வாழ்க்கையில் கடினப்பட்டுத்தான்
ஒவ்வொரு படியும் மேலே ஏற வேண்டியிருக்கிறது. அவ்வாறு ஏறியும் கொஞ்சம் நிதானமாக அதை
இரசிக்கவிடாது, இன்னொரு கனவு கிளைத்தெழும் அல்லது
திருப்தியின்மை படரும். இவ்வாறு எத்தனங்களால் எத்தனப்படாத ஒரு நிதானமான வாழ்வு
எப்போது அமையுமென்று நண்பர்களோடு விவாதிப்பதுண்டு. நண்பரொருவர் ஆறு வருடங்கள்
இங்கிலாந்தில் வேலை செய்துவிட்டு வந்திருந்தார். அதற்கு முன் இந்தியாவில் சில
வருடங்கள் கழித்தவர். அவருக்கு இந்நகர் பெரும் மூச்சடைப்பைத் தருவதாகச் சொன்னார்.
வேலைக்குப் போகும் ரெயில் பயணங்களில் யன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பவர்களையோ, புத்தகங்களை வாசித்தபடி தம்மை மறந்தவர்களையோ இப்போது காண்பது அரிதாகிவிட்டது. புத்துணர்ச்சி தரும் காலை வேளையாயினும் எல்லா முகங்களிலும் எதையோ தொலைந்துவிட்டதான கவலையின் ரேகைகள் ஓடுகின்றன. புன்னகைக்கும் விழிகள் எங்கேனும் தென்படாதா என்ற ஏக்கத்துடன் ரெயில் பயணங்கள் நிறைவடையும்.
ஸென்னை விளங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஸென் ஆசிரியர் எதையாவது சொல்லும் கணத்தில் அதைப் புரிந்துகொள்ளாவிட்டால் அதன் அர்த்தம் எப்போதைக்கும் நழுவிப் போய்விடும் என்பதற்கு ஸென் பல கதைகளை வைத்திருக்கிறது. மறைமுகமாக ஸென் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய மனதை இதனூடு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றது எனச் சொல்லலாம்.
அவ்வாறு கணங்களில் நழுவிப்போகும் அர்த்தங்களைக் கொண்ட ஸென்னை அதன் சுவடுகள் எதுவுமில்லாத மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தும்போது ஸென் ஆசிரியர்கள் கஷ்டப்பட்டிருக்கின்றார்கள். மேற்கிற்கு வந்த ஸென் ஆசிரியர்களில் முக்கியமானவரான ஸூசுகியிடம் ஒருமுறை 'ஏன் நீங்கள் ஸதோரியை (நிர்வாணம்) விளங்கப்படுத்துவதில்லை' எனக் கேட்கப்படுகிறது. அதற்கு ஸூசுகி 'என்னிடம் இருந்தால்தான் அதை விளங்கப்படுத்த முடியும், நிர்வாணம் என்னிடம் இல்லை, ஆகவே அதைப் பற்றிப் பேசுவதில்லை' என்கின்றார்.
ஞானமடைந்துவிட்டஸூசுகி ஏன் இப்படி நிர்வாணமடையவில்லை என்று சொல்கின்றார் என்பது பற்றி ஓஷோ பின்னர் விளங்கப்படுத்துகிறார். ஓஷோ தான் மாற்றமடைதல் (becoming) என்பது பற்றி பல இடங்களில் பேசினாலும் அது தவறான சொல் பிரயோகம்
என்கின்றார். ஏதோ ஒன்றுக்காய் மாற்றமடையும் அல்லது உருமாறும் நாம் நம் இயல்பில்
இருந்து இல்லாமல் போய்விடுகின்றோம் என்கின்றார். எதுவாகவோ இருக்கின்றோமோ அதுவே
நாம். நாம் அதை விலத்தி வேறொன்றாக முயலும்போது நாம் இயல்பற்றவராகி விடுகின்றோம்.
ஒருவர் செல்வந்தராக, அதிகாரம்மிக்கவராக, கல்வி கற்றவராக மாற்றமடைய முடியும் ஆனால் ஒருபோதும் அவை எதுவும்
ஒருவரின் இயல்பூக்கங்கள் அல்ல என்கின்றார். அதுபோலவே பரிநிர்வாணமடைந்த எவரும்
ஞானத்தை தன்னகத்தை வைத்திருக்க அதுவொன்றும் 'பொருள்'அல்ல என்கின்றார் ஓஷோ. அதனால்
ஷூகியிடம் ஏன் நீங்கள் ஞானமடைவதைப் பற்றி பேசுவதில்லை என்று கேட்கப்பட்டபோது 'நான் ஞானமடையவில்லை, அதனால் பேச
முடியவில்லை' என்கின்றார்.
ஞானத்தை ஒரு பொருளாக, தன்னிலிருந்து விலத்தி உருமாறுவதாக
எண்ணிக்கொள்ளும் கொள்ளும் ஒருவரே தன்னை ஞானமடைந்தவராக முன்வைப்பார்.
ஸூசுகி கூட,
'நான் நிர்வாணமடைந்துவிட்டேன். என்னால்
அனுபவங்களினூடாக அதைச் சொல்லமுடியாது. ஆனால் அது எளிதானது' என்று சொல்லியிருக்கமுடியும். அது ஞானமடைந்தவர்கள் எனச் சொல்லிக்
கொள்ளும் ஸுடோ ஆசிரியர்கள் சொல்வது. ஸூசுகி ஞானமடைந்து விட்டவர், எனவே அவர் உண்மையைத்தான் சொல்வார். அதே வேளை தன்முனைப்ப்புக்களால் நிறைந்திருக்கும் மேற்குலத்தவர்க்கு,
இப்படிச் சொன்னதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள
கடினமாக இருந்திருக்கும் என்கின்றார் ஓஷோ.
ஞானமடையும்போது முதலில் ஒருவரிடம் இல்லாமற் போவது 'நான்' என்பது. அந்த 'நான்' இல்லாமற் போகும் ஒருவர் பின்னர் 'நான் ஞானமடைந்துவிட்டேன்' என எப்படிச்
சொல்லமுடியும். இந்த ஞானம் அடைதல் என்பது ஒரு நீர்த்துளியானது கடலில் போய்ச்
சேர்வது போன்றதாகும். அப்படி கடலோடு கடந்துவிட்ட துளி, ‘என்னிடம் கடல் இருக்கின்றது’ என்று சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கும். அந்தத் துளியே கடல்தான்!
ஆகவேதான் 'நான்' என்பது இல்லாது போய் ஞானமடைந்துவிட்ட
ஸூசுகியிடம் 'ஏன் ஞானமடைதல் பற்றி பேசுவதில்லை என்று
கேட்கப்படும்போது, நான் ஞானமடையவில்லை' என்று அந்தக் கேள்வியைக் கடந்து போகின்றார். மேலும் ஸென் 'ஞானத்தை அடைதல் அல்லது அதைத் தன்னகத்தே வைத்திருத்தல்' என்பதை தொடர்ந்து நிராகரித்தபடியே வருகிறது.
எத்தனங்கள் எதுவுமில்லாது நம் இயல்பிலே இருப்பது எவ்வளவு எளிதானது. ஆனால் எளிதுதான் மிகவும் கடினமாகவும் இந்த உலகில் இருக்கிறது. யேசு தண்ணீரில் நடந்தார் என்பதைவிட அவர் நிலத்தில் பாவப்பட்ட மக்களை இரட்சிப்பதற்காகப் பல்லாயிரம் மைல்களைக் கால்களால் நடந்தார் என்பதுதான் இயேசு செய்த சாதனை. புத்தர் நாற்பதில் ஞானமடைந்துவிட்டு, மேலும் 40 ஆண்டுகள் தான் அடைந்த அனுபவத்தை நமக்குப் போதிப்பதற்காய் இந்த உலகில் வாழ்ந்ததுதான் எனக்குப் பேரதிசயம்.
********
என் எண்ணங்களோடோ இதுவரை பயணித்த உங்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்குரிய காலையோ அல்லது மாலையோ அல்லது நள்ளிரவோ எதுவாகினும் இனிதாகட்டும்.
இந்தக் குளிர்காலத்தில் எனது ரெயில் பத்திரமாக என்னைக் கொண்டு வந்து இறக்கிவிட்டது. இனி இன்னொருவனாக உருமாறும் எத்தனத்தோடு இந்தப் பெருநகரின் சுழல் வட்டத்துக்குள் செக்கு மாடு போல இழுபடுவேன்.
இதுவரை வாசித்த நீங்கள் கடைசிப் பந்தியையும் வாசித்துவிட்டு நம்மைப் போன்ற ஒருவன் எனச் சலித்துக் கொண்டால், நீங்கள் இன்னும் சின்ன விடயங்களின் பேரதியங்களைத் தவறவிடுகின்ற ஒருவராக இருக்கக்கூடும். கடைசிப் பந்தியை வாசித்துவிட்டும் உங்களின் உற்சாகம் குறையவில்லை என்றால் நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்வதற்கு நிறையவுண்டு.
*****
(Oct 16)
இந்தப் பதிவுக்கு
வந்த சில பின்னூட்டங்கள்
வடகோவை வரதராஜன்:
எத்தனம்கள் எதுவுமின்றி எம் இயல்பில் இருப்பதுதான் எளிதானது மட்டுமல்ல .மகிழ்வானதும் கூட . எத்தனம்களை செய்யும் போது நாம் போலி முகமூடி அணிகிறோம் . அது எம் முகத்தை உறுத்துகிறது .இயல்பாக இருக்கிறவனுக்கு இந்த உறுத்தல் பெரும் கொடுமை
முருகேசு கனகலிங்கம்:
ஓஷோ வைப்பற்றிய குறிப்பிடல்கள்
மகிழ்ச்சி அளிக்கிறது.ஜென்,தாவோ,சூபி யிசம் பற்றியெல்லாம் அவர் நிறையப்
பேசியிருக்கிறார்.இவையெல்லாம் நுண்ணிய மன அனுபவங்கள் தாம்.எவரோடும் விவாதிப்பதற்கு
இவைகளில் எதுவுமில்லை.அவ்வாறு (கற்ற)--புரிந்துகொண்ட ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவரருகில் மௌனமாக அமர்ந்திருக்கவே
என்னால் முடியும்.ஓஷோ வில் எனக்கு குறையுமுண்டு.உலகத்துத் தத்துவஞானங்களையெல்லாம்
தேடித் தேடிக் கற்றிருக்கிறார்.ஆனால் தமிழின் பக்கம் அவர் தலை வைத்தும்
படுக்கவில்லை.தமிழில் எண்ணற்ற ஞான நூல்கள் உள்ளன. பதினெண் சித்தர்கள், திருமூலர்,திருவள்ளுவர்,தாயுமானவர், பிற்கால
ஞானிகள் பலரும் உள்ளனர்.அவை,அவருக்குக் கிட்டாத பொக்கிஷங்கள் என்றே நான்
கூறுவேன்.ராமகிருஷ்ணரை,அரவிந்தரை,ரமணரை எல்லாம் தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் ஞானச்
செல்வம் அவருக்குக் கிட்டவில்லை. நல்லது, நன்றி.
சுகிர்தா இனியா:
சக மனிதர்களின் மீது இவ்வளவு வன்மத்தை ஏன் கக்குகிறார்கள்? ஒருவரை ஒருவர் ஏன் பிராண்டிக் கொள்கிறார்கள்? இத்தனை வெறுப்பை சுமந்து கொண்டு அலையும் மனம் எப்படி நிம்மதியாக நித்திரை கொள்கிறது என்றெல்லாம் நேற்று பொதுவாக எண்ணிக் கொண்டிருந்தேன். மனிதர்களிடமிருந்து வெளிப்படும் வன்மம் வாழ்க்கையின் மீது ஒரு அவநம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கிறது. இந்த முகப்புத்தகம் ஒரு இளைப்பாறுதல், ஒரு அடைக்கலம் என்று இங்கே வந்த எனக்கு இப்போதெல்லாம் இதுவும் சராசரி மனிதர்களின் கூடாரமே என்று தோன்றுகிறது. எல்லா இடங்களிலும் போலவே இங்கேயும் மனிதர்கள் அதே சராசரித்தனத்துடன் தான் இருக்கிறார்கள். மனிதநேயமே அசாத்தியம் ஆகிவிட்டதோ என்ற அச்சம் மேவுகிறது. ஒருவர் வெறுப்பைக் கக்கினால் அது சங்கலித் தொடர் போல எல்லோரையும் பற்றிக் கொள்கிறதைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன்.
மனிதர்கள் தங்களைக்
குறித்தே இருக்கிற தங்களுடைய ஆற்றாமையையோ அல்லது தங்களுடைய இயலாமையையோ எப்படி
வெளிப்படுத்துகிறார்கள் என்றால் எதிர்ப்படுபவர்களை எல்லாம் இப்படி ஒரு நிமிண்டல்
அப்படி ஒரு நோண்டல். இது அவர்களுக்கு எந்த வித திருப்தியை அளிக்கிறது என்று
என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதையெல்லாம் பார்த்து மனித சமூகத்தின் மீது
நம்பிக்கை இழந்து இங்கே இருந்தும் ஓடிவிடலாம் என்று எண்ணும்போது இந்தக் காலையில்
இளங்கோவின் இந்தப் பதிவு ஆறுதலாக இருக்கிறது. வெளி உலகைப் போலவே அங்கொன்றும்
இங்கொன்றுமாக கிடைக்கும் நமக்கானவர்களை பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றி
இளங்கோ! தொடர்ந்து எழுதுங்கள்.
****************
0 comments:
Post a Comment