(கலையும், இலக்கியமும், இன்னபிறவும்)
பயணக்குறிப்புகள் - 15
இலங்கை, இந்தியாவிற்கு அவ்வப்போது போகும்போதெல்லாம் பிரான்சில் தரித்து நின்று போகும் சந்தர்ப்பங்கள் வாய்த்தபோதும், ஒருபோதும் விமானநிலையத்தை விட்டிறங்கிப் போனதில்லை. இம்முறை இலங்கையிற்கான பயணத்தைத் திட்டமிட்டபோது, பிரான்ஸையும் சிலநாட்கள் பார்ப்பதென தீர்மானித்திருந்தேன்.
தங்குவதற்கான இடத்தை airbnbயினூடு பதிவுசெய்து விட்டு பாரிஸிலிருந்த நண்பர்களைச் சிலரைத் தொடர்புகொண்டு வருகையை அறிவித்தேன். நான் தங்கி நின்ற வீடும், ஷோபாசக்தி மற்றும் தர்மினியின் வீடும் ஐந்து நிமிட நடைத்தொலைவில் இருந்தது எதிர்பார்க்காத ஒன்று. காலையிலே அவர்களின் வீட்டில் இருந்து கதைத்துக்கொண்டு தர்மினி செய்துதந்த பிரியாணி மற்றும்கோழிக்கறியையும், ஷோபா தன் கைவரிசையைக் காட்டவேண்டுமென சமைத்த நண்டுக்கறியையும் சுவைத்துச் சாப்பிட்டுவிட்டு, அப்போது பாரிஸ் நடைபெற்றுக்கொண்டிருந்த உலக நாடக தினத்திற்கு நாங்கள் எல்லோரும் புறப்பட்டுச் சென்றோம்.
பல்வேறு நாடுகளிலிருந்து நாடகக்குழுக்கள் வந்து அதை ஓரிடத்தில் ஒருங்கிணைக்கின்றார்கள் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த அரங்கு நாடகம் செய்வதற்கு ஏற்ற அரங்காக மாற்றப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, மேடையேற்றிய நாடகங்கள் பல வெறுப்பேற்றிக்கொண்டிருந்தன. பார்வையாளர்களும் வருவதும் போவதுமாய், இடையில் கதைத்தும் கொண்டிருந்தனர். இது பாரிஸில் என்றில்லை, ரொறொண்டோ போன்ற இடங்களிலும் நாடகங்கள் நிகழும்போது நடப்பவைதான்.
இன்றும் ஒரு சினிமாவை தியேட்டருக்குப் போய்ப் பார்க்கும்போது, உரிய நேரத்திற்குப் போகவும், இடைநடுவில் அமைதியாக இருந்தும் பார்க்கும் எவராலும், ஏன் நாடகங்களை அதே இயல்புடன் இரசிக்கமுடிவதில்லை என்பது பற்றி நாம் யோசிக்கவேண்டியிருக்கின்றது. கனடாவில் இருந்து வந்தவர்கள் செய்த நாடகமே கவனிக்கத்தக்கதாய் இருந்தது. தமிழகத்திலிருந்து வந்த நாசர் தன் உரையில், மேடையேற்றப்பட்ட நாடகங்களை மெருகேற்ற இன்னும் இடமிருக்கின்றதென்று நாசூக்காய்ச் சொன்னார். உரியவர்கள் அதைக் காதுகொடுத்து கேட்டிருப்பார்களோ தெரியவில்லை.
அடுத்த நாள் லூவர் (Louver) மியூசியம் போவதெனத் தீர்மானித்திருந்தேன். லூவருக்குப் போவதற்கு முதலில் எனக்கு அவ்வளவு பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. முக்கிய காரணம் அதன் விசாலமான பரப்பு. அவ்வளவு படைப்புக்களை ஆறுதலாகப் பார்ப்பதென்பது ஒருநாளில் இயலாத காரியம். நான் பார்க்க விரும்பியது வான்கோவின் படைப்புக்கள் இருந்த Musee d'Orsay. அத்தோடு அது லூவரோடு ஒப்பிடும்போது சிறிதாக இருப்பதால் ஆறுதலாக ஓவியங்களைப் பார்க்கவும் முடியுமென நினைத்திருந்தேன். எனினும் பாரிஸுக்குப் போய் ஈபிள் டவரையும், லூவர் மியூசியத்தையும் பார்க்கவிட்டால் அதுவென்ன பாரிஸ் பயணமென்று யாரும் கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தால் லூவருக்குள் நுழைந்தேன்.
பல்வேறு நுழைவாயில்கள் இருந்த லூவருக்குள் (முன்னாள் அரசதானி) எந்தத் திசையால் போவதென்பதில் தொடக்கத்திலேயே சிக்கல் வந்துவிட்டது. மேலும் உள்ளே நுழைந்தபின்தான், ரிக்கெட்டோடு, audio guideயும் சேர்த்து எடுக்காததன் அபத்தம் தெரிந்தது. உள்ளே படைப்புக்களின் விபரிப்புக்கள் பிரெஞ்சில் மட்டுமில்லாது ஆங்கிலத்திலும் இருக்குமென்று நம்பியிருந்தேன். ஆனால் அங்கே ஆங்கிலம் தவிரந்த பிற ஜரோப்பிய மொழிகளிலேயே இருந்ததால், ஒவ்வொரு ஆக்கத்தினதும் விபரங்களை அறிவது மிகக் கஷ்டமாக இருந்தது.
நான் சென்ற நுழைவாயிலில் நிறையச் சிற்பங்கள் இருந்தன. அவை அன்றைய கால கிரேக்கப் படைப்புக்கள். எவ்வித கிளர்ச்சியையோ, தேவையற்ற வெட்கமோ இல்லாது எல்லோரும் ஆறுதலாய் நிர்வாண உருவங்களை இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்படியே இந்தச் சிற்பங்களைப் பார்த்தபடி, இஸ்லாமிய கலைப் பகுதியிற்குள் நுழைந்தேன். அவை வித்தியாசமான கலைப்படைப்புக்கள். ஒவ்வொரு சிறிய விடயத்திற்கும் நிறைய மினக்கெட்டிருந்தார்கள். அந்தப் பகுதியிற்குள் நுழைந்தபோது எனக்கு ஒரான் பாமுக் 'எனது பெயர் சிவப்பில்' விபரிக்கும் நுண்ணோவியங்களே நினைவின் முன் வந்து நின்றன.
இப்படியே சிற்பங்களையும், அவை உயிர்பெற்றுவிட்டனவோ என எண்ணவைக்கும் அணங்குகளையும் பார்த்துக்கொண்டிருந்தால், மியூசியத்தை மூடிவிடுவார்கள் என்ற அச்சத்தால் சிற்பங்களைத் தவிர்த்து ஓவியங்களைப் பார்க்கப் போயிருந்தேன். முதலில் பிரெஞ்சுக்காரர்களின் இம்பிரஷனிச ஓவியங்களைப் பார்த்துவிட்டு, பிறகு இத்தாலிய ஓவியர்களைப் பாக்கத் தொடங்கினேன். எத்தனை வகையான ஓவியங்கள். அளவிலும் அவ்வளவு பெரியவை. ஒருகட்டத்தில் இனிப்புக்களைச் சாப்பிடும்போது திகட்டுமே, அதுபோல மனதிற்குள் நுழைய ஓவியங்கள் மறுத்தன. லியானாடோ டாவின்சியின் 'மோனலிசா’விற்கு பெருமளவில் சனங்கள் அடிபட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அதைவிட வேறொரு புறத்தில் இருந்த Raphel லினதோ, Giuseppe Arcimboldoலினதோ ஓவியங்களை போகின்றபோக்கில் பலர் கடந்துகொண்டிருந்தனர். Arcimboldoவின், மரக்கறி/பழங்களைக் கொண்டு வரைந்த பருவ கால ஓவியங்கள் (four seasons) மிகப் பிரசித்தம் பெற்றவை.
தொடர்ந்து மாடவிதானங்களில் வரையப்பட்ட ஓவியங்களை ஆறுதலாய் யன்னல்கரைகளில் இருந்து இரசித்தேன். இடையிடையே எகிப்து, சீனா, இத்தாலி, கிரேக்கமென அவர்களின் கலாசாரம் சார்ந்த படைப்புக்களையும் இந்த மாடவிதானங்களின் கீழே காட்சிப்படுத்தியிருந்தது நன்றாக இருந்தது. ஒரு அரசரின் சேகரிப்பிலிருந்த முழுப்பகுதியையும் அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். பொன் நிறத்தில் அந்த நீண்ட ஹோல் மினுங்கிக்கொண்டிருந்தது.
Dan Brown னின் 'Angels and Demons' நாவலையோ அல்லது திரைப்படத்தையோ பார்த்தவருக்கு லூவர் மறக்கமுடியாத மனப்பதிவாக இருக்கும். ஒருபக்கத்தில் செயின் நதி ஓடிக்கொண்டிருந்தது. லூவரின் கண்ணாடி பிரமிட்டுக்கு முன் நின்று படம் எடுப்பவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். வேலைக்குப் போய்விட்டு சைக்கிள்களிலும், நடந்தும் பலர் போய்க்கொண்டிருந்தனர். ஒரு வாகனத்தில் ஆயுதங்களுடன் பிரான்சு இராணுவம் இரவுக் காவலுக்காய் வந்திறங்க- அது எந்த இராணுவமாய் இருந்தாலும் தன்னியல்பிலே ஒருவித அச்சம் வர- அந்த இடத்தை விட்டு விலகி தூரத்தில் ஒளிர்ந்தபடி இருந்த ஈபிள் டவரைப் பார்த்தபடி ஒரு ஓரத்தில் போய் அமர்ந்தேன்.
நண்பரொருவர் வேலை முடித்து வந்து இணைய, இரண்டு பேரும் ஈபிள் டவரைப் பார்ப்போமென நடக்கத் தொடங்கினோம். கதையின் சுவாரசியத்தில் போகும் திசையைத் தாண்டி வேறெங்கோ நடந்து போய்த் திரும்பி வந்தோம். ஈபிள், அன்றையா இரவில் பிங் வர்ணத்தில் புற்றுநோயிற்கான விழிப்புணர்விற்காய் ஒளிர்ந்துகொண்டிருந்தது. ஏற்கனவே எத்தனையோ முறை புகைப்படங்களிலும், திரைப்படங்களிலும் பார்த்துவிட்டதால், அது ஒரு உயர்ந்த கோபுரம் என்பதற்கப்பால் பெரிய மனவெழுச்சி எதையும் தரவில்லை.
ஆபிரிக்கர்கள்/தென்கிழக்காசியர்கள் சுற்றுலாப் பொருட்களை ஈபிள் டவருக்கு முன் விற்றுக்கொண்டிருந்தனர். எந்த நேரமெனினும் பொலிஸ் வந்தால் பாய்ந்தோடுவதற்கான முன்னேற்பாடுகளோடு அவர்கள் இருந்ததைப் பார்த்தபோது ஷோபாசக்தி 'தீபன்' படத்தில் பொருட்களை விற்றுத்திரியும் காட்சி நினைவிற்கு வந்தது. நானும் நண்பரும் இலக்கியம், நமக்கு இன்று அவசியமாய்த் தேவைப்படும் விமர்சன மரபு எனத் தொடங்கி மலையாளப்படங்கள் வரை, ஈபிள் டவரைப் பார்த்தபடி பாலத்தடியில் இருந்து கதைக்கத் தொடங்கினோம்.
போகும்வழியில் டயானாவின் நினைவிடத்தைப் பார்த்தோம். முன்பு ஒரு பாலத்தில் இந்த காதல் பூட்டுக்களைக் (Love Locks) கட்டிவிட்டு காதலர்கள் போய்விட, ஒருகட்டத்தில் பாலமே எடையின் காரணமாய் சரியும் அபாயம் இருந்தததால் அவற்றை அறுத்தெறிந்தார்கள் என்பதை வாசித்திருந்தேன். டயானா நினைவிடத்திலும் நிறைய காதல் பூட்டுக்கள் இருந்தன. இது எவரும் எங்களைப் பிரித்துவிடக்கூடாதென்கின்ற காதலர்களின் ஒருவகையான பிரார்த்தனை. அருகில்தான் டயானாவின் கார் விபத்தில் சிக்கிய இடம் இருக்கிறதென நண்பர் சொல்லிக்கொண்டு வந்தார்.
மறுநாள், நானும் நண்பர்களுமாய் கொஞ்ச நேரம் பாரிஸைச் சுற்றிப் பார்ப்போமென மெத்ரோவிற்குள் நுழைந்தோம். நாம் இதுவரை செய்த பாவங்களுக்குப் பரிகாரமாய் முதலில் பிகாலிற்குள் (பாரிஸின் முக்கியமான சிவப்புவிளக்குப் பகுதி) போய் இறங்கினோம். எவ்வித வர்ணங்களுமில்லாது சோபையிழந்த பிகாலிற்குள் நடந்தபடி moulin rogueற்கும் ஒரு வணக்கம் வைத்துவிட்டு, நெப்போலியன் தான் ஈட்டிய வெற்றிகளை நினைவுபடுத்தக் கட்டிய Arc de Triomphe ற்குப் போனோம். ஆனால் இது முழுதாக கட்டி முடிந்தது, நெப்போலியன் காலமாகிய பின்னராகும். இந்த இடத்தில் பன்னிரண்டு தெருக்கள் சந்திக்கின்றன. எவ்வித சிக்னல் விளக்குகளும் இல்லாது எல்லா வாகனங்களும் ஓர் ஒழுங்கில் நகர்ந்தபடி இருந்தன. அங்கிருந்து Arc de Triomphe அருகில் போவதென்றால் தெருவால் நடந்துபோகமுடியாது. உள்ளே மெத்ரோவிற்குப் போகும் பாதைபோல இருக்கும் ஒன்றினுள் இறங்கித்தான் போகவேண்டும். அங்கே இராணுவ மரியாதை ஒன்றிற்குத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அதிலிருந்த சிற்பங்களை நிதானமாய்ப் பார்த்துவிட்டு திரும்பவும் லாச்சப்பலுக்கு ரெயினெடுத்துப் போனோம்.
மாலை 7.00 மணியளவில் எங்களது பாரிஸின் சொர்க்க நடை தொடங்கியது. நடப்பதற்கு தயாரா என நண்பரும் கவிஞருமான வாசுதேவன் கேட்க, நான் உற்சாகமாய் ஒரு புதிய அனுபவத்திற்குத் தயாரானேன். ரெயினெடுத்து பாரிசின் பழமை வாய்ந்த இடங்களுக்குள் புகத்தொடங்கினோம். ஒவ்வொரு இடத்தையும் இரசித்து, மிக அழகாக வர்ணித்துக்கொண்டிருந்த வாசுவின் முன் பாரிஸ் இன்னொரு பரிணாமத்தைப் பெறத்தொடங்கியது. பிரெஞ்சுப் புரட்சி என்ற ஒரு அருமையான நூலையும் வாசு எழுதியிருக்கின்றார்.
செயின் நதியை ஊடறுத்த பாலத்தில் நின்றபோது, நான் வூடி அலனின் midnight in paris திரைப்படத்தை நினைவுபடுத்தினேன். இந்த இடத்தில்தான் midnight in paris படத்தில் காதலிக்காய் இறுதிக்காய் காத்திருக்கும் காட்சி எடுக்கப்பட்டதென அவர் சொல்ல ஒரு தற்செயலான நிகழ்வாய் அது ஆகிவிட்டது. நிறையப் பெண்கள் போய்க்கொண்டிருந்தனர் என்றபோதும் மழை பெய்யாததால் - midnight in parisல் வருவதுபோல- நானெனது பாரிஸ் காதலியைக் காணும் அரிய தருணத்தைத் தவறவிட்டுவிட்டேன் போலும்.
பிறகு அப்படியே நடந்து Serbone பல்கலைக்கழகத்தைச் சென்றடைந்தோம். என் பிரிய தெரிதா, ஃபூக்கோ போன்றவர்கள் படித்த/படிப்பித்த இடத்தைக் கண்டவுடன் மனம் அப்படியே பரபரப்பில் பறக்கத் தொடங்கியது. அந்த வளாகத்தின் ஒருபகுதியைச் சுற்றி வந்து சில புகைப்படங்களைப் பல்வேறு கோணங்களில் எடுத்தோம். துயரமென்றவென்றால் அந்தப் படங்களெல்லாம் தற்செயலாய் நண்பரின் கமராவிலிருந்து அழிந்துவிட்டன என்பதுதான். தொடர்ந்து லத்தீன் குவாட்டர் என்னும் கடைகளால் நிரம்பியிருக்கும் பாரிஸின் பிரசித்தம்பெற்ற அழகிய பகுதியையும் நடந்தே கடந்தோம்.
பின்னர் பூக்கோவின் பெண்டுலம் இருக்கும் Panthéon ஐ சென்றடைந்தோம். இந்தப் பெண்டுலம் தான் உம்பர்த்தோ ஈக்கோவின் நாவலுக்கு முக்கிய உந்துதல் என்பதை பலர் அறிவர். அந்தக் கட்டத்தின் மேலே எழுதியிருந்த 'Aux grands hommes la patrie reconnaissante' வார்த்தைகளை மீண்டும் மீண்டும் வாசித்து வாசு புளங்காகிதம் அடைந்துகொண்டிருந்தார் (தமிழாக்கம், 'இந்த உயரிய நாடு உயரிய மனிதர்க்கே' என்ற அர்த்தத்தில் வருமென நினைக்கின்றேன்).
இவ்வாறு இடங்கள் மட்டுமில்லாது வாசுவின் அருமையான விளக்கங்கள், அந்தந்த இடங்களோடு ஒன்றித்து நம்மையும் வரலாற்றின் தடங்களுக்குக் கூட்டிச் செல்ல செல்ல அந்த இரவு மிக இனிமையாக கழிந்துகொண்டிருந்தது. இது போதாதென்று அங்குமிங்குமாய் ஒவ்வொரு புது இடங்களிலும் உள்ளூர் பியர்களை அருந்தியருந்தி நகர்ந்துகொண்டிருந்தோம். அப்படியே நடந்துபோய் 'கிளியோபத்ரா அழகிகள்' அதிகம் உலாவும் தெருக்களினூடாகவும் கூட்டிச்சென்றார். பாரிஸ் வந்துவிட்டு அழகிகளுக்கு வணக்கம் செல்லாவிட்டால் அந்த சாபத்தைத் தாங்கமுடியாதென்று பேசியபடி ஷேகஸ்பியர் புத்தகக் கடைகளை வந்தடைந்திருந்தோம். midnight in parisலும் இந்த இடம் வருகின்றது. அதற்கு அருகிலிருந்த ரெஸ்ரோரண்டில் இருந்து மதுவை அருந்திவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம். காதலின் அழகிய இரவு முடிந்துவிடக்கூடாதென நினைப்பதுபோல இந்த இரவும் முடிந்துவிடக்கூடாதென நினைத்தபடி தொடர்ந்து அலைந்துகொண்டிருந்தோம்.
அடுத்தநாள் காலை நண்பரொருவர் Place de la Concorde கூட்டிச் சென்றார். அழகான fountain களும், சிற்பங்களும் கொண்ட விசாலமான இடம். இங்கேதான் பிரசித்திபெற்ற மிக உயரமான 'கில்லட்டின்' இருக்கின்றது. பிரெஞ்சுப் புரட்சியின்போது இங்கேதான் பதினாறாம் லூயிஸ் மன்னர் தூக்கிலிடப்பட்டவர். ஒருபுறத்தில் செயின் நதி, இன்னொருபுறத்தில் பூந்தோட்டமென ஆறுதலாக உலாத்திப் பார்ப்பதற்குச் சிறந்த ஓரிடம் இதுவாகும்.
பின்னர் மாலை, நம்மவர்களால் 'வெள்ளைச் சேர்ச்' எனப்படும் Sacré-Coeur இடத்தைப் போய்ப்பார்த்தோம். இரவு நேரமாகையால் அதன் படிகட்டுக்களில் ஏறாமல் மேலே செல்லும் tram ல் ஏறிப் போனோம். இந்தத் தேவலாயம் எனக்கு மொன்றியலில் இருக்கும் Saint Joseph தேவலாயத்தை ஞாபகப்படுத்துகிறதென நண்பருக்குச் சொல்லிக்கொண்டு வந்தேன். மொன்றியலில் மேலடிவாரத்தை அடைவதற்கு முழங்காலில் படிக்கட்டுக்களில் ஏறிப் போகும் பலர் இருக்கின்றார்கள். அவ்வாறு ஏறினால் அவர்கள் வைத்த பிரார்த்தனைகள் நிகழும் என்பது ஒரு ஜதீகம். பாரிஸ் தேவாலயத்தில் உள்ளே போய்ப்பார்த்தோம். இந்தத் தேவாலய முன்றலில் நின்று பாரிஸை panoramaவாகப் பார்க்கலாம். இரவென்பதால் வித்தியாசமாக இருந்தாலும், பகலில் பார்க்கும்போது இன்னும் அதன் எல்லைகள் மேலும் விரிந்தபடியிருக்குமென நினைக்கின்றேன்.
இடையில் மாறவேண்டிய தரிப்பிடத்தை மாறி இன்னொருமுறை Moulin Rouge ஐ இரவில் ஒருமுறை தரிசித்து விட்டு லா சப்பலில் இருந்த உணவகத்தில் இரவுணவை முடித்துவிட்டு தங்குமிடத்தை அடைந்தேன். அடுத்தநாள் காலை எனக்கு இலங்கை செல்வதற்கான விமானம் இருந்தது.
இந்தப் பாரிஸ் பயணம் கோமகன், பிரசாத், நெற்கொழுதாசன், தர்மினி, ஷோபா சக்தி, வாசுதேவன் எனப் பலர் நண்பர்களின் உதவியில்லாவிட்டால், ஒரு மறக்கமுடியாத பயணமாக மாறியே இருக்காது. இந்த நண்பர்களோடு மேலும் சந்தித்த பல நண்பர்களோடு உரையாடியதை வைத்துப் பார்க்கும்போது கனடா போன்ற நானிருக்கும் நாட்டைவிட இவர்கள் மிக உற்சாகமாய் ஏதோ ஒருவகையில் கலை இலக்கியங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள் போலத்தோன்றியது. இத்தனைக்கும் நான் சந்தித்த நண்பர்கள் பலரின் வழக்குகள் நிராகரிக்கப்பட்டும், நிரந்தர வதிவிடப் பத்திரங்களோ இல்லாதுதான் பிரான்சில் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் நிறைய வாசித்துக்கொண்டும், உரையாடிக்கொண்டும் இருக்கின்றர்கள். பிரசாத், தர்மினி போன்றவர்கள் 'ஆக்காட்டி' சஞ்சிகையையும், கோகமன் 'நடு' என்கின்ற இணைய சஞ்சிகையையும், சதா, விக்ரம் போன்றவர்கள் குறும்பட/திரைப்பட முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றர்கள். ஷோபா சக்தி, வாசுதேவன், தர்மினி, நெற்கொழுதாசன் போன்றோர் தொடர்ச்சியாக தம் தொகுப்புக்களையும் வெளியிட்டும் கொண்டிருக்கின்றார்கள். இது நான் சந்தித்த நண்பர்களைப் பற்றியது. நான் சந்திக்காத/அறியாத இன்னும் பலர் இவ்வாறு இயங்கிக்கொண்டிருப்பார்கள்.
வாசிப்பின் தீவிரத்தைக் கூட்டிய காலங்களில் அன்று பாரிஸிலிருந்து வந்துகொண்டிருந்த உயிர்நிழல், எக்ஸில், அம்மா போன்ற இதழ்களே இன்னொரு திசையை எனக்குக் காட்டியிருந்தன. இந்த இதழ்களில் அரைவாசி அக்கப்போர்களே நிகழ்ந்தாலும் பல புதிய விடயங்களை அறியக்கூடியதாகவும் இருந்தது. ராஜநாயஹம் எழுதிய சாரு நிவேதிதா பற்றிய கட்டுரையே எனக்கு முதன்முதலில் சாருவை அறிமுகப்படுத்தியது. கவிஞர் திருமாவளவனை மிக நெருக்கமானவராய், என் கவிதைகள் பற்றி எப்போதும் கருத்துக்கள் பரிமாறும் ஒருவராக இந்தச் சஞ்சிகைகளால்தான் சாத்தியமாகின. சாரு குறித்த தேடல் பிறகு மைக்கேல் 'ஜீரோ டிகிரி'யை எனக்கு நேரில் கொண்டுவந்து தரும்படி வாசிப்புப் பைத்தியமாக்கியது. மேலும்‘விஷ்ணுபுரம்’ குறித்த என் பார்வைகளை நேரில் வைப்பதற்காய் ஜெயமோகனைச் சந்திப்பதற்காய், அன்றைய காலத்தில் என் பல்கலைக்கழகத்திலிருந்து பலநூறு மைல்கள் தாண்டி ரொறொண்டோ வர இவையே உந்தியும் தள்ளியுமிருந்தது.
வாசிப்பதென்பது நாமறியாத மனிதர்களை நிலப்பரப்புக்களை அறிமுகப்படுத்துவது போல, பயணங்களும் நமக்குப் பழக்கமில்லா மொழிகளிடையேயும், அந்நிய மனிதர்களிடையேயும் நம்மை உலவச் செய்கின்றன. நம்மிடையே இருந்த அச்சங்களையும், கற்பிதங்களையும் அவை கழற்றியெறியச் செய்கின்றன. ஒவ்வொரு பயணங்களின் முடிவிலும். நாம் பார்த்த இடங்களைவிட, அந்த இடங்களை அடைவதில் பெற்ற அனுபவங்களே முக்கியமாகிவிடுகின்றன. சிலவேளைகளில் இந்த அனுபவங்கள் நமக்கு மறக்கமுடியாத அரிய மனிதர்களையும் அறிமுகப்படுத்தியும் விடுகின்றன.
------------------------------------------------
(நன்றி: 'அம்ருதா' - மாசி)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment