பொங்கல் - ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பு மலர் 2005
தமிழர் தகவல் மாத இதழ், ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. இச் சிறப்பிதழ் வெளிவர பத்மநாப ஜயர் முன்னின்று உழைத்திருக்கின்றார். பெரும்பாலான சிறுகதைகள் ஏற்கனவே பிரசுரமாயிருந்தபோதும், ஈழத்துச் சிறுகதைகளை ஒரேயிடத்தில் பார்க்கும் அரிய வாய்ப்பு இவ்விதழில் இருக்கின்றது. சென்ற தலைமுறைகாலத்தவர்களாகிய, எஸ்.எஸ்.எம்.ராமையா, மு.தளையசிங்கம், வ.அ.இராசரத்தினம், என்.கே.ரகுநாதன் தொடங்கி இன்றைய தலைமுறைகால எழுத்தாளர்களின் படைப்புக்கள் வரை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. சாந்தனின் கிருஷ்ணன் தூது, எஸ்.எல்.எம்.மன்சூரின் சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும், உமா வரதராஜனின் அரசனின் வருகை, எஸ்.எல்.எம்.ஹனிபாவின் மக்கத்து சால்வை, பார்த்திபனின் தீவு மனிதன், ரஞ்சகுமாரின் கோளறு பதிகம், குமார் மூர்த்தியின் மஞ்சள் குருவி போன்றவை எழுதப்பட்ட காலங்களில் பரவலாகப் பேசப்பட்ட ஆக்கங்கள். இங்கே வலைப்பதிவில் எழுதும் பெயரிலியின் திறப்புக்கோர்வையும், பிரதீபா தில்லைநாதனின், இன்றில் பழந்தேவதைகள் தூசிபடிந்த வீணை கொஞ்சம் நினைவுகளும் உள்ளன. பிரதீபா எழுதிவற்றில் எனக்குப் பிடித்தமான கதைகளில் இதுவும் ஒன்று. காதலையும் அதன் இழப்பையும் மிகவும் இயல்பாய் எனக்கு நெருக்கான மொழியில் சொல்வதால் என்னை அந்தக்கதை பாதித்திருந்தது. அ.ரவி, நிரூபா, பா.ரஞ்சினி, திசேரா போன்றவர்களின் கதைகள், நல்ல வாசிப்பனுவத்தைத் தருகின்றன. ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகள் தமது படைப்புக்களை தொகுப்பாய் வெளியிடுவதில் மிகுந்த சோம்பலாக இருப்பதில் (அதில் என்ன பெருமையோ எனக்கு இன்னும் புரியவில்லை) இவ்வாறான தொகுப்புக்களைத்தான் விரிந்த வாசிப்புகளுக்காய் எதிர்ப்பார்த்திருக்க வேண்டியிருக்கின்றது. அந்தவகையில் இதை சாத்தியமாக்கிய பத்மநாப ஜயரினதும் ஏனையவர்களினது உழைப்பு நிச்சயம் மதிக்கப்படவேண்டும்.
காலம் -இதழ் 23
இருபத்து மூன்றாவது இதழாக மார்ச் மாதத்தில், காலம் வெளிவந்திருக்கின்றது. அ.முத்துலிங்கத்தின் நேர்காணல் இதில் முக்கிய அம்சம். அ.முத்துலிங்கத்தின் கதைகள் போலவே, நேர்காணலின் அவரது பதில்களும் புன்னகையை வரவைக்கின்றது. அ.முத்துலிங்கம் கூறுவது மாதிரி, 'ஆனால் எனக்கு ஒரு துக்கம் உண்டு. கனடா இலங்கை இல்லை: இந்தியா இல்லை: மலேசியா இல்லை: முன்னேறிய நாடுகளில் ஒன்று. Yaan Martel, Michael Ondaatje, Alice Munro போன்ற உலகத்து தலை சிறந்த எழுத்தாளர்கள் வசிக்கும் நாடு. இவர்கள் ஒழுங்கு செய்யும் இலக்கியக் கூட்டங்களுக்கோ, சந்திப்புக்களுக்கோ, நாமும் போய் எமது இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டு மையநீரோட்டத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். ஒரு கட்டணமும் கட்டாமல் பயன்படுத்துவதற்கு நூலகங்கள் நிறைய இருக்கின்றன. இலக்கிய ஆய்வுகளுக்கு அரச ஆதரவு கொடுக்கிறது. அவற்றின் முழுப்பயனையும் நாங்கள் பெறவில்லை. அடுத்த தலைமுறையாவது இதை நிவர்த்தி செய்யட்டும்' என்று கூறியதை கனடாவில் என்றில்லாது அனைத்து புலம்பெயர் நாடுகளுள்ள இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் கவனத்தில் கொள்ளலாம். (Yann Martel பற்றி வாசித்தளவில், அவர் தனது Life of Pi ஜ எழுதும்வரை பணத்திற்கு கஷ்டப்பட்டவர். ஒரு நாவல் எழுதுவதற்காய் மும்பாய் போய், திருப்தி வராமல் கொஞ்சம் எழுதிய நாவலொன்றைக் கிழித்தெறிந்துவிட்டு, இருந்த சொற்பபணத்தில் பாண்டிச்சேரிக்கு சுற்றுலாப்போனபோது ஒரு பட்டேலின் கதையைக் கேட்டபின் தான், பிரபலமான Life of Piஜ எழுதியிருந்தார். புக்கர் பரிசு இந்த நாவலிற்காய் அவருக்குக் கிடைத்திருந்தது). சிறுகதைச் சிறப்பிதழ் என்று காலத்தின் முன்னட்டையில் குறிப்பிட்டிருந்தாலும், நான் வாசித்த தெளிவத்தை யோசப், மு.பொன்னப்பலம், க.கலாமோகன், மணிவேலுப்பிள்ளை ஆகியோரின் கதைகள் மிகவும் மோசமானவை. என்.கே. மகாலிங்கம் (சினுவா ஆச்சியின் சிதைவுகளை, இவர் மொழிபெயர்த்து காலச்சுவடும் காலமும் இணைந்து வெளியிட்டதென்று நினைக்கின்றேன்), சார்த்தரின் சுவர் என்ற கதையை மொழிபெயர்த்துள்ளார். சற்று நீளமான கதை. செல்வா கனகநாயகம் எழுதியுள்ள இலக்கியத்திறனாய்வும் இலக்கிய வரலாறும் மிகுந்த dry தன்மையுள்ள கட்டுரை. பல்லைக் கடித்துக்கொண்டு முழுதாய் வாசித்துமுடித்தபோதும், என்னால் எதுவுமே அதிலிருந்து கிரகிக்கமுடியவில்லை. தேவகாந்தன், ஷோபாசக்தியின் 'ம்' குறித்து ஒரு விமர்சனத்தை எழுதியுள்ளார். ஷோபாசக்தியின், 'ம்' மற்றும் 'கொரில்லா' குறித்து சற்று விரிவாக இன்னொரு பதிவு எழுத விருப்பமுள்ளது (முக்கியமாய் நண்பர்கள் பலருடன் விவாதித்ததை தொகுத்து எழுதும் எண்ணம் ஒன்று எனக்கு உள்ளது). மற்றபடி குறிப்பிட்டுச்சொல்லும்படியாக 23வது காலம் இதழில் இல்லை. ஒரு புலம்பெயர்ந்த சூழலில் கால ஒழுங்கு இல்லாவிட்டாலும் 23வது இதழை காலம் ஆசிரியர் செல்வம் வெளியிடுவதைப் பாராட்டத்தான் வேண்டும்.
அறிதுயில்- இதழ் 2
கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ர·பேலை ஆசிரியர்களாகக் கொண்டு அறிதுயில் என்றொரு சஞ்சிகை வெளிவருகின்றது. இது இரண்டாவது இதழ். முதலாவது இதழை பிரமீள் சிறப்பிதழாக வெங்கட்சாமிநாதன் கனடா வந்தசமயத்தில் வெளியிட்டதாய் கற்சுறா கூறுகின்றார். தெரிதாவுடன் ஓர் உரையாடல் என்ற ர·பேலின் ஆங்கிலம் வழி தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கின்றது. கருமையம் நடத்திய நாடகஙள் குறித்து வரனும், கெளசல்யாவும் இரண்டு விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள். பத்மநாப ஜயரிற்கு இயல்விருது வழங்குவது குறித்த தமது அதிருப்தியை கற்சுறாவும், எம்.ஆர்.ஸ்ராலினும் கட்டுரைகளில் முன்வைக்கின்றனர். பத்மநாப ஜயரிற்கு கொடுக்கப்படும் விருதில் எனக்கு எதிர்நிலை இல்லையெனினும், கற்சுறா வினாவுவதுபோல இயல்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் முறைகள் பற்றியும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் வெளிப்படையாக அறிவிக்கப்படவேண்டும் என்றுதான் நானும் நினைக்கின்றேன். '' இந்தத் தெரிவுக்குழு தமது ஒவ்வொருத்தரின் பெயரில் விருது கொடுத்தால் நாம் ஒருபோதும் அதுபற்றி அக்கறைப்படப்போவதில்லை.... அதை விடுத்து ரொரண்டோ பல்கலைக்கழகம், கனடாத் தமிழ் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், உலகத்தமிழ் இலக்கியம் என்று மொத்தக் குத்தகையில் விருதுக்கு பெயரிட்டு விட்டு இந்த விருதைக் கொடுக்கும்போதுதான் சிக்கல் வருகின்றது' என்று கற்சுறா கூறுவதில் நியாயம் உள்ளதுபோலத்தான் எனக்கும்படுகின்றது. அறிதுயில் தொடர்ந்து வெளிவரவேண்டும். ஆனால் ஒருவரே பல்வேறு பெயர்களில் எழுதி சஞ்சிகையின் பக்கங்களை நிரப்பாமல், ஏனையவருக்கும் பக்கங்களை பகிர்ந்துகொண்டால் நல்லதுபோலத்தோன்றியது. அறிதுயிலை நீங்கள் இணையத்திலும் வாசிக்கலாம்.
தேவகாந்தனின் 'கதாகாலம்'
தேவகாந்தனின் கதாகாலம் குறித்து எழுதவேண்டும் என்று நினைத்திருந்தபொழுதில் வெங்கட் விரிவான ஒரு பதிவைத் தனது தளத்தில் எழுதியிருப்பதால் சில குறிப்புக்களை மட்டும் கூறிவிட்டு ஓடிவிடுகின்றேன். வரன், மகாபாரதம் பிராமணீயத்திலிருந்து வந்தது என்று கூறினாலும், சிவதாசன் அதை மறுதலித்திருந்தார். அதனால்தான் அவர் யுகாந்தாவின் மகாபாரதத்தை முன்னிலைப்படுத்தினார் என்று நினைக்கின்றேன். எனினும் இதுகுறித்த விரிவான விவாதம் நடைபெறாதது என்னளவில் ஏமாற்றமே. தேவகாந்தனின் கதாவிலாசம் மறுவாசிப்பில்லை என்று வரனும், கற்சுறாவும் மறுதலித்திருந்தனர் (re-reading மட்டுமே, retold அல்ல). நான் இந்த நூலை இன்னும் வாசிக்காதபடியால் விரிவாக எதுவும் கூறமுடியாது எனினும், விமர்சித்தவர்களின் குரல்களைக் கேட்டதை வைத்துப்பார்க்கும்போது மகாபாரதத்தில் விடுபட்ட பகுதிகளைத்தான் தேவகாந்தன் சொல்ல முயன்றிருக்கின்றார் போலத்தோன்றியது. முக்கியமாய் பெண்ணிய வாசிப்பில், இது எந்தவிதத்திலும் அசல் பிரதியைக் கேள்விக்குள்ளாக்கவில்லை என்று நிர்மலா கூறியதற்கு, எல்லாவற்றையும் உடைக்கவேண்டும் என்றால் மகாபாரதத்தை மறுவாசிப்பது சாத்தியமில்லை, ஒரு புதுப்பிரதியைத்தான் எழுதவேண்டும் என்று தேவகாந்தன் கூறியிருந்தார்.
யுத்த எதிர்ப்பு அதில் சாராம்சமாய் இருக்கின்றது என்பதற்தாய், கொழுத்த முலைகளும், கங்கை போன்ற புனிதமும் கொண்ட பெண்களைச் சித்தரிக்கும் ஆசிரியனை கேள்விப்படுத்தாமல் இருக்கமுடியாது. ஒரு பெண்ணின் மனோநிலையில், பிற்போக்குத்தனமான ஒரு நாவலாகத்தான் அடையாளங்கொள்வேன் என்று நிர்மலா கூறியசமயத்தில், பின்நவீனத்துவவாதியாக தனது பேச்சின் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்திய வரன், படுப்பது போன்ற சில வார்த்தைகளை ஒரு சாதாரண ஆணாதிக்கவாதி நிலையில் நின்று கூறியது வியப்தைத்தான் ஏற்படுத்தியது. அத்தோடு, போரிற்கு ஆண் சென்றால், ஊரில் இருக்கும் பிற ஆண்களுடன் உறவுகொள்வதற்கான சுதந்திரம் பெண்களுக்கு முற்காலத்தில் இருந்ததெனவும் சுட்டிக்காட்டியதுடன், கள்ளஞ்செய்து பிற ஆண்களுடன் பெண் படுப்பதைவிட, இப்படி வெளிப்படையாக உறவுகள் வைக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு முற்காலத்தில் இருந்தது என்று சுட்டிக்காட்டினார். பல ஆண்களுடன் ஒரு பெண உறவு கொள்வதால் பெண்ணின் பிற பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது அப்படியிருக்கும் சுதந்திரந்தான் பெண்கள் வேண்டி நிற்கும் உண்மையான சுதந்திரமா? வரன் இப்படி அபத்தமாய் கூறினார் என்றால், அருகிலிருந்த மகாலிங்கம், ஓம் எனக்குத் தெரிய அநுராதபுரத்திலுள்ள ஒரு கிராமத்திலும் இப்படியான வழக்கம் இன்னும் இருக்கின்றது என்று ஒத்துப்பாடினார். பெண்களுக்கு பல ஆண்களுடன் உறவு இருக்கின்ற சமூகம் exist ஆகின்றதா அல்லது இல்லையா என்பதல்ல கேள்வி. இன்றைய நாம் வாழும் சமூகத்தில் பெண்கள் குறித்து நீங்கள் என்ன கருத்தை தேவகாந்தனின் கதாவிலாசத்தை முன்வைத்து கூறுகின்றீர்கள் என்பதுதான் என்னைப்பொறுத்தவரை முக்கியம். யுத்த எதிர்ப்பு இருந்தாலும், பிற்போக்குத்தனமான பெண்ணடிமைப்பிரதியாய், கதாவிலாசம் இருப்பின் (வாசிக்கும்போது தெரிந்தால்) நிச்சயம் நான் இந்தப்பிரதியை நிராகரிக்கவே செய்வேன். வரன், அசல் மகாபாரதத்தில், சாபக்கேடு அல்லது பாவம் என்ற வார்த்தைகள் அடிக்கடி வருகின்றமாதிரி, தேவகாந்தனின் நாவலில் இரண்டு பக்கங்களுக்கொருமுறை காமம் பற்றிய விவரணைகள் இருப்பதாய் கூறியது முக்கிய விடயம். அதுவும் சிலசமயங்களில் ஒரே வார்த்தைகள் திரும்பத்திரும்ப வருவது வாசிக்கையில் அலுப்பைத்தருவதாகவும், இப்படித் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகளை நீக்கும் பணி பதிப்பாளருக்குரியது என்று குறிப்பிட்டது முக்கியமான குறிப்பு . ஆனால் பிரதியை வாசித்து விமர்சித்த அனைவரும் தேவகாந்தனின் எழுத்து நடை மிகச்சிறப்பாகவும் கவிதை நடையிற்கருகிலும் இருக்கின்றது என்று பாராட்டியிருந்தனர்.
இரண்டாம் அமர்வில், ஏன் இப்படியான புத்தகத்தை வெளியிட வேண்டிய அவசியம் காலத்திற்கு வந்தது என்று கேட்கப்பட்டபோது, காலம் செல்வம் இது ஒரு யுத்த எதிர்ப்பிற்கான பிரதி, இன்னவும் துரியோதனன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்று கூறினார். முதலாம் அமர்வு முடிந்து விடப்பட்ட இடைவெளியில் வழங்கப்பட்ட வடையை தவறுதலாக கீழே விழுத்தி, சரி விற்பனைக்காய் வைக்கப்பட்ட புத்தகஙகளைப் பார்த்துவிட்டு இன்னொரு வடையை ஆறுதலாக எடுக்கலாம் என்று நினைத்து, பிறகு போய்பார்த்தால், வடைப்பிரியர்கள் வடைகளை அடையாளமில்லாது முடித்துவிட்டிருந்தனர். வடை சாப்பிடும் அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டேனென்று கவலையுடன் யோசனையிலிருந்த எனக்கு, காலம் செல்வம், துரியோதனன் இன்னும் இருக்கின்றான் என்று கூறியது ஒரு அசரீரீயாகக் கேட்க, 'அப்படியெனில் யார் அந்தத் துரியோதனன்'? என்று நான் செல்வத்தைப் பார்த்துக்கேட்க, செல்வமோ, 'இப்போது கூறமுடியாது' என்று என்னைத் திரும்பி பார்த்துக் கூறினார். பிறகு மகாலிங்கமும், தேவகாந்தனும் நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார், ஆனால் அவர் நெருங்கிப்பழகிய ஜெயமோகன், சுஜாதா போன்றவர்கள் கூட தேவகாந்தனின் படைப்புக்கள் குறித்து எதுவும் கூறாது மெளனஞ்சாதிப்பதாய் கூறினார். ஜந்து பாகங்களாய் தேவகாந்தன் எழுதிய பெரிய சைஸ் புத்தகங்களைத் தானும் வாசிக்கவில்லை என்றே மகாலிங்கமும் கூறினார். பெரிய சைஸ் புத்தகங்களை தனது இளமைப்பருவத்திற்கு பிறகு வாசிப்பது என்றால் அலர்ஜி என்று கூறியபோது, அப்படியெனில் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும், பின் தொடரும் நிழலின் குரலும் நீங்கள் வாசிக்கவில்லையா என்று நான் கேட்க நினைத்தேன். அந்த சமயம்பார்த்து காலம் செல்வம் கேக்குகளை பரிமாறத் தொடங்கியிருந்தார் (பார்க்க மேலேயுள்ள படம்). கேள்வி கேட்பதைவிட ஆக்ககுறைந்தது வடையைப்போலல்லாது கேக்கையாவது சுவைபார்த்துவிடு என்று எனது ஆறாவது அறிவு எச்சரிக்கை செய்ய வழமைபோல உணவுக்கு பின் எனது கண்கள் அலைபாயத்தொடங்கிவிட்டன (கேக் மிகவும் ருசியாகவும் இருந்தது).அறையினுள் விவாதமாய் சிலவற்றை காரசாரமாய் உரையாடினாலும், வெளியில் நண்பர்களாய் முகங்களைச் சுழிக்காது, இயல்பாய் அனைவரும் பேசியது மனதிற்கு மிகவும் நிறைவைத்தந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும்.
.......
தேவகாந்தனின் கையெழுத்திடும் புகைப்படம் மட்டும்: இங்கிருந்து
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
தேவகாந்தன் நூல்வெளியீடு பற்றிய உங்கள் விபரமான பதிவுக்கு நன்றி.
4/21/2005 12:18:00 AMவலைப்பதிவின் ஆகக்கூடிய நன்மைகளில் ஒன்று இப்படியான விழாக்கள், நிகழ்வுகள் பற்றிய, ஊடகங்கள் புறக்கணிக்கும் செய்திகளைத் தருவதுதான். நன்றி!
4/21/2005 12:43:00 AMபதிவுக்கும் பார்வைக்கும் நன்றி டி.சே.சிறுகதைகளைப் படித்துவிட்டு எழுதுகிறேன்
4/21/2005 01:08:00 AMடி.ஜே.தமிழன், நல்ல பதிவு.
4/21/2005 01:25:00 AM"பொங்கல் - ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பு மலர் 2005" இந்தியாவில் கிடைக்கிறதா?
பிரகாஷ் கேட்ட கேள்வி "ditto" தங்கமணி சொன்னதற்கும் இன்னொரு "ditto". முதல்ல எங்க அமைச்சர் கொடுத்த குறுந்தகட்டினை பதிவிறக்கய்யா ;-) அதிலிருக்கும் தமிழ் ஒசிஆர் கொண்டு புத்தகங்களை ஸ்கேன் செய்து பதிவு செய்யுங்களய்யா. புத்தகம் படிச்சா மாதிரியும் ஆச்சு. அரசு கொடுத்த இலவச மென்பொருளை உபயோகிச்சா மாதிரியும் ஆச்சு. என்ன நான் சொல்றது.
4/21/2005 01:45:00 AMபிரகாஷ், தமிழர் தகவலை இந்தியாவில் எங்கே பெறமுடியும் என்ற விபரம் சரியாகத் தெரியவில்லை. பத்மநாப ஜயரைத் தொடர்புகொண்டால், விபரம் தெரியக்கூடும். விரைவில் நண்பர்களைத் தொடர்புகொண்டு அவரது மின்னஞ்சல் முகவரியை இங்கே உள்ளிடுகின்றேன்.
4/21/2005 09:10:00 AMபதிந்தது:கிஸோக்கண்ணன்
4/21/2005 12:53:00 PM...பொங்கல் - ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பு மலர் 2005...
டிசே, இதன் விலை என்னவென்றுங் கொஞ்சம் சொல்லுங்களேன்.
21.4.2005
டி.சே - நீங்கள் இருந்தீர்களா? எனக்கு முகம் தெரியாது இல்லாவிட்டால் கதைக்க முற்பட்டிருப்பேன். அங்கே தனித்து நின்ற என்னை அடையாளம் கண்டிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
4/21/2005 01:35:00 PMஒரு நாள் உங்கள் புன்னகைக்கும் ஹலோவுக்கும் அருகதை கொண்டவனாக முயற்சிக்கிறேன்.
என்பது கி.மீட்டர் தொலைவிலிருக்கும் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்ததால் இறுதிவரை இருக்க முடியவில்லை. உரைகளுக்குப் பின்னரான விவாதங்கள் குறித்த தகவலுக்கு நன்றிகள்.
//டி.சே - நீங்கள் இருந்தீர்களா? எனக்கு முகம் தெரியாது இல்லாவிட்டால் கதைக்க முற்பட்டிருப்பேன். அங்கே தனித்து நின்ற என்னை அடையாளம் கண்டிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
4/21/2005 10:58:00 PMஒரு நாள் உங்கள் புன்னகைக்கும் ஹலோவுக்கும் அருகதை கொண்டவனாக முயற்சிக்கிறேன். //
அய்யயோ! வெங்கட் என்ன இது? நீங்கள் மகாலிங்கத்திற்கு அருகில் முதலில் அமர்ந்திருந்ததைக் கண்டுவிட்டு, புத்தக வெளியீடு முடிந்தபின் உங்களுடன் அறிமுகஞ்செய்யலாம் என்றுதான் நினைத்திருந்தேன். நீங்கள் சற்று முன்னதாக புறப்பட்டுவிட்டதால் அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டேன். உங்களை மாதிரித்தான், பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் கிரிதரனையும் அவதானித்துவிட்டு அவருடன் விரிவாகச் சிலவிடயங்கள் குறித்துப் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதுகூடச் சாத்தியமில்லாமற் போய்விட்டது. பரவாயில்லை. இன்னொரு முறை நேரில் காணும் சந்தர்ப்பம் நமக்கு வாய்க்காமலா போய்விடும்? சென்னையில் என்றால் நரேனின் formulaeவை பிரயோகிக்கலாம். ரொரண்டோவில் இருப்பதால், சரி Tim Hortonsல் போய் French Vanilaவை சுவைத்தபடி ஆறுதலாக அடுத்தமுறை கதைப்போம் :-).
கிஸோ, இந்தப் புத்தகத்தில் விலை குறிப்பிடப்படவில்லை. நண்பர்களின் மூலமாக இலவசமாகவே எனக்குக் கிடைத்தது. சிலவேளைகளில் காலம் செல்வம் அல்லது முருகன் புத்தகசாலையில் விற்பனைக்காய் இருக்கக்கூடும். ரொரண்டோ வரும்போது எனக்கு நீங்கள் நினைவுபடுத்துங்கள். நான், உங்களைச் சந்திக்கும்போது இந்த இதழைக் கொண்டுவந்து தருகின்றேன். உங்கள் மெயில் எனக்கு கிடைக்கவில்லை :-(. இயலுமாயின் dj_tamilan25@yahoo.caற்கு ஒரு மெயிலைப் பறக்கவிடமுடியுமா, உங்கள் தொலைபேசி இலக்கத்துடன். நன்றி.
4/21/2005 11:03:00 PMபின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. (அதுசரி நன்றியா அல்லது நன்றிகளா சரியான வார்த்தைப்பிரயோகம். அப்படியே நாள்களா அல்லது நாட்களா என்பதிலும் எனக்கு நீண்டநாள்களாய் சந்தேகம் உண்டு. நாட்கள் என்றால் {நாட்பட்டுப் போன கள்} என்றுதான் பிரிக்கும்போது அர்த்தம் வரும் என்று ஒரு வாத்தி ஈழத்தில் சொன்னதாய் ஞாபகம்).
4/21/2005 11:11:00 PMஈழநாதன், சிறுகதைகளைப் பற்றி எழுதுங்கள். எனக்கும் தமிழர் தகவலிலுள்ள கதைகளை, என் பார்வையில் விரித்து எழுதும் எண்ணம் இருக்கிறது. நேரங்கிடைக்கும்போது அதைச் செய்கின்றேன். நண்பர்கள் யாருக்காவது பத்மநாப ஜயரின் தொடர்பு (மின்னஞ்சல் அல்லது தொலைபேசி) இருந்தால் அவரின் அனுமதியுடன் இங்கே இடமுடியுமா? பிரகாஷ், நரேன் போன்றவர்கள் இந்த இதழ் தமிழ்நாட்டில், பெறும் வழிபற்றி மேலே கேட்டிருக்கின்றார்கள்.
நன்றி, வாழ்த்து இவைக்கெல்லாம் பன்மை போடுவதே பிழை, அதுக்குள்ளே நன்றியா நன்றிகளாவா...
4/22/2005 12:27:00 AMநற நற கள் காள் வால் வள் வள் ;-)
// நன்றி, வாழ்த்து இவைக்கெல்லாம் பன்மை போடுவதே பிழை, அதுக்குள்ளே நன்றியா நன்றிகளாவா...
4/22/2005 04:30:00 PMநற நற கள் காள் வால் வள் வள் ;-)//
அப்படியா? நன்றி. அப்படின்னா
Thanks என்று அமெரிக்காவிலே சொல்வது?
லொள்? :p
அது சரி டி.சே.!
4/22/2005 08:29:00 PMஉம்மட பக்கத்துக்கு அமெரிக்காவிலயிருந்து தான் அதிகமான பார்வைகள் வந்திருக்கு. அடுத்தது கனடா. எக்கச்சக்க வித்தியாசம்.
நண்பர்களுக்கு,
4/23/2005 07:27:00 PMதமிழர் தகவல் ஈழத்துச்சிறப்பிதழ் தமிழகத்திற்கு விற்பனைக்காய் தற்சமயம் அனுப்பப்படவில்லை என்றே அறிகின்றேன். இந்த இதழ் குறித்த மேலதிக விபரங்களுக்கு, நீங்கள் பத்மநாப ஜயரை இந்த மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்: ripiyer@yahoo.com
பெயரிலி,
4/23/2005 07:35:00 PMநீங்கள் நாள்களா அல்லது நாட்களா என்பதில் எது சரியென்று எதுவும் கூறவில்லையே :-(. இல்லாவிட்டால் 'கள்' வருவதால் ஏற்பட்ட பீதியின் காரணத்தினால் அமைதியாகி விட்டீர்களோ :-) ?
....
//உம்மட பக்கத்துக்கு அமெரிக்காவிலயிருந்து தான் அதிகமான பார்வைகள் வந்திருக்கு. அடுத்தது கனடா. எக்கச்சக்க வித்தியாசம். //
வன்னியன், அது ஒன்றும் இரகசியமில்லை. கார்த்திக் அமெரிக்காலிருந்தும், நான் கனடாவிலிருந்தும், பொழுதுபோகாத சமயங்களில் குத்திய கள்ளவோட்டுக்களால் தான் இப்படி ஏனைய நாடுகளைவிடப் பெரிய வித்தியாசம் வந்தது. அவுஸ்திரேலியாவுக்கும் ஒருவரைத் தேடுகின்றேன். நீங்கள் தயாரா? :-)?
Post a Comment