கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மாண்டோ

Sunday, December 30, 2018


மாண்டோ 42 வயதில் இறந்துபோனாலும், அவரது காலத்திலேயே அவர் 20ற்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புக்களைப் பிரசுரிக்கின்றார். தனது முப்பது வயதுகளில் புகழின் உச்சியில் பம்பாயில் இருந்து, இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது, உரையாடல் ஒன்றின்போது அவரது நீண்டகால நண்பர் 'நீ நண்பராக இல்லாவிடின் உன்னை இப்போதே கொன்றிருப்பேன்' எனச் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து, அடுத்தநாளே குடும்பத்தோடு லாகூருக்குப் புலம்பெயர்ந்தவர் மாண்டோ.
அதன்பிறகு அவரது அடையாளம் சார்ந்த சிக்கல்களும், புதிய நிலப்பரப்பில் காலூன்றும் பதற்றமும் அவரைக் குடிக்கு அடிமையாக்கி இளவயதிலேயே உயிரைப் பறித்திருக்கின்றது. மாண்டோ அவரது சர்ச்சைக்குரிய கதைக்களன்களால் நான்குமுறை பிரிஷ்டிஷ் இந்திய நீதிமன்றத்திலும், பின்னர் இரண்டு முறை பாகிஸ்தானிலும் சட்டச்சிக்கல்களைச் சந்திக்கவேண்டியிருந்தது.
Cold meat என்கின்ற கதையில் சீக்கியர் ஒருவர் ஒரு வீட்டை உடைத்துத் திருடுகையில் அந்த வீட்டில் இருக்கும் 6 பேரைக் கொலை செய்கின்றார். அங்கே இருக்கும் ஒரு இளம்பெண்ணைத் தூக்கிக்கொண்டு வந்து, வரும்வழியில் அந்தப்பெண்ணைப் பாலியல் வன்புணர்வும் செய்கின்றார். பிறகுதான் தெரிகிறது அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதும், அவர் ஒரு பிணத்தோடு புணர்ந்திருக்கின்றார் என்பதும். இந்த உண்மையை அவர் சொல்கின்ற இடமும், அதற்கு முன்னரே அவரது மனைவி அவருக்குக் கொடுக்கும் தீர்ப்பும் கதையின் முடிவை நாம் வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். இந்தக் கதையில் பாவிக்கப்பட்ட சொற்களுக்காகவும், சவதோடு புணர்ந்த 'மனிதத்தன்மை'யை எழுதியதற்காகவும் பாகிஸ்தானில் மண்டோ சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றார். அந்த வழக்கு நீண்டகாலம் போன ஒன்றாகவும் இருந்திருக்கின்றது.
ஒரு முழுநேர எழுத்தாளனாக மும்பையில் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த மண்டோ பிற்காலத்தில் கடும் வறுமையைப் பாகிஸ்தானில் சந்திக்கின்றார். எனினும் எழுதுவதிலோ, தனது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைப்பதிலோ ஒருபோதும் அவர் தயங்கவில்லை. ஆறுமுறை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்திற்கு அலையவேண்டியபோதும் மாண்டோ சட்டத்தின் முன் மண்டியிடாது எழுத்தைக் கொண்டு வாழ்வின் சரிவுகளைத் தாண்டிச் செல்கின்றார். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்துக்கள் தரப்பில் 100, 000 கொல்லபப்பட்டார்கள் என்றும், முஸ்லிம்கள் தரப்பில் 100,000 கொல்லப்பட்டார்கள் என்று தனித்தனியாகப் பிரித்துச் சொல்வதை விட, அருகருகில் ஒரே தெருவில் நூற்றாண்டுகளாய் ஒன்றாக இரண்டறக் கலந்து வாழ்ந்த 200,000 மனிதர்கள் அல்லவா தங்களுக்குள் மாறிமாறிக் கொன்று இறந்துபோனவர்கள் என்று கவலையில் தோய்கின்ற மென்மனதைத்தான் மாண்டோ கொண்டிருந்தார். அதை எந்தப் பொழுதிலும் தொலைத்துவிடாது இந்த பிரிவினையின் நிகழ்ந்த மரணம்பற்றி தொடர்ந்து தன் எழுத்துக்களால் தொந்தரவுபடுத்தியபடி அன்று மட்டுமில்லாது இப்போதும் கூட நம்முடன் மாண்டோ இருக்கின்றார்.

மாண்டோ அவரது எழுத்துக்களின் சிக்கலான தன்மையால், ஒருகாலத்தில் பாகிஸ்தானில் மறைக்கப்பட்டு, இன்று மீளக்கண்டுபிடிக்கப்பட்டு பேசப்படுகின்றார். பாகிஸ்தானிய அரசு இப்போது அவரைக் கெளரவித்து தமது நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக முன்னிலைப்படுத்துகின்றது. மாண்டோ பத்திரிகையாளராக இருந்து அங்கிள் சாமிற்கென எழுதப்பட்ட கட்டுரைகளில் முற்போக்கான பாகிஸ்தானை எப்படி அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்து அடிப்படைவாதப் பாதையிற்கு அழைத்துச் செல்லுமென சுதந்திரம் பெற்ற சில வருடங்களிலேயே எதிர்வுகூறி எச்சரித்துவிட்டும் போயிருக்கின்றார். 
மாண்டோவின் வாழ்க்கை பற்றியும் எழுத்துக்கள் பற்றியும் உரையாடல்கள் மட்டுமில்லை, திரைப்படங்களும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் நந்திதா தாஸின் 'மாண்டோ' சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றது. மாண்டோவின் வாழ்க்கையை அதில் சொன்னதோடல்லாது, அவரது கதைகளையும் அவ்வப்போது சொல்வதுமாக திரைக்கதை இதில் நகர்த்தப்பட்டிருக்கும்.
மாண்டோ தனது இறப்பின்போது கல்லறை வாசகத்தில், 'கதை சொல்வதில் சிறந்தவர்கள் இருவர்தான். அதிலும் கடவுளா நானா சிறந்தவர் என்று நீங்கள் தீர்மானியுங்கள்' என எழுதச்சொல்லி, தன் எழுத்தின் மீது அளவிறந்து நம்பிக்கையும் உடையவராக இருந்தவர். மாண்டோவின் இளவயது மரணத்தின்போது மட்டுமில்லை அநேகரின் இளவயது மரணங்களில் அவர் இப்படி இருந்திருந்தால் இன்னும் நிறையக்காலம் நன்றாக இருந்திருப்பார் என எழுதப்படுகின்ற மரண அஞ்சலிகளை விரும்பாத ஒருவன் நான். சிலவேளை ஒருவர் 80 வயதுகள் வரை இருந்தால் கூட சாதிக்கமுடியாமல் போவதை ஒருவர் தன் 40களிலேயே எளிதில் தாண்டிப்போயிருப்பார். 

ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுக்கின்றார். அதில் தன்னை கரைத்து சிலதைச் சாதித்துவிட்டு மறைந்துபோயிருக்கின்றார் என்பதை நினைவூட்ட வேண்டுமே தவிர, இதையிதைச் செய்திருந்தால் இன்னும் 'சீரஞ்சீவி'யாக இருந்திருக்கலாமென 'ஒழுக்கவாதி'ப்போர்வை அணிந்து என எழுதுவதெல்லாம் தேவையில்லாதது.
அதையேதான் மாண்டோ பின்னாளில் குடிக்கு அடிமையாகி தன்னை அழித்துக்கொள்ளும்போதும், அது எனக்கு முதன்மையில்லாது அவரது அந்த நாற்பதுகளிலேயே எழுதிவிட்டுப்போனதுதான் முக்கியமாகின்றது. இன்றைய காலத்திற்குப் பொருத்தமான கதைகளை கிட்டத்தட்ட 70களின் முன் எழுதியதோடல்லாது, நம் மனச்சாட்சிகளையும் தொந்தரவுபடுத்தி நம் நினைவுகளிலிருந்து தொலைந்துபோகாது மாண்டோ எப்படித் தன்னை நிலைநிறுத்துகின்றார் என்பதைப் பற்றியே நாம் நிறையப் பேசவேண்டும்.
...................

(Dec 2018)

0 comments: