நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

அம்மாவிற்கு

Thursday, March 08, 2007

பின்னேரங்களில்
காயப்பட்ட உடலாய்
சூரியன் நிறந்தேய
போரின் வலிகாவி
ஊரூராய் அலைந்திருக்கின்றோம்
கால்கள் வலிக்க

வேலை நிமித்தம்
திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது
மாதங்களின் முடிவில்
அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம்
முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி
பொங்கிப்படைக்க மறந்ததில்லை
சோறும் பருப்பும்

அம்மா
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்

'வலிகளைத் தந்தவளுக்கு
வன்மத்தையல்ல;
வாழ்த்தை
திருப்பிக்கொடுத்தலே நேசமென'
தலைகோதி
போர்வை இழுத்துவிட்டு
நகர்ந்த இரவில் நெகிழ்ந்தேன்
நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.


(2006)
-மீள்பதிவு-

--------------
(இன்று -Mar 08- பிறந்தநாளைக் கொண்டாடும் அம்மாவிற்கு...)

6 comments:

Anonymous said...

டி.சே,
'அம்மாவிற்கு' பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை. அம்மா என்றால் கருணைதானோ... எங்கள் கோபங்களையெல்லாம் தாங்கிக்கொள்கிற இடிதாங்கிபோலத்தானே அவள் இருக்கிறாள்...அந்தக் கவிதையை இந்த நாளில் போட்டது பொருத்தமாக இருக்கிறது. அம்மா என்ற பெண் அற்புதமானவள்.

-தமிழ்நதி

(Nathy, sorry for the inconvenience. I am adding this comment from my previous post... ~dj)

3/08/2007 02:43:00 PM
Anonymous said...

அம்மாவுக்காக எல்லாம் கவிதை எழுதிறார் DJ வாழ்க வாழ்க.

கயல்விழி

3/08/2007 04:29:00 PM
நளாயினி said...

மனதை அழுத்தும் வலிநிறைந்த கவிதையானாலும் இறுதியில் கவிதையோடு துயில வைக்கும் திறமை. பாராட்டுக்கள்.

3/08/2007 06:55:00 PM
முபாரக் said...

//அம்மா
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்//

மீசை தாடி முளைத்துவிட்ட பிள்ளையை அணைத்து முத்தமிட இயலாத பாசத்தையெல்லாம் சோறாய்ப் பொங்கிப்போடும் அம்மா - என்று தனது சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்லியிருப்பார் ஜே.பி.சாணக்யா

//அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம் முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி பொங்கிப்படைக்க மறந்ததில்லை சோறும் பருப்பும்//

சமீபத்திய நட்சத்திரம் தமிழ்நதி கூட இதைப்போன்றதொரு அனுபவக்குறிப்பை எழுதியிருந்தார்.

அன்பின் டி.சே,
நன்றாக வந்திருக்கிறது கவிதை. வாழ்த்துக்கள்

அம்மாவைப் பற்றிய ஒரு கவிதையை என்னால் எழுத முடியாது - என்று ஒரு கவிதையை முன்பு எங்கோ படித்த நினைவு. உங்கள் பதிவிலா, வேறெங்குமா தெரியவில்லை. இருந்தால் அனுப்புங்கள்.

அன்பு அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உங்கள் ரசிகன்,
சினேகபூர்வம்
முபாரக்
hmubaa@gmail.com

3/08/2007 07:37:00 PM
Anonymous said...

கவிதைக்கு நன்றி, டிசே!

சமயங்களில், அம்மா என்ற உறவின் மீது அதிகம் புனிதத்துவங்களை ஏற்றி அவளை, அவளது / அவளுக்கேயான குணாதிசயங்களுடன் காணத்தவறி விடுகின்றோமோ என்றும் அடிக்கடி தோன்றுவதுண்டு..

எனது அம்மா கவிதைகளிலும், சினிமாவிலும் வருகின்ற அம்மாக்களைப் போலல்ல.. அப்பாவுடன் நேருக்கு நேர் சண்டை போடுவாள்.. பத்திரகாளியாய் எரிந்து விழுவாளென்றெல்லாம் பொருள்பட ஒரு கவிதை வாசித்த நினைவு.. சல்மாவினுடையதாயிருக்கலாம்.. நினைவில்லை.. என்றாலும், அதிகம் கவர்ந்திருந்தது..

//நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.//

:-)

3/09/2007 09:26:00 AM
இளங்கோ-டிசே said...

நதி & நளாயினி: அன்புக்கு நன்றி.
.....
கயல்விழி: எங்கே நீண்டகாலமாய் காணவில்லை. உறங்குநிலைக்குப் போய்விட்டீர்களா? வசந்தம் வருகின்றதல்லவா? உறக்கம் கலைந்து உங்கள் வலைப்பதிவில் மீண்டும் எழுதலாமே?
......
முபாரக்: அன்புக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட ஜே.பி.சாணக்யாவின் 'கனவுப்புத்தகம்' தொகுப்பின் முன்னுரையை வாசித்தபோது நானும் சில கணங்கள் நெகிழ்ந்துவிட்டுத்தான் கடந்துபோயிருந்தேன். அம்மா மட்டுமில்ல, நாம் நேசம் வைக்கின்ற, நம்மில் நேசம் வைக்கின்ற எல்லா உயிர்களிடமும் எமது அன்பை முழுமையாகக் காட்டமுடியாதிருப்பதுதான் கவலையானது அல்லவா?
.....
அநாநிமஸ்: வருகைக்கு நன்றி :-).

3/09/2007 10:07:00 PM