சூனியம்
************
சில மாதங்களுக்கு முன் மட்டக்களப்புக்குப் போனதும் அங்கே நடந்தது
பற்றியும் ஏற்கனவே இங்கே எழுதியிருக்கின்றேன். அப்போது நடந்த ஒரு சம்பவம் இது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு வடகோவையார் அரச போக்குவரத்து பேரூந்தில்
வந்து கொண்டிருந்தார். நீண்ட பயணங்களின்போது அவ்வப்போது சில இடங்களில் பயணிகள்
தேநீர் குடிக்க/கழிவறைகளை உபயோகிக்க என நிறுத்துவது வழமைதானே. பஸ்சில் வந்த மற்றப்
பயணிகளை விட தான் வித்தியாசமானவர் என்று நிரூபிக்க இவர் முதலில் தேநீரை ஆறுதலாக
உருசித்துக் குடித்துவிட்டு washroom இற்குப் போயிருக்கின்றார். அந்த
இடைவெளிக்குள் பஸ்ஸை எடுத்துக் கொண்டு போய் விட்டனர்.
இவர் ஐயோ ஐயோ என்னை விட்டிட்டுப் போட்டாங்களே' என்று
கத்தியது கொழும்பில் இருந்து மட்டுநகருக்கு ரெயினில் வந்து கொண்டிருந்த எனக்கே
கேட்டது. அதுவரைக்கும் அப்படி
என்ன விடுப்புப் பார்த்துக் கொண்டு நின்றனீர்கள் என்று கேட்டேன். இல்லையடா அந்த
கடைக்காரப் பெண்ணோடு கதைத்துக் கொண்டு நின்றதில் நேரம் வழுக்கிக் கொண்டு போனது
தெரியவில்லை என்றார் கவித்துவமாக. உங்களோடு இதுதான் தொல்லை. இந்த அவமானங்களை
எல்லாம் தாங்க முடியாதென்றுதான் அன்ரி உங்களோடு வெளியிடங்களுக்கு வர
விரும்புவதில்லை எனச் சொன்னேன்.
நல்லவேளையாக அந்தக் கடைக்காரப் பெண்ணிடம் பஸ்காரர்களின் தொலைபேசி
இலக்கம் இருந்திருக்கின்றது. அவர்களை இடைநடுவில் நிற்கச் சொல்லிவிட்டு, இவரை
ஓட்டோவில் ஏற்றி அனுப்ப அவர் முயற்சித்திருக்கின்றார். ஆனால் அந்த நேரத்தில் எந்த
ஓட்டோவும் அகப்படவில்லை. அதிஷ்டவசமாக அந்தக் கடைக்கு ஒரு பெண் அப்போது ஸ்கூட்டரில்
வந்திருக்கின்றார். கடைக்காரப் பெண் அந்த ஸ்கூட்டரில் இவரை இழுத்துக் கொண்டு வந்து
பஸ்சில் ஏற்றியிருக்கின்றார். முகநூலில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
பெண்களை நக்கலும் நளினமும் செய்யும் உங்களுக்கு கடைசியில் ஆபத்தில் உதவுவது
அவர்கள்தான் என்ற உண்மையை உணர்ந்து இனியாவது அமைதியாக இருங்களெனச் சொன்னேன்.
இந்தச் சம்பவத்தை எனக்கு வடகோவையார் சொன்னபோது, நான்
இவ்வளவு சொன்னதன்பிறகும் அவர் எதையும் பேசாதிருந்தார். மட்டக்களப்பார் வைக்கும்
சூனியத்தை இப்போதும் ஏதேனும் ஒழுங்கைகளில் சூனியம் வைத்த பொருட்களின் மிச்சத்தில்
பார்க்கமுடியும் என்று என் மட்டுநகர் கிரஷ் சொல்வார்; ஆனால்
யாழ்ப்பாணிகள் மனதுக்குள்ளேயே சூனியம் வைப்பதில் வித்தகர்கள். அதை எளிதாக அறியவும்
முடியாது. இப்படி நான் கூடக் கதைத்ததால் விதானையார் என்ன சூனியம் மனதுக்குள்
எனக்கு வைக்கின்றாரோ என்ற அச்சம் வந்தது.
'ஒன்றுமில்லையடா' என்று சொன்னாலும் அவர் வைத்த சூனியம் பிறகு பலித்துவிட்டது. அந்த 'ஒரு
பொல்லாப்புமில்லை' என்பதுதான் யாழ்ப்பாணிகளின் சூனியத்தின் கடவுச்சொல்!
00000000
மட்டக்களப்பில் இருந்து புறப்படும்போது அவர் யாழுக்கு அரச பேரூந்தும்
(இரவில் அரச பேருந்துகள் அவ்வளவு நீண்ட தூரத்துக்குப் போவதில்லையென அதுவரைக்கும்
நினைத்தேன்), நான் கொழும்புக்கு தனியார் பேரூந்தும் எடுப்பதாக இருந்தது. இரண்டும்
இரவில் 9 மணியளவில் புறப்படுவதாக இருந்தது. அது மட்டுநகரிலிருந்து
புறப்பட்டாலும், நாங்கள் நிற்கும் ஊறணியைத் தாண்டித்தான் போகும். எனவே ஊறணியில்
இருந்தே பஸ்களை எடுப்போம் என வடகோவையாரிடம் சொன்னேன்.
அவரோ, 'இல்லையடா இடைநடுவில் நாங்கள் நின்றால் எங்களை விட்டிட்டுப்
போய்விடுங்கள் என்று நெஞ்சு பதைபதைக்கும் நேரே மட்டுநகர் பஸ் நிலையத்துக்கே போவோம்'
என்றார்.
ஓட்டோவில் போகும்போது ஓட்டோக்கார இளைஞன் யாழ்ப்பாணத்தில் ஒரு ஊரைச்
சேர்ந்தவர் என்றாலும், ஒரு யாழ்ப்பாணத்துக்காரரின் கடையில் முறுக்கு,கயூ,
வாங்க நின்றபோது தன் சொந்த ஊரையே பயங்கரமாக நக்கலடித்துக் கொண்டு
வந்தபடி இருந்தார். அந்தக் கடையை நடத்துபவரே, கொழும்புக்கான
தனியார் பஸ்களையும் நடத்திக் கொண்டிருந்தார்.
'இவங்கள் யாழ்ப்பாணத்தில் சனத்தை ஏமாற்ற முடியாது என்று இந்த அப்பாவி
மட்டக்களப்பாரை இங்கே வந்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாங்கள்' என்ற
அந்த இளைஞனிடம், 'நீங்களும் இந்தக் கடைக்காரின் ஊர் என்றாலும் யாழ்ப்பாணிகளின் உண்மை
முகத்தைச் சொல்லும் உங்களை எனக்கு நிறையப் பிடித்திருக்கிறது' என்றேன். அந்த சமயத்தில் யாழ்ப்பாணிகளின் புகழ் பாடும் வடகோவையாரின் முகம்
எப்படி மாறியிருக்கும் என்று நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் அப்போதும்
எனக்குச் சூனியம் வைக்கப்பட்டது விட்டது என்பதை நான் அறியவில்லை.
வடகோவையார் என்னை தனியார் பேரூந்து தொடங்கும் இடத்தில் விட்டுவிட்டு
தனது பஸ்சில் ஏறப் புறப்பட்டார். அந்த நேரத்தில் ஒரு தனியார் பேரூந்து
கொழும்புக்குப் புறப்பட்டுப் போனதை ஓட்டோவில் இருந்தபோது கண்டேன். பஸ் நிலையத்தில்
இருந்தவரிடம் இது பற்றிக் கேட்டபோது, இன்னும் ஒரு பஸ் இருக்கிறது, அதுதான்
உங்கள் பஸ், கவலைப்படத் தேவையில்லை என்றார். அன்று ஏதோ சிஎஸ்கே விளையாடும் ஐபில்
ஆட்டமொன்று போய்க்கொண்டிருந்தது. அதைக் கொஞ்ச நேரம் என் அலைபேசியில்
பார்த்துவிட்டு, நான் நிமிர்ந்தால் மேலும் 2 பஸ்கள்
கொழும்பு போவதற்காக வந்து நின்றன. பரவாயில்லையே
யாழ்ப்பாணத்துக்காரர் தினம் மூன்று பஸ்கள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு
விடுகின்றாரே என்று நினைத்துக் கொண்டு பஸ்சினுள் ஏறப் போனேன். முதல் பஸ்சில் என்
பெயரைக் காணவில்லை என்றனர். ஓ, மற்ற பஸ்தான் என்னுடையது என்று தள்ளி நிறுத்திவிட்டிருந்த மற்ற
பஸ்சினுள் ஏறப்போக அதிலும் என் பெயர் இருக்கவில்லை.
என்ன கஷ்டகாலமடா என அவர்களின் சிறைக்கூட்டு அலுவலகத்தில் நின்று
கேட்டபோது, அவர்களும் இருக்கும் பதிவேடுகள் எல்லாவற்றையும் புரட்டிப் புரட்டிப்
பார்த்துவிட்டு உங்களின் பஸ் ஏற்கனவே போய்விட்டது என்றார்கள். வடகோவையார் வைத்த
சூனியம் பலித்துவிட்டதென்று மனதுக்குள் என்னை நானே திட்டிக் கொண்டு என்ன செய்வது
என்று யோசித்தபோது ஒரு புதிய தொலைபேசி இலக்கத்தில் அழைப்பு வந்தது.
