நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

ஸ்பெயின் - 01

Saturday, September 29, 2018ரோப்பாவில் மூன்று நாடுகளுக்குக் கட்டாயம் போகவேண்டும் என்ற ஒரு கனவு எனக்குள் எப்போதும் இருந்துகொண்டிருந்தது. பிரான்ஸும், இத்தாலியும், ஸ்பெயினும் என்னை எப்போதும், அவற்றின் கலை இலக்கியங்களினூடு ஈர்த்துக்கொண்டிருக்கின்ற நாடுகள். கூடுதலாக போர்த்துக்கல்லையும் சேர்க்கலாம். சென்ற வருடம் இத்தாலியையும், அதற்கு முதல்வருடம் பிரான்ஸையும் பார்த்திருந்தேன். இந்த வருடம் ஸ்பெயினுக்கானது.

La Sagarida Familla (Spain)

ஸ்பெயினை அடையாளப்படுத்தும் முக்கியமான ஒரு கட்டடக்கலையாக La Sagarida Familla இருக்கின்றது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால் 1880களில் கட்டத் தொடங்கிய இந்தத் தேவாலயமானது இன்னமும் நிறைவு செய்யப்படாது இப்போதும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதாகும். உலகில் கட்டிமுடிக்கப்படாத ஒரு தேவாலயம் இந்தளவிற்கு புகழ்பெற்றதாக இருக்கின்றதா என்பது அரிதாகத்தான் இருக்கும்.

இது அந்தோனியோ கெளடியின் (Anthony Gaudi) மிகச்சிறந்த வடிவமைப்பில் உருவாகிய ஒரு தேவாலயமானது. மத்தியகால கோதிக் (Gothic) கட்டட வடிவத்தை உடையது. கோதிக் கட்டட அமைப்பானது வெளியில் பார்க்கும்போது icicles போன்ற வடிவத்துடன் வானை நோக்கும் கூரானவையாகவும், உள்ளே போய்ப்பார்க்கும்போது மாடவிதானங்கள் மிகுந்த உயரத்திலும் இருக்கும். இதன் அடிப்படையே இப்படி வானை நோக்கி மானிடர் நீண்டு சென்று கடவுளை அடைந்துவிடுவது என்பதாகும். அத்துடன் உள்ளே நாம் நின்று பார்க்கும்போது நம்மை அதன் வடிவமைப்பின் பிரமாண்டத்தில் மிகச்சிறியவர்களாக (கடவுளின் முன்) உணரச்செய்வதுமாகும்.

இதில் வானை நோக்கி நீளும் பத்து கூம்புகள் (இன்னும் சில கட்டிமுடிக்கப்படவில்லை) ஒவ்வொன்றும் கடவுள் அருளிய பத்துக்கட்டளைகளை (10 commandments) அடையாளப்படுத்துபவை. ஒவ்வொன்றிலும் அவை குறித்தான கதைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நீளும் இந்தக் கட்டட நிர்மாணம், அந்தோனி கெளடி இறந்த நூற்றாண்டான 2026ல் நிறைவு செய்யப்படுமென கூறப்படுகின்றது.


Flamingo Dance

ஃப்ளமிங்கோ நடனம் இன்று ஸ்பெயினின் அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது. பாடல், ஆடல், கிற்றார் மற்றும் கைதட்டல் வழி இசையை மீட்டல் எனப் பல்வேறு கூறுகளை இந்த நடனம் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இன்று ஃப்ளமிங்கோ உலகின் பல்வேறு பகுதிகளில் பிரபல்யமாக இருந்தாலும், இது ஜிப்ஸிகளின் ஊடாக வந்துசேர்ந்த ஒரு நடனமாகும். ஸ்பெயினுக்குள்ளும், இந்தியா, ஈரான், எகிப்தினூடாக சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்துசேர்ந்த நாடோடிகளால் அந்தலூசியாப் பகுதிகளில் இது கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கின்றது. தொடக்கத்தில் தெருக்களில் நாடோடிகளால் ஆடப்பட்ட ஆட்டம், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பெயினின் கஃபேகளுக்குள்ளும், உள்ளக அரங்குகளுக்குள்ளும் நுழைந்திருக்கின்றது.

ஸ்பெயினில் ஃப்ளமிங்கோ வந்து வளர்ந்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றனர். முதலில் நாடோடிகளால் கொண்டுவரப்பட்டு, பின்னர் ரொமாண்டிசக் காலத்தில் வளர்க்கப்பட்டு, பிராங்கோவின் ஆட்சியில் ஸ்பெயினின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றப்பட்டதென்று கூறுகின்றார்கள். ஃபிராங்கோ தன் சர்வாதிகார ஆட்சியின்போது, ஸ்பெயினுக்குள் உல்லாசப்பயணிகளை வரவழைப்பதற்காகவும், தனது கொள்கைப் பிரச்சாரங்களைச் செய்யவும் ஃப்ளமிங்கோவைப் பாவித்திருக்கின்றார். ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி முடிகின்றபோது, ஃப்ளமிங்கோ தனக்கான ஓர் உயரிய இடத்தை ஸ்பெயினில் அடைந்துவிட்டிருக்கின்றது.

ஃப்ளமிங்கோ நடனத்தைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும், இதற்கெனத் தனித்துவமாக ஆடப்படும் அரங்கிற்குச் சென்று பார்த்தது இதுதான் முதற்தடவை. மிகச்சிறிய அரங்கு. முதல்வரிசையில் போய் அமர்ந்திருந்தேன். மெல்லிய இருளில், melancholyயான இசையில் ஃப்ளமிங்கோ இப்படி ஒரு உருக்கமானதும், eroticம் ஆன ஒரு நடனமாகவும் இருக்குமென எதிர்ப்பார்த்திருக்கவே இல்லை. வேறு பல்வேறுவகையான நடனங்களைப் பார்த்திருந்தாலும், அவற்றில் erotic ஆட்டமுறையால் மட்டுமில்லை, ஆடை முறைகளாலும் கொண்டுவந்திருப்பர். இதில் அப்படி எந்தவகையான 'கவர்ச்சிகரமான' ஆடை உடுத்தல்களும் இல்லாது, ஆட்ட முறையால் கொண்டுவந்தது வியப்பாக இருந்தது. இசை வாத்தியங்களைக் கூட அப்படிப் பெரிதாகப் பாவிக்கவில்லை. ஆனால் பாடலும், நடனமும் எங்கள் நரம்புகளுக்குள் ஊடுருவியபடி இருந்தது.

நான் ஃப்ளமிங்கோ நடனத்தைப் பார்த்தது பார்சிலோனாவின் பிரபல்யம் வாய்ந்த Los Tarantos என்கின்ற ஆடல் அரங்கில். இதே பெயரிலேயே பிரபல்யமான ஒரு திரைப்படம் ஃப்ளாமிங்கோ நடனத்தை அடிப்படையாகக் கொண்டு 1960களில் எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆட்டங்களைப் பார்த்த நீட்சியில் ஒரு சிறு ஆவணப்படத்தைப் பிறகு பார்த்தேன். அதில் ஃப்ளமிங்கோவின் இந்திய அடிவேர் தேடிவரும் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கும் ஒப்பாரிப்பாடல்களில் அதன் சில கூறுகள் இருக்கின்றதென்று கூறுகின்றார். அதில் சின்னப்பொண்ணு தமிழ் ஒப்பாரிப்பாடலொன்றை உருக்கமாகப் பாடுகின்றார்.

ஸ்பெயினில் ஃப்ளமிங்கோவையும், கேரளாவில் கதகளியையும், இன்னபிற இடங்களில் வேறுவகை நடனங்களையும் பார்க்கும்போதெல்லாம், நாமுந்தான் எத்தகைய அற்புதகலைகளையும், அருமையான கலைஞர்களையும் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதை மதிக்கவோ, உலகின் பிற கலைகளுக்கு நின்று நிகராக நின்று நாம் சளைத்தவர்களில்லை என்று செப்பி எடுத்துச்செல்லவுந்தான், நம் சமூகத்தில் எந்தக்குரல்களும், உரிய அரசுக்களும் இல்லையென்ற சலிப்புத்தான் மேலிடுகின்றது.

0 comments: