கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கடிதங்கள்

Monday, January 30, 2006

நினைவுகள்....பிரியங்கள்.....அக்கறைகள்

சில நாட்களுக்கு முன்னர் பழைய குப்பைகளைக் குடைந்தபோது பலவரிய மாணிக்கங்கள் கிடைத்தன. கடிதங்கள்.....ம்....அவை எத்தனை பொழுதுகளில் என்னை உற்சாகப்படுத்தி வாழ்வை நேசிக்கச் செய்திருக்கின்றன. இவற்றின் நுட்பமான வரிகள், எவ்வளவோ துயரங்களை சூரிய ஒளியில் சிதறிய பனித்துளிகளாய் கரைத்து மனதைத் தெளிவாக்கியிருக்கின்றன.

இந்தக் கடிதங்களில் அனேகமானவை ஜந்து வருடங்களுக்கும் முன்பானதும், சில பத்து வருடப் பழமையும் உடையன. இந்தக் கடிதங்களை எழுதிய அனேகர் ஆழமான வாசிப்பும் எழுத்துத் திறமையும் கொண்டவர்கள். ஒவ்வொரு மடல்களிலும், இவர்களின் ஆளுமை என்னை வசீகரித்து வியக்கச்செய்ததுண்டு. எனினும் இவர்களில் அனேகர், பொதுத்தளத்தில் எழுதவேண்டும், விவாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமில்லாது ஒரு தெளிந்த ஆற்றைப்போல வாழ்வில் நகர்ந்துகொண்டிருப்பவர்கள். ஏன் எழுதுவதில்லை என்று வினாவுகின்றபோது, எழுத்து, இலக்கியம், விமர்சனம் என்பவற்றைவிட வாழ்வில் இரசிப்பதற்கான விடயங்கள் அதிகமுண்டு என்று கூறி என்னை மெளனிக்கச்செய்பவர்கள். தனிப்பட்டரீதியில் அது குறித்து அவர்கள் மீது சின்னதாய் கோபமும் உண்டு.

இங்கே பதியப்படும் கடிதங்களுக்கு எவரிடமும் உரிய அனுமதி பெறாமலே -இயன்றளவு தனிப்பட்ட விபரங்களை தவிர்த்து- பதிகின்றேன். இதைக் கூட பதிவு செய்யவேண்டும் என்ற ஆர்வம் வந்ததற்கு காரணம், விமர்சிப்பதற்கு ஓடிவரும் என்னைப் போன்றவர்கள், நல்லவிடயங்களை மனந்திறந்து பாராட்டுவதற்கு பின் தங்கி நிற்கின்றோம் என்ற நிலைப்பாட்டை ஒரளவாவது -என்னளவில்- உடைத்துப்பார்க்கவேண்டும் என்பது மட்டுமே.

கடிதங்கள் அழகானவை.... நாமும், நம்மிலும் பிரியம் வைக்கும் மனிதர்களைப் போல!

(1)
எந்த இடமும் எமக்காக உருவாக்கப்படவில்லை. நாம்தான் எமக்கான இடத்தை உருவாக்கவேண்டும். I love Bharathy, அவன் நல்ல கவிஞன் என்பதால். ஆனால் அவன் நல்ல கணவனா, தகப்பனா என்பது கேள்விக்குரியது. கடன் வாங்கிய அரிசியைக் குருவிகளிற்குப் போட்டு ரசித்தது முட்டாள்தனம். வாழ்க்கை யதார்த்தமானது. கவிதைகளை ரசிப்பதோ எழுதுவதோ மட்டுமில்லை அதை வாழ்ந்தும் பார்க்கவேண்டும். தமிழ் தாய்மொழி அதை மறப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைப் போல புகுந்த நாட்டு மொழியை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும். பல மொழிகள் தெரிவது அறிவுக்கு ஊக்கம் தரும். பாரதிக்கும் ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் இன்னும் சில மொழிகளிலும் நல்ல தேர்ச்சியிருந்தது. இலக்குகளை நிர்ணயிப்பது நாம்தானே. பின்பு ஏன் அது கடினமாகப்போகிறது. கவனக்கலைப்பான்கள் பலவா? காலம் கடந்தாலும் இலக்குகளை அடைவதில் கவனமாக இரு.

உனக்கு ............. வர நல்ல தகுதியிருக்கிறது. ஆனால், 'அதிகம் கதைக்காமல் என்னைக் கவர்ந்தவளென்று' பொய் சொல்கிறாய் தம்பி. ரொம்பக் குழப்பத்தில் இருக்கிறாய் என்பதை உன் கையெழுத்தே சொல்கிறது. புத்தகங்கள் வாசி. கடிதம் எழுது. post பண்ணவேண்டுமென்று கூட அவசியமில்லை. புரிகிறதா? மனதில் இருப்பதை வெளிபடுத்த நல்லவழி கடிதம் எழுதுவதுதான்.

மிக முக்கியமான விடயம். உனக்குக் கிடைத்த சந்தர்ப்பம், இங்குள்ள உன் வயதொத்தவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள். முதலில் உன்னை நிலை நிறுத்திக் கொள். பின்பு நீ எது செய்தாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

வாழ்க்கை எப்போதும் அழகானதுதான். சில தேவையற்ற கவிஞர்கள்தான் சோகம் சுகமானது என்று சொல்லி எல்லோரையுஞ் சோம்பறியாக்கிறார்கள். கோபப்படாதே. தியானஞ் செய்யப் பழகு. எழுது எல்லாவற்றையும். Please try to write in English. மொழி கவிதைக்குத் தடையல்ல. Try it.
-----------------------------------------
(2)
நான் சிறுவயதிலிருந்து இன்றுவரையும் எனக்கென்று கடவுளிடம் மன்றாடுவதனால்....
-கடவுளே, நான் பெண் எப்படி இருக்கவேண்டும் என்று நீர் நினைக்கின்றீரோ அப்படி நான் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும்.
-மற்றவர்களுக்கு help பண்ணவேண்டும். அதற்கு அறிவைத் தாரும். நல்ல வேலையைத் தாரும். அப்பதான் நான் எல்லோருக்கும் help பண்ணமுடியும்.
என்று கடவுளிடம் மன்றாடுவேன்.

நான் மட்டும் அல்ல இப்படித்தான் பலபேர் கடவுளிடம் மன்றாடுவினம் என்று எனக்குத் தெரியும். எப்போதும், நல்ல பிள்ளையாய் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. நான் எப்போதும் முயற்சிசெய்து என்னைப்பற்றி சுய அனுதாபம் கொள்வதை தவிர்த்துக்கொள்வேன். சுய அனுதாபம் கொள்வது எனக்குப் பிடிக்காது. அத்தோடு பிறர்முன் அழுவது அதுவும் பெண்கள் அழுவது எனக்கு கண்ணில் காட்டக்கூடாது. எனெனில் புரியாதவர்கள் கண்ணீர் பெண்களின் பலம், பலவீனம் என்பார்கள்.

எனக்கே என்ன சிரிப்பு என்றால் எனக்கு என்னில் சரியான விருப்பம். நேற்று வேலையில் ஒருவர் சொன்னார். கனடா வந்து 4 வருசம் ஒரு boy friend இல்லையென்றால் பொய் சொல்கின்றேனாம். அத்துடன் நான் style ஆக வேறு வெளிக்கிட்டு வாறேனாம். அப்போது நான் எல்லோருக்கும் முன்னால் சொன்ன்னேன். 'ஒருத்தி தன்னைத்தானே அழகுபடுத்தி வருகின்றாள் என்றால் அவள் தன்னைத்தானே விரும்புவதுக்காகவும் இருக்கலாம். not only for boyfriend. because தன்னை நேசிக்க முடிபவர்களால்தான் உலகை நேசிக்கமுடியும்' என்று. அவா இது, 'விதாண்டாவாதம்' என்றா. நான் சொன்னேன், 'அதைத்தான் நீங்களும் செய்கிறீர்கள்' என்று. அருகில் இருந்தவர்கள் வியப்புடன் என்னைப் பார்த்தார்கள். because நான் இவ்வளவும் கதைத்தது எங்கள் supervisorடம்.
-------------------------------------------------------
(3)
இன்று சர்வதேச ஆசிரியர் தினம்! இன்றுதான் முதன்முதலில் பள்ளியில் ஆசிரியர் தினம் மதியபோசனத்துடன் கொண்டாடப்பட்டது. நான் இசையமைக்க, அடிகள் கவிதைகள் புனைய பக்க வாத்தியமாக செந்தூரன் மிருதங்கம் இசைக்க பாடல் பாடினோம். இறுதியாக 'இந்துவின் ஆசிரியர்கள்' என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகத்தை (தாள லயத்தை) நாம் மூவரும் வழங்கினோம். நான், சகிலா ஆசிரியை, அதிபர் மன்மதன், ஹரிகரன் வாத்தி, சண் சேர் போன்றவர்கள் போல நடிக்க, அடிகள், சுசி ஆசிரியை, பிரியா ரீச்சர், வரதராஜன் மிஸ், சச்சிதானந்தன் ஆசிரியை போல நடிக்க செந்தூரன் பின்னணி இசையும் குரலும் கொடுக்க, விசில் சகிதம் பலத்த கைதட்டல் தோஸ்துகளிடமிருந்து கிடைத்தது.

அந்த தாளலயத்திலிருந்து ஒரு சில பாடல்கள் வருமாறு....
'நிப்பாட்டு Fanஐ நிப்பாட்டு, மின்சாரக் காசை உன் கொப்பரோ கட்டிறது
நிப்பாட்டு Fanஐ நிப்பாட்டு, தம்பிமார் watcher Fees கட்டியாச்சோ....'
-பிரின்ஸி

'சீதமதி குடைக்குள் செம்மை அறங்கிடப்ப Britainனில்
என் புருஷன்Broadcasting பண்ணப்போகிறார்
பிள்ளைகள் கதைக்க வேண்டாம்-குரல்
எனக்குச் சரியில்லை....'
-ரவி ஆசிரியை

'குச்சிவாத்தி நானெல்லோ குச்சொழுங்கை தாண்டிவாறன்....
சொகுசாக நான் வரேல்லை...சொய்சாவில் இருந்து வாறன்'
-ஹரிகரன் வாத்தி

இப்படி எல்லா ஆசான்களினதும் வசனங்களை எழுதப்போனால், கடிதம் 'ஆசான் ஸ்பெஷல்' ஆகிவிடும்.
-----------------------------------------------------------------------
(4)
உமது திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப தகுதி பெறவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் ஏகலைவன் போலாகிவிட்டீர். ........... உம்மை நினைக்கும் போதெல்லாம் Exam hallல் நிற்கும்போது புளியின் கீழ் நின்ற காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நான் உம்மை அழைத்துக் கதைக்க எண்ணிவிட்டு நாளை கதைக்கலாம் என்றிருந்தேன். அந்த நாள் எனக்கு வரவேயில்லை. எனவே, 'நாளை என்று ஒத்திப்போடுவது நடைபெறாமலும் போகலாம்.' எதையும் ஒத்திவைக்காது அன்றன்று செய்து நற்பிரசையாக பார் போற்ற வாழக் கற்றுக்கொள்ளவும்.
------------------------------------------------------
(5)
'உனக்கான வாழ்வின் பகுதி
எவராலும் அபகரிக்கப்படாதிருக்கின்றதென்பதை
அறிக.'
இவை உங்கள் கவி வரிகள்தான். உங்களுடான சந்திப்பு நிகழ்ந்துபோன இந்த இரண்டு வருடங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாத, சந்தோசங்கள், துக்கங்கள், சந்தேகங்கள், அவமானங்கள், வலிகள் என எதுவுமேயில்லை என்னிடம். ஆனாலும் நண்பனே சில சமயங்களில் காதுகளை மட்டுமே என் செய்திகளுக்கு வழங்கிவிட்டு எதுவுமே செய்யாமல் எனை தனித்திருக்கச் செய்து, உன் பிரச்சினையை, உன் வலியை, உன் சந்தோசத்தை நீயே முழுதாய் அனுபவி என நீ விலகும் வேளையில் இமைகளைத் தட்டும் கண்ணீரை அடக்க மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.

உங்களைப் பொறுத்தவரை, 'எனக்குப் பசிக்கிறது, நான் சாப்பிடுகிறேன், உனக்கும் பசித்தால் நீயும் சாப்பிடு. உனக்கேதேனும் சோகமா, சந்தோசமா என்னவொன்றாலும் என்னிடம் சொல்லு எனது செவிகள் உனது வார்த்தைகள் செவிமடுக்க எப்போதும் தயார். ஆனால் அதற்கான solutionsஓ, அன்றேல் எனக்கான இனிய நிமிடங்களையோ அதற்காய் ஒதுக்கலோ சாத்தியமில்லை. உன் சந்தோசத்தை, துக்கத்தை முழுதாய் நீயே பங்கிட்டுக் கொள். எனக்கு எதுவும் வேண்டாம். உனக்காய் நான் பிரார்த்திக்கின்றேன்' அப்படித்தான் இருக்கமுடியும்.

அது உங்கள் இயல்பு. உங்களை எனக்கு ஏற்றமாதிரி மாறச் சொல்லல் மிக மிகத்தப்பு. என் சுயம் இழக்கச் சொல்கையில் எனக்கு எவ்வளவு கோபம் வருகிறது. அப்படித்தானே இருக்கும் உங்களுக்கும். உங்கள் நட்பு எனக்கு தந்த பலத்தை வேறு எதுவும் என் வாழ்க்கையில் தரவேயில்லை. எனக்கென்னவோ நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை எனத்தான் தோன்றுகின்றது. ......... பிரச்சினையோ, அன்றேல் ......... உடனான பிரச்சினையோ உங்களிடம் சொன்ன போதெல்லாம் solution எதுவும் சொல்லாமல் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தீர்கள் நீங்கள். இது உண்மையான நட்பல்ல.
---------------------------------
(6)
மேலும், தங்கள் கடிதத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளான "எல்லாம் மனதிற்கு பிடித்தமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே நம்புகிறேன்” என்ற தயோகுணத்தில் இருந்தே நாம் சரிவரப் பேசிக்கொள்ள நிறைய விடயமிருக்கிறது.

எனது நம்பிக்கைகளை, கொள்கையை வழிமொழியாத அல்லது ஏற்றுக் கொள்ளாத ஒருவரது கொள்கையை நாம் எப்படி முட்டாள்தனமென்று கூறமுடியாதோ, அதேபோலத்தான் நாம் இன்று பெரிதுவக்கும் பல விடயங்களும் காலப்போக்கில் வேறொரு பரிமாணத்திற்கு நகர்ந்து எம்மைப்பார்த்து முட்டாள் என்று சிரிக்க வைக்கும். தமிழிலக்கிய, பண்பாட்டுப்பரப்பில் ஞானியின் சிந்தனைகள் போற்றப்பட வேண்டிய தொன்றாக இருப்பினும் அவரது தமிழியம், தமிழ்த்தேசியம் என்ற கருத்துருவங்கள் நெருடலாகவே எனக்குத் தோன்றுகின்றது. மாபெரும் மனிதநேயன் தேசியம் என்ற கற்பிதம் உதிர்ந்து போக வேண்டிய தொன்றாகவே கருதுவான். ஆதியில் இருந்து இற்றைவரை தேசியத்திற்கான தேவைகளும். வரையறைகளும் பாரபட்சமானதாகவும், சுயநலம் சார்ந்ததாகவும் இருப்பது கண்கூடு. சேர, சோழ, பாண்டியர் தம் எல்லைப்பரப்பிற்குள் எதற்காக இறுக்கமான இனத் தனித்துவத்தைப் பேணிக் கொண்டனர் என்று சிந்தித்துப் பாருங்கள். வரி, மானியம், கிரீடம் போன்றவைதான் அவர்கட்கு முக்கியமாகப்பட்டிருக்கும். மாறாக இனம்மாறி அவர்கள் பெண் கொண்ட சூழ்நிலைகளும் சுயநலம் சார்ந்த வழுவாகவே புலப்படும்.

நசுக்கப்படும் இனங்களின் விடிவுக்கு தேசியப்போராட்டம் ஒரு தற்காலிகத் தேவையே தவிர, மானிடர் என்பவர் எல்லைகளைக் கடந்த மனிதநேய ஒன்றல்களுக்குள் அணைத்துக் கொள்வதைத்தான் திரு. ஞானி பெரிதும் நம்பும் மார்க்சியமும் சொல்கிறது. சங்ககாலத்திலேயே கணியன்பூங்குன்றன் என்ற கவிஞன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எல்லைகள், இனக்குழுக்கள் எல்லாவற்றையும் கடந்து உலகமக்கள் யாவரும் நமது சுற்றத்தாரே என்று பாடுகிறான்.
--------------------------------
(7)
சில நண்பர்கள் அவர்களுக்கான என் வீடு விசாலமானது. எப்போதும் வரலாம் எப்போதும் பேசலாம் எந்த வரையறைகளும் இல்லை. நிரம்ப பிரச்சனைகளில் இருந்த நண்பியுடன் விடிய விடிய கதைத்து பாடசாலை போகாத அநுபவங்களும் உண்டு. ஆதலால்,என் தம்பிகள் பற்றிய கவலைகளை விட இப்போது உங்களைப்பற்றி நிறைய யோசனையாய் இருக்கிறது. நீங்கள் காயமின்றி வெளிவரவேண்டும் அதற்கான எந்த உதவியையும் என்னிடம் கேட்கலாம். நானும் நீங்கள் சந்தோசமாக இருப்பதற்கு உதவியாக இருந்தேன் என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு இப்படியான நிலை ஏற்பட்டிருந்தால் உதவியிருக்க மாட்டீர்களா என்ன?

எழுதுவதை மட்டும் விட்டு விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். கவிதை வரவில்லை என்றால் கதைக்குப்போங்கள் அதுவும் வரவில்லை என்றால் கனடா வாழ் அநுபவங்களை எழுதுங்கள். எழுத்து எவ்வளவோ விடயங்களை ஆற்றும் என்று நான் நினைக்கிறேன். ...... நீங்கள் மாற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆதிக்கமான ஒரு ஆணாய் இருப்பதை விட மற்றவர்களை புரிந்து வாழ்வது தான் நல்ல மனிதனாய் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.
---------------------------------------------
(8)
உனது கவிதைகள் பற்றி - ஆகா ஓகோவென்று புளுகி உன்னைப் பப்பாவில் ஏற்றுவதும் சரியல்ல. அதே நேரம், கவிதையைத் தாக்கி உன்னைப் பாதாளத்தில் தள்ளிவிடுவதும் சரியல்ல. நான் சொல்வேன்: உனது பருவத்துக்கு இது சிறப்பான கவிதை. ஆனால் இதுவே முழுமையான கவிதையல்ல. இன்னும் அனுபவத்தைச் சேர்த்து, சொற்களைத் தேர்ந்தெடுத்து, கவிதையை நீ செதுக்கப்பார். உனது அனுபவத்தினூடாக எழுதப்பார். அறிவால் எழுதாமல் உணர்வால் எழுத முயல். சேரன், இளவாலை விஜயேந்திரன், சு.வில்வரத்தினம், முதலானோரின் கவிதைகளை, பாரதியார், மகாகவி, நீலாவாணன், சண்முகம் சிவலிங்கம் முதலானோரின் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பது முக்கியமானது. 'சரிநிகர்' பத்திரிக்கையை தொடர்ந்து வாசிப்பது நல்லது. தொடர்ந்து வாசிக்கிறாயா?
-------------------------------------------------
(9)
தாய்மையென்பது பெண்மையின் அடையாளம்தான். என்னால் இன்னொரு உயிரை.., இன்னொரு ஜீவனை உருவாக்க முடிகிறதென்பது எத்தனை உன்னதமானதொரு விடயம். எனது உதிரத்தைக் கொண்டு அதற்கு உணவூட்ட முடிகிறதென்பது எத்தனை அற்புதம். உயிர்.. உயிர்.. இன்னுமொரு உயிர் என்னுடலில் தங்கி, ஊட்டம் பெறப்போகிறது. அதற்கு இந்த உலகத்தை நான்தான் அறிமுகப்படுத்தப் போகிறேன். ஒவ்வொரு உயிரும் எவ்வளவு பெறுமதியானவை. நாளைய உலகமொன்று என்னிலிருந்து உருவாகப் போகின்றது. ஒருகணம் கடவுளாய், இறைவியாய் மாறியதாயொரு உணர்வு. இதை இழக்க நான் தயாரில்லை.

'விடுதலையை எழுதுதல்' என்ற தனது நூலில் மாலதிமைத்ரி இப்படிச் சொல்லியிருப்பார்.
இந்தவுலகில் பெண் மேலாதிக்கம் நிலவுமானால் யுத்தம், உயிரிழப்பு, அழிவு எதற்குமே இடமிருக்காது. ஏனென்றால் ஒரு பெண்ணுக்குத் தெரியும் ஒரு உயிரின் பெறுமதி.. அழிப்பது சுலபம்.. ஆனால் ஒரு உயிரை உருவாக்குவதிலுள்ள சிரமம் பெண்ணுக்குத்தான் தெரியும். இதையேதான் நானும் நினைத்திருந்தேன். மாலதியின் நூலில் இவற்றைப் பார்த்ததும்தான் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் சிந்திக்கிறார்களென விளங்கியது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. எனது கர்ப்பப்பை, எனது சொத்து. வேறு எவனும் அதில் உரிமையெடுக்கவோ, தலையிடவோ நான் அனுமதிக்கப் போவதில்லை.
-------------------------------------------------

ஒன்பது வித்தியாசமானவர்களிடமிருந்து எனக்கு வந்து சேர்ந்த கடிதங்களில் சிறுபகுதிகள்தான் இவை. மேலே எழுதிய கடிதக்காரர்களில் அரைவாசிப்பேருக்கு மேல் இன்று எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவர்களது நினைவுகள், எழுத்துக்களாய், சம்பாசணைகளாய் என்றும் எனக்குள் மிதந்துகொண்டேயிருக்கும்.

16 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

படிச்சிற்று இழுத்து ஒரு மூச்சு விட்டனான் டீஜே. மிச்சம் தனியா.

மனதை நல்லபதிவுகளை நோக்கித் திருப்ப உதவியிருக்கு உங்கட இந்த இடுகை.

-மதி

1/30/2006 01:01:00 PM
SnackDragon said...

வாசிக்க இதமாகவிருந்தன டீசே. நன்றி.

1/30/2006 01:40:00 PM
Thangamani said...

பழைய கடிதங்கள் (எழுதியதும், பெற்றதும்) சொல்லுகிறவைகள், காட்டுகிறவைகள் அனேகம். என்னால் அனைத்துக்குமாய் பொங்குகிற நன்றியொன்றைத் தவிர எப்போதும் வடித்துகொள்கிற மது அவைகளில் இருந்து பிறிதொன்றாய் இருந்ததில்லை.

1/30/2006 02:30:00 PM
இரா. செல்வராசு (R.Selvaraj) said...

கடிதங்கள் நன்றாக இருக்கின்றன டீஜே.

1/30/2006 11:57:00 PM
இளங்கோ-டிசே said...

மதி, கார்த்திக். தங்கமணி மற்றும் செல்வராஜ் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி!

1/31/2006 08:57:00 AM
Anonymous said...

'விடுதலையை எழுதுதல்' என்ற தனது நூலில் மாலதிமைத்ரி இப்படிச் சொல்லியிருப்பார்.
//இந்தவுலகில் பெண் மேலாதிக்கம் நிலவுமானால் யுத்தம், உயிரிழப்பு, அழிவு எதற்குமே இடமிருக்காது. ஏனென்றால் ஒரு பெண்ணுக்குத் தெரியும் ஒரு உயிரின் பெறுமதி.. அழிப்பது சுலபம்.. ஆனால் ஒரு உயிரை உருவாக்குவதிலுள்ள சிரமம் பெண்ணுக்குத்தான் தெரியும். இதையேதான் நானும் நினைத்திருந்தேன்//

நாட்டை ஆண்ட பெண் சர்வாதிகளை நீங்களுமா மறந்தீர்கள்?

1/31/2006 09:20:00 AM
இளங்கோ-டிசே said...

அனானிமஸ்,
இப்படி எனக்கு நண்பர் எழுதியபின், நீங்கள் குறிப்பிட்ட விடயத்தை நினைவுபடுத்தி அந்த நண்பருடன் விவாதித்திருக்கின்றேன். முக்கியமாய் சந்திரிக்காவை - அவரது தகப்பனையும், கணவரையும் வன்முறைக்கு பலிகொடுத்தபின்னும்- அவரால் ஈழப்பிரச்சினைக்கு தீர்வு காண்முடியாமற்போனது முரண் என்றும், இன்றைக்கு ஆட்சியமைக்கும் பெண்களும் தமது அதிகாரங்களை ஆண்வழிப்பட்ட சிந்தனைகளின் ஊடே நிறுவ முயன்றால் புதிதாய் எதுவும் சாத்தியப்படப் போவதில்லை என்றும் திருப்பி எழுதியதாய் நினைவு.

மாலதி மைத்ரியோ அல்லது இந்த நண்பரோ குறிப்பிட விளைவது, இதுவரைகாலமும் இருந்த ஆண்நிலைப்பட்ட சிந்தனைகளையும் அதிகாரங்களையும் முற்றாகக் கலைந்த, பெண் மொழி, பெண் உடல் போன்ற பெண்களுக்கே மட்டுமே உரிய தனித்துவமான அதிகாரத்தை என நான் விளங்கிக்கொள்கின்றேன். ஆனால் தனிப்பட்டரீதியில் அதிகாரம், மேலாதிக்கம் -அது ஆணாய் இருதாலென்ன பெண்ணாய் இருந்தாலென்ன- போன்றவற்றில் எனக்கு உடன்பாடில்லை.

1/31/2006 10:00:00 AM
ramachandranusha(உஷா) said...

டி.சே என் கமெண்ட், அனானிமசாய் வந்துள்ளது.
பவர் தாங்க முக்கியம். ஆண் என்ன பெண் என்ன? காவல் துறையில் இருந்து எம்.எல்.ஏ மற்றும் அனைத்து அதிகார பதவியில் அமர்ந்ததும் ஆடும் ஆட்டம் ஒன்றாய்தானே இருக்கிறது? பெண் அடக்கப்பட்டு இருந்தவரையில் பெண் மொழி என்ற ஒன்றை கற்பனை செய்து பாடிக் கொண்டிருந்தார்கள். இனி எல்லாம் ஒன்று என்று நீரூபிக்கப்பட்டுவருகிறது.

1/31/2006 11:44:00 AM
Thangamani said...

டிசே, மாலா மைத்ரி எழுதிய கருத்துடன் எனக்கு ஒப்புதல் உண்டு. மாலா எழுதிய காரணம் மட்டுமல்ல. வேறு சில முக்கியமான உளவியல், வாழ்வு அணுகுமுறைக் காரணங்களும் உண்டு. உஷா முதல் பின்னூட்டில் எழுப்பிய கேள்வி உடனடியாக எழும் ஒன்று ஆனாலும் ஆணாதிக சிந்தனை முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, அதன் நம்பிக்கைகளை உள்வாங்கிய பெண் அரசியல்வாதிகள், தலைவர்கள் பெண்வழிப்பட்ட சிந்தனையின் காட்டுகளாக கருதப்படமுடியாதவர்கள். இதற்கு முதலில் ஆண் வழிச்சிந்தனையை தனியே பிரித்து அடையாளங்காணக்கூடிய முயற்சிகள் செய்யப்படவேண்டும்.

1/31/2006 03:49:00 PM
இளங்கோ-டிசே said...

தங்கமணி, சிலவேளை நான் மேலே பின்னூட்டத்தில் எழுதியது சற்றுத் தெளிவில்லாதுவிட்டதோ தெரியவில்லை. நானும் மாலதியினதும், எனது நண்பரினதும் கருத்துக்களை முற்றாக ஏற்றுக்கொண்டு உள்வாங்கிக்கொண்டேன். நீங்கள் குறிப்பிட்டமாதிரி //ஆண் வழிச்சிந்தனையை தனியே பிரித்து அடையாளங்காணக்கூடிய முயற்சிகள் செய்யப்படவேண்டும்.// என்ற இடத்தில்தான் விவாதிப்பதற்கான புள்ளிகள் நிறைய இருக்கிறது என்று நண்பருக்கும் கூறியிருந்தேன்.. முக்கியமாய் ஆண் வழிப்பட்ட சிந்தனைகளினூடு கட்டியமைக்கப்பட்ட அதிகாரம், ஆதிக்கம் என்பவற்றை முற்றுமுழுதாக உடைத்துவிட்டு புதியதைத் தேடுதலே சிறப்பாயிருக்குமே தவிர அதற்கு நிகரான வேறொரு அதிகாரத்தை மேலாதிக்கத்தைக்கட்டியெழுப்பினால் அங்கேயும் ஆண்வழிச்சிந்தனைகள் ஊடுருவத்தொடங்கும் என்றே நான் நினைக்கின்றேன். பெண்களுக்கு அதிகாரம், பெண்களின் பாலியல் வெளிகள் என்பவைபற்றி ரமேஷ்-பிரேமும் அண்மையில் உயிர்மையில் நல்லதொரு கட்டுரை எழுதி இருந்ததாய் நினைவு.

1/31/2006 04:41:00 PM
பத்மா அர்விந்த் said...

அருமை. கடிதங்கள் சிந்தனையை நல்வழிப்படுத்த மிகவும் உதவுகின்றன. அனுப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக மன அழுத்தம் வரும் போதோ கோபம் வரும்போதோ காகிதத்தில் எழுதி மூடிவிட்டால் சினம் அனைத்தும் போய்விடும். இது மனத்தை ஒழுங்கு படுத்தவும் உதவும். எனக்கு பிடித்தமானதும் கூட. அதேபோல நாம் நம்பும் ஒன்று தன்னைத்தானே நேசிக்க முடியாதவர்கள் பிறரை நேசிக்க முடியாது என்பதோடு பிறரிடம் அன்பு செலுத்தவும் முடியாதென்பதே. எனக்கு போதி மரமாக நிறைய மடல்கள் வந்திருக்கின்றன, ஆனால் அவை இப்போது சிந்தனையில் மட்டுமே.இவற்றை பதிவில் இட்டது உங்கள் அன்பை சொல்கிறது. நன்றி

1/31/2006 08:15:00 PM
இளங்கோ-டிசே said...

உஷா & பத்மா பின்னூட்டங்களுக்கு நன்றி.

2/01/2006 08:36:00 AM
Anonymous said...

டி.சே.,

பொதுவாக இத்தகைய விவாதங்களுக்குள் கலந்துகொள்ள விருப்பமில்லாவிட்டாலும் சமயங்களில் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்கள் என்னை மௌனித்திருக்க அனுமதிப்பதில்லை.

இங்கே பிரச்சினையைக் கிளப்பிவிட்டிருப்பது 'பெண்மேலாதிக்கம்' என்ற சொற்பிரயோகம்தானென (அதன்வழிவந்த அதிகாரம் மற்றும் அரசியல்வாதிகள் - சர்வாதிகாரினிகள் - குறித்த விசனங்கள்) நான் நினைக்கின்றேன். இது டி.சே க்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய மடலாதலால் எனது மொழிப்பிரயோகம்பற்றி அவ்வளவு அக்கறைப்பட்டிருக்கவில்லை, நான். ஆனால் இதனைப் பொதுத்தளத்தில் பார்வைக்கு வைக்கும்முன் டி.சே இன்னும் சற்றுக் கவனம் செலுத்தியிருக்கலாமென்பது எனது தாழ்வான அபிப்ராயம்.

மாலதிமைத்ரி கூறியது இதுதான்: 'ஒரு உயிரைப் பெற்றெடுப்பதும், வளர்ப்பதும் எவ்வளவு அற்புதமான, அதேசமயம் எவ்வளவு சிரமம் என்பதை உணரும் மனம், அடுத்த மனிதன் ரத்தம் சிந்துவதை அனுமதிக்காது.' இதனை எனது மொழியில் அவ்வாறு கூறவிழைந்தமை தவறான புரிதல்களுக்கு வழிவகுத்திருக்குமெனின் அதற்கான முழுப்பொறுப்பினையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். மாலதிமைத்ரி தனது நேர்காணலில் பெண்மேலாதிக்கம் குறித்தோ, அதிகாரத் துஷ்பிரயோகம் குறித்தோ எந்தவிதக் கருத்தையும் முன்வைக்கவில்லையென்பதே உண்மை.

சந்திரிக்கா, ஜெயலலிதா போன்றவர்களைப் பற்றிக் கூறுவதானால்.., அவர்கள் அரசியல்வாதிகள்.. பெண்ணியவாதிகளல்ல.. அது தொடர்பாக அவர்களுக்கு எந்தக் கரிசனையுமில்லையென்பது மறுக்க முடியாதது. அரசியல் நலன்களே அவர்களுக்கு முக்கியமாகிப் போயினவேயொழிய.. தமது பெண்ணென்ற அடையாளமல்ல. ஆனாலும் ஒரேயடியாக அவர்களைக் குறைகூறுவதற்கு முன்னர் - சந்திரிக்காவை எடுத்துக் கொண்டோமானால் - தீர்மானமெடுத்தல்களின்போது முக்கிய பங்களிப்பாற்றுகின்ற அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் பெண்களின் அங்கத்துவம் குறித்தும்.., அரசியல்யாப்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடம் குறித்தும் சிந்திக்கவேண்டியுள்ளது. ஆண்மேலாதிக்கக் கட்டமைப்பும், ஆணாதிக்கமுறைமைச் சமுதாயமும் அவர்கள் தமது பெண்ணென்ற அடையாளத்துடன்.. தாய்மை உணர்வுடன் சுயமாகச் செயற்படுவதற்கு எத்தகைய தளத்தினை.. வெளியினை வழங்கியுள்ளனவென்பது குறித்தும் கவனஞ் செலுத்த வேண்டியிருக்கின்றது.

'கொள்ளைராணி' என அழைக்கப்பட்ட (பிற்காலங்களில் பிரபல அரசியல்வாதியாகி அநியாயமாய் மாண்டுபோன) பூலான்தேவியின் வார்த்தைகளை உங்கள் சிந்தனைக்காக விட்டுச் செல்கிறேன்: '...நான் செய்தவற்றையிட்டு நான் பெருமைப்படவில்லை. ஆனால் இவ்வாறெல்லாம் நடந்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்பதுதான் உண்மை..'

- டி.சேயின் நண்பர்

2/01/2006 10:29:00 AM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டத்துக்கும் விடயங்களைத் தெளிவுபடுத்தியமைக்கும் நன்றி நண்பரே :-).
....
//ஆனால் இதனைப் பொதுத்தளத்தில் பார்வைக்கு வைக்கும்முன் டி.சே இன்னும் சற்றுக் கவனம் செலுத்தியிருக்கலாமென்பது எனது தாழ்வான அபிப்ராயம். //
இப்படி முன்பும் ஒருமுறை நண்பர் ஒருவரின் கடிதத்தைப்போட்டு குட்டு வாங்கினனான் :-(. தெரியாமற் செய்தால் தவறு, தெரிந்து செய்தால் குற்றம் என்பதுவும் புர்கிறது! உங்களின் பக்கத்தைத் தெளிவுபடுத்த இங்கே வந்து எழுதியமைக்கு மிக்க நன்றி.

2/02/2006 12:19:00 PM
Anonymous said...

I don't know whether it's my situation or something, the first letter brought me tears....nice letters

9/09/2006 08:01:00 PM
இளங்கோ-டிசே said...

Thanks Anonymous

10/08/2006 09:54:00 AM