கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மலர்களும், 'மலர்களும்'

Tuesday, February 14, 2006

காதலர் தினம் என்றவுடன் எத்தனையோ நினைவுகள் ஞாபக அலைகளில் புரள்கின்றன. காதலர் தினம் என்பது 'காதலிப்பவர்க்கு' மட்டுமல்ல அன்பைப் பகிர விரும்பும் எந்த உறவுகளுக்கும் உரியது என்று விரிவான தளத்தில்தான் எடுத்துக்கொள்கின்றேன்.

இப்படித்தான் பலவருடங்களுக்கு முன், படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண்ணில் ஈர்ப்பு வந்து, கனக்க ரோசாப்பூக்கள் வாங்கி வைத்தபடி அவருக்குக் கொடுக்கக் காத்திருந்தேன். வாங்கி வைத்திருந்த ரோசாப்பூக்கள் அவரது வயதைவிட கூடுதலாக - ஒன்றரை டசினுக்கு- மேலாய் இருந்தது. சரி பிள்ளை ரோசாப்பூக்களில் மயங்கி என்னையும் உச்சிமுகர்ந்து போகப்போகின்றது என்று கனவில் அமிழ்ந்து கொண்டிருந்தால், பிள்ளையோ அதை வாங்கி அருகிலிருந்த குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டு காற்றாய் நகர்ந்துவிட்டது. காதல் முகிழவில்லை என்ற வருத்தத்தைவிட எவ்வளவு காசு செலவழித்து வாங்கிய பூக்கள் வீணாய்ப்போய்விட்டதே என்ற கவலைதான் அதிகம் என்னில் எஞ்சியது. அதுவும் அந்தக்காலத்தில் ஒரு டொலருக்கே அம்மாவிடமும் அண்ணாக்களிடமும் சிங்கியடித்துக்கொண்டிருந்த காலம். ரோசாப்பூவைக் கொடுக்கமுன்னர் நான் ரோசாப்பூக்களின், விலைப்பட்டியலை முன்னுக்கே நீட்டியிருந்தால் ஆகக்குறைந்தது ரோசாப்பூவை குப்பைத் தொட்டிக்குள் எறியாது -recycle செய்வதுமாதிரி வேறொருவருக்கு கொடு என்று- அந்தப் பெண் கூறிவிட்டாவது சென்றிருப்பார் என்று பிறகு யோசித்துமிருக்கின்றேன்.

இந்தச் சம்பவத்தில் எங்கே தவறு நடந்தது என்று நண்பர்களுடன் அலசி ஆராய்ந்தபோது, 'டேய் காதல் என்றால், டசின் கணக்கில் பூக்கள் கொடுப்பதில்லை, ஒன்றே ஒன்று என்று ஒரு சிவப்பு ரோஜாவை மட்டும் கொடுக்கவேண்டும்' என்றார்கள் (அதாவது என்னிடம் இருக்கும் ஒரேயொரு இதயம் உனக்கு மட்டும்தான் சொந்தம் என்று சிம்பாலிக்காய் காட்டவேண்டுமாம்). ஆனால் நான் நினைத்தது என்னவோ, ஒரு ரோஜாவைக் கொடுத்தால் இவ்வளவு கஞ்சத்தனமாய்த்தான் பிறகு அன்பையும் காட்டுவான் என்று அவர் நினைக்கககூடும். ஆகவே ஒன்றரை டசினில் ரோசாப்பூக்களை வாங்கிக்கொடுத்தால் எவ்வளவு விசாலமான அன்பு தன்னில் இருக்கிறது என்று நினைத்து உடனேயே என் நேசததை பிள்ளை ஏற்றுக்கொள்ளும் என்று நினைத்திருந்தேன். நாம் நினைப்பவை எல்லாம் நடந்துவிடுகின்றதா என்ன? ரோசாப்பூக்களைக் கொடுத்தவுடனேயே, குப்பைத் தொட்டிக்குள் bastket ballஜ வளையத்தில் எறிகின்றமாதிரி துல்லியமாய்ப் போட்டவருக்கு, எப்படி நான் கண்டுபிடித்த காதற்தத்துவங்களையோ, அதற்கான பொழிப்புரைகளையோ, பொறுமையாகக் கேட்க நேரம் கிடைத்திருக்கும்?

