எழுதித் தீராக் கதைகள்
In வாசிப்புWednesday, July 13, 2016
செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித் தீராப்பக்கங்கள்' கனடாவில் தாய்வீடு இதழில் தொடராக வந்திருந்தபோது பெரும்பாலும் வாசித்திருந்தேன். என்கின்றபோதும் நூலாகத் தொகுக்கப்பட்டபின், அவற்றை ஒன்றாக சேர்த்து வாசிப்பதென்பது வித்தியானமான ஓர் அனுபவம். பிரான்ஸிற்குச் சென்ற ஈழத்தமிழரின் முதற் தலைமுறை சந்தித்த அனுபவங்கள் இஃதென ஒருவகையில் எடுத்துக்கொள்ளலாம். 80களிலிருந்து 90வரையான காலப்பகுதியில் அநேக கதைகள் சொல்லப்படுகின்றன.
காலனித்துவத்தின் ஆதிக்கத்தால், ஈழத்தில் ஆங்கிலத்தை பலரால், ஏதோ ஒருவகையில் கற்கவோ வாசிக்கவோ முடிந்திருக்கின்றது. ஆனால் ஆங்கிலம் பேசாத ஜேர்மனி,பிரான்ஸ், சுவிஸிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நிலை வேறுவகையானது. ஆகவேதான் முன்பொருமுறை (2009ல்) கனடாவில் நிகழ்ந்த பொ.கருணாகரமூர்த்தியின் நூல் வெளியீட்டுவிழாவில், புலம்பெயர்வைப் பொதுவாகப் பார்ப்பதில் ஆபத்துண்டு, அதிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன, அவற்றை நுட்பமாக அவதானிக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தேன்.கனடா போன்ற நாடுகளில் 'நாசூக்காய்' உள்ளொளிந்திருக்கும் இனத்துவேஷம் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் மிக வெளிப்படையாகக் காட்டப்படும். ஆனால் அதற்கு அப்பாலும், பல்வேறு இனங்களில் புலம்பெயர்வை முன்வைத்துப் பார்க்கையில், ஈழத்தமிழர்கள் குறுகியகாலங்களில் புலம்பெயர்ந்ததேசங்களில் -அது நல்லதோ/கெட்டதோ- அடைந்த வளர்ச்சி ஒருவகையில் பிரமிப்பானது.
கனடாவில் கிழக்குப் பகுதியான நோவா ஸ்கோஷியாவிற்கு (ஐரோப்பாவை நெருங்கி நிற்கும் நிலப்பரப்பு) சமீபத்தில் போனபோது, Canadian Museum of Immigration என்கின்ற குடிவரவாளர்க்கான மியூசியத்திற்குப் போயிருந்தேன். 'Pier 21' என முன்னொருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்த இடத்திலேயே வைத்தே கப்பலிலிருந்து பிறநாடுகளிலிருந்து வந்த குடிவரவாளர்கள் வரவேற்கப்பட்டார்கள். உலகப்போர்க்காலங்களில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கனடாவிற்கு வந்திறங்கிய குடிவரவாளர்களையும், அவர்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்களையும் இங்கே ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். இவ்வாறு குடிவரவாளர்களை ஏற்றுக்கொண்ட கனடாவிற்கு இன்னொரு முகமும் உண்டு. சீக்கிய மக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஏற்றிக்கொண்டு வந்த கப்பலைத் திருப்பியனுப்பியிருக்கின்றனர். திரும்பிப்போன குடிவரவாளர்களில் (கொமகட்டா மரு) ஒரு பகுதியினரை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் வைத்துச் சுட்டுக்கொன்றது. மிகுதிப்பேரை சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்தது.அண்மையில்தான் தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ரூடோ அவ்வாறு திருப்பி அனுப்பியதற்காய் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டிருந்தார்.
இவ்வாறு ஆவணப்படுத்திய கப்பல்களையும், இன்னபிறவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தபோது, ஈழத்தில் இறுதிப்போர் முடிந்தபின் இரண்டு கப்பல்களில் தப்பிவந்த ஈழத்தமிழர்களை கனடிய அரசு நடத்திய விதம் நினைவிற்கு வந்தது. அன்றைய காலங்களில் கனடாவில் எல்லாத்திசைகளிலிருந்தும் துவேஷமான குரல்கள் இந்த 'முறையற்ற அகதிகள்' திரும்பி அனுப்பப்பட வேண்டுமென்றே ஓங்கி ஒலித்திருந்தன. அப்படி வந்தவர்களை சிறைக்கைதிகளுக்கான செம்மஞ்சள்நிற ஆடைகள் அணிவித்து கையிலும் காலிலும் சங்கிலி மாட்டிச் சென்ற புகைப்படங்களை அவ்வளவு எளிதில் மறக்கவும் முடியாது.
