எழுத்தாளராகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்கும் ட்றம்போ ஒருகாலத்தில் ஹொலிவூட்டில் அதிகம் சம்பளம் பெறும் ஒரு திரைக்கதையாசிரியராகவும் இருந்திருக்கின்றார். 1940களில் உலகப்போர் மற்றும் சோவியத்து எழுச்சியின் நிமித்தம் அமெரிக்க அரசு பலரை ஹொலிவூட்டுக்குள்ளும், வெளியிலும் black listல் பட்டியலிடும்போது ட்றம்போவின் பெயரும் சேர்க்கப்படுகின்றது. ஹொலிவூட்டுக்குள்ளும் ட்றம்போ உட்பட பலர் 'இடதுசாரி நச்சுவிதை'களைக் கலக்கின்றார்கள் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியில் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தங்களையும், பிறரையும் கம்யூனிஸ்டாக காட்டிக்கொடுக்காது ட்றம்போம் நண்பர்களும் இருந்தாலும் அதன் நிமித்தம் வழக்கில் தோற்கின்றனர். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடும்போது பெருஞ்செலவும், தோல்வியும் அங்கும் ஏற்படுகின்றது. இதனால் ட்றம்போ கிட்டத்தட்ட ஒருவருடம் சிறைக்குள் இருக்கவேண்டிவருகின்றது.
'தண்டனைக்காலம்' முடிந்து வந்தபின் முன்னதைவிட இன்னும் தீவிரமாக திரைக்கதைகளை எழுதத் தொடங்குகின்றார். எனினும் கறுப்புபட்டியலில் அவர் பெயர் இருப்பதால் அவை 'அநாமதேயப் பெயர்களில் எழுதப்படுகின்றன. மிகவும் பிரபல்யம் பெற்ற படமான Roman Holiday யின் திரைக்கதை ட்றம்போவினால் எழுதப்பட்டாலும், ஒஸ்கார் விருது அதற்காய் கிடைக்கும்போது வேறொருவரே அந்தத் திரைக்கதையிற்காய் ட்றம்போவினால் முன்னிறுத்தப்படுகின்றார். இடையில் வெளிப்படையாக வேலை செய்யமுடியாததால், பிள்ளைகளை வளர்ப்பதிலும் சிக்கல்படுகின்றார். ஹொலிவூட் உலகைச் சேர்ந்த பலர் ட்றம்போ எந்தவகையிலும் நுழைந்துவிடக்கூடாது என்று (முக்கியமாய் ரொனால்ட் றீகன் போன்ற வலதுசாரிகள்) கவனமாய் இருக்கின்றார்கள்.
இவற்றையெல்லாம் மீறி மீண்டும் நாம் எழுவோமென ட்றம்போ நம்பிக்கைகொண்டாலும் அவரோடு தடை செய்யப்பட்ட நண்பர்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கவில்லை. 'நீ மீண்டும் ஹொலிவூட்டிற்கும் நுழைய விரும்புகின்றாய், ஆனால் நானோ மாற்றத்தை வேறுவகையில் கொண்டுவர விரும்புகின்றேன்' என நண்பரொருவர் ட்றம்போவோடு முரண்படுகின்றார். ஹொலிவூட்டிற்குள் நுழைவது முதலடி, அதிலிருந்து மாற்றங்களுக்காய் அங்கிருந்து போராடுவோம் என ட்றம்போ அந்த நண்பருடன் வாதிடுகின்றார்.
தொடர்ச்சியான உழைப்பில் கிட்டத்தட்ட 15 வருடங்களின் பின் முதன்முதலாக அநாமதேயப் பெயரின்றி ஸ்ரான்லி குப்ரிக் இயக்கிய Spartacusல் ட்றம்போவின் பெயர் திரையில் காண்பிக்கப்படுகின்றது. மேலும் Exodus கதையை திரைக்கதையாக்கிக் கொடுக்கும் ட்றம்போவை, அதன் நெறியாளர் ஊடகத்தில் வெளிப்படையாக ட்றம்போ தன்படத்தில் பணிபுரிகிறார் எனவும் அறிவிக்கின்றார்.
1960களில் மெல்ல மெல்லமாக கறுப்புப் பட்டியலில் இருந்து வெளியில் வருகின்றார் ட்றம்போ. அவர் அவ்வாறு பொதுவெளிக்கு வருகின்ற சமயத்தில் கொடுக்கும் ஒரு நேர்காணலில் ஒஸ்கார் விருது கிடைத்தால் என்ன செய்வீர்களென்று வினாவப்படுகின்றார்; 'எனது மகள் 3 வயதில் இருக்கும்போது என்னை கறுப்புப் பட்டியலில் சேர்ந்துவிட்டார்கள். இப்போது அவளுக்கு 13 வயது. அவளையொத்த எல்லாக் குழந்தைகளிடம் அப்பா என்ன செய்கின்றார் எனக் கேட்கும்போது, சொல்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கும். ஆனால் என் மகளிற்கு அப்படியான ஒரு நிலை இல்லை. நான் எதற்காய்க் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றேன் எனபதைக் கூட அவள் சரியாக அறியாள். அப்படி ஒரு பரிசு கிடைக்கும்போது அவளுக்கே அதைச் சமர்ப்பணம் செய்வேன்' என்கின்றார்.
இறுதியில் ஹொலிவூட்டாலும் ட்றம்போ அங்கீகரிக்கப்படுகின்றார். ஹொலிவூட் எழுத்தாளர்கள் கூடி ஒரு நிகழ்வில் மதிப்பளிக்கப்படும்போது, 'இந்தக் கறுப்புப்பட்டியலால் என்னைப் போன்றவர்கள் எத்தனையோ இழந்துவிட்டோம். சிலர் தம் சொத்தை, வேறு சிலர் தமது துணைகளை, இன்னுஞ்சிலர் தற்கொலையும் செய்துமிருக்கின்றனர். அந்தளவிற்கு இது பயங்கரமானது. ஆனால் இப்போது நான் எவரையும் குற்றஞ்சாட்டப்போவதில்லை. நமக்கு இப்போது குணமடைதலே (healing) தேவையாக இருக்கின்றது. எனெனில் இங்கே நாயகர்களோ வில்லன்களோ என்று எவருமில்லை. நாமெல்லோரும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்கள் (victims)' என அழகாக உரையாற்றுகின்றார்.
ஓர் அசலான கம்யூனிஸ்ட், தனது நம்பிக்கைகளுக்காய் எதையும் இழக்கத் தயராக இருப்பான் என்பதோடு, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கூட பொது அநீதிகளாய்க் கருதி, எவரும் தன்பொருட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்பதில் கவனமாயிருப்பான் என்பதற்கு ட்றம்போ போன்றோர் உதாரணம் மட்டுமில்லை இன்றைய உலகில் விதிவிலக்கானவர்களும் கூட.
(நன்றி: 'தீபம்')
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment