கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நெப்போலியன் - இறுகப்பற்று - Pain Hustlers

Tuesday, December 26, 2023


1, நெப்போலியன்

 

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் பேரரசனாக வரமுடியும் என்று வரலாற்றில் நிரூபித்தவர் நெப்போலியன். பிரான்ஸை நேசித்தவர் என்பதால் அந்தப் பேரரசுக் கனவுக்காய் 61இற்கு மேற்பட்ட போர்களை நடத்தி மில்லியன்கணக்கில் சொந்த நாட்டு மக்களையே பலிகொடுத்தவர். வெளியில் போர்களை நடத்துவதில் பெருமிதம் கொண்ட நெப்போலியன் ஒரேயொருவருக்கு மட்டும் தலைகுனிந்தவர் என்றால் அது அவரின் மனைவியான ஜோஸப்பினுக்காய். அந்தக் காதலுக்காய் ஜோஸப்பினின் எல்லாப் பலவீனங்களையும் சக்கரவர்த்தியாக இருந்தபோதும் நெப்போலியன் மன்னித்தவர். இறுதிவரை ஜோஸப்பின் காதலில் திளைத்தவராக, அவரின் முன் தன் 'ஆண்மைத்தனத்தை' இழந்த ஒரு நல்ல மனிதராகவும் இருந்திருக்கின்றார்.

இத்தனைக்கும் ஜோஸப்பின், நெப்போலியன் ஆதரவளித்த புரட்சிப்படை, மன்னராட்சியை ஒழித்தபோது கொன்ற ஒருவரின் மனைவியாவார். ஜோஸப்பினுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நெப்போலியனைத் திருமணம் செய்தபின் ஜோஸப்பினால் குழந்தையொன்றைப் பெறமுடியாததே அவர்களின் விவாகரத்துக்கும் பின்னாளில் காரணமானது. எனினும் நெப்போலியன் வாட்டலூ போரில் தோற்று தனித்தீவுக்கு எக்ஸிலாகப்பட்டு இறந்தபோது அவர் இறுதியில் உச்சரித்தவை மூன்று சொற்கள்: பிரான்ஸ், இராணுவம், ஜோஸப்பின்!

பின்னர் வந்த ஹிட்லர் எப்படி இரஷ்யாவிற்குப் படையெடுத்து தன் படைபலத்தை இழந்தாரோ, அப்படியே நெப்போலியனுக்கும் கிடைத்த பெரும் அடி அவர் இரஷ்யாவுக்குப் படையெடுத்தபோதுதான். வோட்டலூ யுத்தம் நெப்போலியன் இறுதியில், தன்மானமாக தோற்றுப்பார்த்த ஒரு போரே தவிர நெப்போலியன் எப்போதோ இரஷ்யாப் படையெடுப்போடு தோற்கடிக்கப்பட்டுவிட்டார்.

இத்திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இப்படி ஈசல்களைப் போல போர்க்களத்தில் இறப்பதற்கு ஆண்களை எது காலங்காலமாக வரலாற்றில் உந்தித்தள்ளிக் கொண்டிருக்கின்றது என்பதையே அதிகம் யோசித்தேன். வரலாற்றில் இருந்து ஆண்கள் எதையும் கற்றுக்கொள்ளாத முட்டாள்கள் என்பதே கசப்பான உண்மை.

நெப்போலியன் ஜோஸப்பின் காதலைப் பெறுவதற்காகத்தான் தன்னைத் தோற்காத வீரனாகக் காட்டப் போர்களை நடத்தினார் என்று சொல்பவர்களும் உண்டு. நெப்போலியன் நல்லதொரு காதலனாக ஜோஸப்பினுக்காய் இருந்து, இந்த நாடுகளைப் பிடிக்கும் போர்வெறியை மட்டும் கைவிட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்; எத்தனை உயிர்கள் வரலாற்றில் காப்பாற்றப்பட்டிருக்கும்!

 


2. இறுகப்பற்று

 

'இறுகப்பற்று' நல்லதொரு படம். கதை/திரைக்கதை என்பவற்றில் சிறிதும் நம்பிக்கை வைக்காது அண்மைக்காலமாய் வந்து குவிந்து கொண்டிருக்கும் தமிழ்ப்படங்களைப் பார்த்து நொந்தவர்க்கு நான் சொல்வதன் அர்த்தம் புரியும். நேற்றுக் கூட ஒரு இயக்குநரில் நம்பிக்கை வைத்து தீபாவளிப் படத்தைத் தியேட்டரில் பார்க்கச் சென்றபோது உண்மையிலே வயிற்றைப் பிரட்டுவது போன்ற உணர்வே ஏற்பட்டது. நல்லவேளையாக அந்தப் பாவத்தை அதற்குப் பிறகு நள்ளிரவில் சைனீஸ் உணவகத்தில் சாப்பிட்ட உணவுகள் ஆற்றுப்படுத்தின. லியோ படத்தைப் பார்த்தபின் நண்பர்களிடம் எனக்கு வயதாகிவிட்டது போலும்; இந்தத் தலைமுறையினரின் விருப்புக்கு ஏற்றவனல்ல, நான் காலவதியாகிவிட்டேன் எனச் சொன்னபோது அவர்கள் மறுத்து 'உன் வயதல்ல, படந்தான் அவ்வளவு மோசம்' என்றார்கள். நேற்று ஜப்பானைப் பார்த்து நொந்தபோது, ஒரு நண்பர் சொன்னார், எமது தலைமுறைதான் ஒரளவு நல்ல படங்களையும், பாடல்களையும் கேட்ட கடைசித் தலைமுறையாக இருக்கும் போல என்று.

இல்லை, இன்னும் முற்றாக நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்பதற்கான ஒரு மின்மினியாக இந்த 'இறுகப்பற்று'.


அதேவேளை ‘இறுகப்பற்றுன் அலைவரிசைக்குள் வரும் திரைப்படம் அல்ல என்பதையும் குறிப்பிட விழைகின்றேன். முக்கியமாக அந்த சைக்காலிஜிஸ்டை இறுதியில் ஓர் ஆணிடம் மண்டியிடும் விதமாக மாற்றிய விதம் எனக்கு உவப்பில்லாதது. மற்றவர்களின் மனங்களை ஆழப் புரிந்துகொள்ளும் ஒருவர் எத்தகைய vulnerable ஆக இருந்தாலும் அப்படி இருப்பதைப் பார்க்க சகிக்க முடியாதிருந்தது. நிச்ச்யம் அப்படி ஆளுமையுள்ள பெண் அதை வேறுவிதமாக அணுகியிருப்பார். என் பொருட்டு நீயும் சந்தோசமாக இல்லை. உன்னைப் பார்த்து என்னாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. இருவரின் அமைதியின் பொருட்டு வா வேண்டுமென்றால் விவாகரத்தைச் செய்து கொள்வோம் என்று அழைத்திருப்பார். ஏனெனில் அந்தப் பாத்திரம் மற்றவர்களுக்கு அதுதான் இறுதியான முயற்சியென அறிவுரை கூறுகின்றதல்லவா.


இணையின் தொலைபேசியை கள்ளமாய்ப் பார்ப்பது, அவன் பேசும் பள்ளித்தோழியின் மீது பொறாமை கொள்வதுதான் இயல்பானது என்று அந்தப் பாத்திரத்தையே சாகடித்திருக்கின்றார்கள். மேலும் விவாகரத்து விண்ணபிக்கப் போகும் அநேகமானவர்கள் பெரும்பாலும் விவாகரத்தைப் பெறுதலே நிகழ்கின்றன. ஏனென்றால் அந்த நிலைமைக்கு ஒருவர் போகின்றார் என்றால் அந்த மனவிரிசல் எளிதில் எதனாலுமே ஒட்டவைக்க முடியாது. ஆனால் இதில் அப்படி விவாகரத்துக்குப் போகும் இரண்டு இணைகளுமே இறுதியில் சுமுகமாய்த் தீர்வைக் கண்டு மனந் திருந்திவிடுகின்றன. இவ்வாறான பல காரணங்கள் இருப்பதால் இந்தப் படம் எனக்குரியதல்ல‌ (This is not my cup of tea) என்றுதான் கூறுவேன்.

ஆனாலும் இதன் திரைக்கதை தான் சொல்ல வந்த விடயத்தை கச்சிதமாகச் சொல்லிவிடுகின்றது. திரைக்கதைகளுக்கு நேரம் செலவிடும் பொறுமையற்றவர்கள் கத்திகளாலும் துப்பாக்கிகளாலும் வன்முறையை 'சாதாரணப்படுத்தும்' காலத்தில் இந்தப் படம் ஒரு முக்கிய வரவென்பேன். மேலும் 'OK கண்மணி' போன்று படம் முழுதும் living together இல் வாழ விரும்பும் பெண்ணை ஒவ்வொரு காட்சியிலும் 'முற்போக்குப் பாத்திரமாகக்' காட்டிவிட்டு இறுதியில் ஒரு சாதாரண பெண்ணைப் போல திருமணத்தில் சரணாகதியடைய வைக்கும் போலித்தனம் இதில் எதுவுமில்லை, எப்படி ஒரு பொதுமனம் பெரும்பாலும் விரும்புகின்றதோ அப்படியே இது காட்டியிருக்கின்றது. ஒருவகையில் இத்திரைப்படம் தான் எடுத்துக் கொண்ட கருத்துக்கு உண்மையாகவே இருந்தது போல எனக்குத் தோன்றியது. மற்றது இப்படி அங்கே சித்தரிக்கப்படும் விடயங்களை வெட்டியும் ஒட்டியும் உரையாடுகின்ற வெளியையும் இந்தப் படம் நமக்குத் தருகின்றது என்பதும் முக்கியம் என்பேன்.

 

 

3. Pain Hustlers


அனைத்து விடயங்களிலும் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. மேலும் நிறுவனமயப்பட்ட பெருநிறுவனங்கள் இந்த நல்லது கெட்டது என்பதில் அக்கறை கொள்வதைவிட அவை இலாபம் மீட்டலையே முதன்மையாகக் கொண்டிருக்கும். அதற்காக அது எந்த எல்லைவரையும் போகும், தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் பலி கொடுக்கும்.


Pharmaceutical companies இன் பெரும் வெறியையும் அதன் கொடூரமான அரசியல் முகத்தையும் The Constant Gardener என்ற நூலும், அந்த நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமும் நமக்குக் கடந்தகாலத்தில் நினைவூட்டியது. அவ்வாறு சில வருடங்களுக்கு முன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோன் கபூர் இப்படியொரு pharmaceutical entrepreneur ஆகி, பில்லியனாராக மாறிய கதையை நாம் சிலவேளைகளில் அறிந்திருப்போம். அவரது மனைவி புற்றுநோயால் இறக்க, புற்றுநோயுக்கு வலிநிவாரணியாக fentanyl ஐ நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கச் செய்து, பலரின் மரணங்களுக்கும், உடல் பக்கவிளைவுகளுக்கும் காரணமானவர் என்று கபூர் பின்னர் கைதுசெய்யப்பட்டவர். அவரும், அவரைச் சுற்றியுள்ளவர்களும் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் அடைக்கப்பட்டாலும், ஐந்தரை வருட சிறைத்தண்டனை கொடுக்கப்பட்ட கபூர் இரண்டரை வருடங்களிலேயே வெளியில் வந்துவிட்டார்.

இவ்வாறுதான் தம் நுகர்வுக்கும் இடாம்பீக வாழ்வுக்குமாய் ஒரு உலகம், விளிம்புநிலை மனிதர்களை பலிவாங்கியபடி நகர்ந்தபடியே இருக்கும். அது முன்னரும் நிகழ்ந்தது. இப்போதும் நிகழ்கிறது. இனியும் நிகழும். இந்த ஜோன் கபூரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்போது 'Pain Hustlers' என்று ஒரு திரைப்படம் வந்திருக்கின்றது. அதை பணநுகர்வுக்குள் சிக்கிவிட்ட ஒரு வறிய அபலைப் பெண், பின் உண்மை நிலவரம் அறிந்து அறத்தின் பக்கம் நிற்பதினூடாக தன்னைச் சரிசெய்வதை திரைக்கதையினூடு நகர்த்திச் சென்றிருக்கின்றார்கள்.


******************


(2023)


கார்காலக் குறிப்புகள் - 28

Friday, December 08, 2023

 

சூனியம்
************


சில மாதங்களுக்கு முன் மட்டக்களப்புக்குப் போனதும் அங்கே நடந்தது பற்றியும் ஏற்கனவே இங்கே எழுதியிருக்கின்றேன். அப்போது நடந்த ஒரு சம்பவம் இது. யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு வடகோவையார் அரச போக்குவரத்து பேரூந்தில் வந்து கொண்டிருந்தார். நீண்ட பயணங்களின்போது அவ்வப்போது சில இடங்களில் பயணிகள் தேநீர் குடிக்க/கழிவறைகளை உபயோகிக்க என நிறுத்துவது வழமைதானே. பஸ்சில் வந்த மற்றப் பயணிகளை விட தான் வித்தியாசமானவர் என்று நிரூபிக்க இவர் முதலில் தேநீரை ஆறுதலாக உருசித்துக் குடித்துவிட்டு washroom இற்குப் போயிருக்கின்றார். அந்த இடைவெளிக்குள் பஸ்ஸை எடுத்துக் கொண்டு போய் விட்டனர்.

இவர் ஐயோ ஐயோ என்னை விட்டிட்டுப் போட்டாங்களே' என்று கத்தியது கொழும்பில் இருந்து மட்டுநகருக்கு ரெயினில் வந்து கொண்டிருந்த எனக்கே கேட்டது. அதுவரைக்கும் அப்படி என்ன விடுப்புப் பார்த்துக் கொண்டு நின்றனீர்கள் என்று கேட்டேன். இல்லையடா அந்த கடைக்காரப் பெண்ணோடு கதைத்துக் கொண்டு நின்றதில் நேரம் வழுக்கிக் கொண்டு போனது தெரியவில்லை என்றார் கவித்துவமாக. உங்களோடு இதுதான் தொல்லை. இந்த அவமானங்களை எல்லாம் தாங்க முடியாதென்றுதான் அன்ரி உங்களோடு வெளியிடங்களுக்கு வர விரும்புவதில்லை எனச் சொன்னேன்.

நல்லவேளையாக அந்தக் கடைக்காரப் பெண்ணிடம் பஸ்காரர்களின் தொலைபேசி இலக்கம் இருந்திருக்கின்றது. அவர்களை இடைநடுவில் நிற்கச் சொல்லிவிட்டு, இவரை ஓட்டோவில் ஏற்றி அனுப்ப அவர் முயற்சித்திருக்கின்றார். ஆனால் அந்த நேரத்தில் எந்த ஓட்டோவும் அகப்படவில்லை. அதிஷ்டவசமாக அந்தக் கடைக்கு ஒரு பெண் அப்போது ஸ்கூட்டரில் வந்திருக்கின்றார். கடைக்காரப் பெண் அந்த ஸ்கூட்டரில் இவரை இழுத்துக் கொண்டு வந்து பஸ்சில் ஏற்றியிருக்கின்றார். முகநூலில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பெண்களை நக்கலும் நளினமும் செய்யும் உங்களுக்கு கடைசியில் ஆபத்தில் உதவுவது அவர்கள்தான் என்ற உண்மையை உணர்ந்து இனியாவது அமைதியாக இருங்களெனச் சொன்னேன்.

இந்தச் சம்பவத்தை எனக்கு வடகோவையார் சொன்னபோது, நான் இவ்வளவு சொன்னதன்பிறகும் அவர் எதையும் பேசாதிருந்தார். மட்டக்களப்பார் வைக்கும் சூனியத்தை இப்போதும் ஏதேனும் ஒழுங்கைகளில் சூனியம் வைத்த பொருட்களின் மிச்சத்தில் பார்க்கமுடியும் என்று என் மட்டுநகர் கிரஷ் சொல்வார்; ஆனால் யாழ்ப்பாணிகள் மனதுக்குள்ளேயே சூனியம் வைப்பதில் வித்தகர்கள். அதை எளிதாக அறியவும் முடியாது. இப்படி நான் கூடக் கதைத்ததால் விதானையார் என்ன சூனியம் மனதுக்குள் எனக்கு வைக்கின்றாரோ என்ற அச்சம் வந்தது.
'ஒன்றுமில்லையடா' என்று சொன்னாலும் அவர் வைத்த சூனியம் பிறகு பலித்துவிட்டது. அந்த 'ஒரு பொல்லாப்புமில்லை' என்பதுதான் யாழ்ப்பாணிகளின் சூனியத்தின் கடவுச்சொல்!

00000000

மட்டக்களப்பில் இருந்து புறப்படும்போது அவர் யாழுக்கு அரச பேரூந்தும் (இரவில் அரச பேருந்துகள் அவ்வளவு நீண்ட தூரத்துக்குப் போவதில்லையென அதுவரைக்கும் நினைத்தேன்), நான் கொழும்புக்கு தனியார் பேரூந்தும் எடுப்பதாக இருந்தது. இரண்டும் இரவில் 9 மணியளவில் புறப்படுவதாக இருந்தது. அது மட்டுநகரிலிருந்து புறப்பட்டாலும், நாங்கள் நிற்கும் ஊறணியைத் தாண்டித்தான் போகும். எனவே ஊறணியில் இருந்தே பஸ்களை எடுப்போம் என வடகோவையாரிடம் சொன்னேன்.

அவரோ, 'இல்லையடா இடைநடுவில் நாங்கள் நின்றால் எங்களை விட்டிட்டுப் போய்விடுங்கள் என்று நெஞ்சு பதைபதைக்கும் நேரே மட்டுநகர் பஸ் நிலையத்துக்கே போவோம்' என்றார்.
ஓட்டோவில் போகும்போது ஓட்டோக்கார இளைஞன் யாழ்ப்பாணத்தில் ஒரு ஊரைச் சேர்ந்தவர் என்றாலும், ஒரு யாழ்ப்பாணத்துக்காரரின் கடையில் முறுக்கு,கயூ, வாங்க நின்றபோது தன் சொந்த ஊரையே பயங்கரமாக நக்கலடித்துக் கொண்டு வந்தபடி இருந்தார். அந்தக் கடையை நடத்துபவரே, கொழும்புக்கான தனியார் பஸ்களையும் நடத்திக் கொண்டிருந்தார்.

'இவங்கள் யாழ்ப்பாணத்தில் சனத்தை ஏமாற்ற முடியாது என்று இந்த அப்பாவி மட்டக்களப்பாரை இங்கே வந்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாங்கள்' என்ற அந்த இளைஞனிடம், 'நீங்களும் இந்தக் கடைக்காரின் ஊர் என்றாலும் யாழ்ப்பாணிகளின் உண்மை முகத்தைச் சொல்லும் உங்களை எனக்கு நிறையப் பிடித்திருக்கிறது' என்றேன். அந்த சமயத்தில் யாழ்ப்பாணிகளின் புகழ் பாடும் வடகோவையாரின் முகம் எப்படி மாறியிருக்கும் என்று நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் அப்போதும் எனக்குச் சூனியம் வைக்கப்பட்டது விட்டது என்பதை நான் அறியவில்லை.

வடகோவையார் என்னை தனியார் பேரூந்து தொடங்கும் இடத்தில் விட்டுவிட்டு தனது பஸ்சில் ஏறப் புறப்பட்டார். அந்த நேரத்தில் ஒரு தனியார் பேரூந்து கொழும்புக்குப் புறப்பட்டுப் போனதை ஓட்டோவில் இருந்தபோது கண்டேன். பஸ் நிலையத்தில் இருந்தவரிடம் இது பற்றிக் கேட்டபோது, இன்னும் ஒரு பஸ் இருக்கிறது, அதுதான் உங்கள் பஸ், கவலைப்படத் தேவையில்லை என்றார். அன்று ஏதோ சிஎஸ்கே விளையாடும் ஐபில் ஆட்டமொன்று போய்க்கொண்டிருந்தது. அதைக் கொஞ்ச நேரம் என் அலைபேசியில் பார்த்துவிட்டு, நான் நிமிர்ந்தால் மேலும் 2 பஸ்கள் கொழும்பு போவதற்காக வந்து நின்றன. பரவாயில்லையே யாழ்ப்பாணத்துக்காரர் தினம் மூன்று பஸ்கள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு விடுகின்றாரே என்று நினைத்துக் கொண்டு பஸ்சினுள் ஏறப் போனேன். முதல் பஸ்சில் என் பெயரைக் காணவில்லை என்றனர். ஓ, மற்ற பஸ்தான் என்னுடையது என்று தள்ளி நிறுத்திவிட்டிருந்த மற்ற பஸ்சினுள் ஏறப்போக அதிலும் என் பெயர் இருக்கவில்லை.

என்ன கஷ்டகாலமடா என அவர்களின் சிறைக்கூட்டு அலுவலகத்தில் நின்று கேட்டபோது, அவர்களும் இருக்கும் பதிவேடுகள் எல்லாவற்றையும் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு உங்களின் பஸ் ஏற்கனவே போய்விட்டது என்றார்கள். வடகோவையார் வைத்த சூனியம் பலித்துவிட்டதென்று மனதுக்குள் என்னை நானே திட்டிக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தபோது ஒரு புதிய தொலைபேசி இலக்கத்தில் அழைப்பு வந்தது.

நாங்கள் ஊறணியில் நிற்கின்றோம், எங்கே உங்களைக் காணவில்லை என்று கேட்டனர்.

நான் ஊறணியில் ஏறுவதாய்ச் சொன்னதை மறந்து டவுணுக்குப் போய் ஏறப்போனதிற்கு, யாழ்ப்பாணத்தார் வைத்த சூனியத்தை விட வேறு எது காரணமாகப் போகின்றது. எனக்கு வந்த விசருக்கு, நான் நாளைக்கு வாறன் என்று அவர்களுக்குச் சொல்லிவிட்டேன். இன்னும் 2 பஸ்கள் போவதற்கு நிற்கின்றன, ஒரு இடம் கிடைக்காதா என்ற நினைப்பில் அப்படிச் சொன்னேன். இந்த இரண்டு பஸ்சில் ஏதேனும் ஓரிடம் தாருங்களெனக் கெஞ்சியபோதும் எல்லா இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டு விட்டன எனக் கையை விரித்தனர்.

இறுதியில் இரக்கப்பட்டு எவருமே இருக்கமுடியாது சும்மா விடப்படும் கடைசி 'துள்ளிக் குலுங்கும்' இருக்கைகளில் ஒன்றைத் தந்தார்கள். வடகோவையாரைத் திட்டிக் கொண்டு அதில் ஏறும்போதுதான், நான் எனக்குள் வைத்த சூனியம் நன்கு வேலை செய்து கொள்ளத் தொடங்கியது. என்னைப் போலவன்றி கடைசி நேரத்தில் கொழும்புக்குப் போவதற்காக தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த மூன்று பெண்கள் கடைசி இருக்கையில் (5 இருக்கைகள்?) வந்து அமர்ந்தார்கள். என் பயணம் இனிமையாக அவர்களின் கொஞ்சும் தமிழ் பேச்சைக் கேட்பதில் தொடங்கியது.

எனக்கு ரிக்கெட் தந்தவர், இந்த பஸ்சும் நீங்கள் பதிவு செய்து ஏற்கனவே புறப்பட்ட பஸ்சும் அரைவாசித் தூரத்தில் ஒரேயிடத்தில் நின்று ஓய்வெடுக்கும். அப்போது நீங்கள் அந்த பஸ்சினுள் ஏறிக் கொள்ளுங்கள், வசதியான இருக்கை கிடைக்கும் என்றார்.

அவர் சொன்னதுமாதிரி, பயணத்தின் அரைவாசித் தூரத்தில் இந்த பஸ்கள் சந்தித்துக் கொண்டன. எங்கள் பஸ்ஸடியில் வந்து நின்று என் பெயரைக் கூப்பிட்டு அங்கே வாருங்கள் வாருங்களென ஒருவர் அழைத்தார். நானோ இதுவே நன்றாக இருக்கிறது, இப்படியே கொழும்பு வந்து சேர்கின்றேன் என்று அடம்பிடித்து அவரது அழைப்பை நிராகரித்தேன்.

'என்னடா நல்ல வசதியான இருக்கை இருக்கின்றதெனக் கூப்பிட்டும், இவன் வரமாட்டான் என்று அடம்பிடிக்கின்றானே என்று அவருக்குச் சரியான குழப்பம். 'கனடாக்காரர்கள் எல்லாம் புத்தி பேதலித்தவர்கள் போல, அதுதான் இப்போது இலங்கையிலிருந்து சனம் எல்லாம் கனடாவுக்குப் போகிறது' என்று எள்ளல் செய்யும் மட்டுநகர் நண்பனைப் போல அவரும் நினைத்திருக்கலாம்.

ஆனால் அவருக்குத் தெரியாதது: நான் வடகோவையார் வைத்த யாழ்ப்பாணத்துச் சூனியத்தை எப்படிச் சூதனமாக எதிர் சூனியம் வைத்து முறியடித்தேன் என்பது.

*********************


(செப்ரெம்பர், 2023)

மெக்ஸிக்கோ வாசிப்பனுவம்

Saturday, December 02, 2023

 

-சுகிர்தா இனியா

 

நாவல் : மெக்ஸிக்கோ

நாவலாசிரியர் : இளங்கோ

 

ளங்கோவின் மெக்ஸிக்கோ தான் எனது சிறிது கால வாசிப்பு இடைவெளிக்குப் பிறகு நான் முழுவதுமாக படித்து முடித்த நாவல். இளங்கோவின் எழுத்தின் மீது எனக்கு அதீத ஒட்டுதல் உண்டு. காரணம் என்னால் பத்திக்கு பத்தி தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்ளக்கூடிய எழுத்தாக அவருடைய எழுத்து இருக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக முகப்புத்தகத்தில் அவருடைய பதிவு ஒன்றைப் பார்த்தும், அட நம்மைப் போல ஒருவர் என்று தோன்றியதும் அவருடைய பதிவிற்கு பின்னூட்டம் இட்டேன். நட்பு அழைப்பும் கொடுத்தேன். அப்போது அவரைக் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. பிறகு அவருடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்தேன். அதற்கு பிறகு தான் அவர் நாவலாசிரியர், சிறுகதையாளர், இன்ன பிற திறமையாளர் என்று அறிந்து கொண்டேன். அப்படி அறிந்து கொண்ட பிறகு அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்.

 


இளங்கோவின் எழுத்தில் தொனிக்கும் ஒரு aloofness/solitary nature என்னைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களில் ஒன்று. மெக்ஸிக்கோவில் அவரது முக்கியக் கதாப்பாத்திரம் இத்தகைய குணாம்சம் வாய்ந்தவராகவும், தன்னையே introspect செய்து கொள்பவராகவும், தனது குறைபாடுகளை எந்தப் பூச்சும் இல்லாமல் வெளிப்படுத்துபவராகவும், அவை விமர்சிக்கப்படும்போது அதில் உண்மை புலப்பட்டால் அதை மனதார ஏற்றுக்கொள்பவராகவும் என அவர் அதை படைத்திருந்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. இது எப்படியென்றால் கையால் செய்யப்பட்ட மட்பாண்டங்களோ அல்லது நெசவுத் துணியோ ஏதாவது ஒரு இடத்தில் பிசகி இருக்கும். அதன் தனித்தன்மை அது தான். அப்படியான ஒரு ஹாண்ட்மேட் கதாப்பாத்திரம் இது.

