கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Get Rich or Die Tryin' (திரைப்படம்)

Friday, November 18, 2005

50 CENT எனப்படும் ஜாக்சனின் வாழ்வை, நிஜமும் புனைவும் கலந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள் (75% உண்மையான சம்பவங்கள் என்று 50 CENT அண்மையில் வெளிவந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்). திரைப்படம், போதை மருந்து விற்று வரும் பணத்தைச் சேமிக்கும் ஒரு இடத்தை ஜக்சனும் அவரது நண்பர்களும் கொள்ளையபடிப்பதுடனும், கொள்ளை முடிந்து வீடு திரும்புகின்றபோது ஜாக்சன் முகம் மறைக்கப்பட்ட ஒருவரால் ஏழெட்டுத் தடவைக்கு மேலாகச் சுடப்பபடுவதுடன் ஆரம்பிக்கின்றது. உடலின் பல பாகங்களில் காயம்பட்டு இரத்தம் பெருகி ஜாக்சன் மூர்ச்சையாகிக் கொண்டிருக்கும்போது அவரது குழந்தைபபிராயம் விரியத்தொடங்குகிறது. ஏழமையான குடும்பத்தில், தகப்பன் யாரென்று தெரியாது single mom டன் சிறுவன் ஜாக்சன் வாழ்கின்றார். போதைப் பொருட்களை விற்றுப் பணம் ஈட்டும் தாயால், சிறுவயதிலேயே வயது வந்தவர்கள் வாழும் உலகை ஒருவகை திணித்தலாய் ஜாக்சன் அறியத் தொடங்குகின்றார். தாயும் ஒருபொழுது மர்மமான முறையில் கொல்லபபட, அவரது தாத்தா, பாட்டியினரால் வளர்க்கப்படுகின்றார்.




ஒரே வீட்டில் ஏழெட்டுப் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு அந்தத் தாத்தா, பாட்டியினருக்கு இருப்பதால் ஜாக்சன் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்பதை அந்த முதியவர்களால் அறியமுடியாதிருக்கின்றது. ஜாக்சன் 'hustler life'ஐ தெருக்களில் வாழத் தொடங்குகின்றார். போதை மருந்து தெருவில் விற்றுக்கொண்டிருக்கும்போது, எதற்காய் போதை மருந்து விற்கின்றாய் என்று ஒருவரால் வினாவப்படுகின்றபோது, snickers வாங்குவதற்காய் என்கிறார். அதற்குப் பிறகு என்ன வாங்கப்போகின்றாய் என்று கேட்கும்போது, துப்பாக்கி வாங்கப்போகின்றேன் என்கின்றார்.

இவரது hustler வாழ்வு வீட்டுக்குத் தெரியவர, பிணக்குப்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்கின்றார். இனி போதை மருந்து விற்பதை விட்டு, பாட்டு பாடி வாழ்க்கையை நடத்துவோம் என்று தீர்மானித்ததை மூன்று மணிதியாலங்களுக்குள் கைவிடவும் செய்கின்றார் (I wanted to start my new life with rap music, but gave up within three hours). போதை மருந்து தெருக்களில் விற்பதுவும் அவ்வளவு இலகுவான காரியமல்ல. பொலிஸ்ஸில் சிக்கும் அபாயம் ஒருபுறம் இருந்தால், இன்னொரு புறம் இவர்களுக்கும் (Blacks) மெக்க்சிக்கோ குழுக்குமிடையில் யார் போதைமருந்து விற்கும் ஏகபோக இடத்தைப் பெறுவது என்ற போட்டியில் இரண்டு பக்கமும் மாறி மாறி மண்டையில் போடுகின்றார்கள்.

ஒருபொழுது போதைப்பொருட்களுடன் பொலிஸிடம் கையும் களவுமாய் பிடிபட்டு, ஜாக்சன் கம்பி எண்ணத்தொடங்குகின்றார். இதற்கிடையில் அவரது உறவுக்காரப்பெண்ணில் காதல் ஜாக்சனுக்கு வருகிறது. இவர் ஜெயிலுக்குப் போகையில் அந்தப் பெண் கர்ப்பமாயிருக்கின்றார். ஜெயிலில் இவருக்கு எதிரான குழுவைச் சேர்ந்த மெக்சிக்கோ இளைஞர்கள் இவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயல்கின்ற்னர். அந்தச் சம்பவத்தில் இவருக்கு ஆதரவாய்ச் சண்டைபிடித்தவர், பிறகு இவருக்கு நெருங்கிய நண்பராகவும் மாறுகின்றார். ஜெயிலுக்குள் இருக்கும்போது இவர் பாடல்கள் எழுதி தானே பாடித் தனது இசைத் திறமையை வளர்த்துக்கொள்ளவும் செய்கின்றார். ஜெயில் வாசம் முடிந்து வெளியே வரும்போது hustler lifeஜ விட்டுவிட்டு இசைத் துறையில் ஈடுபடப்போவதாய், இவருக்காய் ஜெயிலுக்கு வெளியே காத்திருக்கும் போதை மருந்து விற்கும் தனது குழுத்தலைவருக்குச் சொல்கின்றார்.

ஜாக்சன் நினைத்ததுபோல், இசைத்துறைக்குள் நுழைவது அவ்வளவு இலகுவாயிருக்கவில்லை. இதற்கிடையில் இவர் இருந்த குழுத்தலைவரோடு உரசல்கள் ஏற்பட, இவர்களின் நண்பரொருவரைக் கொண்டே ஜாக்சனை மண்டையில் போட இவரிருந்த பழைய குழுவினர் தீர்மானிக்கின்றனர். ஜாக்சனை மண்டையில் போட முயற்சிப்பதே படத்தின் முதற்காட்சியாய் வருகின்றது. ஏழெட்டுத் தடவை சுடப்பட்டும் ஜாக்சன் தான் உயிர் தப்பியது கடவுளின் கிருபை என்று நினைக்கின்றார். இவர் வைத்தியசாலையை விட்டு ஒரு ஒளிவான இடத்தில் இவரது துணையோடும் குழந்தையோடும் வாழத்தொடங்குகின்றார். உடலை அசைக்கவே முடியாது, படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஜாக்சனையும், அப்போதுதான் பிறந்திருந்த குழந்தையையும் அநதத் துணை கவனமாகப் பராமரித்தாலும், ஒருகட்டத்தில் fed-up ஆகி, ஜாக்சன் திரும்ப பழைய நிலைக்கு வரவே முடியாது என்று நம்பிக்கை இழந்து, ஜாக்சனைப் பிரிந்து போக எண்ணுகின்றார். எனினும் ஜாக்சன் மீது வைத்திருக்கும் அளவிறந்த காதலால் பிரிந்துபோகமுடியாமல் பிறகு த்ங்கிவிடச்செய்கிறார். இதற்கிடையில் தன்து தாயைக் கொன்றவர்தான் தன்னையும் கொல்ல முயற்சிக்கின்றார் என்ற உண்மை ஜாக்சனுக்கு தெரியவருகின்றது.



உடம்பு மெல்ல மெல்லத் தேறி இயல்பு நிலைக்கு வந்தாலும், ஜாக்சனால் முன்புபோல் பாடமுடியாதிருக்கின்றது, பற்கள் நாக்கு எல்லாம் துப்பாக்கிக்குண்டால் சேதமடைந்திருக்கின்றன. எனினும் நண்பர்களினதும், துணையினதும் நம்பிக்கை வார்த்தைகளால் இருக்கின்ற குரலை வைத்துப் பாட முன்வருகின்றார். தனது குழுவுக்கு ஒரு பெயரும் வைத்துப் தனிப்பாடலகளைப் பாடி வெகுசனங்களின் ஆதரவைப் பெறுகின்றார். இறுதியில் இவர் வாழ்ந்த வளர்ந்த நகரத்துக்குச் சென்று பாட முயற்சிக்க, இவர் முன்பிருந்த குழுத் தலைவரால், அங்கே வந்து பாடினால் சுட்டுக் கொல்லப்படுவார் என்று எச்சரிக்கப்படுகின்றார். ஜாக்சன் தனது ஊருக்குச் சென்று பாடினாரா, அந்தக் குழுவின் தலைவர் என்ன செய்தார் போன்றவற்றிற்கு விடைகாண்பதுடன் படம் நிறைவுபெறுகின்றது.

(2)
இந்தப்படம் ஜாக்சன் 50 CENT ஆவதற்கு முன்னரான காலத்தைப் பதிவு செய்கின்றது. இவரது தனிப்பாடல்களால் ஈர்க்கப்பட்டு Eminemம், Dr.Dreயும் தயாரித்து பெருமளவில் விற்றுத்தீர்ந்த ஆல்பம் (Get Rich or Die Tryin') பற்றியோ அதற்குப் பிறகு 50 CENTன் துரித வளர்ச்சி பற்றியோ எந்தக் குறிப்பையும் படம், பார்ப்பவருக்கு விட்டுச் செல்லவில்லை. அதிலிருந்து தான் 50 CENTன் இன்னொரு கால கட்ட வாழ்க்கை தொடங்குகின்றது. படம் முழுக்க வன்முறைக் காட்சிகள் இருந்தாலும், பெண்கள் மீதான் வன்முறையோ, தேவையில்லாது பெண்களைக்கீழ்த்தரப்படுத்தும் காட்சிகளோ இல்லாததைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். படத்தில் 50 CENT, தன் துணை மீது மிகுந்த அன்பும், கரிசனையும் கொண்டவராக காண்பிக்கப்படுகின்றார். பெண்களுக்கு குரல் கொடுப்பதில் முன்னணியில் இருக்கும் சிலர், நிஜத்தில பெணகள் மீது வன்முறையாளராக இருக்கும் சந்தர்ப்பங்களைப் போல, பாடல்களில் பெண்களைத் திட்டவும், பாலியல் நுகர்வுப்பொருளாய்க் காட்டவும் செய்யும் 50 CENT நிஜவாழ்வில் தனது துணைக்கும், சுற்றியிருக்கும் பெண்களுக்கும் வேறொரு விம்பத்தைக் கொடுக்கக்கூடியவராகவும் இருக்கவும்கூடும்.



படத்தை முடியும்வரை, மிகுந்த சுவாரசியமாக எடுத்துள்ளார் இயக்குநர் (இவர் ஏற்கனவே எமினம் நடித்த 8 Miles ஜயும் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது). இந்தப்படம் குறித்து பல்வேறு விதமான விமர்சனஙகள் எழுந்துள்ளன. இந்தப் படத்தைப் பார்க்கும் பதின்ம வயதினர் பணத்தை இல்குவாய் சம்பாதிக்கலாம் என்று 50 CENTன் hustler lifeஐ உதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய அபாயம் உண்டென்று கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. மேலும் இங்கு(ரொறன்டோவில்) அண்மைக்காலமாய் துப்பாக்கி வன்முறையால் இறப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கையில் இவாறான படங்களைத் திரையிடுதல் சிறப்பான விடயமல்லவென சில பெண்கள் (அமைப்புக்களைச் சேர்ந்த) கோரிகை விடுத்திருந்தனர். ஒரு adultயாய் இந்தப் படம் என் நாளாந்த வாழ்வில் எந்த தாக்கத்தையும் தராது என்பது தெளிவாகத் தெரிந்தாலும், இதைப் பார்க்கும் பதின்ம வயதினரிடம் எவ்வாறான செய்தியை இத்திரைப்படம் எடுத்துக் கொண்டு செல்லும் என்று அவர்களின் நிலையில் இருநது பார்த்தால் அன்றி எதுவும் புரியப்போவதில்லை. மேலும் பிரபலங்களின், ஆளுமைகளின் ஆரம்பகால வாழ்வை அறிய விரும்புகின்றவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க அதிகம் பிரியப்படக்கூடும்.

Director: Jim Sheridan
Screenplay: Terence Winter

photos courtesy: http://movies.about.com

ஒரு நாவல்: Memories of My Melancholy Whores

Tuesday, November 15, 2005

Memories of My Melancholy Whores by Gabriel Garcia Marquez



தொண்ணூறு வயது முதிய ஆணையும், பதின்நான்கு வயது நிரம்பிய பதின்மப் பெண்ணையும் முக்கியப் பாத்திரங்களாய் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. பிரதி ஞாயிறு தோறும், உள்ளூர் பத்திரிக்கையில் பத்திகள எழுதுகின்ற, திருமணம் என்று எதுவும் இதுவரை செய்யாத ஆணுக்கு, தனது தொண்ணூறாவது பிறந்த தினத்தில், தன்னுடைய பிறந்ததின வெகுமதியாக கன்னி கழியாத ஒரு பெண்ணோடு பொழுதைக் கழிக்க விரும்புகின்றார் ('I wanted to give myself the gift of a night of wild love with an adolescent virgin'). இவர் திருமணஞ் செய்யாதவராக இருப்பினும், பெண்களோடு நிறையவும் சல்லாபித் திரிந்தவர். எனினும் காசு கொடுக்காமல் எந்தப் பெண்ணோடும் கட்டிலுக்கு போனதில்லை என்ற பெருமிதங்கொண்டவர் ('I have never gone to bed with woman I didn't pay'). தன்னை ஒரு அழகற்ற, கூச்சமுள்ள, காலத்தோடு ஒத்துப்போகாக ஆசாமி என்றும் சுயவிமரசனமும் செய்துகொள்கின்றார். இவர் அந்த ஊரிலுள்ள சிவப்பு விளக்குப் பகுதியிற்கு தனது இளமைக்காலத்தில் அடிக்கடி போய், 'வருடத்தில் அதிக நாள்கள் வந்த வாடிக்கையாளர்' என்ற 'பெருமைமிகு' பட்டத்தை இரண்டு முறை சூடியும் கொண்டவர்.

தனது தொண்ணூறாவது வயதுப் பரிசுக்காய், சிவப்பு விளக்கு பகுதியொன்றுக்குப் பொறுப்பான, இவரை நீண்டகாலமாய் அறிந்த ரோசாவுக்கு தொலைபேசி அழைத்து தனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறார். தன்னிடம் ஒரு பதின்நான்கு வயது கன்னி கழியாத பெண் இருக்கின்றார், ஆனால் அவரைத் தொழிலில் ஈடுபடுத்தினால், பொலிஸ் தன்னைச் சிறைக்குள் கொண்டுபோய் பூட்டிவிடும் என்று முதலில் மறுத்தாலும், தனது நீண்ட கால, அறிவுஜீவித் தோழருக்காய் ரோசா இறுதியில் சம்மதிக்கிறார்.

பதின்நான்கு வயது பெண்ணுக்கு, உடல் பாதிப்புக்குள்ளான தாயையும், தனக்குப் பின்னாலுள்ள சகோதரர்களையும் பராமரிக்கும் பொறுப்பு இருக்கிறது. பகல் முழுதும் தையல் செய்து தெறிகள் பொருத்தும் தொழில் செய்தாலும் அதனால் வரும் வருமானம் போதாததால், தன் உடலை விற்றுப் பணம் சம்பாதிக்க முன்வருகின்றார். நமது காமம் கிளர்ந்த ஆண், இரவு சிவப்பு விளக்குப் பகுதிக்கு வருகின்றபோது, அந்தப் பெண் கட்டிலில் நிர்வாணமாய் படுத்திருந்தபடி கிட்டத்தட்ட உறக்க நிலைக்குப் போயிருப்பார். இவரும், அவளை மெல்லத் தடவியபடி பாட்டுக்கள் பாடியும் ச்ற்று நேரத்தில் உறங்கியும் போய்விடுவார். நமது தொண்ணூறு வயது ஆணுக்கு ஏதோ சில விடயங்கள் அந்தப் பெண்ணில் பிடித்துவிட தொடர்ந்து அந்த விடுதிக்குப்போக ஆரம்பிக்கின்றார். மேலும் அவரது பார்வையில் அந்தப்பெண், a tender young fighting bullயாய் தெரிகின்றார் ஏதோ ஒருபொழுதில் 'உண்மையான' காதல் அந்தப் பெண்ணில் வந்து நமது நாயகர் காதல் நதியில் நீராடத் தொடங்கி மகிழவும் செய்கின்றார் (ஒரு தலைக் காதல்?). பிறகு நமது நாயகர் தனது இறந்துபோன தாய் விட்டுப்போயிருந்த பெறுமதி மிக்க நகைகளை எல்லாம் அந்தப் பெண்ணுக்குச் சூடி உள்ளம் சிலிர்த்து தன்னை வாழ்வின் கணங்களில் உயிர்ப்பிக்கின்றார்.

இப்படி ஒரு பதின்மவயதுப் பெண்ணில் காதலில் விழுந்து தன்னைப் புதியதாய்ப் பார்க்கத் தொடங்குகின்றவருக்கு ஒரு துரதிஸ்டவசமன சம்பவம் நிகழ்கிறது. இவர் போய்க்கொண்டிருந்த சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு கொலை நடக்கிறது. அதன் பின் அந்த சிவப்பு விளக்குப் பகுதி மூடப்பட, பல நாள்களாய் இவரது 'காதல்' துணை பற்றி எதுவும் அறிய முடியாது அவதிப்படுகின்றார். அந்தச்சமயத்தில் அவர் ஆசையாய் அந்தப் பெண்ணுக்கு வாங்கி கொடுத்த சைக்கிள் ஒரு கோர விபத்தில் சிக்கியதைக் காண்கின்றார். தனது பிரியத்துக்குரிய பெண் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற பரிதவிப்புடன் தனது வயதையும் மறந்து வைத்தியசாலைக்கு ஓடுகின்றார். இறுதியில், பெண்ணின் காலின் பாதங்களை வைத்து அது தனது அந்தப் பெண் இல்லை என்று அடையாளங் காண்கின்றார். தொடர்து அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடக்கிறது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், இவர் அந்தப் பெண்ணை இரவு நேரங்களில் மட்டும் ஆடைகளின்றித்தான் கண்டவர். பகற்பொழுதில் ஆடைகளுடன் எப்படி இருப்பாள் என்பது இவருக்கும் ஒருபோதும் தெரிந்ததில்லை. எனவே தெருவில் கடந்துபோகின்ற பெண்களில் தனது 'காதலி' யாரென்பதை அடையாளங் காண முடியாமல் அவதிப்பட்டு பொழுதுகளைக் கழிக்கின்றார்.

இறுதியில் எல்லாம் வழமைக்கு வர, veteran brothel ரோசாவும் தனது தொழிலை மீளவும் செய்ய ஊருக்கு திரும்புகின்றார். தனது நீண்டகால வாடிக்கையாளருக்காய் அந்தப் பதின்ம்வயதுப் பெண்ணை எங்கையோ 'கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து' பெண்ணை இரவுக்குத் தயார்படுத்தி நமது நாயகரைத் தனது விடுதிக்கு அழைக்கின்றார். நாயகர் கட்டிலில் அந்தப் பெண்ணை நிர்வாணமாய்ப் பார்க்கின்ற போது, பெண்ணின் உடலில் மாற்றங்கள் தெரிந்து அந்தப் பெண், முன்பு கன்னி கழியாத நிலையில் இருந்த பெண் அல்ல என நினைக்கின்றார். சிவப்பு விளக்குப் பகுதியில் நடந்த கொலையை மூடிமறைக்க, ரோசா இந்தப்பெண்ணின் கன்னிமையை யாரோ ஒரு பெரும் வாடிக்கையாளருக்கு விற்றுவிட்டார் என்று குற்றஞ்சாட்டி, 'whore' என்று திட்டி அந்த அறையிலுள்ள பொருட்களை உடைத்துவிட்டு கோபத்தோடு விடுதியை விட்டு வெளியேறுகின்றார். தனது உண்மையான காதலை கதைசொல்லி தொண்ணூறாவது வயதிலாவது கண்டுபிடித்தாரா என்பது கதையில் நீள்கிறது. கதை இன்னும் முடியவில்லை;மேலும் தொடர்கின்றது.

மார்க்வெஸ்ஸின் நாவல் என்று கூறப்பட்டாலும் இது 115 பக்கங்களை மட்டுமே கொண்டது. அழகான வசனங்களால எப்படிக் கதையைக் கோர்த்துக்கொண்டு போவது என்ற வித்தை மார்க்வெஸ்ஸிற்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கின்றது. நாவலில் முதலாவது வரியே, இப்படித்தான் தொடங்குகிறது, 'The year I turned ninety, I wanted to give myself the gift of a night of wild love with an adolescent of virgin'. தங்கு தடையில்லாத தொடர் வாசிப்பில் இதை இலகுவாய் ஒருவரால் வாசிக்க முடியும். மார்க்வெஸ் வாக்கியங்களில் செய்யும் நடனத்தின் மின்னல் கீற்றுக்கள் எப்போது வாசித்தாலும் புதுப்புது அர்த்தங்களைத் தரக்கூடியன. ஒரு இடத்தில் கதை சொல்லி தனக்கு அய்ம்பது வயதில் மாரடைப்பு வந்ததன் பிற்பாடு, தனக்கு ஒவ்வொரு வருடமும் கழியும்போது, வருடங்களில் அல்ல தசாப்தங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்று கூறிக்கொள்வது, ஒரு சின்ன உதாரணம்.

இந்த நாவலில் கதைசொல்லிக்கு பெயர் என்று ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. அதுபோல அந்தப்பதின்ம வயதுப்பெண்ணுடைய உண்மையான பெயரும் வாசிப்பவருக்குக் கூறப்பட்டிருக்காது. ஒரு நாட்டுப்புறப்பாடலில் வரும் பெண் பாத்திரமான Damania என்ற பெயரைச்சூட்டி கதைசொல்லி அழைக்கின்றாரே தவிர அந்தப் பெண்ணின் உண்மையான பெயரை அறிய விரும்பாதவராகவே இருக்கின்றார்.

நாவலில் பதின்மவயதுப் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றாள் என்று குறிப்பிடப்படுகின்றதே தவிர, அவளைப் போன்ற பெண்கள் இரைகளாக்கப்படுவதன் சமூக, அரசியல் பின்தளங்களை அடையாளங்காண மார்க்குவெஸ் மறுத்துவிடுகின்றார். நாவலில் வாசிப்பில் ஆழ்ந்து போகாமல் சற்று விலகி நின்று பார்த்தால், கதைசொல்லி sexual predatorsல் ஒருவராகத்தான் இருக்கின்றார் என்பதை இலகுவாய அடையாளம் கண்டுகொள்ளலாம். கதை சொல்லி தனது சார்பில் நின்று ஒரு கதையைக் கூறியிருக்கின்றார் என்றால், பதின்மவயதுப் பெண்ணுக்கோ, veteran brothel ரோசாவுக்கோ தங்கள் கதைகளைச் சொல்வதற்கான வெளிகள் இருக்கின்றது என்பதை வாசிக்கும் நாம் மறுத்துவிடமுடியாது. அவர்களின் வெளியில் நமது கதை சொல்லியின் பாத்திரம் இந்த நாவலில் கூறப்பட்டதைவிட வேறொரு தளத்துக்கு நம்மை வழிநடத்திச் செல்லக்கூடியதான வாசிப்பைத் தரவும் கூடும். மேலும் தொண்ணூறு வயதுப் பாத்திரம் என்பதுவும் ஒரு படிமமாக சிலவேளைகளில் எனக்குத் தோன்றுகின்றது. ஆண்களிடம், அவர்கள் இறக்கும்வரை காமம் நதியாய் ஒடிக்கொண்டிருக்கின்றதென்பதையும், அந்த நதி நிற்காமல் ஒடுவதற்காய் நியாய அநியாயங்களையோ, பிறரைக் காயப்படுத்துவது குறித்தோ அக்கறைப்படாமல் நகரவும் கூடியவர்கள் ஆண்கள் போலவும், இந்த நாவலை வாசித்து முடிக்கும்போது தோன்றுகின்றது.

Monday, November 14, 2005

கறுத்த பிரேம்
கண்ணாடிக்குள்ளிலிருந்து
நதியாய் அசைகின்றன
விழிகள்

ஆஸ்த்மாவில் அவதிப்படுகையில்
நெஞ்சுதடவிய
அம்மாவின் கரங்களை நினைவுபடுத்தும்
முதுகில் படரும்
விரல்கள்

கத்திகளாய் குத்திக்கொண்டிருந்த
கடந்த காலம் தூர்ந்துபோக
சிறகுகள் முளைக்கின்றன
மனவெளி முழுதும்

ஒரு பொழுது
சப்வேயில்
அழகிய காதற்காலம்
துளித்துளியாய் கரைந்து
கருஞ்சாம்பர் வானமானதையும்
அதிலிருந்து முளைத்த துர்ச்சாபத்தேவதைகள்
வருடங்கள் மீதேறி
நிழ்ல்களாய்ப் பயமுறுத்தியதும்
நீயறிவாயா பெண்ணே?

பளிச்சிடும்
உன் மூக்குத்தியைப்போல
நினைவுகளை விரும்பியபோது
அணியவும் எறியவும்
முடியுமெனில்
எவ்வளவு நன்றாகவிருக்கும்
எனும்
என் வரிகளை இடைமறிக்கும் நீ
கடந்தகாலத்தை நினைவு கொள்ள
உனக்கு கருஞ்சாம்பர் வானமெனில்
எனக்கு பிடுங்கியெறியப்பட்ட மூக்குத்தியும்
கழுத்தை இறுக்கிய கரங்களும்
என்கிறாய்

நேசிப்பை முதன்முதலாய்
அனுபவிக்கும் சிலிர்ப்பைப்போல
கடந்தகாலத்தின் வலிகளுடன்
நம்மால் இன்னொருமுறை
இதமாய் நேசிக்கமுடிவது
வியப்புத்தான்

குளிருக்கு மூட்டிய
அடுப்பில்
எறிந்த சிறுகுச்சிகளாய்
இவ்விரவில்
சரசரவென்று பற்றிக்கொள்கிறது
காமம்

உன் ஆடைகள்
களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில்
வினாவுகிறாய்
முலை தடவும் மென்விரல்கள்
நாளை என் மூக்குத்தியை
மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை
எப்படி நம்புவது.

Nov 11/05