Dead Poets Society திரைப்படத்தில் ஆசிரியரான ரொபின் வில்லியம்ஸ் தனது மாணவர்களுக்கு ஏற்கனவே அந்தப் பாடசாலையில் படித்தவர்களின் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களை ஓரிடத்தில் காட்டுவார். இவர்கள் உங்களைப் போல இதே பாடசாலையில் 30 வருடங்களுக்கு முன்னர் படித்தவர்கள். என்னதான் முயன்றாலும் இறுதியில் இறப்பென்பது இவர்களைப் போன்று உங்களுக்கும் உறுதியானது. நீங்கள் இதற்கிடையில் எப்படி உங்களுக்கு விரும்பிய மாதிரி வாழப் போகின்றீர்கள் என்பதுதான் முக்கிய கேள்வி. ஆகவே உங்களது கற்பனைகளை, விருப்பங்களை ஒருபோதும் சமரசம் செய்யாதிருங்கள் என வில்லியம்ஸ் சொல்வார். அதற்கேற்ப கவிதைகளைப் பற்றிக் கற்பிக்கும்போது பாடப்புத்தகத்தில் இருக்கும் கலாநிதி ஒருவர் எழுதிய முன்னுரையை கிழித்துவிடுங்கள் எனச் சொல்லி குப்பைக்கூடையை ஒவ்வொரு மாணவரிடம் நீட்டியபடி போவார்.
ஒவ்வொருவருக்கும் வாழ்வைத்
தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருந்தாலும், நாளாந்த வாழ்க்கை என்பது பெரும்பாடாக
அலைய வைக்கின்றது. கிருஷ்ணன் நம்பி 60களில் எழுதிய
கதையான 'தங்க ஒரு..' வில்
வருகின்றவன் ஒரு வீட்டை வாடகைக்குத் தேடி அலைகின்றான. கிராமத்திலிருக்கும் அவனது மனைவியும், குழந்தையும்
இவனோடு சேரந்து வாழ நகரத்துக்கு வர விரும்புகின்றார்கள். வாரத்துக்கு இரண்டு மூன்று கடிதங்கள் எப்போது நாங்கள் வருவதென
மனைவி கேட்டபடி இருக்கின்றாள். இவனின் குமாஸ்தா வேலையில் வரும் சம்பளத்தில்
ஒரு உரிய வாடகை வீட்டைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கின்றது.
அப்போதுதான் 'ஒரு காலணிக்குள்
வாழும்' ஒரு மனிதனை தேனாம்பட்டையில் இவன் சந்திக்கின்றான். அந்தக்
குள்ள மனிதன் ஒரு காலத்தில் பொலிஸாக இருந்தவன். அவன் நகரம் கொடுக்கும் நெருக்கடிகளால்
சிறிது சிறிதாக குள்ளமாகி, அவனின் பொலிஸ் காலணிக்குள்ளேயே குடும்பத்துடன்
வாழ்கின்ற ஒருவனாக மாறிவிட்டான் என்று அந்தக் கதை நீளும்.
மனிதர்களுக்கு இந்த
வாழ்க்கை கொடுக்கும் நெருக்கடிகளால் எவ்வாறெல்லாம் மனிதன் பரிமாணம் அடைகின்றான் என்பதுதான்
கதை. அதில் ஓரிடத்தில் 'எதையும் கடைசி வரைத் தெரிந்து கொள்ளும்
அக்கறை உள்ளவளாயிற்றே நீ. ஆனால் உலகத்தில் எதையும் கடைசி வரைத் தெரிந்து
கொள்ள முடியாது என்பதை மீண்டும் உனக்குச் சொல்லுகிறேன். கடைசி கடைசி என்பதெல்லாம் வெறும்
மயக்கம்' என்று இந்தக் கதைசொல்லி தன் மனைவிக்கு கடிதம் எழுதுவார்.
இந்தக் 'கடைசி வரை
தெரிவது தோற்ற மயக்கம்' ஆக இருப்பது போலத்தான் நமது கைகூடாத
ஆசைகளும் இருக்கின்றன. அவை கைகூடும்போது நமக்கு அதை ஆறுதலாக இருந்து
அனுபவிக்க முடியாதபடி இன்னொரு ஆசை சிறகு விரித்துத் தொடங்கி விடுகின்றது. ஆக
கடைசி என்ற ஒன்றுமே இல்லாது. மேலும் மேலும் பெருகிக் கொண்டிருப்பதற்கு
எப்படி ஒரு எல்லை வகுத்துவிட முடியும்?
ஆனால் இந்த எளிய உண்மையை
Promised Land
திரைப்படத்தில்
லெமன் ஜூஸ் விற்கும் ஒரு சிறுமி உடைத்து விடுகின்றாள். ஒரு சிறு கிராமத்தில் இயற்கை வாயு
கிடைக்கின்றது என்று அறிந்து ஒரு பெரிய நிறுவனம் தனது சார்பாக ஒருவனை அங்கே அனுப்புகின்றது. அவனது
பணி, அந்த மக்களை நிலத்தினடியில் இருக்கும் இயற்கை வாயுவினால் அவர்களுக்கு
பெரும் பணம் கிடைக்கப்போகிறதெனச் சொல்லி அவர்களின் விவசாய நிலங்களை அவர்களிடமிருந்து
வாங்குவது/குத்தகைக்கு எடுப்பது. இறுதியில் தனது நிறுவனத்தின் தகிடுதித்தங்களை
விளங்கி அந்த மக்களுக்கு உண்மையை உரைக்கப் போகும் அவன் இந்தச் சிறுமியிடம் லெமன் ஜூஸ்
வாங்கிக் குடிப்பான்.
அவன் அந்த ஜூஸின் பணத்தை
விட (25 சதம்), அதிக காசை அந்தச் சிறுமிக்குக் கொடுப்பான். அவள்
மேலதிக பணத்தை வாங்க மறுத்து, 25 சதமே போதுமென்பாள். ஒருவகையில்
மனிதர்களுக்கு இருக்கும் பணத்தாசை என்பதைவிட, நீங்கள் இந்தப் பூமியை உங்கள் வரம்பிற்கேற்பப்
பாவித்துவிட்டு இந்தச் சிறுமியைப் போன்ற அடுத்த தலைமுறையும் அனுபவிக்க விட்டுச் செல்லுங்கள்
என அது மறைமுகமாய்ச் சொல்வது போலத் தோன்றியது. நாம் நமது அளவற்ற ஆசைகளை நம் இருப்பிற்கான
அவசியங்களாக ஆக்கி, நம்மையும் எதிர்காலச் சந்ததியையும் நட்டாற்றில் விட்டுச் செல்லும்
மிகப் பெரும் நுகர்வோராக மாறிவிட்டோம். இன்னுமின்னும் வேண்டும் என்று நம் வாழ்வைக்
கூட நிம்மதியாக வாழமுடியாது, அக/புற
அழுத்தங்களினால் நாம் ஓய்வே இல்லாது ஓடிக்கொண்டிருக்கின்றோம்.
வசதி வாய்ப்புக்களில்
கூடிய/குறைந்த மனிதர்கள் பலரைப் பார்க்கின்றோம். ஆனால்
படிநிலைகள் எவ்வாறிருப்பினும் தமக்குள் தீர்க்கமுடியாப் பிரச்சனைகளோடும், ஆசைகளோடும்
தான் அநேகர் இருக்கின்றார்கள். இப்படியான பிரச்சினைகளோடு வாழ்வதில் மட்டும்
நாம் எல்லோரும் 'சமதர்ம' உலகில் வாழ்கின்றோம் என நினைக்கிறேன்.
இன்று எழுதப்படும் சிறுகதைகள் இப்படி உணர்ச்சிகளின் நெருக்கடியால் எழுதப்படுவதால் அவற்றை மேல் எழுந்த நுனிப்புல் வாசிப்போடு கடந்து போய்க்கொண்டிருப்பேன். புனைவில் கதையென்று தெளிவாக இல்லாமலே வாசகர் இரசிக்க , அதற்குள் ஊறி நின்று எழுதலாம் என்று ஒருமாதிரியான சட்டகங்களுக்கு எழுதுபவர்களின் தலையில் ஆணியடித்துச் சொல்லலாமோ என்று கூட நினைப்பதுண்டு. புதிதாக எழுதுபவர்களைக் கூட மன்னித்து மறந்துவிடலாம், ஆனால் எழுத்தாளர் என்ற பெயரை அடைந்துவிட்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை இனிவரும் காலங்களில் அவசியம் என்று நினைக்கின்றேன்.
அந்தவகையில் யுவன் சந்திரசேகரின் அண்மைக்கால கதைகளைத் தொகுத்து வந்த 'கடலில் எறிந்தவை' ஒரு இதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. கதைகள் கிட்டத்தட்ட கட்டுரைக்கு நெருக்கமான எழுத்து வகையெனக் கூடச் சொல்லலாம். கதைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான விடயங்கள் இருப்பதில்லை. ஏதாவது ஒன்றோ இரண்டு பக்கங்களில் கதை மாதிரியான ஒன்றைச் சொல்லிவிட்டு யுவன் இந்தத் தொகுப்பிலுள்ள அநேகமான கதைகளில் தன் கனவுகளையும், அலையும் மனவோட்டங்களையும்தான் பேசுகின்றார். ஆனால் அது அலுக்காதவகையில் எனக்கு சுவாரசியமாகத் தெரிந்தது.
மேலும் ஒரு சட்டகத்துக்கு வெளியே இருப்பதும், ஏதேனும் ஒரு குழுவுக்குள் ஜக்கியம் ஆகாமல் தன்னியல்பிலே இருப்பது என்பதும் சுவாரசியமானது. ஆகவே அந்த உதிரிக் குரல்களை, விதிவிலக்குகளை நாம் தொடர்ந்து பேசுவோம்.Dead Poets Society இல் வந்த ஆசிரியரைப் போல, லெமன் விற்கும் சிறுமியைப் போல, நிறைய வசதிகள் பெருகும் என்றாலும் தனக்கு அறமென நினைப்பதை தயக்கமின்றிச் சொல்லி வேலையிலிருந்து துரத்தப்படும் அந்த Promised Land ஆணைப் போல, நாம் புனைவுகளில் மட்டுமின்றி வாழ்விலும் நம்மைப் புதிதாய்க் கண்டுபிடிப்போம்.
**************