நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

பெளலோ கொய்லோவின் 'ஹிப்பி'

Wednesday, March 13, 2019

Hippie By Paulo Coelho

1960களில் ஹிப்பி இயக்கம் ஓர் அலையாக உலகெங்கும் எழுகின்றது. கீழைத்தேச நாடுகளின் தத்துவங்களையும், சன்னியாசிகளையும் தேடிப்போகின்ற ஒரு காலம் மேற்கத்தையவர்களுக்கு வாய்க்கின்றது. 60களின் பிற்பகுதியிலும், 70களின் தொடக்கத்திலும் ஹிப்பியாக அலைகின்ற ஒருவன் லத்தீன் அமெரிக்கா நாடொன்றிலிருந்து ஐரோப்பாவிற்கு தன்னைத் தொலைக்க வருகின்றான். தற்செயலாக அங்கே ஒரு பெண்ணைச் சந்திக்க, அவள் அவனுக்குள் நேபாளத்திற்குப் போகும் ஆசையைப் பெருகச் செய்கின்றாள். இறுதியில் ஐரோப்பிய அலைச்சலை ஒதுக்கிவைத்து அந்தப் பெண்ணோடு ஆம்ஸ்டடாமிலிருந்து நேபாளத்திற்கு ஹிப்பிகளால் அன்று Magic Bus என அழைக்கப்படும் ஒரு பஸ்ஸில் புறப்படுகின்றான். நெதர்லாண்ட்,  ஜேர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, லெபனான், ஈரான், ஈராக், பாகிஸ்தான், இந்தியா என பலநாடுகளை, பல ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி மூன்று வாரங்களுக்கு மேலாய் செய்யும் ஒருவகையான சாகசமான பயணம் என இதை அழைத்துக்கொள்ளலாம்.

பெளலோ தன் இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கின்றான். அதற்கு முன்னரே தன்னைவிடப் பத்து வயதான யூகோஸ்லாவாக்கிய காதலியோடு பெரு நாட்டின் மச்சுபிச்சுவிற்குப் போயிருக்கின்றான். மச்சுபிச்சுவிற்குப் போய், பொலிவாவைப் பார்த்து பிரேஸிலிக்குள் நுழையும்போது, அன்றைய பிரேசிலிய வலதுசாரி அரசு/இராணுவத்தால் இருவரும் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார்கள். பெளலோவின் காதலி இடதுசாரி சார்புள்ள யூகோஸ்லாவாக்கியாவைச் சேர்ந்தவள் என்பதால் இவர்கள் இருவரும் அந்நாட்டின் உளவாளிகளென சந்தேகத்தின்பேரில் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள். கடும் சித்திரவதையின் பின் இவர்கள் உளவுபார்க்க வந்தவர்கள் இல்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டாலும், பெளலோவிற்கு அதன்பிறகு பொலிஸ்/இராணுவத்தைக் கண்டாலே உளஅழுத்தமும், பதற்றமும் ஒவ்வொருமுறையும் வந்துவிடுகின்றது. இந்தச் சித்திரவதையின் பின், அவனது காதலியும் நடைமுறைச் சாத்தியங்களைக் காரணங்களைக் காட்டி விலத்திப் போகின்றாள்.

ஹிப்பி இயக்கத்தினுள்ளே தன்னைப் பொருந்திக்கொண்ட பெளலோ ஹிப்பி இயக்கம் பற்றிய நாம் அறியாப் பல உண்மைகளைச் சொல்கின்றார். ஒருவகையில் ஹிப்பி இயக்கங்களை பெண்களே முன்நின்று நடத்திக்கொண்டிருந்தார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்கின்றார். ஆண்களாகிய தம்மால் எதையும் தனித்துச் செய்யமுடியாது எனச் சலிப்படைகின்றபோது பெண்களே தமக்கு அடைக்கலந்தந்து வழிப்படுத்தியிருக்கின்றார் என பெளலோ குறிப்பிடுகின்றார்: 'நாம் தனித்திருக்கின்றோம். எம்மை இந்த உலகமும், காதலும் கைவிட்டு விட்டதென கதறும்போது பெண்களே, ஆண்களாகிய நமக்கான திசைகளைக் காட்டியிருக்கின்றார்கள்'.

ஹிப்பி இயக்கம் அதனளவில் தந்த சுதந்திரத்தால், திருமணம் என்கின்ற அமைப்புக்கள் போகாது தமக்கான ஆண்களைப் பெண்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள். காடுகளிலும், காமத்திலும் அதன் உச்சங்கள் வரை ஆண்களை எடுத்துச் சென்று வாழ்வின் புதிய பாதைகளை அவர்களே திறந்து காட்டுகின்றார்கள். அதேபோன்று தமக்கான முடிவுகளையும் தெளிவாக எடுத்து தொடர்ந்து -ஆண்களுக்காய் காத்திருக்காது- நகர்ந்துபோகின்றவர்களாகவும் அந்தப் பெண்களே இருக்கின்றார்கள்.

ஹிப்பிகளின் உள்சுற்றுக்கென போய்க்கொண்டிருக்கும் invisible post அவர்களுக்கு ஒரு முக்கிய வழிகாட்டிப் புத்தகமாக இருக்கின்றது. 60களில் இந்தியாவில் சாமியார்களைத் தேடிப் போய்க்கொண்டிருந்த அலையை, பீட்டில்ஸிற்கு (Beatles) அணுக்கமாக இருந்த மகரிஷி மகேஷ் யோகி, ஜான் லெனனின் காதலியான மியா ஃபாரோவோடு குகைக்குள் முறைதவறி பாலியல் வன்முறை செய்யமுயன்ற நிகழ்வு ஹிப்பிகளிடையே, முற்றுமுழுதாக மாற்றிப்போட்டு விடுகின்றது. ஹிப்பிப் பெண்கள் இந்தியாவை விலத்தி தமது புதிய தடங்களை நேபாளத்தின் காத்மாண்டு நோக்கி நகர்த்தத் தொடங்குகின்றனர்.


1970ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆம்ஸ்டடாமைச் சுற்றிப் பார்க்க வந்த பெளலோ, கார்லா என்கின்ற நெதர்லாண்டுப் பெண்ணைச் சந்திக்கின்றார். நல்லதொரு வேலையில் அந்நாட்டில் இருக்கின்ற கார்லாவின் உள்மனதை நேபாளத்தின் 'ஆன்மீகம்' எங்கோ தொலைவிலிருந்து அழைக்கின்றது. தனது வேலையைத் துறந்துவிட்டு ஹிப்பியாக மாறுகின்ற கார்லாவிற்கு இதுவரை ஒருபோதும் சென்றிடாத நேபாளத்திற்குத் தனித்துச் செல்லத் தயக்கம் இருக்கின்றது. எனவே இந்த 'மாய பேரூந்தில்' நேபாளம் போவதற்கு ஒரு நண்பரைத் தேடிக்கொண்டிருக்கின்றார். இலத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த பெளலோவைச் சந்தித்தாலும், பெளலோவிற்கு கீழைத்தேய ஆன்மீகத்தேடலில் பெரிய ஈர்ப்பு இருக்கவில்லை என்பதையும் கார்லா அறிகின்றார். சில நாள்கள் கார்லாவோடு அலைகின்ற பெளலோ, சட்டென்று ஒரு முடிவை எடுத்து கார்லாவோடு நேபாளத்திற்கு பஸ்சில் போவதற்கு டிக்கெட்டை வாங்கிவிடுகின்றார்.

பெளலோவும், கார்லாவும் இந்தப் பஸ்சில் ஏறினாலும், அந்த பஸ்சில் வருகின்ற பல்வேறு நபர்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றார்கள். வீட்டை விட்டு ஓடிவரும் இரண்டு பதின்மப்பெண்கள்,  ஒரு தகப்பனும், மகளும், இன்னொரு காதல் சோடியென ஒவ்வொருத்தரும் தமக்கான கதைகளைக் கொண்டிருக்கின்றனர்.

தகப்பனும், மகளுமாக இந்தப் பயணத்தில் வருகின்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றி நிச்சயம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பிரான்ஸில் 1968ல் மாணவர் புரட்சியில் ஈடுபட்டவர்களில் இந்தப் பெண்ணும் ஒருவர். அந்தப் புரட்சி தோற்றுப்போனதன் காரணத்தை அறியவும், தன்னையொரு இடதுசாரியாக முற்றாக ஆக்கவும், இந்திய-சீனா எல்லையிலிருக்கும் மாவோயிஸ்டுக்களைச் சந்திக்க இந்தப் பெண் விருப்புக் கொள்கின்றார். அதேவேளை அவரின் தகப்பனோ நாளாந்த வாழ்க்கையில் ஒரு சலிப்படைந்து, கீழைத்தேயத்திற்குப் புறப்பட தன் மகளைத் துணைக்கு அழைக்கின்றார்.

இவ்வாறு  ஒரு பயணமும், மனிதர்களும் நமக்குச் சுவாரசியமாக அறிமுகப்படுத்தப்படுகின்றார்கள். பஸ் நிறுத்தப்படும் ஒவ்வொரு இடங்களிலும் அந்தச் சூழல் விரிவாக விபரிக்கப்படுகின்றது. ஹிப்பிகள் கட்டுப்பாட்டற்றவர்கள் என்பதை மறுத்து அவர்களைப் பற்றிப் பொதுப்புத்தி வைத்திருக்கும் பல தவறான எண்ணங்களை இந்தப் பயணத்தினூடு நமக்குச் சொல்லப்படுகின்றது. எப்போதும் ஹிப்பிகளுக்கு, பொது உலகோடு போய் இணையுங்கள், இதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று சொல்லப்படுகின்ற 'அறிவுரைகளை' நமக்கு ஞாபகப்படுத்தப்படுகின்றது.

வன்முறையையும், போரையும் வெறுத்து, மிகுந்த நெகிழ்வு கொண்ட, எவருக்கும் அதிகம் தீங்கு விளைவிக்காது தமது இயல்பில் வாழ்கின்ற பல அரிய மனிதர்களை நாம் இங்கே கண்டுகொள்கின்றோம். மிகப்பெரும் துறைகளில் இருந்து வாழ்வின் ஆடம்பரங்களை அனுபவித்த பலர் ஒரு நொடிப்பொழுதில் எல்லாவற்றையும் உதறித்தள்ளி, எந்த அடையாளங்களுமில்லாது தம்மை ஆக்கிக்கொண்டு அலைந்து திரிபவர்களாக மாறுவதையும் நாம் வியப்புடன் பார்த்துக்கொள்கின்றோம்.

பல்வேறு நாடுகளில் தங்கி நின்று, இரசித்து, பொதுப்புத்தியினதும்/பொலிஸினதும் வன்முறையும் சகித்து, இந்தப் பயணம் பல்வேறு நாடுகளினூடாகத் தொடர்கின்றது. பேரூந்து துருக்கியை வந்தடைகின்றபோது ஜோர்டானில் மாறும் அரசியல் நிலவரம், சில வாரங்கள் இஸ்தான்புல்லில் தங்கவேண்டிய நிலையை இவர்களுக்கு உருவாக்கின்றது.

பயணத்திடையே பெளலோவிற்கு நல்லதொரு நண்பராக இருக்கும் கார்லாவை, இஸ்தான்புல்லின்  சூழ்நிலை பெளலோவைக் காதலிக்கும் மனோநிலையை உருவாக்கின்றது. ஒரு அழகான மாலைப்பொழுதில் அவர்கள் தமது உடல்களைப் பகிர்கின்றார்கள். பெளலோவிற்கும் கார்லாவின் மீது அளவிறந்த காதல் வருகின்றது. ஆனால் அவரது தேடல் இன்னொருவிதத்தில் அவரை அழைத்துச் செல்கின்றது. துருக்கியில், பெளலோவின் மனதில் சிறுவயதில் சித்திரமாக உருவாகித் தேங்கிப்போன சூஃபிகளின்பால் அது செல்கின்றது. தொடர்ச்சியாக சூஃபிகளைச் சந்திக்கப் போகத்தொடங்கிய அவரது ஆன்மீகப் பயணத்தில் (அவர் அங்கே சந்திக்கின்ற ஒரு பிரெஞ்சு சூஃபியின் கதை இன்னும் சுவாரசியமானது), அவர் ஒரு முடிவை தீர்க்கமாய் எடுக்கவேண்டியிருக்கின்றது.

தனக்குப் பிடித்த சூஃபியிஸத்தை அறிய துருக்கியில் நிற்பதா அல்லது கார்லாவின் காதலுக்காய் நேபாளம் வரை அவரோடு செல்வதா என்பது. பெளலோவின் வாழ்வின் ஆன்மீகத்தேடலின் முக்கிய புள்ளியாக வந்து இடைவெட்டுகின்றது.
காலம் நகர்கின்றது. இன்று பெளலோ ஒரு பிரபல்யம் வாய்ந்த எழுத்தாளராக ஆகிவிட்டார். அதன் பிறகு இடையில் ஆம்ஸ்டடாம் போய் தன் நூல் பற்றிப் பேசியபோதும், கார்லாவைச் சந்தித்துவிடக்கூடுமென நினைக்கின்றார். கார்லா என்றென்றைக்குமாய்க் காணாமற்போய்விடுகின்றார்.


ந்த நூல்  இரஸவாதி (Alchemist) எழுதிய Paulo Coelhoவின்  சுய அனுபவங்களின் தொகுப்பாகும். பெளலோவின் ஒரு சில நூல்களை நான் மேலோட்டமாக வாசித்திருந்தாலும், அவரை என் அலைவரிசைக்குரிய ஒரு எழுத்தாளராகக் கொண்டதோ, தொடர்ந்து அவரது நாவல்கள் அனைத்தையும் தேடி வாசிக்கவேண்டும் என்றோ நினைத்ததில்லை. அண்மையில் நூலகத்திற்குச் சென்றபோது 'ஹிப்பி' என்ற பெயரைப் பார்த்த ஒரு காரணத்தாலும், இந்தப் பயணம் எதைப் பற்றி என்று சிறு குறிப்பை வாசித்ததாலும் எடுத்துக்கொண்டு வந்து வாசித்து முடித்திருந்தேன்.

இது ஒரு சுவாரசியமான நூல் என்றாலும், 300 பக்கங்கள் உள்ள நூலின் அரைவாசிப் பகுதிவரையும் பயணம் ஆரம்பிக்கவேயில்லை. பயணத்திற்கான தயார்ப்படுத்தல்கள் மற்றும் இன்னபிற விடயங்களே அதிகம் பேசப்படுகின்றன. பயணத்தின்போது பிற மனிதர்களை அதிகம் பேசப்படுகின்றார்களே தவிர, பெளலோ பற்றியோ அல்லது கார்லா பற்றியோ அதிகம் அறிய முடிவதில்லை. ஆகக்குறைந்தது அவர்களின் ஆழ்மன ஆன்மீகத்தேடல்கள் பற்றியாவது விரிவாக இதில் பேசியிருக்கலாம்.

பெளலோ ஒரு தீவிரமான கத்தோலிக்க குடும்பத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர். பதின்மங்களில் அளவுக்கதிமான துடுக்காய் இருக்கின்றார் என்பதற்காகவே உளவியல் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டவர். அங்கிருந்து தப்பியோடி, அவர் கண்டுபிடிக்கும் முதலாவது காதலியும் அவரை விடப் பத்து வயது அதிகமாய் இருப்பதால் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டவர். பின்னர் பொலிவியா, சிலி, ஆஜெண்டீனா போன்ற நாடுகளுக்கு அவரின் காதலியோடு ஹிப்பியாக அலைந்துவிட்டு பிரேஸிலுக்கு நுழையும்போது பொலிஸின் சித்திரவதையும் அனுபவித்தவர். பெளலோ ஸ்பெயினில் பல நூற்றுக்கணக்கான் மைல்கள் கிறிஸ்துவின்பால் கொண்ட அன்பினால் பாத யாத்திரை செய்தபோது தனக்குள் ஆன்மீகத் தெளிவு ஏற்பட்டதெனச் சொல்லியிருக்கின்றார். அதன்பின்னரே அவரால் Alchemist எழுதப்பட்டு உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டவர்.

ஒரு எழுத்தாளராக வரும் கனவு பெளலோவிற்கு இளவயதிலேயே வந்துவிடுகின்றது. அந்தக் கனவிற்கு இப்படி அவரின் 20களில் அலைந்து திரிந்த பயணம் இன்னும் ஊக்கத்தைக் கொடுத்திருக்கின்றது. பெளலோ அவரது Alchemist ஐ எழுதும்போது நாற்பதைக் கடந்துவிட்டார் என்பதையும் கவனிக்கவேண்டும்.
அறுபதுகளிலும், எழுபதுகளிலும் பெரும் அலையாக எழுந்த ஹிப்பி இயக்கத்தின் ஒரு குறுக்குவெட்டு முகத்தைப் பார்க்க பெளலோவின் 'ஹிப்பி'யை வாசித்துப் பார்க்கலாம். ஆனால் இது மட்டுமே ஹிப்பிகளின்  முழுச்சித்திரத்தையும் தந்துவிடாது என்கின்ற அவதானத்தையும் இந்த நூலை வாசித்து முடித்தபின்னும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.

.....................
 நன்றி: 'அம்ருதா' - மாசி, 2019


0 comments: