குறும்பட விழாவில் மூன்று குறும்படங்களைத்
திரையிட்டிருந்தனர். அரசு சாரா அமைப்பான CARE இன் ஒரு பிரிவு இதை நடத்தியிருந்தது. ஒரு குறும்படம் நுண்கடன்
குறித்தும், மற்ற இரண்டு குறும்படங்கள் இன
நல்லிணக்கம் பற்றியும் பேசியிருந்தன. மூன்றில் ஒரு படம் பெண் நெறியாளரால்
எடுக்கப்பட்டிருந்தது. இன்னொரு திரைப்படத்துக்கான கதை(?)யை கேஷாயினி எழுதியிருந்தார்.
கலந்துரையாடலில் குறும்படங்களின் கதைகளை விட தொழில்நுட்பம் பற்றியதாக விவாதம் நீண்டு சூடு பிடித்தது. நிறைய இளைஞர்/யுவதிகள் வந்திருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு இளைஞர் குழாம், குறும்படம் இயக்கிய பெண் நெறியாளரை மட்டும் ‘corner’ செய்து தொடர்ந்து கேள்விகள் கேட்டு குழப்பிக் கொண்டிருந்தது. அந்த இளைஞர்கள், நெறியாளர் voice over (இங்கே நமது கெளதம் வாசுதேவன் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை) இல் கதையின் பெரும்பாகத்தைச் சொல்லிக் கொண்டு போகின்றார், அது எப்படி காட்சிகளில் கதை சொல்லாது voice over சொல்வது என்பது அவர்களின் வாதம். நானும் காட்சிப்படுத்தல் சார்ந்து அந்த இளைஞர்களின் பக்கம் என்றாலும், அந்த நெறியாளருக்கு அவர் எடுக்க விரும்பும் படைப்பை எப்படி எடுப்பதற்கும் சுதந்திரம் இருக்கின்றது, எனவே ஏன் இப்படி எடுக்கப்பட்டது என்று கேட்பதைவிட, எடுக்கப்பட்டதின் உள்ளே என்ன உள்ளதென்பது பார்ப்பதே நியாயம் என்றேன். மேலும் எழுத்தைப் போலவே, திரைப்படங்களுக்கும் வெவ்வேறு பள்ளிகள் இருக்கின்றனதானே, எனவே எல்லாவற்றையும் நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளல் கலைக்கு நலம் பயக்கும் எனவும் சொன்னேன்.
கலந்துரையாடலில் எனது கேள்வியாக ஒன்றை ஒழுங்கு செய்தவர்களிடம் கேட்டேன். இங்கே இன நல்லிணக்கம் பற்றி எடுக்கப்பட்ட இரண்டு குறும்படங்களும் தமிழ்-முஸ்லிம் இனங்களைப் பற்றியே எடுக்கப்பட்டிருக்கின்றது. ஏன் எவரும் தமிழ்-சிங்கள அல்லது சிங்கள-முஸ்லிம் இன நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக எடுக்கவில்லை எனக் கேட்டேன். இதற்கு அரங்கில் இவை ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஏற்பட்டபின் தமிழ்-முஸ்லிம் உறவின் விரிசல் இன்னும் விரிவானதால் அதையே முன்னிலைப்படுத்தினோம் என்றார்கள். ஈஸ்டர் குண்டுவெடிப்பால் சிங்களவர்களுந்தானே முஸ்லிம்கள் மீது அதிக காழ்ப்பை வெளிப்படுத்தினார்கள் அல்லவா? எல்லாப் பாடங்களும் முதலில் நம்மைப் போன்ற ஒடுக்கப்படும் சிறுபான்மையினருக்குத்தான் கற்பிக்க வருவார்கள் போலும் என எண்ணிக் கொண்டேன்.
நிகழ்வு முடிந்தபோது, கேள்விகள் கேட்ட உற்சாகமாய் இருந்த இளைஞர்களிடம் போய்க் கதைத்தேன். ‘உங்கள் வயதில் நானும் இப்படித்தான் இருந்தேன், அது தவறில்லை. ஆனால் நீங்கள் அதைச் செயற்பாட்டிலும் காட்டுங்கள் என்றேன். அவர்களும் திரைப்படங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதால், பிரசன்ன விதானகே, அசோக ஹந்தகம போன்றவர்கள் ஏதேனும் பட்டறைகளைச் செய்ய வந்தால்ல் தவறாது அவற்றில் கலந்துகொள்ளுங்கள் என்றேன். இந்த நெறியாளர்கள் மிக எளிமையானவர்கள், ஆனால் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ விடயங்கள் இருக்கும் எனச் சொன்னேன். என் கைவசம் அப்போதிருந்த திரைப்படங்கள் சம்பந்தமான தொகுப்பான ‘உதிரும் நினைவின் வர்ணங்களின்’ ஒரு பிரதியையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு விடைபெற்றேன்.
இரவு, மீண்டும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்திற்குப் போவதற்கு நாம் இருவரும் தயாரானோம். இரவென்பதால் பஸ்களும் அவ்வளவாய் வருவதாய்க் காணவில்லை; தெருவில் போகும் எந்த ஓட்டோவை மறித்தாலும் அதற்குள் ஆட்கள் இருந்தார்கள். ஹனீபா எங்களுக்காய் வந்து நின்று எப்போது வருவீர்களென்று அழைப்பு எடுத்துக் கொண்டிருக்க, வலியோடு இருப்பவரை நாங்கள் கஷ்டப்படுத்துகின்றோம் என்றும் கவலையாக இருந்தது. கொஞ்சத்தூரம் நடந்துபோய் ஊறணி நாற்சந்தியில்(?) ஓட்டோ எடுப்போமென நாமிருவரும் ஏறாவூர்ப் பக்கம் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
ஒருமாதிரி ஓட்டோவைப் பிடித்து ஏறாவூருக்குப் போனபோது நேரம் இரவு ஏழரைக்கு மேலாகிவிட்டது. நம் காலத்தைய சிறந்த கதைசொல்லி ஹனீபா நமக்காய்க் காத்திருந்தார். ஹனீபா எப்போதும் என் பிரியத்துக்குரிய முன்னோடி. நமக்காய் உடல் நோவெல்லாம் தாங்கி, தொலைதூரம் தாண்டி வந்து காத்திருந்தார். அவர் தோளணைத்து கரம் பிடித்து முதற் காதலில் இருந்து, கண்டி பெரஹரா யானை, ஜானகிராமனின் நாவல், அரசியல் வரை பலதும் உரையாடினோம். நம்மைச் சேய்களென முன்னே வழிநடத்திச் செல்லும் நம் காலத்தைய வேழம் அவர். களிப்பும், எள்ளல்களும் நிறைந்த கதைகளின் வற்றாத ஊற்றாக நடமாடுபவர். அவருக்குக் என் "தாய்லாந்தை"க் கையளித்தேன். ஹனீபாவின் அண்மையில் வெளிவந்த ‘எண்ட சீவியத்திலிருந்து’ நூல் பற்றியும் நமது பேச்சு நீண்டது. அதன் அடுத்த பாகமும் நுஹ்மானின் முன்னுரையுடன் தயாராகிவிட்டது, முதல் தொகுப்பை விட இது இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்றார்.
அவர் விடைபெற்றபோது நெஞ்சு நிறைந்த பிரியங்களால் அவர் கைகளில் முத்தமிட்டு அனுப்பி வைத்தேன். ஒரு கணம், நாளை கனிந்து போகும் என் முதுமையின் விம்பத்தை அவரில் பார்த்துத் திகைத்தேன். அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு போய் ஓட்டோவில் ஏற்றியபோது "டேய் நான் 100 மீற்றர், 200 மீற்றர் runnerடா" என்ற அவரின் அந்த இளமைக் குரலைக் கேட்டுப் புன்னகைத்தேன். எந்த ஒரு முத்தத்தினாலும் தீர முடியாதது நமது இந்த இலக்கியப் பித்து.
இதை எழுதும்போதுதான் ஹனீபாவின் சிறப்பிதழை
ஓட்டமாவடி அறபாத் உள்ளிட்ட நண்பர்கள் வெளியிட்டதும், அதில் என் ஒரு கட்டுரை பிரசுரமானதும் நினைவுக்கு வந்தது. அறபாத்
தொகுப்பை கனடாவுக்கு அனுப்பட்டா என அன்றையபொழுது கேட்டபோது, வீணான செலவு வேண்டாம், நான் இலங்கைக்கு
வரும்போது பெற்றுக்கொள்கின்றேன் எனச் சொல்லியிருந்தேன். அதை அறபாத்திடம் இப்போது
கேட்டு வாங்க மறந்துவிட்டேன். சரி அடுத்தமுறை கிழக்குக்குப் போகும்போது அதைப்
பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். கடந்தமுறை ஓட்டமாவடி அறபாத்தின் வாடிவீட்டில்
ஹனீபாவோடு இரவிரவாக இருந்து நாம் இலக்கியம், இன்னபிற பேசியிருந்தோம். இம்முறை அவருடன் இப்படியான ஒரு அவசர குறுகிய சந்திப்பாகப் போய்விட்டதில் சற்றுக்
கவலைதான்.
அன்றைய மாலையில் ஜெய்சங்கர் தனது குழுவினருடன் கூத்து சார்ந்த நிகழ்வுகளைச் செய்துகொண்டிருந்தனர். அதையும் அவ்வப்போது போய் எட்டிப் பார்த்தேன். அதன் பிறகு பறங்கிய சமூகத்தின் இசை நிகழ்வு நடந்தது. ஒருவகையில் பார்த்தால் கிழக்கு மாகாணந்தான் எல்லாவித இனக்குழுக்களையும் அதனதன் இயல்புகளோடு இப்போதும் தாங்கிக்கொண்டிருக்கின்றது போலத் தோன்றியது. பல்வேறு இன/சமூகக்குழுக்களின் பராம்பரிய கலைவடிவங்களுக்கான ஓர் தளமாக இந்தப் புத்தகக் கொண்டாட்டம் இருப்பதைப் பார்க்க இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்த நாள் காலை மட்டக்களப்பு நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். காந்தி பூங்கா அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அருகிலிருந்த மட்டக்களப்பு நூலகத்தில் இருக்கும்போது மலர்ச்செல்வன் வந்து சந்தித்தார். அவரோடு கொஞ்சநேரம் இலக்கியம் பேசியபின், அவர் என்னை கல்லடிப் பழைய பாலத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் கூட்டிச் சென்றார். அப்போது நான் இந்திய இராணுவப் பின்னணியில் எழுதும் நாவல் பற்றி அவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். தனக்கும் இந்திய இராணுவ காலத்தில் மிகக் கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன என்று சொல்லி, எந்த இடத்தில் இந்திய இராணுவத்தோடு இயங்கிய ‘தமிழ்த் தேசிய இராணுவம்’ தன்னைப் பிடித்தது, பிறகு அவர்களிடமிருந்து தான் எப்படித் தப்பித்தேன், எங்கே சில நாட்களாக எவரினதும் கண்களிலும் படாது பதுங்கியிருந்தேன் என்று சில இடங்களைக் காட்டிக் கொண்டு போனார். 'வடமாகாணத்தைப் போன்றல்லாது கிழக்கு மாகாணத்து இந்திய இராணுவ காலம் வித்தியாசமானதாக இருக்கும், நிச்சயம் நீங்கள் இவற்றைப் பதிவு செய்யவேண்டும்' என்றேன். அத்தோடு மலர்ச்செல்வன் மட்டக்களப்பு நூலகத்தோடு இணைந்து சில வாரங்களுக்கு முன், மூன்று நாட்கள் புத்தகக் கண்காட்சியை மட்டுநகரில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த அனுபவங்கள் பற்றியும், அதைத் தொடர்ந்து செய்யவேண்டியன் அவசியம் பற்றியும் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
அன்றைய மாலை, கேஷாயினியும் அவரது துணைவரும், எமக்கான இரவுணவை வேண்டாம் வேண்டாமென மறுத்தபோதும் செய்து கொண்டு வந்திருந்தார்கள். இறால் பிரட்டல், மீன் குழம்பு, மீன் பொறியல், மீன் சொதி என ஒரு அறுசுவை விருந்து பிட்டோடு தந்தார்கள். மட்டக்களப்புக்கு வந்த பாக்கியத்தை நான் இப்போது அடைந்தேன் என்றெண்ணியப்படி நன்கு இரசித்துச் சுவைத்துச் சாப்பிட்டேன்.
அன்றைய இரவு நான் கொழும்புக்கும், வடகோவையார் யாழ்ப்பாணத்துக்கும் போகும் பஸ்களைப் பதிவு செய்திருந்தோம். இரவு 9 மணியளவில், வாவியில் பாடும் மீன்கள் ஒளிர மட்டக்களப்பை விட்டு நாங்கள் நீங்கினோம்.
****************************
(Jun 01, 2023)