்ச‌னுக்குள்ளேதான் முட‌ங்கிக் கிட‌க்க‌ வேண்டும்'  என‌ச் சிவா அண்ணா இவ‌னுக்குக் கூறினார். இவ‌னுக்கு ப‌தினேழு வ‌ய‌து அப்போதுதான் முடிந்திருந்த‌து.


வெஸ்ட் ஹில் உய‌ர்க‌ல்லூரிக்குப் ப‌டிப்ப‌த‌ற்காய் செப்ரெம்ப‌ரிலிருந்து போக‌த் தொட‌ங்கியிருந்தான். பாட‌சாலை முடிந்த மாலை நேர‌த்தில் ஒரு வேலையும் கிடைத்திருந்த‌து. 'கைக‌ளைத் தூக்கிய‌ கேஸ்' இன்னும் முடியாத‌தால் சிவா அண்ணாவின் ந‌ம்ப‌ரில்தான் வேலை செய்ய‌த் தொட‌ங்கினான். போக‌த் தொட‌ங்கியிருந்த‌ வேலைத்த‌ள‌த்தில் ஆடைக‌ள் தோய்ப்ப‌த‌ற்கான‌ இர‌சாய‌ன‌க்க‌ல‌வையைத் த‌யாரிப்பது நிகழ்ந்து கொண்டிருந்தது. இவ‌ன‌து தொழில், அந்தக் கெமிக்க‌லை நான்கு 2லீற்ற‌ர் க‌ல‌ன்க‌ளில் நிர‌ப்புவ‌தும், அதை எடுத்து ஒழுங்காய் பெட்டிக்குள் அடுக்கி வைப்ப‌தும் என்பதாய் இருந்தது. வேலை பார்க்க‌ எளிதாக‌ இருந்தாலும் ஒவ்வொரு 30செக்க‌ன்க‌ளில் நான்கு க‌ல‌ன்க‌ள் நிர‌ம்ப‌ நிர‌ம்ப‌ எடுத்து, முதுகு வலிக்க வலிக்க அடுக்க‌வேண்டும். கொஞ்ச‌ம் நேர‌ம் பிந்தினாலும் க‌ல‌ன்க‌ள் நிர‌ம்பி வ‌ழிய‌த் தொட‌ங்கிவிடும். இது போதாதென்று கண்க‌ளுக்கு பாதுகாப்புக் க‌ண்ணாடி எப்போதும் அணிந்து கொண்டும் இருக்க‌வேண்டும். த‌ப்பித் த‌வ‌றி கெமிக்க‌ல் சிந்தி க‌ண்க‌ளைப் பாதித்து விட‌க்கூடாதென்ப‌த‌ற்கான‌ முற்பாதுகாப்பு இது.

வேலைக்குப் போன‌ முத‌ல்நாள், வேலை முடியும்போது துடைப்ப‌த்தைத் த‌ந்து இட‌த்தைக் கூட்டிச் சுத்த‌மாக்கச் சொன்னார்கள். இல‌ங்கையில் இருந்த‌போது தும்புக்க‌ட்டை இருந்த திசைக்கே போகாத‌வ‌னுக்கு இது ஒரு மான‌ப் பிர‌ச்சினையாக‌ப் போய்விட்ட‌து. வீட்டில் அம்மாதான் இதையெல்லாம் செய்வார். அவ‌ருக்கும் ஏலாதென்றால் த‌ங்க‌ச்சிமார்தான் வீட்டைக் கூட்டுவ‌து பெருக்குவ‌து. க‌ன‌டாவில் இப்படியாயிற்றே தன் விதியென நொந்துகொண்டான். ஊரில் பெடிய‌ங்க‌ளுக்கு இருக்கும் எழுத‌ப்ப‌டாத‌ சொகுசான‌ வாழ்க்கையைக் க‌ண்டு, பொம்பிளைப்பிள்ளைக‌ள் மனமெரிந்து சாப‌ம் போட்டுத்தான் த‌ன்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ நிலை இப்போது வ‌ந்திருக்கின்ற‌தோ என‌ நினைத்துக் கொண்டான்.

பாட‌சாலைக்குப் போக‌ ஆறு ம‌ணித்தியால‌ம், வேலைக்கு எட்டு ம‌ணித்தியால‌ம், ப‌ஸ்சில் போய்வ‌ர‌ இர‌ண்டு ம‌ணித்தியால‌ம் என ஒருநாளில் ப‌தினாறு ம‌ணித்தியால‌ங்கள் இப்படியாகப் போய்விடும். ச‌னி ஞாயிறுக‌ளிலும் சும்மா இருக்காது வீடு வீடாக‌ப் போய் ஃபிளைய‌ர்ஸ் போட‌வும் தொட‌ங்கியிருந்தான். இவ‌ன் க‌ன‌டா வ‌ந்து ஒரு வ‌ருட‌ம் ஆன‌போதுதான் சிவா அண்ணா ஒரு யோச‌னை கூறினார். 'இப்ப‌டி நாங்க‌ள் நான்கு பேரும் வீணாய் வாட‌கைக்கு ப‌ண‌த்தைச் செல‌விடுவ‌தை விட‌, ஒரு வீட்டை நான்கு பேருமாய்ச் சேர்ந்து வாங்கி மோட்கேஜ் க‌ட்டுவோம்' என்றார். இவ‌ன் உட்ப‌ட‌ எல்லோரும் த‌லா 3000 டொல‌ர்க‌ள் ட‌வுன் பேமேண்ட் போட்டு வீடொன்றை மோர்னிங்சைட் ப‌க்க‌மாய் வாங்கினார்க‌ள். யாரேனும் ஒருவ‌ர் முத‌லில் திருமணம் செய்யும்போது, வீட்டை விற்றுவிட்டு எல்லோரும் ச‌ம‌னாக‌க் காசைப் பிரித்துக் கொள்வோம் என‌வும் தீர்மானித்திருந்த‌ன‌ர்.

ஒருநாள் பாட‌சாலைக்கு ந‌ட‌ந்து போய்க்கொண்டிருந்த‌போது பிலிப்பைன்கார‌ப் பெட்டை ஒருத்தி த‌ன் கையுறையைத் த‌வ‌றவிட்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி போய்க்கொண்டிருப்ப‌தைக் க‌ண்டான். இவ‌ன் ஓடிப்போய் நில‌த்தில் வீழ்ந்திருந்த‌ கையுறையை எடுத்து, முன்னே போய்க்கொண்டிருந்த‌ அவ‌ளின் தோளைத் த‌ட்டிக் கொடுத்தான். 'மிக்க‌ ந‌ன்றி.  இது என் அம்ம‌ம்மா மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் கிறிஸ்ம‌ஸ் ப‌ரிசாக‌த் த‌ந்த‌து. இப்போது அம்ம‌ம்மா உயிரோடு இல்லை. அவ‌ரின் நினைவாக‌ இதை வைத்திருக்கின்றேன். தொலைத்திருந்தால் அம்ம‌ம்மாவைக் கைவிட்ட‌து போல‌ வ‌ருந்தியிருப்பேன். மீண்டும் ந‌ன்றி' என்றாள். 'நீங்க‌ள் அதிஷ்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ள். உங்க‌ளின் நெருங்கிய‌ உற‌வுக்கார‌ர்க‌ள் எல்லோரும் இங்கிருக்கின்றார்க‌ள். என‌க்கென்றுதான் எவ‌ரும் இங்கு இல்லை' என‌ இவ‌ன் சொன்னான். 'Aaah..I am really sorry to hear it' என உண்மையிலே இவன் நிலை கண்டு வருந்தினாள் அவ‌ள்.  பிற‌கு ஒருநாள்  ஹ‌லோவீனுக்கு த‌ன் த‌ம்பியோடு 'Trick or Treat' கேட்க‌, இவ‌ன் இருந்த‌ வீட்டுக் க‌தவைத் த‌ட்டினாள். 'நீ எங்க‌ளுக்கு அருகில்தான் வ‌சிக்கின்றாய் என்ப‌து என‌க்குத் தெரியாதே' என‌ இவன் கதவைத் திறந்ததைப் பார்த்து அவள் சொன்னாள். 'பேய்க‌ள் அருகில் வ‌சித்தால் தான் என்ன‌, தொலைவில் வ‌சித்தால் தான் என்ன‌? பேய்க‌ள் எப்போதும் பேய்க‌ள் தானில்லையா?' என‌ச் சிரித்தபடி இவ‌ன் கூறினான்.

அவ்வ‌ப்போது பாட‌சாலையில் இருவரும் ச‌ந்தித்துக் க‌தைத்துக் கொண்டார்க‌ள். அவ‌ளுக்காக‌வே இவ‌ன் பாட‌சாலை தொடங்குவதற்கு அரை ம‌ணித்தியால‌ம் முன்பாகப் க‌ல்லூரிக்குப் போக‌த் தொட‌ங்கினான். பாடசாலை முடிந்து மாலையில் நின்றும் அவ‌ளோடு ஆறுத‌லாக‌ப் பேச‌லாம் என்றாலும், மாலை நேர‌ வேலை அத‌ற்கு இட‌ங்கொடுப்ப‌தில்லை. ஒருநாள் அவ‌ள் Thanks Giving டின்ன‌ருக்கு அழைத்தாள். இவ‌ன் தனிமையில் இருக்கின்றான் என்றெண்ணியோ என்ன‌வோ தெரியாது, க‌ட்டாய‌ம் வ‌ர‌வேண்டுமென கைகளைப் பிடித்தபடி சொன்னாள். இவ‌ன் த‌ன்னை அவ‌ளின் குடும்ப‌த்துக்கு கலாதியாக அறிமுக‌ம் செய்ய‌வேண்டும் என்ப‌த‌ற்காய் Levi's ஜீன்ஸும், CK ஷேர்ட்டும் அணிந்து கொண்டு போயிருந்தான். க‌ன‌டா வ‌ந்து ரீவியை அவ்வ‌ப்போது பார்த்த‌தில் Thanks Giving டின்னருக்கு விருந்தாளிக‌ளாக‌ப் போகின்றவ‌ர்க‌ள் அநேக‌மாய் வைன் போத்த‌ல்களைக் கொண்டு போவ‌தை அவதானித்திருந்தான். அவ‌ள் வீட்டுக்குப் போக‌முன்ன‌ர் லிக்க‌ர் ஸ்ரோரிற்கு போய் கொஞ்ச‌ம் விலைகூடிய‌ வைனையும் வாங்கினான். தான் வைன் வாங்கும்போது தெரிந்த‌ முக‌ங்க‌ள் எதுவும் கடையில் தெரிகிற‌தா என‌ச் சுற்றுமுற்றும் நோட்ட‌மும் விட்டான். தெரிந்த‌ ச‌னம் தான் வைன் வாங்குவதைக் க‌ண்டு, இந்த‌க் க‌தை இல‌ங்கைக்குப் போனால், இவ‌ன் முழுநேர‌க் குடிகார‌ன் ஆகிவிட்டான் என‌ப் புல‌ம்பி புல‌ம்பி த‌ன்ரை தாய் ம‌னுசி கோயில் கோயிலாக‌ ஏறக்கூடுமென‌கிற‌ ப‌ய‌ம் தான் இத‌ற்குக் கார‌ண‌ம். தாய்க்காரி அங்கையிருக்கின்ற கோயில்க‌ளில் வைக்கின்ற‌ நேத்திக்கும், அபிசேசங்க‌ளுக்கும் இவ‌ன் தானே மாய்ந்து மாய்ந்து உழைத்து, அத‌ற்கும் ப‌ண‌ம் அனுப்ப‌ வேண்டியிருக்கும்.

அவ‌ளின் வீட்டுக்குள் போன‌போது ஒரே அல்லோலகல்லோலமாய் இருந்தது. ஏதோ பிலிப்பையின்சையே அப்ப‌டியே க‌ன‌டாவிற்குத் தூக்கிக் கொண்டுவ‌ந்த‌மாதிரி வீடு முழுக்க‌ச் ச‌ன‌மாய் இருந்த‌து. அவ‌ளின் அம்மா, 'நீ சோறு சாப்பிடும் பழக்கமுடையவனா?' என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். 'ஓம். ஒருநாளைக்கு ஒருமுறை...' என்றான் இவ‌ன். 'நாங்க‌ள் மூன்று நேர‌மும் சாப்பிடுகின்ற‌வ‌ர்க‌ள். அத‌னால்தான் திட‌காத்திர‌மாய் இருக்கின்றோம்' என்றார். இவ‌னுக்கு அவ‌ரின் உட‌லின் அள‌வைப் பார்த்த‌போது சூமோ வீர‌ர்க‌ள்தான் நினைவுக்கு வந்தார்கள். இதைத்தான் திட‌காத்திர‌ம் என்று இவா கூறுகின்ற‌வோ என‌ நினைத்து இவ‌னுக்குச் சிரிப்பு வ‌ந்த‌து. 'எங்க‌ளின் குடும்ப‌த்தின் அள‌வைப் பார்த்து, இதைவிட‌ த‌னியே இருப்ப‌து ந‌ல்ல‌தென‌ யோசிக்கின்றாயோ' என‌க் கேட்டப‌டி இவனை அவள் விருந்திற்குக் கூட்டிச் சென்றாள். 'அப்ப‌டி என்றில்லை, எப்போதும் இல்லாத‌ ஒன்றுக்காய்தானே ம‌ன‌ம் ஆலாய்ப் ப‌ற‌க்கும்' என்றான் இவ‌ன்.

பிற‌கான நாட்களில், இவன் ஆட்க‌ள் குறைவாக‌ இருக்கும் ஷோக்க‌ளுக்கு அவ‌ளோடு ப‌ட‌ம் பார்க்க‌ச் சென்றான். ஆட்க‌ள் நிறைய‌க் கூடும் கிள‌ப்புக்க‌ளுக்கும் நில‌வு ஒளிந்த‌ இர‌வுக‌ளில் அவளை கூட்டிப் போக‌த் தொட‌ங்கினான்.  இலங்கையில் இருக்கும் தன் குடும்ப‌த்திற்கு ஆறு நாள், இவ‌ளுக்கு ஒரு நாளென‌ ச‌னிக்கிழ‌மைக‌ளில் வேலை செய்வ‌தையும் த‌விர்த்தான். செஞ்சோற்றுக் கட‌ன் போல‌,  இர‌ண்டு த‌ங்க‌ச்சிமாருக்குச் செய்ய‌வேண்டிய‌ க‌டமைக‌ள் முன்னே இருக்க‌, அதுவ‌ரை அவ‌ள் காத்திருப்பாளா என்ப‌து குறித்த நிச்சய‌மின்மைக‌ளும் தெரிந்த‌ன. இத‌ற்கிடையில் இவ‌னுடைய‌ ப‌ள்ளிக்கூட‌ ந‌ண்ப‌ர்க‌ள், 'எந்த‌ப் பெட்டைக‌ளோடு என்றாலும் திரிய‌டா, ஆனால் பிலிப்பீனோ பெட்டைக‌ளோடு ம‌ட்டும் ச‌க‌வாச‌ம் வைத்துக்கொள்ளாதே. செல்ல‌ம் கொஞ்சிக் கொஞ்சியே க‌ற‌க்க‌ வேண்டிய‌தை க‌ற‌ந்துவிட்டு வெறுங்கையோடுதான் அனுப்புவார்க‌ள்' என‌வும் எச்சரித்தார்க‌ள். தான் வேலை செய்கிற‌ ப‌க்ர‌றியில் இருக்கிற‌ சூப்ப‌ர்வைச‌ர் திட்டிக்கொண்டும் சுர‌ண்டிக்கொண்டும் தானிருக்கிறார். அதையே ச‌கித்துக் கொண்டுதானே இருக்கிறேன். இவ‌ள் என்னிட‌ம் இருந்து எதைச் சுர‌ண்டிக் கொண்டு போனாலும் செல்ல‌ம் கொஞ்சித்தானே கொண்டு போக‌ப்போகிறாள்; போனால் போக‌ட்டும் என‌ எண்ணிக் கொண்டான். ந‌ண்ப‌ர்க‌ள் கூறிய‌துபோல‌ அவ‌ள் எதையும் இவ‌னிட‌மிருந்து சுர‌ண்ட‌வும் இல்லை, தானாகக் க‌ழ‌ற்றிக் கொள்ள‌வும் இல்லை. இவ‌ன் தான் அவ‌ள் உற‌வை வெட்ட வேண்டியதாகப் போயிற்று.


சிவா அண்ண‌ன் திரும‌ண‌ம் செய்ய‌ப் போகின்றேன் என்றார். அவ‌ர் இந்த வீட்டில் மூன்று இள‌ந்தாரிப் பெடிய‌ங்க‌ளோடு மனைவியைக் கூட்டிக்கொண்டு வந்து இருக்க‌ அவ்வ‌ள‌வாய் விரும்ப‌வில்லை. வ‌சிக்கும் வீட்டை விற்ப‌தென‌த் தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ன் மோர்னிங்சைட்டிலிருந்து 50 கிலோமீற்ற‌ருக்கு அப்பாலிருந்த‌ மிஸிசாக்கா ப‌க்க‌மாய் இட‌ம்பெய‌ர்ந்தான். அவ‌ளோடு உற‌வைத் தொட‌ர‌ முடியாம‌ற் போன‌த‌ற்கு தூர‌ம் ம‌ட்டும் ஒரு கார‌ணமில்லை; நீண்ட‌கால‌ உற‌வாய் அது இருக்க‌முடியாது என்று ய‌தார்த்த‌மே இவ‌னை இன்னும் ப‌ய‌முறுத்திய‌து. த‌ங்கைக‌ள் இருவ‌ருக்கும் திரும‌ண‌ஞ் செய்துவைத்த‌ பின்னே எதையும் த‌ன‌க்காய்ச் செய்ய‌லாம் என்கிற‌ ச‌ம்பிர‌தாய‌ம் ஒருப‌க்க‌ம் துன்புறுத்தியது. க‌லாச்சார‌மும், த‌ன் ச‌மூக‌மும் த‌ன்னை எல்லாத் திசைக‌ளிலும் இறுக்குகின்ற‌து என்ப‌தை எல்லாம் விரிவாக‌ விள‌க்கிச் சொல்லாது, தான் மிஸிசாக்காவிற்கு இட‌ம்பெய‌ர்கிறேன் என்ப‌தை ம‌ட்டும் இவ‌ன் அவ‌ளுக்குச் சொன்னாள். அவ‌ளுக்கும் இனி என்ன‌ நிக‌ழும் என்ப‌து விள‌ங்கியிருக்க‌க் கூடும். 'உட‌லின் மூலைகளுக்குள் ஒடுங்கியிருந்த காமத்தின் அரும்புகளை கிளர்த்தி, என்னுடன் த‌ன் உட‌லைப் ப‌கிர்ந்த‌வ‌ள் அவள்' என்கின்ற‌ நினைவை இவ‌ன் த‌ன‌க்குள் என்றைக்குமாய்ப் ப‌த்திர‌ப்ப‌டுத்திக் கொண்டான்.

மீண்டும் ச‌னிக்கிழ‌மைக‌ளிலும் வேலைக்குப் போக‌த் தொட‌ங்கினான். ப‌குதி நேர‌மாய் ஹ‌ம்ப‌ர் கொலீஜுக்கு ப‌டிக்க‌ப் போனான். ஒரு த‌ங்க‌ச்சிக்கு பிரான்சில் இருந்து பொருத்த‌ம் ஒன்று பொருந்தி வ‌ர‌ பாரிஸூக்கு நிறைய‌ச் சீத‌ன‌க்காசு கொடுத்து தங்கச்சியை அனுப்பி வைத்தான். பிரான்ஸ் போன‌ த‌ங்க‌ச்சி சிலவருடங்களின் பின், த‌ன் ம‌னுச‌னின் உற‌வுக‌ள் யாரோ சுவிசிலாந்திலிருக்கும் ஒருவ‌ருக்குப் பெண் தேடுகின்ற‌ன‌ர் என்று அறிந்து இவ‌னுக்குச் சொன்னாள். ஆனால் அவ‌ர் ஏதோ இய‌க்க‌த்திலிருந்தவ‌ர் என்றாள். 'முன்னாள் இய‌க்க‌மோ இன்னாள் இய‌க்க‌மோ, ஆள் ஒழுங்கான‌வ‌ராய் இருந்தால் போதும்' என்று அவரைப் பற்றி விசாரித்து அறிந்து, தன் ம‌ற்ற‌த் த‌ங்க‌ச்சியை சுவிசிலாந்திற்கு அனுப்பி வைத்தான். 'இய‌க்க‌த்திலிருந்தார்க‌ளோ அல்லது இல்லையோ, ஆனால் சீத‌னம் வாங்குகின்ற‌ க‌லாச்சார‌த்தை ம‌ட்டும் ம‌ற‌க்காம‌ல் இருக்கின்றார்க‌ள்' என்று இவ‌ன் சீதனமாய் அனுப்பக் கேட்ட‌ காசின் அளவைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

த‌ங்க‌ச்சிமார் இர‌ண்டு பேரும் வெளிநாட்டுக்குப் போன‌பிற‌கு இல‌ங்கையில் தாயும் த‌க‌ப்ப‌னும் ம‌ட்டும் த‌னியே இருந்தார்க‌ள். இவ‌ன் ஹ‌ம்ப‌ர் கொலீஜில் இர‌ண்டு வ‌ருட‌ங்களில் ப‌டித்து முடிக்க வேண்டிய பாடங்களை ஐந்து வருடங்களாய் எடுத்து, டிப்ளோமா பெற்றான். ப‌ட்ட‌ம‌ளிப்பு விழாவிற்கென‌ த‌ன் தாயையும் த‌க‌ப்ப‌னையும் இல‌ங்கையிலிருந்து எடுப்பித்தான். வ‌ந்த‌ அவ‌ர்க‌ளை 'இனி அங்கே போய் என்ன‌ செய்ய‌ப்போகின்றீர்க‌ள்' என‌க் சொல்லிவிட்டு அவ‌ர்க‌ளைத் தானே கன‌டாவிற்குள் வைத்து ஸ்பொன்ச‌ரும் செய்தான். வீட்டுக்கு வருகின்ற‌ ச‌ன‌ம் எல்லாம் 'இவ‌னுக்கு எப்போது திரும‌ண‌ம்?' என்ப‌தை ம‌ட்டும் ம‌ற‌க்காம‌ல் கேட்டு விட்டுச் செல்வார்க‌ள். இந்த‌ ந‌ச்ச‌ரிப்புத் தாங்காமலே உற‌வின‌ர்க‌ள் வீட்டுக்கு வ‌ருகின்றார்க‌ள் என்றால் வீட்டை விட்டு வெளியே போகின்ற‌வ‌னாய் இவன் மாறிப்போனான். தாய் ம‌னுசியும்,'த‌ம்பி நான் க‌ண்ணை மூடுகிற‌துக்குள்ளை பேர‌ப்பிள்ளைக‌ளை பார்த்துவிட்டு க‌ண்ணை மூட‌னோனும‌டா' என‌ த‌மிழ்ப்ப‌ட‌ சென்டிமென்ட‌லில் அடிக்க‌டி சொல்ல‌த் தொட‌ங்கிவிட்டார். பிலிப்பைன்காரியைத் திரும‌ண‌ம் செய்வோமோ என்றுகூட‌ இவ‌ன் ஒருக‌ண‌ம் நினைத்தான். ஆனால் அவ‌ளைத் திரும‌ண‌ஞ்செய்தால் த‌மிழ் ஆண்க‌ளுக்குக் கிடைக்கக்கூடிய‌ செளக‌ரிய‌ங்க‌ள் ஒன்றும் கிடைக்காது என்று ஆழ‌மாய் யோசித்து அந்த‌ எண்ண‌த்தைக் கைவிட்டான்.

ஊரிலையே பெண் பார்ப்ப‌தே எல்லா வ‌ழிக‌ளிலும் மிக‌ச் சிற‌ந்த‌தென‌ முடிவெடுத்து, அப்போது அதிக‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்துக்கொண்டிருந்த‌ சிநேகா மாதிரி ஒரு பெண் பார்க்க‌ச் சொன்னான். 'சிநேகா மாதிரி என்றால் என்ன‌மாதிரி?' என‌ அங்கே இவ‌னுக்காய்ப் பெண் பார்த்துக்கொண்டிருந்த‌ சித்த‌ப்பா ரெலிபோனில் கேட்டார். அப்போதுதான், சினிமாவே பார்க்காத‌ சித்த‌ப்பாவை பெண் பார்க்க‌ புரோக்க‌ராய் வைத்திருப்ப‌து எவ்வ‌ள‌வு ஆப‌த்து என்று விள‌ங்கிய‌து. அவ‌ர் அப்ப‌டிக் கேட்ட‌தால் வ‌ந்த‌ எரிச்ச‌லில், 'பார்த்திப‌ன் க‌ன‌வில் வ‌ந்த‌ சிநேகா மாதிரி' என்றான். 'ச‌ரி த‌ம்பி, நான் உந்த‌ச் சினிமாப் ப‌ட‌ம் ஒன்றும் பார்ப்ப‌தில்லைத்தானே, சித்தி தான் ஒன்றுவிடாம‌ல் எல்லாம் பார்க்கிற‌வா. அவாவிட‌ம் கேட்டு சிநேகாவைத் தெரிஞ்சு கொள்கிறேன்' என்றார் சித்த‌ப்பா. இவ‌ன் இதைச் சொன்ன‌த‌ன் பிற‌குதான் அந்த‌ப் ப‌ட‌த்தில் வ‌ருகிற‌ சிநேகாவிற்கு இடுப்பைத் தொடும் வ‌ரை இருந்த‌ த‌லைம‌யிர் உண்மையான‌தா அல்ல‌து போலியான‌தா என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌து.

இர‌ண்டு வ‌ருட‌ டிப்ளோமா கோர்ஸை ஹ‌ம்ப‌ர் கொலிஜீல் செய்த‌தை, நான்கு வ‌ருட‌ம் யூனிவ‌சிற்றியில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு டிகிரி வாங்கிய‌ அள‌வுக்கு க‌தையை மாற்றினான். மெஷின் ஒப்பிரேட்ட‌ராய் வேலை செய்வ‌தை 'மெஷின் எஞ்சினிய‌ர்' என்று புதுப்பெய‌ரும் கொடுத்தான். த‌குதிக‌ளைப் பொலிஷ் ஆக்க‌ ஆக்க‌ த‌ரப்ப‌டும் சீத‌ன‌த்தின் அள‌வையும் கூட்ட‌லாம் என்ப‌தே இத‌ற்குக் கார‌ண‌ம். த‌ங்க‌ச்சிமாருக்குச் சீத‌ன‌ம் கொடுத்த‌போது ம‌ன‌மெரிஞ்சு எரிஞ்சு கொடுத்த‌ த‌ன் க‌ட‌ந்த‌ கால‌த்தை ஒருமுறை நினைத்துப் பார்த்தான். 'கொடுத்த‌ காசை எப்ப‌டியேனும் திருப்பி எடுக்க‌த்தானே வேண்டும்' என‌ பிற‌கு த‌ன‌க்குத்தானே ச‌மாதான‌மும் செய்து கொண்டான்.


சுக‌ந்தியின் பொருத்த‌த்தோடு இவ‌னின் ஜாத‌க‌ம் பொருந்தியிருந்த‌து. சுக‌ந்தியின் புகைப்ப‌ட‌த்தைப் பார்த்த‌போது சிநேகாவின் எந்த‌ச் சாய‌லும் இல்லாம‌லிருந்த‌து. சில‌வேளைக‌ளில் நேரில் பார்க்கும்போது சிநேகா போல‌ இருக்க‌க்கூடுமென‌த் த‌ன்னைத் தேற்றிக் கொண்டான். சுக‌ந்தியை இல‌ங்கையில் போய் க‌லியாண‌ங்க‌ட்ட‌ வேலையில் இர‌ண்டு வார‌ங்க‌ள்தான் விடுமுறை கொடுத்திருந்தார்க‌ள். புது மெஷின் ஒன்றை ப‌க்ர‌றியில் இற‌க்கியிருந்ததால், அத‌ற்கு மேல் லீவு த‌ர‌மாட்டோம் என‌ உறுதியாய்க் கூறியிருந்தார்க‌ள். இல‌ங்கைக்குப் போகமுன்ன‌ர், சுக‌ந்தியை பிற‌கு கனடாவிற்கு ஸ்பொன்ச‌ர் செய்யும்போது, ஒரு பிர‌ச்சினையும் வ‌ர‌க்கூடாதென்ப‌த‌ற்காய் லோய‌ரைப் பார்க்க‌ச் சென்றான். லோய‌ர் 'திரும‌ண‌த்திற்கு இலங்கை போக‌முன்ன‌ரே க‌டித‌ங்க‌ளை மாறி மாறி உங்களுக்குள் அனுப்பிக் கொள்ளுங்கள்' என்றார். தொலைபேசியில் சுகந்தியோடு க‌தைப்ப‌தை பேப்ப‌ர் ஸ்டேட்ன்மென்டில் சான்றாதார‌ங்க‌ளாய் வைத்திருங்க‌ள் என்றும் சொன்னார். திரும‌ண‌ம் ந‌ட‌க்கும்போது இன்ன‌ இன‌ன‌ கோண‌த்தில் ப‌ட‌ங்க‌ள் எடுக்க எடுக்க‌வேண்டுமென‌க் கூறிவிட்டு, க‌ட்டாய‌மாய் ஒரு புகைப்ப‌ட‌ம் தாலியை போக‌ஸ் ப‌ண்ணி நல்ல தெளிவாய் எடுக்க‌வேண்டும், ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள் என‌வும் ப‌ய‌முறுத்தினார். இதைவிட‌ ஹ‌னிமூன் போகும்போது நிற்கும் ஹொட்ட‌லுக்குக் கட்டும் பில்,  இரண்டு பேரும் இயற்கைக் காட்சிகளின் பின்னணியில், சற்று நெருக்க‌மாய் நின்று கொஞ்ச‌ப் ப‌ட‌ங்க‌ள்... என‌ ஒரு நீண்ட‌ ப‌ட்டிய‌லைய‌க் கொடுத்தார். இவ‌னுக்கு இதையெல்லாம் பார்த்து, இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போனால் 'ஹ‌னிமூனில் க‌ட்டிலில் என்ன‌ ந‌ட‌ந்த‌து?' என்பதற்கும் புகைப்ப‌ட‌ச் சான்று இமிக்கிரேசன்காரன் கேட்பான் போல‌க் கிட‌க்கிற‌து என நினைத்துக் கொண்டான்.

