The Yellow
Envelope by Kim Dinan
'மஞ்சள் கடித உறை' (Yellow
envelope) என்ற நூல், நாளாந்த அமெரிக்கா வாழ்க்கை முறையில் சலித்து ஒரு சோடி தமது சொத்துக்களை விற்றுவிட்டுப் பயணிப்பதைப் பற்றியது. நெடுங்காலப் பயணங்களுக்குரிய பயங்களோடும், பதற்றங்களோடும், எதிர்காலம் எதை மறைத்து வைத்திருக்கின்றது என்ற ஆவலோடும் அவர்கள் புறப்படுகின்றார்கள். இப்படி நெடும்பயணத்தை தென்னமெரிக்காவில் ஈக்குவாடார், பெருவில் தொடங்கி தென்னாசியாவரை கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகச் செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் தாம் வாழ்ந்த நகரத்தைவிட்டு விலகும்போது நண்பர்களிடம் விடைபெறுகின்றனர். அப்போது ஒரு நண்பர் மஞ்சள் அஞ்சலுறையைக் கொடுக்கின்றார். அதற்குள் பணமிருக்கின்றது. இந்த இணை அவர்களின் பயணத்தில் சந்திக்கும் மனிதர்களிடம் ஏதாவது வித்தியாசமாகக் காணும்போது, எந்த யோசனையுமில்லாது அதைக் கொடுக்கலாம் என்கின்றார் அந்த நண்பர். இப்படி மஞ்சள் கடித உறையில் இருக்கும் பணத்தைப் கொடுக்கும்போது அது குறித்து தனக்குத் தெரியப்படுத்த வேண்டியதில்லை எனவும் சொல்லப்படுகின்றது.
தென்னமெரிக்காவில் பயணிக்கும்போது, இந்த இணையின் பெண்ணுக்கு அவரது வாழ்வு குறித்த தேடல் குறுக்கிடுகின்றது. என்னவாக தான் ஆக விரும்புகின்றார் என்பதில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. இருபதுகளில் துணையைக் கண்டுபிடித்து, இப்போது முப்பதுகளில் இருக்கும் கிம், உலகத்தைத் தன்னியல்பில் பார்க்க முடியாது இருப்பதற்கு அவரது கணவன் பிரையனே காரணமென நினைக்கின்றார். ஆகவே அவர்கள் உறவு சிக்கலாகின்றது.
தென்னமெரிக்காவிலிருந்து ஜேர்மனியைப் பார்த்து, இந்தியா செல்லும்போது, கிம்மும் பிரையனும் தனித்தனியாகக் கொஞ்சக் காலம் இந்தியாவில் கழிப்போமெனத் தீர்மானிக்கின்றனர். கிம், பிற இரண்டு பெண்களோடு சேர்ந்து புனேயிலிருந்து கேரளாவுக்கு ஆட்டோ வாடகைக்கு எடுத்து ஓடிச் செல்கின்றார். கிட்டத்தட்ட 1500 மைல்கள் இருக்கும் பயணத்தில் பல்வேறுவகையான அனுபவங்களை அவர் சந்திக்கின்றார். ஒருவகையில் அது கிம் பிற பெண்களோடு தனித்துச் செய்யும் வீரதீரப் பயணம் எனச் சொல்லவேண்டும்.
பிரையனோ தனியே கொஞ்சக்காலம் வடக்கில் திரிந்துவிட்டு, கோவாவிற்குப் போய்ச் சேருகின்றார். கிம் தனது ஆட்டோப் பயணத்தில் மிக வறிய மக்களின் மிகத் தாராளமான மனதைப் பார்க்கின்றார். அது அவருக்குப் பல விடயங்களைத் திறக்கின்றன மட்டுமில்லாது, இந்தத் தனிமை பிரையனைப் பற்றியும், பிரையனுடான உறவைப் பற்றியும் ஆறுதலாக இருந்து யோசிக்கவும் வைக்கின்றது.
இவ்வாறு தனிப்பட்ட உறவுச்சிக்கலுடன், எப்படி இந்த இணை அவர்களின் நண்பர் கொடுத்த 'மஞ்சள் கடித உறையை' எங்கே,யார் யாருக்குக் கொடுக்கின்றனர் என்பது இதில் சுவாரசியமாகச் சொல்லப்படுகின்றது. ஆட்டோவில் நெடும்பயணம் முடித்த கிம், கோவாவிற்குச் சென்று பிரையனோடு இணைந்துகொள்கின்றார். பின்னர் அவர்கள் இருவரும் நேபாளுக்குச் சென்று அன்னபூரணா சேர்க்கிட்டில் வாரக்கணக்கில் ஹைக்கிங் (hiking) செய்கின்றார்கள். அதனோடு அங்கே அவர்கள் செல்லும் புத்தமடலாயங்கள் பற்றி விபரிப்பும் அவர்கள் பெறும் அனுபவங்ககளும் மிகுந்த சுவாரசியமானவை.
அந்த கால்நடைப் பயணத்தை முடித்தபின், எழுந்தமானமாக முடிவெடுத்து இந்தோனேசியாவின் பாலிக்குப் போகின்றார்கள். முதலில் சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருக்கும் தீவிற்குச் சென்று அந்த அனுபவம் கசப்பாக மாறினாலும், பிறகு சுற்றுலாப்பயணிகள் குறைந்த இன்னொரு தீவில் தங்குகின்றனர். அது ஒரு அற்புதமான அனுபவமாக இவர்களுக்குள் விரிகின்றது. பாலிப் பயணத்தை முடித்தபின், வியட்னாமில் நூற்றுக்கணக்கான மைல்கள் சைக்கிளில் பயணிக்கின்றனர். ஒரு நாட்டை, நகரத்தைப் பார்க்க இரண்டு சில்லுகளும், மூன்று சில்லுகளுமே மிகச் சிறந்த சாதனங்கள் எனக் கிம் சொல்கின்றார்.
ஒருவகையில் கிம் இந்தியாவை முச்சக்கர வண்டியான ஆட்டோவாலும், நேபாளத்தை தனது இரண்டு கால்களாலும், வியட்நாமையை இரு சக்கரங்களுள்ள சைக்கிளாலும் சுற்றிப் பார்க்கின்றார். வியட்னாமிய சைக்கிள் பயணத்தை முடித்தபின் மெக்ஸிக்கோவில் சில மாதங்கள் தங்கவும், கிம்மின் பயணந் தொடங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன. இந்தப் பயணம் அவருக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்ததோடு, வாழ்க்கையில் நழுவிப்போயிருக்கும் சந்தர்ப்பங்களையும், வேறொரு திசையில் இருந்து கொண்டு வந்து அவருக்குச் சேர்க்கின்றது.
இவர்களைப் போல இப்படி வருடக்கணக்கில் நீண்டகாலத்துக்குப் பயணம் செய்யவில்லை என்றாலும், சில மாதங்களாவது இப்படிப் பயணித்திருக்கின்றேன் என ஒருவகையில் சின்னச் சந்தோசம் எனக்குள் எட்டிப்பார்த்தது. என்றாவது ஒருகாலத்தில் backpacker ஆக உலகம் முழுவதும் அலைந்து திரிவதான ஒரு கனவை அவ்வளவு எளிதில் கைவிடத் தேவையில்லை என்கின்ற நம்பிக்கையையும் இந்த 'மஞ்சள் கடித உறை' தந்திருக்கிறது.
..........................................................
(நன்றி: அம்ருதா வைகாசி, 2019)