பிரபஞ்சன் நினைவுப்பரிசு பெற்ற நாவல் (என்று Sabry நாநா கூற கட்டாயம் வாசிக்கிறேன் என்று)வாங்கிவந்தேன். பிரபஞ்சனின் என்ற பெயர் கூறுகையில் ஞாபகம் வருவது “இவ்வளவுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்ற வரிகள் தான். மனதை நெகிழ்சியுற வைக்கும் எழுத்துக்களில் பிரபஞ்சனுடையதும் என் பிரையோரிட்டி வரிசையில் வந்துவிடும். அதே நெகிழ்ச்சியை தரவல்ல ஓர் படைப்பாகத்தான் ‘மெக்ஸிக்கோ’ வும் அமையப்பெற்றிருக்கிறது. Enrique iglesias,Murakami,Bukowski,Zedd,Passenger என என் மனதுடன் ஒன்றிய பலரையும் எழுத்தாளர் கையாண்ட விதம் அபாரம்.
இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவல் குறித்து - Shathir Ahamed
In மெக்ஸிக்கோWednesday, December 30, 2020
இச்சாவும், சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்..
In எதிர்வினை, In வாசிப்புMonday, December 28, 2020
1.
கடந்த சில நாட்களாய் இந்த இரண்டு நாவல்கள் பற்றிய விவாதங்கள் அனல் பறந்துகொண்டிருக்கின்றன. ஒன்று இன்னொன்றின் பாதிப்பில் எழுதப்பட்டது என்று எங்கையோ புகையத் தொடங்கியிருக்கின்றது. இதை எழுதியவர்களுக்குரிய இரண்டு தரப்புக்களும் தமது சட்டங்களுக்குள் நின்று களமாட, இன்னொரு தரப்போ இந்தப் பிரதிகளை வாசிக்காது தமக்கான புதிய புனைவுகளை இந்தப் பிரதிகளை முன்வைத்து புனைந்து கொள்ளவும் தொடங்கிவிட்டனர்.
நமது தமிழ்ச்சூழலில் எழுதப்படுபவற்றை முழுமையாக வாசிக்காது முடிவுகளை எடுப்பதில் வல்லவர்கள் நாம். அத்தோடு நான் இந்தத் தரப்புக்களின் வாதங்களுக்குள் போய் ஆராய்ந்து பார்க்கவும் விரும்பவில்லை. இந்த இரண்டு நாவல்களையும் இப்போது வாசித்துவிட்டதால் என் வாசிப்பில் தோன்றிய சிலதைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.
இந்த நாவல்களின் சில பகுதிகளில் ஒற்றுமைகள் இருக்கின்றன. அதை மறுக்கத் தேவையில்லை. ஆனால் அது ஒன்றை இன்னொன்று தழுவியதால் வந்ததென எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. அது - நமது ஈழப்போராட்ட வரலாறு என எதை எழுதினாலும் ஒத்தபுள்ளிகளில் இசைந்து வரக்கூடிய பகுதிகளாகும். இந்த நாவலில் உறுத்தக் கூடிய ஒற்றுமை, ஒரு போராளிப்பாத்திரத்தின் இரண்டு விதமான வாழ்க்கை முறை சொல்லப்படுகின்ற பகுதிகளாகும். அதாவது போராளி/போர்க்கால வாழ்வு, பின்னர் புலம்பெயர் வாழ்வு.
இதைத் தவிர்த்து இந்த நாவல்கள் இரண்டுமே எழுதப்பட்ட/வடிவமைக்கப்பட்ட அமைப்பு முற்றிலும் வேறுவிதமானவை. ஆங்கிலத்தில் 'நீங்கள் அப்பிள்களையும் தோடம்பழங்களையும் ஒப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அவ்வாறே இந்த இரண்டு நாவல்களையும் தனித்தனியாக வைத்து பிரதிக்குள் வைத்து அலசிப் பார்க்கவே விரும்புவேனே தவிர ஒன்றை ஒன்றுடன் ஒப்பிட்டுக் கொள்ள என் வாசிப்பின் வழி விரும்பமாட்டேன். இன்னும் தெளிவாகச் சொன்னால் ஷோபாசக்தியினதும், சேனனினதும் முன்னைய நாவல்களோடு அவர்களின் நாவல்களை ஒப்பிட்டுக் கொள்ள விரும்புவேனோ தவிர இந்த இரண்டு நாவல்களையும் அருகருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்ப்பதில் எனக்கு ஒப்புதலுமில்லை.
2.
ஷோபாவின் 'இச்சா'வினை வாசித்து அன்று எழுதிய சிறுகுறிப்பில், 'இச்சா' தவிர்க்காது வாசிக்கவேண்டிய நாவல் எனினும், 'இச்சா'வினை ஷோபாவினது முக்கிய நாவல்களில் ஒன்றாக முன்வைக்கமாட்டேன் என்றும் எழுதியிருப்பேன். ஏனெனில் எனக்கு அவர் அதற்கு முன் எழுதிய 'பொக்ஸ்: கதைப்புத்தகம்' , 'இச்சா'வினை விட முக்கியமானதாக இருந்தது. அது என் வாசிப்பு. இன்னொருவர் என் வாசிப்பை மறுத்து 'இச்சா' மிகச்சிறந்த நாவலென தனது வாசிப்பை முன்வைக்கலாம். அவ்வாறுதான் ஒவ்வொரு படைப்பும் தனக்கான இடத்தை காலத்தின் மேல் வைத்து நகர்ந்து கொள்ளும்.
இந்த நாவலைத் தொடங்கமுன்னர் சேனன் நிறையப் பேர்களுக்கு விரிவாக நன்றி சொல்லி, சில பக்கங்களை அதற்காய் ஒதுக்கி இருப்பார். இதை இவ்வளவு பேர் வாசித்தார்களா, கருத்துக்களைப் பகிர்ந்தார்களா என வியப்பேற்பட்டாலும், ஆகக்குறைந்தது இந்த நீண்ட பட்டியலில் இருப்பவர்களில் ஒருவராவது இந்த நாவலில் இருக்கும் எழுத்துப்பிழைகளைப் பார்ப்பதற்காய்க் கொஞ்ச நேரம் செலவழித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்தளவு எழுத்துப் பிழைகள். சாதாரணமாகப் பாவிக்கின்ற உண்மை, இலையான் என்று வருகின்ற இடங்களிலேயே உ'ன்'மை, இ'ளை'யான் என்று எல்லா இடங்களில் வரும்போது அந்தப் பட்டியலில் இருப்பவர்களை, இதையெல்லாம் கவனிக்காது வாசித்து நன்றிகொன்றவர்கள் என நினைத்துக்கொண்டேன்.
நான் 'இச்சா'வுக்கு இன்னொரு இடத்தில் வைத்திருந்த விமர்சனங்களில் முக்கியமானது, பின்னட்டையில் பாவிக்கப்பட்ட சேலையணிந்த சிறுமி ஒருவரினது புகைப்படம். புனைவு என்று எழுதிவிட்டு இப்படியெல்லாம் வாசகரைச் சுத்துமாத்துச் செய்யத் தேவையில்லை என்று சொல்லியிருப்பேன். ஷோபாவைப் பற்றிக் கொஞ்சம் விமர்சித்து எழுதினாலே அவருக்காய் எல்லா இடங்களிலும் பேசவல்ல நண்பரொருவர் வந்து அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் இப்போது இந்தியாவில் இருக்கின்றார். அவரின் அனுமதி கேட்டுத்தான் இதில் பிரசுரிக்கப்பட்டதென்றும் அந்தப் பொழுதில் கூறியிருந்தார்.. அப்படிப் பார்த்தால் ஒரு எளிய வாசக மனம், இந்தப் பெண்தான் அந்த ஆலா அல்லது ஆலாவின் சாயல் என நினைத்துக் கொள்ளலாம்.
அப்படியெனில் யாரோ தெரிந்த பெண்ணுக்கு நடந்த கதையைத்தான் ஷோபா எழுதியிருக்கின்றார் என முடிவு செய்வதற்கான வாசிப்புச் சுதந்திரமும் இதில் இருக்கிறது. அந்தவகையில் வைத்துப் பார்த்தால், அதே பெண்ணின் கதை சேனனுக்கும் தெரிந்திருக்கலாம் (ஒரே ஊர்க்காரர், ஒருவகையில் இருவரும் உறவினர்கள் என்றும் சொல்கிறார்கள்). ஆக தெரிந்த ஒரு பெண்ணின் கதையைத்தான் இருவரும் எழுத முயன்றிருக்கலாம் என ஒருவர் வேண்டுமெனில் ஒரு வாதத்திற்காய்ச் சொல்லலாம். ஆகவேதான் புனைவைப் புனைவாக எழுதுங்கள். Auto biography ஐ Auto biography ஆக எழுதுங்கள். Memoirஐ Memoirஆக எழுதுங்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன். ஆட்டுக்குள் மாட்டைக் கொண்டு வந்து விட்டால் எப்போதேனும் வேறு திசையில் இதைபோலச் சிக்கல்கள் வந்து சேரக்கூடும்.
3.
என் வாசிப்பில் இந்த நாவல்களில் சில வகையில் ஒற்றுமைகள் இருக்கின்றன என்று சொல்வேனே தவிர, இச்சா, சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களின் பாதிப்பில் எழுதப்பட்டதெனச் சொல்ல அவ்வளவு எளிதில் துணியமாட்டேன். அப்படிப் பார்த்தால், இன்னொருவகையில் ஷோபாவின் பாதிப்பில் கதைகளும் நாவல்களையும் எழுதத் தொடங்கியோர் என்று கூட ஒரு பட்டியலிட முடியும். நாம் அங்கெல்லாம் போகத் தேவையில்லை.
நிலையற்ற யுத்தக்காலங்களில் பல்வேறு வதந்திகளும்/புனைவுகளும் இயல்பு என்பதை -அது அப்படித்தான் என- எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டு நாவல்கள் ஒத்தசாயலாக இருக்கின்றது என்று பேச்சு வந்தால், கொஞ்சம் பொறுமையாக இருந்து இரண்டு நாவல்களையும் வாசித்துவிட்டு கருத்துக்களைச் சொல்வதால் எதையும் நாம் இழக்கப் போவதில்லை.
மற்றது இந்த எழுத்தாளர்களின் ஆதரவாளர்கள், இந்த இரண்டு நாவல்களையும் வாசித்து ஒப்பிட்டு எழுதாமல் விட்டால் கூடப் பரவாயில்லை, ஆகக்குறைந்தது ஏன் தமக்கு இந்த நாவல்கள் முக்கியமானது என்று விரிவாக எழுதுவது அவர்கள் தமக்குப் பிடித்த படைப்பாளிக்குக் கொடுக்கும் மரியாதையாக இருக்கும். அவ்வாறு எழுதப்படுவதை வாசித்து நமது நேரமும் பிரயோசனமாகப் போனது என்று நாமும் அவர்களை நன்றியுடன் நினைவில் இருத்திக் கொள்வோம்.
....................................................
(Sep 06, 2020)
சூரன் சுயசரிதை
In வரலாறு, In வாசிப்புSaturday, December 26, 2020
வரலாற்றை வாசித்தல் - 05
1.
"எனது பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் கோயிலுக்குள்ளே செல்லட்டும். ஆனால் நான் உங்கள் கோயில்களுக்கு வரமாட்டேன். ஏனெனில் உங்கள் கோயில்களுக்குள்ளே சுத்தம் மிகக்குறைவு" என்று ஒடுக்கப்பட்ட மக்களை கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கலாமா என்ற விவாதங்கள் 1940களில் நடந்தபோது சூரன் அவர்கள் கூறிய கருத்து ஒருகாலத்தில் பிரபல்யமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு தீர்க்கமாய்க் கூறிய சூரன் நம் இலங்கை வரலாற்றில் முக்கியமானவர். ஒருவகையில் பண்டிதர் அயோத்திதாசர் போல மறைக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்காரர் என அவரைச் சொல்லலாம். சூரனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் 1900களின் தொடக்ககாலங்களில் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றின் குறுக்குவெட்டு முகத்தைப் பார்க்கலாம்.
சூரனின் முக்கியத்துவம் என்பது, ஒடுக்கப்பட்டவர்கள் சைவப்பாடசாலைகளில் கற்க மறுக்கப்படுகின்ற கொடுஞ்சூழலில், அவர் தனது மக்களுக்காக 1914ம் ஆண்டு கட்டுகின்ற பாடசாலையாகும். பின்னர் தேவரையாளி இந்துக்கல்லூரியாக அது வளர்ச்சி பெற்று இன்று நிமிர்ந்து நிற்கின்றது. அதைக் கட்டியதோடு அல்லாது, அந்த நிகழ்வுகளை அப்படியே எழுத்தில் பதிவு செய்திருப்பதே நமக்கு இங்கே முக்கியமாகின்றது. கிட்டத்தட்ட இது எழுதப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகே அச்சில் (2004இல்) ஏறுகின்றது என்றாலும் நமக்கு ஒரு அரிய ஆவணம் சாட்சியமாக 'சூரன் சுயசரிதை' கிடைத்த மகிழ்வு வருகிறது.
'சூரன் சுயசரிதை' என்கின்ற இந்தநூலில் அவர் தன்னைப் பற்றிய தனி விபரங்கள் எதையும் பெரிதாய்ப் பேசவில்லை. பாடசாலையை 1910களில் தனித்து, மேலும் நான்கு ஒடுக்கப்பட்ட நண்பர்களோடு சேர்ந்து கட்டுகின்ற தகவல்களையும், அதன் நிமித்தம் சந்திக்கும் சிக்கல்களையுமே விரிவாகப் பதிவு செய்கின்றார். பாடசாலை கட்டத் தொடங்கும் காலத்தில், அருகிலிருக்கும் அமெரிக்க மிஷன் கல்லூரி யாராலோ எரிக்கப்பட, சூரன் உள்ளிட்ட சிலர் இவர்களே அதை எரித்தார்கள் எனக் குற்றவாளியாக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர். பின்னர் பாடசாலைக்கென நிதிசேகரிப்பிலும் சிக்கல்கள் வருகின்றன.
இவற்றையெல்லாம் தாண்டி பாடசாலையைக் கட்டி, ஒருமாதிரியாகப் பிள்ளைகள் சிலரை பாடசாலைக்கு படிக்கச் சேர்த்ததன் பிறகு இன்னொரு சிக்கல் வருகின்றது. அன்றையகாலத்தில் வாழ்ந்த எந்த ஆதிக்கசாதி ஆசிரியர்களும் கல்வி கற்பிக்க வர முன்வரவில்லை. எனினும் மனந்தளராது ஆதிக்கசாதி ஆசிரியர் ஒருவருக்கு அவர் மற்றப்பாடசாலையில் வாங்கும் சம்பளத்தை விட இரண்டரை மடங்கு ஊதியம் கொடுத்து அவரை அழைத்துவருகின்றனர்.எனினும் ஆதிக்கசாதிகளில் இருந்து வரும் எந்த அதிபரும் ஒழுங்காக இல்லாததுகண்டு, ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அங்கே ஆசிரியர்/அதிபராக வரவேண்டும் என்று சூரனைப் போன்றவர்கள் நினைக்கிறனர்.
2.
இங்கேதான் யாழ் சமூகத்தில் மிக முக்கியமான ஒரு பாய்ச்சல் ஒடுக்கப்பட்டோரிலிருந்து நிகழ்கின்றது. இந்த நூலில் மிக முக்கியமான ஆவணப்பதிவாக இதையும் இணைத்துச் சொல்லவேண்டும். அது - முதன்முதலாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு வல்லிபுரம் என்கின்ற ஆசிரியர் செல்கின்ற நிகழ்வாகும். வல்லிபுரம் சூரனின் உறவினர் என்பதால் அப்போது நிகழ்ந்த நிகழ்வுகளை அருகில் இருந்து பல பக்கங்களில் சூரன் இந்த நூலில் எழுதிச் செல்கின்றார்.
ஒடுக்கப்பட்டவரையே படிக்க அனுமதிக்கா யாழ் ஆதிக்க சமூகம் ஒரு ஆசிரியர் முதன்முதலில் பயிற்சிக்காகப் போகும்போது எப்படி வரவேற்கும். மூர்க்கமாய் எதிர்க்கின்றது. அதை மீறியும் வல்லிபுரம் போனபின் அவர் கோப்பாய் விடுதியில் இருந்து வெளியேறவிடவேண்டும், இல்லை என்று கொல்லப்படுவார் என ஆதிக்கசாதி காடையர்களால் எச்சரிக்கப்படுகின்றனர்.
அன்று சமஆசன சமபந்தி சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டதால் வல்லிபுரம் என்ற ஒடுக்கப்பட்டவரோடு சேர்ந்து படிக்கும் 40 ஆதிக்கச்சாதி மாணவர்களும் வெளிநடப்புச் செய்கின்றனர். அவர்கள் விடுதியிலிருந்து வெளியேறுகின்றனர். வெளியே சென்று சாப்பிடுகின்றனர். வல்லிபுரம் வீட்டுக்குத் திரும்பவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு இந்த ஒருவருக்காக 40 பேரைப் பகைக்கமுடியாது என்று முதலில் அங்கிருந்து அகற்றப்படுகின்றார்.
எனினும் வல்லிபுரத்தின் தந்தையார் மற்றும் சூரன் போன்ற சிலரின் வற்புறுத்ததால் வல்லிபுரம் திருப்ப கலாசாலைக்கு எடுக்கப்பட்டாலும், வல்லிபுரத்தை ஒரு கடிதத்தை -அந்த 40 ஆதிக்காசாதி மாணவர்களுக்காய்- அவர் வெளியில் சென்று சாப்பிடுவதாக எழுதித் தரச் சொல்லித் தரச்சொல்கின்றனர். இப்படி எழுதிக் கொடுத்தால் பிறகு வல்லிபுரம் பயிற்சிக்கல்லூரியில் இருந்து கற்கமுடியாது போய்விடும் என்று சூரனைப் போன்றவர்கள் தயங்குகின்றனர். இதற்காய் சூரனைப் போன்றோர் எந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்பதையும் இந்த நூலை நாம் வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம்.
பல்வேறு வகைகளில் வெளியில் மட்டும் அல்லாது, அவரின் ஊரிலுள்ள ஆதிக்கசாதியினரும் வல்லிபுரத்தை வீட்டுக்கு எடுக்கும்படி சூரனைப் போன்றவர்களிடம் வற்புறுத்துகின்றார்கள். இவ்வாறான நெருக்கடிகளை மீறி வல்லிபுரம் கற்றுத்தேர்ந்து வெளியில் வருவது ஒரு பெரும் பாய்ச்சல் எனத்தான் சொல்லவேண்டும். அன்றைய சூழலில் ஒடுக்கப்பட்ட ஒருவர் கோப்பாய் கலாசாலைக்குள் நுழைந்தது பெரும் விடயமாக எல்லாத் தரப்பாலும் நிச்சயம் பேசப்பட்டிருக்கும்
இப்படி கஷ்டப்பட்டு சமாசன சமபந்தியில் ஒடுக்கப்பட்டவர்கள் சாதித்துக் காட்டியதைப் பின்னர், தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் 1960களில் கோயில் நுழைவுப் போராட்டங்களையும், தேநீர் கடைப் பிரவேசங்களையும் செய்தபோது, தமிழரசுக்கட்சியினர் இந்த சமாசன சமபந்தி நிகழ்வுகளை கேலிக்கூத்தாக்கி சாதியொழிப்புப் போராட்டத்தைத் தாங்களும் செய்கின்றனர் என்று காட்ட முயற்சித்ததும் கடந்தகாலத்தில் நிகழ்ந்தவைதான்.
3.
சூரனின் முக்கியத்துவம் என்ன என்பதற்கு இன்னொரு உதாரணத்தை இங்கே கட்டாயம் குறிப்பிடவேண்டும். அது அன்று 1920களில் இலங்கை வாலிபர் காங்கிரஸ், காந்தியின் சுயராஜ்ஜியத்தின் மீது ஈர்ப்புக்கொண்டு இலங்கையில் இயங்கத் தொடங்குகின்றனர். தனியே சுயராஜ்ஜியத்துக்காக மட்டுமின்றி சாதி வேறுபாட்டிற்காகவும் ஹண்டி பேரின்பநாயகம் போன்ற வாலிப காங்கிரஸ்காரர்கள் போராடினார்கள். அந்தவகையில் அவர்கள் 1929, 1930களில் நடந்த மாநாடுகளுக்குச் சூரனை உரையாற்றுவதற்கு அழைத்திருக்கின்றனர். அத்துடன் சூரனைத் தமது அங்கத்துவரும் ஆக்கி அவருக்கான இடத்தையும் கொடுத்திருக்கின்றனர். இவ்வாறு மாநாட்டுக்குப் போன சூரன், அங்கே நடந்த கலவரத்தில் இறந்துவிட்டதாக ஊரில் ஆதிக்கசாதிகள் வதந்திகளைப் பரப்பியதாகவும் சூரன் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்
இற்றைக்கு நாவலரை தமது முகமாகக் கொள்கின்ற யாழ் இந்து சமுகம் ஒருபோதும் சூரனைக் கவனத்தில் கொள்வதே இல்லை. நாவலர் போன்ற சாதிமான்களை விட, தனது ஆதிமதம் சைவமே என்று மதமும் மாறாமல், அதேவேளை இந்து ஆதிக்க சாதிமான்களின் வெறுப்பையும்/ஒடுக்குதல்களையும் சம்பாதித்துக்கொண்டு தனது வேரிலிருந்து தடம்புரளாத சூரனை அல்லவா நாம் யாழ் சமூகத்தின் முகமெனக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலந்தான் நாம் சற்றாவது யாழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களெனப் பெருமிதங் கொள்ளலாம். இந்த நூலின் முன்னுரையிலும் கா.சிவத்தம்பி 90களில் இலங்கைப் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வரும்பொருட்டு, பெரியவர்கள் சிலரை இணைக்கவேண்டும் எனக் கேட்டபோது ஹண்டி பேரின்பநாயகம், சூரன் போன்றவர்களை இணைக்கவேண்டுமெனப் பரிந்துரை செய்ததாகக் குறிப்பிடுகின்றார். அது இற்றைவரை நிகழாமலே இருக்கின்றதெனவே நினைக்கின்றேன்.
சூரன் ஒரு ஆசாரியாகவும் இருந்தவர். அவரது இருபதுகளில் கரவெட்டி தேவமாதா கோயிலுக்கு மாதா சிலை வைக்க ஒரு கண்ணாடிக்கூட்டைச் செய்து கொடுக்கின்றார். அப்போது ஒரு கிறிஸ்தவ வெள்ளாளர் இதை ஒடுக்கப்பட்டவரான சூரன் செய்ததாக வெளியில் சொல்லவேண்டாம், அப்படிச் சொன்னால் சைவ வேளாளர்கள் தங்களை மதிக்கமாட்டார்கள் என்று சொல்கின்றார். சூரன் தேவாலயத்தில் இல்லை என்று நினைப்பில் சொல்லப்பட்ட இதை சூரன் கேட்டுவிடுகின்றார். 'எனக்கு ஒன்றும் இந்தச் சிறப்பு வேண்டாம்' என்று அவரின் முகத்திற்கு நேரே சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது அவருக்குச் சற்று கிறிஸ்தவச் சாய்வு இருந்திருக்கின்றது. எனினும் பிற்காலத்திலும் வதிரி வேதக்கோயிலுக்கு சூரன் இரதம் செய்துகொடுத்திருக்கின்றார். இதன்மூலம் சூரன் ஒரு தீவிர சைவக்காரராக இருந்தாலும் மாற்று மதங்களை வெறுத்து ஒதுக்கவில்லை என்பதும் நமக்குப் புலப்படுகிறது.
ஆசாரியர் சூரன் தனியே இந்த விடயங்களில் மட்டுமில்லாது, அவரே பாடல்களை எழுதி பாடுகின்றவருமாவார். அதை நூலாக்கி பின்னர் பாடசாலைக்கான நிதிக்காய் கொழும்பு, காலி உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு அலைந்தபோது இவற்றைக் கொண்டு சென்று விற்பனை செய்துமிருக்கின்றார். அத்துடன் அவர் நெல்லியடியில் அன்று இருந்த மகாத்மா தியேட்டரில் காந்தி கொல்லப்பட்டபோது நிகழ்ந்த அஞ்சலி நிகழ்விலும் உருக்கமாய் காந்தி பற்றிய பாடல்களைப் பாடியதாக கா.சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். இதைவிட சுவாரசியமானது பராசக்தி திரைப்படம் வந்து, சூரனின் பகுதியில் பல இளைஞர்கள் நாத்திகம் பேசித் திரிந்தபோது, பராசக்தி நாத்திகத்தையல்ல, பக்தியைத்தான் விதந்தோத்துகிறது என்று பராசக்தி பற்றி ஒரு எதிர் விமர்சனமும் எழுதியிருக்கின்றார். இந்த நூலைப் பதிப்பித்த ராஜ சிறிகாந்தன் அந்தக் கட்டுரை தன்னிடம் இருப்பதாகக் குறிப்பிட்டாலும் இந்த நூலில் அதைச் சேர்க்காமல்விட்டது நமக்கு ஓர் இழப்பே. சூரன் கதை என்று அவர் சுயசரிதை வந்ததுபோல, அவர் எழுதிய கட்டுரைகள், அவரைப் பற்றிப் பிறர் எழுதிய பதிவுகள் தொகுக்கப்படவேண்டும். அதன்மூலம் சூரனின் ஆளுமை இன்னும் சிறப்பாக வெளிக்கொணரப்படக்கூடும்.
அன்று இப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் பாடசாலை தொடங்கியிருக்கின்றார் என்று அறிந்து அதை 'இந்துசாசனம்' தனது பத்திரிகையில் வெளியிடுகின்றது . அதேவேளை ஒருவாரம் இலங்கைக்குப் பயணஞ்செய்த கல்கி, சூரனைச் சந்தித்ததைப் பதிவு செய்கையில் ஈழத்து நந்தன் என்று அவரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்
ஒடுக்கப்பட்ட சமுகத்தில் 1881ல் பிறந்த சூரன் 1956இல் மரணமடைகின்றார். சூரன் சுயசரிதையை அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதி முடித்திருந்தாலும் விபரங்களை, சம்பவங்களை, வழக்குகளை காலக்கிரமாக தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஒன்று அவர் ஏற்கனவே குறிப்புகளாக இவற்றை எழுதி வைத்திருக்கவேண்டும் அல்லது இவ்வளவும் அழியாத நினைவுகளாக அவருக்குள் உறைந்து இருந்திருக்கவேண்டும்.
இன்றைக்கும் சாதியைக் கடந்துபோய் விடாத யாழ் சமூகத்திற்கு, சூரன் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் செய்த விடயங்களின் மூலம், ஒரு பெரும் சவாலாக நம் எல்லோர் முன்னும் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கின்றார்.
.....................................................
(Jun 08, 2020)