நான்கு பருவங்களில் பிடித்த பருவம் எதுவென்றால் இலைதுளிர்காலம் என்று தயங்காமல் சொல்வேன். இயற்கையின் நடனத்தினால் தெருக்களுக்கு வெவ்வேறு வர்ணம் வந்துவிடுவதைப் போல, பருவங்களுக்கேற்ப தெருக்களுக்கு விதம்விதமான வாசனைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா? மழை பெய்து சுத்தமாய்த் துடைத்துவிட்ட, அதிகம் வாகனங்கள் பயணிக்காத ஒரு தெருவில் என்னைப் போல இப்போது நீங்கள் நடந்துகொண்டிருப்பீர்கள் என்றால் நிச்சயம் தெருவுக்குரிய தனித்துவமான வாசனையை நீங்களும் அனுபவித்து சிலிர்த்திருப்பீர்கள்.
புத்தனுக்கு பின்னால் ஒளிரும் வட்டத்தைப் போல, நிலவு மிகப்பிரமாண்டமாய் இந்நெடுங்கட்டடத்தின் பின்னால் விகசித்தெழுகின்றது. தெருவில் விழும் இக்கீற்றுக்களை உங்களுக்கு பிடித்தமான உருவங்களாய் நீங்கள் கற்பனை செய்து கொள்ளவும் கூடும். இயற்கையின் ஆலிங்கனத்தால் சிலிர்த்து சிவப்பும் செம்மஞ்சளுமாய் வெட்கிக்கின்ற மரங்களின் இலைகளினூடாக நீளும் நிலவின் கீற்றுக்கள் எனக்குள் சீன எழுத்துக்களாய்/கிறுக்கல்களாய் உருமாற்றம் பெறுகின்றன. சிறுவயதில் மிகவும் பாதித்த சீன ஓவியங்களும், அவற்றில் அதிகம் தோன்றும் மூங்கில்களும் பண்டாக்கரடிகளும் இப்போதும் நினைவில் தேயாமல் கைகோர்த்து வருகின்றன போலும்.
இப்படி அமைதியும் அழகும் வாய்த்த தெருக்களாய் ஊரில் ஒருபோதும் எந்தத் தெருவும் இருந்ததில்லை. ஊர்த் தெருக்களை நினைத்தால் சந்திகளில் மிதக்கின்ற உடல்கள்தான் உடனே நினைவுகளில் வந்து உட்கார்ந்து கொள்கின்றன. ஆறடிக்கும் குறைவான தெருவைக் கடப்பதற்காய் உயிரைப் பயணம் வைத்திருக்கின்றீர்களா? இந்தியா இராணுவ காலத்தில் அப்படிக் கடந்திருக்கின்றோம், உயிரையும் பொருட்படுத்தாது. உயிர் மீதான் அக்கறையின்மையால் அல்ல; பசியின் நிமித்தத்தால் -உயிர் இழக்கும் பயமின்றி- என்னைப் போன்றவர்கள் கடந்திருக்கின்றோம். எங்கள் வீடுகளையும், அருகில் மிகப்பரந்திருக்கும் வயல்களையும் பிரிப்பது சிறு தெருத்தான். இந்திய இராணுவ காலத்தில் மிகப்பட்டினியாய் இருந்த காலங்கள் அவை. அடிக்கடி ஊரடங்குச் சட்டங்களும் வெளியிலிருந்து உணவுகளும் வராத பொழுதுகள். பசியைத் தீர்ப்பதற்கு என்று இருந்த ஒரேயொரு அட்சய பாத்திரம், யுத்தத்தால் இடைநடுவில் கைவிடப்பட்ட தோட்டங்கள். அங்கே வாடியும் வதங்கியும் இருக்கும் வெங்காயம், கோவா, தக்காளி, பீற்றூட் போன்றவை மட்டுமில்லை, களையாக வளரும் சாறணை(?) கூட எங்களின் பசிக்கு உணவாகியிருக்கிறது.
இந்த பீற்றூட்டிலிருந்தும் வெங்காயத்திலிருந்தும் இப்படி விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கமுடியுமா என்று அம்மா கறிகள் சமைத்து வியக்க வைத்த காலங்கள் அவை. அருகிலிருந்த சந்தியிலிருக்கும் இந்திய இராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தெருவைக் கடப்பது அவ்வளவு இலகுவில்லை. நாங்கள் சிறுவர்கள். இந்திய இராணுவம் எங்களில் பரிவு வைத்ததாலோ அல்லது அவர்களின் கண்களில் 'தீவிரவாதிகளாய்' வளர்வதற்கான பருவத்தை அடையாத காரணத்தாலோ என்னவோ நாங்கள் சூடு வாங்காமல் தப்பியிருக்கிறோம். ஆனால் அவ்வாறு அதிஸ்டம் வாய்க்காது சூடு வாங்கி கால்களை இழந்தவர்களையும், கைதாகி சித்திரவதைக்குள்ளானவர்களையும் நான் அறிவேன்..
ஈழத்தின் அனேக தெருக்களுக்கு வடுக்களாய் செல்களோ, குண்டுகளோ அல்லது கெலி அடித்த சன்ன நேர்கோடுகளோ இருக்கும். அப்போதெல்லாம் அடிக்கப்படும் 30 கலிபர், 50 கலிபர் சன்னக்கோதுகளை தேடி தேடிப் பொறுக்கிச் சேகரித்திருக்கின்றோம். இங்கே சிறுவர்கள் முத்திரைகளையும், நாணயங்களையும் சேகரிப்பதுபோல சன்னக் கோதுகளை யார் அதிகம் சேர்ப்பது என்ற போட்டி எங்களில் அநேகருக்கு இருக்கும்.
ஒருமுறை இப்படித்தான் சித்தியின் மகனும், அவரின் நண்பனும் -அவரும் ஏதோ ஒருவகையில் உறவுதான்- இராணுவம் முன்னேறுகின்றான் என்று வேலிகளை வெட்டி வெட்டி சனங்களை தெருக்களால் போகாமல் ஒழுங்கைகளுக்கால் போகச் செய்துகொண்டிருந்தார்கள். தார் ரோடுகளில் தப்பியோடினால் இலங்கை இராணுவத்தின் கெலி துரத்திச் சுடக்கூடும் என்பதால் இந்த ஏற்பாடு. கொஞ்சச்சனங்களை அனுப்பிவிட்டு எங்கள் மாமியொருவரை அனுப்பிய சொற்பபொழுதில் செல்லொன்று விழுந்து அந்த நண்பர் படுகாயமடைகின்றார். சித்தியின் மகன் அதிசயமாய் தப்பிக்கொள்கின்றான். செல்லால் படுகாயமடைந்தவரை ஒருமாதிரி அம்புலண்ஸில் ஏற்றிச் செல்கின்றனர். (அந்தப்பொழுதில் காயப்படுகின்றவர்களை காவிக்கொண்டு செல்லும் எந்த வாகனமும் அம்புலன்ஸ்தான்). அந்த வாகனத்தையும் துரத்திச் துரத்திச் சுடுகின்றது கெலி. செல்லடிபட்ட நண்பர் இடைநடுவில் காயத்தின் நிமித்தம் இறந்துவிடுகின்றார். சித்தியின் மகனுக்கு கெலிச்சன்னம் முழங்காலுக்குள்ளால் பாய்ந்து போகின்றது. பிறகு நெடுங்காலத்துக்கு காலை மடக்கமுடியாமல் நடக்கவோ சைக்கிள் ஓட்டவோ முடியாது அவதிப்பட்டதை அருகிலிருந்து கண்டிருக்கின்றேன். நாங்கள் கொழும்புக்கு பெயர்ந்தபொழுதுகளில் அவர் போராளியாக மாறிவிட்டிருந்தார் என்ற செய்தி வந்திருந்தது. இப்படி எத்தனையோ சம்பவங்களின் சாட்சிகளாய் பல தெருக்கள் வடுக்களை வாங்கியபடி உறைந்துபோயிருக்கின்றன. தாங்கள் வாய் திறந்து இப்படிப்பட்ட சம்பவங்களைப் பேசினால் உலகம் தற்கொலை செய்துகொள்ளும் என்ற பயத்தில்தான் இந்தத் தெருக்கள் நிசப்தமாகி இருக்கின்றன போலும்.
இலையுதிர்காலத்தெருக்களை பற்றி உரையாட ஆரம்பித்து நினைவுகள் எங்கையோ அலைய ஆரம்பித்துவிட்டன. 'எல்லாத் தெருக்களும் உனது வீட்டு வாசலில் முடிகின்றன' என்ற கவிதை வரிகளைப்போல எதைப் பற்றிப் பேசினாலும் ஊர் பற்றிய நினைவுகள் வந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றன. விலத்த வேண்டும் என்று வீம்பாய் நினைக்க நினைக்க அவை இன்னும் ப்லவந்தமாய் ஒட்டிக்கொள்ளுவதன் காரணம் ஏனென்று இன்னும் புரிவதில்லை. இலையுதிர்காலத்துக்கு வனப்பும் குளிர்ச்சியும் இறக்கைகளாகி விடுவதைப்போல, பறக்கத் துடிக்கும் அந்த இறக்கைகளை இழுத்து விழுத்திவிடும் காற்றைப்போல நோய்களும் இந்தப்பருவத்தில் வந்துவிடுகின்றன. அடிக்கடிவரும் தடிமனும், இருமலும், சிலவேளைகளில் கூடவே சேர்ந்துவிடும் இழுப்பும் மிகச் சோர்வு தரக்கூடியன. தனிமையில் என்னை விடுங்கள் என்றாலும் அம்மாவால் விடமுடிவதில்லை. தினமும் அளந்து வார்தைகள் பேசுபவன் வருத்தத்தின் நிமித்தம் அதையும் பேசாமலிருப்பதை அம்மாவால் தாங்கிக்கொள்ள முடியாது போலும்.
'மஞ்சள் வெள்ளை நீலமாய்
மாத்திரைகள்
வெளிறிய உறக்கத்தை
குதறிக் கொண்டிருக்க
கடிகார முள்ளின் அசைவுக்கும்
இதயத்தின் அதிர்வுக்குமிடையிலான
கணப்பொழுதுகளை அளந்தபடி
கரையும் இரவுகளில்
என் காய்ச்சலைக் கடன்வாங்கிய
தலையணையின் வெம்மையில்
உன் நெஞ்சுச் சூட்டினைக் கண்டுணர்ந்து
ஆழ முகம் புதைத்துக் கொள்ளவும்
சீறும் புலியாய்
வெறிகொண்டெழும் தாபம்
என் கட்டுக்களையும் மீறி...
காதல் இதமானதென்று
எவர் சொன்னார்..?'
(~அம்பனா)
இந்தப்பின்னிரவை எப்படிக் கழிப்பது? இணையத்தில் சதுரங்கம் ஆடலாம். சுவாரசியமாய் முடியும்வரை பார்க்கவைத்த Basic Instinct-2ன் நுட்பமான மனவுணர்வுகளை இன்னொருமுறை அசைபோடலாம். ஏ.ஜே அற்புதமாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ரஞ்சகுமாரின் 'கோசலையை' -புத்தக அலுமாரியிலிருந்து Lutesong & Lamentஐ கண்டெடுத்து- வாசிக்கலாம். இல்லையெனில், 'ஒரு நரம்பு/இப்போது/என் மூளையைக் கொத்துகிறது!/இன்று காலையில்தான் இந்தப் பாம்பு/ எனக்குள்ளே வந்தது./நேற்று முன்தினம்/இரு தரப்பிலும்/சுமார் நூறுபேர்வரை மரணம் என்ற/பத்திரிகைச் செய்தியைப் பார்க்கையில்,/யாரோ என் கண்ணை/கல்லால் தட்டு'வதாய்- என்கின்ற சோலைக்கிளியின் வரிகளோடு தாயகச்செய்திகள் வாசித்து உறக்கத்தைத் தொலைக்கலாம்.
தற்செயலாய் அறைக்குள் இருந்து வெளியே விரியும் புத்தரின் சாந்தத்தையொத்த தெருவைப் பார்க்கின்றேன். சில வருடஙளுக்கு முன் வன்னிக்குச் சென்றபோது இரண்டு கண்களுமிழந்த ஒரு போராளி சொல்கின்றான்.....'இன்று எந்த கஷ்டமும் இல்லாமல் A9னால் வந்துவிட்டீர்கள். ஆனால் இந்தப்பாதையின் ஒவ்வொரு அடிக்காயும் எத்தனை போராளிகள், மக்கள், மரங்கள் உயிரைக் கொடுத்திருக்கின்றார்கள் தெரியுமா? இன்று தார் போடப்பட்டு மினுங்கிக்கொண்டிருக்கும் இந்த ரோட்டுக்கீழே எத்தனையோ பேரின் சதைகளும் இரத்தமும் வலிகளும் உறைந்துபோய்க்க்கிடக்கின்றன'.
இப்போதெல்லாம் இங்குள்ள தெருக்களைப் பார்க்கும்போது விபத்தில் அநியாயமாக இறந்துபோன தோழன் வருகின்றான். ஊர்த்தெருக்களை நினைத்தால் கண்களிழந்த போராளியிலிருந்து இன்னும் பலர் ஞாபகிக்கின்றனர். இந்த இலையுதிர்காலத்து தெருக்களுக்கு அழகும் அமைதியும் உள்ளன என்று நான் நினைத்துக்கொண்டிருப்பது மாயத்தோற்றந்தானோ? புத்தர் கொடுத்து வைத்தவன்; அவனை அமைதியாக்க ஒரு போதிமரமாவது அவனுக்காய் காத்திருந்திருக்கின்றது. எனக்கான தெருக்களிலோ போதிமரங்கள் வளர்வதற்கான எந்தச் சுவடுகளும் இருப்பதில்லை.
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//போதிமரங்கள் வளர்வதற்கான எந்தச் சுவடுகளும் இருப்பதில்லை.//
10/12/2006 01:08:00 PM:-(
போதிமரங்கள் தெருக்கள் தேடிவந்து வளர்வதில்லை. மாறாக புத்தர்கள் தான் போதிகளை தேடிப்போனது என்பது வரலாறு!
--FD
/போதிமரங்கள் தெருக்கள் தேடிவந்து வளர்வதில்லை. மாறாக புத்தர்கள் தான் போதிகளை தேடிப்போனது என்பது வரலாறு! /
10/12/2006 03:38:00 PMம்...அப்படியும் இருக்கலாம் FD. ஆனால் புத்தருக்கான உலகம் விரிந்தது. எனக்குத் தெரிந்த/அலைந்த 'தெரு'க்களில்தானே எனக்கான போதிமரத்தை நான் தேடமுடியும்?
நல்ல பதிவு டிசே.
10/12/2006 04:37:00 PMஉங்களின் வலி நிறைந்த தாயகப்பதிவோடு ஒத்துப்போகின்றது என் அனுபவங்களும். சோகச்சுவையோடு கலந்த எழுத்துக்கள். படித்து முடிக்கும் போது வழக்கம் போல் ஒரு பெருமூச்சு
10/12/2006 09:48:00 PMசிறுவயதில் எங்கள் 'சேகரித்தற் பொழுதுபோக்கு' பற்றிச் சொல்லியிருந்தீர்கள். எங்கள் வயதொத்தவர்கள் யாருமே இந்தப் பொழுதுபோக்கிலிருந்து விலகி வந்திருக்க முடியாது. ஆங்கிலத்தில் எங்கள் பொழுதுபோக்கு பற்றிய வசனம் எழுதவேண்டிய சந்தர்ப்பம் எப்போதும் வரும். அனைவரும் தவறாமல் எழுதுவது முத்திரை சேகரித்தல். ஆனால் யாரும் முத்திரை சேகரித்து நான் பார்த்ததில்லை.
10/13/2006 12:22:00 AMசுடப்பட்ட ரவைகளின் வெற்றுக்கோதுகளைப் பொறுக்கி வீட்டில் சேர்ப்பதும், அவை குறித்த அச்சத்தில் பெரியவர்கள் கத்தும்போது 'அவை இனி ஆபத்தற்றவை' என்பதைப் பெரியவர்களுக்கு விளக்கிச் சொல்வதுமாகவே பத்து வயதில் எங்கள் பொழுதுபோக்கு இருந்தது.
வெடித்த வெற்றுத் தோட்டாக்கள் அழகானவை. விதம்விதமான அளவுகளில், நிறங்களில், வடிவங்களில் மினுமினுக்கும். கறள்கட்டாமல் தேய்த்துப் பராமரிப்போம்.
வெடிக்காத நல்ல தோட்டாக்கள் அவற்றையும் விட அழகானவை.
இப்படியன பதிவுகளை நீங்கள் அடிக்கடி எழுத வேண்டும் டிசே.
10/13/2006 02:20:00 AMபின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
10/13/2006 10:28:00 AM...
வன்னியன், தேர்வுத்தாள்களில் பொழுதுபோக்கு என்னவென்றால் முத்திரை சேகரிப்பது என்று கிளிப்பிள்ளை மாதிரி நானும் எழுதித்தான் இருக்கின்றேன். இன்னும் சமூகக்கல்வி/வர்லாற்றுப் பாடங்களிலும் -இங்கால் பக்கம் எஙக்ளுக்கு எல்லா அட்டூழியங்களும்
செய்யப்படும்போதும்- இலங்கை ஒரு சனநாயகநாடு, எங்கள் நாட்டு ஜனாதிபதிகள் மக்களுக்காய் இன்னொரன்ன அரிய திட்டங்களைச் செய்துள்ளார்கள் என்றெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதிக்குவித்ததும் நினைவினிலுண்டு.
உங்களுக்கான தெருக்கள், புறந்தெரியாத உருவகங்களையும் படிமப் பிரமாணங்களையும் அகப்படுத்திக் கொண்டுவிட்ட அழகியலானதொரு கட்டமைப்பு.
10/16/2006 03:58:00 AMநுகர்வு வெறும் சுவையாகப் போய்விடாமல், ஆழ்மனத்துக்கு எட்டவைக்கும் அடையாளங்கள் தங்களிடமிருந்து புறப்பட்டு வருகின்றன.வாழ்த்துகள்!
-தேவமைந்தன்
பின்னூட்டத்துக்கு நன்றி தேவமைந்தன்.
10/16/2006 11:30:00 AMடிசே.தமிழன்
10/17/2006 09:08:00 AMநல்லதொரு பதிவு.
உணர்வுகளைத் தொடுகிறது. வாசித்து முடிந்து பின்னும் ஏதோ ஒரு கனம் மனதைப் பற்றிக் கொண்டுள்ளது.
சாறணை என்றால் என்ன?
வன்னியன்
10/17/2006 09:11:00 AMநான் முத்திரை சேகரிக்கிறேன்.
எனது 12வது வயதில் இருந்து சேகரிக்கிறேன்.
பழைய முத்திரைகள் பல, எனக்குப் பல கதைகளைச் சொல்பவையாக ஞாபகங்களின் பதிவாக இருக்கின்றன. அவை பற்றி ஒரு பதிவு எப்போதாவது எழுதுவேன்.
/சாறணை என்றால் என்ன? /
10/17/2006 10:50:00 PMசந்திரவதனா, அது கிட்டத்தட்ட கீரை மாதிரித் தண்டுகளையும் இலைகளையும் கொண்டது. கீரையோடு சேர்த்து சாறணையை அம்மா சமைத்ததாய் நினைவிலுண்டு. ஆடு மாடுகள் நன்றாக சாறணையைச் சாப்பிடும்.
குப்பைக் கீரையா?
10/18/2006 02:30:00 AMசிறீமாவின் ஆட்சிக்காலத்தில் எல்லோருக்கும் ஒரு கஸ்டம் வந்தது.
பாண் மா... ஒவ்வொன்றும் அளந்தே தரப்பட்டுது. அந்தக் காலத்தில்
குப்பைக்கீரை(குப்பைமேனி) யையும், மரவள்ளிக் கிழங்கையும் சாப்பிட்டு வாழ்ந்தவர்கள் பலர்.
குப்பைக் கீரை உடலுக்கு நல்ல கீரைதான். மருத்துவரீதியாகவும் பாவிக்கப் படுவது.
அது சாறணையாக இருக்கலாமோ என யோசிக்கிறேன்.
சந்திரவதனா, சாறணையும் குப்பைமேனியும் வெவ்வேறானவை. குப்பைமேனி ஒர் செடிபோல வளரக்கூடியது. ஆனால் சாறணை அதிகமாய் -அறுகம்புல் போல- நிலத்தோடு படர்ந்து வளர்வது (என்று நினைக்கின்றேன்). சிலவேளைகளில் சாறணையை வேறு எதாவது பெயரில் உங்கள் ஊர்ப்பக்கம் அழைக்கக்கூடும்.
10/18/2006 09:32:00 AMதஞ்சை ப்ரகாஷின் ' கள்ளம்' நாவல் பற்றிய பதிவு ஒன்றை நேற்று இங்கே பார்த்தேன். இன்றைக்கு அதைக் காணோமே....
10/23/2006 12:54:00 AMபிரகாஷ், அந்தப்பதிவை முழுமை செய்யாமல் draftயாய் வைத்திருந்தேன். தவறுதலாகப் பிரசுரமாகிவிட்டது (saveற்குப் பதிலாய் publsihஜ அழுத்திவிட்டேன் போலும்) என்று நினைக்கின்றேன். விரைவில் பூர்த்திசெய்து அதைப் பதிவிலிடுகின்றேன். நன்றி.
10/23/2006 09:30:00 AMCould You write few words about the
11/19/2006 02:04:00 PMAmbana that you have mentioned here?
The poem seems to be really good
--FD (in a different mood ;-))
FD, அவர், எனக்கு நெருக்கமானவர்களில் ஒருவர். தனிப்பட்ட வாசிப்புக்காய் சில கவிதைகளை அனுப்பியிருந்தார். இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருந்தபோது - பதிவோடு ஒத்திசைவதாய்- அவரின் இந்தக் கவிதை எனக்குத் தோன்றியது. பயன்படுத்தட்டுமா? என்று அனுமதி கேட்டேன். சொந்த விபரங்கள் எதுவும் வலையில் பதியாமல் பயன்படுத்திக்கொள்க என்று அனுமதி தந்தார். சரி பெயரில் என்ன இருக்கிறது? சொல்லப்படும் விசயந்தானே முக்கியம் என்று எடுத்து பயன்படுத்திக்கொண்டேன். :-). இயலுமாயின் அவரின் அனுமதியுடன் என்னிடமிருக்கும் பிற கவிதைகளையும் பதிவில் ஏற்ற முயல்கின்றேன்.
11/22/2006 11:54:00 AM//சாறணை அதிகமாய் -அறுகம்புல் போல- நிலத்தோடு படர்ந்து வளர்வது (என்று நினைக்கின்றேன்). சிலவேளைகளில் சாறணையை வேறு எதாவது பெயரில் உங்கள் ஊர்ப்பக்கம் அழைக்கக்கூடும்.//
2/05/2007 05:20:00 AMநீங்கள் குறிப்பிடுவது சிலவேளைகளில் பசளிவகைக் கீரையாக இருக்கலாம்!! நிலத்தொடு படர்வது, இலைகள் வட்டமாகவும் சற்றுத்தடித்தக காணப்படும், இலைகள் குப்பைமேனியின் இலை அளவு இருக்கும்!!! சாறணை =Trianthema portulacastrum ?
நோநோ, அதுவேதான். தாவரவியல் பெயரைத் தந்தமைக்கு நன்றி. சாறணைப் படங்களை இங்கே போயும் பார்க்கலாம்.
2/09/2007 06:33:00 PMhttp://www.hear.org/starr/hiplants/images/thumbnails/html/trianthema_portulacastrum.htm
தெருக்கள் என்ற தலைப்பை பார்த்ததும் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால், வாசித்து முடிக்கையில் நெஞ்சு கனமாயிருக்கிறது. என்ன செய்தாலும் இளம் பிராயத்து ஞாபகங்கள் மறக்காது. இந்திய ராணுவத்தை நினைக்கும் போது நான் இந்தியாவை சேர்ந்தவன் என்று யாரிடமும் சொல்லவே தயங்குகிறேன் அல்லது வெட்கமாயிருக்கிறது. மேலும், சொன்னால் இறையாண்மை இடையில் வந்துவிடும். இது போன்ற வலிகளை நாங்கள் உணர்ந்ததேயில்லை.இந்தப் பகிர்வு உண்மையிலேயே நெஞ்சை கணக்கச் செய்கிறது.
9/15/2011 06:51:00 AMPost a Comment