நாங்கள் ஊறணியில் நிற்கின்றோம், எங்கே
உங்களைக் காணவில்லை என்று கேட்டனர்.
நான் ஊறணியில் ஏறுவதாய்ச் சொன்னதை மறந்து டவுணுக்குப் போய்
ஏறப்போனதிற்கு, யாழ்ப்பாணத்தார் வைத்த சூனியத்தை விட வேறு எது காரணமாகப் போகின்றது.
எனக்கு வந்த விசருக்கு, நான் நாளைக்கு வாறன் என்று அவர்களுக்குச் சொல்லிவிட்டேன். இன்னும் 2
பஸ்கள் போவதற்கு நிற்கின்றன, ஒரு இடம்
கிடைக்காதா என்ற நினைப்பில் அப்படிச் சொன்னேன். இந்த இரண்டு பஸ்சில் ஏதேனும்
ஓரிடம் தாருங்களெனக் கெஞ்சியபோதும் எல்லா இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டு விட்டன
எனக் கையை விரித்தனர்.
இறுதியில் இரக்கப்பட்டு எவருமே இருக்கமுடியாது சும்மா விடப்படும்
கடைசி 'துள்ளிக் குலுங்கும்' இருக்கைகளில் ஒன்றைத் தந்தார்கள்.
வடகோவையாரைத் திட்டிக் கொண்டு அதில் ஏறும்போதுதான், நான்
எனக்குள் வைத்த சூனியம் நன்கு வேலை செய்து கொள்ளத் தொடங்கியது. என்னைப் போலவன்றி
கடைசி நேரத்தில் கொழும்புக்குப் போவதற்காக தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு
வந்திருந்த மூன்று பெண்கள் கடைசி இருக்கையில் (5 இருக்கைகள்?)
வந்து அமர்ந்தார்கள். என்
பயணம் இனிமையாக அவர்களின்
கொஞ்சும் தமிழ் பேச்சைக் கேட்பதில் தொடங்கியது.
எனக்கு ரிக்கெட் தந்தவர், இந்த பஸ்சும் நீங்கள் பதிவு செய்து ஏற்கனவே
புறப்பட்ட பஸ்சும் அரைவாசித் தூரத்தில் ஒரேயிடத்தில் நின்று ஓய்வெடுக்கும்.
அப்போது நீங்கள் அந்த பஸ்சினுள் ஏறிக் கொள்ளுங்கள், வசதியான
இருக்கை கிடைக்கும் என்றார்.
அவர் சொன்னதுமாதிரி, பயணத்தின் அரைவாசித் தூரத்தில் இந்த பஸ்கள்
சந்தித்துக் கொண்டன. எங்கள் பஸ்ஸடியில் வந்து நின்று என் பெயரைக் கூப்பிட்டு அங்கே
வாருங்கள் வாருங்களென ஒருவர் அழைத்தார். நானோ இதுவே நன்றாக இருக்கிறது, இப்படியே
கொழும்பு வந்து சேர்கின்றேன் என்று அடம்பிடித்து அவரது அழைப்பை நிராகரித்தேன்.
'என்னடா நல்ல வசதியான இருக்கை இருக்கின்றதெனக் கூப்பிட்டும், இவன்
வரமாட்டான் என்று அடம்பிடிக்கின்றானே என்று அவருக்குச் சரியான குழப்பம். 'கனடாக்காரர்கள்
எல்லாம் புத்தி பேதலித்தவர்கள் போல, அதுதான் இப்போது இலங்கையிலிருந்து சனம்
எல்லாம் கனடாவுக்குப் போகிறது' என்று எள்ளல் செய்யும் மட்டுநகர் நண்பனைப் போல அவரும்
நினைத்திருக்கலாம்.
ஆனால் அவருக்குத் தெரியாதது: நான் வடகோவையார் வைத்த யாழ்ப்பாணத்துச்
சூனியத்தை எப்படிச் சூதனமாக எதிர் சூனியம் வைத்து முறியடித்தேன் என்பது.
*********************
(செப்ரெம்பர், 2023)
2 comments:
I'm extremely pleased to find this page. I wanted to thank you for
12/23/2023 03:33:00 PMyour time for this fantastic read!! I definitely liked every part
of it and i also have you saved to fav to check
out new things on your blog.
நன்று,நன்று வாழ்த்துகள்
1/12/2024 08:54:00 PMPost a Comment