இவ‌ன் இல‌ங்கைக்குப் போய் தன் விருப்புக்கேற்றமாதிரி இல்லாது, க‌ன‌டா இமிக்கிரேச‌னின் 'யாப்புக்கு' ஏற்ற‌மாதிரி திரும‌ண‌த்தைச் செய்துகொண்டான். நுவ‌ரெலியாவிற்கு இவனும் சுகந்தியும் ஹ‌னிமூனுக்குப் போனார்க‌ள். 'இந்த‌ ஹொட்ட‌லுக்குத்தான் சிறிமா ப‌ண்டார‌நாய‌க்காவின் குடும்ப‌ம் விடுமுறைக்கு வ‌ருகின்ற‌வ‌ர்க‌ள்' என‌க் ஹொட்ட‌ல் மானேஜ‌ர் சொன்னார். 'ப‌ர‌வாயில்லை, மாமா ந‌ல்ல‌ வசதியான இட‌மாய்ப் பார்த்துத்தான் புக் செய்திருக்கின்றார்' என‌ இவன் சிரித்த‌ப‌டி சுக‌ந்திக்குச் சொன்னான். இர‌வு சுக‌ந்தியோடு முதன்முதலாக முய‌ங்கிய‌போது, இவ‌னுக்கு வேலை செய்யுமிட‌த்தின் மெஷின் ச‌த்த‌ம்தான் மூளைக்குள் ஓடிய‌து. க‌ன‌டாவில் வேலை, காசு என ஓடியோடி த‌ன் மென்னுண‌ர்வுக‌ளைத் தொலைத்துவிட்டேன் என‌ச் ச‌லித்துக்கொண்டான். இனி க‌ன‌டா போய் நிறைய‌த் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்த்துத் த‌ன் காத‌ல் உண‌ர்வை மீட்டெடுக்க‌வேண்டுமென‌ அந்தவேளையிலும் த‌ன‌க்குள் ச‌ப‌த‌மும் எடுத்தான்.

சுக‌ந்தி க‌ன‌டா வ‌ந்த‌போது, க‌ன‌டாவிலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கென‌ ஒரு ரிஷ‌ப்சன் வைத்தான். சுக‌ந்திதான் எதையோ ப‌றிகொடுத்த‌வ‌ள் போல‌ சோகமாய் இருந்தாள். இப்போது எல்லாம் புதிதாக‌ இருக்கும் போக‌ப் போக‌ எல்லாம் ச‌ரியாகிவிடுமென‌ இவ‌ன் நினைத்தான். நிறைய‌த் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து 'காத‌ல்' உண‌ர்வை வ‌ள‌ர்த்த‌போதும் சுக‌ந்திக்கு பெரிதாய் அந்த‌ விட‌ய‌த்தில் ஆர்வ‌மிருக்க‌வில்லை. க‌லியாண‌ஞ்செய்வ‌தே முக்கியமாய் அத‌ற்கென‌ நினைத்துக் கொண்ட‌வ‌னுக்கு இப்ப‌டி சுக‌ந்தி இருப்ப‌தைக் க‌ண்டு எரிச்ச‌ல் வ‌ந்த‌து. ஒருநாள் நேரே கேட்டும் விட்டான். 'நீங்க‌ள் இப்ப‌டி ஹ‌வேயில் போகின்ற‌ வேக‌த்தில், எல்லாம் வேண்டும் என்றால் என்னாலை எப்ப‌டி ச‌மாளிக்க‌ முடியும்' என‌ அவள் ஒரு சாட்டுச் சொன்னாள்.  ஓ...அதுதான் சிக்க‌லா என்று ரெசிடென்சிய‌ல் ஏரியாவில் போகின்ற‌மாதிரி 40 கிலோமீற்ற‌ர் ஆமை வேக‌த்தில் கட்டிலில் திருவிளையாடலைக் காட்டினான். அப்போதும் சுக‌ந்தி முன்னர் மாதிரியே அதே துல‌ங்க‌லைக் காட்டினாள்.

அதுவும் சில‌நாட்க‌ளில் இவ‌னின் ஆக்கினை தாங்காம‌ல், 'உங்க‌ளுக்கு என்ரை உட‌ம்புதானே வேண்டும்' என்று சொல்லிவிட்டு ஆடைக‌ளை எல்லாம் கடகடவென்று க‌ளைந்துவிட்டு நிர்வாண‌மாய்க் கிடப்பாள். என்ன செய்தாலும், த‌ன் கண்ணை மூடாது, விழிக‌ளால் வெறித்த‌ப‌டி இவ‌னின் அசைவுகளை அவதானித்தபடியே இருப்பாள். இவ‌னுக்கு கோயில்க‌ளில் நாக்கை நீட்டிய‌ப‌டி கையில் சூலாயுத‌ங்க‌ளோடு நிற்கும் அம்ம‌ன் சிலைதான் அந்த‌ நேர‌த்தில் சுகந்தியைப் பார்க்கும்போது நினைவுக்கு வ‌ரும்.

சுக‌ந்தி க‌ன‌டாவிற்கு வ‌ந்து ஆறேழு மாத‌ங்க‌ள் இருக்கும். ஒருநாள்,  இவ‌ன் வேலை செய்துகொண்டிருந்த‌போது இவனது செல்லுக்குச் சுக‌ந்தியிட‌மிருந்து ஓர் அழைப்பு வ‌ந்த‌து. 'உங்க‌ளோடு கொஞ்ச‌ம் க‌தைக்க‌வேண்டும்' என்று சொல்லிவிட்டு, 'என‌க்கு டிவோர்ஸ் வேண்டும். என‌க்குக் க‌ன‌டா பிடிக்கவில்லை. நான் திரும்பிப் போக‌ப் போகின்றேன்' என்றாள். இவ‌னுக்கு மேல்த‌ள‌த்தில் ஓடிக்கொண்டிருந்த‌ மெஷின் த‌ன் த‌லையில் விழுந்த‌மாதிரி இருந்த‌து. அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு வீட்டை அர‌க்க‌ப் ப‌ர‌க்க‌ ஓடிவ‌ந்தான். சுக‌ந்தி, தான் ஒருவ‌ரை இல‌ங்கையில் காத‌லித்த‌தாக‌வும், வீட்டில் ஒருவ‌ருக்கும் அந்த‌ப் பெடிய‌னைப் பிடிக்காத‌தால்தான் இவ‌னைத் திரும‌ண‌ம் செய்ய‌ச் ச‌ம்ம‌தித்தாக‌வும் கூறினாள். 'அப்ப‌டியெனில் ஏன் என்னை விருப்பமில்லாமல் கலியாணஞ் செய்த‌னீர்?' என‌ இவ‌ன் திரும்பிக் கேட்டான். 'உங்க‌ளைத் திரும‌ண‌ம் செய்யும்போது எல்லாவ‌ற்றையும் ம‌ற‌ந்துவிட‌லாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் முடிய‌வில்லை. எப்போதும் அவ‌ன் நினைப்பே இருக்கிற‌து. அவ‌ன் அள‌வுக்கு என்னை ஒருவராலும் நேசிக்க‌ முடியாது' என்றாள் உறுதியாய். 'உங்க‌ளின் நாசமாய்ப்போன காதலுக்கு, நானா ப‌லிக்கடா ஆனேன்' என‌ இவ‌ன் கோப‌த்தில் சுகந்தியைப் பார்த்துக் க‌த்தினான். அந்த நேர‌த்திலும் இவ‌னுக்குள் ஓர் எண்ண‌ம் ஓடிய‌து. 'அப்ப‌டியெனில் நீர் என்னைக் க‌லியாண‌ங்க‌ட்டும்போது வேர்ஜின் இல்லையா?' எனக் கேட்டான். 'இப்போது தானே எங்க‌ளுக்குள் எல்லாமே முடிந்துவிட்ட‌து. அதைய‌றிந்து நீங்கள் என்ன‌ செய்ய‌ப் போகின்றீர்க‌ள்?' என்றாள் சுகந்தி.

இதெல்லாம் ந‌ட‌ந்து ஒரு வார‌த்தில் சுக‌ந்தி க‌ன‌டாவிலிருந்த‌ த‌ன் பெரிய‌ம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். சுக‌ந்தி போகும்போது த‌ன் வாழ்வையும் எடுத்துக்கொண்டு போய்விட்டாள் என்ற‌வாறு இவ‌ன் க‌வ‌லைப்ப‌ட்டான். உற‌வுக‌ள் ம‌ட்டுமில்லை ந‌ண்ப‌ர்க‌ளும் கூட‌, 'ஒரு பொம்பிளைப் பிள்ளை இல‌ங்கையில் இருந்து வ‌ந்து ஆறேழு மாத‌ங்க‌ளில் விட்டு விட்டுப் போகின்றாள் என்றால் இவ‌னில்தான் ஏதோ பிழையிருக்கிற‌து' என‌ இவ‌ன் காதுப‌ட‌வே க‌தைக்க‌த் தொட‌ங்கினார்க‌ள். இவ‌னுக்கு இதையெல்லாம் கேட்க‌ அவ‌மான‌ம் அவ‌மான‌மாய் இருந்த‌து. ம‌ன‌ம் ஆறுத‌ல‌டைவ‌த‌ற்காக‌வேனும் சுக‌ந்தியைப் பார்த்து நான்கு வார்த்தை தூச‌ண‌த்தோடு திட்ட‌லாம் என்றாலும் அத‌ற்கும் ம‌ன‌ம் விட‌வில்லை. சுக‌ந்தி இவ‌னுக்கு என்ன‌ த‌வ‌றைச் செய்தாள்? அவ‌ள் ஒருவ‌னை ம‌ன‌தார‌ விரும்பியிருக்கிறாள் என்ப‌தை விட‌ வேறெதுவும் செய்ய‌வில்லையே. 'நானுந்தானே ஒருகால‌த்தில் பிலிப்பைன்காரியைக் காத‌லித்திருக்கின்றேன். என்னால் பிலிப்பைன்காரியைப் பிரிந்து வ‌ர‌முடிந்த‌ மாதிரி சுக‌ந்தியால் அவ‌ள் காத‌லித்த‌வ‌னை விட்டு வ‌ர‌முடிய‌வில்லை அவ்வ‌ள‌வு தான் வித்தியாச‌ம்' என‌ நினைத்துக்கொண்டான்.

ஆனால் இவ‌னால் சுக‌ந்தியை அவ்வ‌ள‌வு எளிதாய் ம‌ற‌க்க‌ முடிய‌வில்லை. ம‌னைவி எங்கே என‌க் கேட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் நினைவுப‌டுத்திய‌து ஒருபுற‌மிருந்தாலும் இவ‌ன‌ள‌வில் கூட‌ சுக‌ந்தியின் நினைவுக‌ளைத் தூக்கியெறிய‌ முடியாதிருந்த‌து. 'எல்லோருடைய‌ வாழ்விலும் ஒரு பெண் ம‌ற‌க்க‌முடியாத‌வ‌ள் ஆகிவிடுகின்றாள்' என‌ எங்கையோ ப‌டித்த‌து இவனுக்குள் நினைவில் இருந்த‌து. 'அவ்வாறு த‌ன் வாழ்வில் ம‌ற‌க்க‌ முடியாத‌ பெண் சுக‌ந்தி' என‌ எண்ணிக்கொண்டான். அவ‌ளுடைய‌ செல்ல‌ம் கொஞ்சும் ம‌ழ‌லைக்குர‌ல் மெஷின் ச‌த்த‌த்தை விட‌வும் இவ‌னுள் அதிக‌ம் ஒலிக்க‌த் தொட‌ங்கிய‌து. க‌ன‌டா வ‌ந்த‌ தொட‌க்க‌ நாளில் காலில் கொலுசு போட்டுக்கொண்டு சுக‌ந்தி திரிந்த‌ பொழுதுக‌ள், இருட்டிலும் ஒரு மின்மினியாய் ஒளிர்ந்து கொண்டிருந்த‌ அவ‌ள‌து மூக்குத்தி,  இடுப்பில் ஒரு பொட்டைப்போல‌ இருந்த‌ ம‌ச்ச‌மென‌ எல்லாமே இவ‌னை விடாது துர‌த்த‌த் தொட‌ங்கின‌. அவ்வ‌ப்போது மூளை விறைக்க‌த் தொட‌ங்கிய‌வ‌னாக‌ மாறிப் போக‌த் தொட‌ங்கினான். இர‌வில் நித்திரை ஒழுங்காய் வ‌ராது ப‌க‌லில் வேலை செய்ய‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட‌த் தொட‌ங்கினான். இவ‌னின் த‌டுமாற்ற‌ங்க‌ளைக் க‌ண்டு வேலைத்த‌ள‌த்தில் நின்ற‌ ஒருத்த‌ன் தான் கொஞ்ச‌ம் ம‌ரிஜூவ‌னா பாவித்துப்பார் என‌ அறிமுக‌ப்ப‌டுத்தினான்.

முத‌லில் த‌ன் நினைவு த‌றிகெட்டும் அலைவ‌தை ஒழுங்காக்க‌ வேண்டும் என்று போதையைப் பாவித்த‌வ‌னுக்கு பிறகு அது இல்லாம‌ல் இருக்க‌முடியாது போல‌த் தோன்றியது. வேலைக்குப் போவ‌து ஒழுங்கில்லாது போக‌, கையில் காசும் இல்லாது கஷ்டப்படத் தொடங்கினான். நாலைந்து மாத‌ங்க‌ளில் சுக‌ந்தி விவாக‌ர‌த்துப் பெற்று திரும்ப‌வும் இல‌ங்கைக்கும் போய்விட்டாள். சுக‌ந்தி இனி அருகில் என்றும் இருக்க‌மாட்டாள் என்ற‌ நினைப்பு இவ‌னை இன்னும் அதிக‌ம் அலைக்க‌ழிக்க‌த் தொட‌ங்கிய‌து.


நான் அப்போதுதான் வின்ச‌ரில் நான்காண்டுக‌ள் ப‌டிப்ப‌தாய்ப் பாவ‌னை செய்துவிட்டு ரொறொண்டோவிற்குத் திரும்பி வ‌ந்திருந்தேன். வேலை எதுவும் கிடைக்காம‌ல் எல்லாத் திசைகளிலும் மனம் நொந்து அலைந்துகொண்டிருந்தேன். ஒரு பெப்ர‌வ‌ரி மாத‌த்திலிருந்து நான் காத‌லித்துக் கொண்டிருந்த‌வ‌ளும் என்னைப் பார்ப்ப‌தைத் த‌விர்த்துக் கொண்டிருந்தாள். என்ன‌ கார‌ண‌மென‌க் கேட்டு அவ‌ளுக்கு ஆக்கினை மேல் ஆக்கினை கொடுத்த‌போதுதான், ஒருநாள் அவ‌ளின் தோழி தொலைபேசியில் அழைத்து, '......., இன்னொருவ‌ரைக் காத‌லிக்க‌த் தொட‌ங்கியிருக்கிறாள். அவ‌ளை இனியும் தொட‌ர்புகொண்டு தயவு செய்து தொல்லை கொடுக்க‌வேண்டாம்' என்றாள். ஒழுங்கான‌ வேலை இல்லை, குளிர்க் கால‌நிலை என‌ எல்லாமே ம‌ன‌திற்கு இனம்புரியாத அழுத்த‌ம் கொடுத்துக்கொண்டிருக்க‌, இப்போது எல்லாமுமாய் இருந்த‌ அவ‌ளும் இல்லையென்ற‌போது எதையும் சிந்திக்க‌ முடியாத‌ள‌வுக்கு எனக்கு மூளை இறுக‌த் தொட‌ங்கிய‌து.

'.... யாரையோ காதலிக்கத் தொடங்கிவிட்டாள்' என்ற செய்தியை அறிந்த மூன்றாம் நாள், வேலை தேட‌ப் போகின்றேன் என‌ வீட்டில் கூறிவிட்டு ட‌வுன்ர‌வுணுக்குப் போனேன். காலையிலிருந்து வெளியே குளிருக்குள் அலைந்து, ச‌ட்டென்று ஒருக‌ண‌த்தில் இனி வீட்டுக்கு என்றைக்குமாய்த் திரும்புவ‌தில்லையென‌ முடிவு செய்தேன். யூனிய‌ன் ஸ்ரேசினில் 'கோ' ப‌ஸ்ஸை எடுத்து த‌மிழாக்க‌ள் அவ்வளவு திரியாத‌ ஒரு ந‌க‌ருக்குப் போனேன். அங்கே போய்ச் சேரும்போது இர‌வு ஒன்ப‌து ம‌ணியாகியிருக்கும். ஒவ்வொரு க‌டைக‌ளுக்கும் இடையில் இருந்த‌ இடைவெளியில் வீடுக‌ளைத் தொலைத்த ஒரு சில‌ர் ப‌டுத்திருப்ப‌து தெரிந்த‌து. ஒன்றிர‌ண்டு பேர் குளிரைப் புறக்கணித்துப் பாடிக் கொண்டுமிருந்தார்க‌ள். என்னால் குளிர் தாங்க‌ முடியாதிருந்த‌து. கதவுகள் சாத்தியிருந்த மூட‌ப்ப‌ட்ட‌ மொன்றிய‌ல் பாங்கிற்குள் ப‌டுப்ப‌த‌ற்காக‌ப் போனேன்.

முக‌ம் முழுதும் தாடி வள‌ர்ந்து நீண்ட‌ த‌லைமுடியுட‌ன் ஒருவ‌ர் காசு எடுக்கும் மெஷினடியில் ப‌டுத்திருந்தார்.  நான் வ‌ந்த‌ ச‌த்த‌ம் கேட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். ச‌ட்டென்று எனக்கு க‌ட‌ந்த‌கால‌ம் மின்ன‌லாய் வெட்டிப் போன‌து.  இது ச‌ட‌கோப‌ன் அண்ணா. நான் வெஸ்ட் ஹில்லில் ப‌த்தாம் வ‌குப்பு ப‌டிக்கும்போது இவ‌ர் ப‌தின்மூன்றாம் த‌ர‌ம் ப‌டித்துக் கொண்டிருந்த‌வ‌ர். அவ‌ரின் க‌தை கூட‌ என‌க்குத் தெரியும். பின்னாளில் சுகந்தியோ யாரையோ க‌லியாண‌ங்க‌ட்டி அந்த‌ப் பெண் அவ‌ரை விட்டு இல‌ங்கைக்குப் போன‌துவ‌ரை அறிந்து வைத்திருந்தேன். ஆனால் ச‌ட‌கோப‌ன் அண்ணாவை இப்ப‌டியான‌ நிலையில் ச‌ந்திப்பேன் என‌ நினைத்தும் பார்க்க‌வில்லை. அவ‌ரின் க‌தையை அறிந்த‌போது கூட, 'ஒரு பெட்டைக்காய் இப்ப‌டி யாரும் த‌ம் வாழ்வைத் தொலைப்பார்களா?' என‌ என் நண்ப‌ன் ந‌க்க‌ல‌டித்த‌தும் நினைவுக்கு வ‌ந்த‌து. ஆனால் ச‌ட‌கோப‌ன் அண்ணாவிற்கு என்னை நினைவில் இல்லை. அவ‌ர் யாரோ பாங் மெஷினில் காசு எடுக்க‌ வ‌ந்திருக்கின்றார் என‌ நினைத்திருக்கின்றார். 'Can you buy a coffee for me?' என‌க் கேட்டார். அவரின் கோலமே அவர் வீட்டை விட்டு எப்பவோ ஓடிவந்து விட்டார் என்பதைச் சொல்லியது. என‌க்கு என்ன‌ செய்வ‌தென்று தெரிய‌வில்லை. இனி வீட்டை என்றுமே திரும்பிப் போவ‌தில்லை என‌ முடிவு செய்த‌வ‌னுக்கு அடுத்து என்ன‌ செய்வ‌தென்று ஒரே குழ‌ப்பாய் இருந்த‌து. முத‌லில் ச‌ட‌கோப‌ன் அண்ணாவிற்கு கோப்பி வாங்கிக்கொடுப்போம் என‌ செக‌ண்ட் க‌ப்பில் கோப்பி ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவரைத் திரும்பிப் பார்க்காது ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினேன்.

வெளியே இப்போது ப‌னி கொட்ட‌த் தொட‌ங்கியிருந்த‌து. இலைக‌ளில்லாத‌ ம‌ர‌ங்க‌ள் அங்கும் இங்குமாய்த் தெரிந்த‌ன. நான் அணிந்திருந்த‌ க‌றுப்புக் குளிர‌ங்கியின் மேல் ப‌னி விழுந்து க‌ரைந்து கொண்டிருந்த‌து. அட‌க்க‌ப்ப‌ட்ட‌ எல்லா உண‌ர்வுக‌ளும் ம‌டைதிற‌ந்தாற் போல‌ எனக்கு க‌ண்ணீர் வ‌ர‌த்தொட‌ங்கியிருந்த‌து. எதற்காய் அழுதுகொண்டிருக்கின்றேன் எனவும் தெரியவில்லை. நான் கண்ணீரைக் க‌வ‌னிக்காம‌ல் ந‌ட‌ந்து போய்க் கொண்டிருந்தேன். உத‌டுக‌ளில் விழுந்த‌ ப‌னி கண்ணீரோடு சேர்ந்து உவ‌ர்ப்ப‌து போல‌த் தோன்றிய‌து.

மனம் விட்டு அழ‌ அழ‌ எல்லாம் வெளிப்ப‌து போல‌த் தோன்றிய‌து. ப‌தினாறு வ‌ய‌தில் ஒருவ‌ரைக் காத‌லித்து அது தொலைந்துபோன‌போது சாவ‌த‌ற்கு மாடியில் இருந்து குதிக்க‌ முய‌ற்சித்த‌து நினைவில் வ‌ந்த‌து. அடுத்த‌ முறை க‌ச்சித‌மாய் த‌ற்கொலையைச் செய்ய‌வேண்டும் என‌ நினைத்துக்கொண்டிருந்த‌ போது, என் ந‌ண்ப‌ன் ஒருவன் என்ன காரணத்திற்காகவோ, நான் முயற்சித்த நான்காம் நாள் த‌ற்கொலை செய்திருந்தான்.  இப்போது இன்னொரு காத‌லில் தோற்று வீடே வேண்டாம் என‌ தீர்மானித்து வீதிக்கு வ‌ந்த‌போது ச‌ட‌கோப‌ன் அண்ணாவை இந்த‌ நிலையில் சந்திக்க வேண்டியிருந்தது. என் ஒவ்வொரு காத‌ல் தோல்வியின் பொருட்டும், நான் ப‌லியாவ‌த‌ற்கு முன் யாரோ என‌க்காய்த் த‌ம் வாழ்வைப் ப‌லி கொடுக்கின்றார்க‌ளோ என்ற‌ யோச‌னை எனக்குள் ஓடிய‌து.

ச‌ட‌கோப‌ன் அண்ணாவையும், என் ந‌ண்ப‌னையும் நினைத்து நெஞ்சு ஒருக‌ண‌ம் ந‌டுங்கி விதிர்விதிர்த்த‌து. நான் அப்போது பால‌மொன்றைக் க‌ட‌க்க‌ வேண்டியிருந்த‌து. கீழே ந‌தி உறைந்தும் உறையாத‌மாதிரி ஓடிக்கொண்டிருந்த‌து. அதற்குள் குதித்துவிடுவேனோ என்று என‌க்கே என்னில் நம்பிக்கை இல்லாது இருந்த‌து. ப‌ஸ்சொன்று எதிர்த்திசையில் வ‌ந்து கொண்டிருந்த‌து. உட‌னேயே ஓடிப்போய் அதற்குள் ஏறிக்கொண்டேன். வீட்டை திரும்பிப் போய்ச் சேர‌ ந‌ள்ளிர‌வு ப‌ன்னிர‌ண்ட‌ரை ம‌ணியாகிவிட்ட‌து. அம்மா நித்திரை கொள்ளாது என‌க்காய்க் காத்துக்கொண்டிருந்தார். 'இவ்வ‌ள‌வு நேர‌மும் எங்கே போயிருந்தாய்?' எனக் கேட்டார். 'ச‌ட‌கோப‌ன் அண்ணை வீட்டை போயிருந்தேன்' என்றேன். 'ச‌ட‌கோப‌னா, அவ‌ன் யார்?' என்று அம்மா என்னிடம் திரும்பிக் கேட்க‌வில்லை.


(2011)

அதிகாரத்தில் தெறிக்கும் வன்மம்

Thursday, December 15, 2016

1.
'Road to Nandikadal' என்பது புலிகளை ஆயுதப்போராட்டத்தின் மூலம் வெற்றிகொண்டதை சிங்கள இராணுவத் தரப்பிலிருக்கும் ஒருவர்  கொண்டாடிக் குதூகலிக்கின்ற ஒரு நூலாகும். முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல் குணரட்னே நான்காவது ஈழப்போரில் இறுதியில் புலிகளின் தலைவர் கொல்லப்படுகின்ற தாக்குதலை நிகழ்த்தியதுவரை பலவற்றை எழுதிச் செல்கின்றார். புலிகளின் தலைவரைப் புகழ்ந்திருக்கின்றாரென 2ம் அத்தியாயம் மட்டும் வாசித்துவிட்டு 'புகழ்' பரப்பியவர்கள், இந்நூலை முழுமையாகக் கடைசி அத்தியாயம் வரை வாசித்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் கடும் சினம் வந்திருக்கும்

ஒரு நாய் தன் காலின் மீது கிடக்கிறது எனவும், நாயின் அடையாள அட்டைச் சின்னம் எதுவெனவும் புலிகளின் தலைவரை -அவர் ஒரு மனிதர் என்றளவில் கூட- சிறிதும் மரியாதை கொடுக்காமல் எழுதப்பட்டிருப்பதை வாசித்திருந்தால், புகழைப் பதிந்தவர்கள் தம் பதிவுகளை மறைத்துவிட்டு ஓடியிருப்பார்கள்.
புலிகளைத் தீவிரவாதிகளென எல்லா இடத்திலும் அடையாளமிடும் கமலுக்கு, அவரை மீறி பல இடங்களில் புலிகளென எழுத வந்துவிடுகின்றது. பாவம் அடுத்த பதிப்பிலாவது  புலிகள் என  எழுதப்பட்டு எஞ்சியுள்ள இடங்களை தீவிரவாதிகளென மாற்ற அவர் ஆவன செய்வாரென நம்புவோமாக.

தீவிரவாதிகள் மீது வெஞ்சினம் கொண்டபொழுதிலும் அவர்கள் அலையலையாய் வந்து முகமாலை, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் மோதியதை எதுகொண்டும் மறைக்க முடியவில்லை. மூன்று வருடங்களுக்குள் நிகழ்ந்த யுத்ததிற்குள் கிட்டத்தட்ட 5,800 படையினர் கொல்லப்பட்டதையும், 29,000 பேர் போரினால் அங்கவீனப்பட்டதையும் ஒப்புக்கொள்கிறார்.

தீவிரவாதிகளை சில இடங்களில்  அவ்வப்போது பாராட்டியும் விடுகின்றார். அவர்களின் மிகத்துல்லியமான ஆட்டிலறித்தாக்குதல்களை மட்டுமின்றி தங்களால் அவ்வளவு எளிதில் அழிக்கமுடியாது மிக நுட்பமான கோணங்களில் அவற்றை நிறுத்திவைத்திருந்த முறையையும் உலகில் எந்த இடத்திலும் இவ்வாறான கோணங்களில் வைத்து பார்த்ததில்லையெனவும் வியக்கின்றார்.

இன்னொரு இடத்தில், தீவிரவாதிகளின் வேவு பார்க்கும் திறத்தை. முகமாலை போன்ற முக்கிய நிலைகளைத் தாண்டி வந்து அவர்கள் உளவு பார்த்த நுட்பத்தை கவனப்படுத்துகின்றார். முக்கியமாய் 8-10 கிலோமீற்றர்கள், மிதக்கும் படகை கைகளால் (கவனிக்க துடுப்பு எதுவும் பாவிக்காது) அளைந்து வந்து உள்நுழைந்தது மட்டுமின்றி தாங்கள் இரவு சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைக்கும் சாப்பாட்டையும் உண்டு விட்டுசென்ற வேவுப்புலிகளின் திறமையைப் பாராட்டச் செய்கின்றார். அதுவும் அவ்வப்போது சுட்டு சுட்டு வீழ்த்த தொடர்ச்சியாக இப்படி கைகளால் வலித்துக்கொண்டு வந்த உளவுப்புலிகள் பற்றி தமது இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவிடம் குறிப்பிட்டபோதுகூட மிகச்சிறந்த நீச்சல்வீரான அவரால் கூட, இப்படியும் முடியுமா என நம்பமுடியாது இருந்தது என்கின்றார்.

இறுதியாய் புதுமாத்தளனில் 800m X 800m குறுகிய நிலப்பரப்பில் நடந்த கடைசி யுத்தத்தில் கால்களே இல்லாத சில புலிகள் அவ்வளவு மூர்க்கமான போராடிய திறமையைத் தன்னால் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை எனவும் எழுதிச்செல்கின்றார்.

2.
புலிகளின் தலைவரின் மூத்த மகனான, சார்ஸ்ஸ் அன்ரனி ஓரிரவில் சாதாரண மக்கள் போல, சில போராளிகளோடு இராணுவ எல்லைக்குள் நுழைந்தபோது இது இரவு இப்போது அனுமதிக்கமாட்டோம் என இராணுவம் மறுத்தபோது நடந்த சண்டையிலே கொல்லப்பட்டிருக்கின்றார் என்கின்றார். சார்ஸ் அன்ரனி 800X 800 புதுமாத்தளன் சண்டை box இறுக்கப்பட்டபோது கிட்டத்தட்ட 4 கிலோமீற்றர் தொலைவில் சென்றே இராணுவ எல்லைக்குள் நுழைந்தார் எனச் சொல்லப்படுகின்றது.

புலிகளின் தலைவர் இருக்கின்றாரா அல்லது தப்பிவிட்டாரா என்பது தங்களுக்கு அவரைக் கொல்லும்வரை தெரியாது எனவும் சொல்கின்றார். புலிகளின் தலைவர் கொல்லப்படுவதற்கு முன் மூன்று அலையலையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது. அந்த தாக்குதலிலேயே புலிகளின் தளபதிகளான பானு, சொர்ணம், மாதவன் மாஸ்டர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாய் கூறுகின்றார். கிட்டத்தட்ட 700 பேர் ஒரு நாளிலேயே (மே 17) கொல்லப்படுகின்றனர்.
புலிகளின் தலைவரும், கடற்புலிகளின் தளபதியான சூசையும் கிட்டத்தட்ட அருகிலேயே கடைசிவரை நின்றிருக்கின்றனர். புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட விதம் குறித்து எல்லாவிதமான வதந்திகளையும் - அவர் சரணடைந்து மகிந்தாவின் முன் மண்டியிடவைக்கப்பட்டவர் உட்பட- நிராகரித்து, தன்னைப் போன்றவர்கள் நேரடிச் சாட்சியாக நடந்ததைப் பார்த்தவர்கள் என உறுதியாகக் கமல் சொல்கின்றார். இறுதித்தாக்குதலை நடத்திய கொமாண்டோக்களின் படமும் இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. உடனேயே புலிகளின் தலைவரின் உடலை எரித்து அடையாளமின்றிச் செய்ததாகவும், எல்லாளன் போல நினைவுச்சமாதி ஒருபோதும் அமைத்துவிடக்கூடாதெனவும் எச்சரிக்கையுடன் இருந்ததாகவும் கூறுகின்றார்.

புலிகளின் தலைவரின் உடலை அடையாளங் காட்ட கருணா வந்தபோது, தனக்குக் கேட்க ஒரு இராணுவத்தினன், 'நீங்களும் அவசரப்படாது பிரிந்துவிடாதிருந்தால், உங்கள் உடலையும் இங்கே கிடத்தியிருப்போம்' எனச் சொன்னதையும் இந்தப்புத்தகத்தில் பதிவு செய்கின்றார். கருணா ஒரு புன்சிரிப்புடன் புலிகளின் தலைவரை அடையாளம் காட்டினாலும், தயா மாஸ்டர் கண்களில் நீரோடு இருந்தார் எனவும் எழுதுகின்றார்.

ஆனால், இந்தப் புத்தக்கத்தில் நடேசன், புலித்தேவன் போன்றோர் சரணடைய வந்த காட்சிகளின் பதிவு எதுவும் இல்லை. புலிகளின் தலைவரின் இளையமகனான பாலச்சந்திரன் உயிரோடு சரணடைந்ததும், பிறகு கொல்லப்பட்டதும் பற்றி ஒரு சிறுமூச்சும் இல்லை. தீவிரவாதிகளோடு யுத்தம் தொடங்கியது சரி. ஆனால் no fire zone வரும்வரைக்கும் மக்கள் இழப்பு/கஷ்டம் பற்றி சிறுவிபரிப்புக்களும் இல்லை. ஏதோ இரண்டு இராணுவங்கள் மக்கள் இல்லாத சூனியப்பிரதேசத்தில் சண்டை செய்தனர் என நாங்கள் கற்பனை செய்யவேண்டியதுதான்.

3.
இத்தனை அழிவு நிகழ்ந்தபின்னும், புலிகள் மீது கட்டாய இராணுவ சேர்ப்பு, மக்களை வெளியேவிடாது தடுத்தமை போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் வெளிப்படையாக இருந்தாலும் ஏன் அந்தமக்கள் உட்பட பெரும்பான்மையான தமிழ்மக்கள் மகிந்த ராஜபக்‌ஷாவிற்கு தன் பெரும்பான்மையாக ஆதரவை போரின் பின்பான காலத்தில் கூட காட்டவில்லை என்பதைப் புரியாதவரை, எல்லாளன் - துட்டகைமுனு,, மகிந்த ராஜபக்‌ஷா- பிரபாகரன் போன்றவர்கள் சாதாரண பெயர்களே, இவற்றின் பின்னால் இருக்கும் நுட்பமான பிரச்சினைகள் தீர்க்கப்படாது இருக்கும்வரை இஃதொரு நச்சுச்சூழல் என்பதை அறியாதவரை இந்த அழகிய தீவு அமைதியாக எளிதில் இருக்கமுடியுமா எனவும் சிங்களப் பேரின்வாத அரசும், அதற்கு முண்டுகொடுக்கும் இராணுவமும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

வெற்றியை நடத்திக் காட்டிய இராணுவத்தளபதியான சரத் பொன்சேகா சிறைக்குள்தான் பின்னர் மகிந்த ராஜபக்‌ஷா அரசினால் அனுப்பப்பட்டார். இராணுவப் புரட்சி நடந்துவிடும் என்ற அச்சத்தாலோ என்னவோ போருக்குத்தலைமை தாங்கிய தளபதிகளில் பெரும்பான்மையோர் வெளிநாடுகளுக்கு தூதர்களாகவும் துரத்தப்பட்டார்கள்.

ஈழத்தின் இறுதிப்போர் நிகழும்போது 120, 000 இருந்த இராணுவம் கிட்டத்தட்ட 230,000, இரண்டு மடங்காக்கப்பட்டது. அதுவரை இருந்த 9 டிவிசன் - 20 டிவிசன்களாகவும் ஆக்கப்பட்டன. இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு, கொல்வதற்கு 'தீவிரவாதிகளும்' இல்லாதுபோகும்போது நாட்டில் எந்தச் சூழ்நிலையும் வரலாம் என்பதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.ஒரு தோற்றுப்போன போராட்டத்தை, அவர்கள் 'தீவிரவாதி'களாய் இருந்தாலும் தங்களின் சகோதரர்களாகவும், நண்பர்களாகவும் இருந்த அவர்களை 'இயக்கம்' எனற பெயரில் பலர் வெறுக்கலாம், ஆனால் சக மனிதர்களாய் அவர்களை தமிழ்ச்சமூகம் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காது. மிக மோசமாக அவர்களைச் சித்தரிக்கும் இந்த நூலில் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், 'நாங்கள் எப்போதும் அதிகாரம் மிக்கவர்கள், எங்களால் எதையும் செய்யமுடியும்' என்பதே.

ஆம், எதையும் செய்யமுடியாது கீழ்மைப்பட்ட ஒரு சமூகம், தன் சாபங்களாலும், குற்றவுணர்வுகளைப் பெருக்குவதன் மூலமும் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனச்சாட்சிகளை அவ்வளவு எளிதில் உறங்கவிடாது என்று நம்புவதைத் தவிர இப்போதைக்கு எமக்கும் எந்த வழிகளுமில்லை.


----------------------
(நன்றி: 'அம்ருதா' - மார்கழி/2016)

'நட்சத்திரம்' - ஒரு புத்தக வாசிப்பு

Friday, November 18, 2016

'ட்சத்திரம்' என்கின்ற இந்நாவல் ரஷ்ய (அன்றைய சோவியத் யூனியன்) உளவுக்காரர்களைப் பற்றியது; 2ம் உலகமகாயுத்தத்தில் ஜேர்மனியரைத் துரத்தியடிக்கின்ற காலத்தைய கதைக்களன்.  ஒரு யுத்தத்தில் ஜேர்மனியர்கள் பின்வாங்கி, பெரும் தாக்குதலை ரஷ்யப்படைகள் மீது நடத்த காடுகளுக்குள் பதுங்குகின்றனர். ரஷ்ய உளவுப்படையோ ஜேர்மனியர்களின் தடங்களைத் தவறவிட்டுத் தேடிக்கொண்டிருக்கின்றது. இவர்களின் அதிகாரியோ கோபத்தில், அம்மாவின் பால் மறவாக் குழந்தைகள் எனவும், பெண்களைத் துரத்துவதைப் போல ஜேர்மனியர்களைத் துரத்தும் கோழைகள் எனவும் அவர்களைப் பார்த்துத் திட்டுகின்றார்.

அவமானங்களை மீறி வேவுப்படையினர் ஜேர்மனியரின் அமைவிடங்களைக் கண்டுபிடிக்கின்றனர். முள்ளுக்கம்பி வெட்டி உள்ளே நுழைகின்ற உளவுப்படையின் ஒருபகுதி திரும்பியே வராது போகின்றது. இதற்கிடையில் யுத்தக் காலத்தில் தொலைத்தொடர்பில் பணியாற்றுகின்ற பெண்ணுக்கு உளவுப்படையின் இளம்தலைவன் மீது காதல் வருகின்றது. மிகவும் அமைதியும், பணியில் தீவிரமும் உடைய அவன் இதை அசட்டை செய்தாலும், அந்தப் படையில் இருக்கும் வீரர்கள் இந்தப் பெண்ணோடு நெருக்கமாகவும், அவளின் காதலை வெற்றிபெறச் செய்வோமெனவும் உறுதியளிக்கின்றனர்.

இறுதியில் இந்த இளம்தலைவன் தலைமையில் முட்கம்பி வெட்டி காடுகளை ஊடுறுத்து, ரஷ்ய உளவுப்படை ஜேர்மனியர்களுக்குள் இறங்குகின்றது. அங்கேயிருந்து அரிய பல தகவல்களை அனுப்பிவைத்தபடியிருக்கின்றனர். சாதாரண ஜேர்மனியப்படை மட்டும் அல்ல, நாஜிக்களின் மூர்க்கமாய்ப் போரிடும் படையணியான எஸ்.எஸும் ஒரு பெரும் தாக்குதலுக்கு அணிவகுத்து நிற்பதை அவதானிக்கின்றனர். தொடர்ச்சியாகத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் சில ஜேர்மனியர்களை இந்த உளவுப்படை கொல்ல, ஜேர்மனியர்கள் சுதாகரிக்கின்றனர். கடும் தேடுதல் நடவடிக்கையில் இவர்களைச் சுற்றிவளைக்க இவர்கள் தாக்கிவிட்டுத் தப்பியோட முயற்சிப்பதோடு நாவல் முடிவடைகின்றது.

அந்தக் காதலி தாங்கள் அனுப்பிவைத்த குழுவிற்குரிய பெயரான 'நட்சத்திரத்திடமிருந்து' தங்கள் தலைமையகமான 'பூமி'க்கு நல்ல செய்தி வருமெனக் காத்திருக்கின்றாள். ரஷ்யப்படை தொடர்ந்து வென்றபடி போகின்றது. போலந்து நாட்டிற்கருகில் -தொடக்கத்தில் உளவுப்படையினரைத் திட்டிய கேணல்- மீண்டும் உளவுப்படையைக் காண்கின்றார். இனி விரைவில் பேர்லினை நாங்கள் பிடித்திடுவோமேன அவர்களை வாழ்த்துகின்றார். ஆனால் அந்தப் பழைய வீரர்கள் இப்போதில்லை. எல்லோரும் புதியவர்கள். அருமையான இளமையான மனிதர்கள் யாரிடையதோ வெறிக்காகவோ நடந்த யுத்தத்தில் காணாமற்போய்விடுகின்றனர்.

ஃதொரு சிறிய நாவலென்றாலும், அதற்குள் யுத்தம் நடக்கும் பின்னணியையும், உளவுப்படைகளின் சவால் நிறைந்த வாழ்க்கையையும் எளிதாக நம்முன்னே கொண்டுவருகின்றது. ஓரிடத்தில் ஒரு ஜேர்மனியரைக் கொல்லும்போது, அவன் 'எனது கைகளைப் பாருங்கள். நானுமொரு தொழிலாளியின் மகன். தொழிலாளர்கள் மீது மிகுந்த காதலுடைய நீங்கள் என்னைக் கொல்லலாமா?' எனக் கேட்கின்றான்.

'திராவ்கினுடைய கண்களில் தோன்றிய இரக்கத்தையும், மாறா உறுதியையும் அந்த ஜெர்மானியன் கண்டான். அவன் ஒன்றுமறியா முட்டாள் அல்ல. அச்சுகோர்க்கும் வேலையிலிருந்து கொண்டே அவன் அநேகப் புத்தகங்களைப் படித்திருந்தான. ஆகவே தன்முன் நிற்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது அவனுக்கு நன்கு தெரியும். இரக்கமும் உறுதியும் கலந்த பார்வையுடைய இவ்வழகிய வாலிபனது உருவத்தில் தனது உயிரைக் கவர வரும் காலனைக் கண்டதும் அவன் கண்ணீர் விட்டழுதான்' என நாவலில் எழுதப்பட்டிருப்பது, எதிரியாயினும் அவர்களது மனதினுள்ளும் கடைசி நேரத்தில் என்ன தோன்றியிருக்கும் என நினைத்து எழுதப்பட்டிருப்பது கவனிக்கத்தது.

இந்நாவலை எழுதிய எம்மானுயில் கஸகேவிச் நிஜவாழ்வில் 'ஸ்கவுட்டுகள்' எனப்பட்ட உளவுப்படையில் இருந்தவர். ஆகவேதான் இந்நூலில் இருக்கும் உளவெடுக்கும் சம்பவங்களை மிக நெருக்கமாக உணரக்கூடியதாக வகையில் அவரால் எழுத முடிந்திருக்கின்றது. மேலும் பக்கங்கள் அதிகம் போகாது மிக நுட்பமாய் நம்மில் கதைகளைக் கடத்தும் இன்றைய இலத்தீன் அமெரிக்கா நாவல்களைப் போல, எப்போதோ எழுதப்பட்ட  இந்த நாவலும் நூறுபக்கங்களுக்குள் சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லி நிற்கின்றது.

தமிழில் யார் மொழியாக்கம் செய்தார்கள் என்ற விபரம் தெரியாமல் நியூ செஞ்சுரி ஹவுசினால் 2007ல் இது பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. யாராயினும் இவ்வளவு நுட்பமாய் தமிழாக்கியதற்காய் அவருக்கு நிச்சயம் நாம் நன்றிகூரத்தான் வேண்டும்.


(நன்றி: 'தீபம்)

ஆதிரை

Wednesday, November 16, 2016

'ஆதிரை' நாவலை வாசிக்கத் தொடங்கியபோது, எல்லாவற்றையும் விட சயந்தனின் உழைப்பே வியக்கவைத்தது. இவ்வளவு பெரிய நாவலை எழுதுவது எவ்வளவு மிகப்பெரும் விடயமென்பது எழுதுபவராகவும், புலம்பெயர்ந்து இருப்பவராகவும் இருக்கும் ஒருவரால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியும். புலம்பெயர்வை ஏன் இங்கு விசேடமாய்க் குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ் அவ்வளவு புழங்காத சூழலில் இருந்துகொண்டு, எழுதுவதின் கடினத்தைப் பற்றிச் சொல்கின்றேன். இவ்வளவு நிறையப் பக்கங்களில், புலம்பெயர்ந்த சூழலில் இருந்து வந்த படைப்புக்கள் எவையென்று யோசிக்கும்போது 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்', 'வரலாற்றில் வாழ்தல்' என்பவை உடனே நினைவிற்கு வந்தன. ஆனால் அவை தன் வரலாறு சார்ந்து எழுதப்பட்ட நூற்கள். புனைவின் எழுத்தின் வகைக்குள் வராதவை. தேவகாந்தனின் 'கனவுச்சிறை'யே நமக்கு முன்னோடியாக இருக்கின்றது. ஆனால் அதைக் கூட தேவகாந்தன் இலங்கை மற்றும் இந்தியாவில் -தமிழ் நன்கு பரிட்சயமான சூழலிருந்தே- பெரும்பகுதியை எழுதியிருக்கின்றார். அந்த வகையில் 'ஆதிரை' நம் புலம்பெயர்ந்த சூழலில் தொடங்கப்பட்ட, ஒரு பயணத்திற்கான முக்கிய காலடி எனத்தான் சொல்லவேண்டும்.

ஆதிரையில் முதல் அத்தியாயமாகவும் இறுதிஅத்தியாயமாகவும் இருப்பவற்றை ஏற்கனவே சிறுகதைகளாக வெளிவந்து அவற்றை வாசித்ததாகவும் நினைவிலுண்டு. ஆதிரை மூன்று தலைமுறைகளின் கதைகளைச் சொல்கின்றது. அதில் ஒரு குடும்பம் மலையகத்திலிருந்து வன்னிக்குள் கலவரங்களில் நிமித்தம் இடம்பெயர்கின்றது. இன்னொரு குடும்பம் வன்னிக்குள்ளேயே நீண்ட காலமாய் வசித்துவருகின்றது. இந்த இரண்டு குடும்பச் சங்கிலிகளுக்குள் வேறு குடும்பங்களும் முக்கியமான பாத்திரங்களாகவும் உதிரிகளாகவும் வந்து சேர்கின்றனர். அவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குள் வந்து சேர்கின்றவர்கள்தான் அத்தாரும், சந்திராவும். அவர்கள் தொடக்கத்தில் யாழில் இருந்து  வன்னிக்குள் வந்தது போரின் நிமித்தம் அல்ல; யாழ்ப்பாணிகளின் சாதித்திமிரிலிருந்து தப்பிவந்தே வன்னிக்குள் தமக்கான வாழ்க்கையை அமைக்கின்றனர்.

இந்நாவலில் வன்னிக்காடும், வேட்டை நுட்பங்களும் அற்புதமாய்ச் சித்தரிக்கப்படுகின்றன. காடும் காடு சார்ந்து வாழ்ந்த சங்கிலியினதும், மயில்குஞ்சனினதும் வாழ்க்கை எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மாறுகின்றன என்பதை நாவல் இயல்பாய் வாசிக்கும் நம்மிடையே எடுத்து வருகின்றது. பண்ணைகள் அமைத்து  அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்டவற்ற பண்ணைகளைச் சுவீகரித்து, இயக்கங்கள் தமக்கான தளங்களை வன்னிக்குள் அமைக்கத் தொடங்குகின்றபோது, காட்டிற்குள் செல்லும் உரிமை மறுக்கப்படும்போது சங்கிலி கொந்தளிக்கின்றார். மயில்குஞ்சன் காலப்போக்கில் இயக்கத்தோடு சேர்ந்து அவர்களது தாக்குதல்களுக்கு உதவி செய்யும் ஒருவராக மாறிப்போகின்றார்.

நாட்டின் எந்தப் பகுதியில் கலவரங்கள் நடக்கின்றபோதும் வன்னி ஒவ்வொரு பொழுதும் அதிர்கின்றது. இறுதியில் போர், வன்னிக்குள்ளும் கால் வைக்கின்றது. இராணுவம் அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்கின்றனர். இயக்கக்காரர்கள் திரும்பி இராணுவத்தோடும் பொலிசோடும் பொருதுகின்றனர். மக்கள் வீணாய்க் கொல்லப்படுகின்றார்கள் என்பதைக்  காரணங்காட்டி மற்ற இனமக்களையும் இயக்கம் கொல்கின்றது. இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், மீண்டும் இலங்கை இராணுவம் என்று இராணுவங்கள்தான் மாறுகின்றரே தவிர, யுத்தம் தொடர்கின்றது. அது ஏற்படுத்தும் அழிவுகளும் மனக்காயங்களும் தொடர்ந்தபடியே இருக்கின்றது.

போருக்குள்ளும் மறுபுறத்தில் வாழ்க்கை தளிர்க்கின்றது. பிள்ளைகள் பிறக்கின்றனர் .அடுத்தடுத்த தலைமுறைகள் தோன்றுகின்றன. வழமைபோலவே பெண்களும் குழந்தைகளும் எதையும் பேசாது அல்லது அவர்கள் பேசுவதற்கான எந்த வெளிகளும் இல்லாமல் போகின்றது. அவர்களே ஆண்களை விட எல்லா இழப்புக்களையும், வடுக்களையும் தாங்குகின்றனர்.  நெருக்கமானவர்கள் கொல்லப்படுகின்றபோதும், காணாமற்போகும்போதும், இயக்கங்களுக்குப் போகும்போதும் இந்தப் பெண்களே தம் குடும்பங்களை வழிநடத்துகின்றனர். எல்லாத் துயரங்களோடும் அடுத்ததலைமுறையை வளர்த்து ஆளாக்கியும் விடுகின்றனர்.

வ்வளவு பெரிய நாவல் பல்வேறுதளங்களில் ஊடறுத்துச் செல்வதற்கான வெளிகள் இருக்கின்றன. ஆனால் நாவல் புலிகள் ஆதரவு மற்றும் எதிர் என்று இரண்டு தளங்களுக்குள் அப்பால் நகரக் கஷ்டப்படுகிறது. அதிலும் அவ்வப்போது உரையாடும் பாத்திரங்கள் மூலமே எதிர் விமர்சனம் வருகின்றதே தவிர, முழுமையாக வரவும் இல்லை. ஒரு படைப்பாளி ஒரு சார்பு எடுத்து எழுதுவதில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால் ஒரு படைப்பு எப்போது நம்மால் மறக்கமுடியாத நாவலாக மாறுகின்றதென்றால் ஒரு பாத்திரம் அதன் பலவீனங்களுடன் என்றாலும் அதற்குரிய நியாயத்தைக் கொண்டிருப்பதை வாசக மனதில் பதிய வைப்பதில்தான் இருக்கிறது.  ஏன்  எப்போதே எழுதிய ரஷ்ய நாவல்களை இன்றும் விதந்தோத்திக் கொண்டிருக்கின்றோம் என்றால் அவர்களின் நாவல்களில் இருந்த பலவீனமான மனிதர்களாயினும் நாம் அவர்களைக் கடந்துபோக முடியாத பாத்திரங்களாய்ப் படைக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய காரணம் எனலாம்.

புலிகள் மீது ஒரளவு விமர்சனங்களை வைப்பது சந்திரா என்கின்ற பாத்திரம் மட்டுமே. அந்தப் பாத்திரத்திற்குள் கூட உள்ளே நுழைய சயந்தன்  அவ்வளவு மினக்கெடவில்லை. ஒரு தீவிர புலி அனுதாபியான அத்தாரை, சந்திரா அவ்வப்போது கேள்விகளால் மடக்கின்றாரே தவிர வேறு எந்த நுட்பமான விமர்சனங்களையும் நாவலில் எளிதாய்ப் பார்க்கமுடியவில்லை.  அத்தார் கூட, இளமையில் ஒரு கம்யூனிஸ்டான இருந்த அவர் பின்னாளில் தேசியவாதியாக மாறுகின்றார் என்தைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. புலிகளால் கொல்லப்படுவதற்காய்த் தேடப்பட்ட எத்தனையோ பேர் பின்னாட்களில் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக மாறியதை நாமறிவோம். அது மட்டுமின்றி அவர்களின் ஒருவகையினர் இன்றும் கூட இத்தனை நிகழ்ந்தபிறகும் புலிகளின் எல்லாவற்றையும் ஆதரிப்பதையும் காண்கின்றோம். அந்தவகையில் சயந்தன் இறுதிப்போர்க்கட்டங்களில் நிகழ்ந்த கட்டாய ஆட்சேர்ப்புக்களை மறைக்காமலும், அதை எந்தவகையிலும் நியாயப்படுத்தாமலும் உள்ளதை உள்ளபடி எழுதியிருப்பதும் வரவேற்கத்தக்கது.

இந்த நாவல்  இத்தனை நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதப்படுகின்றதென்றால், பல்வேறு அடுக்குகளில் இது இன்னும் விரிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கலாமோ எனவும் தோன்றுகிறது. வாசிப்பவர் இந்தப் பாத்திரம் சரியா அல்லது தவறா என்று யோசிப்பதற்கான வாய்ப்புக்கள் அநேக பாத்திரங்களுக்கு வழங்கப்படவில்லை. உதாரணமாக புலிகள் அனுதாதபுரத்தில் சிங்கள மக்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இந்திய உளவுத்துறையினர். எல்லா இயக்கங்களும் சேர்ந்து இருந்த கூட்டத்தில் இந்தப் படுகொலையை யார் நிகழ்த்தப்போகின்றீர்கள் எனக் கேட்கப்பட்டபோது ஏனைய இயக்கங்கள் தயங்கியபோது, புலிகள் முன்வந்ததை புளொட்டில் அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் ஆவணப்படுத்தியிருக்கின்றார்.

ஏன் இத்தனை பெரிய நாவலில் நம் இயக்கங்களின் வளர்ச்சியை இயல்பாக விடாது பயிற்சி முகாங்களும், ஆயுதங்களும் அள்ளிக்கொடுத்து ஊதிப்பெருப்பித்த இந்தியாவின் அரசியல் கோரமுகம் வெளியே வரவில்லை. சிங்கள அரசு மற்றும் இராணுவத்தின் கொடும் முகங்களை இந்தளவிற்குக் காட்டமுடியுமென்றால் மெளனமான பெரும் தந்திரம் நிறைந்த இந்தியா எப்படி நம் போராட்ட வரலாற்றிலிருந்து தப்பிவிட முடியும். இந்திய அரசினதும், உளவுத்துறையினதும் பங்கின்றி நாம் நமது போராட்டங்களின் வரலாற்றை எப்படி எழுதிவிடமுடியும்?

மேலும்,  புலி ஆதரவு  X எதிர்ப்பு என்ற பாத்திரங்களைத் தவிர வேறு எந்த விதிவிலக்கான பாத்திரங்களும் இந்ந்தாவலில் வளர்க்கப்படவில்லை. முக்கியமாய் முஸ்லிம் பாத்திரம் எதையுமே இந்த நாவலில்  காணவேயில்லை. அப்படி ஒரு பாத்திரம் படைக்கப்பட்டிருந்தால் இந்த நாவல் இன்னும் ஆழத்திற்குள் இறங்கியிருக்கும். அதே போன்றே புலிகள் சாராத இன்னொரு இயக்கத்தின் முன்னாள் போராளியின் பாத்திரத்தைக் கொண்டு வந்திருக்கலாம். அதன் மூலம் நமது போராட்டத்தின் உரையாடலை இந்த நாவலில் வளர்த்தெடுத்திருந்தால் எத்தனை அற்புதமாக  இந்நாவல் உருமாறியிருக்குமென  வாசிக்கும்போது நினைத்துக்கொண்டிருந்தேன்.

யந்தனின் சமகாலத்தவனாக இருப்பதால் இந்த நாவல் வாசிப்பில்  அது பலமா பலவீனமா என்று தெரியவில்லை. ஆனால் நாவலை வாசித்துக்கொண்டிருந்தபோது எனக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளைத்தான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் என்ற நினைப்பே வந்தது. இந்த நாவலிற்குள் சயந்தனின் அழகான மொழி நடை  கூடவே வந்ததால் வாசிப்பு அவ்வளவு தடைசெய்யவில்லை. இப்போது நமது ஆயுதப்போராட்டம் குறித்து நிறைய  புதினங்கள் வரத்தொடங்கியிருக்கும் காலத்தில் ஒரு படைப்பாளிக்கு படைப்பைத் தருவதில் மிகப் பெரும் சவால் இருக்கின்றதென நினைக்கின்றேன். நமது ஆயுதப்போராட்டத்தின் இறுதியில் என்ன நடந்தது என்பதற்கு அப்புவின் 'வன்னி யுத்தம்' , யோ.கர்ணனின் 'கொலம்பஸின் வரைபடம்', தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' என்பவை நம் முன்னால் இருக்கின்றன. இன்னொரு புறம் புலிகளின் போராட்டங்கள் பற்றிக்கூற பெண்புலிகளின் போராட்டத்தின் பங்களிப்பைக் கூற 'விழுதுமாகி வேருமாகி', 'மலைமகள் கதைகள்', 'மேஜர் பாரதியின் படைப்பு'க்கள் என நிறைய ஏற்கனவே முன்னரே வெளிவந்திருக்கின்றன. இன்னொரு புறத்தில் 'விடமேறிய கனவு', 'பொக்ஸ் கதைப்புத்தகம்' என புனைவின் நுட்பங்களுக்கு உதாரணங்களாய் இருக்கின்றன.

நிறைய வாசிப்பதென்பது ஒருவித பலவீனமோ என யோசித்த தருணமும் ஆதிரையை வாசித்தபோது எனக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆதிரையின் நிறைய இடங்கள், எனக்கு வேறு படைப்புக்களை நினைவூட்டிக் கொண்டிருந்தது. உதாரணமாக மிகச் சிறப்பாக ஆதிரைக்குள் வடிவமைக்கப்பட்ட வெள்ளையக்கா என்கின்ற மலரின் பாத்திரம் எனக்கு  வெற்றிச்செல்வியின் 'போராளியின் காதலி'யின் முக்கிய பாத்திரத்தை நினைவூட்டிக்கொண்டிருந்தது. ஆதிரையில் வரும் சித்திரவதைக்கூடங்கள் பற்றிய சித்தரிப்பு விடமேறிய கனவின் பக்கங்களையும், இறுதிப்போர் பற்றிய சித்திரங்கள் அப்புவின் 'வன்னியுத்தத்தையும்', கொலம்பஸின் வரைபடத்தை'யும் நினைவுபடுத்தியிருந்தன. இதன் அர்த்தம் ஆதிரை அவற்றைப் பின்பற்றியது என்பதல்ல. ஒரு வாசக மனது எந்தத்திசையில் சிந்தித்தது என்பதைச் சொல்வதற்கு மட்டுமே.

ஆகவே இனி நமது படைப்பாளிகளுக்கு முன்னாலுள்ள பெரும் சவால் என்னவென்றால் உம்பர்த்தோ ஈக்கோ ஓரிடத்தில் சொல்வதுபோல, ‘வாசகருக்கு எது வேண்டுமெனத் தெரிந்து எழுதுவதல்ல. நமது ஒவ்வொரு படைப்புக்கும் ஏற்றமாதிரி வாசகரை மாற்றுகின்ற வித்தையை நாம் எழுத்தினூடாக அறியவேண்டியிருக்கின்றது' என்பது பற்றியே நாம் யோசிக்கவேண்டியிருக்கின்றது. அதுவே நம் எல்லோருக்கும் முன்னால் உள்ள சவால். அதை எப்படி எதிர்கொள்கின்றோம், தாண்டிச் செல்கின்றோம் என்பது குறித்து இனி நாம் அக்கறைப்பட வேண்டியிருக்கின்றது..

ஷோபாசக்தியின் 'கொரில்லா' வந்தபோது அதை வியந்து ஷோபாசக்தியின் காலத்தைய ஒரு இயக்க நண்பரோடு உரையாடியிருந்தது நினைவுக்கு வருகிறது. இதிலென்ன இருக்கின்றது இதைவிட நிறைய விடயங்கள் எனக்குத் தெரியும் என அந்த நண்பர் சொன்னபோது எனக்கு கோபமே வந்தது. இப்போது ஆதிரையை பற்றிப் பேசும்போது அதேதான் ஞாபகம் வருகின்றது. சயந்தனின் சமகாலத்தவனாக நானும் இருப்பதால் எனக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளின் தொகுப்பாக இருப்பதால் என்னால் இதை ஒரு மிகச்சிறந்தநாவலாக முன்வைக்கமுடியாது எனச் சொன்னால் நான் 'கொரில்லா'விற்காய் கோபப் பட்டத்தைப் போல யாரேனும் ஒருவர் கோபப்படக்கூடும். அதைப் புரிந்துகொள்ளமுடியும்.

நாவலிற்கான திறனாய்வுகள் என்பது அடுத்து எழுதுவதற்கு ஏதோ ஒருவகையில் உதவும் என்கின்ற முறையில் நம்புகின்றவன். வெளிப்படையாக நாம் வாசிப்புக்களை வைக்கும்போதே நாம் நம் வாசிப்புக்களுக்கு நேர்மையாகவும், அதேவேளையில் படைப்பாளிக்கு உந்துசக்தியாகவும் இருக்கமுடியுமெனவும் நினைப்பவன். ஒரு சிறந்த படைப்பு அது வெளிவரும் காலத்தைய புகழ்ச்சிகள் தூற்றல்கள் என்பவற்றைத்தாண்டி எதிர்காலத்தில் தன்னை நிலைநிறுத்தும். அது வெளியிலிருந்து அல்ல, ஒரு நாவல் அது தன்னியல்பிலேயே தனக்கான வாசகர்களைக் கண்டடைந்துகொள்ளும். சயந்தனின் 'ஆதிரை யும் அப்படித் தன்னை எதிர்வரும் காலங்களில் மீளக் கண்டடையவேண்டும் என பிரியப்படுகிறேன்.

 (கனடாவில் நடந்த 'ஆதிரை' நூல் வெளியீட்டில் நிகழ்த்திய உரை)

சிங்கள மாணவியிற்கான எதிர்வினை

Wednesday, September 07, 2016

திசுரி வன்னியராட்சியின் கட்டுரையை வாசிக்க: 
To The Tamil Students In The Recent Fight At Jaffna University


Thisuri Wanniarachchi என்பவர் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையை நண்பர்கள் பலர் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். தனக்குரிய privilege ஐயும், மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு அவர் எழுதுவது நல்லதொரு விடயமே. அத்தோடு பெண்கள் எவ்வாறு நாளாந்தம் வன்முறைகளைச் சந்தித்தாலும் வன்முறைக்குப் போகாத 'சகிப்புணர்வை'ப் பற்றி அவர் சொல்வதும் நிச்சயம் கவனத்தில் கொள்ளக்கூடியது. பெண்கள் வன்முறையைக் கையிலேந்தாமல், ஒருநூற்றாண்டுக்குள் அவர்களால் எவ்வளவு சாதிக்க முடிந்தது என்பதைப் பற்றி இனிப் போராட்டங்களை நம்சூழலில் நடத்துபவர்கள் சிந்திக்கவேண்டும் என நண்பர்களிடையே விவாதித்திருக்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தின் 'தேசியம்' இருக்கும்வரை, தமிழ்த் தேசியம் எவ்வாறான நிலையில் என்றாலும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் என்பதை (தமிழ்த்தேசியம் எப்படி வெறியாக உருமாறியது/உருமாற்றப்படுகிறது என்பது இன்னொரு உரையாடலுக்கான புள்ளியென்றபோதும்) நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதே. இனியான தமிழ்த்தேசியம் ஆகக்குறைந்து ஒடுக்கப்பட்டவர்களிலிருந்தும் பெண்ணியத்திற்குள்ளிலிருந்தும் எழுந்தாலன்றி அது இன்னொருவகையான குறுந்தேசியவாதமாக போகுமென்பதிலும் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை.

இதை ஒருபுறம் வைத்துவிட்டு, இப்போது Thisuri Wanniarachchi தமிழ் மாணவர்க்கு என எழுதியதற்கு வருவோம். ஒரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர், தன் privilege விளங்கிக்கொண்டவர் முதலில் 'அறிவுரை' கூறவேண்டிய இடம் தமிழ் மாணவர்களுக்கு அல்ல. தான் சார்ந்த தன்னைப் போன்ற privilege உள்ள தன் சமூகத்திற்கே அவர் முதலில் எழுதவேண்டும். அதையும் தவிர்த்து அவர் தமிழ் மக்கள்/மாணவர் மீதான அக்கறையில் எழுதுகின்றார் என்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் 'வரலாற்றை' எவ்வாறு privilege உடன் அல்லது அதை நீக்கம் செய்தா வாசிக்கின்றீர்கள் என்பதையும் நாங்கள் பார்க்கவேண்டியிருக்கிறது.

1983ல் தமிழர்கள் (புலிகள்) தாக்கியதிலிருந்துதான் அன்றிலிருந்து 30 வருடங்கள் நாடு போருக்குள் வீழ்ந்ததெனக் குறிப்பிடுகின்றீர்கள். புலிகள் இராணுவத்தைத்தான் தாக்கினார்கள். அதற்காய் 1983ல் அப்பாவி/நிராதயுதபாணியான மக்களையெல்லாம் கொல்லத்தொடங்கியது ஏனென்று கேள்விகள் கேட்பதிலிருந்தே நாம் உரையாடல்களை ஆரம்பிக்கவேண்டும். இதைக்கூட ஒரு வன்முறைக்கான வித்து (புலிகள்) இட்டதால்தான் கலவரம் தொடங்கியதென ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். புலிகள் 1983ல் தாக்கமுன்னர், 1956 தனிச்சிங்களச் சட்டத்துடன் 1983வரை நடந்த கலவரங்களில், யார் அங்கே 'வன்முறை'யாளர்களாய் இருந்தார்கள் என்பதை நீங்கள் கவனிக்காதுவிடும்போதுதான் உங்களின் privilege இருந்து நீங்கள் இன்னமும் வெளியே வராது ஒடுக்கப்பட்டவர்களுக்கு 'அறிவுரை' கூற ஓடிவந்துவிடுகின்றீர்களே என்ற சந்தேகம் வருகிறது.

இப்போதும் தமிழர்களே 'வன்முறையாளர்களாய்' ஆகாதீர்களெனத்தான் கூற வருகின்றீர்களே தவிர வன்முறையின் ஊற்றுக்கள் எங்கே தொடங்குகின்றதெனக் கவனிக்கத் தவறுகின்றீர்கள் என்பதில்தான் எமக்குச் சோர்வு வருகிறது. ஏன் இந்தளவு போர் அழிவின்பின்னாலும், எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்டபின்னும் தமிழர்களிடையே 'வன்முறை' உணர்வு இருக்கிறதென்பதை நீங்கள் யோசிக்கவேண்டும். நீங்கள் இப்போதும் சிங்களச் சமூகத்தில் பெரிதாய் எதுவுமே மாறவில்லை என்று குறிப்பிட்டு, அவர்களும் வன்முறையாகத் திரும்பித் தாக்கினால் என்னவாகும் என எங்களிடம் கேட்கின்றீர்களே தவிர, பெரும்பான்மைச் சமூகத்திற்கு முதலில் 'அறிவுரை' கூறிவிட்டுத்தான் தமிழ் மாணவர்களிடம் இதைக் கூறுகின்றேன் எனச் சொல்வதற்கான எந்த அடையாளத்தையும் என்னால் காணமுடியவில்லை.

அதை விட இதை எப்படி மன்னிப்பும் கேட்டுக்கொண்டு உங்களிடம் இப்படி எழுதமுடிகிறதெனவும் யோசிக்கிறேன்.
"But at the end of the day we are both Sri Lankan and we cannot let our parents’ and grandparents’ generation’s mistakes belittle the future we have to rebuild."
இதை எப்படி சொல்கின்றீர்கள் என்பதும் விளங்கவில்லை. நாங்கள் சிங்களவர்கள், நீங்கள் தமிழர்கள் என்ற வித்தியாசங்களின் அடிப்படையில் ஒரு நாட்டில் வசிப்பவர்கள் என்று கூறுவீர்களென்றால் ஏற்றுக்கொள்ளலாம். நாம் இலங்கையர் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்மை உணரவைக்காதபடி, நீங்கள் 'இலங்கையர்' என்ற ஒருகுடைக்குள் தமிழர்களையும் இணையும்படி கேட்பது மிகுந்த வன்முறையல்லவா? ஒரு அரசியல்வாதி சொல்வது என்றால் கூடச் சகிக்கமுடியும். உங்களின் privilege உணர்ந்தபடி தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர் எனச் சொல்கின்றவர் இப்படி எப்படிச் சொல்லமுடிகிறதென வியக்கத்தான் முடிகிறது.

உங்களின் தமிழ்மாணவர் பற்றிய அக்கறை மீதோ அல்லது வன்முறையை எந்தவகையிலும் நியாயப்படுத்தக் கூடாது என்பதிலும் உங்களைப் போலவே எமக்கும் ஒத்த கருத்தேயுண்டு. ஆனால் அது நீங்கள் எழுதிய இந்தக் கட்டுரையில் தெளிவாக வெளிப்படவில்லை என்பதே என்னைப் போன்றவர்களின் வருத்தம்.

வன்முறை வேண்டாம் என்று இங்கே போதிக்கும் உங்களை விட எங்களுக்கு வன்முறையின் சகல வடிவங்களும் நன்கு தெரியும். அந்த 'வன்முறை'யினால் சமூகத்தில் எந்த கீழ்நிலைக்கும் போகமுடியும் என்று கடந்தகாலத்தில் நன்குணர்ந்த ஒரு சமூகம், ஏன் இன்னும் அந்த 'வன்முறை'யைக் கைவிடத் தயாராகவில்லை என்பதை நீங்கள் சற்று ஆழமாக யோசிக்கவேண்டும். அதே சமூகந்தான் ஒரேநாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் என்ற தனித்துவமான அடையாளத்தோடு வாழவிரும்புகின்றதே தவிர, இலங்கையர் என்ற அடையாளத்தில் சேர ஏன் விரும்புவதில்லை என்பது பற்றியும் ஒரு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த, அதன் privilege உணர்ந்த நீங்கள் நிதானமாக யோசித்துப் பார்க்கவேண்டும்.

( July 19)

'களி' மற்றும் 'உத்த பஞ்சாப்'

Tuesday, August 30, 2016


Kali (மலையாளம்)

சடுதியாக வந்துவிடும் கோபந்தான் முக்கிய பேசுபொருள் என்றாலும், படம் வெவ்வேறு புள்ளிகளில் ஓரிடமில்லாது அலைந்தபடியே இருக்கிறது. எந்த வகையான கோபம் என்றாலும் அது உறவை/பிறதைப் பாதிக்கும் என்பதை இன்னும் ஆழமாய்க் கொண்டுசெல்லக்கூடியதை , பின்பாதியில் அதிக நேரத்தை தேவையேயில்லாததில் மினக்கெடுத்தி விடுகின்றனர். கோபத்தின் விளைவுகளை அவதானித்தபடி அதை மீறி நேசிக்கும் ஒரு பெண், தன் கோபத்தால் அவளை எந்தப் பொழுதிலும் இழக்கலாம் என்ற பதற்றங்கள் இருக்கும் ஒரு ஆண், அந்தப் புள்ளியில் தொடர்ச்சியாகப் பயணித்திருந்தால் மறக்கமுடியாத ஒரு திரைப்படமாக இது மாறியிருக்கும்.

இடைவெளியின் பின் திணிக்கப்பட்ட ஒரு சம்பவத்தைச் சுற்றியே கதை ஓடிக்கொண்டிருப்பதால் எப்போது அந்தக்காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கப்போகின்றதென்று என எண்ணுவதற்குள் படம் நிறைவடைந்துவிடுகின்றது. அதுவரை ஆண் கோபமடையும்போது உருவேற்றும் இசை , இப்போது பெண்ணுக்குள் ஒலிக்கத் தொடங்கிவிடுகின்றது. எது அவசியமற்றது, எதனால் ஒரு அழகான உறவு இழந்து போகப்போகின்றது என்ற அடிப்படையே மறந்து அந்தச் சடுதியாக வரும் கோபத்தையே நியாயப்படுத்துவதாகக் காட்டும்போது, இதற்காகவா இவ்வளவு நேரமும் அந்தப் புள்ளியில் ஒன்றிப் படத்தைப் பார்த்தோம் என்ற சலிப்பு வருகிறது. 'பிரேமம்' சாய் பல்லவிக்கு சிரிக்க வருகிறது,
எளிமையாகவும் அதிக அலங்காரமும் இல்லாதும் இருக்கிறார். ஆனால் 'பிரேமத்தில்' வந்த மடோனா செபஸ்டியான் நடிப்பில் 'காதலும் கடந்து போகுமில்' எளிதாய்க் கடந்துபோனதைப் போல, சாய் பல்லவி தாண்ட இன்னும் சில படங்கள் வேண்டியிருக்கும் போலத்தோன்றுகிறது.

'நீல ஆகாசம், பச்சைக்கடல் சுவர்ணபூமி' எடுத்த சமீர் தஹீரே இத்திரைப்படத்தையும் எடுத்திருக்கின்றார். அந்தப் படமும் சுவாரசியமாகத் தொடங்கி, பிறகு அதை எப்படித் தொடர்வது/முடிப்பது என்ற அதே சிக்கலே இந்தப் படத்திலும் நெறியாளர் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது. துல்காரின் கோபத்திற்கும் நேசத்திற்கும் மாறிமாறி அலைபாயும் பாத்திரத்தைப் பார்த்தபோது ஃபகத் ஃபாசில் நடித்த North 24 Kaatham நினைவிற்கு வந்தது. அதில் ஃபகத் ஃபாசிலின் பாத்திரம் அவ்வளவு எளிதில் எவரையும் கவர்ந்திழுக்காத ஒரு பாத்திரம். ஆனால் தன் நடிப்பின் மூலம் படம் முடிகின்றபோது நாயகியிற்கு மட்டுமில்லை நமக்கும் நெருக்கமான ஒரு பாத்திரமாய் ஃபகத் அதை மாற்றியிருப்பார். இங்கே துல்காரின் பாத்திரத்தோடு நம்மால் அவ்வளவு நெருக்கமாய் உணரமுடியாதது இன்னொரு பலவீனம் போலத்தெரிந்தது. எனினும் பிரேமத்தில் வந்ததைப் போலவே இதிலும் பருக்களோடும் சிரிப்போடும் இருக்கும் சாய் பல்லவிக்காய் வரும் இரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கவும்கூடும்.


Udta Punjab (இந்தி)

பஞ்சாப்பில் ஒருகாலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதைமருந்துகளின் பாவனையை அப்படியே இயன்றளவு rawவாக தந்திருக்கின்றனர். அரசியல்வாதிகள், பொலிஸிலிருந்து எல்லோரும் அதற்கு உடந்தையாகி ஒரு தலைமுறையை பாழாக்கிக்கொண்டிருந்ததை, தம்மை, தமது குடும்பங்களை போதை தீண்டும்போது திகைக்கும் மனிதர்களை, மாற்றங்களுக்காய்ப் போராட விரும்பும் சிலரையென மிக தத்ரூபமாய்க் காட்சிகளில் கொண்டுவருகின்றனர்.

Highway படத்தைப் பார்த்தபோதே அலியா இன்னும் உயரங்களைத் தாண்டுவார் என நினைத்திருந்தேன். இந்தப் படத்தில் இன்னொரு காலடியை முன்நோக்கி வைத்திருக்கின்றார். இந்த வயதிலேயே அவர் ஏற்றிருக்கும் இந்தப் பாத்திரத்தை அவ்வளவு எளிதாய் எவராலும் நடிக்கமுடியாது. ஒரு பீகார் அகதியாக, வறுமை காரணமாய் பஞ்சாபிற்குள் தோட்டத்தில் வேலை செய்யவந்து தற்செயலாய் போதைப்பொருட்கள் கடத்துபவர்களின் வளையத்திற்குள் சிக்கி, அவர்களால் தனித்தும் கூட்டாகவும் பாலியல் வன்புணர்ச்சியிற்கு ஆளாகி, போதையிலிருந்து மீள்வேன் எனவும், எந்தப்பொழுதிலும் தற்கொலை செய்யமாட்டேனெனவும் உறுதியாக இருக்கும் அந்தப் பாத்திரத்தை நாம் நீண்டகாலத்திற்கு நினைவில் வைத்திருப்போம்.

இந்தப் படத்தை நான்கைந்து பஞ்சாபி நண்பர்களோடுதான் சேர்ந்து பார்த்தோம். பஞ்சாப்பில் இப்படியான நிலவரம் இருந்ததா எனக் கேட்டிருந்தேன். இந்தளவிற்கு முழுப்பகுதியிலும் இல்லாவிட்டாலும் இருந்தது உண்மை என்றனர். திரைப்படத்தின் முடிவு கூட அருமையாக இருக்கும். அடுத்த தலைமுறையின் ஒருவன் கையில் போதையினதும் கொலைகளினதும் கறைகளுடன் முன்னுக்கு நிற்கின்றான். ஆனால் அவனை மீண்டும் சமுகத்திற்குள் இணைத்த சிலர் அவனுக்காய்க் காவும் கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரு தலைமுறையைக் காக்க/ விடுவிக்க நமக்குத் தெரியாத பலர் தம்மைப் பலிகொடுக்கின்றனர். அவர்களைப் பற்றிப் பெரிதாக நாம் அறிவதில்லை. ஆனால் அவர்களின் சாம்பல் மேடுகளிலிருந்தே நமக்கான நம்பிக்கையான வாழ்வொன்று முகிழ்கிறது.

(நன்றி: 'தீபம்)

அ.முத்துலிங்கத்திற்கான எதிர்வினை


நேற்று விகடனில் வந்திருந்த அ.முத்துலிங்கத்தின் ' வெள்ளிக்கிழமை இரவுகள் ' வாசித்திருந்தேன். அ.மு, ஈழப்பிரச்சினை குறித்து எழுதும் கதைகள் ஏன் தொடர்ந்து அபத்தமாய் இருக்கிறதென இன்னும் விளங்கவில்லை. ஒரு விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள்தான் அவற்றையெல்லாம் எழுதவேண்டுமெனச் சொல்லப்போவதில்லை, ஆனால் அவை குறித்து அக்கறையும் அவதானமும் இல்லாது எழுதும்போது விசனமே வருகிறது.

இந்தக் கதை ஏற்கனவே அஷோக ஹந்தகமவின் 'இது எனது சந்திரன்' (This is my moon) என்று 2000ல் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் வந்துவிட்டது. என்ன அது உள்ளூரில் அனைத்தும் நடக்கிறது. இது உள்ளூரில் நடந்து, கனடாவிற்குப் புலம்பெயர்ந்து குழந்தையுடன் திரும்பிப்போய் ஒருவிதமான 'பழிவாங்குதலுடன்' முடிகிறது. அஷோக ஹந்தகம எனக்குப் பிடித்தமான படைப்பாளி என்றபோதும், எப்படி சிங்கள இராணுவமும், புத்தபிக்குவும் தமிழ்ப்பெண்ணை சிதைக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தினாலும், அதில் சிறுபான்மையினராகிய எம்மீதான ஒருவகையான exploitation இருக்கிறதெனவே அது கடந்தகாலத்தில் -இங்கு திரையிட்டபோதும்- விவாதித்திருக்கின்றோம், எழுதியிருக்கின்றோம்.

அ.முத்துலிங்கத்தின் கதை பாதியில் நகரும்போதே எனக்கு மிகுதிக்கதை விளங்கிவிட்டது. 1997ம் ஆண்டு ஜெயசுக்குறு சமயத்தில் மாங்குளத்தில் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகின்றார். பிறகு 2010ல், சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பதை அந்தத் தாக்குதலிற்குத் தலைமை தாங்கிய மேஜரின் பெயரை மட்டும் கூறியவுடன், அவருக்குக் கீழேயிருந்து பாலியல் வன்புணர்வு செய்தவரை எளிதாய் இந்தப் பெண்ணின் நண்பி கண்டுபிடித்துச் சொல்லி விடுகின்றாராம். இந்திய வாசகர்கள்தானே எதைக் கொடுத்தாலும் வாசித்துவிட்டு உள்ளொளி பெற்றுவிடுவார்கள் என்று நம்பிக்கை இருக்கலாம். நமக்குத்தானே இன்னும் இந்த தரிசனங்கள் நிகழ்ந்துவிடவில்லையே? எப்படி நம்மால் இதையெல்லாம் எளிதாய்க் கடந்துபோய் விடமுடியும். இடியப்பதையே, இடி'யா'ப்பமாக அவர்களுக்காய் மாற்றி எழுதமுடிகின்றபோது இதெல்லாம் சிறு சம்பவங்கள்தானே என நகரச் சொல்கிறாரோ தெரியவில்லை.

தையில் இருக்கும் இப்படியான நெருடல்களையெல்லாம் விட்டுவிடலாம். கதை எந்த வகையிலுமே பாதிக்கவே இல்லை என்பதுதான் இங்கே சொல்ல வருகின்ற விடயம். பாலியல் வன்புணர்விற்குள்ளாகிய ஒரு பெண், அவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு இப்படி பிள்ளை அப்பா யாரெனக் கேட்கிறது என்பதற்காக, பிள்ளைக்கு இலங்கையிற்குப் போய் அந்த 'அப்பா'வை அறிமுகப்படுத்துவாரா என்ன? அந்தப் பெண், பிள்ளை கேட்கிறார் என்பதற்காகத்தான் போகின்றார் என்றாலும் அவருக்குள் நிகழ்ந்த சம்பவம் குறித்து எத்தகைய கொந்தளிப்பாய் இருந்திருக்கும். அது குறித்து எதுவுமே இல்லாது -ஏதோ வெளிநாட்டிலிருந்து ஊரைப் பார்க்கப் போவது போல- அந்தப் பெண் வெளிக்கிட்டுப் போகின்றார். இப்படியெழுத அ.முவால் மட்டுந்தான் சாத்தியம்.

மேலும், இவ்வாறு பாலியல் வன்புணரப்பட்ட பெண் அவ்வளவு எளிதில் தனது பிள்ளைக்கு அந்தத் தகப்பனை அறிமுகப்படுத்துவாரா? தனது பிள்ளைக்கு எது நல்லதென ஒரு தாயிற்குத் தெரியாதா? அவ்வாறு பிள்ளையுடன் இருக்கும் தாய், உனது தந்தை இறந்துவிட்டார் என்று சொல்லக்கூடுமே தவிர, இப்படி ஓடிப்போய் தன்னைப் பாலியல் வன்புணர்ந்தவரை அறிமுகப்படுத்துவாரா என்பதை வாசிப்பவர்க்கு விட்டுவிடுகிறேன். இந்தப் பெண்பிள்ளை பிறகு வளர்ந்து இந்த உலகின் எல்லா அழுக்குகளையும் அறிந்தபின், ஏன் எனக்கு இப்படிப்பட்ட ஒருவரை அறிமுகப்படுத்தினாய் என தாயைக் காறி உமிழாதா?

மேலும், ஏதோ கனடாவில் gay/lesbian யாய் இருப்பவர்களின் பிள்ளைகளைக் கூட இலகுவில் ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் single motherன் பிள்ளைகளைத்தான் கேலி செய்கின்றனர் என்றவகையில் அ.மு எழுதுவதில் எந்தளவு யதார்த்தம் என்பது குறித்தும் யோசிக்கின்றேன். single motherன் பிள்ளைகளுக்கு அவர்களுக்குரிய சிக்கல்கள் இருந்தாலும் இங்கு பொதுச்சூழலில் அவர்களை ஒரளவு ஏற்றுக்கொள்ளும் நிலைமைகள் இருக்கின்றன. மேலும் இந்தப் பிள்ளையை அதிகம் நக்கல் செய்வதாகக் காட்டப்படுவது, gay coupleன் ஒரு பெடியனால். Homosexual இன்னமே பொதுச்சமூகத்தால் அவ்வளவு ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு சூழலில், ஒடுக்கப்பட்டிருக்கும் அவர்களின் குழந்தைகளை அவர்கள் இப்படி அவ்வளவு எளிதில் வளர்க்கமாட்டார்கள் என்பதோடு, ஏன் அவர்களின் பிள்ளையை இங்கே அ.மு முன்னிலைப்படுத்துகிறார் என்பதில் அ.முவின் தற்பால் அரசியல் தெரிகிறது எனச் சொல்லலாமோ என யோசிக்கிறேன்.
வேண்டுமெனில் இந்தக் கதையிற்காய் விகடன் வாசகர்கள் 'ஆஹா'வென்று உச்சுக்கொட்டக்கூடும். எனக்கென்றால் எரிச்சல் தான் வந்தது.

சிலவேளைகள் நம்மால் முழுதாய் உணர முடியாத விடயங்களை, சரியாக எழுத்தில் வைக்க முடியா கதைகளை எழுதாமல் விடுவதே மிகச் சிறந்த 'அறமாக' இருக்கும் எனவும் -கேட்கிறார்களோ இல்லையோ- சொல்லிவைப்போம்.

அ.யேசுராசாவின் 'நினைவுக்குறிப்புகள்'

Sunday, August 07, 2016

.யேசுராசாவின் 'நினைவுக்குறிப்புகளில் 15 கட்டுரைகள் இருக்கின்றன; அநேகமானவற்றை 'ஜீவநதி'யிலும், அ.யேசுராசாவின் முகநூலிலும் எழுதப்பட்டபோது வாசித்தபோதும், இன்னொருமுறை முழுதாகச் சேர்த்து வாசித்தபோதும் சுவாரசியம் குறையாமல் இருந்தது. அ.யேசுராசாவில் நமக்கு எத்தகைய விமர்சனம் இருந்தாலும், இந்தத் தொகுப்பை நிறைவு செய்யும்போது அவர் அறிமுகப்படுத்தும் விடயங்களுக்காய் ஏதோ ஒருவகையில் நாம் அவருக்கு நன்றியுடையவர்களாக மாறிவிடுவோம். இலக்கியவாதிகளையும், இலக்கிய நிகழ்வுகளையும், சினிமாக்களையும், ஓவியங்களையும் அ.யேசுராசா இதில் பேசுகின்றார் என்கின்றபோதும், அதனூடு ஒரு குறிப்பிட்ட காலத்தின் (1970/1980) சுவடுகளையும் நாம் இவற்றில் அடையாங்காணமுடியும்.

ஒரு கடற்றொழிலாளியின் மகனாக வறுமையான குடும்பத்தில் பிறந்து, விரும்பிய கல்வியைத் தொடரமுடியாது தொடக்கத்தில் மேசன் வேலையும், பின்னர் தபால் கந்தோரிலும் பணிபுரியும் அ.யேசுராசாவிடம் 'நிலவினில் பேசுவோம்' போல, 'நீங்கள் எப்படி ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யலாம்' எனவும் சிலர் கேட்கின்றனர். அதுபோலவே அவர் சேகரிக்கும் நூற்களையும், அதில் எவ்வளவு பிரியமுடையவராக இருக்கின்றார் என்றும் எழுதப்பட்ட கட்டுரை அற்புதமானது. ஒருவகையில் அ.யேசுராசாவின் நூல் பித்து எனக்கு ஃபோர்ஹேஸை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. தனிமனிதர்களின் உறவை விட அவரின் புத்தகங்கள் மீதான நேசம் ஒருகட்டத்தில் எனக்கு அச்சமூட்டியதென்றாலும், புத்தகங்களின் மீதான தீரா வாஞ்சையும், அவையில்லாமல் ஒரு பொழுது விடிந்து முடியாதென நம்புகின்ற ஒருவனாக நானும் இருப்பதால் ஒருவகையில் யேசுராசாவைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹாகவி, ஏ.ஜே, எஸ்.பொ போன்ற ஆளுமைகளில் மீது வைத்திருக்கும் மதிப்பை வெளிப்படுத்துகின்ற யேசுராசா, அவ்வளவு கவனிக்கப்படாத ஆனந்தமயில், செ.கதிர்காமநாதன் போன்றவர்களை மட்டுமின்றி, இலக்கியம் சாராத சாதாரணமனிதர்களைக் கூட அவர்களின் பங்களிப்புக்களுக்காய் நினைவுகூரவும் செய்கின்றார். அதேசமயம் டானியனில் படைப்புக்கள் மீது (முக்கியமாய் 'பஞ்சமர்') குறித்த தன் கறாரான பார்வையையும் முன்வைக்கின்றார். ஆனால் இன்று டானியலின் படைப்புக்கள் முழுதாய் வெளிவந்திருக்கின்ற/வாசிக்கப்படுகின்ற காலகட்டத்தில் டானியலை அவ்வளவு எளிதாய் அ.யேசுராசாவைப் போல புறந்தள்ள முடியுமா என்பதிலும் கேள்விகள் உள்ளன. அதேபோன்று கைலாசபதியினதோ, டொமினிக் ஜீவாவினதோ, மு.பொன்னம்பலத்தினதோ முரண்பாடுகளை இத்தொகுப்பில் சேர்க்காமல் விட்டிருக்கலாமோ எனவும் தோன்றியது. மேலும் அவர்கள் என்ன எழுதினார்கள்/ எந்த விமர்சனத்தை முன்வைத்தார்கள் என்பதை அறியாது ஏதோ இடைநடுவில் ஆதியும் அந்தமும் தெரியாது யேசுராசாவின் பதிவுகளை மட்டும் வாசிப்பதில் சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய விடயங்களுக்கு எதிர்வினையாற்றல் அவசியமென்கின்றபோதும் இத்தொகுப்பில் இதன் தேவை இல்லைபோலவே தோன்றியது. அதுபோலவே இதில் சேர்க்கப்பட்ட 15வது கட்டுரையும் எனலாம்.

இவை எல்லாவற்றிற்கும் அப்பால் அ.யேசுராசா அன்றைய காலத்திலிருந்து இன்றுவரை புதிது புதிதாய் அறிய விழைகின்றவராய், அவற்றைப் பகிரவிரும்புகின்றவராய் இருப்பதே என்னைப் பொறுத்தவரை கவர்கிறது. கட்டுரையிற்கான அவரின் கச்சிதமான மொழி நம்மை அலுப்பின்றி வாசிக்க வைக்கின்றது. பத்தி/கட்டுரைகளில் எழுதுவதில் ஆர்வமிருக்கும் என்னைப் போன்றவர்கள் அ.யேசுராசாவிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அவரின் அனுபவங்களினூடாக பயணிக்கவும் நிறைய உள்ளன. திரைப்படங்கள் பற்றிய ஒருகட்டுரையில் பிரசன்ன விதானகேயின் 'With you Without you' பிடித்தது பற்றியும், அஷோக ஹந்தகமவின் 'இனி-அவனில் இருக்கும் சிக்கலால் விலகிப்போனது பற்றியும் எழுதிய பார்வை எனக்கும் உவப்பானது.

அ.யேசுராசா என்ற ஆளுமை மீது நமக்கு வேறுபட்ட பார்வைகள் இருக்கலாம். ஆனால் அவர் நம்மோடு பகிர்வதற்கும் இன்னும் நிறைய விடயங்கள் இருக்கிறதெனவே நம்புகின்றேன். எதிலும் கறாரான பார்வையுடைய, எழுதும் மொழியின் கச்சிதம் அறிந்த, எதன் பொருட்டும் சமரசம் செய்யாத ஒருவராக அ.யேசுராசாவை அவரின் எழுத்தினூடும், அவரை அறிந்தவர்களினூடாகவும் அறிந்து வைத்திருக்கின்றேன். எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கியிருந்த அவர் 'ஜீவநதி'யில் எழுதத்தொடங்கியதிலிருந்து மீள வந்திருப்பதாய் இத்தொகுப்பின் முன்னுரையில் கூறுகின்றார். அவர் இன்னும் நிறைய எழுதவேண்டும். அவரின் எழுத்துக்களை இரசித்தும் முரண்பட்டும் செல்ல, என்னைப் போன்ற நிறையப் பேர் அவற்றை வாசிக்க ஆர்வத்துடன் இருப்பார்களெனவே நம்புகின்றேன்.

(நன்றி: 'தீபம்')