கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சென்னை புத்தகக் கண்காட்சி - 2020

Friday, May 29, 2020

சென்னை புத்தகக் கண்காட்சி என்பது தொலைவில் இருப்பவர்க்கு கிளர்ச்சியைத் தரக்கூடியது. ஆனால் அது இன்னொருவகையில் ஒரு அபத்தமான அரங்கில் நாங்கள் இருக்கின்றோம் என்ற உணர்வையும் நேரில் போகும்போது தரக்கூடியது. வாசிக்கவும், எழுதவும் விரும்பும் எனக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதென்பது பெருங்கனவாக ஒருகாலத்தில் இருந்தது. 5 வருடங்களுக்கு முன் அது முதன்முதலில் சாத்தியமாகியபோது கனவு நடந்தேறிய இதம் இருந்தாலும், அடிக்கடி கண்காட்சிக்கு செல்லவேண்டுமென்ற உணர்வை அது தரவில்லை. அபத்தம் எனக்கூறியது என்னவெனில் நாம் வாசித்து வியந்த பெரும் எழுத்தாளர்கள் எல்லாம், அவ்வளவு கவனிக்கப்படாத பாவப்பட்ட‌ ஜென்மங்களாக அங்கே அலைந்துகொண்டிருப்பார்கள்.

இம்முறை கண்காட்சிக்குப் போனபோது, எழுத்தாளர்களுடன் உரையாடுவதைவிட அவர்களைச் சுற்றி நடப்பதை அவதானிப்பது எனக்குச் சுவாரசியமாக இருந்தது. மனுஷ்யபுத்திரன், சாருவுக்கு எல்லாம் வாசகிகள் உண்மையிலே வருகின்றார்களா என நானும், இன்னொரு நண்பரும் வேவு பார்த்துக்கொண்டிருந்தோம். அதிக நேரம் நின்றால் மனுஷ்யபுத்திரன் எங்களைப் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தளத்தில் 'உளவுபார்க்க வந்தவர்கள்' என்று போட்டுவிடக்கூடுமென வந்த நண்பர் எச்சரித்தார். சாரு நின்ற 'ஜீரோ டிகிரி' பதிப்பகத்தில் நானும்,  இன்னொரு நண்பரும் அதிரடியாக‌ நுழைந்தபோது, சாரு எங்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தார்.

'இலங்கையில் வாகன‌ங்கள் ஹோன் அடிப்பதில்லை' என அபத்தமாய் அவர் குமுதத்தில் எழுதியதைச் சுட்டிக்கட்டியது அவருக்குத் தெரிந்துவிட்டதோ என்று எனக்கும் சற்றுப் பயம் வந்தது. எனினும் சாருவின் அனைத்து நாவல்களையும் தவறவிடாது வாசித்தவன் என்றவகையில் அவரின் ஒரு நூலிலாவது கையெழுத்திட்டு வாங்கவேண்டும் என்று விரும்பினேன், ஆனால் அதை பிறகு அதை மறந்துவிட்டேன் என்பது கவலை தரக்கூடியது. மனுஷ்யபுத்திரனைச் சூழ அவ்வளவு வாசகிகள் இருக்காததுபோல, சாருவைச் சுற்றியும் அவரது குழுவினரைக் காணாதது, அவரும், அராத்தும் மட்டுமே நான் பார்க்கும்போதெல்லாம் 'அரட்டை' அடித்துக்கொண்டிருந்தது பெரும் ஏமாற்றமாய் இருந்தது. அடுத்தமுறை என் ஸ்பானிஷ் தோழியுடன் போயாவது சாருவைக் கொஞ்சம் எஸ்பஞோல் பேசிக் குளிரவைக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

தமிழகச் சூழல்தான் கண்காட்சியில் இப்படி ஈயோட்டிக் கொண்டிருக்கின்றதென நினைக்க, நமது ஈழத்து/புலம்பெயர் எழுத்தாளர்கள் இன்னும் தலைமறைவு இயக்கமாய் இருந்தார்கள். நிறையப் பேர் சென்னைக்கு வந்திறங்கியிருக்கின்றார்கள் என்று தமிழக நண்பர்கள் சொன்னார்கள்,  ஒருவரையும் காணக் கிடைக்கவில்லை. ஆனால் 'காலம்' செல்வத்தார் சென்னைக்குள் கால்வைத்தவுடன் எல்லாம் பரபரக்கத் தொடங்கிவிட்டது. படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியைப் பார்த்து,'வயதான பிறகும் உன் ஸ்டைலும், திமிரும் இன்னும் குறையவே இல்லை' என்ற கணக்காய் ஒரு 'டானாக' வந்து செல்வம் இறங்கினார்.

பல்வேறு அரசியல், இலக்கிய பிரிவுகள் அவரைத் தமக்கானவையாக‌ சுவீகரித்துக் கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தன. நான் அவரோடு 'டாக்ஸி'யில் திரிந்தபோது ஓர் அரசியல்வாதியைப் போல (அல்லது 'செக்கச் சிவந்த வானம்' பிரகாஷ்ராஜ் போல) இந்த விடயங்களை 'டீல்' பண்ணிக்கொண்டுவந்தார். அவர் படுகின்ற அவதியைப் பார்த்து அரசியல்வாதியின் கையாட்கள் போல, நானும் மற்றொரு நண்பரும் 'உங்களைக் கஷ்டப்படுத்தும் இவர்களைப் போட்டுத்தள்ளவா' என்று வன்முறையின் எல்லைக்கு வருமளவுக்கு அவரைச் சிலர் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர்.

இப்படி உணர்ச்சியின் கொந்தளிப்பில் இருந்த செல்வத்தார் என்னை ஒருநாள் விடிகாலை எழும்பி வரச்சொன்னார். சரி பெரிய தலைமாட்டிவிட்டது இன்று போட்டுத்தள்ளிவிட வேண்டியதுதாதென தாடியை வருடியபடி ஒரு அடியாளின் பாவனையுடன் அவர் நின்ற விடுதிக்குச் சென்றேன். அவரோ, 'நீ நிறையப் பாவங்களைச் செய்துவிட்டாய், உன்னை இன்று சென் தோமஸ் தேவாலயத்துக்கு அழைத்துச்சென்று பாவமன்னிப்பு கேட்கச் செய்யப்போகின்றேன்' என்று அழைத்துச் சென்றார். சாந்தோமில் மன்னிப்பு 5 நிமிடங்களில் முடிந்துவிடும் என்று நினைத்த எனக்கு பிரார்த்தனை 1 மணிவரை நீள எனது பாவங்கள் இவ்வளவு நீளமா எனக் கவலை வந்துவிட்டது.

அதிலும் எப்போது இருப்பது, எப்போது எழும்புவது, எப்படிப் பாடலைப் பாடுவது என்று என்னைத் தயார்ப்படுத்துவதில் நான்பட்ட கஷ்டம் இருக்கே! ஆனால் அழகிய தமிழில் பிரார்த்தனைகளும், பாடல்களும் நிகழ்ந்தது மனதுக்கு நெகிழ்வாக இருந்தது. இலங்கையில் நாம் பாவிக்கும், ஆனால் இந்தியாவில் அவ்வளவு பாவிக்கப்படாத உம், உமது போன்ற பழந்தமிழில் ஃபாதர் பேசியதும், போகிப்பண்டிகையில்  எரிப்பது எவ்வளவு சூழலை  மாசுபடுகின்றது என்று சூழலியல் பேசியதும் பிடித்திருந்தது.

அடியாளாக மாறும் என் கனவை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று என்னை ஒரு பாவியாக்கிவிட்டார் என்ற கவலையோடு செல்வத்தார் நின்ற விடுதியில் நானும் போய் உறங்கச் சென்றுவிட்டேன். அப்போது அருகில் நித்திரைக் கலக்கத்தில் இருந்த செல்வம், 'கன்னி, கன்னி' என்று அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்கே இந்த வயதிலே ஒன்றுமே ஒழுங்காக இயங்கவில்லை, இவருக்கு இந்த வயதிலும் பெண்கள் தேவைப்படுகின்றதோ என்ற  எரிச்சலே முதலில் வந்தது. கன்னி தேவையென்றால் சாந்தி தியேட்டர் பக்கமோ, பரங்கிமலை ஜோதித்தியேட்டர் பக்கமோ ஒதுங்கக்கூடும். அங்கே ஒளிந்திருந்து இவரைக் கையும் களவுமாய்ப் பிடிப்போம் என மனதினுள் திட்டம் போட்டேன்.

பிறகு தூங்கி எழுந்தபின்னும், நண்பர் தளவாய் சுந்தரத்துடனும் 'கன்னியில் அமர்ந்து போனால்தான் சொர்க்கம் போல இருக்கும் ' என்று குசுகுசுப்பதையும், நான் அருகில் போகும்போதெல்லாம் எதுவும் தெரியாதுபோல முகத்தை வைத்திருப்பதையும் கண்டேன். இவர் கன்னியைத் தேடிப்போகும்போது நான் இவரைப் பிடிக்கின்றேனோ இல்லையோ, நல்ல ஒரு துப்பறியும் கதைக்கான வித்து இதில் இருக்கின்றதென எனக்கு இன்னும் சுவாரசியம் கூடிவிட்டது.

 'எழுதித் தீராக் கதைகளில' தான் பிரான்ஸில் நிர்வாண விடுதிக்குப் போனார் என்று பார்த்தால், 'சொற்களில் சுழலும் உலகம்' என்று எழுதிவிட்டு இவருக்கு இந்த வயதில் இப்போது கன்னிகள் தேவைப்படுகிறதோ என்று எனக்குள் கறுவிக்கொண்டேன். பாவமன்னிப்பு வாங்க என்னை இழுத்துச் சென்றவர், தேவகன்னிகைகளைக் காண மட்டும் ஏன் என்னை அழைத்துச் செல்ல மறுக்கின்றார், இனி 'காலம்' இதழுக்கு எழுதுவதில்லை என்று அப்போதே தீர்மானித்துக்கொண்டேன்.

நான் அவரை இப்படி வேவுபார்க்கத் தொடங்கிவிட்டேன் என்று அவருக்குத் தெரிந்ததாலோ என்னவோ, பிறகு நான் சென்னையில் இருக்கும்வரை 'கன்னி' என்ற கோர்ட் வேர்ட்டை பாவிக்காமல் செல்வத்தார் இருந்தார். நானும் பிறகு நான்கைந்து நாட்களில் இலக்கியவாதிகளின் சகவாசம் போதுமென்று இலங்கைக்குப் புறப்பட்டுவிட்டேன்.

பிறகுதான் தெரிந்தது, அவர் 'கன்னி' என்று சொன்னது கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் என்றும், அதில் ஏறி ஜெயமோகனைப் பார்ப்பதைத்தான் நானறியாமல் செல்வத்தார் இரகசியமாகத் திட்டமிட்டார் என்பதும். அவரவர் அன்னை வேளாங்கண்ணிக்கோ, சபரிமலைக்கோ வருடந்தவறாது போவதுபோல செல்வத்தாரின் எந்த இந்திய யாத்திரையும், கன்னியாகுமரி பார்வதிபுரத்துக்குப் போகாமல் நிறைவேறுவதில்லை என்ற உண்மை எனக்கு உரைத்தது. ஜெயமோகனின் பேரால் (ஜெமோவே எழுதியிருக்கின்றார்) எத்தனையோ சிலுவைகளை செல்வத்தார் சுமந்திருக்கின்றார். ஆகவே அங்கேபோய்த்தான் செல்வத்தார் தன் 'பாடு'களை இறக்கிவைக்க வேண்டும்.

அது புரிகிறது.

ஆனால், என் பாவத்தை இறக்கிவைக்க தேவாலயத்தை விட‌, ஒரு தேவமங்கையின் ஆசிர்வதிக்கும் இதமான கரங்கள்தான் பொருத்தமானது என்று தெரியாத செல்வத்தார் இலக்கிய ஊழியம் செய்துதான் என்ன பயன்?

.................

(Feb 06, 2020)

இயற்கையின் உபாசகர்கள்

Wednesday, May 27, 2020


ல்லவில் இருக்கும் மலையில் (Ella Rock) ஏறுவது அவ்வளவு எளிதானதல்ல என்பது ஏறும்போதுதான் தெரிந்தது. அதற்கு முதல் எல்ல இரெயின் ஸ்ரேஷனின் தண்டவாளத்தால் நடந்து அடுத்த ஸ்ரேஷனான கிதல் எல்ல வரை 3 கிலோமீற்றர்கள் நடக்கவேண்டும். இடையில் ரெயின் வருகின்றதா என அவதானமாக நடக்கவேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை அள்ளிக்கொண்டு போய்விடும்.

இதன்பிறகும் ஒரு 5 கிலோமீற்றர்கள் தேயிலைத் தோட்டங்கள், சற்றுச் செங்குத்தான சிறு பாறைகளுக்கிடையில்தான் மேலே ஏறிப்போகவேண்டும். நாங்கள் ஏறியதுபோல வெயில்நாட்களாக இருந்தால் நிறையத்தண்ணீரும், இடையில் சாப்பிடுவதற்கு பழங்கள், சொக்கிலேட்டுக்கள் எடுத்துச் செல்லுதல் பயணத்தைக் களைப்படையாமல் வைத்திருக்கும். இது எல்லாவற்றையும்விட  எங்களைப்போல அல்லாது, வெயில் வரமுன்னர் அதிகாலையிலேயே  மலையில் ஏறினால் அற்புதமான சூரிய உதயத்தையும் பார்க்கமுடியும்.

நானும் நண்பரும் நடந்துபோகும்போது ரெயின் இடையில் வந்தபோது, அருகில் இளநீர் விற்றுக்கொண்டிருந்த பெண்மணி எச்சரிக்கை செய்ய நான் பயந்து போய் தண்டவாளத்தின் கரையில் பதுங்கிக்கொண்டேன். எங்களுக்குப் பின்னால் நடந்துகொண்டிருந்த ஒரு வெளிநாட்டுப்பெண்ணோ, காதலன் ரோஜாப்பூவுடன் எதிரில் வந்துகொண்டிருப்பதுபோல மிக நிதானமாக எதிரில் வரும் ரெயினை எதிர்கொண்டு செல்ஃபியை எடுத்துவிட்டு கரைக்குப் பாய்ந்தார்.

ப்படி தண்டவாளங்களுக்கிடையில் நடந்தபோது நண்பர் காலைமாறி கற்களுக்குள் வைக்க, அவரின் பாதம் பிரண்டது. அவ்வளவு வலி அவருக்கு. இனி தொடர்ந்து நடக்கமுடியுமா என்பதே சந்தேகமாய் இருக்க, எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு வழிகாட்டி சிங்கள இளைஞன், தன் வசம் வைத்திருந்த வலி கொல்லும் ஸ்பிரேயை அடித்துவிட்டுச் சென்றார்.
நண்பர் வலியோடு வர ஏறிச்சென்று பார்த்த பயணம் இது. திரும்பும் வழியில் வலிதாங்காது அவர் துடித்து, சப்பாத்தைக் கழற்றிப் பார்ப்போமா எனக் கேட்க, இல்லை இப்போது பார்த்தால் கீழே இறங்கவே முடியாது, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்களெனச் சொல்லிக் கூட்டிக்கொண்டு வந்திருந்தேன். கீழே வந்து தொடர்ந்து நடக்காமல் ஓட்டோ ஒன்றைப் பிடித்து பார்மஸிக்குப் போனால் கால் அப்படி வீங்கிப்போயிருந்தது. இவ்வளவு வலியோடு எப்படி நடந்தார் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மலையில் ஏறுவதற்கு, கிதல் எல்லவுக்கு அருகில் போகும்போது ஓர் அருவி பாய்ந்துகொண்டிருந்தது. நண்பரோ, அமைதியான இந்த அருவியில் நாளை காலை வந்து நீராடுவோம் என்றார். நாங்கள் திரும்பும்வழியில் ஓர் அழகான பெண் அந்த அருவியில் குறுக்குக்கட்டோடு குளித்துக்கொண்டிருந்தார். அர்ஜூனனுக்கு மாமரத்தில் இருந்த மண்கிளி மட்டுமே இலக்காகத் தெரிந்ததுபோல், எனக்கும் அவருக்கு அருகில் அவரது கணவர் இருப்பது கண்ணுக்குத் தெரியாது, அவர் மட்டுமே தெரிய ஏதோ ஒரு உற்சாகத்தில் கையை அசைத்து ஹாய் சொல்லிவிட்டேன். அவர் அதிர்ச்சியில் முதலில் உறைந்துபோனாலும், பிறகு மெல்லியதாய்ப் புன்னகைத்தார். அவரது கணவர் இருப்பது தெரிந்து நான் பயத்தில் உறைந்துபோய் அந்தப் பக்கமாய் மீண்டும் பார்க்காது தண்டவாளத்தில் ரெயின் வந்தாலும் பரவாயில்லை என்று அதற்குள் பாய்ந்துவிட்டேன்.

'அடுத்த நாள் அருவியில் குளிக்கும் எனது ஆசை உன்னாலே இப்போதே கருகிவிட்டது' என நண்பர் தொடர்ந்து திட்டியபடி வந்தார். இலக்கியத்தில் அழகியல், இரசனை என்றால் எல்லோரும் பாராட்டுகின்றார்கள், நிஜ வாழ்க்கையில் அப்படி இருந்தால், இளநீரைச் சீவுவது போல அனைவரும் கத்தியோடு வந்துவிடுகின்றார்கள் என்பதுதான் எவ்வளவு துயரமானது.

செங்குத்தான மலையேற்றத்தில் நாங்கள் கஷ்டப்பட்டபோது, எங்கிருந்தோ வந்த ஒரு நாய் எங்களுக்கு உதவி புரிந்தது. அதிலும் நண்பர் கால் வேதனையோடு தவிர்த்தபோது, இன்னும் கொஞ்சத்தூரந்தான் இருக்கின்றதென எங்களுக்கு வழிகாட்டி போல முன்னே சிறிதுதூரம் ஓடிவிட்டு வாலை ஆட்டிக்கொண்டு அவர் காத்துக்கொண்டிருப்பார். அப்படி அவரின் உற்சாகத்தைப் பார்த்துத்தான் நாம் கஷ்டத்தைக் குறைத்து எங்களால் ஏறவேண்டியிருந்தது. மேலே அழகிய இயற்கைக்காட்சி விரிந்திருந்தது. நிறைய அந்நியநாட்டுப் பயணிகள் இருந்து அடுத்து எங்கு போவதெனக் கலகலவென்று கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள் அமைதியாக இருந்து இயற்கையை இரசிக்க தனியிடத்தைத் தேடிப் போகவேண்டியிருந்தது. மேலே ஒன்றிரண்டு கடைகளில் உடனேயே பழங்களைக் கொண்டு சுவையான ஜூஸைகளையும், தண்ணீரையும் விற்றுக்கொண்டிருந்தார்கள். எல்லயின் மலைக்கு ஏறியவர்கள், நேரமிருப்பின் அதன் இடதுபக்கம் இருக்கும் நெடிதுயர்ந்த மரங்கள் இருக்கும் சிறுகாட்டினிடையே நடந்து பார்க்கலாம். எத்தனையோ தசாப்தங்களாக இருக்கக்கூடிய மரங்களினூடாக உலாவுவது என்பதும், அவற்றைத் தழுவிக்கொள்வது என்பதும் மிகுந்த ஆனந்தம் தரக்கூடியது.

இப்படி இந்த மலையேற்றத்தில் பல்வேறு சாகசங்களைச் செய்தாலும், நான் இதைவிட  9 Arches Bridgeற்குப் போவதே எல்ல வந்ததன் இலட்சியமெனச் சொல்லி அந்தரப்பட்டுக் கொண்டிருந்தேன். நண்பரோ, 'இப்படி கடினமான ஒரு  மலையேற்றம் செய்திருக்கின்றோம், அதைவிட 10 நிமிட நடையில் அந்த பாலத்திற்குப் போவதில் என்ன சாதனை இருக்கப்போகின்றது' என்றார். நானோ, 'எல்லவில் மலையேற்றம் செய்தேன் என்று, யாழ்ப்பாணத்தில் ஏதேனும் பற்றைப்பக்கமாய் நின்று படம் எடுத்துப்போட்டால் கூட சனம் நம்பிவிடும், ஆனால் எல்லவிற்கு வந்து 9 Arches Bridge இற்குப் போகவில்லை என்றால் நான் எல்லவிற்குப் போகவில்லை என்றே சனம் சொல்லி எள்ளல் செய்யும். அதுவும் இந்த Instagram எல்லாம், இலங்கை என்றால் எல்ல போகவேண்டும், அதிலும் இரெயின் வரும்போது 9 Arches Bridgeஇல் இருந்து ஒரு படம் 'க்ளிக்'க வேண்டும். இல்லாவிட்டால் மதிப்பே இல்லாதுபோய்விடும்' என்றேன்..

அடுத்தநாள் நண்பரின் கால்வலி மறையாத காரணத்தால், அதிகதூரம் நடத்தல் சாத்தியமில்லை என்பதால் ஒரு ஓட்டோவில்  பாலத்துக்குக் கிட்டவாகப் போய் இறங்கினோம். நாங்கள் அந்தப் பாலத்தை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தபோதுதான்  ரெயினொன்று பாலத்தினூடாகக் கடந்து கொண்டிருந்தது. அடுத்த ரெயின் வரும்வரை அங்கே காத்திருந்து படம் எடுக்க, ரெயினிற்கு முன் குதித்துத் தற்கொலை செய்ய வரும் ஒருவரால்தான் அவ்வளவு பொறுமையாகக் காத்திருக்கமுடியும்.  நாங்கள் அருகில் சுடச்சுட அவித்துக்கொண்டிருந்த சோளப்பொத்திகளை வாங்கிச் சுவைத்தபடி, ஒரு Instagram  உலகம் எப்படி புகைப்படங்களினால் இயங்குகின்றது என்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினோம்.

இறுதியில் நானும் அந்த அருட்பெருஞ்சோதியில் கலந்து  9 Arches Bridge இற்கு அருகில் நின்று படம் எடுத்து, இலங்கைக்குப் போயிருக்கின்றேன் என்று உலகுக்கு நிரூபிக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்தேன்.
................................

(Feb, 2020)

9 grader nord - இசைக்குழு

Tuesday, May 26, 2020


9 grader nord (நி கிராதர் நூர்) என்பது நமது தமிழ்ப் பிள்ளைகள் முதன்மையாக இருக்கும் ஓர் இசைக்குழு (band). எப்போதும் தனித்துவமான திசைகளைக் கலைகளில் தேடுபவர்களை எனக்கு நிறையப் பிடிக்கும். அவர்கள் தமக்கான பிரபல்யம், பொருளாதார வசதிகள் பற்றி அவ்வளவு கவலைப்படாது தம் இயல்பில் கலையில் ஊறியிருப்பார்கள். மாயா (M.I.A),அப்படித்தான் ஒருகாலத்தில் "Galang" என்ற single trackயோடு வந்தபோது அவர் மீது பிடித்த பித்து இன்னும் இறங்காது எனக்குள் இருக்கிறது.

பழக்கப்பட்டுப்போன இசைக்கும், பரிட்சயமான குரல்களுக்கும் பழகிய நமக்கு புதிய முயற்சிகள் முதலில் உள்ளே இறங்காது. மாயாவைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தபோது இதெல்லாம் இசையா என கேலி செய்து கொண்டிருந்த நண்பரை, மாயாவின் நேரடி இசை (Live ) நிகழ்வுக்குக் கூட்டிக்கொண்டுபோனதன்பின் மாயாவின் இரசிகராக அவர் மாறியிருந்தார். இசை மட்டுமில்லை, மாயா அந்த அரங்கை எப்படி ஒரு intimate இசை நிகழ்வாக மாற்றினார் என்பதை நேரில் கண்டுகளித்தவர்கள் நாங்கள்.

அதுபோலவே 9 grader nordஇன் இசையை இப்படி ஒரு அறைக்குள் இருந்து கேட்பதை விட, அவர்கள் பாடும்போது அரங்கில் நேரில் இருந்து கேட்பது வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்லுமென நம்புகின்றேன். போலச் செய்தல் இலக்கியம் உள்ளிட்ட எந்த கலையிலும் செய்தல் எளிது. அரிதானவர்களே அதைத் தாண்டி, புதிதாய் எதையோ தேடிப் போகின்றார்கள். அப்போது அவர்களின் படைப்புக்கள் நமக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சியுடன் அவர்களை நம் வாழ்வில் ஒவ்வொருபொழுதும் நினைவுகூரமுடிகிறது.


ட்வாட் முங்கின் (Edward Munch) ஓவியமான 'அலறலை'ப் (scream) போல இன்னொரு பிரல்யம் வாய்ந்த ஓவியம் 'நோயுற்ற குழந்தை' (sick child). இந்த ஓவியம் முங்கின் வாழ்வோடு மிகுந்த நெருக்கமுடையது. அவரும் அவரது சகோதரியும் காசநோயால் பதின்மத்தில் பாதிக்கப்பட்டு, முங் தப்பிவிட, சகோதரியோ அவரின் 15வயதில் மரணமாகின்றார். இந்த நிகழ்வு முங்கின் வாழ்வு முழுதும் தொடர்ந்து தொந்தரவுபடுத்தியபடி இருந்தது. முங்கின் 'நோயுற்ற குழந்தை' ஓவியத்தில் இருப்பது அவரது சகோதரி. இந்த ஓவியத்தின் மூலம் இறவாத்தன்மையாக அந்த நிகழ்வை முங்க் மாற்றியிருக்கின்றார்.

9 grader nord இசைக்குழு (நோர்வேஜியப் பெயரைத் தமிழாக்கினால் வருவது, உலக வரைபடத்தில் இலங்கை அமைந்திருக்கும் '9 டிகிரிஸ் வடக்கு') ஒரு சந்தர்ப்பத்தில் முங்கின் ஓவியங்களின் பாதிப்பில் ஓர் இசைக்கோர்வையைத் தயாரிக்கச் சொல்லிக் கேட்கப்பட்டபோது, இதன் முன்னணிப்பாடகரான மீரா இந்த ஓவியத்தைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.

சிறுவயதிலேயே இந்த ஓவியத்தைப் பார்த்தபோது அது தன்னை மிகவும் பாதித்தது என்கிறார். ஓவியத்தில் இருக்கும் குழந்தை ஏதோ ஒருவகையில் தனது நோயை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் அவரைப் பராமரிக்கும் பெண்ணால் அதைத் தாங்க முடியாது இருப்பதாலேயே தலைகுனிந்து நோயுற்ற குழந்தையை நேரே பார்க்காது இருக்கின்றார் என்கின்றார்.

ஆகவே, இந்த 'நோயுற்ற குழந்தை' ஒரு தாலாட்டுப்பாடலாகப் பாடப்படுகின்றது. தாலாட்டுப்பாடல்கள் பிறப்பை மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவை. வழக்கத்துக்கு மாறாக மீரா இந்தத் தாலாட்டுப் பாடல், ஒரு குழந்தை இந்த உலகைவிட்டுப் போகும்போது கடைசியாகப் பாடுகின்ற பாடல் என்கின்றார்.

நோர்வேயின் பிரபல்யம் வாய்ந்த முங்கின் ஓவியமும், நமது தமிழ் மொழியும் இணைந்து இசையாகும்போது அது யூனிவேர்சல் நிலையை அடைகிறது. அதுவும் நிலமெங்கும் பனி மூடத்தொடங்கி மனசும் பரிசுத்தமாகும் நிலையில் கேட்பதற்கு மிகப் பொருத்தமான பாடல் இது என்பேன்.

...........
(1) 'The Sick Child' ஐக் கேட்பதற்கு
https://www.youtube.com/watch?v=TIKIjFr0bVQ

(2) 9 grader nord இன் புதிய இசைத்தொகுப்பான "Jaffna" விலுள்ள பத்துப்பாடல்களையும் கேட்க sportify இன் இந்த இணைப்பைத் தட்டுங்கள்.
https://open.spotify.com/album/05w6PGViE6ZQZQMOXZjn96

(Dec, 2019)

கியூபாப் பயணம்

Sunday, May 24, 2020

கியூபாவில் புரட்சி நடந்து இன்று  கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் ஆகப் போகின்றதென்றாலும், கியூபா அதன் தூய்மையான கடற்கரைகளுக்காகவும், ஹாவானாவிலிருக்கும் புராதன நகருக்காகவும் இன்று அதிகம் நினைவு கொள்ளப்படுகின்றது. ஸ்பானியக் கலாச்சாரத்திற்குரிய இசையும், உணவும், மதுவும் கியூபாவின் எந்தத் தெருவிற்குள் நுழைந்தாலும் நாம் எளிதாக அவதானிக்க முடியும்.

கியூபாப் புரட்சியின்போது ஃபிடல் காஸ்ரோ, சே குவேரா உள்ளிட்ட எண்பதிற்கும் மேற்பட்டவர்கள் 'கிரான்மா' என்கின்ற படகில் மெக்ஸிக்கோவிலிருந்து புறப்பட்டு கியூபாவை வந்தடைக்கின்றார்கள். எனினும் அவர்களின் தரையிறக்கம் அவ்வளவு சுமூகமாய் நடக்கவில்லை. அவர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்து நின்ற பாட்டிஸ்டாவின் படைகளுடன் சண்டை மூள்கின்றது. இறுதியில் சதுப்புநிலங்களிலும், உவர்நில மரங்களிடையேயும் பதுங்கி ஒளிந்து தப்பிவந்தவர்கள் பன்னிரண்டு பேர்கள் மட்டுமே. பெரும் எண்ணிக்கையான தோழர்களை இழந்து புரட்சியிற்கான முதலடியே பெரும் சறுக்கலாய் இருந்தபோதும், தமது கனவுகளோடு தொடர்ந்து மலைகளில் ஒளிந்திருந்து புரட்சியை இவர்கள் நடத்திக்காட்டியது ஒரு அதிசயம் போலத்தான் இன்று தோன்றும்.

கியூபாவின் கிழக்குக்கரையில் தரையிறங்கித் தப்பிப் பிழைத்தபின், ஒரு கெரில்லா இயக்கமாய் மூன்றாண்டுகளாய் வளர்ந்திருக்கின்றார்கள். பின்னர், சான்டா கிளாராவில் பெரும் தாக்குதலை சேயின் தலைமையில் இராணுவத்திற்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வென்றபோது, கியூபாவில் புரட்சி சாத்தியமென்கின்ற நிலை வந்துவிட்டது.

இதற்கு முன் 1953ல் காஸ்ரோவும், அவரது தோழர்களும், ஜூலை 26ல் சாண்டியகோ டீ கூபாவில் ஆயுதத் தாக்குதலை நடத்திப் பிடிபடுகின்றார்கள். சட்டம் பிடித்த காஸ்ரோ, தனக்காகவும் நண்பர்களுக்காகவும் தானே வாதாடுகின்றார். அதிலேயே 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற பிரபல்யமான வாக்கியத்தைச் சொல்கிறார். எனினும் ஃபிடல் உள்ளிட்ட பலருக்கு பத்து வருடச் சிறைத்தண்டனை கொடுக்கப்படுகிறது. பிறகு இரண்டு வருடங்களாகத் தண்டனை குறைக்கப்பட்டு காஸ்ரோ மெக்ஸிக்கோ சென்று, சே, ராகுல் உள்ளிட்ட தோழர்களுடன் திரும்பிவந்து,  'ஜூலை 26 இயக்கம்' என்ற பெயரில் புரட்சியை நடத்திக் காட்டியது கடந்தகால வரலாறு.

ரு காலத்தில் பாட்டிஸ்டாவின் ஜனாதிபதி வாசல்தலமாக இருந்த  'மாளிகை' இன்று புரட்சியின் மியூசியமாக (Museum of the Revolution)ஹாவானவில்  இருக்கின்றது.1957 மார்ச்சில், இங்கே மாணவர்கள் ஜனாதிபதி பாட்டிஸ்டாவை கொலை செய்த எடுத்த முயற்சி தோற்று, கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜோஸே மார்டி உள்ளிட்ட பல மாணவர்கள் கொல்லப்படுகின்றார்கள். இன்றும் இந்த இடத்தில் அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் அடையாளத்தைக் காணமுடியும். இந்தச் சம்பவம் ஹெமிங்வே பற்றிய திரைப்படமான "Papa: Hemingway in Cuba"வில் கூட சித்தரிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடியும்.
பின்னர் 1959 ஃபிடல் காஸ்ரோ தலைமையிலான படை ஹாவானாவிற்குள் நுழைந்தபோது பாட்டிஸ்டா இந்த மாளிகையிலிருந்தே தப்பியோடுகின்றார். . இப்போது ஹாவானாவிலிருக்கும் தேசிய நூதனசாலையில் புரட்சியின்போது (ஜூலை 26 இயக்கம்)பாவித்த பொருட்களைக் காட்சியிற்கு வைத்திருக்கின்றனர்.

கியூபா என்கின்ற நாடு, வெளியுலகிற்கு ஒரு புரட்சியின் அடையாளமாக இன்னும் வீழ்ந்துவிடாது இருந்து கொண்டிருக்கின்றதென்றால், இலக்கிய வாசகர்களுக்கு கியூபா என்றவுடன் , ஹெமிங்வே நீண்டகாலம் வசித்த ஒரு நாடு என்பதும் நினைவிற்கும் வரும். இன்றும் ஹெமிங்வே தங்கி நின்ற ஹொட்டல், அவர் அடிக்கடி மதுபானம் அருந்திய பார் என எங்கும் ஹெமிங்வேயின் நினைவுகளை அழியவிடாமல் நினைவுபடுத்தியபடி இருக்கின்றனர்.

ஹெமிங்வேயிற்குப் பிடித்த பார்களில் ஒன்று Floridita. அவர் இறந்தபின் அவரின் இருப்பை நினைவூட்ட, அவர் அமர்ந்து மது அருந்துவதுபோல சிலை ஒன்றை வடிவமைத்திருக்கின்றனர். ஹெமிங்வேயிற்காகவே சனம் அலை போல இங்கு குவிந்து கொண்டிருந்தபோதும், அவரின் 'சாகச' எழுத்துக்குள் ஒளிந்திருக்கும் அமைதியைப்போல ஒரு பெண் ஹெமிங்வேயுடன் அமர்ந்து நிதானமாய் தனக்கான பானத்தை அருந்திய கணத்தைத் தரிசிக்க முடிந்தது அழகு வாய்ந்த தருணம் எனத்தான் கூறவேண்டும்..

அதேபோல, ஹாவானாவிலிருக்கும் Ambos Mundos ஹொட்டலில், எர்னெஸ்ட் ஹெமிங்வே 1930களில் அதிக வருடங்களைக் கழித்திருக்கின்றார். ஸ்பானிய உள்நாட்டுப்போரை நேரடிச் சாட்சியாகப் பார்த்திருந்த ஹெமிங்வே, இந்த இடத்திலிருந்தே 'யாருக்காக மணி ஒலிக்கிறது' (For Whom the Bell Tolls) என்கின்ற நாவலை எழுதத் தொடங்கியிருக்கின்றார். இன்று இந்த ஹொட்டலின் முதல்தளத்தில் ஒருபகுதி ஹெமிங்வேயின் நினைவுகளுக்காகவே என ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

ஹாவானாவின் அழகுகளில் ஒன்று எங்கும் நிரம்பியிருக்கும் இசை. அநேகமான உணவகங்களில் live band இருக்கும். ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எங்களுக்காக பாடிய பாடல்களிடம், ஒரு புரட்சிப் பாடலைப் பாட முடியுமா என்றபோது, சே குவேரா பற்றிய பாடலைப் பாடினார்கள். ஆர்ஜெண்டீனா என்கின்ற ஒரு தொலைதூர நாட்டில் பிறந்து,  இன்னொரு நாடான கியூபாவிற்கு வந்து புரட்சியிற்குத் துணை நின்ற சே குவேராவை நினைவூட்டாத ஓரிடம் இல்லையென்கின்றமாதிரி எங்கெங்குகாணினும் சேயே கியூபாவில் நிறைந்திருக்கின்றார்.

இதமான காலநிலை, அழகான கடற்கரைகள்,  புராதன நகர்கள்,  புரட்சியின் அடையாளங்கள், இனிமையான இசை, அருமையான உணவு என்பவற்றை அனுபவிக்க கியூபாவிற்கு ஒருமுறை பயணித்துப் பார்க்கலாம்.
................................

(Feb 25, 2018)

சேர்ஜியோ (Sergio)

Thursday, May 21, 2020

பாரிஸில் 1968 இல் மாணவர் புரட்சி நடக்கும்போது முன்னணிப் போராட்டக்காராக இருந்த பிரேஸிலியர் ஒருவரை வாழ்க்கை எங்கெங்கோ சுழற்றியடிக்கிறது. பிறகு ஐ.நா.சபையில் இணைந்து பல்வேறு நாடுகளில் அதன் பிரதிநிதியாகப் பயணிக்கின்றார். கம்போடியாவின்  -கம்பூச்சியா கம்யூனிஸ்ட்டுக்களோடு-  ஆபத்து நிறைந்த சாகசங்கள் செய்து, போரின் நிமித்தம் புலம்பெயர்ந்த அகதிகளை மீண்டும் சொந்த இடங்களில் இருத்த முயற்சிக்கின்றார். கிழக்கு திமோர் தனிநாடாகப் பிரகடனப்படுத்துவதற்கு முன், இரண்டு வருடங்கள் ஐ.நா.சபை அதன் அரசு நிர்வாகத்தைப் பொறுப்பெடுத்துக் கொள்ளும்போது, அதனை திமோரில் வழிநடத்திச் செல்பவராக இருக்கின்றார்.

அடிப்படையில் ஓர் இடதுசாரியாக சேர்ஜியோ இருப்பதால், ஐ.நாவில் பணியாற்றும்போதும், இயன்றளவு மக்களின் சார்பில் நின்று பார்க்க முயல்கின்றார். அதை அவர் கிழக்கு திமோர் போராளிகளோடு அதிகாரத்தைப் பகிரும்போது, தெளிவாக நாங்கள் உங்களோடு ஆட்சி நிர்வாகத்தைப் பகிர்கின்றோமே தவிர, நாங்கள் ஆள்பவர்கள் என்கின்றார். சேர்ஜியோவின் நண்பரொருவர் அந்த நாட்களை நினைவுகூரும்போது, ஒருபோதும் சேர்ஜியோ, போராளிக்குழுவின் எண்ணத்திற்கு எதிராக எந்தத் திட்டத்தையும் செய்ததுமில்லை என்கின்றார்.

இவ்வாறு இருக்கும் சேர்ஜியோ இறுதிப் பணியாக அமெரிக்க ஆக்கிரமித்துவிட்ட ஈராக்கில் நான்கு மாதம் பணியாற்றப் போகின்றார். ஈராக்கியப் போரை எதிரிக்கும் ஒருவராக இருந்தாலும், நடந்ததை மாற்ற எந்த அதிகாரமும் இல்லை, ஆகக்குறைந்தது இனியாவது மக்களுக்கு ஏதாவது செய்யலமா என்று போகின்றார். ஒருபோதும் சொகுசு அறைகளுக்குள் இருந்து முடிவுகளை எடுக்க விரும்பாத சேர்ஜியோ எப்போதும் மக்களின் விருப்புக்களை நேரில் சந்தித்துப் பார்க்க விரும்புகின்றவராக இருக்கின்றார். அதன் நிமித்தம், அமெரிக்கா ஆக்கிரமிப்பின் மீது கோபத்தில் இருக்கும் மக்களின் திட்டுக்களையும் வாங்கிக்கொள்கின்றார்.

றுதியில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தின், ஐ.நா. அலுவலகம் மீதான குண்டுவெடிப்பில் சேர்ஜியோ கொல்லப்படுகின்றார். கிழக்கு திமோரை இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இருந்து பிரித்துக்கொடுத்தவர், அவர் கொல்லப்படவேண்டியவர் என ஒசாமா பின் லாடன் உள்ளிட்ட பலரால் சேர்ஜியோ இலக்கு வைக்கப்படுகின்றார். வழமையாக ஐ.நா. அலுவலகங்களுக்கு இருக்கும் அமெரிக்காவின் அதிபாதுகாப்பையும் சேர்ஜியோ விலத்திவைக்கின்றார். ஐ.நா.சபை தனித்தியங்கும் அமைப்பு, அமெரிக்காவின் இருப்பு எமது வளாகத்தில் இருப்பது மக்களை இன்னும் ஐ.நாவை விலத்திவைக்கும் என்று பாதுகாப்புச் சேவையையும் சேர்ஜியோ விலத்திவைக்கும் காலங்களில் இந்தக் குண்டுவெடிப்பு நடக்கிறது.

குண்டு வெடிப்பு நடந்து கட்டிட சிதைப்பாடுகளில் சிக்கி மீட்பு முயற்சியில் தோற்ற மூன்றரை மணித்தியாலங்களின் பின் இறக்கின்றார். அப்போதும் கூட சேர்ஜியோ தனது காதலி உட்பட வேலை செய்யும் மற்றவர்களின் நிலை பற்றியே தொடர்ந்து வினாவுகிறார். அதிலும் ஒரு இராணுவவீரர் இவருக்காய் இந்தம் மீட்புவேலையில் பிரார்த்தனை செய்யத்தொடங்கும்போது, நிறுத்தச் சொல்லி தனது உயிர் போகும் இறுதிநேரத்திலும் சொல்கிறார். மற்ற இராணுவ வீரர், இது ஒருவர்  தான் தலைமை தாங்கும் குழுவை மீட்கவிரும்பிய ஒருவர், தன் உயிரை முதல் கொடுக்கும் அரிய பண்பு எனச் சொல்கிறார்.