இப்படி பூர்வீகமக்கள் வாழ்ந்த நிலத்திற்கு முன்னொருகாலத்தில் 'பேராசை'யிலும், பின்னர் பெருந்தொகையில் உலகப்போரின் நிமித்தமும் கப்பல்களில் வந்த புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த நண்பரிடம், ஈழ அகதிகள் கப்பலில் வந்தபோது கத்திப் பெருங்குரலெடுத்தவர்களை இந்த மியூசியத்திற்கு அழைத்துவந்து உங்களின் மூதாதையரும் எம்மைப்போலவே வந்தவர்கள் என தலையிலடித்து ஞாபகப்படுத்தவேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
பிரான்சில் முதன்முதலாக பலவற்றைக் கற்றுக்கொள்கின்ற செல்வத்தின் அனுபவங்களுக்கிடையில் தெறிக்கும் எள்ளலே இத்தொகுப்பின் ஒருவகையான தனித்துவம் என்பேன். எல்லோருக்கும் -அது முதல் தலைமுறையாக இருந்தாலென்ன, பிறகு வந்த தலைமுறைகளான என்னைப்போன்றவர்களாய் இருந்தாலென்ன- தனிப்பட்ட, வெவ்வேறு அனுபவங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எழுத்தில் முன்வைத்து அதை வாசிக்கும்போது, நமக்குள் கடந்தகாலம் ஒரு நதி போலப் பெருக்கெடுத்துப் பாயச் செய்கின்றது. அந்த நதி கடலில் கலக்கும்முன் காணும் அனுபவங்களே முக்கியமானது போல, செல்வமும் தனிப்பட்ட மனிதர்களுக்குள்ளால் அன்றைய காலங்களைப் பதிவு செய்கின்றார்.
இந்நூலில் பதிவுசெய்யப்படுகின்ற பிரான்சுப் பெண்களைக் கண்டு சிலிர்த்தல், நிர்வாண விடுதிக்குச் செல்லல், வயது வந்தவர்க்கான படங்களைப் பார்த்தல், அறைகளிலிருந்து விடியவிடிய குடியும்/பேச்சுமாய்க் கழித்தல் என்பவற்றுக்கு அப்பால் என்னைக் கவர்ந்தவை, வேறு விடயங்களாய் இருந்தன. முக்கியமாய் அன்றைய போர்க்காலங்களில் எப்படி ஈழத்திலிருந்து செய்திகள் வருகின்றன என்பது ஓர் ஆவணமாய் எழுதித்தீராப் பக்கங்களில் இருக்கின்றன.
வாரங்களோ மாதங்களோ எடுத்துவரும் கடிதங்களிலேயே அனைத்து விடயங்களும் இருக்கின்றன. ஓரிடத்தில் இயக்கத்திற்குப் போன தம்பி இறந்தசெய்தியை மூன்றுவாரங்களின் பின் கண்டுகொள்ளும் ஒரு அண்ணனும் தம்பியும் சுவரில் தலையை இடிக்க என்ன நடந்ததென்று அறியாது ரூமில் இருந்த பிறர் திகைக்கின்றனர். இன்னொரு கதையில், தன் தாய் ஷெல்லடிபட்டிறந்ததை சில வாரங்களின் பின் அறியும் ஒருவன், பஸ்ஸில் விம்மிக்கொண்டு போவதைக் கதை சொல்லி காண்கின்றார். யாரோடும் தன் துயரைப் பகிரமுடியாத் துயரில் பஸ்சில் அலைந்துகொண்டிருக்கும் அவனை அரவணைத்து, ஒரு தேவாலயத்திற்குப்போய் காலமான தாயின் நினைவாக மெழுகுவர்த்தியை இருவருமாய்ச் சேர்ந்து கொளுத்துகின்றனர். நிறைய மனிதர்கள் அன்றைய காலத்தில் அகதி மனு நிராகரிக்கப்பட்டோ, புலம்பெயர் தேசத்தில் இருக்கமுடியாத அவதியிலோ ஈழத்திற்குத் திரும்பியும் போகின்றனர்.
இதையெல்லாவற்றையும் விட, 1983 ஆடிக்கலவரத்தின்போது பாரிஸ் நிகழ்ந்தவற்றை செல்வம் பதிவு செய்தவற்றையே முக்கியம் என்பேன். கொழும்பில் சிறைக்குள் தொடங்கிய படுகொலை நகரெங்கும் சூழ்ந்துகொள்ளும்போது, ஈழத்தமிழர்கள் பிரான்சிலிருக்கும் இலங்கைத் தூதராலாயகத்தின் முன் கூடுகின்றனர். இவ்வளவு தமிழர்கள் பிரான்ஸில் இருக்கின்றார்களா என கதைசொல்லி வியக்கின்றார். பிறருக்கு ஈழத்தில் நடக்கும் நிலையைச் சொல்ல மொழியோ/பதாதைகளோ/சுவரொட்டிகளோ இல்லாத காலம் அது.
அந்தக் கொந்தளிப்பின் நீட்சியில் பிரான்சில் தமிழர்கள் சிங்களவர்களைத் தாக்குகின்றனர். சிங்களவர்களும் திரும்பித் தாக்குகின்றனர். அன்றைய காலத்தில் மூன்று தமிழர்களும், இரண்டு சிங்களவர்களும் இந்தத்தாக்குதலில் நீட்சியில் கொல்லப்பட்டுமிருக்கின்றார்கள். எதையாவது செய்யவேண்டுமென துடிப்பில் ஜேர்மனியில் இருந்துகூட பிரான்சிற்கு சிலர் வருகின்றனர். சிங்களவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற கொதிப்பில் அவ்வாறு ஜேர்மனியில் இருந்து வந்த ஒருவன், இவர்கள் சமையலுக்கென வைத்திருந்த ஒரேயொரு கத்தியையும் எடுத்துக்கொண்டு இரவில் வெளியே போகின்றான். 'இலக்கியமும் அரசியலும் பேசிக்கொண்டிருந்த நீங்கள் வீட்டுக்குள் பதுங்கியிருக்க அதில் அக்கறையெதுவும் இல்லாத நாங்கள்தான் வெளியில் அடிபடுகிறோம்' என ஒருவன் கதைசொல்லிக்குச் சொல்கின்றான். அது எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
இவ்வாறு ஜேர்மனியில் இருந்து சிங்களவரோடு அடிபடுவதற்காய் பிரான்ஸிற்கு வந்தவன் சில மாதங்களில் இந்தியாவிற்குப் போய் ஒரு இயக்கத்தில் சேர்கின்றான். அடுத்தவருடத்தில் அந்த இயக்கத்தின் உட்கொலையில் அவன் பலியும் கொடுக்கப்படுகின்றான். நமது போராட்டந்தான் எவ்வளவு சிக்கலானது. இவ்வாறு மக்களுக்கு எதையாவது செய்யப் புறப்பட்ட எத்தனை ஆன்மாக்கள் இடைநடுவில் ஏன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன என நினைக்கையில் வெப்பியாரமே வருகின்றது.
அதேபோன்று ஒரு சிங்களவனைப் பிடித்துவைத்திருக்கின்றோம், என்ன செய்யலாமென ஒருவன் கேட்க, ரூமிலிருந்த ஒருவர் இந்தச் செய்கையினால், கோபத்தில் ஷேர்ட்டைக் கிழித்துவிட்டு, 'நான் தமிழனோ கொம்யூனிஸ்டோ இப்போதில்லை, முதலில் நானொரு மனுஷனடா' இப்படியொரு அக்கிரமத்தைச் செய்வதற்குப் பதிலாய் என்னைக் கத்தியால் குத்துங்கடா என தெருவில் வெறிபிடித்தபடி ஓடுகின்றார்.
இந்த நெகிழ்ச்சியான மனிதர்களை/இவ்வாறான சம்பவங்களை முப்பது ஆண்டுகளின் பின்னால் ஞாபகப்படுத்த நமக்கு ஆகக்குறைந்தது இந்த எழுத்துக்களாவது மிஞ்சியிருக்கிறதே என ஆறுதல் கொள்ளவேண்டியதுதான்.
('எழுதித் தீராப் பக்கங்கள்' - செல்வம் அருளானந்தம், 'தமிழினி' வெளியீடு)
(நன்றி: 'அம்ருதா' ஆடி இதழ்)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment