கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 41

Monday, July 08, 2024

 

'Star' படத்தை இப்போதுதான் பார்த்தேன். இது திரையங்கிற்கு வந்தபோது எழுதப்பட்ட எதிர்மறை விமர்சனங்களைப் போல, அவ்வளவு மோசமான ஒரு திரைப்படம் போலத் தெரியவில்லை. இதுவரை நான் கவினின் திரைப்படங்கள் (Dada, Lift உள்ளிட்ட) எதையும் பார்க்கவில்லை. தமிழ்த்திரைப்படங்கள் என்பதே இரத்தமும், கத்தியும், துப்பாக்கியுமென வன்முறைச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும்போது, இதில் கதை மட்டுமில்லை, திரைக்கதையும் நேர்த்தியாகக் கொண்டு வரப்பட்டது போலத் தெரிந்தது.


இது ஒரு சாதாரண மனிதனின் கனவுகளுக்கும், லெளதீக வாழ்க்கைக்கும் இருக்கும் இடைவெளியைப் பற்றிப் பேசுகின்றது. இப்படத்தில், பொதுவான நம் திரைப்படங்களுக்குரிய ஆண் பாத்திரமே மையமெனினும், உண்மையில் இந்தக் கனவுகள் கலைந்து போகின்றவர்கள் பெரும்பாலும் பெண்களேயாவர். நம்மோடு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்ற பெண்கள் பின்னர் திருமணம்/குடும்பம் என்று செல்கின்றபோது அவர்கள் முற்றிலும் வேறொருவராக மாறவேண்டியிருக்கும் என்பதைக் கண்டுகொள்கின்றோம். ஆகவே இந்தக் கனவுகள் ஒரு குறிப்பிட்ட பாலினத்துக்குரியது என்பதை மறந்து பார்த்தால், இத் நம் எல்லோரினதும் உள்மன உந்துதல்கள் எனலாம்.


என ஞாபகம் சரியென்றால், இந்தத் திரைப்படத்தில் வரும் நாயகன் தனது காதல் உறவுகளில் toxic ஆக இருக்கின்றார் என்கின்ற ஒரு முக்கிய குற்றச்சாட்டு முன்னர் வைக்கப்பட்டதென நினைக்கின்றேன். ஆனால் அது toxic ஆக இருந்தாலும் நாயகன் அதனைப் பின்னர் உணர்ந்து கொள்கின்றவராகக் காட்டப்படுகின்றது. அதன் நிமித்தம்தானே நாயகன் அவரில் அவ்வளவு பாசம் வைத்திருக்கும் தகப்பனிடம் கன்னத்தில் அறையும் வாங்குகின்றார். மகனின் கனவுகளுக்காய் சிறுவயது முதலே உந்துதலாக இருக்கும் தந்தையே கை நீட்டி அடிப்பது நாயகன் தன் இரண்டாவது காதலியைத் தனது கனவுகளில் நிமித்தம் அவளோடு இருக்க முடியாதென விட்டு விலகி வரும்போது அல்லவா? அது மட்டுமின்றி முதலாவது காதலியும் இவனை ஏதோ ஒருவகையில் புரிந்துகொள்வதால்தான், நாயகனின் இரண்டாவது காதலி தனது திருமணத்துக்கு நாயகனை அழைத்து வந்தற்காய் அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்கின்றாள்.

இந்த இரண்டு பெண்கள் மட்டுமில்லை, நாயகனின் கனவுகள் அடையமுடியாத யதார்த்தத்தில் காலூன்றி நிற்கின்றது என்று அடிக்கடி சொல்லும் தாயார் கூட ஒருவகையில் அவனைப் புரிந்துகொள்கின்றார். அவ்வாறுதானே பெரும்பாலான நமது அம்மாக்கள் நமது பலவீனங்களுக்கும், பொறுக்கித்தனங்களுக்கும் அப்பால் நம்மைப் புரிந்து கொள்கின்றனர். அந்தவகையில் இது கனவுகளோடு போராடிக் கொண்டிருக்கும் ஒருவனின் வாழ்வை 'நாயக' விம்பமாக்கி எல்லாவற்றையும் எளிதாக அடைந்துவிடுவதைக் காட்டுவதைத் தவிர்த்து இயன்றளவு யதார்த்ததுடன் ஒருவன் தனது கனவுப் பாதை நோக்கிச் செல்வதைக் காட்டுகின்றது எனச் சொல்லலாம்.

நட்சத்திரமாவது ஆவது கூட ஒரு பாவனைதான். அது எப்போதும் உதிர்ந்து போய் விடக்கூடியதென்று நம் எல்லோருக்குந் தெரியும். கடந்தகாலம், அப்படி வாழும் காலத்திலேயே உதிர்ந்து போன எத்தனையோ 'நட்சத்திரங்களை' நமக்கு அடையாளங் காட்டியிருக்கின்றது. இங்கும் ஒரு காட்சியில், நடிகராக ஒரு காலத்தில் பிரகாசித்து, பின்னர் ஜஸ்கிறிம் விற்பவராக ஒருவரைக் காட்டுவதன் மூலம் திரையுலகில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதைக் காட்டுகின்றார்கள்.

படத்தின் இறுதிக்காட்சிகளைக் கூட சற்று வித்தியாசமாகக் கொண்டு வந்திருக்கின்றார்கள். அந்தக் காட்சிகள் எடுக்கப்படும் திரைப்படத்தில் இல்லாத காட்சிகளாய் இருந்து (நாயகனின் யதார்த்த வாழ்வில் நடைபெறுவதாக இருந்தால்) அது அவ்வளவு அபத்தமாகப் போயிருக்கும். நான் கூட ஒரு வழமையான தமிழ்த் திரைப்படமாக இந்தக் காட்சிகளின் மூலம் இது ஆகிவிடக்கூடாதென எண்ணிக் கொண்டிருந்தேன். இவ்வாறு அந்த இறுதிக்காட்சிகளை, நாயகன் நடிக்கும் திரைப்படமொன்றின் காட்சிகளாய் ஆக்கியதன் மூலம் நுண்ணுணர்வுள்ள நெறியாளாராக இளன் இருக்கின்றார்.

இந்த படத்தின் முக்கியபாத்திரம் போல, தன் கனவுகளுக்க்காய் தமது காதல்களை/குடும்ப உறவுகளை விட்டு விலகி வந்த பலரை நாம் அறிந்திருப்போம். நேசமென்பது எமக்குரிய கனவுகளை இறுக்குகின்றது என்று நாமே தனிப்பட்டு சில காதல்களை விட்டு விலகி வந்திருக்கலாம். உண்மையில் அதற்கான காரணம் நமக்களிக்கப்பட்ட நேசமல்ல, நாம் நம் கனவுகளில் நம்பிக்கை இழக்கும்போது, ஏதோ ஒன்றில் பாரத்தைப் போட்டுவிட்டு நாம் தப்பி வருகின்றோம். அப்படியொரு காரணத்தைச் சொல்லி நம்மை நாமே சமாதானம் செய்துகொள்வது எம் ஆழ்மனதுக்கு நிம்மதியைத் தருகின்றது. ஆனால் அது மட்டும் உண்மையில்லை என்பது பிறகான காலத்தில் நாம் எல்லோரும் அறிந்துகொள்ளும் ஒரு கசப்பான வாழ்வியல் யதார்த்தமாகும்.

************

(July 01)

0 comments: