'ஹரம்' திரைப்படத்தை முன்வைத்து
வாழ்க்கை என்பது ஒருபோதும் ஒழுங்குகளிற்குள்ளும், நமது கட்டுப்பாட்டிற்குள்ளும் நகர்ந்துகொண்டிருப்பதில்லை. அவ்வாறே நிகழும் நிகழ்வுகளுக்கும் அநேக பொழுதுகளில் ஒன்றுக்கொன்று தொடர்புகள் இருப்பதில்லை. இவ்வாறு காட்சிகளை முன்னும் பின்னும் நகர்த்தியபடியும், எங்கிருந்தும் எப்படியும் எதையும் தொடங்கலாம் என்கின்றமாதிரி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஹரம்.
எல்லாக் காட்சிகளுக்கும் ஒரு தெளிவான விளக்கத்தையும், நேர்கோட்டுக் கதை சொல்லலையும் மட்டும் விரும்புகின்ற பார்வையாளர்களை இது வெளியில் தள்ளிவிடவே செய்யும். ஆனால் நமது நாளாந்த வாழ்வு என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத புதிது புதிதாய் முளைக்கும் தருணங்களினூடாக பொங்கிப் பிரவாகித்து நகர்ந்துகொள்வதென்பதை உணர்ந்தவர்களுக்கு இது நெருக்கமான ஒரு படமாக ஆகக்கூடும்.
பெங்களூரில் உள்ள பெருநிறுவனமொன்றில் பாலுவும் இஷாவும் வேலை செய்கின்றனர். இஷாவிற்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்து அது தோல்வியில் முடிவடைந்து, அதன் துயரிலிருந்து வெளிவர முடியாது தவிர்க்கின்றார். நினைவுகளின் சுமை தாங்காமல், கையை அறுத்து தற்கொலையின் எல்லைவரை செல்கின்றார். அவரை மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு மீட்டுக்கொண்டு வருகின்றார் பாலு. இருவருக்குமிடையில் மார்க்வெஸின் 'கொலராக் காலத்தில் காதலிலிருந்து', ஓ.விஜயனின் நாவல்களை வரை பேசக்கூடிய ஒத்த அலைவரிசை இருக்கிறது.
பாலு கல்லூரிக்காலத்தில் புரட்சி மீது நம்பிக்கையுடையவராக இருக்கின்றார். சேயினுடைய 'புரட்சி என்பது ஆப்பிள் அல்ல, தானாய்க் கனிந்து விழுவதற்கு, நாம்தான் அடித்து விழுத்தவேண்டும்' என்பது பாலுவிற்குப் பிடித்த புரட்சிகர வார்த்தைகள். ஆனால் அப்படி இருந்தவரை வாழ்க்கை ஒரு பல்தேசிய நிறுவனத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுகின்றது. அவர் எப்படி இந்த இடத்திற்கு வந்துசேர்கின்றார் என்பது படத்தில் காட்டப்படுவதில்லை. ஆனால் இளமைக்காலத்தில் இப்படி புரட்சி பற்றி பெரும் நம்பிக்கையோடு இருந்தவர்கள் பலர் திசைமாறிப் போன கதைகள் நம்மிடம் பலநூற்றுக்கணக்கில் இருக்கின்றதுதானே.
ஒத்தவரிசையில் இருப்பதாய் நம்பும் பாலுவும் இஷாவும் எளியமுறையில் திருமணஞ்செய்து கொச்சினுக்குச் சென்று வாழத் தொடங்குகின்றார்கள். அவர்கள் நினைத்தமாதிரி சேர்த்து வாழ்தல் என்பது எளிதாய் இருக்கவில்லை. மெல்ல மெல்லதாய் முரண்கள் அவர்களுக்கிடையில் வரத்தொடங்குகின்றது. ஒருமுறை இஷாவினது வேலையிட விருந்திற்குச் செல்லும்போது, இஷாவை உடல்ரீதியாய் மிகமோசமாய் விபரிக்கும், இஷா வேலை பார்க்கும் நிறுவன அதிபரோடு பாலு சண்டை பிடிக்கின்றார். அந்த விருந்து அத்தோடு குழம்புகின்றது. பாலுதான் இதைக் குழப்பினவன் என்று இஷா குற்றஞ்சாட்டுகின்றார். இனி தன் நிறுவன அதிபரை எந்த முகத்தோடு சந்திப்பது, தான் தன் வேலையை இராஜினாமாச் செய்யப்போகின்றேன் என்கிறார் இஷா.
பாலுவோ, இப்படி பெண்களைப் பாலியல் பண்டங்களாக ஒருவர் பேசுவதைச் சகித்துக்கொள்ளச் சொல்கின்றாயா எனக் கேட்கின்றார். பல்தேசிய நிறுவனங்களில் இவ்வாறு பேசுவது இயல்பு, நாம் தான் சமாளித்துக்கொண்டு போகவேண்டும் என்கின்றார் இஷா. தொழிலாளர்க்கு உற்பத்தியில் பெரும் பங்கிருக்கின்றது, அவர்களைக் கீழ்த்தரமாக நடத்தமுடியாது என்று பாலு மறுத்துக்கூறும்போது, இப்படி கம்யூனிசம் பேசும் நீயேன் பல்தேசிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாய் எனக் கேட்கின்றார். இந்த விவாதம் இப்படியே நீண்டு பாலு அதிகம் கதைத்ததற்காய் மன்னிப்புக் கேட்கின்றபோதும், இஷா இறுதியில் வீட்டை விட்டு வெளியேறுகின்றார்.
இஷா முன்பு எப்படி தன் பழைய காதலை மறக்கமுடியாது தவிர்த்தாரோ, அவ்வாறே இப்போது பாலுவினால் இஷாவின் பிரிவைத் தாங்க முடியாதிருக்கின்றது. தன் துயரைத் தவிர்க்க நிறையக் குடிக்க ஆரம்பிக்கின்றார், தனித்தும் போகின்றார். இதன் தொடர்ச்சியில், இஷா irreconcilable differences என்பதன் அடிப்படையில் விவாகரத்துக்கோரி பாலுவிற்கு விண்ணப்பம் அனுப்புகின்றார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் இணைவோம் என்றிருந்த பாலுவிற்கு இது கோபத்தை மூட்ட, இஷாவின் அலுவலகம் சென்று மூர்க்கமாய்ப் பேசுகின்றார்.
இவர்களின் இருவரின் வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர், இருவரிடமிருந்தும்- முக்கியமாய்- இஷாவிடமிருந்து எது முக்கிய காரணம் இந்த விவாகரத்துக் கோரிக்கையிற்கு என்பதை அவரால் அறியமுடியாதிருக்கின்றது. இஷா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று அடம்பிடிக்கின்றார். இறுதியில் வழக்கறிஞர் உங்கள் இருவரோடும் தனித்தனியாகக் கதைத்துப் பார்த்தன்படி, நீங்கள் இருவருமே ஒருவரையொருவர் வெறுக்கவில்லை என்பது தெரிகின்றது என்கின்றார். 'சிலவேளைகளில் எல்லாவற்றுக்கும் ஒரு தெளிவான காரணம் இருப்பதில்லை, என்னால் இந்த உறவில் இருக்கமுடியாது' எனச் சொல்கிறார் இஷா.
இதற்கிடையில் இன்னொருகதை சமாந்தரமாய்ப் போகின்றது. பெண் மீதான வன்முறை எப்படி பொதுவெளியில் சாதாரணமாய் நிகழ்கின்றது என்பதற்கான ஒரு சம்பவம் நிகழ்கின்றது. இதுவும் பாலுவின் வாழ்வில் ஒருவகையில் இடைவெட்டுகின்றது. கொச்சின் வாழ்க்கை துயரத்தைத் தருகின்றது என்பதால், வேலையையும், வீட்டையும் விட்டு பாலு வெளியேற விரும்புகின்றார். முதலில் விவாகரத்திற்கு கையெழுதிட மறுக்கும் பாலு பின்னர் கையெழுத்திடவும் விழைகிறார்.
பாலு, ஒரு பெண் அப்பாவியாக இறந்த சம்பவத்திற்கான நீதியைத் தேடிப் போகின்றார். அதற்கு அவர் கல்லூரிக்காலத்தில் நம்பிக்கை வைத்த புரட்சி ஒருவகையில் உதவுகின்றது. கொச்சினை விட்டு முற்றாக வெளியேறும் பாலுவின் முடிவை ரேடியோவில் வேலை செய்யும் பெண், இங்கே செய்வதற்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறதென இன்னொரு திசையைக் காட்டி, கைவிடச் சொல்கின்றாள்.
உறவின் ஒருவருடஇடைவெளி, இஷாவை மீண்டும் பாலுவிடம் சேர்வதற்கான மனோநிலையை உண்டாக்கின்றது. பாலு இப்போது விவாகரத்தில் கையெழுத்திட்டு, 'நீ இனி சுதந்திரமானவள்' என இஷாவிடம் அழைத்தும் சொல்கின்றார். இஷாவோ உன்னோடு கதைக்கவேண்டும், நாம் அந்தப் பழைய பாலுவாகவும், இஷாவாகவும் பேசவேண்டுமெனக் கேட்கின்றார்.
உண்மையில் இஷா இப்போது மீண்டும் பாலுவோடு சேர்ந்து வாழ்வதற்கான மனோநிலையோடே வருகின்றார். பாலுவிற்கும் அது தெரியும். ஆனால் பாலு தனக்கான வாழ்வின் வேறொரு திசையைத் தேர்ந்தெடுத்துவிட்டார். 'நீ என்னை வெறுக்கலாம், காதலை வெறுக்காதே, காதல் ஒரு அழகிய உரையாடல்' என்று அணைத்து இஷாவை வழியனுப்புகின்றார். இஷா போகும்போது நீ ஏதோ பேச விரும்பினாய் அல்லவா? எனக் கேட்க, 'இல்லை இனிப் பேசுவதற்கு எதுவுமில்லை'யென இஷா என்றென்றைக்குமாய் பாலுவை விட்டு பிரிந்து போகின்றார்.
இந்தப் படத்தில் கதை ஒரு தொடர்ச்சியாகச் சொல்லப்படுவதில்லை. சிறு சிறு துண்டுகளாகவே மாறி மாறி சித்தரிக்கப்படுகின்றன. அதிலிருந்து தனக்கான திரைக்கதையை உருவாக்குவது பார்வையாளருக்கு சவால் தரும் ஒரு விடயம். அதுபோலவே, பல சம்பவங்களில் எல்லாவற்றையும் அலசி ஆராயும் நிலையும் இருப்பதில்லை. நமக்குத் தோன்றும்/தெரியும் காரணங்களோடு பொருத்திப்பார்க்கவேண்டியதுதான். ஓரிடத்தில் வழக்கறிஞர் இஷாவிடம், ஏன் நீங்கள் மீண்டும் சேரக்கூடாது என்கின்றபோது, 'நான் என்னை நானே நேசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். அது எனக்குப் பிடித்திருக்கின்றது' என்பார்.
இதை பார்வைளார்களாகிய எம்மால் உடனே விளங்கிக்கொள்ளக் கடினமாகவே இருக்கும். தன்னைத் தானே நேசிக்கும் ஒருவருக்கு, அவருக்கான சுதந்திரம் மிகப்பெரிதாக இருக்கும். அதை எந்த உறவாயினும் ஏதோ ஒருவகையில் தடைசெய்யவே பார்க்கும் என்பதாக நாம் விளங்கிக்கொள்ளலாம். அந்த 'தன்னைத்தானே நேசிக்கும் நிலை' பிறகு பிறரையும் நேசிக்கும் நிலைநோக்கி நகரும். ஆகவேதான் இஷாவினால் பாலுவை நீண்ட இடைவெளியின் பின் புரிந்துகொள்ள முடிகின்றது. தமது கடந்தகால முரண்களைத்தாண்டி சேர்ந்து வாழும் மனோநிலைக்கு மீண்டும் வரவும் செய்கின்றார். இவ்வாறு பல சம்பவங்கள் நாம் விரித்துப் பார்க்கக்கூடிய பல இடங்கள் இப்படத்தில் இருக்கின்றது.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த விடயம் என்னவென்றால், அநேகமாய் திருமணத்தின் முன் ஆண்களின் காதல்களே திரைப்படங்களில் காட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் ஒரு பெண்ணின் காதல் காட்டப்படுகின்றது. தன் காதலுக்காய் உயிரையே கொடுக்கத் துணிகின்ற பெண்ணை நேசிக்க இன்னொரு ஆண் இருப்பதையும், அந்த ஆணுக்கு அவளின் கடந்தகாலக்காதல் எவ்விதத் தொந்தரவு செய்வதுமில்லையென இயல்பாய்க் காட்டப்பட்டிருக்கின்றது. மேலும், இவ்வாறு காதலில் தோற்ற ஒரு பெண், திருமணம் என வருகின்றபோது, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதையும் தனக்கான விவாகரத்தை அவள் கோரும்போதும் தெரிகின்றது.
அதேசமயம், ஒரு பெண்ணோடு அளவிறந்த நேசத்தோடு இருக்கும் ஒரு ஆண், அவளின் முடிவுகளால் தன் சுயத்தையே இழந்து, அவளின் மீள்வரவை எதிர்ப்பார்த்து காத்திருந்தபோதும், அவள் மீண்டும் திரும்பிச் சேரும் விருப்பத்தைக் காட்டும்போது, அதை மென்மையாக மறுத்து, வாழ்க்கை தொடர்ந்து நகரவேண்டியது, நகரும். உனக்கான காதலை நீயடைவாய் என வாழ்த்துவதும், தனக்கான செய்கைகளுக்காய் மன்னிப்புக் கேட்பதும் அழகான காட்சிகள்.
இப்படத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டதற்காய் நிகழும் இன்னொரு 'பழிவாங்கல்' கொலையை எந்தப் பொழுதிலும் ஆதரிக்கமுடியாது அந்த காட்சியிலும் ஒரு மாற்றை இயக்குநர் யோசித்திருப்பாராயின் இன்னும் ஒரு அழகிய படமாய் விரிந்திருக்கும்.
நிகழும் ஒவ்வொன்றும் நாம் காரணங்களைத் தேட விழையும்போது சிலவேளை கடந்தகாலத்தில் உறைந்துபோய்விடவும் கூடும். பலவீனங்களுள்ள மனிதர்களான நாம் தவறுகளையும் செய்யாது வாழ்ந்து செல்வதும் கஷ்டமானதே. ஆனால் வாழும் காலத்தில் நம் பலவீனங்களை உணர்ந்து, இயன்றவரை மனிதர்களை வெறுக்காது ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சிக்கலாம். அந்த ஒரு புள்ளியை இத்திரைப்படம் ஏதோ ஒருவகையில் நமக்கு உணர்த்திச் செல்கின்றது.
------------------------------
(2016)