கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சமாதானம் மிக அழகானது

Sunday, February 18, 2007

-இவ்வழியால் வாருங்கள் (A9 Highway) படத்தை முன்வைத்து-

சக மனிதரை நேசிப்பதென்பதைப் போன்று இவ்வுலகில் அழகானது எதுவேமேயில்லை. இனங்களை, மொழிகளை, நிறங்களை மீறி மனிதாபிமானம் என்ற புள்ளி நம் எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்துவிடக்கூடும். எங்கோ ஒரு நாட்டில் தன் சொந்த ஊரை இழந்துகொண்டிருப்பவனின் துயரம்..., ஒடுக்கப்படும் மக்களின் இருப்பிற்காய் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் போராளியின் மனவுறுதி..., உயிர்களை, உடலுறுபுக்களை இழந்துகொண்டிருக்கின்ற மக்களின் அவலம்... இவையெல்லாம் போர் நடந்துகொண்டிருக்கும் எந்தப்பகுதியிற்கும் பொதுவானது. அதேபோல் அதிகாரமும் ஆயுதமும் வைத்திருப்பவர்களின் ஒடுக்குவதற்கான ஆதிக்கமும் சிந்தனைகளும் நாடுகளுக்கிடையில் அவ்வளவாய் வித்தியாசப்படுவதுமல்ல. இவ்வழியால் வாருங்கள் என்று ஏ9 நெடுஞ்சாலையை ஊடுருவிச் செல்லும் இப்படத்தில் எல்லா இன மக்களும் வருகின்றார்கள். போரை அவரவர்களின் பார்வைகளால் பார்க்கின்றார்கள். இறுதியில் தாம் நினைத்துக்கொண்டிருப்பது மட்டுமல்ல சரியான பார்வை; நாம் அறியாத இன்னும் பல விடயங்களும் இருக்கின்றன என்ற புரிதல்களையும் பெற்றுகொள்ளுகின்றார்கள்.

சமாதானம் வந்து, ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்படுவதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது. சமாதானம் வந்து ஏ9 திறக்கப்பட்டாலும் தமது உரிமைகள் முற்றுமுழுதாக தரப்படாதபோது இந்நெடுஞ்சாலை திறக்கப்படக்கூடாது என்று -தன் சக போராளிகளின் இழப்புக்களை நினைத்தபடி- கதறும் ஒரு போராளியின் காட்சிகளோடு படம் ஆரம்பிக்கின்றது. புத்தர் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற நாகதீபத்தை(நயினாதீவை) பார்க்க ஒரு சிங்களக்குடும்பமும், 90களில் யாழிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு புத்தளத்தில் வாழும் ஒரு முஸ்லிம் குடும்பமும் ஏ9 பாதையினூடாக பயணிக்கின்றது. சிங்களக் குடும்பம் கிட்டத்தட்ட அரசாங்கத்தின் செய்திகளைக் கேட்டு தமக்கான அரசியலை வைத்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களின் மகள் பlகலைக்கழக இறுதியாண்டு மாணவி, ஜே.வி.பி சார்பு நிலைகொண்டவர். அவரது தம்பியோ சராசரி இளைஞன். அக்காவின் புரட்சிக்கனவுகளை தொடர்ந்து பகிடி செய்துகொண்டேயிருப்பவன். அவனுக்கு கல்பனா என்று பாடுகின்ற ஒரு சிங்களப்பெண்ணின் மீது ஈர்ப்புண்டு. இவர்கள் ஏ9 பாதையின் இடைநடுவில் முஸ்லிம் குடும்பத்தைச் சந்திக்கின்றார்கள். முஸ்லிம் குடும்பம் தாம் தமது பூர்விக நிலங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட துயர்களை பகிர்கின்றார்கள். நதி (வளாக மாணவி) தான் தமிழர்களைப் பற்றி நினைத்தது சரியென்ற இன்னும் தீர்க்கமான முடிவுக்கு வருகின்றார்.

இரவில் தங்க இடமில்லாது சிங்களக்குடும்பம் யாழ்ப்பாணத்தில் தவிக்கையில், நதியோடு கொழும்பு வளாகத்தில் படித்து சில வருடங்களில் படிப்பை நிறுத்திவிட்டு யாழ் போன தனது (தமிழ்)தோழன் ஒருவரை வீதியில் நதி காண்கின்றார். அந்த இளைஞன் நதியுடன் பேசுகின்றபோதும், அவர் தமிழரென்றபடியால் நதிக்கு -அவரில் நம்பிக்கையில்லாது- அவரின் வீட்டில் போய் தங்கவிரும்பமில்லாது இருக்கின்றார். அந்த இளைஞர் NGO ஒன்றில் வேலை செய்துகொண்டு ஒரு ஆசிரியரின் வீட்டில் தங்கியிருக்கின்றார். ஆசிரியரின் மகன் இயக்கத்துப்போய் சமாதானம் வந்ததால் -இயக்கத்திலிருந்து விலகி- வீட்டுக்கு வருகின்றார். போராளியாக இருந்தவருக்கு இப்படி சிங்களக் குடும்பம் தங்கள் வீட்டில் வந்து நிற்பது அவ்வளவு உவப்பானதில்லை. எனவே அவர் தொடர்ந்து வீறாப்பாய் திரிந்துகொண்டிருக்கின்றார்.

அந்த ஆசிரியரின் மகளுக்கு NGO வில் வேலை செய்யும் இளைஞர் மீது ஈர்ப்புண்டு. ஆசிரியரின் மகள் பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுமிக்கு நடனம் சொல்லிக்கொடுக்கின்றார். நடனப்போட்டியில் பங்குபற்றுவதற்கான கனவில் இருக்கும் சிறுமிக்கு, மிதிவெடியில் கால் போகின்றது. அந்தக் காட்சியை நேரடியாகப் பார்க்கின்ற சிங்களக் குடும்பத்தினருக்கு -முக்கியமாய் ஜேவிபி ஆதரவாய் இருக்கும் நதிக்கு- தனது போர் குறித்த பார்வைகளை மீளாய்வு செய்யவேண்டிய அவதி வருகின்றது. தமிழ் ஆசிரியரும், அந்த சிங்கள குடும்பத்தலைரும் தொடர்ந்து அரசியல் குறித்து உரையாடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த தமிழ் ஆசிரியர் ஒரு முன்னாள் சமசமாஜக் கட்சி உறுப்பினர். எப்படி பண்டாரநாய்க்கா குடும்பம் தமிழர்களின் உரிமைகளைச் சூறையாடுகின்றது என்று விரிவாக உரையாடுகின்றார். எனினும் சிங்களக் குடும்பத்தலைவருக்கோ, எப்படி தமிழர்கள் பண்டாரநாயக்கா குடும்பத்தினரை தாழ்த்தலாம் என்ற கெளரவப்பிரச்சினை அல்லது இனப்பிரச்சினை(?).

நோயுடன் இருக்கின்ற சிங்களக் குடும்பத்தலைவருக்கு, மிதிவெடியில் அந்தச்சிறுமி கால்களை இழந்ததைப் பார்த்தவுடன் இதய அழுத்தம் கூடி சில நாட்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கவேண்டியதாய்ப் போகின்றது. இதற்கிடையில் நதிக்கு, அந்த NGO இளைஞர் மீது ஈர்ப்பு வருகின்றது, இளைஞருக்கும்தான். எனினும் இறுதியில் இளைஞருடனான ஆசிரியரின் மகளின் காதல் வென்றுபோகின்றது.

மீளவும் குடியேறுகின்ற முஸ்லிம் குடும்பத்தினரை வறுமை விரட்டுகின்றது. தங்கள் வீட்டில் இன்னமும் மிதிவெடிகள் அகற்றப்படாததால் பக்கத்துவீட்டில் தங்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு இருப்பதற்கு இடமிருக்கின்றதே தவிர, பசிக்கு உணவிருப்பதில்லை. பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்மணியோ சற்று மனப்பிறழ்வான இளைஞனை பணஞ்சம்பாதிக்கத் துரத்துகின்றார். வேறு வழியில்லாத அவர் ஒரு திருடனாகின்றார். இனியும் பட்டினி தாங்க இயலாது என்கின்ற நிலை வருகின்றபோது பக்கத்துவீட்டு பெண்ணிடம் அகதி முகாமிலிருந்தபோது செய்த பாலியற்தொழிலை தனக்கும் கற்றுத்தாவென்று புத்தளத்திலிருந்து வந்த குடும்பத்தின் மகள் கதறியழுகின்றார். இப்படியாக நமது நிலை போய்விட்டதேயென்று பித்துப்பிடித்தபடி மிதிவெடி அகற்றப்படாத வீட்டிற்குள் அந்த பெண்ணின் தகப்பன் கதறியபடி ஓடுகின்றார்.

பல்வேறு கிளைகளாய் கதை நகரும் இப்படத்தில் அடிநாதமாய் ஓடிக்கொண்டிருப்பது போர் தந்த வலிகளும், அதிலிருந்து எப்போதாவது மீள்வோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்களின் அசையமுடியாத நம்பிக்கையும்தான். இனங்களை, மொழிகளை மீறி நம் அனைவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருப்பது மனித நேயமே என்று கூறியபடி படம் முடிகின்றது. கடந்தகாலத்தை இனி மாற்றமுடியாது ஆயினும் நமது எதிர்காலத்திலாவது போரில்லாது வாழும் சிந்தனையாவது நாமெல்லோரும் வளர்க்கவேண்டும் என்ற சிறுவிதையை இப்படம் விதைக்கின்றது. சமாதானம் மிக மிக அழகானதுதான். வேறு வழியில்லாது பாலியல் தொழில் செய்தாவது பிழைப்போம் என்று கதறுகின்றபோது அந்த முஸ்லிம் பெண் சொல்வார்.... சமாதானமாம் சமாதானம் மண்ணாங்கட்டி! அதுதான் நம் நிகழகாலமாய்ப் போய்க்கொண்டிருப்பதுதான் மிக அவலமானது.

இப்படத்தின் உரையாடல்கள் மிகக் கூர்மையானவை. உரையாடுகின்றபோது மொழிப்பிரச்சினை வருகின்றபோது நதிக்கு, தமிழ் இளைஞர் கூறுவார், அரசகரும மொழியாக இருக்கும் மொழியையே நீங்கள் கற்றுக்கொள்ள முன்வராதபோது எப்படி எங்களுக்கான உரிமைகளை புரிந்துகொள்ளுவீர்களென்று. அதேபோன்று போரின் அழிவுகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்....? கொழும்பில் குண்டுவெடிக்கும்போதும், கனத்தை மயானத்தில் இராணுவ உடல்கள் எரியூட்டப்படும்போதும் மட்டுமே கொழும்பிலிருப்பவர்களுக்கு போர் நடப்பது தெரிகின்றது. மற்றும்படி போரின் அழிவுகளை உணர்ந்திருக்கின்றீர்களா? என்பது கத்தியாய் இறங்கும் வசனம்.


இன்னொரு காட்சியில் குளித்துவிட்டு நதி குங்குமப்பொட்டை வைத்து அழகுபார்க்கும்போது, அந்த இளைஞன் சலனமடைந்து அவரைத் தொட முயல்வார். அதற்கான காரணமாய் இளைஞன் கூறுவார், உனது குங்குமப்பொட்டு என்னைச் சலனமடையச் செய்துவிட்டது என்று. அதற்கு நதி, எந்தப்பொண் குளித்துவிட்டு வந்தாலும் எந்த ஆணும் ஆசைப்படத்தான் செய்வான்; உன் தமிழ் அடையாளத்தை சாட்டாய் வைத்து அதை நியாயப்படுத்தாதேயென்று கூறுவார். அதுபோல், தமது மகன் இரவில் எங்கையோ போய்விட்டார் என்று சிங்களக்குடும்பம் தெருவில் தேடிக்கொண்டிருக்கின்றபோது, அதைப் பார்த்து ஒரு தமிழ்த்தாய், என்னுடைய மகனும் இப்படித்தான் பாடசாலைக்குப் போகின்றேன் என்று போனான் இன்னும் திரும்பிவரவில்லை, யாராவது கண்டுபிடித்துத் தாருங்கள் என்று கதறும்போது (செம்மணியையும் இணைத்துப்பார்க்கலாம்) எல்லாத் தாய்மார்களின் சோகமும் ஒன்றுதான் என்பது புரியும். இன்னொரு காட்சியில் காலிழந்து இருக்கும் சிறுமியை சிங்கள இளைஞன் சந்திக்கும்போது, அந்தச் சிறுமி சொல்வார், 'அண்ணா கொழும்பு போனாப்பிறகு ஒரு கால் அனுப்புவீங்களா? நான் நடனம் ஆடவேண்டும்.' இந்த வார்தைகளின் பின்னிருக்கும் பெருஞ்சோகத்தை வேறு எது சொல்லிவிடும்? படத்தில் படிமமாய் ஒரு பெண் சிவப்புச் சேலை கட்டியபடி போய்க்கொண்டிருக்கின்றார். சிலருக்கு மட்டுமே - போராளி இளைஞனுக்கு, சிங்களக் குடும்பத்த் தலைவருக்கு, அவரின் மகனுக்கு- மட்டும் தெரியவதாய்க் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் பெண்ணை பார்க்கும் நாம் சமாதானமாய் உருவகித்துக்கொள்ளலாம். கண்ணுக்கெட்டும் தூரத்திலிருந்தாலும் ஒவ்வொருமுறையும் நழுவியபடி இருக்கின்றது சமாதானம் என்றவகையிலும் விளங்கிக்கொள்ளலாம்.

இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு, எளிமையான உரையாடல்களால் கூட மிகப்பெரும் அரசியல் புள்ளிகளைக்கொண்டுவரும் நெறியாள்கையாளரின் படைப்புத்திறன் எவ்வளவு நுட்பமானது என்பது புரியும். இதைப் படமாய்ப் பார்த்தாலும், ஒரு தொலைக்காட்சி தொடராய் இது எடுக்கப்பட்டது என்று வாசித்திருக்கின்றேன். எந்த முறையில் எடுக்கப்ப்ட்டாலும் பார்க்கும்போது அது நம்மை பாதிக்கின்றதா இல்லையா என்ற கேள்விதான் முக்கியமானது. அந்தவகையில் இந்தப்ப்படைப்பு வெற்றி பெறுகின்றது. எல்லா நடிகர்களும் மிக இயல்பாய் நடிக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் நடக்கும் காட்சிகளில் வரும் உரையாடல்கள் எல்லாம் அப்படியே ஊரின் பேச்சு வழக்கை நமக்கு நினைவூட்டுகின்றன. புலம்பெயர்ந்த நாட்டில் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்களில் கூட செயற்கைத்தனமான உரையாடல்கள் இருக்கும்போது ஒரு சிங்கள இயக்குனரால் இதிலெல்லாம் எப்படி கவனம் எடுக்க முடிந்தது என்ற வியப்பு வராமல் இருக்க்முடியவில்லை என்பது மட்டுமில்லை இப்படி யதார்த்தமாய் சின்ன சின்ன காட்சிகளின் மூலம் போர் தந்துகொண்டிருக்கும் அழிவுகளை நம் எல்லோரையும் பாதிக்கச் செய்வதைப்போல ஏன் எந்தவொரு தமிழ் படைப்பாளியாலும் எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் வருகின்றது. இன்னமும் தேசியம் X எதிர்த்தேசியம் என்ற உரையாடலை விட்டு வெளியேறாத ஈழத்தமிழ்ச்சூழ்லிருந்து இதையெல்லாம் எதிர்ப்பார்ப்பது கூட சற்று அதிகப்படியோ என்றுதான் தோன்றுகின்றது.

படைப்பாளி என்றவகையில் A Lankan Mosaic என்ற தொகுப்பிலிருந்து அசோக ஹந்தகமவின் ஒரு கதையை (Don't Open the door Parvathi) அண்மையில் வாசித்தேன். அது இந்திய இராணுவ காலத்தில் இந்திய இராணுவத்தால் ஒரு தமிழ்ப்பெண் பாலியல் வன்முறைக்குள்ளாகும் புள்ளியுடன் முடிகின்றது. அதில், இந்திய இராணுவத்தில் நம்பிக்கை கொள்ளும் தமிழ் மக்களை நோக்கி படைப்பாளி ஒரு கேள்வி எழுப்புவார். இத்தனை காலம் சொந்தமண்ணிலேயே இருக்கும் இராணுவமே இத்தகை கொடூரங்களைச் செய்ததைப் பார்த்தபின்னும் எப்படித்தான் இந்தமக்கள் இன்னொரு நாட்டு இராணுவத்தின் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள் என்று. இதிலிருந்து, நாம் அருகிலிருக்கும் சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் புரிந்துகொள்ளாது வேறு நாடுகள் நமக்கு விடுதலையைப் பெற்றுத்தந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருப்பதன் அரசியலையும் ஒருமுறை மீளாய்வு செய்யலாம்.

கலைஞர்களுக்கு இனம், மொழி என்ற பாகுபாடு இருப்பதில்லை. மானிட நேசம் என்பதே அவர்களின் விரிந்த எல்லையாக இருக்கும். நாம் நமது நடுநிலை என்ற புள்ளிகளை நிரூபிப்பதற்கு பெரும்பாடு பாடுவதை விடுத்து, உண்மைகளை முன்வைத்து உரையாடல்களை ஆரம்பிப்பதே உன்னதமாயிருக்கும்.

அசோக ஹந்தகமாவின் பிற படங்கள்:
Chanda Kinnari
Me Mage Sandai (This is my Moon)
Thani Thatuwen Piyambanna (Flying with one wing)
Aksharaya (Letter of Fire)

4 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

அறிமுகத்திற்கு நன்றி டிசே.

2/18/2007 10:50:00 PM
வி. ஜெ. சந்திரன் said...

டிஜே உங்கள் பதிவுக்கு நன்றி. இந்த திரைப்படம் எங்கே கிடைக்கும்? அதே போல புத்தரின் பெயரால் எனும் படத்தையும் பார்க்க ஆவல். ஆனால் எங்கு கிடைக்கும் என்பது தெரியாது இருக்கிறேன்.

சில விடையங்கள் கைக்கு எட்டுவதில்லை. அல்லது நான் கைகளுக்கு எட்டடாத இடங்களில் இருப்பதற்க்கு சபிக்கப்பட்டிருக்கிறேனோ தெரியவில்லை :(

2/18/2007 11:15:00 PM
படியாதவன் said...

அசோக ஹந்தகம ஒரு தீவிர இடதுசாரி,
தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நியாயமானதென வாதிடும் ஒருவர்..
அண்மையில் கோட்டையில் நடைபெற்ற யாழ்ப்பாண மக்களுக்கு அனுப்புவதற்கான அத்தியாவசிய பொருட்களை சேகரிக்கும் செயற்திட்டத்தில் முன்னின்று செயற்பட்டவர்..

இந்தப் படம் இன்னும் பாக்கேல்லை,,
நல்லதெண்டு சொல்லீற்றியள்,,
try ஒண்டு குடுப்பம்..

2/19/2007 02:00:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.
....
சந்திரன், இந்தப்படத்தை இங்கே வழமையாய் தமிழ்ப்படங்கள் எடுக்கும் வீடியோ கடையில்தான் கண்டெடுத்தேன். புத்தாவின் பெயரால் இன்னும் பிரதிகளிற்கு வரவில்லை என்று நினைக்கின்றேன். நான் தியேட்டரில்தான் அதைப்பார்த்தேன்.
......
/அசோக ஹந்தகம ஒரு தீவிர இடதுசாரி/
யதார்த்தத்தோடு வாழும் இடதுசாரி எனவும் சொல்லலாம் :-).

2/19/2007 08:44:00 PM