நண்பரொருவரின் bounded script ஐ வாசித்துக் கொண்டிருக்கின்றேன். திரைக்கதை நூறு பக்கங்களுக்கு மேலே நீண்டது. அடுத்த வருடம் இதைத் திரைப்படமாகுவதற்கான காலமும் குறித்தாயிற்று. நான் வாசிக்கும் பிரதி நான்கு முறைக்கு மேலாக திருத்தி எழுதப்பட்டிருக்கின்றது. அந்தளவு உழைப்பு இதில் செலுத்தப்பட்டிருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சியாக இருந்தது.
எனது சிறுகதைத் தொகுப்பையும் நண்பர் வாசித்திருந்தார். அவருக்கு அதில் இருந்த 'முள்ளிவாய்க்கால்' சிறுகதை மிகப் பிடித்திருந்தது. அதன் நீட்சியில் இலங்கையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் பற்றி உரையாடல் சென்றது.
இலங்கையில் இத்திரைப்படம் இலங்கை மதிப்பீட்டில் 400 மில்லியனுக்கு மேலாக பணத்தை ஈட்டியிருக்கின்றது. அப்போதுதான் இந்த நண்பர், அஷோக ஹந்தகமவின் 'ராணி' திரைப்படமும் 250 மில்லியனுக்கு ஓடியிருக்கின்றது என்ற தகவலைச் சொன்னார். 'ராணி' திரைப்படம் 'நெலும் குளுண' போன்ற வெகுசன சினிமா அல்ல. பிரேமதாசா இலங்கை ஜனாதிபதியாக இருந்தபோது, இலங்கை அரசால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட ரிச்சர்ட் டீ சொய்ஸா என்ற பத்திரிகையாளரைப் பற்றிய படம். அதற்கும் மிகுந்த வரவேற்பை சிங்கள இரசிகர்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் அது நிச்சயம் பாராட்ட வேண்டியதுதான்.
இவ்வாறாகப் பேசிக் கொண்டிருந்த எம் இருவருக்கும் வந்த கேள்வி என்னவென்றால், இவ்வாறு நாம் ஈழத்திலும்/புலம்பெயர்ந்த தேசங்களிலும் எமக்கான திரைப்படங்களுக்கான பார்வையாளர்களை உருவாக்கி வைத்திருக்கின்றோமா என்பது பற்றியது. நம்மிடையே குறிப்பிடத்தக்க நெறியாளர்கள் இருக்கின்றார்கள். நானறிந்து லெனின் சிவம் (கனடா), பிரதீபன் (பிரான்ஸ்), சதா பிரணவன் (பிரான்ஸ்), மதி சுதா (இலங்கை), சோமீதரன் (இந்தியா), ஹசின் (இந்தியா) போன்றவர்கள் தொடர்ந்து திரைத்துறையில் இயங்கியபடி இருக்கின்றார்கள். இவர்களுக்கு கைகொடுக்க நாம் எந்தளவுக்கு முன்னிற்கின்றோம் என்பது நமக்கு முன்னாலிருக்கும் முக்கிய வினாவாகும்.
மேலும், சதா பிரணவன் இயக்கிய 'வெள்ளிக்கிழமை & வெள்ளிக்கிழமை..' திரைப்படத்தைக் கூட இன்னும் ஜபிசி நிறுவனம் பொதுவெளியில் வெளிவிடாது தடுத்து வைத்திருக்கின்றது என நினைக்கின்றேன். இத்தனைக்கும் அவர்கள் நடத்திய ஒரு திரைப்படப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுத்தான் சதா பிரணவன் இதை இயக்கியிருந்தார். நான் அத்திரைப்படத்தைப் பார்த்திருக்கின்றேன். நம் மத்தியில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அது ஒரு முக்கியமான திரைப்படமே. அதுபோலவே, ஒரு திரைப்படமாக (ஐபோனில் எடுக்கப்பட்டதும் கூட) ஒரு முழுமையான அனுபவத்தைத் தராதபோதும், மதி சுதாவின் 'வெந்து தணிந்தது காடு' கவனிக்கத்தக்கதொரு முயற்சி. அதற்கும் புலம்பெயர் தேசத்தில் நம்மவர்கள் கொடுத்த தலையிடிகளை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.
ஆக தயாரிப்பாளர்களாகவும், இரசிகர்களாகவும் நம் திரைப்படங்கள் சார்ந்து நாம் நீண்டதூரம் போக வேண்டியிருக்கின்றது. ஒரளவு தமிழகத்தில் நம்மவர்களின் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றவராக கார்த்திக் சுப்புராஜ்ஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தைச் சொல்லலாம். அவர்களே இளங்கோ ராமின் 'பெருசு'வை தயாரித்து வெளியிட்டனர். அதுபோவே சோமீயின் இன்னமும் வெளிவராத 'நீளிரா'வையும் அதே நிறுவனமே தயாரித்திருக்கின்றது.
நாம் நமது தோழமைச் சக்திகளைப் புரிந்துகொள்வதைவிட, எப்படி எதிரிகளை எளிதாக உருவாக்குவது என்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றோம். அதனால்தான் அரசியலில் மட்டுமின்றி கலை இலக்கியம் திரைப்படம் போன்றவற்றிலும் மிகவும் பின்னோக்கிச் செல்கின்றவர்களாவும் இருக்கின்றோம்.
எல்லாவற்றிலும் அரசியல் இருக்கின்றது என்பது அடிப்படையான புரிதல். ஆனால் எல்லாவற்றையும் அரசியலாக மட்டும் பார்த்தால், நாம் எந்த ஒரு உருப்படியான விடயத்தையும் செய்ய முடியாது. மேலும் அரசியலை விட, இலக்கியமும், நாடகமும், சினிமாவும் நெடுந்தூரத்துக்குச் செல்லக் கூடியவை. எதிர்த்தரப்புக்களோடும் நிதானமாக உரையாடக் கூடிய வலு இவற்றுக்கு மட்டுமே உள்ளன.
நான் சொல்லும் நேரடி அரசியலின் குறுந்தூரத்தை நீங்கள் நம்பாவிட்டால், கடந்த இருபது/முப்பது வருடங்களில் அரசியல் குறித்து எழுதப்பட்ட/பேசப்பட்ட விடயங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி நிதானமகாபப் பாருங்கள். நாம் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நின்றுதான் இந்த அரசியலைப் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்ற வேதனையான புள்ளிக்கு எளிதாக வந்து சேர்வோம். அது சோர்வானது மட்டுமில்லை, ஒரு சமூகமாக எமக்கு அவலமானதும் கூட.
புதிய சிந்தனைச் செல்நெறிகளை உருவாக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை, அவ்வாறு புதிய திசைகளை நோக்கி போக விரும்புகின்றவகளையாவது இழுத்துப் பிடித்து விழுத்தாது, அவர்களைப் பறக்கவாவது நாங்கள் விடவேண்டும். அதுவே ஒரு சமூகமாக நமக்கு நன்மை பயக்கும். அதற்கு முதலில் நிதானமாக நம்மை நாமே சுயவிமர்சனம் செய்யப் பழக வேண்டும்.
***
(Aug 2025)



0 comments:
Post a Comment