கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஹெமிங்வேயின் படகு

Thursday, March 21, 2019



Hemingway's Boat by Paul Hendrickson


ஹெமிங்வேயின் படைப்புக்களைப் போல அவரது 38 அடிகள் நீண்ட படகும் பிரபல்யமானது. அவரது இரண்டாவது மனைவியாகப் போகின்ற Paulineன் செல்லப்பெயரான Pilarயே இந்தப் படகிற்குச் சூட்டப்படுகின்றது. பிறகு 'ஆயுதங்களுக்கான விடைகொடுத்தல்' (A Farewell to Arms) நாவலின் ஒரு பாத்திரமாகவும் இந்தப் பெயர் வருகின்றது. 'ஹெமிங்வேயின் படகு' என்கின்ற இந்த நூலில் ஹெமிங்வே படகை வாங்கிய 1934ல் இருந்து அவர் தற்கொலை செய்த 1961 வரை இந்தப் படகிலும், படகைச் சுற்றியும் நடந்த சம்பவங்கள் விபரிக்கப்படுகின்றன.

Paulineயோடான திருமணத்தில் இருக்கும்போதே ஹெமிங்வேயிற்கு, பத்திரிகையாளரான Martha Gellhornயோடான உறவு வருகின்றது. பின்னர் மார்த்தாவை 1940ல் திருமணம் செய்கின்ற ஹெமிங்வே, ஹாவானாவில் வீடு வாங்கி அங்கேயே மார்த்தாவுடன் வாழத்தொடங்குகின்றார். படகும் அவர்களுடன் கூடவே அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு வருகின்றது. இதனோடு Pillar ஹவானாக் கடற்கரையிலே தன் 'வாழ்வை'த் தொடங்கி இப்போது ஹெமிங்வே நினைவாலயம் ஆக்கப்பட்ட ஹவானா வீட்டில் தேடிவருபவர்களுக்கு காட்சியளித்துக் கொண்டுமிருக்கின்றது.

இந்தப் படகிலிருந்தும், ஹாவானாவில் இருந்துமே ஹெமிங்வே அவரது முக்கிய நூல்களை எழுதியிருக்கின்றார். மார்த்தாவோடு இருந்த காலத்தில் 'யாருக்காக மணி அடித்தது?' (For Whom the Bell Tolls) எழுதியதைப் போல, அவரது நான்காவது மனைவியான மேரியுடன் இருந்தபோது அவரது பிரபல்யம் வாய்ந்த 'கிழவனும் கடலையும்' (The Old Man and the Sea) இங்கேயே எழுதியிருக்கின்றார். அத்தோடு விமர்சகர்களால் மிக மோசமென விமர்சிக்கப்பட்ட 'Across the Rrivers and into the Trees'ம் இதே காலகட்டத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றது.

இந்த நூல் 'ஹெமிங்வேயின் படகு' பற்றியது என்றாலும் அந்தக் காலப்பகுதியில் ஹெமிங்வே எழுதிய‌ நாவல்கள்,  பிறருக்கு அவர் எழுதிய கடிதங்கள் (ஹெமிங்வே அவரது வாழ்க்கையில் 6000-7000 கடிதங்கள் எழுதினார்)  என்பவை விரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதேபோல ஹெமிங்வேயிற்குள் இருக்கும் மூர்க்கம், அவ்வப்போது எழுதமுடியாது தோற்றுப்போய்க்கொண்டிருக்கின்ற எழுத்தாளனின் ஆற்றாமை,  அவரது மனைவிமார்/காதலிகள் போன்றோருடன் அவர் நடந்துகொண்டவிதம் என்பவை அற்புதமாக, பல்வேறு சான்றாதாரங்களினூடு விபரிக்கப்படுகின்றன.


ஹெமிங்வேயின் பெண்கள் எனப் பார்த்தால், ஹெமிங்வே தனது தாயை ஒருபோதும் மன்னிக்கத் தயாரில்லை என்பது தெரிகின்றது. தனது தகப்பனின் தற்கொலைக்குத் தனது தாயே காரணமென நம்பியதோடு, தாயிற்கு எழுதும் கடிதங்களிலும் தொடர்ந்து அதனைக் குறிப்பிட்டுக்கொண்டேயிருக்கின்றார். அவரது தாய் மீளவும் தன் மகனோடு இணைய விரும்பும் ஒவ்வொரு முயற்சியையும் உதறித்தள்ளியபடியே ஹெமிங்வே இருந்திருக்கின்றார். எனினும் அவரது முதல் நாவல் வருகின்றபோது தாயின் பெயரை ராயல்டியில் சேர்த்து, அவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பிக்கொண்டுமிருந்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீள இணையும் வாய்ப்பு இருவருக்கும் இயலாது போயினும், அவரது தாய் இறந்துபோனபோது ஹெமிங்வே தாயின் இறப்புக்குப் போக மறுத்திருக்கின்றார்.

ஹெமிங்கே முதல் காதலியைச் சந்திப்பது, இத்தாலியில் முதலாம் உலக மகாயுத்தத்தின்போது அவர் காயப்படுகின்றபோதாகும். தன்னைக் காப்பாற்றும் தாதியையே விரும்பி, திருமணம் செய்ய விரும்புகின்ற ஹெமிங்வேயிற்கு அந்தப் பெண்ணுக்கு ஒரு இத்தாலியரோடு உறவு வருவதால் அதுவும் கைகூடாது போகின்றது. அதன் பிறகு அவர்  நான்கு பேரைத் திருமணம் செய்திருக்கின்றார். ஒரு உறவில் இருக்கும்போது இன்னொரு உறவு தேடி ஓடியிருக்கின்றார். மனைவியர் இருக்கும்போது இளம் பெண்களோடு காதல் வயப்பட்டதோடல்லாது, பாலியல் தொழிலாளியையும் விருந்துகளுக்கு அழைத்து வந்திருக்கின்றார்.

அவர் சந்தித்த பெண்கள் வெவ்வேறுவிதங்களில் அவரின் நாவல்களில் வந்திருக்கின்றனர். கதைகளில் வரும் இந்தப் பாத்திரந்தானா அந்தப் பெண் என்று வாசிப்பவர்கள் நினைப்பதற்கு இடந்தராது அவர்களிடம் இல்லாத விடயங்களையும் இந்தப் பாத்திரங்களுக்கு இணைத்து வேறொரு வடிவத்திலும் கதையைக் கொண்டு செல்வதிலும் ஹெமிங்வே நுட்பமானவராக இருந்திருக்கின்றார்.

ஹெமிங்வேயின் ஐம்பதுகளில் அவருக்கு 21 வயதான அடீரியானாவுடன் 'காதல்' வருகின்றது. ஹெமிங்வே அவரது மனைவி மேரியுடன், வெனிஸில் சில மாதங்களுக்குத் தங்கி நிற்கும்போதே அடீரியானாவை ஹெமிங்வே சந்திக்கின்றார். பிறகு ஜரோப்பாவில் இன்னொரு பகுதியிலும் அடீரினானாவைச் சந்தித்து உடனே தன் காதலைச் சொல்லிவிடுகின்றார். திருமணம் செய்யக் கேட்கும்போது அடீரீயானா அவருக்கு ஏற்கனவே மனைவி இருப்பதை ஞாபகப்படுத்துகின்றார். என்கின்றபோதும் ஹெமிங்வேயால் அந்தக் காதலைக் கைவிடமுடியாது, கியூபாவிற்கு வந்தபிறகும் நிறையக் காதல் கடிதங்கள் அடீரீயானாவிற்கு எழுதுகின்றார்.

அடீரியானா தனது தாயாருடன் ஹவானாவிற்கு வருகின்றார். ஹெமிங்வேயுடன் மேரியுடனும் சில மாதங்கள் தங்கி நிற்கும் அடீரியானாவை அவரது தோற்றுப்போன நாவலான 'Across the rivers and into the trees'ல் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாகியும் விடுகின்றார். இதையெல்லாம் சகித்துக்கொண்ட அவரது மனைவி மேரி, ஹெமிங்வேயின் இறப்பின் பின் எழுதுகின்ற நூலான 'How it was' மிக விரிவாக இந்தத் தங்கலில் நடந்த சம்பவங்களை விபரித்து ஹெமிங்வேயின் இன்னொரு பக்கத்தை நமக்குக் காட்டியுமிருப்பார்.


'Across the rivers and into the trees' தோல்வியும் விமர்சகர்களின் எள்ளலுமே ஹெமிங்வே அவரது முக்கிய நாவலான 'கிழவனும் கடலும்' எழுத உத்வேகத்தைக் கொடுக்கின்றது.
இந்தக் கதை கடலில் உண்மையில் நடைபெற்று ஹெமிங்வேயிற்கு அவரது நண்பரொருவரால் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த நாவலில் வரும் கிழவனின் பாத்திரத்தை ஹெமிங்வே அவரது படகிற்கு கப்டனாக இறுதிவரை இருந்த ஸ்பானியரான கிறிகோரியோ புயண்டஸின் சாயலில் எழுதியிருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. ஹெமிங்வேயின் மனைவிகளை விட இந்தக் கப்டனே ஹெமிங்வேயுடன் நீண்டகாலமாக கூடவே இருந்தார் என்றொரு நகைச்சுவையும் உண்டு.

ஹெமிங்வேயிற்குள் நெடுங்காலமாக இருந்த மனவழுத்ததை ஆற்றுப்படுத்தும் ஒரு விடயமாக இந்தப் படகும், மீன் பிடித்தலும் அமைந்திருக்கின்றது. கியூபாப் புரட்சியின் பின்னும் ஹெமிங்வே கியூபாவிலேயே இருந்திருக்கின்றார். எனினும் மன அழுத்தப் பிரச்சினை உக்கிரமாக 1960ல் அமெரிக்காவிற்குப் போய் ஒரு வருடத்திற்குள்ளேயே தற்கொலையைச் செய்கின்றார்.

தனிப்பட்ட நண்பர்களுக்கு உதவி செய்வதில் தயங்காத ஹெமிங்வேதான் தனது விமர்சகர்கள் மீது நாம் நினைத்தும் பார்க்காத மொழியில் பதில் கடிதங்களும் எழுதியிருக்கின்றார். அவரது முதல் நாவலைப் பிரசுரிக்க, பதிப்பாளர் தேடிக்கொடுக்கின்ற Scott Fitzgeraldடன் பிறகு கோபிக்கவும் செய்கின்றார். ஸ்காட்டின் இறப்பின்பின் அவரை விளங்கிக்கொள்வதாக ஹெமிங்வே குறிப்பிட்டாலும் அதைத் தெரிந்துகொள்ளாமலே ஸ்காட் இறந்துபோகின்றார்.

அதேபோன்று அவரோடு நீண்டகாலமாய் வாழ்ந்து அவரது பல்வேறு வன்முறைகளைத் தாங்கிக்கொண்ட மேரியின் முன் தான், அவரது காதலியான 21 வயதான அன்டீரியானாவை மட்டுமின்றி, பாரில் சந்திக்கும் ஒரு பாலியல் தொழிலாளியையும் கூட்டிக்கொண்டும் வருகின்றார். இவற்றை உளவியல் பிரச்சினைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதர் என்பதைவிட, ஆண் என்கின்ற அடையாளத்திற்குள் வைத்து ஹெமிங்வேயைப் பார்ப்பது வேறொரு திசையில் நமக்கு பல விடயங்களைப் புலப்படுத்தவும் கூடும்.

ஹெமிங்வேயின் படைப்புக்களைப் போல, அவரது தனி வாழ்க்கையும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாததும், பல்வேறு உள்ளடுக்குகள் கொண்டதுமாகும். அவர் இரசிக்கத்தக்க மனிதர் என்றாலும் மிகுந்த சிக்கலான மனிதர் என்கின்ற விம்பமும் ஹெமிங்வேயைப் பற்றி நினைக்கும்போது கூடவே வந்துவிடுகின்றது. அதுவே ஹெமிங்வே கிட்டத்தட்ட அவரது வாழ்க்கைக் காலத்தைப் போல, 60 ஆண்டுகள் அவர் இறந்து கடந்தபின்னும், அவரைப் பற்றித் தேடித்தேடி நம்மை வாசிக்கத் தூண்டுகின்றது.

---------------------------------------

நன்றி: 'அம்ருதா' ‍பங்குனி, 2019 \

0 comments: