கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புலம்பெயர் நாவல்கள்

Sunday, November 21, 2004

புலம்பெயர் நாவல்கள் பற்றிய சில குறிப்புக்கள்

ப.சிங்காரத்தின், 'புயலிலே ஒரு தோணி', தமிழில் முக்கியமான நாவலென பலர் எழுதியுள்ளனர். இதன்ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு விதச் சலிப்புத்தட்டினாலும் (செட்டியார் வட்டிக்கடைப் பகுதி), பின்னர் ஒரே நீட்சியாக நாவலில் அமிழ்ந்து போகமுடிந்தது. ஆனால் செட்டியார் வட்டிக்கடைப் பகுதிகள் கூட ஒரு அத்தியாவசிய நோக்கில்தான் சேர்க்கப்பட்டுள்ளது என்று நாவலை முழுதாய் வாசித்தபிறகு புரிந்துகொள்ள முடிந்தது.

இந்த நாவல், ஒரு சாகசக்கதை என்ற ரீதியில்தான் பார்க்கப்படும் என்றும் அதற்கான காரணங்களையும் ஜெயமோகன் இத்தொகுப்பின் பின்னுரையில் சொல்வதும் சரியானதே. என்னைக் கவர்ந்த பகுதிகள், நாவலின் முக்கிய கதாபாத்திரமான பாண்டியன், I.N.A தமிழர்களை பிரிட்டிஷ் இராணுவத்திற்கு காட்டிக்கொடுக்கும் சுந்தரத்தை மிகப்பொறுமையுடன் வஞ்சினம் தீர்த்துக்கொள்ளும் பகுதியும் (முக்கியமாய் சுந்தரத்துடன் நிகழும் உரையாடல்), மற்றது club ஒன்றில் மதுவருந்திக்கொண்டு பாண்டியன், கே.கே.ரேசன் போன்றவர்கள் பிரித்தானியரை நகைச்சுவையாய் கிண்டல் செய்யும் பகுதியும். கிண்டலின் உச்சியில் ஒரு பிரிட்டிஷ் கேர்னலுக்கு அடிப்பதும், எதிராளிகளின் துப்பாக்கிகள் உருவப்பட, அதற்குப் பயப்பிடாமல், பாண்டியன் போன்ற தமிழர்களும் துப்பாக்கிகளை எதிராய் உருவுவதும்... அதில் கூட அற்புதமான வரிகள் வந்துவிழுகின்றன..."பிஸ்டல்-கைகள் குறிபார்த்து இருந்தன. ஒரு விநாடி-ஒரு தோட்டா. பலரின் உயிர் ஒரு விநாடி-ஒரு தோட்டாவில் அடங்கி நின்று வேடிக்கை பார்த்தது. ஒரே ஒரு தோட்டா வெடித்தால் போதும்..." .

வீரமாய் தமிழர்கள் நிமிர்ந்து நிற்கும்போது வீர வர்ணனைகள்தான் அனுபவமில்லாதவர்க்கு தொடர்ந்து வரும், அனுபவங்களிடையே வாழ்ந்த ப.சிங்காரத்திற்கு அது நிகழாதுதானே. இன்னும் பல நுட்பமான இடங்கள பலதைச்சொல்லிப்போகலாம். இந்த நாவல், 62ல் எழுதப்பட்டுவிட்டது என்று நினைக்கும்போது வியப்பாயிருந்தது. ஒரு நவீன நாவலிற்குரிய இயல்போடும், கிட்டத்தட்ட Non-linear வகையிலும் எழுதப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம்.

'கடலுக்கு அப்பால்', போருக்கு பின்பான நாள்களைப் பற்றிப்பேசுகிறது. அந்த நாவல் நிச்சயம் ஒரு கழிவிரக்கத்தை வாசிப்பவரின் மனதில் படியவிடுகிறது. போர்க்களத்தில் சாகசங்களும், வீரதீரச்செயல்களும் செய்பவர்கள் போர் ஓய்ந்தபொழுதில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிர்ப்பதுவும் காலங்காலமாய் இருக்கும் போலத்தானிருக்கும். புயலிலே ஒரு தோணியில் அல்லாத வேறு பெயருடைய பாத்திரங்கள் இருந்தாலும், நுணுக்கமாய் பார்த்தால், இரண்டு நாவல்களின் பல பாத்திரங்கள் ஒன்றெனச்சொல்ல முடியும் (போருக்கு முன்/பின்). ஆனால் ஒரு நாவல் என்றவகையில் இது தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை என்பது பலவீனமாய்த்தான் கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட சம்பவங்களை புனைவதோடு ப.சிங்காரம் சோர்ந்துபோய்விடுகிறார். அதனால்தான் 'புயலிலே ஒரு தோணி'யளவிற்கு, இதைக்குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லாமல் போகிறது.

மற்றுமொரு நாவல், ஹெசிப்பா ஜேசுதாசன் எழுதிய, 'மா-னீ' என்ற நாவல். இது பர்மாவின் பின்புலத்தில் ஆரம்பித்து இறுதியில் இரண்டாம் உலகயுத்த ஜப்பானிய ஆக்கிரமிப்பால் தமிழ்நாட்டிற்கு திரும்புவதான கதை. தமிழ்நாட்டின் ஒரு கிராமத்திலிருந்து(பெயர் ஞாபகமில்லை) பர்மாவில் வனத்துறையதிகாரியாக பணியாற்றப்போகும் தகப்பனுடன் குடிபெயரும் ஒரு குடும்பத்தின் கதை. நாவல் முழுவதும் ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து எழுதப்பட்டுள்ளது. அதீத sentiment அல்லது அடிபணிதலோ இல்லாமல் சாதாரணபோக்கில் கதை சொல்லப்படுகிறது. ஆரம்ப அத்தியாயங்களில் பர்மிய பெயர்கள், பேச்சு வழக்குகள் என்று நிரம்பியிருக்க கதையில் நுழைய சற்று கடினமாயிருந்தாலும், உள்ளே சற்று நுழைந்தால் ஒரு சுவாரசியமான நாவலை வாசித்த அனுபவம் கிடைக்கும். கதையின் முக்கியபாத்திரமான ராணிக்கு இரண்டு மூத்த அண்ணாமார்கள் இருக்கிறார்கள். இருவரின் வாழ்வுமே இறுதியில் அலங்கோலமாய் போகிறது. யுத்தம் போரிட்டுக்கொண்டிருப்பவரை மட்டுமல்ல, அதனோடு சம்பந்தப்படாதவர்களையும் எப்படி பாதிக்கச்செய்கிறது என்பதற்கு இந்த நாவல் நல்ல உதாரணம். 80களின் ஆரம்பத்தில் இந்தக்கதை பதிப்பாக்கம் செய்யப்பட்டதாய் நினைக்கிறேன். எழுதிய ஆண்டு எப்போது என்று தெரியவில்லை. ஆனால் நானறிந்தவரை இந்த நாவல் குறித்து எவரும் எந்தக்குறிப்பும் எழுதியதாய் காணோம்.

புலம்பெயர்வு வாழ்வைப் பிரதிபலிக்கும் நாவல்கள் என்றவகையில், ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', 'கடலிற்கு அப்பால்', ஹெசிப்பா ஜேசுதாசனின் 'மா-னீ' போன்ற படைப்புக்களை விலக்கிவிட்டு புலம்பெயர்நாவல்களை பற்றி எந்தக்குறிப்புக்களும் எழுத முடியாது என்றே நினைக்கிறேன்.

பி.கு: தற்சமயம் இந்த நாவல்கள் எதுவும் என் வசம் இல்லாததால், ஞாபகத்தில் உள்ளதைக் கொண்டும், முன்பொருமுறை பதிவுகளில் ஒரு குறிப்பாய் உள்ளிட்டதையும் வைத்தும் இதை எழுதியிருக்கிறேன். பிழைகள் காண்பின் சுட்டிக்காட்டுவீராக!

Eminem

Saturday, November 20, 2004

Eminem 'n' Encore

Eminemத்தின் பாடல்களை சிலவருடங்களுக்கு முன் கேட்டபோது, அவர் ஒரு women-hater என்ற அறிந்தபிறகு அவரது பாடல்களுடன் ஒன்றிப்போக முடியாமல் போய்விட்டது. எனினும் அவ்வப்போது MTVயில் அவரது பாடல்களை காட்சிப்படலங்களாய் பார்க்கும்போது அவரது எள்ளலும் கிண்டலும் மற்ற artists (கலைஞர்கள்?) களில் இருந்து வித்தியாசப்படுத்திக்காட்டியது.

சில மாதங்களுக்கு முன் தான் அவரையும் அவரது பாடல்களையும் ஆழமாய் அறியவேண்டும் என்று ஒரு விருப்பம் ஏற்பட்டது. பிறப்பால் வெள்ளையினத்தவரானவர் ஒரு rapperயாய் பிரபலமடைவது அவ்வளவு இலகுவில்லை என்பதையும் மீறி தனது பாடல்களால் Eminem பிரபலமடைந்திருக்கிறார். அண்மையில்தான் அவரது புதிய இசைப்பேழை Encore வெளியிடப்பட்டிருக்கிறது. அவரது ஏனைய இசைப்பேழைகளைப்போலவே, இதுவும் Parental Advisory: Explicit Content என்றுதான் வந்திருக்கிறது. நான் கேட்டவரையில் ஒரேயொருபாட்டில்தான் ஒரேயொரு f* word இருக்கிறது. மிச்சத்தில் எல்லாம் எண்ணி மாளாது. Raggae இசையில் இதுவெல்லாம் மிகச்சாதாரணம் என்பதைக் கேட்பவர்கள் அறிவார்கள்.

இந்த இசைப்பேழையிலும் அவரின் பெண்கள் மீதான வெறுப்பு அடிநாதமாய் கேட்டுக்கொண்டிருந்தாலும், Bushலிருந்து Michael Jackson, Britney Spears, Justin Timerlake, Janet Jackson என்று எல்லோரும் கிண்டலடிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாய் Bush மீதான் கடும் விமர்சனம் Mosh என்ற பாடலில் வைக்கப்பட்டிருக்கிறது. உன்னிப்பாய் பார்த்தால், Bushஜயும் Moshஐயும் உச்சரிக்கும்போது கிட்டத்தட்ட ஒரே ஒலிவருவதைக்காணமுடியும் (இந்தப்பாடல்தான் அண்மையில் வந்த மிக கடுமையான எதிர்அரசியல் பாடலென எங்கையோ வாசித்தாய் நினைவு). அதில் நேரடியாகவே Bush திட்டப்படுகிறார். '...STOMP PUSH, SHOVE, MUSH, FUCK BUSH, UNTIL THEY BRING TROOPS HOME...' என்றும் பிறகொரு இடத்தில், '...LET THE PRESIDENT ANSWER A HIGHER ANARCHY/ STRAM HIM WITH AN AK47/LET HIM GO FIGHT FOR HIS OWN WAR/ LET HIM IMPRESS DAD THAT WAY..' என்றும் கடுமையாக Bush மீது நேரடியாகவே விமர்சனம் வைக்கப்படுகிறது.

இன்னொரு பாடல் அமெரிக்கா பொலிசாரை நல்லாய் கிண்டலடிக்கிறது. பொலிசார் உபயோகிக்கும் Freeze என்ற வார்த்தையை பாவித்து பாடப்பட்ட பாடல் மிகவும் எள்ளல்பாணியுடையது. ஒவ்வொருமுறையும் அந்தப்பாடலைக் கேட்கும்போது சிரிப்புத்தான் வரும். சிலவேளைகளில் பஸ்சினுள்ளோ அல்லது சப்வேயினுள்ளோ இதைக்கேட்டால், சனம் ஒருமாதிரி நினைக்குமோ என்று கஷ்டப்பட்டுத்தான் சிரிப்பை அடக்கவேண்டியிருக்கும். எனக்கு பிடித்த இன்னொரு பாடல் YOU DON'T KNOW HOW SICK YOU MAKE ME என்று தொடங்கும் பாடல். நல்ல beatலும் உண்மையான உணர்வுகளாலும் அமைந்திருப்பதால் பிடித்திருந்ததோ தெரியவில்லை.

Eminemன் பாடல்களில் நான் அவதானித்த இன்னொரு அம்சம் என்னவென்றால், அழகியலை மறுதலித்தபடி பாடல்கள் பாடப்படுகிறது. Pukeல் சத்தியெடுப்பதும், காறித்துப்புவதுமாய் ஆரம்பிப்பதுவும் (காதலிற்காய் உருக்கமான வார்த்தைகள் பேசாமல், எப்படி அது sick ஆக்கியிருக்கிறது என்பது மாதிரியும்), Michael Jacksonஐ பற்றிப்பேசும் பாடலான Just Lose It ஆரம்பமாவது கழிவறையிலிருந்து தொலைபேசியில் message விடுவதுமாதிரியும், ஒவ்வொருபாடலின் introம் வித்தியாசப்பட்டிருக்கிறது.

ஒரே கெட்டவார்த்தைகளாயும், துப்பாக்கிச்சத்தங்களாயும் இருக்கின்ற பாடல்களில், Mockingbird ஒரு உருக்கமான பாடல். என்னதான் வன்முறையான மனதாய் இருந்தாலும் எங்கோ ஓரிடத்தில் அன்புக்காய் மனம் ஏங்கிக்கொண்டிருக்கும் என்பதற்கு இந்தப்பாடல் நல்ல உதாரணம். இது Eminem தனது குழந்தைக்காய் பாடுவது. விவாகரத்துப்பெற்றுப்போன பெற்றோரிடம் வளரும் பிள்ளை நிச்சயம் பல மனநெருக்கடிகளைச் சந்திந்தபடிதான் வளரும். முரண்நகை என்னவென்றால், Eminemன் நிசவாழ்க்கையிலும், Eminem, single motherல் தான் வளர்க்கப்பட்டிருக்கிறார். அந்தக்குற்றவுணர்ச்சியோ என்னவோ அவரது Ex-Wife Kimடன் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் சேருவதும் பிரிவதுமாய் இருந்து, சிலவருடங்களுக்கு முன் தான் முற்றாக விவாகரத்து வாங்கியிருக்கிறார். எனினும் தான் உலகில் மிகவும் நேசிக்கும் பெண் தனது குழந்தை என்று பலவிடங்களில் சொல்லியிருக்கிறார். அதனால்தான் இறுதியாய் வந்த ஒலியிழைநாடாவிலும் ஒரு பாடலை தனது குழந்தைக்காய் மிக உருக்கமாய் பாடியிருக்கிறார்.

இவ்வளவு வன்முறையான பாடல்வரிகள் எப்படி Eminem இடமிருந்து வருகிறது என்று காரணங்களைத்தேடினால் அவரது இளமைகாலங்கள் ஒரு காரணமாகலாம் (விருப்பமெனில் அவரின் biodataஐ வாசித்துப்பாருங்கள்). ஒரு talk showவில் eminem பேசும்போது 'நீங்கள் இப்படி கடுமையான வன்முறையை கேட்பவரின் மனங்களில் விதைக்கிறீர்களே?' என்று கேட்கப்பட்டபோது, 'நீங்கள் எனது பாடல்களை இப்படி விமர்சிக்கின்றீர்கள். நான் பார்த்த illest movie, Saving Private Ryan. அதில் உள்ள வன்முறையைப் பற்றி ஏன் எவரும் பேசுவதில்லை. விமர்சிப்பதில்லை' என்று Eminem திருப்பிக்கேட்டிருந்தார் (யோசிக்கும்போது அதில் உண்மையும் இருக்கிறது).

அண்மையில் கூட ஒரு நேர்காணலில், தனக்கு இந்த புகழ், மற்றும் autograph இடுவது எதுவும் பிடிக்கவில்லை எனவும், தன்னை இயல்பாய் பழையபடி இருக்கவிட்டாலே நல்லது எனவெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். நிச வாழ்வில் அவரது தாய் drugsற்கு அடிமையாய் இருப்பதுவும், அவரது நெருங்கிய உறவுகள் பலர் தற்கொலைசெய்வதுவும் நிச்சயம் Eminemற்கு மனஅவசத்தைக் கொடுக்கும். இவ்வாறான நெருக்கடிகள்தான் கடுமையான வார்த்தைகளாய் பாடல்களில் தெறிக்கிறதோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

*Well i din kow old ppl can be like diz

Tuesday, November 16, 2004

இன்று காலமை எழும்பி வெளியே வெளிக்கிட்டபோது, மாலையில் சிலவிடயங்களை வலைப்பதிவிடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். பிறகு மதியப்பொழுதில் ஒரு தோழியுடன் இணையத்தில் ஒரு விடயம் பேசியபின் சோம்பலில்லாமல் இரவிற்குள் பதிப்பித்திடவேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். இந்தபத்தியின் முடிவில் தோழி சொன்ன விசயத்தைச் சொல்கிறேன்.

நான் இப்போது எழுதப்போகிற விசயங்கள் சிலவருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை. இருபத்துநான்கு மணித்தியாலமும் பேசக்கூடிய மூன்று நான்கு வானொலிகளும், பத்திற்கு மேற்பட்ட வாரப்பத்திரிகைகளும் இங்கே வருகிறதென்றால், ஊடகங்கள் எவ்வாறு எங்கடை சனங்களால் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்று சொல்லித் தெரியத்தேவையில்லை. அந்த செல்வாக்கில், அங்கே பணிபுரிகின்றவர்வர்கள் தங்களை மாமனிதர்களாக ஆக்கி ஆடும் ஆட்டங்கள்தான் சகிக்கமுடியாதன. பாலியல் சுரண்டல்கள் தெரியாதவிதமாக நடைபெறுவதும் அதுவும் நல்ல கிழவயசில் இருப்பவர்கள் இந்தச்சேஷ்டைகள் செய்யும்போது எதுவுமே செய்ய இயலாது பெண்கள் தவிர்ப்பதையும் நான் பலசமயங்களில் கண்டிருக்கிறேன்.

எனது தோழி ஒருவர் ஒரு ஊடகத்தில் பகுதிநேரமாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அங்கே ஒரு வயசுபோன ஒருவர் வேலைசெய்துகொண்டிருந்தார். அவருக்கு எனது தோழியின் வயசில் ஒரு மகள் இருப்பதாய் கேள்விப்பட்டிருந்தேன். படிப்பின் நிமிர்த்தமாய் தொலைதூரத்தில் இருந்த நான் தோழியைச் சந்திக்க அவர் வேலைசெய்யும் இடத்திற்கே செல்வேன். என் கண்முன்னாலேயே அந்த வயசுபோனவர் தோழியைத் தொட முயற்சிப்பதுவும், தொலைபேசியை எடுப்பது மாதிரி கரங்களைப் பற்றுவதாயும் abuse செய்துகொண்டிருந்தார். நான் இதை அவதானித்துவிட்டு தோழியைக்கூப்பிட்டு, 'அவர் உங்களை abuse செய்கிறார் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே?' என்று கேட்க, 'அய்யோ அவர் அப்படி நினைத்துச்செய்திருக்கமாட்டார்' என்றார். 'இதுவா முதல்தடவை' என்று கேட்க 'இல்லை முந்தியும் இப்படி முயற்சித்திருக்கிறார்' என்றார் தோழி. நான் எவ்வளவு எடுத்துக்கூறியும் தோழி விளங்கிக்கொள்ளவில்லை. பிறகுதான் எனக்கு ஒருவிடயம் உறைத்தது. நாம் பெரியோரை மதிக்கவேண்டும், அவர்கள் சொல் கேட்கவேண்டும் என்று போதிக்கப்பட்டு வந்தவர்கள். ஆகவே ஒரு வயசுபோனவர் sexual abuse செய்யப்பார்க்கிறார் என்பதை நமது மனம் உடனே ஏற்கமாட்டாது என்று. நல்லவேளையாக அந்தத்தோழி விரைவிலேயே வேலையை விட்டுவிட்டு பிறகு உயர்கல்வி படிக்கப்போய்விட்டார்.

இன்னொரு சம்பவம். என்னொடு படித்துக்கொண்டிருந்தவருக்கு நிகழ்ந்தது. ஏதோ ஒரு ஊடகம் புதிதாய் தொடங்குகிறார்களாம். நேர்முகத்தேர்விற்கு போகப்போகிறேன் என்று எனக்கு சொன்னார். சில நாள்கள் தொடர்ந்து அந்த ஊடகத்திற்கு சென்றார். திடீரென ஒருநாள் அந்தவேலையை விட்டுவிட்டேன் என்று முகம்வாடிசொன்னார். என்ன காரணம் என்று கேட்டபோது சொல்ல மறுத்தவர், மிகவும் உறுக்கிக் கேட்டபோது விசயத்தைச் சொன்னார். வேலையைப் பழக்கிறேன் பேர்வழி என்று தோழியை தொட முயற்சித்திருக்கிறார் அந்த ஊடகத்தின் பொறுப்பாளர். தோழி ஆத்திரத்தில் 'நாயே என்னைத்தொட்டாய் என்றால் அடிப்பேனாடா' என்று கோபமாய் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். இத்தனைக்கும் பொறுப்பாளருக்கு திருமணமாகி தோளுக்குமேல் வளர்ந்தபிள்ளைகளும் இருக்கிறார்கள்.

இன்னொரு சம்பவம் ஒன்று. இவரும் எனது தோழிதான். ஊடகம் ஒன்றில்தான் வேலைசெய்தவர். ஒருமுறை இவரது கணனி பழுதாகிப்போய்விட, திருத்துவதற்காய் என்னையும் அழைத்துசென்றிருந்தார். திருத்தபவர் அவ்வவ்போது ஒரு வானொலியில் நிகழ்ச்சிகள் கொடுப்பவர். அவரது தமிழ் எங்கடைமாதிரி இருக்காது. கடைக்கு கணணியுடன் போனதுதான் தாமதம், மனுசன் நான் ஒருத்தன் நிற்பதுகூடத் தெரியாமல், 'என்ன பிள்ளை make-up கூடப்போட்டிட்டாய் போல' என்று கன்னத்தைத் தடவித்தொடங்கிவிட்டது. எனக்கு கோபம் வந்திட்டுது. 'அதுக்கு உங்களுக்கென்ன?' என்றேன். பிறகு தோழிதான் மெல்லிய குரலில் 'கோபப்படாதே இப்ப ஏதும் சொன்னால் இந்த மனுசன் கண்டகிண்ட கதையெல்லாம் பரப்பிவிடும்' என்று சொன்னாள்.

மேலே கூறின சம்பவங்கள் அனைத்திலும் வயது முதிர்ந்தவர்கள்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பெடியன்களின் abuseல் கவனமாய் இருக்கின்ற பெண்கள் அதிகம் சறுக்கிப்போவது இந்த இடத்தில்தான். எனென்றால், பெரியவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, abuse செய்யமாட்டார்கள் என்று பெண்களுக்கு கற்பிக்கப்பட்டு அது அடிமனதில் தங்கிவிட்டிருக்கிறது. எல்லாவற்றிலும் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் தாங்கள் இப்படி வயதுபோன மனுசன்களால் abuse செய்யப்படுகிறோம் என்பதை அறியாமல், வாழ்வில் பெண்கள் நகர்ந்துகொண்டிருப்பதேதான். (இவ்வளவும் நானறிய நடந்தவை, நானறியாமல் எத்தனை நடைபெற்றதோ/ நடைபெறுகிறதோ?)

சரி இன்று நடந்த சம்பவத்திற்கு வருவோம். மதியவுணவுநேரத்தில் தொலைதூரத்தில் இருக்கும் தோழியுடன் இணையத்தில் உரையாடிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு 'எனக்கு ஒரு கடினமான் நாள்' என்றாள். ஏன் என்றபோது, அது பெரிய கதையென்றாள். அவள் இன்று காலை வளாகம் செல்வதற்காய் பஸ்சிற்காய் காத்திருந்திருக்கிறாள். அவள் பஞ்சாபி இனத்தவள். அங்கே ஒரு வயசுபோன சிங் ஒருவர் வந்திருக்கிறார். இவளிடம் இந்தியாவில் எந்த இடத்தைச் சேர்ந்தவள் என்று கேட்டிருக்கிறார். பிறகு நகரம், தெரு என்றெல்லாம் கேட்க, தானும் அவளது இடத்திற்கு அருகில்தான் என்று சொல்லியிருக்கிறது கிழடு. பிறகு பஸ் வர, அந்தக்கிழவனும் இவளுக்கு அருகில் அமர்ந்து இவள் போற இடத்திற்குத்தான் தானும் போவதாய் சொல்லியிருக்கிறார். பிறகு இவளது வீட்டு முகவரி கேட்க இவள் நல்லவேளை கொடுக்கவில்லை. பிறகு நீ என்ரை மகளைப்போல இருக்கிறாய், நல்லாய் ஆங்கிலம் பேசுகிறாய், கெட்டிக்காரி என்று ஏதோ ஏதோ எல்லாம் சொல்லியபடி, பஸ்சினுள் hugs பண்ணத்தொடங்கிவிட்டார். இதைக்கேட்டுக்கொண்டிருந்த நான் இடைமறித்து, அவர் உன்னை abuse செய்திருக்கிறார், நீ மற்றவர்களிடம் சொல்லியிருக்கலாம்தானே என்று கேட்டேன். அவள் சொன்னாள், 'Are you crazy? He is just an old man'. பிறகு இப்படித் தொடர்ந்து torture செய்திருக்கிறது கிழடு. இறுதியாய் தன்ரை இடம் வந்திட்டு என்று சொல்லி கிழடு hug செய்துவிட்டு, kiss பண்ணியிருக்கிறது. இவள் நல்லவேளையாக திரும்பியதுதால் அந்த tortureல் இருந்து ஓரளவு தப்பிவிட்டாள். இவள் இதையெல்லாம் இப்படி எல்லாம் சொன்னாப்பிறகும், நான் அவளிடம், For sure, the old man abused you என்று பலமுறை கூறியதுபோதும் அவள் அதை ஏற்றுக்கொள்ளாமல், அவர் mentally challenge யாய் இருக்கக்கூடும் என்று சொல்லிக்கொண்டேயிருந்தாள். இல்லை இப்படி abuse செய்பவர்கள், அப்படித்தான் நடிப்பார்கள், பிடிபடாமல் இருக்க என்றும் கூறிப்பார்த்தேன். அவள் அதையும் ஏற்றுக்கொள்வதாய் இல்லை. கடைசியாக நான் சொன்னேன், If you don't beleive,the old men can't abuse, then read the yesterday news. என்று சொல்லிவிட்டு ஒரு 75 வயது முதியவர், 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காய் கைதுசெய்யப்பட்டதை கேள்விப்பட்டாயா என்றேன். அதன் பிறகுதான் அவள், இனி தானும் வயது போனவரிகளிடம் கவனமாயிருக்கவேண்டும் என்று சொன்னாள். இதை எழுதிக்கொண்டிருந்த இந்தக்கணத்தில் அவளோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன். அவள் தாயிடம் இதைப்பகிர்ந்துகொண்டபோது அவளது தாயும், நான் சொன்னதைத்தான் சொன்னதாய் சொன்னாள். ஆனால் தனது பெயரில் what a bad day என்பதை அவள் இணைத்தபடிதான் உரையாடுகிறாள். காயங்கள் இலகுவில் மறக்கமுடியாதன.

* - The heading was taken from my friends' conversation

கஸ்தூரியின் ஆக்கங்கள்

ஓர் அறிமுகம்

கஸ்தூரி அவரது கவிதைகளினால் பரவலாக அறியப்படுகின்றவராயினும், நல்ல பல சிறுகதைகளையும் தனக்குரித்தான உலகினுள் நின்று படைத்துள்ளார். சிவரமணி, செல்வி போன்றோர் தீவிரமாய் இயங்கியபொழுதிலே இவரது பல ஆக்கங்களும் எழுதப்பட்டதாய் தெரிகிறது. சிவரமணியைப்போலவே மிக இளம்வயதில் (22 வயதில்) இவரும் அகால மரணமடைந்தவர். 'கஸ்தூரியின் ஆக்கங்கள்' எனத் தொகுப்பட்ட இவரது தொகுப்பிலே, ஐந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஈழப்போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிப்பவையாய் இவரது அநேக கதைகள் அமைந்திருக்கின்றன. அமைதிப்படை என்ற பெயரில் வெண்புரவிகளின் மீதேறி வந்தவர்கள் திசைமாறிப்போனதையும், அவர்கள் விட்டுச்சென்ற அழியா வடுக்களுமே அதிகம் கஸ்தூரியின் கதைகளில் உள்ளுறைந்து கிடக்கின்றது.

'நிர்ப்பந்தங்கள்' என்று கிட்டத்தட்ட குறுங்கதையாக நீளும் கதை யாழ்ப்பாணத்து சராசரிப் பெண்கள் இருவரின் வாழ்வினைக் கூறுவதாய் அமைந்திருக்கின்றது. தன்னை, தனக்குள்ளும் சமுகத்திற்குள்ளும் ஒடுக்கியபடி இருக்கும் அக்காவினதும், எதையும் கேள்விக்குட்படுத்தி சுதந்திரமாய் திரிய விரும்பும் தங்கையினதும் வாழ்வின் பன்முகங்கள் பேசப்படுகின்றன. கதை அக்காவின் மரணத்தின் புதிரிலிருந்து தொடங்கி அக்காவின் இறுதிச்சடங்குகளுக்கான ஆயுத்தங்களுடன் முடிகின்றது. அதனிடையே, தனதும் அக்காவினதும் நினைவுகளை தங்கை அசைபோடுவதாய் கதை நீள்கிறது . எவருக்கும் தீங்கு செய்ய விரும்பாத, எல்லோரையும் அனுசரித்துப்போகும் அக்கா, இறுதியில் தான் மணந்த வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு, வெளிநாட்டிலும் ஒரு குடும்பம் இருப்பதாய் அறிந்து தற்கொலை செய்து கொள்கிறார். அக்காவின் மீது அதீத பாசமும் விருப்பும் கொண்ட தங்கையிற்கு அக்காவின் அரளிக்காய் உண்ட மரணம் அவமானமாய்த் தெரிகிறது..."சீ...அக்கா எடுத்தது எவ்வளவு கோழைத்தனமான முடிவு! தவறு செய்தவன், தண்டிக்கப்படவேண்டியவன் என்ன மாதிரித் திரிகிறான். அவனுக்கென்ன இன்னொரு மனைவியோடு வாழுவான். இல்லாவிட்டால் அந்த வெளிநாட்டு மனைவியோடு வாழ்வான். ஆனால் அக்கா இத்தனை காலமும் தன் வாழ்வில் பயந்து என்ன சுகத்தைக் கண்டாள்? எல்லோருக்கும் பயந்து பயந்து வாழ்ந்ததுதான் மிச்சம்' என்கின்றதோடு கதை நிறைவுறுகிறது. பெண்ணுக்கு சமுகம் வழங்கும் மட்டுபடுத்தப்பட்ட சுதந்திரம், சாமர்த்திய வீடுகள், விதவைகள் வாழ்வு எனப்பல பெண்ணிய மனநிலையில் இருந்து ஒரு தசாப்பத்திற்கு முன் எழுப்பப்பட்ட கேள்விஅலைகள் இன்னமும் அதிர்ந்து கொண்டே இருப்பது நமது சமுகத்தின் சோகம்.

இன்னொரு கதையான 'மக்களைப் பிரிந்த துப்பாக்கிகள்', ஈழமண்ணில் இந்திய இராணுவம் மக்களிற்கு பெண்களிற்கும், சாதாரண மக்களிற்கும் ஏற்படுத்திய அழியா வடுக்களைப் பேசுகின்றது. சுமதி என்கின்ற கல்லூரியில் கற்கும் பெண்ணை தன்வசமாக்க விரும்பும் ஒரு இராணுவத்தினனின் கோரமுகம் சித்தரிக்கப்படுகின்றது. ஓர்நாள் ரீயுசனிற்கு சென்ற சுமதியை, பாதுகாப்பு பரிசோதனை என்ற பெயரில் நடுவீதியில் ந்¢றுத்துகிறான் ஒருவன் அவனைப்பார்த்து, 'உன்ரை லச்சணத்திற்கு நாங்கள் கதைக்காதது ஒன்றுதான் குறை. எளிய மூதேசி, நீயும் ஒரு தமிழனே' எனப்பேசுகிறாள். பலவந்தமாய் அந்த இராணுவத்தினன் சுமதியை மணக்கவும் ஆசையைத் தீர்க்கமும் முயல்கையில் தன்னை விடும்படி மன்றாடியவளை கைகளால் அறைந்து கெட்ட வார்த்தைகளால் பேசுகிறான். மக்கள் அதிகம் நடமாடும் வீதியாகையால் சுமதி ஒருவழியாக தப்பிக்கிறாள். ஆனால் பாலியல் வக்கிரம் பிடித்த மிருகம் தன் கூட்டாளிகளுடன் சுமதியின் வீடு நகரை ஒரு அந்தியில் செல்கிறது. அடுத்து என்ன நிகழும் என்ற அறிந்த சுமதி, வீட்டின் பின்வளவால் தப்பியோடுகிறாள். எனினும் கோபம் கொண்ட இராணுவத்தினன், அவளின் தந்தையை அடித்து வானில் ஏற்றிவிட்டு, சுமதியின் தாயிடம், 'உனக்குப் புருசன் வேணுமெண்டா நாளைக்கு மேளைக் கொண்டாந்து தந்திட்டு புருசனைக் கூட்டிக் கொண்டுபோ' என ஆண்மை பேசுகிறான். கெடு முடிகிறது, சுமதியின் தந்தை திரும்புகிறார் இறுதியில் பிணமாக. பிறகும் விடவில்லை, 'பிரேதத்தை அரை மணித்தியாலத்துகுள் எரிச்சுபோடோணும், அழுது ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது' என்றும் பயமுறுத்தியபடி, இன்னும் யாரைப்பலியெடுக்கலாம் என்று அந்தக்கொடியவர்களின் வாகனம் உறுமிக்கொண்டே செல்வதாய் கதை முடிகிறது. அந்த உறுமலும், அது தரும் பீதியும் வாசிப்பவர் அனைவரையும் திடுக்குறவே செய்யும்.

மற்ற ஒரு கதையான, ' அவர்களுக்குதான் எமக்கு விடிவதில் விருப்பமில்லையே' யில் ஒரு தாய், தனது மகளை இராணுவ டாங்கி ஏறிமிதித்துச் சென்ற ஐம்பது அப்பாவி மக்களில் ஒருவராய் இழக்கிறாள். அவளது சோகம் முடியவில்லை. பிறகொருபொழுதில் செல்விழுந்து தனது மகனையும் காவுகொடுக்கிறாள். இழப்பே வாழ்வாகிப்போன தாயின் வாழ்வு முழுதும் கொடுங்கனவுகள் துரத்துகின்றன. ஒருநாள், நினைவுகளின் பெருங்கடலில் அலைவுற்று, தாகம் நீள தன் பிள்ளைகளின் பாதங்களைப் போய்சேருவதாய் கதை முடிகிறது. இதைபோன்ற பல தாய்மார்களின் கதைகள் நம் மண்ணில் புதைந்து போயும், மிதந்தபடியும் இருப்பதான பிரமையை கஸ்தூரியின் வார்த்தைகள் ஏற்படுத்துகின்றன.
'இடம்மாறியுள்ள துப்பாக்கிகளால்...' கதை போராளிகளுக்கு உதவும் இரண்டு பிள்ளைகளின் தாயை, இந்திய இராணுவமும் அதனோடும் இயங்கும் உள்ளூர் இராணுவமும் செய்யும் சித்திரவதைகளையும், இறுதியில் அவரின் உயிரினைப் பறிக்கும் கொடூரத்தையும் சித்தரிக்கிறது. இறுதியில் தன் முடிவை முன்னமே அறிந்துவிட்ட தாய், தன் குழந்தைகள் குறித்து எண்ணுகிறாள், ' போகட்டும்... இன்று எத்தனை தமிழ்க்குழந்தைகள் அநாதைகளாகிவிட்டனர். அவர்களோடு இவர்களும் சேர்த்து கொள்ளட்டும். அடிமைகளாக வாழ்கின்றவரை நாட்டின் அகதிகளும், அநாதைகளும் தானே நிரம்பி வாழ்வார்கள்'. ஒரு தாய் சொல்லக்கூடிய வார்த்தைகளா இதுவென அந்தச் சூழலிற்கு வெளியிலிருக்கும் நமக்கு வியப்பு ஏற்படுதல் இயல்பு. ஆனால் அதைவிட யதார்த்தம் மோசமாய் இருக்கிறதாய் கதாசிரியர் வார்த்தைகள் சோகத்துடன் கசிகின்றன.

கஸ்தூரியின் கதைகளில் அநேகமானவை எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்டதாய் தோன்றுகின்றன. ஒரு போராளி அமைப்புக்குள்ளிருந்து, தீவிரமான யுத்தகளம், தலைமறைவு வாழ்வு என்கின்ற நிலைகளை மீறி படைப்புக்கள் எழுத்தாக்கம் பெற்றிருக்கின்றன. அதீத பிரச்சாரத் தன்மையோ அல்லது தான் சேர்ந்த அமைப்பைத் தேவையின்றி புகழாமலே எழுதியிருப்பது இன்னுமொரு சிறப்பு. போராடும் கரங்கள் சிலவேளைகளில் கறைகள்பட்டாலும் அவையும் மானிடத்தின் விடுதலையை நோக்கியே நகரத்துடிக்கின்றன என்பதற்கு கஸ்தூரியின் யதார்த்தப்பாணியிலான இந்தக் கதைகள் முக்கிய எடுத்துக்காட்டாகும். மண்ணையும் மக்களையும் ஒருசேர நேசித்த ஒரு படைப்பாளி இளவயதில் நம்மை விட்டகன்றது ஈழத்து இலக்கியத்தின் துரதிஸ்டம்.

நன்றி: பதிவுகள் ஈழத்துச் சிறப்பிதழ்

பச்சை தேவதை

Sunday, November 14, 2004

சல்மாவின் 'பச்சை தேவதை'
சில அவசரக்குறிப்புக்கள்

சல்மாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாய் பச்சை தேவதை வந்திருக்கிறது. முதலாவது தொகுப்பு (ஒரு மாலையும் இன்னொரு மாலையும்) பெற்ற கவனத்தை இந்தத் தொகுப்பு பெறவில்லையெனினும் அண்மைக்காலத்தில் வெளிவந்த கவிதைத்தொகுப்புகளில் அதிகம் ஏமாற்றம்தராத தொகுப்பு இதுவென துணிந்து சொல்லாம். சல்மாவின் உலகம் எப்போதும் மனித உறவுகளை அதிகம் கவனித்தபடியே இருக்கிறது. அது வீட்டில் இருந்தால் என்ன, வெளியில் திரிந்தால் என்ன உறவுகளே முக்கிய கவனப்பொருளாகின்றன.


தாய்மை எப்போதும் நிறைவைத்தருவதும், எல்லாத் துன்பங்களிலிருந்தும் பெண்ணை ஆசுவாசப்படுத்தவும் கூடும் என்ற நம்பிக்கைகளை சல்மாவின், இருட்தேர் கேள்விக்குட்படுத்துகிறது. '...என் தாய்மையைத்/ தன் கண்ணீரால் கடைந்து/ திரள்கின்ற பிரியத்தில்/ தம் பங்கை எடையிடுகிற இளம் மனங்கள்/சோர்வின் விதையையே/ ஊன்றினாலும்/ஒடாத தேராய்க் கூடவேயிருக்கிற/இருளின் வடம்பிடிப்பேன்/அவர்களின் துணையோடு...' என்ற வரிகளில் தாய்மையின் வெறுமையையும். அதனூடு நீள்கின்ற விரக்தியையும் படிப்பவரிடையே படியவிடுகிறது. இன்னும், நானில்லாத அவனது உலகத்தில், ஒரு தாய்க்கும், பிள்ளையிற்கும் இடையில் விழும் இடைவெளியையும், பாசத்திற்கான போராட்டமும் பேசப்படுகிறது. '..தனது குழந்தைப் பருவத்தை/ துடித்துக் கடக்கும் அவனும்/ கைப்பற்ற நானும்/ போராட்டத்தினூடே/ கரைகிறது பழைய நெருக்கம்...' காலங்காலமாய் இந்த பாசப்போராட்டம் தாய்மார்களுக்கு இருக்கும் போலத்தான் தோன்றுகிறது. பிள்ளைகள் தமது வளரிளம்பருவத்தை அனுபவிக்கத் துடிக்கின்ற பொழுதுகளில், அதுவரை எல்லாமாக இருக்கும் தாய்மார்கள் இலகுவாய் மறக்கப்படுவதன்/புறக்கணிக்கபடுவதன் வாதையை சல்மாவின் இந்தக் கவிதை பேசுபொருளாக்கிறது.

பெண்கள் உணரக்குரிய வலியை, தனிமையை, 'நிலை', 'விடுபடல்', 'தனித்தொரு பொழுது', 'புழு' போன்ற கவிதைகள் பேசுகின்றன. தனித்தொருபொழுதில், 'கைபிடிச்சுவரில் விழிதீட்டும் ஆந்தையும்', புழுவில், 'தன் உணவை/ என் உடலிருந்தே/ உறிஞ்சியபடி/ என் குரல்வளையை பற்றும்' புழுவும், அவற்றின் உருவங்களை மீறிய வேறொரு வெளியில் அர்த்தம்கொள்வதை முழுக்கவிதையும் வாசிக்கும்போது புரிந்துகொள்ளலாம்.
அதேவேளையில் பெண்கள் மட்டுமே உணர்ந்து எழுதக்கூடிய பல்வேறு விதமான படிமங்கள், காட்சிப்படலங்கள் இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் நிரம்பிக்கிடக்கிறது. ஒரு பின்னேரப்பொழுது, 'மாதவிடாய் ஈரம் நிரம்பிக் கனக்கிற பஞ்சைப் போல' கனத்து விடுவதாயும், ஒரு ஆண்குறி, 'எங்கோ துளிர்த்துப் பெருகிய வன்மென நீள்கின்ற'தாகவும் அமைந்து விடுகிறது.
காலம் நகர்ந்துகொண்டிருப்பதாயும், பழசை எல்லாம் அடித்துப்போட்டு போய்விடும் என்பதை, சல்மாவின் வரிகள் மறுக்கின்றன. 'நகர்வதில்லை காலம்/ படிந்து உறைகிறது/ ஒவ்வொன்றின் மீதும்' (காலப்பதிவு ) என்றும், 'உன் அசுத்தங்களை/ அடித்துக் கொண்டுபோக/ இது நதியில்லை/ ஏரி' (ஏரி ) என்றும் எதிர்மறையில் கூறுகின்றது.
முதல்தொகுப்பில் தனிமையை/வலிகளை மிக உக்கிரமாய் பதிவுசெய்ததைப்போலவே இந்தத்தொகுப்பிலும் சல்மாவின் பல கவிதைகள் பதிவு செய்கின்றன. அதிலும். 'இருளில்/ இருப்பதென்பது/ வெறுமனே/ இருளோடிருத்தல் மட்டுமில்லை' (இருளோடிருப்பதென்பது), 'ஒரு மனநோயாளியென/ அறியப்பட்ட உன்னோடு/ இருந்து கொண்டிருக்கும் வேளைகளில்/கனத்துவிடும் என் வாதைகளுக்கு/ உன்னிடத்தான கருணை மட்டுமே/ காரணமெனச் சொல்லமாட்டேன்' (ஒரு மனநோயாளியென அறியப்படும் உன்னொடு), 'உன் ஞாபகங்களை/ நினைவிலேற்றிக்கொளவதென்பது/ பல்லாண்டு காலப் பாலையின் வெம்மையை/ மேலும் தொடரத்தானேயன்றி/ வேறெதற்காகவுமேயில்லை/ (விரியும் பாலை), போன்ற வரிகளில் வெறுமை ததும்பி வாசிக்கும் மனங்களைக் கனக்கச்செய்கின்றது.

பெண்கள், அதிர்ச்சியிற்காகத்தான், பெண்ணுடலை எழுத்தில் பயன்படுத்துகின்றனர் என்று எழும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறமாதிரி, பெண்ணுடல் மீது காலங்காலமாய் நிகழ்த்தப்படும் வன்முறைகளையும், தாம்பத்தியத்தில் கூட ஏற்படும் உறவுகள் சிலவேளைகளில் தவிர்க்கமுடியாத பாலியல் வல்லுறவாக நீட்சிகொள்வதை...'உன்னை நிறுவிடவியலாத/ உன் வருடலில் கிளர்ச்சியுறாத/ இவ்வுடலின் மீது/ பெரும் விருட்சமெனப் படர்கிறது வன்மம்' ( விடியும் பொழுதில்) என்றும் 'இருளின் தடித்த போர்வை கிழித்து/ என்மீது தடுக்கி விழுந்துகொண்டிருக்கும்/ உன் ஸ்பரிசங்களில்/ தளர்வுற்று மயங்கிச் சரிகிறது/ நீ தொடவியலாத தனிமை' ( )ஆகவும், 'தடயங்கள் பதிந்து/ புதைவுண்ட உடலில்/ தோண்டி உயிர்ப்பித்தல் என்பது/ ஒரு கதவைத் திறப்பது போல/ எளிதானதில்லை' ( இரவின் நிழல்கள்) என்றும், 'துணைவேண்டும் இரவொன்றில்/ அடிபடிந்துன்மீது படினென்கிற/கர்வத்துடன்/ மர்மம் பூணும் உன் புன்னகை (உன் நம்பிக்கைகளின் திசைமீறி)என்றும் உறவின் மீதான நம்பிக்கையீனங்களை, வேதனைகைளை சொல்கின்றன சல்மாவின் இந்தக்கவிதை வரிகள்.

இந்தத்தொகுப்பில், 'பயங்கள்', 'எல்லை', 'ஒரு பூ மலர', 'நம் வீடு' போன்றவற்றை வித்தியாசமான வாசிப்புத்தருகின்ற கவிதைகள் என அடையாளப்படுத்தலாம்.
'இன்றும்
என்னை வீழ்த்திக்கொண்டிருப்பது
உன் வலிமையில்லை
உன் பயங்கள்'
இந்த வரிகள் சொல்லும் விடயந்தான், அநேகமான பெண்களின் முக்கிய பிரச்சினையாக, அகமனக் குளத்தில் கல்லெறிந்து உறவுகளில் நம்பிக்கையீனங்களைக் கொண்டுவருகின்றதோ என்று ஒரு கணம் எண்ணவும் தோன்றுகிறது.

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்

Saturday, November 13, 2004

சி.புஸ்பராஜாவின், 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்'
எனது குறிப்புக்களும், சில அவதானங்களும்


இலைமறைகாயாக மறைக்கப்பட்ட வரலாற்றின் இருண்மையான பக்கங்களைப் பற்றிப்பேசும் எந்தப் புத்தகமும் எனக்கு சுவாரசியமூட்டக்கூடியன. அந்தவகையில், சி.புஸ்பராஜா எழுதிய, 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' முக்கியமான ஒன்று. வரலாற்றை அதனுடன் சம்பந்தப்படாத அடுத்த தலைமுறை வாசிக்கும்போது/அறியும்போது உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவென்றால், அதிலிருந்து முற்றாக விலகியிருந்து சமரசமற்று வெளிப்படுத்தும் ஒர் பார்வையாகும்.

எனது ஐந்து அல்லது ஆறு வயதில், புலிகளுக்கும், ரெலோவிற்கும் நடந்த அழித்தொழிப்பு யுத்தத்தின் நீட்சியில், எங்கள் கிராமத்திலும் துப்பாக்கி சூடுகள் நடைபெற, வெளியே அந்தசமயம் போயிருந்த அப்பாவையும், அண்ணாவையும் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு, அக்காவோடும் அம்மாவோடும் நானும் பயந்தபடி சுவரொடு ஒட்டியிருந்தது நினைவிலிருக்கிறது. அது ஒரு மாலை வேளையாகியபடியால், வானமும் கடும் சிவப்பாய் வெளிறியிருக்க, துப்பாக்கிச் சூட்டின் புகைதான் இப்படி ஆக்கிவிட்டதோ என்று அந்தவயதிற்குரிய அறிவுடன் யோசித்திருத்திருக்கிறேன்.. அதைவிட பெரிதாக எனக்கு எந்தவிடயமும் இயக்கங்களின் வளர்ச்சியில்/வீழ்ச்சியில் நினைவினில்லை.

சி.புஸ்பராவாவின் இந்த நாவல், எமது போராட்டத்தின் பல சிடுக்குகளை இழைகளாகப் பிரித்துபோட்டிருக்கிறது. சுயவரலாற்று நாவல்கள் பலவற்றிற்கு உள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், எழுதுபவர் தன்னை வரலாற்றில் நேர்மை உள்ளவராகக் காட்ட அதீதமாக முனைவதுதான். அந்தக்குறைபாடுடன் தான் இந்த நூலையும் வாசிக்கவேண்டியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பதிப்பாசிரியர்கள் (?) கூறுவதுபோல, 'வரலாறுகள் எழுதப்படும்போது பல்வேறு கோணங்கள் சாத்தியம். கோணங்களுக்கு ஏற்ப வரலாறுகளும் வேறுபடும்' என்பதை வாசிப்பில் நினைவுகொள்ளவேண்டும்.

சி.புஸ்பராஜாவின் இந்தநாவல், அவரும் பிறதோழர்களும் தொடங்கிய, ஈழப்பேரவை அமைப்பின் ஆரம்பத்துடன் தொடங்கி, வெளிநாட்டில் EPRLFன் பிரதிநிதியாய் இயங்கிய காலம் வரைக்கும் அவரது பார்வையில் பக்கங்கள் விரிகின்றபோதும், வரலாற்றின் தேவை கருதி அவர் சம்பந்தப்படாத விடயங்களும் (சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாடியதன் மூலம்) சேர்க்கப்பட்டு நூல் பூர்த்திபெறுகிறது.
இளயவயதிலேயே, சி.புஸ்பராஜாவின் போராட்டத்தன்மை நமக்குள் ஓர் வியப்பையும் பிரமிப்பையையும் ஏற்படுத்துகிறது. மலையகத்திற்கு எல்லாம் இந்தபோராட்டம் விரிவு பெறவேண்டும் என்பதுவும், அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கவேண்டுமெனவும் அந்தக்காலத்திலேயே நினைத்து அதற்கான வேலைத்திட்டங்களையும் செயற்படுத்தவிரும்பியதில் (யாழ்ப்பாணிய புத்திக்கு மாறாய்) உண்மையான ஓர் போராளியின் மனது தெரிகிறது. போராட்டமும், சிறையுமாய் எத்தனையோ இளைஞர்கள், யுவதிகள் தங்கள் வாழ்வைத் தொலைத்துவிட்டு திரிந்திருக்கின்றனர் என்பதை நேர்மையுடன் இந்த நூல் விபரிக்கிறது. அதுவும் சிறைகளில் நடைபெறும் சித்திரவதைகள் நாம் நினைத்தே பார்க்கமுடியாதன. எழுத்திலேயே இப்படி கோரமாயிருப்பின், அதனை அனுபவித்தவர்கள் என்னவிதமான மன/உடல் உளைச்சல்களுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

நூலாசிரியர், EPRLF உடன் தொடர்புள்ளவர் என்றபடியால், அந்த இயக்கம் பற்றியும் அதனோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அடிக்கொருதரம், நான் அந்த இயக்கத்தவன் இல்லை என்கின்ற தொனியில் எழுதி எதை சி.புஸ்பராசா வாசகர்களுக்கு புரியவைக்க முயல்கிறாரோ தெரியவில்லை. உண்மையில், இந்தப்புத்தகத்தை வாசித்து முடித்தபோது, நான் இதுவரை EPRLF பற்றி வைத்திருந்த அபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்பட்டதை குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும். எனெனில் எனது அனுபவங்கள், EPRLFன் வீழ்ச்சிக்காலமாகிய, 1987ற்குப்பிறகுதான் (இந்திய இராணுவ வருகையின்பின்) ஆரம்பிக்கிறது. அவ்வளவு ஜனநாயகத்தன்மையுடனும்(?), மார்க்சிய சிந்தாந்தத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்த இயக்கம் சடுதியில் எப்படி தன் கோரமுகத்தைக் காட்டியது (1987பின்) என்பதற்கான காரணம் சரியாக இந்த நூலில் இனங்காட்டப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த இயக்கத்தின் இருந்த ஒரு சிலராலேயே இப்படியான ஒரு சீரழிவு ஏற்பட்டது என்று ஆசிரியர் கூறுகிறார் என்றாலும் அது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதமாகத்தான் எனக்குப்படுகிறது. அப்படியெனின், எல்லா இயக்கங்களும் தமது பிழைகளை ஒரு சிலர் மீது போட்டுவிட்டு இலகுவாய் தப்பித்துக்கொள்ளலாம்தானே.

இந்தநூலின் ஒரு இயக்கத்தின் மீதான் பக்கச்சார்பான பார்வையில் எழுதப்பட்டிருப்பதை எவரும் மறுக்கமுடியாது. புலிகள் தொடங்கி, புளோட் என்று எல்லா இயக்கங்களின் உட்கொலைகள் இன்னபிற எல்லாம் விபரமாய் எழுதப்பட, EPRLF செய்த எந்தக்கொலைகளுமே விபரமாய் சுட்டிக்காட்டப்படவில்லை. அதுவும் வெளிநாட்டிலிருந்து வந்து, பயங்கர பாதுகாப்புடன், பத்மநாபா, வரதராஜாப்பெருமாள் என்று எல்லோருடனும் (தேர்தலின் பின்) பல இடங்களைச்சுற்றிப்பார்க்கும் சி.புஸ்பராஜாவிற்கு அவர்களின் சிறைகளிலிருந்து வரும் அலறல்களைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை. EPRLF ம் பிழைகளைச்செய்திருக்கின்றனர் என்று பொதுப்படையாக கூறுகின்றாரே தவிர எதையும் குறிப்பிட்டுச்சொல்லவில்லை. அவர்கள் கட்டாயமாகச் சேர்த்த இளைஞர்களை (தமிழ் தேசிய இராணுவம்?) எல்லாம் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின்பின், EPRLF தலைமை எப்படிக் கைவிட்டு தப்பியோடியது என்பது பற்றிய எந்த்க்குறிப்பும் புத்தகத்தில்லை. தான் அவர்களின் செயல்களுக்கு விமர்சனம் செய்ததாகக் கூறும் சி.புஸ்பராஜா ஒரு உண்மையான ஜனநாயகவாதியாக இருந்திருந்தால், அவர்கள் செய்த அட்டூழியங்கள் தெரிந்தபின்னும் (1993ம் ஆண்டுவரை) EPRLFன் பிரதிநிதியாய் பிரான்சிஸ் செயற்பட்டிருக்கவே முடியாது.
...................
எனக்கு சி.புஸ்பராஜாவிற்கு நினைவுபடுத்த (7,8 வயதில் நடந்தவை எனினும்) சில சம்பவங்கள் ஞாபகத்திலுண்டு. சிறு வயதில் ஆஸ்மாவால் நான் அவஸ்தைப்பட அநேகமாய், விடியற்காலைகளில் எனது தாயார், தூரத்திலுள்ள பரியாரியிடம் சிகிச்சைக்காக கூட்டிச்செல்வார். அப்படியான பல காலைவேளைகளில் எங்கள் ஊரிலுள்ள சந்தயில் எங்களை வரவேற்பது இரவில் உறைந்துபோயிருக்கும் இளைஞர்களின் உடல்கள்தான். வேடிக்கை என்னவென்றால், சந்தியின் ஒரு மூலையில் முழித்தபடி காவலிருப்பவர்கள் இந்திய இராணுவமும் EPRLF போராளிகளுந்தான். இன்னும் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவரும் என்மீது மிகவும் பிரியம் வைத்திருந்தவருமான, ஒரு தபாலதிபரை, கொடும் சித்திரவதைக்குபின் கொலைசெய்தவர்களும் சி.புஸ்பராசா சார்ந்திருந்த இயக்கத்தவர்கள்தான். அது காணாது என்று அந்த தபாலதிகாரியுடன் வேலை செய்த ஒரு ஊழியர், சோகம்தாங்காது குடித்துவிட்டு உளறித்திரிந்தபோது அவரையும் இழுத்துக்கொண்டு சுட்டதும் EPRLFம் தான். என்ன சோகமென்றால், அந்தத்தபாலதிபர் புலிகள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர் என்பது கூட இல்லை என்பதுதான்.
..................
எல்லா இயக்கத்தவர்களும் தங்கள் தலைமையை கொண்டாட விரும்புவதுபோலத்தான், சி.புஸ்பராஜாவும் பத்மநாபாபை அடையாளப்படுத்த விரும்புகிறார். ஆனால், இலண்டனிலிருந்து ஈழப்போராட்டத்தில் தானும் பங்கேற்கவேண்டும் என்று விரும்பி அதற்காகவே ஏதோ ஒருவகையில் தன்னுயிரை இழந்துபோன பத்மநாபா என்பார்வையில் முன்னையதைவிட உயர்வாக இருக்கிறார் என்பதுவும் உண்மை. ஏனைய இயக்கத்தைவிட அதிக புத்திஜீவிகளுடன் (சிங்கள மார்க்க்சியவாதிகளுடன் கூட) இயங்கிய ஒரு இயக்கத்தின் வீழ்ச்சி நமது இனத்திற்கான சாபமெனத்தான் கொள்ளவேண்டும் அல்லது அறிவுஜீவிகளால் ஒருகட்டத்திற்கு பிறகு போராட்டத்தை நகர்த்தமுடியாது என்பதையாவது ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த நூலில் நல்ல அம்சம் என்னவென்றால், எவர் மீதும் அதீத காழ்ப்புணர்ச்சி காட்டப்படவில்லை என்பதுதான். அவரவர் குறைகளையும், பிழைகளையும் இயன்றளவு இயம்பவும், நல்லவிடயங்களை முழுமனதுடன் அடையாளப்படுத்த தவறவில்லை என்றுதான் கூறவேண்டும். நூலின் எழுத்துப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன. சில்வேளைகளில் வாசிப்பையே இடைஞ்சல் செய்யுமளவிற்கு. அத்துடன், தொடர்ச்சியாக ஆண்டுவரிசைப்படி எழுதப்படவில்லை. சிலவேளைகளில் சடுதியாக இடையிலிருந்து எல்லாம் சம்பவங்கள் விபரிக்கப்பட வாசிப்பவர் மீண்டும் முன்னைய வருடங்களுக்கு ஓடவேண்டியிருக்கிறது.

இந்த நூலை வாசித்து முடிக்கும்போது ஒன்றுதான் நினைவிற்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டு விலகி இன்று புலம்பெயர்ந்து இருப்பவர்களாயினும் சரி, இல்லை ஈழத்தில் இன்னும் தாம் சார்ந்த கொள்கைகளுக்காக போராடிக்கொண்டிருப்பவர்களாயினும் சரி, அல்லது போராட்டத்திற்காய் தமது உயிரைக்கொடுத்தவர்களாயினும் சரி, அவர்களைக்கொச்சைப்படுத்தாது அவரவர்களின் நியாயங்களுடன் அவரவர்களை நேசிக்கவும் மதிக்கவும் வேண்டும் என்பதே.