பிறகு, ஒருமுறை நண்பன் ஒருவன் தனது காதலியின் தாயாரை முதன்முதலாய்ச் சந்திக்கப்போகின்றேன், 'என்னடா அவருக்குக் கொடுக்கலாம்?' என்றபோது 'பூக்களை வாங்கிக்கொடு' என்றேன். 'நான் அவாவைக் காதலிக்கிறனா அல்லது அவாவின்ரை மகளைக் காதலிக்கின்றேனா என்று நீ நினைக்கின்றாய்?' எனப் 'புத்திசாலித்தனமாய்' அவன் திரும்பிக்கேட்டான். இப்படி விதாண்டவாதம் கதைப்பவனோடு என்னத்தை மேற்கொண்டு கதைப்பதாம்? 'நீ பூவை வாங்கிக்கொடுத்தால் என்ன, இல்லை விளக்குமாற்றை வாங்கிக்கொடுத்து உன்ரை மாமியின்ரை கையால் அடிவாங்கினால் என்ன, இனிமேல் என்னிடம் மட்டும் அட்வைஸ் கேட்காதே' என்று கோபத்தில் கூறிவிட்டு அமைதியாகிவிட்டேன்.

Mothers day, பிறந்ததினங்கள் என்றால், நான் அதிகம் பூக்களை வாங்கித்தான் பரிசளிப்பேன். பூக்களில் எப்போதும் ஒருவித அலாதிப் பிரியம் உண்டென்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்ற விடயங்களைப் போலத் தேடி தேடி கடைகளில் அலையாமல் இலகுவாய் தேர்ந்தெடுக்கக்கூடிய பரிசு இது என்பது மற்றொரு காரணமும் ஆகும். இப்படித்தான் எனக்குப் பிரியமானவர்களுக்கு பூக்களைப் பரிசளிப்பதற்காய் ஒரு பூக்கடைக்கு அடிக்கடி போய் அந்தக் கடையில் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணில் ஒருவித ஈர்ப்பு வந்தது. பிறகு பிரியமானவர்களுக்குப் பரிசளிக்க பூ வாங்கப் போகின்றேனா அல்லது அந்தப் பெண்ணைத் தரிசிப்பதற்காய் அடிக்கடி பூவாங்கி பிறருக்கு பரிசளிக்கின்றேனா என்ற சந்தேகம் எனக்குள் நெடுகாலத்துக்கு இருந்தது.

பலவருடங்களாய் மறந்து இருந்த இந்தப்பழக்கம், சென்றவருடம் இயல் விருது பத்மநாப ஐயருக்கு வழங்கியபோது மீண்டும் விழித்துக்கொண்டது. விழாவன்று, மேசை நிறைய ரோசாப்பூகளை அழகுபடுத்துவதற்காய் வைத்திருந்தார்கள். ஒரு எழுத்தாளரின் மனைவி, இருந்த ரோசாப்பூக்கள் அனைத்தையும் வீட்டுக்கு கொண்டுபோகவேண்டும் என்ற அவசரத்தில் சுருட்டிக்கொண்டிருந்தார். வளர்ந்த மகன் யாராவது என்னைப்போல வீட்டில் சோம்பறியாயிருந்து, யாராவது பெண்ணுக்கு ரோசாப்பூ கொடு என்று மகனுக்கு அன்புக்கட்டளையிடுவதற்காய் பூக்களை அவர் சேகரித்துக்கொண்டும் இருந்திருக்கலாம்.

நானும் இடையில் புகுந்து ஒரு ரோசாப்பூவைக் கடினப்பட்டுக் கைப்பற்றினேன். பிறகு அது பத்திரமாய் களவு போய்விடாமல் இருக்க புத்தகத்தின் பக்கங்களின் இடையில் அதை வைத்துக்கொண்டிருந்தபோது, கண்டவர்கள் எல்லாம், 'என்ன யாரோ உமக்கு ரோஸ் தந்திச்சினமோ?' என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ரோசாப்பூவை யாராவது தந்திருந்தால், இந்த நேரம் பச்சைக் கிளியோடு வானத்தில் அல்லவா பறந்துகொண்டிருப்பேன். இப்படி அலுப்பூட்டும் after ceremony இலக்கியக்கூட்டங்களில் ஏன் நான் நிற்கப்போகின்றேன் என்று பிறருக்கு விளங்காது, ரோசாப்பூவுக்கும் மட்டும் கேட்கக்கூடியதாய்க் கூறிக்கொண்டிருந்தேன்.

உயர்கல்லூரியில் காதலர் தினமன்று நல்லதொரு ஏற்பாடு செய்து வைத்திருப்பார்கள். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு ரோசாப்பூ -செருப்படி விழாது safetyயாய்- கொடுக்கவேண்டும் என்றால், ஒரு இடத்தில் போய், ரோசாப்பூ கொடுக்கப்படவேண்டியவரின் வகுப்பையும் பெயரையும் பதிவு செய்துவிட்டால், உங்கள் பெயரோடு அல்லது விருப்பம் இல்லையெனில் anonymousயாய், அந்த நபருக்கு ரோசாபூவைக் கொண்டுபோய் வகுப்பு நேரத்தில் கொடுப்பார்கள். என்னைப் போன்றவர்களின் வேலை அந்தச்சமயங்களில் என்னவென்றால், எந்தப் பெண்ணுக்கு அதிகம் ரோசாப்பூகள் கிடைக்கிறதென்று எண்ணிக்கொள்வது. பின்னே, அதிகம் ரோசாப்பூ கிடைப்பவரைத்தானே அதிகம் பேர் நேசிக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம். அத்தோடு, அந்த லிஸ்டில் எங்களின் பெயரையும் அடுத்த முறை இணைத்துக்கொள்ளலாம் என்ற நப்பாசையும் எங்களில் அனேகம் பேருக்கு இருந்து என்பதுவும் உண்மைதான். சரி, சரி உனக்கு எத்தனை ரோசாப்பூக்கள் கிடைத்தன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மையைச் சொன்னால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்?

உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரேயொருவருக்கு மட்டும் ரோசாப்பூ கொடுத்திருக்கலாம், தவறவிட்டுவிட்டேன் என்று இப்போதும் கவலைப்படுவதுண்டு. அவர் என்னோடு படித்த பெண் அல்ல, அவர் எங்களுக்கு programming language கற்பித்த ஒரு பெண் ஆசிரியர். பெண் ஆசிரியர் என்றவுடன், நீங்கள் ஆசிரியர்-மாணவர் crush என்று நினைத்துவிடாதீர்கள். இது அதற்கு எதிர்மாறானது. அன்புக்குப் பதிலாக வெறுப்பைக் காட்டுவது. நல்ல ஆசிரியர்தான். எனக்கும் programmingல் ஆரம்பத்தில் நல்ல ஆர்வம் இருந்தது. பிறகு கணணிமொழியை விட பெண்களின் மனமொழியில் அதிக ஆர்வம் வரத்தொடங்க, பாடத்தில் கவனம் சிதறத்தொடங்கியது. வகுப்புக்களுக்கு அடிக்கடி கட் பண்ணினால் வீட்டுவேலை(homework) போன்றவற்றிற்கு 'group work'தான் செய்யவேண்டும். Group work என்றால் அப்படி இப்படித்தானே இருக்கும். ஆனால் மனுசியோ அவன், இவனைப் பார்த்து கொப்பியடித்திருக்கின்றான். நீ அவனைப் பார்த்து கொப்பி அடித்திருக்கின்றாய் என்று எங்களை வைத்து வெருட்டத்தொடங்கிவிடும். அத்தோடு அவரும் மிக இளையவராய் இருந்ததால் அவருக்கும் இந்த 'group work'ன் அடியும் நுனியும் நன்கு தெரியும். பிறகு மனுசி சிலவேளைகள் தனித்துச் செய்தாலும், group work செய்யப்பட்டிருக்கின்றதா என்று கண்ணுக்குள்ளை விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு தேடிப்பார்க்கும். அந்தக் கோபத்திலேயே அவரின் வகுப்புக்களையும், அந்தப்பாடத்துக்கான இறுதிப் பரீட்சையையும் தவறவிட்டு boycott செய்திருக்கின்றேன். (அதன் இழப்பு வளாகத்தில் ப்ரோகிராமிங் பாடங்கள் எடுக்கும்போது புரிந்தது, வேறு விடயம்).

இந்த மனுசிக்கு காதலர் தினத்தில் unknown nameல் அல்லது ex-lover என்றோ, இல்லை ஏலியன் என்ற பெயரிலோ, ஒரு ரோசாப்பூ அனுப்பி அவர் முகம் கொஞ்சம் வெளிறுவதைக் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றேன். பின்னே, அவா எத்தனை முறை என்னைப்போன்றவர்களின் முகத்தை வெளிறச் செய்தவர்? இதை விட வேறு எது சிறந்த குருதட்சிணையாக என்னைப்போன்றவர்கள் அவருக்கு வழங்கிவிடமுடியும்?

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அழகும் உயிர்ப்பும் நிறைந்தது. அனைவரும், நீங்கள் பிரியம் வைத்திருக்கும் மற்றும் உங்கள் மீது பிரியம் வைத்திருப்பவர்களுக்கு உங்கள் நேசத்தை இந்தப்பொழுதில் தெரியப்படுத்துங்கள். ப்ளுவாய் (blue) இன்றைய பொழுது துயரமாயும், அலுப்பாயும் கழிகின்றவர்களுக்கு, உங்களுக்கான இனிய பொழுது நாளை விடியக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள், உயிர்ப்புடன் இருங்கள்.

விரைவில் திருமணஞ்செய்து வாழ்வின் 'இன்பக் கடலில்' மூழ்கிச் சாகாவரம் காண வேண்டும் என்று துடிதுடித்துக்கொண்டிருக்கும் தோழர்களும், தோழிகளுக்கும், 'அச்சச்சோ புன்னகை ஆள்கொல்லும் புன்னகை' என்று இன்றையபொழுதில் உங்களைப் பார்த்து யாரோ ஒரு இளைஞனோ, யுவதியோ புன்னகைக்க வாழ்த்துகின்றேன்.

14 comments:

இளங்கோ-டிசே said...

இதற்கு முந்தைய பதிவை ப்ளாக்கர் விழுங்கிவிட்டதோ? அந்தப் பதிவை பத்திரமாய் வைத்திருந்து காட்டிய ப்ளாக்லைன்ஸுக்கு நன்றி!
அதற்கான பின்னூட்டம் இங்கே:

//இப்படித்தான் எனக்குப் பிரியமானவர்களுக்கு பூக்களைப் பரிசளிப்பதற்காய் ஒரு பூக்கடைக்கு அடிக்கடி போய் அந்தக் கடையில் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணில் ஒருவித ஈர்ப்பு வந்தது. பிறகு பிரியமானவர்களுக்குப் பரிசளிக்க பூ வாங்கப் போகின்றேனா அல்லது அந்தப் பெண்ணைத் தரிசிப்பதற்காய் அடிக்கடி பூவாங்கி பிறருக்கு பரிசளிக்கின்றேனா என்ற சந்தேகம் எனக்குள் நெடுகாலத்துக்கு இருந்தது.//

:)))))

-சுதர்சன்
.....
(Sudharsan's comment: DJ)

2/14/2006 09:41:00 AM
SnackDragon said...

மலர்களும் கலர்களும் என்று இருக்கவேண்டிய தலைப்பை இப்படி (ஏ)மாத்தி வெச்சதுக்கு
நான் வன்மையா கண்டிக்கிறேன்.

/இதை விட வேறு எது சிறந்த குருதட்சிணையாக என்னைப்போன்றவர்கள் அவருக்கு வழங்கிவிடமுடியும்?/

ப்ரோ,
ப்ரொபோஸ் பண்ணியிருந்தாலே மயங்கி விழுந்திருப்பாரே அதிர்ச்சியில் :-)

2/14/2006 12:01:00 PM
இளங்கோ-டிசே said...

//ப்ரொபோஸ் பண்ணியிருந்தாலே மயங்கி விழுந்திருப்பாரே அதிர்ச்சியில் //
விளங்கிது. தாங்கள் இப்படித்தான் உங்கள் குருக்களுக்கு குருதட்சிணை கொடுத்திருக்கின்றீர்கள் போல. அதனாற்தானோ அவர்கள் காடுகளில் சாதுக்களாகவும் சாமியாரினிகளாகவும்
இன்றும் அலைகின்றார்களோ!

2/14/2006 12:26:00 PM
Anonymous said...

DJ
Please understand that there are limits to being frank.If you tell
everything about you, including your personal life, it may not be
good for you.People may develop biases or get wrong ideas about you if you reveal everything about
you.
snowlion

2/14/2006 12:27:00 PM
Anonymous said...

இப்படித்தான் எனக்குப் பிரியமானவர்களுக்கு பூக்களைப் பரிசளிப்பதற்காய் ஒரு பூக்கடைக்கு அடிக்கடி போய் அந்தக் கடையில் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணில் ஒருவித ஈர்ப்பு வந்தது. பிறகு பிரியமானவர்களுக்குப் பரிசளிக்க பூ வாங்கப் போகின்றேனா அல்லது அந்தப் பெண்ணைத் தரிசிப்பதற்காய் அடிக்கடி பூவாங்கி பிறருக்கு பரிசளிக்கின்றேனா என்ற சந்தேகம் எனக்குள் நெடுகாலத்துக்கு இருந்தது.

பீட்சா கடையில் வேலைப்பார்க்கிற பெண்ணைப் பார்ப்பதற்காக பீட்ஸா அடிக்கடி சாப்பிட போகிறேன் புத்தக கடையில் இருக்கும் பெண்ணைப் பார்ப்பதற்காக புத்தகங்கள் வாங்க போகிறேன்
ஆரம்பித்தேன் என்று வாழ்க்கையே வேறு விதமாக மாறிவிட்டால் என்ன செய்வீர் ஐயா -:)

2/14/2006 01:00:00 PM
இளங்கோ-டிசே said...

ஸ்நோ லயன், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. 'நான்' என்று எழுதுவதால் அவை அனைத்தும் உண்மையாக நடந்த சம்பவங்களாய் வாசிப்பவருக்கு ஏற்படுவது இயல்பு எனினும் எழுதப்பட்ட அநேக பதிவுகள் ('கவிதை'களைப்போல) புனைவுத்தன்மை வாய்ந்தவையே. இயன்றளவு எழுதுகின்றவை, பிறரைக் காயப்படுத்தவோ தொந்தரவுபடுத்தவோ கூடாது இருக்கவேண்டும் என்ற கவனத்துடன் எழுதுகின்றேன், எழுத முயற்சிக்கின்றேன்.
....
//பீட்சா கடையில் வேலைப்பார்க்கிற பெண்ணைப் பார்ப்பதற்காக பீட்ஸா அடிக்கடி சாப்பிட போகிறேன் புத்தக கடையில் இருக்கும் பெண்ணைப் பார்ப்பதற்காக புத்தகங்கள் வாங்க போகிறேன்.../
அநாநிமஸ்சு! செருப்புக்கடைக்குப் போவது செருப்பு விற்கும் பெண்ணைப் பார்க்கப் போவதற்கு.....கோப்பிக்கடைக்குப் போவது கோப்பி தயாரித்துத்தருகின்ற பெண்ணைப் பார்ப்பதற்காய் என்று பட்டியல் முடிவிலியாம்...!

2/14/2006 03:52:00 PM
NONO said...

//தேடி தேடி கடைகளில் அலையாமல் இலகுவாய் தேர்ந்தெடுக்கக்கூடிய பரிசு இது//

என்ன இப்பிடி சொல்லிட்டீங்க...
பூக்களிரும் பல இனம் மணம் உண்டு என்று உங்கஞக்கு தெரியாதா என்ன!!!
வாங்கும் போது ஒவ்வொரு பூவாய் பாத்து மணந்து நிறங்களை தெரிவுசெய்து குடுக்கப்போகும் நபருக்கும் பொருத்தமாய் தெரிவு எல்லவா செய்ய வேண்டும்!!!

2/14/2006 06:04:00 PM
வசந்தன்(Vasanthan) said...

பனிச்சிங்கத்தின் கருத்தே எனதும்.

2/14/2006 07:33:00 PM
இளங்கோ-டிசே said...

ஒளியினிலே! உண்மைதான். ரோசாப்பூக்களில் கூட நிறங்களுக்கு ஏற்ப, உறவுகளும் மனோநிலைகளும் வேறுவிதமானவை என்று தாமதமாக எனினும் பிறகு அறிந்துகொண்டேன். அன்புடன் எந்தப்பொருளையும் எவருக்கு வாங்கிக்கொடுக்காதவன், பூக்களையாவது வாங்கித் தருகின்றானே என்ற சந்தோசத்தில் என்னிடம் பூக்களைப் பெறுபவர்கள் இவை குறித்து அதிகம் அலட்டிகொள்ளாததால் நான் தப்பித்துக்கொண்டேயிருக்கின்றேன் என்பது வேறுவிடயம் :-).

2/15/2006 03:08:00 PM
இளங்கோ-டிசே said...

வசந்தன், ஸ்நோ லயன்..... நீங்கள் இருவரும் என்ன அர்த்தத்தில் கூறவருகின்றீர்கள் என்பது புரிகின்றது. எதை எழுத ஆரம்பித்தாலும் பிறர் என்ன நினைப்பார்கள்....எப்படியானவிம்பத்தை உருவாக்குவார்கள் என்று நினைத்து எதையும் எழுதுவதில்லை. தனிப்பட்ட ரீதியில் எவர் என்ன நினைப்பார் என்பது என்னைப் பாதித்ததுமில்லை... அது குறித்து அக்கறைப்பட்டதுமில்லை. சிலவேளைகளில் என் குடும்ப அங்கத்துவர்களிடம் மட்டும், 'இவன் இப்படி எழுதியிருக்கின்றானே?' என்று கேட்கப்படுகின்றபோது மட்டும் அவர்களுக்கு அசெளகரியத்தைக் கொடுகின்றேனோ என்று யோசிப்பதுண்டு...அவ்வளவுதான் :-).

2/15/2006 08:58:00 PM
Chandravathanaa said...

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அழகும் உயிர்ப்பும் நிறைந்தது. அனைவரும், நீங்கள் பிரியம் வைத்திருக்கும் மற்றும் உங்கள் மீது பிரியம் வைத்திருப்பவர்களுக்கு உங்கள் நேசத்தை இந்தப்பொழுதில் தெரியப்படுத்துங்கள். ப்ளுவாய் (blue) இன்றைய பொழுது துயரமாயும், அலுப்பாயும் கழிகின்றவர்களுக்கு, உங்களுக்கான இனிய பொழுது நாளை விடியக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள், உயிர்ப்புடன் இருங்கள்.

பிடித்திருக்கிறது

2/21/2007 02:37:00 AM
இளங்கோ-டிசே said...

சந்திரவதனா, ஒரு வருடத்திற்கு முன்பான பதிவையெல்லாம் அகழ்ந்திருக்கிறீர்கள் போல. நன்றி.
மீண்டும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.

2/21/2007 12:04:00 PM
சயந்தன் said...

எனக்குக் கூட ஒரு பெண் பூக்கள் தந்தார். அவை சற்று முன்னர் நான் கொடுத்தவைதான்.

பரவாயில்லை. குப்பையில் வீசாமல் திருப்பித் தந்தாரே என்ற சந்தோசம் இப்ப எனக்கு

பழைய பதிவுகளை அவ பாக்க மாட்டா என்ற நம்பிக்கையுடன்
சயந்தன்

2/21/2007 12:23:00 PM
இளங்கோ-டிசே said...

பூனையும் நீருமென சும்மாயிரும் ராசா, பூவால் பூகம்பத்தையெல்லாம் நும் குடும்பத்திற்குள் உருவாக்காதீர் :-).

2/21/2007 03:14:00 PM