சேர்ஜியோவாக இருந்தாலும், அல்லது சிரியாவில் உயிரைக் கொடுத்த பத்திரிகையாளரான மெர்வின் கொலின்ஸாக (Private war) இருந்தாலும், ஏதோ ஒருவகையில் அமெரிக்க/ஜரோப்பிய நாடுகளின் ஆக்கிரமிப்புகள் இவர்களைப் பற்றிப் பேசும் திரைப்படங்களில்  blur ஆக்கப்படுவதை நாம் காணலாம். மூலகாரணங்களுக்குப் போகாமல் நாம் இந்த உதிரி மனிதர்களை வைத்து இவ்வாறான ஆக்கிரமிப்புக்களை/யுத்தங்களை ஒருபோதும் அணுகமுடியாது. ஆனால் இவ்வாறாகத் தமது உயிரைப் பணயம் வைத்துப் போகும் மனிதர்களாலேயே ஒரளவாவது போர் நிகழும்/நிகழ்ந்த இடங்களில் மக்களுக்கான தேவைகள்/மீள்குடியிருப்புக்கள் சாத்தியமாக்கப்படுவதையும், அங்கே நிகழும் கொடூரங்கள் சற்றேனும் வெளிச்சத்துக்கு வருவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு தீவிர கலகக்காரனாக பாரிஸ்-68ல் எழுந்த சேர்ஜியோ இறுதிவரை மக்களுக்காகவே தமது பயணத்தைத் தொடர்ந்து இருக்கின்றார். அதற்கு அவரது இடதுசாரித்தன்மை நிச்சயம் உதவியிருக்கும். அதேசமயம் சேர்ஜியோ மணமானவராக இருந்தபோதும் பல்வேறு நாடுகளில் நிறையக் காதலிகளையும் கொண்டிருந்திருக்கின்றார். இது வேறுவகையான சூழல், வேறுவிதமான உரையாடல்களுக்கும் கொண்டு செல்லக்கூடியவை.

சேர்ஜியோ பற்றிய திரைப்படம் நேற்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கின்றது. அவரைப் பற்றிய ஆவணப்படம், இதே நெறியாளரால்  10 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டிருக்கின்றது. இரண்டையும் சேர்த்துப் பார்ப்பது சுவாரசியமானது. உணர்ச்சிகள்/தடுமாற்றங்கள்/நம்பிக்கைகள் என கண்ணீர்த்துளிகளோடு அசல் மனிதர்கள் பேசும் ஆவணப்படங்கள், திரைப்படங்களை விட ஏதோ ஒருவகையில் நமக்கு நெருக்கமாகிவிடவும் கூடியது.

(Apr 18, 2020)

அசோகமித்திரனின் 'தண்ணீர்'

Tuesday, May 12, 2020

ழுதும் மொழியைச் சிரமமுமில்லாமலும், கிளிஷே இல்லாமலும் பயன்படுத்த எல்லோராலும் முடிவதில்லை. மொழியைக் கஷ்டப்படுத்தாது பாவிப்பதென்பது, நீண்ட வாக்கியங்களைப் பாவிக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் அல்ல. அது நீண்டதோ, சுருங்கியதோ சொல்லும் மொழியில் குழப்பங்கள் இல்லாது சொல்லிச் செல்வதைக் குறிப்பிடுகிறேன். அதேபோல கிளிஷே என்பது தேய்வழக்குகள் பற்றியது. சொல்வளம் எமக்குச் சுருங்கியதாக இருக்கும்போது நாம் ஒரே சொற்களையே பாவிக்கவேண்டிய அபத்தம் ஏற்படும். இந்த விடயத்தில் உரைநடைக்காரர்களை விட, கவிதைகள் எழுதுபவர்கள் இன்னும் திணறுவதை நாம் அவதானிக்கமுடியும்.

தமிழில் இவ்வாறு எழுதும் மொழியைக் கஷ்டப்படுத்தாதும், அதேவேளை தேய்வழக்குக்களை அதிகம் பாவிக்காது நீண்டகாலம் எழுதிய ஒருவராக அசோகமித்திரனைக் கொள்ளலாம். நேற்று மீண்டும் ஒருமுறை அவரின் 'தண்ணீர்' நாவலை வாசித்தபோது, அது இன்னும் நிரூபணமாகியது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவல், மொழியில் எந்த இடறலையும் தராது வாசிப்பில் சுகானுபவத்தைத் தந்திருந்தது. இத்தனைக்கும் அசோகமித்திரன் கடினமான சொற்களையோ, நீண்ட வாக்கியங்களையோ பாவிப்பவருமில்ல. எளிய சொற்கள் ஆயினும் அவை தேய்வழக்குகளாக எம்மை சோர்வடையச் செய்யாது, அவர் எழுதிச் செல்வதில்தான் அவரின் எழுத்தின் திறமை தெரிகிறது. 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு விட்ட இந்த நாவலை, ஏற்கனவே சிலமுறை வாசித்தும் விட்ட நாவலை, மீண்டும் புதிதாக வாசிப்பது போன்ற பிரமையை அசோகமித்திரன் தருவது எவ்வாறு என்றே யோசித்திருக்கின்றேன்.

ஜமுனா, சாயா என்கின்ற வீட்டை விட்டுப் புறப்பட்டு, தனித்து வாழும் பெண்கள் இருவரின் சிக்கலான வாழ்க்கையை, சாதாரண வாசகரும் புரிந்து அனுதாபம் கொள்ளமட்டுமின்றி, இவ்வாறும் மனிதர்களின் வாழ்க்கை இருக்கிறது என்பதையும் விளங்கிக்கொள்ள வைப்பதில்தான் அசோகமித்திரன் தனித்து மிளிர்கிறார். எழுபதுகளில் ஒரு பெண் கர்ப்பமாகி, அந்தக் குழந்தைக்கு யார் தந்தை என்ற கேள்விக்கு அவ்வளவு அச்சப்படாது தன் பிள்ளையோடு வாழப்போகின்றார் என்பதை அசோகமித்திரன் எவ்வித அதிர்ச்சியோ, பெரும் பிரகடனமோ இல்லாது வாழ்வின் இயல்புகளில் இதுவும் ஒன்றெனச் சொல்லிச் செய்வதோடு, வாசகர்களையும் ஜமுனாவைப் புரிந்துகொள்ள வைப்பதுதான் தண்ணீரை இன்றும் வாசிக்க புத்துணர்ச்சி தருவதாக இருக்கிறாதென நினைக்கின்றேன். ஆனால் தண்ணீர் நாவலின் உச்சக்கட்டம் என்பது என்னைப் பொறுத்தவரை இறுதி அத்தியாயங்களில் நிகழ்வதல்ல, அது நாவலின் முக்கால்வாசியிலே நிகழ்ந்துவிடுகின்றது.

து எப்போது நிகழ்கிறது என்றால், ஜமுனா அவரின் சகோதரியான சாயா வீட்டை விட்டு வெளியேறியபின், தற்கொலைக்கு கயிறை மாட்டைத் தூக்குப் போடுவதற்குத் தயாராக இருக்கும்போது, அவர் வாடகைக்கு இருக்கும் வீட்டுப் பெண்மணி அதைக் கண்டுபிடிக்கும்போதாகும். அந்தத் தருணத்தில் வீட்டுப்பெண்மணி, ஜமுனா எந்நேரமானாலும் தற்கொலை செய்துவிடுவார் என்ற அச்சத்தில் ஜமுனாவை வீட்டை விட்டுப் போகச் சொல்லும்போது, ஜமுனா, அயல்வீட்டு ஆசிரியரிடம் இதைப் பகிரும்போது, அந்த ஆசிரியர் தன் அனுபவங்களைப் பேசும் இடத்தையே இந்நாவலின் மிக உச்சமானதாக நான் கொள்வேன்.

அந்த ஆசிரியர் தனது பதினைந்தாவது வயதில், நாற்பத்தைந்து வயது இருக்கும் ஒருவருக்குக் கட்டிக்கொடுக்கப்படுகிறார். அவரின் துணைவரோ எப்போதும் இருமிக்கொண்டு இருக்கும் கடும் நோயாளி. அந்த ஆசிரியர் முதன்முதலில் அவரின் கணவரோடு தனித்து விடப்படும்போது, நிகழும் சம்பவங்களை அந்த ஆசிரியர் வர்ணிக்கும்போது, யமுனா தான் தொடர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையைப் பெற்றுக்கொள்கிறார். ஏனெனில் வெளியே அவ்வளவு தெரியாது ஆசிரியரின் வாழ்க்கை ஒரு நரக வாழ்வு. ஆனால் இந்த வாழ்வை வாழ்ந்துதானே ஆகவேண்டும் என்பதில் பிடிவாதமுள்ளவர் அந்த ஆசிரியர்.

இந்த இடத்தில் அசோகமித்திரன் எதையும் அதிகம் பேசிவிடுவதில்லை. வாசிக்கும் நமக்கு ஜமுனாவின் தற்கொலைக்கு சாயாவின் வெளியேற்றம் என்பதே ஒரு காரணமாகச் சொன்னாலும், ஜமுனாவின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை நாம் கடைசி அத்தியாயத்தில் தெளிவாக விளங்கிக்கொள்கின்றோம். ஆனால் நாவல் முடியும்போது ஜமுனா தெளிவாக இருக்கின்றார். நீளும் வாழ்வு எவ்வளவு கடினமான பாதையாக இருந்தாலும் அதை அதன் எல்லா முகங்களோடும் எதிர்கொள்ளத் தயாராவதை அவர் அவதானிக்கமுடியும். ஆக, ஜமுனா தற்கொலை முயற்சிக்கான முக்கிய காரணம் தங்கையின் வெளியேற்றம் அல்ல. அவர் கர்ப்பமாகி விட்டதை அறிந்துகொண்டதுதான் என்பதை அசோகமித்திரன் இறுதியில் எமக்குச் சொல்லாமல் சொல்கின்றார்.

அதேவேளை ஜமுனாவால் அவர் கர்ப்பத்திற்குக் காரணமான ஆணோடு எந்தப் பொழுதிலும் சேர்ந்து வாழமுடியாது என்பதையும் அசோகமித்திரன் நமக்கு எளிதாக உணர்த்தியும் விடுகிறார். இப்போது நமக்கு இந்த நாவல் நகரத்தில் 'தண்ணீர்' ஒழுங்காய்க் கிடைக்காததன் அவதியைச் சொன்னாலும், இந்த நாவலுக்குள் மறைமுகமாகச் சொல்லப்படுவது வேறொரு பெருந்துயரத்தைதான் என்பது விளங்கிவிடுகின்றது. மனிதர்கள் தண்ணீருக்காய் அலைவதைப் போல, நேசத்துக்காகவும், பிற மனிதர்களின் அரவணைப்புக்காகவும் இன்னும் தாகத்துடன் அலைகின்றார்கள் என்பதும் இந்தநாவலினூடு மறைந்து கிடப்பதைக் காண்கின்றோம்.
.................

(Apr 15, 2020)

சில புத்தகங்கள், சில அவதானங்கள்

Saturday, May 09, 2020

ந்த வருடம் வாசிப்பின் உற்சாகமான ஆண்டாகத் தொடங்கியிருக்கின்றது. முக்கியமாய் ஈழத்தவர்  பலரின் நூல்களை  வாசித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. விமர்சனங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு உற்சாகப்படுத்தல்களும் அவசியமானது. இவை இந்த படைப்பாளிகள் தொடர்ந்து எழுத்து மனோநிலையுடன் இருந்து எழுத  அவர்களை உந்தித்தள்ளும்.  சிறுகதைத் தொகுப்பாயின், மூன்று நான்கு கதைகள் நன்றாக இருந்தாலே அது என் வாசிப்பைப் பொருத்தவரை, கவனிக்கத்ததொரு தொகுப்பாக மாறிவிடும்.

அண்மையில் அப்படி வடகோவை வரதராஜனின் 'நிலவு குளிர்ச்சியாக இல்லை' தொகுப்பில் இருந்த 12 கதைகளையும் உற்சாகமாக வாசித்திருந்தேன். ஒரு முழுத்தொகுப்பாக எனக்கு முழுமை தந்த தொகுப்புக்கள் மிகக்குறைவு. இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு என்றாலும், ஒரு நிறைவான வாசிப்பாக இருந்தது சற்று ஆச்சரியமானதுதான். இத்தொகுப்பில் கதைகளுக்கு முன் வரதராஜனின் 'ஒரு வார்த்தை', பிறரின் அணிந்துரைகள் இன்றையகாலத்தில் அவசியமற்றவை என்பதையும், வாசகரோடு தொகுப்பு நேரடியாக உரையாடும் சுதந்திரத்துக்கு இடையூறு செய்பவை என்பதையும் அவர் இப்போது அறிந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நீக்ரோக்கள்' என்று பாவிப்பது ஒரு இனத்தின் மீதான மிகமோசமான வசை என்பதையும் தவிர்த்துவிட்டால் இது மிக முக்கியமான தொகுப்பு என்பேன்.

எஸ்.பொ எழுதியவற்றில் 'நனவிடை தோய்தலை' முதல் வாசித்தபோது என்னைக் கவரவில்லை. ஏனென்றால் அது எனக்குரிய காலத்துக்குரியதாக இல்லாததால், ஒரு விலகல் இருந்தது. எனினும் பின்னர் வாசித்தபோது அது என்னை ஈர்த்துக்கொண்டது. அவ்வாறு 'நனவிடை தோய்தலுக்கு'ப் பிறகு, அ.இரவியின் 'காலமாகி வந்த கதைகளை'ச் சொல்வேன். அது நான் அலைந்து திரிந்த இடங்களையும், யாரெல்லாம் தெரியாது தற்செயலாகக் கடந்துபோன மனிதர்களையும் பற்றி விபரித்தாலும், அது எனக்கு சற்று முந்தைய தலைமுறையினர்க்கு இன்னும் பிடித்திருக்கக்கூடியது. பிறகு, புலம்பெயர் தேசத்தில், மொழியே தெரியாது சிக்கித்திணறி வாழ்வை அமைத்துக்கொண்ட முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கதைகளை செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித் தீராப் பக்கங்கள்' சொல்லிப் போந்தது.

இவ்வாறான எழுத்துக்களை கட்டுரைகள் வகைக்குள் அடக்கமுடியாது. அவை போல சிறுகதைகள் எனச் சொல்லவுமுடியாது. மேற்கூறிய படைப்பாளிகள் ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ, அவ்வாறு நான் எழுதிய எழுத்துக்களை 'அனுபவப்புனைவு' என்ற வகைக்குள்ளே வைத்துக் கொள்கின்றவன். இவை நமது அனுபவங்களின் நீட்சியில் கிளர்ந்து எழுதுபவை, ஆனால் அந்த அனுபவங்களை எழுதும்போது பிறகு புனைவாகி விடுவது உண்டு என்பது எண்ணம். ஆகவேதான் செழியன் இவ்வாறு அனுபவப் புனைவுகளை அரசியல் சார்ந்து 'வானத்தைப் பிளந்த கதை'யாக எழுதியபோது, பலர் அதில் உண்மைகளைத் தேடி அலைந்து நிராகரிக்கவும் முற்பட்டனர். இவ்வாறான அனுபவங்களை எழுதிய அனைவரும், அந்த அனுபவங்களைத்தாண்டி தாம் சேர்த்து எழுதிய புனைவுகளை நன்கு அறிந்திருப்பார்கள். ஆகவேதான் நான் இவற்றை அனுபவப்புனைவுகள் என்று வரையறுக்க விரும்புகின்றேன்.

நான் விரும்பி வாசித்தவையாக 'நனவிடைதோய்தல்', 'காலமாகி வந்த கதைகள்', 'எழுதித் தீராப் பக்கங்கள்' இருந்தாலும், நான் மிக நெருக்கமாய் வாசித்த இன்னொரு அனுபவப்புனைவு இருக்கிறது. அது உமாஜி எழுதிய 'காக்கா கொத்திய காயம்'. இது ஏன் எனக்கு பிடித்தது என்றால் இது என் காலத்தைய கதைகளைப் பேசுகிறது. சயந்தனின் 'ஆறாவடு' வந்தபோது என் காலத்தைய ஒரு கதைசொல்லி எழுதவந்திருக்கின்றார் என மகிழ்ந்தது போல, உமாவினது 'காக்கா கொத்திய காயத்தை' வாசித்தபோது எமக்கான ஒரு 'நனவிடைதோய்தல்' வந்துவிட்டது என்ற ஒரு நிறைவு ஏற்பட்டது. அநேகமான எல்லாப் பதிவுகளும் யாரோ ஒரு மனிதரைச் சுற்றி அது அன்றைய காலத்துக்கு நிகழ்வுகளுக்குள் ஊடறுத்துச் செல்கின்றது. இதில் உமா இந்த மனிதர்களை வியந்து பாராட்டுவதையும், அதேசமயம் அவருக்கு இயல்பாக இருக்கும் ஒரு விலகல்தன்மையினால், இந்த மனிதர்களை இன்னும் அதிகம் அறிந்திருக்கலாமோ/பழகியிருக்கலாமோ என்ற எண்ணத்தையும் வாசிக்கும் நமக்கிடையில் விட்டுச்செல்கின்றார். இதிலிருக்கும் 'நிராகரிப்பின் வலி'யிலிருந்து, 'ஆதலினால் காதல்' செய்வதிலிருந்து, 'பங்கர்' வெட்டுவதிலிருந்து, 'கடவுளைத் தேடி; அலைவத்லிருந்து, 'அப்பா'வரை நான் எனது சாயல்களை அதில் காட்டப்படும் மனிதர்களில் காண முடிந்திருந்தது.

அனுபவப் புனைவில் சுவாரசியம் இருக்கின்றன என்றாலும், அதற்கு ஒரு பலவீனமும் இருக்கின்றது. இவ்வாறான  பதிவுகளால் கற்பனையின் ஒரு எல்லைக்கு அப்பால் போகமுடியாது என்பதாகும். இல்லாவிட்டால் அவை முழுப்புனைவாக மாறிவிடும். ஓர் உதாரணத்துக்கு ஒரு மனிதரைப் பற்றி உமாவின் பதிவைப் போல விரியும் ஜேகேயின் 'சமாதானத்தின் கதை'யும் சமாதானம் என்கின்ற ஒரு மனிதரைப் பற்றியே சொல்கின்றது. ஆனால் அது புனைவாக இருப்பதால் தன் சிறகுகளை யதார்த்த்திலிருந்து மேலும் விரித்துப் பார்க்கும் சுதந்திரத்தைக் கொடுக்கின்றது. இதை அனுபவப்புனைவுகளில் முயற்சிக்க முடியாது. அப்படி ஓர் எல்லையைக் கடந்துவிட்டால் அது வேறு வடிவத்தை எடுத்துவிடும்.

இப்படி அனுபவப்புனைவாக இல்லாது, அனுபவங்களை மட்டுமே சொல்கின்றேன் என்று எழுதப்பட்ட இன்னொரு தொகுப்பு 'குப்பி. வெற்றிச்செல்வியே இந்தச் சம்பவங்களின் நம்பகத்தன்மையை மீண்டும் அந்தச் சம்பவங்களோடு சம்பந்தப்பட்டவர்களோடு கதைத்து உறுதிப்படுத்தியதாக நூலின் தொடக்கத்தில் சொல்கின்றார். ஆகவே இதற்கு, அனுபவப்புனைவுகளுக்கு இருக்கும் மெல்லிய புனைவின் சாயல் கூட இல்லாது இருக்கின்றது. 'குப்பி'யில் போராட்டப்போன விடுதலைப்புலி போராளிகளின் கதைகள் பல்வேறு காலகட்டங்களில் வைத்துச் சொல்லப்படுகின்றது. இவ்வாறான போராளிகளின் சாகசங்களையும், தியாகங்களையும் அன்றையகால 'வெளிச்சம்', 'எரிமலை', 'உலகத்தமிழர்' போன்ற பத்திரிகைகள்/சஞ்சிகைகள் வாசித்தவர் நன்கு அறிந்திருப்பர். களத்தில் மரணமடையும் ஒவ்வொரு முக்கிய போராளிபற்றியும் பதிவுகள் இவற்றில் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். சற்றுப் பிரச்சார வகையாக இருந்தாலும், அதில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களை  அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கும். குப்பியில் இருப்பவை சிறுசிறு சம்பவங்கள். ஆனால் நடந்தவை என்பதால் வாசிக்க அலுப்புத் தராது இருக்கின்றது.

ஓரு 'கதை'யில் புலிகள் படகில் போய் மன்னாரில் ஒரு தாக்குதலை நடத்துகின்றனர். தாக்குதலை நடத்திவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் திரும்பவேண்டும். ஏனெனில் அது இலங்கை இராணுவத்தின் முற்றுகைக்கு உட்பட்ட இடம். அதில் ஒரு பெண் போராளி காயப்பட அவரால் வள்ளத்தினால் ஏறமுடியாது போக,  படகு அவரை விட்டுவிட்டுப் புறப்பட்டுவிடுகிறது. காயப்பட்ட போராளியை ஒரு முஸ்லிம் தாய் காப்பாற்றுகிறார். காயத்தின் நிமித்தம், வெளியே வந்த குடலை கழுவி உள்ளே பத்திரமாய் விட்டு, தைக்கமுடியாத அவதியால் எதையோ வைத்து கட்டிவிட்டு, இராணுவத்துக்குத் தெரியாது, தனது மகனின் உதவியோடு ஒரு படகில் வைத்து புலிகளின் கட்டுபாட்டுப் பகுதியை நோக்கித் தள்ளிவிடுகின்றார். இது இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ் முஸ்லிம் உறவு மிகவும் மோசமான காலத்தில் நடக்கின்றது. இதுதான் மனிதாபிமானம். இவ்வாறான சம்பவங்களை நாம் மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலமே சமூகங்களிடையிலான நல்லிணக்கங்களைப் பேசமுடியும். இதை நேரடியான அரசியல் செய்யாது. ஆனால் இலக்கியம் காயப்பட்ட மனங்களையும், குரோதமான மனிதர்களையும் மெல்லச் சலனமடையச் செய்யும்.

இவற்றோடு என்னைக் கவர்ந்த இன்னொரு தொகுப்பு ஜே.கேயின் 'சமாதானத் கதை'. ஜேகேயின் அனுபவங்கள் சார்ந்து எழுதப்படும் பதிவுகள் பிடிக்குமென்றாலும், அவரது சிறுகதைகளின் என்னை அவ்வளவு கவர்வதில்லை என ஜேகேயின் 'சமாதானத்தின் கதை' காலச்சுவடில் பிரசுரமானபோது எழுதியதாய் ஞாபகம். ஆனால் தொகுப்பாய் பார்க்கும்போது எனக்கு இந்தச் சிறுகதைத் தொகுப்பு பிடித்திருக்கின்றது. முக்கியமாய் 'வெம்பிளி ஒவ் ஜெப்னா', 'விளமீன்', 'உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்'  போன்ற கதைகள் கவனிக்கக் கூடியவை. இப்போது 'சமாதானத்தின் கதை'யை தொகுப்பில் இன்னொருமுறை வாசிக்கும்போது அந்தக் கதையும் முன்னரை விடப் பிடித்திருந்தது. ஜேகே கதைகள் நம்மவர் அநேகர் எழுதும் அதிர்ச்சி முடிவுகளை நோக்கி ஒருபோதும் நகர்வதில்லை. ஒருவகையில் அசோகமித்திரனின் தடத்தில் வருகின்ற ஒரு கதைசொல்லியாகக் கொள்ளலாம். அதிர்ச்சியான சம்பவங்கள் இருந்தால் கூட அதைக் கதையின் முதலிலே கூறிவிட்டே கதையை எழுதுகிறார்.

இதைத் தெளிவாக 'வெம்பிளி ஒவ் ஜெப்னா, விளமீன் போன்ற கதைகளில் காணலாம். ஆனால் இப்படியாக அதிர்ச்சியாக முடிக்காதபோதும், நேர்த்தியான கதைசொல்லலில் அவை நமக்குப் பிடிக்கின்றது. ஒரு குறையாக நிறைய ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் சொல்வதைச் சொல்லலாம். ஒருகாலத்தில் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா (சுஜாதாவிலும் கொஞ்சம் இருக்கிறது) போன்றோரை வாசித்தபோது தமிழகத்து ஆங்கில உச்சரிப்போடு எழுதப்படுவதை வாசித்து, அர்த்தங்களை விளங்கிக்கொள்வதற்குள் மூளை விறைத்துப் போய்விடுவதுண்டு. ஒவ்வொரு நாடுகளிலும் உச்சரிப்பு என்பது வேறுவகையாக இருக்கும்போது, எதை ஜேகே சொல்லவருகின்றார் என்பது, நமது உச்சரிப்பு பழக்கமில்லாதவர்க்குக் குழப்பம் வரலாம். அவசியமாய் ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமென்றால் ஆங்கிலத்திலேயே நேரடியாக எழுதிவிடலாம் என நினைக்கிறேன்.

இவ்வாறாக 'நிலவு குளிர்ச்சியாக இல்லை', 'காக்கா கொத்திய காயம்' (தலைப்பை வேறுவிதமாக வைத்திருக்கலாம்), 'குப்பி', 'சமாதானத்தின் கதை' போன்றவை ஈழத்தவர்களால் நல்ல படைப்புக்களைத் தரமுடியும் என்பதை எளிதாக நிரூபிக்கின்றன. இந்தப் படைப்பாளிகள் அனைவரும் தொடர்ந்து உற்சாக எழுதவேண்டும். ஏனெனில் நல்ல படைப்பாளிகள் விரைவில் உறங்குநிலைக்குப் போய்விடும் ஒரு சாபம் எங்கள் ஈழச்சூழலில் இருக்கின்றது. அதை இவர்கள் கடந்துபோவார்கள் என்பதில் நம்பிக்கை வைக்கின்றேன்.
..................................................

(நன்றி: ' அம்ருதா', 2020)