 

//விலக்கப்பட்டவர்களையும் விசித்திரமானவர்களையும் பற்றி அக்கறைப்படுவதற்கும் இந்த உலகில் ஒரு சிலராவது இருக்கின்றார்கள்.//

 

முதல் அத்தியாயத்தில் இந்த வரிகளைப் படித்தபோதே இந்தக் கதாப்பாத்திரத்தின் மீது ஒரு ஒட்டுதலும் பரிவும் வந்தது. இப்படி என்னை இறுகப்பற்றிய பத்திகள் இந்த நாவலில் ஏராளம் உள்ளன. அவற்றில் சில பத்திகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

 

//இந்த நள்ளிரவு தாண்டிய பொழுது, ஏன் என்னை இப்படி வெறித்து வெறித்துப் பார்க்கிறது? மழையின் சாரலிற்குள் நுழைந்து என் சோகத் துளிகளைக் கரைக்க வேண்டுமென விம்முகிறது நெஞ்சு. சனங்கள் நிரம்பித் ததும்பும் இப்பெரு நகரத்தில் யாருமேயற்ற ஒருவனாய் உணர்வது

எவ்வளவு கொடுமை. தனிமையின் கனந்தாங்காது என்னைப் போல யாரேனும் ஒருவர் தூக்கந் தொலைத்து பல்கணியில் நிற்கவும் கூடுமோ? // 

 

இந்தப் பத்தியை உறக்கம் தொலைந்து வெறுமையான இரவின் பிடியில் தன்னந்தனியாக நின்று சலித்த ஒவ்வொருவராலும் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். நம்மைப் போல இந்த அகால இரவில் யாரேனும் விதானத்தை வெறித்துப் பார்த்தபடி கிடப்பார்களோ அல்லது மொட்டைமாடியில் வான்நோக்கிப் படுத்துக்கொண்டு சூனியத்துள் வெறிப்பார்களோ என்றும் நாம் தனிமையில் நெட்டித் தள்ளிய இரவுகள் நம் நினைவில் ஊசலாடும்.

 

//ஒரு உண்மையை உணர்ந்தேன்.

இந்த உலகிற்கு நான் தனித்தே வந்தேன். மரணிக்கும் போதும்  தனித்தே போகப்போகின்றேன். இடையில் மட்டும் ஏன்

மற்றொருவர் எப்போதும் தொடர்ந்து என்னோடு வரவேண்டும் என நினைக்க வேண்டும் என்றுணர்ந்த கணம்என்றாள்..//

 

இந்த தத்துவார்த்த பத்தி அவரது காதலி சொல்வது போல வரும். இந்த உண்மை நமக்கு தெரிந்தே இருந்தாலும் கூட நாம் சமயங்களில் இம்மைக்கும் எம்மைக்கும் என்று உருகிவிடுவோம். அப்படி உணர்ச்சிவயப்படும்போது இப்படியான உரையாடல்கள் நம்மை நிதானிக்கவும், சமநிலைப்படுத்தவும் செய்யும்.

 

// ஒவ்வொருமுறையும் இப்படிச் சோர்ந்துபோகும்போது, என்ன காரணம் என வினாவாமலே யாரேனும் ஒருவர் வந்து அணைத்துக் கதகதப்பாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்குமென நினைத்துக்கொண்டு அவள் உடல்சூட்டில் ஒரு பூனைக்குட்டியைப் போல சுருண்டுகொண்டேன். இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் நிற்கும் ஒருவருக்கு ஒரேயொரு அணைப்புப் போதும். அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்.//

 

தனியாக இயங்குபவள் தனிமையை விரும்புபவள் நான் என்றாலும், சமயங்களில் உள்ளிருந்து உதறும் குளிர் போல சமநிலை குலையும்போது, சிந்தையின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு மண் வீழும் மலர் போல இன்னொருவருக்குள் சரணடைய வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன்.

 

// எத்தனையோ தவறுகளைச் செய்திருந்தாலும் இன்னொருவர் தரும் நேசமும் அரவணைப்பும் ஒரு பாவமன்னிப்பைப் போல நம்மை மீண்டும் மனிதர்களாக்கி விடுகின்றது.//

 

அன்புக்கு அந்த வல்லமை உண்டு இல்லையா என்று தோன்றியது.

 

// பயணங்களின்போதுதான் மனிதர்கள் எப்படி மாறிப்போய் விடுகின்றார்கள். எல்லாவற்றையும் புறப்படும் இருப்பிடங்களில் விட்டுவிட்டு, அசலான முகங்களோடு வலம் வரத் தொடங்குகின்றார்கள். தாங்கள் சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் தம்மை இயல்பாகத் திறந்து காட்டவும் செய்கின்றார்கள். நான் நின்ற விடுதியில் நான் பல்வேறு விசித்திரமானவர்களைச் சந்திக்க முடிந்தது.//

 

இதை நானும் கவனித்திருக்கிறேன். தனித்துப் பயணிக்கும்போது எனக்கு ஒரு உதவி தேவை என்று யாரிடமும் கேட்கத் தயங்கியதில்லை. பயணிகளிடம் எல்லோருமே வாஞ்சையாகத்தான் இருக்கிறார்கள். என்ன செய்தாலும் பயணிகளுக்கு 'பயணிகள்' என்ற சலுகை கிடைக்கிறது. ஒரு பயணி ஒரு இடத்தில் வழமைக்கு மாறாக ஏதாவது செய்துவிட்டாலும், பாவம் வெளியூர்க்காரங்க அவங்களுக்கு தெரியாது என்று மன்னிக்கவும் தயாராகவே மனிதர்கள் இருக்கிறார்கள். நம் மீது பிம்பங்கள் இல்லாதபோது, நமக்கு இன்னொருவர் மீது எந்த பிம்பமும் இல்லாதபோது, இயல்பாக இருப்பது சாத்தியமாகிறது என்று நினைக்கிறேன்.

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் வாசித்து நெகிழ்ந்த இன்னொரு முக்கியமான உரையாடலும் இருக்கிறது. அதை இங்கே இணைத்தால் இந்தப் பதிவு மிக நீளமாகப் போகும் என்பதால் வேண்டாம் என்று விடுகிறேன்.

 

மெக்ஸிக்கோ நாவலை துவங்கியவுடன் சரசரவென வாசிக்கத் துவங்கிய நான் 32 ஆம் அத்தியாயம் 'மனம் பிறழ்ந்தவனின் குறிப்புகள்' வந்தபோது சற்று விளங்க முடியாமல் அங்கேயே தேங்கி நின்றேன். வாசனையைப் பற்றி வந்து கொண்டிருந்த எறும்பொன்று திடீரென்று ஏற்பட்ட தடங்கலால் தடுமாறி நிலைகுலைவது போன்ற தடுமாற்றம் அது. சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அங்கிருந்து எனது வாசிப்பைத் துவங்கியபோது எனக்கு அந்த சரடு பிடிபட்டது. அந்த வாசிப்பு இடைவெளி எனக்கு அவசியமானதாகவும், ஒரு புதிய கண்ணோட்டத்தில் இந்த நாவலை வாசிக்கும் அனுபவத்தையும் கொடுத்தது. உண்மையைச் சொன்னால் இந்த 'மனம் பிறழ்ந்தவனின் குறிப்புகள்' வாசிக்கும்போது நான் உணர்ச்சி வயப்பட்டேன். இந்தப் பகுதி எனக்கு மிகவும் ஆத்மார்த்தமாகப் பட்டது. இதோ இவனை எனக்குத் தெரியும் என்று திரும்ப திரும்ப என் மனம் அடித்துக் கொண்டது. இந்த உணர்வு எனக்குப் புரிகிறது. ஆமாம் புரிகிறது என்று என் மனம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டது.

 

கதையின் முடிவு எதிர்பார்க்காத முடிவு என்றாலும்  ஒரு வாழ்வனுபவத்தைப் போல மிக இயல்பான முடிவாகவே இருந்தது.

 

தொடர்ந்த வாசிப்பாலும், நேர்மையான உரையாடல்கள் மூலமும் நம்மை நாமே உள் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்வது அவசியம். நேர்மையான உள் ஆய்வுதான் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள உதவும். நமக்குள் தான் எத்தனை எத்தனை நிறங்கள் இருக்கின்றன என உரையாடல்களும், வாசிப்பும் நமக்கு காட்டிக் கொடுக்கும். இப்படித்தான் என்னையே அடையாளம் காட்டக் கூடியதாக, தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளக் கூடியதாக, ஆத்மார்த்தமான உணர்வைக் கொடுக்க கூடியதாக எனக்கு மெக்ஸிக்கோ வாசிப்பனுபவம் இருந்தது.


 ***************


நன்றி: சுகிர்தா இனியா

https://www.facebook.com/photo?fbid=199156269864891&set=a.104123939368125