நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

இத்தாலி

Monday, March 12, 2018


த்தாலி என்ற பெயரைக் கேட்டவுடன் பலருக்கு ரோமப் பேரரசு உடனே நினைவுக்கு வரும். இன்னுஞ் சிலருக்கு லியானார்டோ டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஓவியக்கலைஞர்கள் ஞாபகத்திற்கு வருவார்கள். என்னைப் போன்ற வாசிப்பில் ஆர்வமிருப்பவர்க்கு இடலானோ கால்வினோ, உம்பர்த்தோ ஈக்கோ போன்ற எழுத்தாளர்கள் மனக்கண்ணின் முன் வந்து நிற்பார்கள்.

இத்தாலியைப் பார்க்கப்போவதென்று தீர்மானித்தபோது எனது தேர்வில் வெனிஸூம், ரோமும் இருந்தன. நேரமிருந்தால் ப்ளோரன்ஸுக்கும் போகலாமென நினைத்திருந்தேன். ஒவ்வொரு நகரும் ஏறத்தாள  200-300 கிலோமீற்றர்கள் இடைவெளிகளில்  அமைந்து இருந்தன. நல்லவேளையாக ஜரோப்பாவிற்குரிய தனித்துவமான புகையிரதச் சேவைகள் இருந்தனபடியால், ஒவ்வொரு நகருக்கும் விமானம் ஏறி அலுப்படையும் நாள்களை எளிதாகக் குறைத்துக் கொண்டேன்.

வெனிஸ் ஒரு மிதக்கும் நகரம் என்றும் கால்வாய்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது.  'வெனிஸ் நகரத்து வணிகன்' (The Merchant of Venice) என்று அன்றைய கால ஷேக்ஸ்பியரிலிருந்து, 'வெனிஸில் மரணம் (Death in Venice) என்று இன்றையகால தோமஸ் மான் வரை நிறையப் பேர் வெனிஸைப் பின்புலமாக வைத்துக் கதைகளை எழுதியிருக்கின்றனர்.

வெனிஸின் தனித்துவம் என்பதே மிதந்துகொண்டிருக்கும் வீடுகளும் கட்டடங்களுமே ஆகும். அதனூடாக பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகளும், ஆடம்பரக் கனலோக்களும் ஊர்ந்து செல்வதைப் பார்ப்பதென்று அழகானது. வெனிஸிற்குச் சென்றால் தொலையாமல் திரும்பி வரக்கூடாது என்ற பிரபல்யமான கூற்றுக்கேற்ப, அங்குமிங்கும் நடந்து நடந்து நான் தொலைந்துகொண்டே இருந்தேன். சிறுசிறு ஒடுங்கிய தெருக்களினூடு நான் தொலைவதும் மீள்வதுமாக இருந்தேன். அதுபோலவே சாதாரண தெருக்களில் ஓடும் பஸ்சைப் போல, நீங்கள் பயணிகளுக்கான படகில் ஏறி பல்வேறு தரிப்பிடங்களில் இறங்கி உங்களுக்கு விரும்பிய இடங்களை வெனிஸில் ஆறுதலாய் இரசித்தும் பார்க்கலாம்.

கோடைகாலம் என்றதாலோ என்னவோ நான் சென்றநேரம் சுற்றுலாப் பயணிகள் நிரம்பி  வழிந்துகொண்டிருந்தனர். எனவே ஒருவகையான மூச்சுத்திணறலுக்குள் சிக்கியமாதிரி இருந்தாலும், சனம் அதிகம் குவியாத இடங்களைத் தேடிப் பார்த்தபடி, அமைதியான உணவகங்களைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டபடியும் இருந்தேன். வெனிஸைப் பார்க்கும்போது ஏற்கனவே நான் பார்த்த இரண்டு இடங்களில் செய்த படகுப் பயணங்கள் நினைவிற்கு வந்தன. ஒன்று ஹாலண்டிலிருந்த ஆம்ஸ்டடாம் மற்றது கேரளாவின் ஆழப்புழா. மனித மனம் என்பது, எப்படித் தவிர்த்தாலும், எதையோ சிலவற்றை ஒப்பிட்டுக்கொள்ளத்தானே துடிக்கின்றது. ஆனால் அவ்வாறு ஒப்பிட்டதனால் இவையெல்லாம் ஒரேமாதிரியானவை என்றோ அல்லது ஒரே அனுபவத்தையோ கொடுக்கின்றதோ என்ற அர்த்தம் இல்லை.

வெனிஸ் அதன் மீன் உணவுகளுக்காகவும் பிரசித்தி பெற்றது. வெனிஸை மட்டுமில்ல வெனிஸிற்கு அருகிலும் பார்ப்பதற்கு அழகான இடங்கள் பல இருக்கின்றன. நான் செலவின் காரணமாக வெனிஸிற்குள் தங்காது அருகிலிருந்த நகரான பதோவா என்கின்ற நகரில் தங்கிநின்றேன். அது ஓர் அமைதியான அழகான நகர். இரவு நேரத்தில் அந்நகரின் சதுக்கத்தில் இசை பொழிய, ஜஸ்கிறிமைச் சுவைத்தபடி, நிலவின் துணையுடன் உலாவித்திரிந்த இரவுப் பொழுதுகள் அவ்வளவு எளிதில் ஞாபக அடுக்குகளிலிருந்து அகலமுடியாதவை.

ப்ளோரன்ஸ் நகர் ஜூலியஸ் சீசரினால் அமைக்கப்பட்ட நகரென்று சொல்லப்படுகின்றது.  14ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டில் ஜரோப்பிவில் முகிழ்ந்த மறுமலர்ச்சிக்காலத்திற்கு (Renaissance) ப்ளோரன்ஸ் நகர் முக்கிய பங்களிப்பை ஆற்றியதால், ஒருவகையில் இந்நகர் மறுமலர்ச்சிக்காலத்திற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. இன்று உலகில் தலைசிறந்த நவநாகரீக நகரில் (fashion city) ஒன்றாக விளங்குகின்றது.

ப்ளோரன்ஸ் ஏனோ ஒருவகையில் இத்தாலியின் மிக நெருக்கமான இடமாக எனக்குள் ஆகியிருந்தது. இங்கே திரும்பும் பக்கமெல்லாம் கலையின் செழிப்பைப் பார்க்கலாம். கலைப் படைப்புக்களிலிருந்து, வானோங்கிய கட்டடங்கள் வரை ஒவ்வொரு மூலையிலும் வரலாறு புதைந்து கிடக்கின்றது. இந் நகரிற்குள் நுழையும்போது எப்பாடுபட்டேனும் மைக்கல் ஆஞ்சலோவின் மியூசியத்தை மட்டும் தவறவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன். இதற்குள்ளேதான் ஆஞ்சலோவின் பிரசித்தி பெற்ற 'டேவிட்' தன் நிர்வாணம் மறைக்காமல் உயர்ந்து நிற்கின்றார். அதேபோல இன்னொரு காலரியில் சாண்டோ பாட்டிசாலி வரைந்த பிரபல்யம் வாய்ந்த ஓவியமான வீனஸின் பிறப்பு (Birth of Venus) இருக்கின்றது.

மேலும் ப்ளோரன்ஸிற்குப் போகும் ஒருவர் தவறவிடக்கூடாத இடங்களென uffizi காலரியையும்,   Duomo கதீட்ரலையும் கூறுவேன். uffizi யில் பல்வேறுவிதமான அற்புதமான சிற்பங்களைப் பார்க்கலாம்.   Duomo கதீட்ரலின் பிரமாண்டத்தின் முன், மனிதர்கள் நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்ற உணர்வே கட்டாயம் மேலெழும். அந்தக் கதீட்ரலை வெளியே சுற்றிவரவே நீண்ட நேரம் பிடிக்கும். என்னைப் போல இரவு சூழும் மாலை நேரத்தில் போவீர்களாயின் அதனருகிலிக்கும் ஒரு உணவகத்தில் இருந்து சாப்பிட்டபடி, யாரோ ஒரு பாடகன் பாடுவதைக் கேட்டபடி, இந்த கதீட்ரலை மனம் குளிர பார்த்து நீங்கள் இரசிக்கமுடியும்.
ப்ளோரன்ஸிற்கு அருகிலேயே ஒரு மணித்தியாலப் பயணத்தில் சாய்ந்த பைஸாக் கோபுரம் இருக்கின்றது. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் தரித்து நிற்கமுடியுமெனில் tuscan கிராமப்புறங்களுக்குச் சென்று அதன் அழகையும், பிரசித்த பெற்ற வைன்களையும் பருகமுடியும்.

ரோமை, ப்ளோரன்ஸிலிருந்து சில மணித்தியால ரெயின் பயணத்தில்  சென்றடைந்திருந்தேன். எல்லாப் பாதைகளும் ரோமிற்கே என்பது இன்று தேய்வழக்காகி விட்டதென்றாலும், ஒருகாலத்தில்  நாகரீகம் செழித்து வளர்ந்து ரோம் ஒரு பெரும் சாம்ராஜ்ஜியமாக இருந்தது என்பதை நாமனைவரும் அறிவோம்.
ரோமிலிருக்கும் கொலீஸியம் அதிகமானவர்களை கவர்கின்ற இடமென்றாலும், அதைச் சுற்றிப் பார்ப்பதற்கு நாற்பதற்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. எப்போதும் சனக்கூட்டம் நிறையும் இடமென்பதால் நீண்ட வரிசையில் நின்று முதலில் கொலீஸியத்திற்குள் நுழையாது, அருகிலிருக்கும் இன்னொரு இடத்தில் ரிக்கெட்டை வாங்கச் சொல்லி ஒருவர் சொல்லியிருந்தார். எல்லா இடங்களையும் பார்ப்பதற்கு ஒரே ரிக்கெட் என்பதால் கொலீசியத்தின் அருகிலிருந்த மற்ற இடங்களைப் பார்த்துவிட்டு, கொடும் வெயிலுக்குள் கால்கடுக்க வரிசையில் நின்று சோர்ந்துபோகாமல் கொலீஸியத்திற்குள் ஆறுதலாக இறுதியில் நுழைந்திருந்தேன்.

இந்தக் கொலீஸியத்திற்குள்ளேயே ரோம் கிளேடியேட்டர்கள் இரத்தம் சிந்தச் சிந்தப் போரிட இதன் இருக்கைகளில் இருந்து 50,000ற்கு மேற்பட்ட மக்கள் இன்னும் இன்னும் என வெறிபிடித்துக் கத்தியிருக்கின்றார்கள் என்றளவிற்கு வரலாற்றின் கறைபடிந்த இடமாக இருக்கின்றது. பின்னர் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கால் இந்த இரத்தம் சிந்தும் மனித விளையாட்டுக்கள் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றன. இப்போதும் ஒவ்வொரு புனித வெள்ளியிற்கும் போப்பாண்டவர் வந்து வழிபாடுகளைச் செய்கின்றார் எனக் கூறினர்.

இதைச் சுற்றி பல்வேறு ரோமக் கடவுள்களுக்கான ஆலயங்கள் இருக்கின்றன. இடையிடையே வெவ்வேறு போர்களில் வெற்றியீட்டியவர்களுக்கான மன்னர்களுக்கான நினைவுத் தூபிகளும் இருக்கின்றன. கோடையில் போனபோதும் சூழல் வறண்டு போயிருந்தது.  இப்படி புழுதி பறக்கும் இந்த உலர் நிலத்திலிருந்தா இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பினார்கள் என்று வியப்பாய் இருந்தது. எல்லாப் பாதைகளும் ரோமாபுரிக்கு என்றொரு காலம் போய், இன்று வரலாற்றின் நினைவாய் மட்டுமே ரோம் எஞ்சியிருக்கின்றது.

கொலீசியத்திலிருந்து ரெயினெடுத்து (மிக அருகிலேயே ரெயின் ஸ்டேசன் இருக்கிறது) சில தரிப்பிடங்கள் தாண்டிப்போனால் வத்திக்கானை அடையமுடியும். வத்திக்கானை எத்தனையோ முறை புகைப்படங்களிலும் காணொளிகளிலும் பார்த்து ஒரு பிரமாண்டமான சித்திரம் எனக்குள் இருந்தது. நேரே போய்ப் பார்த்தபோது இவ்வளவுதானா என்ற ஏமாற்றமே எஞ்சியது. ஒருகாலத்தில் எத்தனை 'சாமராஜ்யங்களை' தனக்குள் அதிகாரம் செலுத்திய ஒரு பெரும் இடம், இந்தளவு குறுகிய நிலப்பரப்பிற்குள் இப்போது அடங்கியிருப்பது வரலாறு நமக்கு கற்பிக்கும் ஒரு பாடம் எனலாம்.

இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்துவிட்டேன் போப்பாண்டவரைச் சந்திக்கமுடியாமல் போனால் மனது ஆற்றாதேயென அவரை எப்படிச் சந்திக்கலாமேன அங்கே நின்ற ஒருவரிடம் போப்பாண்டவர் எங்கே வசிக்கிறார் எனக் கேட்டேன். அவர் 'இப்படி எளிதாக எல்லோருக்கும் காட்சி தரமாட்டார். அத்தோடு அவருக்கிருக்கும் பாதுகாப்பைத் தாண்டி எவரும் உள்ளே போய்விடவும் முடியாது' எனவும் கூறி அவர் தடுத்துவிட்டார். பாவம் போப்பாண்டவர் என்னைப்போன்ற ஒரு 'நல்லவனை' இறுதிவரை அவரால் சந்திக்கமுடியாமல் போய்விட்டது.

இத்தாலியில் வெனிஸ், ப்ளோரன்ஸ், ரோம் எனப் பல்வேறு நகரங்களில் திரிந்திருந்தாலும் என்னை அதிகம் கவர்ந்தது ப்ளோரன்ஸ். இந்த நகரங்கள் எங்கும் வரலாற்றின் வேர்கள் ஆழப் பதிந்திருந்தாலும், ப்ளோரன்ஸில் இருந்த Duomo வின் பிரமாண்டமும், தெருவெங்கும் மிளிர்ந்து நின்ற கலை அழகும், புராதனம் மாறாக் கட்டடங்களும் என்னை அதிகம் அதனோடு நெருக்கம் கொள்ள வைத்திருந்தன. இத்தாலியிற்குப் போகும் எவரும் ப்ளோரன்ஸைத் தவறவிடக்கூடாது என்று சொல்வேன். இத்தாலி கோப்பிகளுக்கும், ஜஸ்கிறிம்களுக்கும் உலகப்புகழ் பெற்றது. இவையிரண்டையும் சுவைத்து உளம் உருகவேண்டுமென்றால் உங்கள் காதலர்களையும் மறந்துவிடாமல் கூட்டிச் செல்லுங்கள்.

(நன்றி: `அம்ருதா`- பங்குனி, 2018)

0 comments: