கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஆசி.கந்தராஜாவின் 'கள்ளக் கணக்கு'

Monday, December 31, 2018


சி.கந்தராஜாவின் புதிய தொகுப்பான 'கள்ளக்கணக்கில்'  பதின்மூன்று கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே  வெளியான அவரின் சிறுகதைத் தொகுப்புக்களான 'பாவனை பேசலன்றி' (2000), 'உயரப்பறக்கும் காகங்கள் (2003) ஆகியவற்றிலிருந்து ஆறிற்கும் மேலான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இளவயதில் எழுதிவிட்டு, நீண்ட காலத்திற்கு எழுதாமல் இருந்து பிறகு மீண்டும் எழுதத்தொடங்கியமை மற்றும் பல நாடுகளுக்கு தொழில் நிமித்தம் பயணஞ்செய்தவை என்பவற்றில் தனக்கும் அ.முத்துலிங்கத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றதென ஆசி.கந்தராஜா  குறிப்பிடுகின்றார்.

இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் பல பல்வேறு நாடுகளின் பின்னணியில் நிகழ்கின்றன. எனினும் இலங்கையோ அல்லது ஆஸ்திரேலியாவோ ஓர் இணைநாடாக இந்தக் கதைகள் ஒவ்வொன்றிலும் வந்தபடியும் இருக்கின்றன. இத்தொகுப்பில் இருப்பவற்றில் 'அன்னை', 'யாவரும் கேளிர்', 'புகலிடம்', 'காதல் ஒருவன்', 'மிருகம்' மற்றும் 'வெள்ளிக்கிழமை விரதம்' ஆகிய கதைகள் அதன் பேசுபொருளாலும், நடையாலும் முக்கியமாகின்றன.

'அன்னை'யும், 'வெள்ளிக்கிழமை விரதமும்' ஆபிரிக்கா நாடுகளில் நடைபெறுகின்றவை.  இரண்டு கதைகளிலும், வரும் பாத்திரங்களும் கிட்டத்தட்ட ஒரேவிதமான சிக்கல்களைச் சந்திக்கின்றன. 'அன்னை'யில் ஒரு கொலையோடு அந்தச் சிக்கல் தீர்க்கப்படுகின்றது. 'வெள்ளிக்கிழமை விரதத்தில்' உடலை நுகர்வாக்கி வேறொருவகையில் அந்தச் சிக்கலிருந்து முக்கிய பாத்திரங்கள் தப்பிக்கொள்கின்றன.

ஆபிரிக்காக் கண்டத்தில் பல்வேறு பழங்குடிகள் (tribes) இன்னமும் உயிர்ப்புடன் இருந்துகொண்டிருக்கின்றன. அதை அதன் மானிடவியல்தன்மையுடன் விளங்காதவரை நமக்கு அவர்களின் மரபுகள்/பண்பாடுகள் என்பவை ஆச்சரியத்தையும், திகைப்பையும் தரக்கூடியவையாக இருக்கும். சினுவா ஆச்சுபேயின் நாவல்களை, முக்கியமாய்  Things Fall Apart, No Longer At Ease போன்றவற்றை வாசித்திருப்பவர்க்கு ஆபிரிக்கக் குழுமங்களை எப்படி விளங்குவதென்ற ஒரு வரைபடம் கிடைக்கக்கூடும். எனினும் தமிழ்ச்சூழலில்  இலத்தீன் அமெரிக்கக் கலாசாரம் அறியப்பட்டவளவுக்கு, இன்னும் ஆபிரிக்கப் பழங்குடி இனங்களின் பண்பாட்டு வரைவியல்கள் விரிவாகப் பேசப்படவில்லை. அந்தவகையில் ஆசி.கந்தராஜாவின் இந்தக் கதைகள்- ஒருவகையில் நேரடிச்சாட்சியாக இருப்பதாலும்- வாசிக்கும் நமக்குச் சுவாரசியமாகத் தெரிகின்றன.

'புகலிடம்' என்கின்ற கதை, அகதிகளாக உலகெங்கும் பரவிய நம்மைப்போன்றவர்க்கு மிக அணுக்கமாக உணரக்கூடிய கதையாகும். கதை லெபனானில் நிகழ்கின்றது. சிரிய உள்நாட்டு யுத்தத்தினாலும் பெற்றோரை இழந்து அகதிகளான சகோதரர்கள் இருவர் ரோஸாப்பூக்களை விற்பதால், அவர்களோடு நெருக்கமாகப் பழகும் சந்தர்ப்பம் இந்தக் கதையில் வரும் கதைசொல்லிக்கு கிடைக்கின்றது. இவ்வாறு ரோஸாப்பூக்களை ஐரோப்பாவின் தெருக்களில் விற்கும் ஈழத்தமிழர்களைப் பற்றி  வி.என்.நைபால் தனது 'Magic Seeds' நாவலில்  எழுதியதும் நினைவுக்கு வருகின்றது. அலி என்கின்ற சிரியாவிலிருந்து அகதியாகிய பதின்மவயதினன், தனது பத்து வயதுத் தங்கையோடு லெபனானின் பெய்ரூட் தெருக்களில் அலைந்துதிரிகின்றான். இவ்வளவு சிறுவனாக இருந்தாலும் அலிக்கு சிரிய உள்நாட்டுப் பிரச்சினை குறித்து தெளிவான புரிதல்கள் இருக்கின்றன. அதைக் கதைசொல்லிக்குப் பகிரும் அலி தனது தந்தையார் ஒரு பாடசாலையில் அதிபராக இருந்தபோது கொல்லப்பட்டார் என்கின்றான். பின்னர் தாயாரோடு ஒரு அகதிமுகாமில் இருந்தபோது,  தங்கள் தலையில் துப்பாக்கி அழுத்தப்பட தாயும் தங்களின் முன்நிலையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிச் சுட்டுக்கொல்லப்பட்டார் என்கின்றான். எந்தக் குழந்தையாலும் தாங்கமுடியாத, பார்க்கவே கூடாத  சம்பவங்களை அனுபவித்த  அலியும், அவனது சகோதரியும் பெரும் மன அழுத்ததோடும் துயரத்தோடும் வாழ்வதை கதைசொல்லி புரிந்துகொள்கின்றார்.

ஒருநாள் அகதிகளாக அலையும் அவர்களுக்கு லெபனானிலும் நிம்மதியில்லாது போகின்றது. சிறுமியான சகோதரி மீது தெருவில் போகும் ஒருவன் பாலியல் அத்துமீறல் செய்கின்றான். தங்கையைக் காப்பாற்றுவதற்காக கொலை செய்கின்ற நிலைக்குப் போகின்றான் அலி. இனி பொலிஸ் வந்து அலியைக் கைதுசெய்து அலியின் வாழ்வு சிதையப்போகின்றது என்று நினைக்கும் தருணத்தில் ஒரு முஸ்லிம் பெரியவர் வந்து அந்தக் குழந்தைகளை கூட்டத்திலிருந்து பிரித்தெடுத்து எங்கேயாவது தப்பிப்பிழையுங்கள் என தப்பவைப்பதோடு கதை முடிகின்றது.

அகதிகளுக்கு அவர்கள் சொந்தமண்ணில் இருந்த விரட்டப்பட்ட துயரத்தோடு, அவர்கள் அடைக்கலம் புகுந்த நாடுகளிலும் ஒரு எளிதான வாழ்வு அமையாததையும் இந்தக்கதையினூடு நாம் புரிந்துகொள்ளலாம். இலங்கையிலிருந்து போர்க்காலங்களில் 'தொப்பூள்கொடி உறவு' எனக் காலம் காலம் சொல்லப்படுகின்ற இந்தியாவுக்கு படகுகளில் போய் அங்கே கவனிக்கப்படாத மானிடர்களாய் அகதிமுகாங்களில் முடக்கப்பட்ட ஏதிலித்தமிழர்களின் வரலாறும் நம்முன்னே நிகழ்ந்துகொண்டிருப்பதை அசையாய்ச் சாட்சிகளாய்ப் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் நாமல்லவா?


தேபோன்று இலங்கையில் இன்னும் துயரமான வாழ்வைக் கொண்டிருக்கும் இந்திய வம்சாளியினரின் கதையை 'யாவரும் கேளிர்' கூறுகின்றது. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் இலங்கை சென்ற பரம்பரையைச் சேர்ந்த முத்துசாமியின் வாழ்க்கை 1983ம் ஜூலைக் கலவரத்தின்போது திசைமாறுகின்றது. ஏற்கனவே தொழில்சங்க நடவடிக்கைகளால் சிங்களவரின் வெறுப்பைச் சம்பாதித்த முத்துச்சாமியை, கலவரத்தை முன்வைத்து அவரின் வீட்டைக் கொளுத்துவதுடன், முத்துசாமியின் தங்கையையும் காடையர் குழு பாலியல் வன்புணர்ந்து செய்து கொலைசெய்கின்றது. அந்தத் துயரத்தோடு நாடுவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பும் முத்துச்சாமியும் அவரின் தாயும் ஏற்காட்டுத் தேயிலைத் தோட்டத்திற்குள் அடைக்கலம் புகுகின்றனர்.

அங்கேயும் 'சாதி தெரியாத சிலோன்காரர்' என ஏற்காடு தேயிலைத்தோட்டங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க சாதிகளால் முத்துச்சாமியைப் போன்றவர்கள் விலத்தி வைக்கப்பட்டுப் பலிவாங்கப்படுகின்றனர். இலங்கையிலும் நிம்மதியாக இருக்கமுடியாது இந்தியாவிற்கு வந்தும், இயல்பான வாழ்க்கை வாழமுடியாத பலரின் வாழ்க்கை இந்தக் கதையினூடு காட்டப்படுகின்றது. எப்போதும் விளிம்புநிலையாகவே வைக்கப்பட்டிருக்கும் மலையகத்தமிழரை நமது எந்த அரசியல் கட்சிகள் மட்டுமின்றி இலக்கியம் சார்ந்தும்  புறமொதுக்கும் நிலையே இன்னும் இருக்கின்றதென்பதையும் நாமனைவரும் நன்கு அறிவோம்.

'காதல் ஒருவன்' கதை, ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தாலும் அதனூடு ஈரானின் கலாசாரம் பற்றிய ஒரு குறுக்குவெட்டுப் பரப்பு நமக்கு காட்சிப்படுத்தப்படுகின்றது. தனது மனைவி தனக்குத் 'துரோகம்' செய்துவிட்டாள் என்பதற்காக வாழ்க்கை இழக்கும் ஒரு தம்பதியினர் கதை. தனிமனிதருக்கான சுதந்திரம் பல்வேறு புலம்பெயர்ந்த நாடுகளில் -இலங்கைத்தமிழர் உட்பட- பல இனங்களுக்கு இருந்தாலும்,  ஏதோ ஒருவகையில் சமூகத்தளைகளிலிருந்து அவர்களில் பலரால் வெளிவரமுடியாமல் சிக்கல்படுவதையே, இந்த ஈரானியத் தம்பதிகள் நமக்கு வெளிப்படுத்துகின்றனர். காலம் அதன்பாட்டில் நகர்ந்தாலும், வாழ்வின் மீது நம்பிக்கை இழக்காது தனது முதல் இரண்டு பிள்ளைகளை தனது விவாகரத்துப் பெற்ற கணவனுக்கு - முஸ்லிம் முறைப்படி- விட்டுக்கொடுக்கவேண்டி வந்தாலும், மூன்றாவது பிள்ளையைத் தன்சொந்தக் காலில் நின்று வளர்த்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் றொற்நொக் என்னும் பெண்ணின் உறுதி நம்மை அதிசயக்க வைக்கின்றது.

புலம்பெயர்ந்த வாழ்வென்பென்பதை பல ஆண்கள் தாம் 'இழந்து வந்த சொர்க்கமென' நனவிடைதோய்ந்து கவலையுறும்போது, பெரும்பாலான பெண்கள் அதை வசந்தி ராஜா தனது கவிதையொன்றில் கூறியதுமாதிரி 'தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தரப்பட்ட சுதந்திரம்' எனக்கொண்டாடுவதையும் நாம் நினைவில் கொள்ளலாம். அந்தக் கவிதையிற்குப் பொருத்தமான ஒரு கதையாக 'காதல் ஒருவனை'க் கொள்ளலாம்.

'அந்நியமாதல்' கதை பங்களாதேஷில் நிகழ்கின்ற கதை. எப்படி இன்னமும் முதலாளிகள் என்ற மமதை கொண்டு, தம் சக பணியாளரை அடக்குவதையும், அதேவேளை வெள்ளை நிறத்தைக் கண்டு மண்டியிட்டு அடிபணியும் இன்னமும் போகாத 'காலனித்துவ மனோபாவத்தை'யும் இந்தக் கதையில் வரும் யூசூப் என்கின்ற அப்பாவி மனிதனின் பாத்திரத்தினூடு நமக்கு விவரித்துக் காட்டப்படுகின்றது.

பலர் பல்வேறு நாடுகளுக்கு தொழில் நிமித்தமோ அல்லது புதிய நாடுகளைத் தரிசிக்கவேண்டுமென்கின்ற அளப்பரிய காதலினாலோ போய்க்கொண்டிருப்பார்கள். எனினும் மிகச்சிலரே அந்த அனுபவங்களைச் சேகரமாக்கி புனைவாக்கும் பொறுமையும், திறமையும் கொண்டிருப்பவர்கள். அந்தவகையில் ஆசி.கந்தராஜாவின்  இந்தத்தொகுப்பிலுள்ள கதைகள் பல மிகச்சிறப்பாகவே இருக்கின்றன. நம்மில் பலருக்கு பிற மனிதர்களை/அவர்களின் கலாசாரங்களை புரிந்துகொள்வதில் மிகுந்த சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் ஆசி.கந்தராஜா,வெவ்வேறு நாட்டுப் பின்புலங்களில் வரும் கதாபாத்திரங்களை எழுதும்போது, அவர்களின் பண்பாட்டுப் பின்புலங்களில் வைத்து அப்பாத்திரங்களை விளங்கிக்கொள்ளவே விரும்புகின்றார்.

சமகாலத்திற்கோ அல்லது நமது விழுமியங்களுக்கோ உடன்படாத விடயங்கள் நடக்கின்றபோதும், தனக்கான தனிப்பட்ட தீர்ப்புக்களை அளிக்கவோ, வாசகர்களை ஒற்றைத்தன்மையில் விளங்கிக்கொள்ளும் புள்ளிகளையோ தராது, அவரவர் அவரவர்க்கு விரும்பியமாதிரி புரிந்துகொள்வதற்கான வெளிகளை கந்தராஜா தனது கதைகளில் தருவதைக் குறிப்பிட்டாக வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு என்றாலும், அண்மையில் வந்தவற்றில் தவிர்க்காது வாசிக்கவேண்டிய ஒரு தொகுப்பென இதைத் தயக்கமின்றிக் கூறலாம்.

---------------------------------------------
(நன்றி: 'காலம்' சஞ்சிகை, 2018)

0 comments: