கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஓவியர் கருணா

Thursday, May 09, 2019


ருணா, ஈழத்தின் பிரபல்யம் வாய்ந்த ஓவியர் மாற்கு மாஸ்டரின் மாணவன். அவர் எப்போதும் ஓவியங்களோடும், புகைப்படங்களோடும், வரைகலைகளோடும் வாழ்ந்து கொண்டிருந்தவர்.  கருணாவை எப்போது முதன்முதலில் சந்தித்தேன் என இப்போது ஞாபகமில்லை.  ஆனால் அவரது அழைப்பின்பேரில் அவரது பழைய அலுவலகம் இருந்த டொன் மில்ஸிற்குச் சில தடவைகள் சென்றிருக்கின்றேன். அப்போதுதான் அவர் இத்தாலிக்குப் போய்விட்டு வந்து அங்கு எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக விபரித்துக்கொண்டிருந்தார்.  பிறகு எனது முதலாவது கவிதைத் தொகுப்பிற்குக் கருணாவின் ஓவியத்தைப் பாவிக்க விரும்பி அவரிடம் சென்றிருக்கின்றேன். அவர் சில ஓவியங்களை மனமுவந்து  தந்து எதையும் பாவித்துக்கொள்ளலாம் என அனுமதி தந்திருந்தார். எனினும் அதை அச்சாக்குவதில் ஏற்பட்ட சிக்கலினால் நிகழாமல் போயிருந்தது.

கருணாவை எங்கு சந்தித்தாலும் புறச்சூழல் எவ்வாறு இருந்தாலும் ஓவியங்கள்/புகைப்படங்கள்/புதிய தொழில்நுட்பங்கள் பற்றி உடனேயே உரையாடத் தொடங்கிவிடுவார். ஆம்ஸ்டடாம் போய் வான்கோவின் ஓவியங்களைப் பார்த்துவிட்டு வந்து நான் ஒரு கட்டுரையாக 'அம்ருதா'வில் எழுதியபோது  மனம் மிகுந்து  பாராட்டியிருக்கின்றார். நம்மிடையே எவரும் ஓவியங்களையோ,  அச்சுப் பதிப்புக்களில் வடிவமைப்புக்கள் பற்றியோ அவ்வளவு எழுவதில்லை, உங்களைப் போன்றோர் இவை பற்றி அடிக்கடி எழுதவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கு ஓவியங்களை/மியூசியங்களைத் தேடிப் பார்ப்பதில் ஆர்வமிருந்தாலும், அவற்றை எழுதிப் பார்க்கவேண்டுமென்கின்ற உற்சாகத்தைத் தந்தவர்களில் ஒருவராக கருணாவைச் சொல்லவேண்டும்.

கருணாவின் சடுதியான மரணம் அதிர்ச்சியானது மட்டுமில்லை இந்த வயதிற்குள் நிகழ்ந்திருக்கக்கூடாதெனவே மனம் அவாவுகிறது. நம்மிடையே இவ்வாறான ஓவியங்கள்/புகைப்படங்கள் போன்றவற்றில் உயரங்கள் மேலேறிப்போனவர்களும், அவற்றின் மீது கறானான பிடிவாதங்கள் உடையவர்களும் மிக அரிதாகவே இருப்பார்கள். கருணாவைப் போலத் திறமையின் ஆழத்துக்குச் செல்வது எல்லோராலும் இயல்வதுமில்லை. அவரைப் போல ஒருவர் மறையும்போது அந்த இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான விடயமுமல்ல. இவ்வாறான திறமைகள் கனிந்து வர நீண்ட காலம் எடுக்கும், மேலும் இவை அடிக்கடி நிகழ்ந்துவிடுபவையும் அல்ல.

வரை ஒருவகையில் கலை மனதோடு கரைந்துகொண்ட குழந்தை எனச் சொல்லலாம். அநேகவேளைகளில் அவர் நடைமுறை வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு யோசித்ததுமில்லை. ஏ.ஜே கனரட்னவையைப் போல, பிரமிளைப் போல கருணா அண்ணாவும் தனக்கான உலகில் ஓவியங்களோடும், புகைப்படங்களோடும், வடிவமைப்புக்களோடும் தனித்து வாழ்ந்தவர். கனடாவில் அவரின் வடிவமைப்புப் பங்களிப்பின்றி வந்த சிற்றிதழ்கள்/பத்திரிகைகள் என்பவை மிகக் குறைவென்றே சொல்லவேண்டும்.

கருணா புகைப்படங்களை அற்புதமாக எடுப்பார். ஆனால் அவரிடமிருந்து புகைப்படங்களை பெற்றுக்கொள்வதுதான் கடினமென்று நண்பர்களிடையே பிரபல்யம் வாய்ந்த கதைகளும் இருந்திருக்கின்றன. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கு நிறையப் புகைப்படங்களை அனுப்பியிருக்கின்றார். நான் முதன்முதலாக  நாடகமொன்றை எழுதி நெறியாள்கை செய்தபோது, பயிற்சி நடந்த ஒருநாளில் தானாகவே அங்கே வந்து புகைப்படங்களை எடுத்து, நாங்கள் கேட்காமலே போஸ்டர்களைக் கூட எங்களுக்காக வடிவமைத்துத் தந்தவர்.

தனது படைப்புக்கள் பேசட்டும், தான் மறைவில் நிற்போமென தன்னை அநேகம் வெளிப்படுத்தாத ஒருவர் கருணா என்பதாக எப்போதும் அவரை நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகின்றேன்.


(நன்றி: 'அம்ருதா' ‍ சித்திரை, 2019)

0 comments: