-புதிய சில கவிதைகள் பற்றிய ஒரு சுருக்கமான வாசிப்பு-
கவிதைகள் எழுதுவதோடல்லாது, கவிதை மனோநிலையுடனும் எப்போதும் இருந்த ஒருவராக திருமாவளவனை
நான் நினைவுகொள்கின்றேன். தனது நாற்பதுகளின் பின்
இலக்கிய உலகில் நுழைந்த திருமாவளவன், மிகக் குறுகிய காலத்தில் நிறையக் கவிதைகளை எழுதி, தனக்கான கவனத்தை ஈர்த்த ஒரு புலம்பெயர் கவிஞர். ஈழக்கவிஞர் என்றோ அல்லது புலம்பெயர் கவிஞர் என்றோ தன்னை
வகைப்படுத்தலை, திருமா ஒருபோதும் விரும்பாதவர் என்பதால், இப்போது உயிருடன் இருந்தால் என் இந்தக் கருத்தை மறுத்துத்
தன்னைத் தமிழ்க்கவிஞராக முன்வைக்கச் சொல்லியிருப்பார். ஆனால் நான் அவரைப் புலம்பெயர்க் கவிஞராக முன்வைப்பதற்கு
அவர் புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்ததன் பின் எழுதத்தொடங்கியதால் மட்டுமின்றி, அவரை என்னைப் போன்ற பல புலம்பெயர்ந்தவர்களின் பிரதிநிதிகளில்
ஒருவரென நினைத்துக் கொள்வதாலும் இப்படிச் சொல்கின்றேன். இப்படி அடையாளப்படுத்துவதால் அவருக்குப் பொதுவான
தமிழ்ச்சூழலில் இருக்கும் அடையாளத்தை மறைப்பது என்பதல்ல அர்த்தம்.
திருமாவளவன் 'பனிவயல் உழவு' (2000), 'அஃதே இரவு அஃதே பகல்' (2003), 'இருள்-யாழி' (2008), 'முதுவேனில் பதிகம்' (2013) நான்கு கவிதைத் திரட்டுக்களையும், பின்னர் இறுதியாக 'சிறு புள் மனம்' (2015) என்ற முழுக்கவிதைத்
தொகுப்பையும் நமக்குத் தந்துவிட்டுப் போயிருக்கின்றார். ஏலவே தனித்தனியாக வந்த நான்கு கவிதைத் தொகுப்புக்கள் பலரால்
விரிவாகப் பேசப்பட்டுவிட்டதால், நான் 'சிறு புள் மனம்' தொகுப்பின் இறுதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் இருபது கவிதைகளை என்
வாசிப்பிற்காக இங்கே எடுத்துக்கொள்கின்றேன்.
திருமாவளவனின் கவிதைகள் அநேகம் தாய்மண்ணில் விட்டுவந்த வாழ்வையும், புலம்பெயர்ந்து புதிய சூழலுக்குள் பொருந்திக்கொள்ள முடியா
வாழ்க்கையும் பேசியவை என ஒரு எளிய புரிதலுக்காய் சொல்லிக்கொள்ளலாம். இனி தாயகம் மீளுதல் சாத்தியமில்லை என்ற
புரிதல் அவரின் கவி மனதுக்குத் தெரிந்தாலும், புலம்பெயர்ந்த நாட்டிலும் தன்னையொரு அந்நிய மனிதராகத் தொடர்ந்து முன்னிறுத்தவே
அவரது மனம் அவாவிக்கொண்டிருந்திருக்கின்றது. கழிவிரக்கக் கவிதைகள் பெருமளவில் திருமாவின் கவிதைத் திரட்டுக்களில் இருந்தளவுக்கு
புலம்பெயர்ந்த வாழ்வை ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கைகொள்ளும் கவிதைகள் அவரது தொடக்கக்
காலக் கவிதைகளில் அரிதாகவே இருந்திருக்கின்றன. அவ்வப்போது நம்பிக்கை தளிர்களாக துளிர்த்தாலும் அவை ஒருபோதும் ஆழ வேர் விட்டு
பெரு விருட்சமாக வளர்ந்ததேயில்லை. இனியென்ன இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்வோம் என்கின்ற
சலிப்புடந்தான் அந்த நம்பிக்கை தொனி அவரின் பல கவிதைகளில் வந்து தெறித்திருக்கின்றது.
எனினும், இந்த நம்பிக்கையீனமான 'நம்பிக்கை' அவரது பேத்தி பொன்னி கவிதைகளுக்குள் வந்தவுடன் வேறொரு
பரிணாமத்தை எடுத்துக்கொள்கின்றது. புலம்பெயர் வாழ்வில்
அவருக்கு இருந்த நம்பிக்கையீனங்களையும், சலிப்புக்களையும் குழந்தை பொன்னி வாரித் துடைத்துக்கொண்டு சென்றுவிடச்
செய்கின்றாள். அதிலும் திருமாவிற்கு தன் நோயின் வீர்யம் விளங்கியபின்னர்
வாழ்வதற்கான நம்பிக்கை இன்னும் அதிகம் வந்துவிடுகின்றது. அவரது புதிய கவிதைகளில் முக்கியமாக ‘நோயில் பத்து’ என
எழுதப்பட்ட பத்துக் கவிதைகளில் நோயை/மரணத்தை ஒரு ஒற்றைக்கண் பூனைக்கு உவமித்து எழுதினாலும், அதனோடு ஒரு பரமபத விளையாட்டைச் செய்துகொண்டு வாழ்வைச்
சுகிக்க விரும்புகின்ற ஒருவராக திருமா தன் கவிதைகளில் எழுகின்றார்..
நோய் அவரைத் தனிமையில்
வீழ்த்துகின்றது. விரும்பிய எதையும்
செய்யமுடியாது தடுக்கின்றது. நினைவுகளும்/கனவுகளும் அவரை அவர் புலம்பெயர் தேசத்திலா அல்லது
தாய்மண்ணிலா இருக்கின்றேன் என்ற குழப்பதையெல்லாம் கொண்டுவருகின்றது. இந்தப் பொழுதுகளில் அவருக்குப் பொன்னியும், கடந்தகாலக் காதல்களும் துணையாக இருக்கின்றன. பொன்னி ஒரு வருங்காலத்தின் படிமம் என்றால், காதல் நினைவுகள் கடந்தகாலத்தின் படிமங்களாகின்றன. வெண்தாடியைத் தடவிக்கொண்டு பழைய தன் காதலிகளோடு உரையாடல்களை
நிகழ்த்துகின்றார்.
கடந்த வாழ்க்கைக்குள் இனி மீள்தல் சாத்தியமில்லை என்றாலும், கவிதைகளால் அவர்களை நெருங்கிப் பார்க்க முயல்கின்றார். ஒழுங்கைகளில் காதலியின் கைபிடித்து நடந்த நினைவுகள் 'பெருகி வழிகிறது/கழிந்துபோன வாழ்வின் மீது/மீளமுடியாக்/ காதல்' என எழுத வைக்கின்றது. நிலமெங்கும் சிந்திய மென் ஊதா லைலாக்
மலர்கள், விரகம் முற்றிய பெண்ணின் கூந்தலிருந்து சிதறி மஞ்சம் நிறைத்த பூக்களை நினைவுபடுத்த
'கங்கையை/ சடைக்குள் புதைத்து வைத்த
சிவன் அறிவான்/ ஒவ்வொரு மனிதனின் தலைக்குள்ளும்/ முள்ளெனக் கிடந்து நெருடும்/நினைவின் வலி' எனப் பெருமூச்சு வைக்க
வைக்கின்றது.
இவையெல்லாம் திருமா நோயின் பெரும் வாதையுடன் துடித்துக்கொண்டிருந்தபோது, வாழ்வதற்கான நம்பிக்கையை முன்வைக்கின்ற எழுத்துக்களாக நாம்
கண்டுகொள்ளலாம். எத்தகைய துயரத்திலும் நினைவுகள்தானே நம்மை மயிலிறகின்
வருடல்களாய் ஆசுவாசப்படுத்துகின்றன. இது இன்னொரு வகையான 'மரணத்துள் வாழ்வது'.
இவ்வாறாகத் தன் தொடக்க கவிதைத் திரட்டுக்களில் கழிவிரக்கமாய் வாழ்வைப் பார்த்த
ஒரு கவிமனது, பின்னர் வந்த நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் அதை இன்னும்
சுகிக்க எழுகின்றது. தனது கவிதைகளால் அடுத்த
தலைமுறைக்கான தீக்குச்சி வெளிச்சத்தைக் கொடுக்க விரும்புகின்றது. தன் மரணத்தின் பின்னும் ஒரு மரமாக உயிர்வாழ்வேன நம்பிக்கை
கொள்கின்றது.
இன்று திருமாவளவன் நம்மிடையே இல்லையென்கின்றபோதும், அவரது கவிதைத் திரட்டுக்கள் இருக்கின்றன. அவை புலம்பெயர் வாழ்வின் - முக்கியமாக கனடாவின் - குறுக்குவெட்டுப் பரப்பைப்
பார்ப்பதற்கான சாளரமாக இருக்கின்றன. திருமாவின் கவிதைகளை திரும்பத் திரும்ப மறுவாசிப்புச் செய்வதினூடாக
தமிழ்ச்சூழலில் அவருக்கிருக்கும் வகிபாகத்தை நாம் நினைவூட்டிக்கொள்ளலாம்.
............................................
நன்றி: நடு