'மரங்களை நட்டவன்' என்பது ழான் ழியோனா எழுதிய ஒரு புனைவின் தமிழாக்கம். அல்பஸ் மலையடிவாரத்தில் தனித்து வாழும் ஒரு மனிதன் எப்படி தசாப்தகாலங்களாய் மரங்களை நட்டு ஒரு பெருங்காட்டை உருவாக்குகின்றான் என்பதே ழானின் கதை. இந்தப் புனைவை, கட்டுரை ஒன்று எழுதித்தரச்சொல்லிய ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கே ழான் அனுப்புகின்றார். முதலில் வியந்து அந்தக் அதைப் பிரசுரக்க ஏற்றுக்கொள்ளும் சஞ்சிகை, பிறகு அப்படியொரு மனிதர் அல்பஸ் மலையடிவாரத்தில் வாழ்ந்ததில்லையென நிராகரிக்கின்றது. ழானோ 'கற்பனைப் பாத்திரங்களைப் படைப்பது எழுத்தாளனின் சுதந்திரம், அவனிடம், "நீ சந்தித்தவர்களில் மிகவும் வியக்கத்தக்கவர் யார்?" என வினாவினால் அவன் நிச்சயம் தன் கற்பனையில் சந்தித்த ஒருவரைப் பற்றியே பேசவேண்டியிருக்கும்' என்கின்றார்.
ஒரு காட்டை உருவாக்கியவன் இதில் புனைவாக இருந்தாலும், நாமறிய எத்தனையோ மனிதர்கள் மரங்களை நட்டு காட்டை உருவாக்கியதை அறிவோம். நிஜத்தில் வாழ்ந்த மனிதர்கள் பற்றிய விபரங்களை ழானின் கதையின் பின்பாக இந்த நூலில் இரா.கிருஷ்ணமூர்த்தியால் தரப்பட்டிருக்கின்றது. அண்மையில் கூட இந்தியாவில் வடக்கிலிருக்கும் ஒரு தீவில் ஒரு மனிதர் (Jadav Payeng) எப்படி பெருங்காட்டை உருவாக்கினார் என்பதை வாசித்து இங்கே பகிர்ந்திருக்கின்றேன். சென்ற வாரம் கூட, இந்தியாவில் ஒரு கிராமத்தில் பெண்பிள்ளைகள் பிறந்தால் நூறு மரங்களை நடுவதும் அதைக் கவனமாய்ப் பராமரிப்பதுமான வழக்கம் இருக்கிறதையும் கூட வாசித்திருக்கின்றேன். ழானின் இந்த நூலை, ஒரு புனைவென்றே அறியமுடியாது, வருடங்கள் குறிப்பிடப்பட்டும், மரங்களை நடும் மனிதர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ஊகிக்க முடியாவண்ணம் எழுதிச் செல்கின்றார்.
பிரேசில் போன்ற வளரும் நாடுகளின் மிகப்பெரும் சொத்தான காடுகளை எப்படி வளர்ச்சியடைந்த நாடுகள் உலகவங்கிகள் மூலம் அபிவிருத்தி என்ற பெயரில் கடன்களை வழங்கி, காடுகளையும் இன்னபிற வளங்களை அழிக்கவும் சுவீகரிக்கவும் செய்கின்றது என்பது மிக எளிமையாக இந்த நூலில் விபரிக்கப்படுகின்றது. காடுகளை அழிப்பதால் வரும் 'இலாபத்தை' விட காடுகளை அப்படியே பராமரிப்பதால் வரும் 'இலாபம்' எத்தனையோ வீதம் அதிகம் என்றபோதும், பெருநிறுவனங்கள் எப்படி குறுகிய காலத்தில் மிகப்பெரும் செல்வத்தைப் பெறுவதென்ற போட்டியில் மழைக்காடுகளை அழித்துவருகின்றன என்பதை இதை வாசிக்கும்போது விரிவாக அறியமுடியும்.
காடுகளை அழித்து, மீள்காடு செய்தல் என்பது ஒருவகையான சுத்துமாத்து என்பதையும் மேலும் பெருங்காடுகளை அழித்துவிட்டு இடையிடையே சிறுகாடுகளை அரசாங்கங்கள் பாதுகாப்பான வலயங்களாய் பராமரிப்பதால் அவ்வளவு பெரிய பலன்கள் கிடைக்கப்போவதில்லை என்பதையும் இந்நூல் சுட்டுகிறது. எவ்வாறு காடுகளுக்கிடையில் இருக்கும் உயிரிகளின் நகர்வுகளும், நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன என்பதையும் இந்நூல் விவரிக்கின்றது.
சனத்தொகை பெருகும்போது, எந்தவகையில் காடுகளைத் தக்கவைப்பது என்ற சிக்கலான பக்கத்தை இந்நூல் தொட்டுவிடவில்லை என்பது ஒரு சிறுகுறையாகவே இருக்கிறது. மனிதர்கள் தமது ஆசைகளை எளிதாக்கிக்கொள்ளும்போதும், இன்னுமின்னும் இலாபம் வேண்டும் என்று பெருநிறுவனங்கள் தங்கள் அசுரப்பசியை குறைக்கும்போதும், நாம் இயற்கையை அதிகம் சுரண்டாமல் இருக்க முடியும் என்பது ஒரு எளியவழி.
இவ்விரு நூற்களும் சிறியதாக இருந்தாலும், வாசிப்பவர்க்கு மரங்களின் மீது காதலை வரச்செய்யவும், மரமொன்று தறிக்கப்படும்போது சற்றுக் கவலைப்படவும் செய்கின்ற மனதை தரவும்கூடும்.
(Feb 08, 2016)
0 comments:
Post a Comment