தொலைதல்
In கவிதைகள்Thursday, October 05, 2006
(1)
ஒன்ராறியோ வாவியில்
சிறகென அலையும் நான்
பாண்டிச்சேரிக் கடற்கரையில்
உருமாற்றம் அடைகிறேன்
மனிதனாய்
பிரேமும் ரமேஷும்
அடுத்த கவிதைக்கான சர்ச்சையில்
தம்மிருப்பு மறந்து
வெகு தீவிரமாய்
'அம்மாவின் சாயலில் துணையைக்கண்ட'
கவிதையில் மிதந்த ஆணாதிக்கத்தை
விமர்சித்த தோழியின்
கோபத்தை விளம்புகின்றேன்;
புத்தரால் ஆட்கொண்ட
நீவிர்
புத்தரால் ஆகர்சிக்கப்பட்ட மக்கள் கூட்டத்து
தீவு அரசியலை
கட்டுடைக்காது அமைதியாவதேனோ?
கூடவே சேர்க்கின்றேன் என்கேள்வியையும்
எல்லாவற்றினின்றும் விடுபடும்
சித்தம் - இன்னும்
வாய்க்கவில்லை என்கின்றனர்
பிரேமும் ரமேஷும் பிரமீளும்
நிறைய நிறைய
எடையிழந்து
'சிறகென மிதக்கின்றேன்'
மீண்டும் நான்
படுக்கை முழுதும் - சிலவேளைகளில்
நெஞ்சில் தவழும் மழலைகளாகவும்
கவிதைப் புத்தகங்கள்.
..................
(2)
பின்னேரங்களில்
காயப்பட்ட உடலாய்
சூரியன் நிறந்தேய
போரின் வலிகாவி
ஊரூராய் அலைந்திருக்கின்றோம்
கால்கள் வலிக்க
வேலை நிமித்தம்
திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது
மாதங்களின் முடிவில்
அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம்
முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி
பொங்கிப்படைக்க மறந்ததில்லை
சோறும் பருப்பும்
அம்மா,
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்
'வலிகளைத் தந்தவளுக்கு
வன்மத்தையல்ல;
வாழ்த்தை
திருப்பிக்கொடுத்தலே நேசமென'
தலைகோதி
போர்வை இழுத்துவிட்டு
நகர்ந்த இரவில் நெகிழ்ந்தேன்
நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.
...................
(3)
ஒரு கொலையைப்பற்றி
உரையாடுகையில்
மற்றொரு கொலை எங்கேயெனக்கேட்கிறது
திணிக்கப்பட்டு...
உருமாற்றமடைந்த மூளை
கொலைகளிலும்
என் இருப்பை நிரூபித்து எழுதாவிட்டால்
கைகளின் அரிப்பை சொல்லிமாளாது
வசதியான சூழலில்
உண்டுறுறங்கி புணர்ந்து
அறிவுஜீவித்தனமாய் பேசாவிட்டால்
வந்த நாடு கற்றுத்தந்த
மனிதாபிமானத்துக்கும் மதிப்பில்லை
கடைசிக் கணத்தில்
கையைக் காலை இழந்தோ;
இல்லை
முலைகளை குதறக்கொடுத்தோ
உயிரைத் தக்கவைத்திருக்காலாமென்று
அவர்கள் நினைத்தது...
மதுக்கோப்பையில்
முண்டங்களாய் மிதப்பதையும்
பூகம்பமாய் நடுங்குவதையும்
மட்டும்
நிறுத்தவே முடிவதில்லை
வரைமுறையற்று எவ்வளவு குடித்தாலும்.
.............
(4)
விரல்களை மடக்கி விரிப்பதற்குள்
கூடிவிடும்
சப்வே சனங்களைப்போல
ஆகிவிடுகிறது காதல்
மூச்சுத்திணறலாய்
ஒரு இரெயினும்
இன்னொரு இரெயினும் சந்திப்பதற்குள்
நகரவேண்டியிருக்கிறது
முத்தமிட்டு
கசங்கிய ஆடையில்
வருவது
நம் வாசமென்ற
சிலிர்த்த காலம் போய்
மாலை வந்து
வியர்வையூறும் ஆடைகளை
தோய்க்கவேண்டுமெனும் நினைவே
எஞ்சுகிறது
இன்றைய நம்முறவில்.
Photo: @ chinese lantern festival
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
பல சொற்றொடர்கள் கவர்கிறன.
10/05/2006 11:26:00 AMமூணு முறை வாசித்தேன். மனசை ரொம்ப பேஜார் செய்யுது , உங்க கவிதை
10/05/2006 11:52:00 AMமனதை தொடுகின்றது.4,5 தரம் வாசித்து
10/05/2006 01:14:00 PMதான் சிலதைப் புரிந்து கொண்டேன்.
இப்படியான கனங்கள் மெதுவாய் நகர்கின்றன. கவிதைகளுக்கு நன்றி.
10/05/2006 02:49:00 PMஉம்முடைய கோத்தல் மட்டும் அதே ஸ்டைலில்? கொஞ்சம் மாத்தாலாமே
--FD
DJ
10/05/2006 07:42:00 PMGet rid off *text-align=justify* from your template so we can read and enjoy your blog in Netscape & the other browsers.
Rgds / Vassan
eg
## t {
color: #666666;
font-size: 13px;
text-align: justify;
margin: 5px 0px 0px 0px;
}
## comment-body{
color: #666666;
font-size: 12px;
text-align: justify;
margin: 10px;
padding: 0px 5px;
font-weight: normal;
border: 1px solid #282b34;
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
10/06/2006 09:27:00 AM.....
/உம்முடைய கோத்தல் மட்டும் அதே ஸ்டைலில்? கொஞ்சம் மாத்தாலாமே/
FD: நீங்கள் கூறவருவது என்னவென்று சரியாக விளங்கவில்லை. முந்தி எழுதிய கவிதைகளின் சாயல அடிக்கிறதென்றால்...ம் ஒப்புக்கொள்ளவேண்டியதுதான் :-(.
.....
வாசன்: மாற்றிவிட்டேன். இப்போது வாசிக்க இலகுவாய் இருக்கும் என்று நம்புகின்றேன்.
Post a Comment