கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்

Saturday, November 13, 2004

சி.புஸ்பராஜாவின், 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்'
எனது குறிப்புக்களும், சில அவதானங்களும்


இலைமறைகாயாக மறைக்கப்பட்ட வரலாற்றின் இருண்மையான பக்கங்களைப் பற்றிப்பேசும் எந்தப் புத்தகமும் எனக்கு சுவாரசியமூட்டக்கூடியன. அந்தவகையில், சி.புஸ்பராஜா எழுதிய, 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' முக்கியமான ஒன்று. வரலாற்றை அதனுடன் சம்பந்தப்படாத அடுத்த தலைமுறை வாசிக்கும்போது/அறியும்போது உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவென்றால், அதிலிருந்து முற்றாக விலகியிருந்து சமரசமற்று வெளிப்படுத்தும் ஒர் பார்வையாகும்.

எனது ஐந்து அல்லது ஆறு வயதில், புலிகளுக்கும், ரெலோவிற்கும் நடந்த அழித்தொழிப்பு யுத்தத்தின் நீட்சியில், எங்கள் கிராமத்திலும் துப்பாக்கி சூடுகள் நடைபெற, வெளியே அந்தசமயம் போயிருந்த அப்பாவையும், அண்ணாவையும் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு, அக்காவோடும் அம்மாவோடும் நானும் பயந்தபடி சுவரொடு ஒட்டியிருந்தது நினைவிலிருக்கிறது. அது ஒரு மாலை வேளையாகியபடியால், வானமும் கடும் சிவப்பாய் வெளிறியிருக்க, துப்பாக்கிச் சூட்டின் புகைதான் இப்படி ஆக்கிவிட்டதோ என்று அந்தவயதிற்குரிய அறிவுடன் யோசித்திருத்திருக்கிறேன்.. அதைவிட பெரிதாக எனக்கு எந்தவிடயமும் இயக்கங்களின் வளர்ச்சியில்/வீழ்ச்சியில் நினைவினில்லை.

சி.புஸ்பராவாவின் இந்த நாவல், எமது போராட்டத்தின் பல சிடுக்குகளை இழைகளாகப் பிரித்துபோட்டிருக்கிறது. சுயவரலாற்று நாவல்கள் பலவற்றிற்கு உள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், எழுதுபவர் தன்னை வரலாற்றில் நேர்மை உள்ளவராகக் காட்ட அதீதமாக முனைவதுதான். அந்தக்குறைபாடுடன் தான் இந்த நூலையும் வாசிக்கவேண்டியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பதிப்பாசிரியர்கள் (?) கூறுவதுபோல, 'வரலாறுகள் எழுதப்படும்போது பல்வேறு கோணங்கள் சாத்தியம். கோணங்களுக்கு ஏற்ப வரலாறுகளும் வேறுபடும்' என்பதை வாசிப்பில் நினைவுகொள்ளவேண்டும்.

சி.புஸ்பராஜாவின் இந்தநாவல், அவரும் பிறதோழர்களும் தொடங்கிய, ஈழப்பேரவை அமைப்பின் ஆரம்பத்துடன் தொடங்கி, வெளிநாட்டில் EPRLFன் பிரதிநிதியாய் இயங்கிய காலம் வரைக்கும் அவரது பார்வையில் பக்கங்கள் விரிகின்றபோதும், வரலாற்றின் தேவை கருதி அவர் சம்பந்தப்படாத விடயங்களும் (சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாடியதன் மூலம்) சேர்க்கப்பட்டு நூல் பூர்த்திபெறுகிறது.
இளயவயதிலேயே, சி.புஸ்பராஜாவின் போராட்டத்தன்மை நமக்குள் ஓர் வியப்பையும் பிரமிப்பையையும் ஏற்படுத்துகிறது. மலையகத்திற்கு எல்லாம் இந்தபோராட்டம் விரிவு பெறவேண்டும் என்பதுவும், அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கவேண்டுமெனவும் அந்தக்காலத்திலேயே நினைத்து அதற்கான வேலைத்திட்டங்களையும் செயற்படுத்தவிரும்பியதில் (யாழ்ப்பாணிய புத்திக்கு மாறாய்) உண்மையான ஓர் போராளியின் மனது தெரிகிறது. போராட்டமும், சிறையுமாய் எத்தனையோ இளைஞர்கள், யுவதிகள் தங்கள் வாழ்வைத் தொலைத்துவிட்டு திரிந்திருக்கின்றனர் என்பதை நேர்மையுடன் இந்த நூல் விபரிக்கிறது. அதுவும் சிறைகளில் நடைபெறும் சித்திரவதைகள் நாம் நினைத்தே பார்க்கமுடியாதன. எழுத்திலேயே இப்படி கோரமாயிருப்பின், அதனை அனுபவித்தவர்கள் என்னவிதமான மன/உடல் உளைச்சல்களுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

நூலாசிரியர், EPRLF உடன் தொடர்புள்ளவர் என்றபடியால், அந்த இயக்கம் பற்றியும் அதனோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அடிக்கொருதரம், நான் அந்த இயக்கத்தவன் இல்லை என்கின்ற தொனியில் எழுதி எதை சி.புஸ்பராசா வாசகர்களுக்கு புரியவைக்க முயல்கிறாரோ தெரியவில்லை. உண்மையில், இந்தப்புத்தகத்தை வாசித்து முடித்தபோது, நான் இதுவரை EPRLF பற்றி வைத்திருந்த அபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்பட்டதை குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும். எனெனில் எனது அனுபவங்கள், EPRLFன் வீழ்ச்சிக்காலமாகிய, 1987ற்குப்பிறகுதான் (இந்திய இராணுவ வருகையின்பின்) ஆரம்பிக்கிறது. அவ்வளவு ஜனநாயகத்தன்மையுடனும்(?), மார்க்சிய சிந்தாந்தத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்த இயக்கம் சடுதியில் எப்படி தன் கோரமுகத்தைக் காட்டியது (1987பின்) என்பதற்கான காரணம் சரியாக இந்த நூலில் இனங்காட்டப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த இயக்கத்தின் இருந்த ஒரு சிலராலேயே இப்படியான ஒரு சீரழிவு ஏற்பட்டது என்று ஆசிரியர் கூறுகிறார் என்றாலும் அது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதமாகத்தான் எனக்குப்படுகிறது. அப்படியெனின், எல்லா இயக்கங்களும் தமது பிழைகளை ஒரு சிலர் மீது போட்டுவிட்டு இலகுவாய் தப்பித்துக்கொள்ளலாம்தானே.

இந்தநூலின் ஒரு இயக்கத்தின் மீதான் பக்கச்சார்பான பார்வையில் எழுதப்பட்டிருப்பதை எவரும் மறுக்கமுடியாது. புலிகள் தொடங்கி, புளோட் என்று எல்லா இயக்கங்களின் உட்கொலைகள் இன்னபிற எல்லாம் விபரமாய் எழுதப்பட, EPRLF செய்த எந்தக்கொலைகளுமே விபரமாய் சுட்டிக்காட்டப்படவில்லை. அதுவும் வெளிநாட்டிலிருந்து வந்து, பயங்கர பாதுகாப்புடன், பத்மநாபா, வரதராஜாப்பெருமாள் என்று எல்லோருடனும் (தேர்தலின் பின்) பல இடங்களைச்சுற்றிப்பார்க்கும் சி.புஸ்பராஜாவிற்கு அவர்களின் சிறைகளிலிருந்து வரும் அலறல்களைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை. EPRLF ம் பிழைகளைச்செய்திருக்கின்றனர் என்று பொதுப்படையாக கூறுகின்றாரே தவிர எதையும் குறிப்பிட்டுச்சொல்லவில்லை. அவர்கள் கட்டாயமாகச் சேர்த்த இளைஞர்களை (தமிழ் தேசிய இராணுவம்?) எல்லாம் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின்பின், EPRLF தலைமை எப்படிக் கைவிட்டு தப்பியோடியது என்பது பற்றிய எந்த்க்குறிப்பும் புத்தகத்தில்லை. தான் அவர்களின் செயல்களுக்கு விமர்சனம் செய்ததாகக் கூறும் சி.புஸ்பராஜா ஒரு உண்மையான ஜனநாயகவாதியாக இருந்திருந்தால், அவர்கள் செய்த அட்டூழியங்கள் தெரிந்தபின்னும் (1993ம் ஆண்டுவரை) EPRLFன் பிரதிநிதியாய் பிரான்சிஸ் செயற்பட்டிருக்கவே முடியாது.
...................
எனக்கு சி.புஸ்பராஜாவிற்கு நினைவுபடுத்த (7,8 வயதில் நடந்தவை எனினும்) சில சம்பவங்கள் ஞாபகத்திலுண்டு. சிறு வயதில் ஆஸ்மாவால் நான் அவஸ்தைப்பட அநேகமாய், விடியற்காலைகளில் எனது தாயார், தூரத்திலுள்ள பரியாரியிடம் சிகிச்சைக்காக கூட்டிச்செல்வார். அப்படியான பல காலைவேளைகளில் எங்கள் ஊரிலுள்ள சந்தயில் எங்களை வரவேற்பது இரவில் உறைந்துபோயிருக்கும் இளைஞர்களின் உடல்கள்தான். வேடிக்கை என்னவென்றால், சந்தியின் ஒரு மூலையில் முழித்தபடி காவலிருப்பவர்கள் இந்திய இராணுவமும் EPRLF போராளிகளுந்தான். இன்னும் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவரும் என்மீது மிகவும் பிரியம் வைத்திருந்தவருமான, ஒரு தபாலதிபரை, கொடும் சித்திரவதைக்குபின் கொலைசெய்தவர்களும் சி.புஸ்பராசா சார்ந்திருந்த இயக்கத்தவர்கள்தான். அது காணாது என்று அந்த தபாலதிகாரியுடன் வேலை செய்த ஒரு ஊழியர், சோகம்தாங்காது குடித்துவிட்டு உளறித்திரிந்தபோது அவரையும் இழுத்துக்கொண்டு சுட்டதும் EPRLFம் தான். என்ன சோகமென்றால், அந்தத்தபாலதிபர் புலிகள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர் என்பது கூட இல்லை என்பதுதான்.
..................
எல்லா இயக்கத்தவர்களும் தங்கள் தலைமையை கொண்டாட விரும்புவதுபோலத்தான், சி.புஸ்பராஜாவும் பத்மநாபாபை அடையாளப்படுத்த விரும்புகிறார். ஆனால், இலண்டனிலிருந்து ஈழப்போராட்டத்தில் தானும் பங்கேற்கவேண்டும் என்று விரும்பி அதற்காகவே ஏதோ ஒருவகையில் தன்னுயிரை இழந்துபோன பத்மநாபா என்பார்வையில் முன்னையதைவிட உயர்வாக இருக்கிறார் என்பதுவும் உண்மை. ஏனைய இயக்கத்தைவிட அதிக புத்திஜீவிகளுடன் (சிங்கள மார்க்க்சியவாதிகளுடன் கூட) இயங்கிய ஒரு இயக்கத்தின் வீழ்ச்சி நமது இனத்திற்கான சாபமெனத்தான் கொள்ளவேண்டும் அல்லது அறிவுஜீவிகளால் ஒருகட்டத்திற்கு பிறகு போராட்டத்தை நகர்த்தமுடியாது என்பதையாவது ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த நூலில் நல்ல அம்சம் என்னவென்றால், எவர் மீதும் அதீத காழ்ப்புணர்ச்சி காட்டப்படவில்லை என்பதுதான். அவரவர் குறைகளையும், பிழைகளையும் இயன்றளவு இயம்பவும், நல்லவிடயங்களை முழுமனதுடன் அடையாளப்படுத்த தவறவில்லை என்றுதான் கூறவேண்டும். நூலின் எழுத்துப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன. சில்வேளைகளில் வாசிப்பையே இடைஞ்சல் செய்யுமளவிற்கு. அத்துடன், தொடர்ச்சியாக ஆண்டுவரிசைப்படி எழுதப்படவில்லை. சிலவேளைகளில் சடுதியாக இடையிலிருந்து எல்லாம் சம்பவங்கள் விபரிக்கப்பட வாசிப்பவர் மீண்டும் முன்னைய வருடங்களுக்கு ஓடவேண்டியிருக்கிறது.

இந்த நூலை வாசித்து முடிக்கும்போது ஒன்றுதான் நினைவிற்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டு விலகி இன்று புலம்பெயர்ந்து இருப்பவர்களாயினும் சரி, இல்லை ஈழத்தில் இன்னும் தாம் சார்ந்த கொள்கைகளுக்காக போராடிக்கொண்டிருப்பவர்களாயினும் சரி, அல்லது போராட்டத்திற்காய் தமது உயிரைக்கொடுத்தவர்களாயினும் சரி, அவர்களைக்கொச்சைப்படுத்தாது அவரவர்களின் நியாயங்களுடன் அவரவர்களை நேசிக்கவும் மதிக்கவும் வேண்டும் என்பதே.

1 comments:

Venkat said...

தமிழன் - இன்றைய எனது வலைக்குறிப்பில் என் வாசிப்பு அனுபவத்தை எழுதியிருக்கிறேன்.

http://www.domesticatedonion.net/blog/?itemid=343

12/07/2004 09:38:00 PM