கொழும்பில் றஷ்மியினதும், எனதும் நூல்களை அறிமுகப்படுத்த ஷர்மிளா ஏற்பாடு செய்த கூட்டத்தில்தான் ஷெரினை முதன் முதலில் சந்தித்திருக்கின்றேன். அவரோடு ஆஸ்திரேலியாவில்(?) இருந்து வந்து ஒரு படப்பிடிப்புக்குழு நின்றதால், அந்தக்குழுவை வழியனுப்பவேண்டியதால் அவர் நிகழ்வு முடியமுன்னரே போயிருந்தார்.
பின்னர் ஒருநாள் அவர் தொலைபேசியில் சந்திப்போமா என அழைத்தார். அதுவரை ஷெரினை அவ்வளவு அறிந்திருக்கவில்லை என்பது நான் சற்று வெட்கப்படவேண்டிய விடயந்தான். கனடாவில் நீண்டகாலம் வசித்த ஒருவர்; ஜக்கிய அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்புக்களைச் செய்துவிட்டு, ஒருகட்டத்தில் இலங்கைக்குப் போய் ஏதாவது செய்வோமென 90களின் பிற்பகுதியில் சென்றிருக்கின்றார். பிறகு அங்கேயே ஒருகட்டத்தில் அப்படியே தங்கிவிட்டார். கிழக்கு மாகாணத்தில் தமிழ்/முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் அக்கரைப்பற்றில்(?) சில வருடங்கள் தங்கியிருந்து தனது ஆய்வுகளை மேற்கொண்டவர். அவ்வாறான ஒருவரிடமிருந்து இன்னும் ஆழமான விடயங்களை தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகளில் நான் அறிந்துகொள்ள முடிந்தது.
மனித உரிமைகள் சார்ந்து நிறைய வேலைகளை ஷெரின் இப்போது செய்துகொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்கின்றபோதும், யாழில் தங்கிநின்று ஏதாவது செய்வோம் என்று விரும்பியபோது அங்கிருந்த அரசியல்வாதிகளோடு ஏற்பட்ட முரண்களையும் விபரித்துக்கொண்டிருந்தார். முக்கியமாய் யாரோ ஒருவரை நேர்காணல் சென்றபோது தான் கால்மேல் போட்டுக்கொண்டிருந்து கேள்விகள் கேட்டது அந்த நபருக்குப் பிடிக்கவில்லை என்றும் அதன்பிறகு இவர்களோடு இருந்து அங்கே இயங்கமுடியாது என தெற்கிற்கு நகர்ந்துவிட்டேன் எனவும் சொன்னார்.
நான் சந்தித்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையில் ஏதோ ஓர் அமர்வு நடந்து ஷெரீனும் பங்குபற்றியிருந்தார். சிங்கள குழுக்களுக்கு முன்னர் நமது தமிழ்க் குழுக்கள் எவ்வித தயாரிப்போ, காத்திரமான விவாதங்களையோ உருவாக்காது ஏதோ வந்தோம்/பேசினோம்/சென்றோம் என இருந்தார்கள் என்ற கவலையையும் பகிர்ந்துகொண்டார்.
நான் ஷெரினைச் சந்தித்தபோது, அவர்கள் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்/முஸ்லிம்/சிங்களப் பாடசாலை மாணவர்கள் போர் பற்றி தமது அனுபவங்களை எழுதிய, ‘மெளன வலிகளின் வாக்குமூலம்’ என்ற ஒரு நூலைத் தொகுத்திருந்தனர். தமிழிலும் சிங்களத்திலும் தயாரிப்புக்கள் முடிந்து நூல் வெளியிடுவதற்கு ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. இதற்கான செலவை ஏற்றவர்கள் ஆங்கிலத்தில் முதலில் வெளியிடக்கேட்டபோது, தமிழிலும்/சிங்களத்திலுமே முதலில்வெளிவருவதே முக்கியமென அதை மறுத்தோம் எனவும் ஷெரின் சொல்லியிருந்தார். ஷெரினது வீட்டிலே இன்னொரு நண்பரான ராதிகாவையும் சந்தித்திருந்தேன். சிங்கள ஊடகவியலாரும், சட்டம் படித்தவருமான ராதிகா தமிழ்ப் பிரதேசங்கள் பலவற்றுக்குப் பிரயாணித்துக்கொண்டிருப்பவராகவும், சிங்கள ஊடகங்கள் சிலவற்றில் இருக்கும் இனவெறியையும் பகிர்ந்துகொண்டிருந்தார்.
ஷெரின் மனித உரிமை விடயங்களையும் மட்டுமில்லாது, தனது உறவினர்கள் செய்யும் மனதிற்கு உவப்பாக இல்லாத சில விடயங்களையும் வெளிப்படையாக விமர்சித்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் தனது குடும்பம்/பிள்ளைகளை விட்டுவிட்டு தனியே இலங்கையில் இருந்து அவர் தனக்குப் பிடித்ததைச் செய்து கொண்டிருந்த அவர், ‘நான் இங்கு இறந்தால் இந்த வீட்டிலிருக்கும் சமையல்கார அம்மாவும், பாதுகாப்பிற்கு நிற்கும் ஒரு ஐயாவும் மட்டுமே தனக்கான ‘சொந்தங்கள்’ என்றார்.
ஷெரினோடும், ராதிகாவோடும் இருந்து உணவருந்திக்கொண்டிருந்தபோது, அநேக புலம்பெயர்ந்தவர்களுக்கு இருக்கும் ‘கானல் கனவான’ எப்போதேனும் ஒருநாள் இலங்கைக்குத் திரும்பிவருவதைப் பற்றி நான் பேசிக்கொண்டிருந்தேன். ‘நீ வருவதென்றால் பயப்பிடாது வா, எங்கள் நிறுவனத்தில் ஒருவேலை (ஆகக்குறைந்தது மொழிபெயர்ப்புச் சார்ந்து) தருகின்றேன்’ என்றார் ஷெரின். இலங்கை போன்ற இன்னமும் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்கப்படாத சூழலில் ஒரு சிறு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது என்பதே கஷ்டமானது. ஷெரின் கூட சில நாள்களின் முன், நல்ல பணியாளர்கள் என்றாலும், இனத்துவேஷம் வெளிப்பட்ட இரண்டு பணியாளர்களை வேலை நிறுத்தவேண்டி வந்தது என்றார்.
நமது இருவருக்கும் பழக்கமான ஒருவரைப் பற்றிய பேச்சொன்று இடையில் வந்தது. அவரின் மீது மதிப்பிருந்தாலும், அவர் போர்க்காலத்தின் இறுதிக்கட்டம்வரை நின்றவர் என்கின்றபோதும் தன்மீது சுயவிமர்சனம் இல்லாது பல்வேறு அரசியல் கிளைகளில் மாறிமாறிப்போய்க்கொண்டிருக்கின்றார் எனச் சொன்னேன். அவரோடும் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தில் இயங்கிய ஷெரீன், தானும் இதுகுறித்து கேள்விகேட்டபோது, அந்த நண்பர் மனம் உடைந்து அழத்தொடங்கியபோது தன்னால் அதற்குப் பிறகு எதுவுமே அது குறித்துப் பேசமுடியவில்லை என்றார். உண்மைதான், இவ்வாறான விடயங்கள் உணர்ச்சிகரமானது மட்டுமில்லை, மிகுந்த சிக்கலானதும் கூட.
இதுவரை அறிமுகம் இல்லாத ஒருவரோடு ஏற்படும் நட்பென்பது சிலவேளைகளில் அழகானது. சில மணித்தியாலங்கள் நிறைய விடயங்களை ஆறுதலாக இருந்து கதைத்துக்கொண்டிருந்தபோது, நமது உரிமைகள் பற்றியும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றியும் உண்மையான அக்கறையோடு இருக்கும் ஷெரீன் போன்றவர்களைப் பற்றி ஏன் நமது சமூகத்தில் பரவலான அறிமுகம் இல்லை என்பது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அவரைப் போன்றவர்களுக்குத் தம்மை ‘விளம்பரப்படுத்த’ விருப்பமில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடியுமெனினும், அவரை அறிந்தவர்கள் அவர்களின் பணியை பரவலாகக் கொண்டு செல்லலாம். முக்கியமாய் எல்லா இனங்களோடும் சேர்ந்து இயங்கியபடி,, தமிழர்களின் உரிமை குறித்தும் விட்டுக்கொடுக்காது பேசும் ஷெரீன் போன்றவர்கள் நமது சமூகத்திற்கு முக்கியமானவர்கள்.
ஷெரின் தனது பணிகளுக்கிடையில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிணக்குகள், மனஅழுத்தங்கள், பின்னடைவுகள் என்பவற்றைப் பகிர்ந்துகொண்டிருந்தபோது, இவ்வளவு எல்லாம் நிகழ்ந்தபின்னும், நீங்கள் நம்பும் விடயங்களுக்காய் அதை நோக்கி இயங்கிக்கொண்டிருக்கின்றீர்களே, இப்படி எங்களைப் போன்றவர்களால் தொடர்ந்து இதற்குள் இருந்திருக்கவே முடியாது என்று சொன்னேன். ஆகவேதான் ஷெரீன் போன்றவர்களை எனக்கு நெருக்கமானவர்களாகக் கொள்ளமுடிகிறது போலும்.
(Jan 19, 2018)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment