(நாளை, உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்போகின்றன. காற்பந்தாட்டத்தில் பிரேசில் வெல்லவேண்டும் என்று விரும்ப, சென்றவருடம் நிலைமை தலைகீழாய் மாறியிருந்தது. எனவே அவுஸ்திரேலியா வெல்லட்டும் என்று வெளியே உரக்கச்சொல்லிக்கொண்டு, மேற்கிந்தியத்தீவுகள் கிண்ணத்தை சுவீகரிக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொள்கின்றேன். இந்தமுறை வெல்கிறதோ இல்லையோ இலங்கை அணிக்கு எனது ஆதரவில்லை. மேற்கிந்தியத்தீவுகள் வெல்லாது போனால், அடுத்து தென்னாபிரிக்கா (if not) நியூசிலாந்து வெல்ல வேண்டும் என்று நேர்ந்துகொள்கின்றேன்).
-விளையாட்டுக்கள் பற்றிய சில குறிப்புக்கள்-
(மீள்பதிவு)
அண்மையில் ஒரு நண்பரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது கதையின் நடுவில் எனக்கு கிறிக்கெட் ஒரளவுக்கு விளையாடத்தெரியும் என்றபோது அவரால் நம்பமுடியவில்லை. யாழில் இருந்தபோது பாடசாலையின் பதினைந்து வயதுட்குட்பட்டவர்களின் கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றேன் என்ற அத்தாட்சிப்பத்திரம் வாசித்தபோதும் அந்த நண்பர் ஒருவித நகைச்சுவையாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமில்லை, இன்று மிகச் சோம்பேறியாக காலங்கழிக்கும் எனக்கும் இப்படியெல்லாம் ஒருகாலத்தில் இருந்திருக்கின்றேன் என்று நினைக்கும்போது வியப்பாய்த்தானிருக்கிறது. -எங்கள் தாத்தாவுக்கு முன்னொருகாலத்தில் யானை இருந்தது - என்று பழம்பெருமை பேசுவதை விட வாழ்வில் உவப்புத்தரக்கூடிய விடயங்கள் வேறேதும் உள்ளனவா என்ன?
யாழில் இருந்தபோது கிறிக்கெட் மட்டுமில்லை, உதைபந்தாட்டம், சதுரங்கம் போன்றவற்றிலும் ஆர்வத்துடன் பங்குபற்றி, பாடசாலை பாடசாலைகளாய் போட்டிகளுக்காய் அலைந்து திரிந்தது என்றுமே மறக்கமுடியாத நிகழ்வுகள்தான். அதுவும், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து சிறந்த பெறுபேறுகள் பெற்றாலும் கிடைக்காத புகழ் -பத்து நிமிடத்தில் பிரபல்யம் ஆகுவதுபோல- இவ்வாறான விளையாட்டுக்களில், தடகளபோட்டிகளில் ஈடுபடுபவர்க்கு பாடசாலையில் வந்துவிடுவது பலருக்கு பொறாமையைத்தான் கொடுத்திருக்கின்றது.
பாடசாலைக்கு அருகிலேயே வீடு இருந்ததனால் சிறுவயதிலேயே, அதிகமான பின்னேரப்பொழுதுகளை பாடசாலை விளையாட்டு மைதானத்தில்தான் கழித்திருக்கின்றேன். மைதானத்தின் நடுவில் கிறிக்கெட் பயிற்சிகள் நடக்கிறதென்றால், மைதானத்தின் இருகரைகளிலும் உதைபந்தாட்டப்பயிற்சிகள் களைகட்டும். இவர்களுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன என்று மைதானத்தின் ஒருமூலையில் வலைபந்தாட்டப் பயிற்சிகள் (netball) நடக்கும். பயிற்சிகளில் பங்குபெற முடியா சிறுவயதில் இவற்றில் எந்த விளையாட்டை நான் அதிகம் இரசித்துக் கொண்டிருப்பேன் என்று எவருக்கும் கூறத்தேவையில்லை. எனது இந்தப்பழக்கம் -தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்- தொடர்வதை என் சுயபுராணத்தின் சாட்சிகளாய் நீங்கள் அவதானித்துக்கொண்டிருப்பதால், தன்னடக்கம் காரணமாய் அது குறித்து விதந்து பேசுவதை இந்தப்புள்ளியில் நிறுத்திக்கொள்கின்றேன்.
எங்கள் பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை நான்குபுறமும் சூழ்ந்து வகுப்பறைகள் இருந்ததனால், கிறிக்கெட்டோ, உதைபந்தாட்டமோ, வலைபந்தாட்டமோ நடைபெறப்போகின்றதென்றால், மத்தியானமளவிலேயே பாடசாலையை மூடிவிடுவார்கள். வீடு அருகில் இருப்பவர்கள் வீடுகளுக்குப் போய்த் திரும்புவதும், தொலைவில் இருப்பவர்கள் அன்றைய விளையாட்டு முடியும்வரை பாடசாலையில் நிற்பதுமாய் அனேகருக்கு அன்றையபொழுது இனிதாய்க் கழியும் (வகுப்புக்குள் இருந்து, புத்தகத்தைத் திறந்து, கொட்டாவி விட்டு, வாத்தி முறைத்துப் பார்க்காத எந்தப்பொழுதும் எனக்கு அருமையானதுதான்). ஒரு காலத்தில் எங்கள் பாடசாலையின் உதைபந்தாட்டப் புகழ் அகில இலங்கைவரை பரவியிருந்தது (’பட்டிக்காடா பட்டணமா?’ என்று போஸ்டர் ஒட்டி ஆட்டங்களை விறுவிறுப்பாக்கும் வரைபோனதாகவும்…) என்று கேள்விப்பட்டிருந்தாலும், நான் படித்த காலங்களில் பெண்கள்தான் வலைப்பந்தாட்டத்தில் மிகப்பிரபல்யமாய் இருந்தனர். அதிலும் வலைபந்தாட்டத்துக்கு என்று ‘என்றுமே புகழ்’ பெற்றிருந்த உடுவில், சுண்டிக்குளி, வேம்படி மகளிர் கல்லூரிகளுக்கே இவர்கள் பயத்தை வரவழைத்துக் கொண்டிருந்த காலமது. வலைப்பந்தாட்டத்துக்கு கூடும் கூட்டத்தைப்பற்றியும், அங்கே நடக்கும் சுவாரசியமான விடயங்கள் குறித்தும்- சொல்லாமல் புரிவர் பெரியார்- என்பதற்கிணங்க அதிகம் விபரிக்கத்தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.
பாடசாலை அணிக்காய் வலைப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த அக்காமார்களில் சிலர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாய் இருந்ததாலும் அவர்கள் மூலம் வலைபந்தாட்டம் விளையாடும் பிற அக்காமார்களும் எனக்கு நன்கு பழக்கமாயிருந்ததாலும் கொம்புகள் முளைத்த மாதிரியான எண்ணந்தான் அன்றையகாலகட்டத்தில் எனக்குள் பரவியிருந்தது. அதுமட்டுமில்லாமல், இப்படி ‘பெரும் புகழுடன்’ நானிருக்கின்றேன் என்று பல அண்ணாமார்களுக்குத் தெரிந்து, விளையாடும் அக்காக்களுடன் ‘சில உடன்படிக்கைகள்’ செய்யும் நோக்கத்துடன் என்னை இரகசியமாய் அணுக எனது நிலை சிறகுகளில்லாமல் வானில் பறந்த கதையாயிற்று. ஆனால், அது பிறகு 'வானில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய அவதியாய்' சில அண்ணாக்களுக்கு நான் உபத்திரமாய் ஆகிப்போனதும் சோகமான விடயந்தான்.
எனக்கு விளையாட்டுக்களின் மீது ஆர்வம் வந்தற்கு, எனது அண்ணாவுக்கு கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றிலிருந்த மோகம் ஒரு காரணம் என்றாலும் இன்னொரு முக்கியமான காரணமும் இருந்திருக்கும் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. அது என்னவென்றால், பெடியங்கள் கிறிக்கெட், உதைபந்தாட்டம் விளையாடும்போது அவர்களை உற்சாகப்படுத்தவரும் பெண் இரசிகர்களின் எண்ணிக்கையையும் உற்சாகத்தையும் கண்டும்தான் எனக்கும் விளையாட்டில் ஆர்வம் வந்திருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் நான் எங்கள் கிறிக்கெட் அணிக்கு தலைமைதாங்கும்போது அது ஒரு சோகமான நிலையை அடைந்தது குறித்து பிறகு கூறுகின்றேன். பன்னிரண்டு வயதளவில் பதினைந்து வயதுட்குட்பவர்களின் கிறிக்கெட் அணியில் எடுபடும் வாய்ப்பிருந்தும், கொழும்புக்கு விடுமுறையில் சென்று சில வாரங்கள் கழித்ததில் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனதில் எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது. சரி கிறிக்கெட்தான் கைநழுவிப்போய்விட்டது உதைபந்தாட்டத்திலாவது கவனஞ்செலுத்தலாம் என்று அந்தப்பக்கம் பார்வையைத் திருப்பலானேன். விடிகாலையில்தான் உதைபந்தாட்டப் பயிற்சிகள் நடக்கும். பயிற்சி முடிந்தபின் - அன்றையகாலகட்டத்தில் பிரேமதாசா பாடசாலைகளுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு கப் பாலும், சங்கிலி பணிஸ¤ம் எல்லோருக்கும் வழங்கப்படும். ஒரு மாதிரியாக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது போட்டியில் முதலாவது கோலும் அதிஸ்டவசமாய் நான் போட்டிருக்கின்றேன். எப்படி கோல் போட்டது என்று சொன்னால் கொஞ்சம் அவமானந்தான் ஆனால் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. வேறொரு நண்பன் கோலுக்கு அடித்த பந்தை, கோலி தட்டுத்தடுமாறித்தடுக்க அதையெடுத்துத்தான் கோல் போட்டனான். Rose is a rose is a rose என்ற மாதிரி எப்படி என்றாலும் கோல் கோல்தானே என்று என்சார்பாய் நீங்கள் பேசுவதும் நன்றாகவே என் காதுகளில் விழுகிறது என்க.
ஆட்டங்களுக்கு முன் ஒரு சம்பிரதாயமான பழக்கம் -ஆதிகாலத்தில் இருந்தே- எங்கள் பாடசாலையில் இருந்தது. பாடசாலையில் இருந்த கோயிலிலும், பக்கத்த்தில் இருந்த வைரவர் கோயிலிலும் தேங்காய் உடைத்து ‘வெற்றியைத்தாரும்’ என்று பிரார்த்திப்பதுதான் அது. ஆனால் கோயில்களுக்குள் போக முன்னரோ, போனதன் பின்னரோ, அல்லது இடையிலோ பச்சை முட்டைகள் குடிப்பதை மட்டும் மறக்கமாட்டோம். குடிக்கின்ற ஒவ்வொரு பச்சை முட்டைக்கேற்ப போடுகின்ற கோல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது எங்களில் பலருக்குள் ஒரு ‘ஜதீகமாய்’ இருந்தது. நான் விளையாடிய காலத்தில் நாங்களும் இன்னொரு பாடசாலையும் (வசந்தன் படித்த பாடசாலையும்) வலய/கோட்டமட்டத்தில் எடுபட்டு யாழ் மாவட்ட அளவில் விளையாடப் போயிருந்தோம். உதைபந்தாட்டத்தில் கத்தோலிக்க பாடசாலைகளின் திறமைபற்றி கூறவே தேவையில்லை. உலகில் பிரேசில் எப்படி கால்பந்தாட்டத்துக்கு மகுடம் சூட்டுபவர்களோ அப்படித்தான் யாழில் கத்தோலிக்கப் பாடசாலையினர். யாழ் மாவட்ட அளவில் எங்களுடன் முதலில் மோத வந்த அணி நாவாந்துறை சென்மேரிஸ் (பெயர் சரியா?) அணியினர். ஆனால் அன்று நடந்த சோகத்தைக் கேட்டால் என்னவென்று விளம்புவேன்? அவர்கள் அணியில் இருந்த அனைவரும் ரொனால்டோவாயும் ரொனால்டினோவாயும் இருந்தனர். ஒன்றா… இரண்டா… (என்ற ‘ஆசைகள்’ அல்ல, இது அவமானம்) ஏழு கோல்களைப் போட்டு, ஏதோ எங்களோடு பயிற்சி செய்வதைப் போலத்தான் அந்தப்பெடியங்கள் விளையாடினார்கள். கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் இனியும் நின்றால் அவமானம் என்று நினைத்து ஆட்டம் பார்க்க வந்த மாமாவின் சைக்கிளில் ஏறி, நண்பர்களையும் விட்டுவிட்டு உடனேயே வீடு திரும்பியதாயும் நினைவு.
(2)
கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியபோது நான் படித்த பாடசாலை சொந்த இடத்தைவிட்டு பல்வேறு ஊர்களுக்கு எங்களைப்போல அதுவும் அகதியாய் அலையத்தொடங்கியிருந்த காலம். கிறிக்கெட் விளையாடுவதற்கு சொந்தமாக விளையாட்டு மைதானமே இல்லாதபோது, ஒருமாதிரி கஷ்டப்பட்டு ஒரு இடத்தை கண்டுபிடித்திருந்தோம். அந்த இடத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இந்திய இராணுவம் முகாம் போட்டுத் தங்கியிருந்தது. மழைவந்தால் நீர் தேங்கக்கூடிய அதிபள்ளமான பகுதியும் கூட. அத்தோடு பக்கத்தில் இருந்த அரிசி ஆலையிலிருந்த உமி, கரி முழுவதையும் இந்த ஒதுக்குப்புறமான காணியில்தான் கொட்டிக்கொண்டுமிருந்தார்கள். அந்தப்பக்கமாய் போனால் உமியும் கரியும் சாம்பலும் காற்றில் பறந்து வந்து கண்ணில், மூக்கில் எல்லாம் உறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். ஒருமாதிரி pitch போட்டு அதற்கு மேல் Matting எல்லாம் ஆணியால் இழுத்து மண்ணோடு இறுக்கி அடித்து கிறிக்கெட் விளையாடுவதற்குத் தயாராக்கியிருந்தோம். ஆனால் இரசிகைகள் அந்தமாதிரி கூடுவார்கள் என்று விளையாட நான் பிரியப்பட்ட கிறிக்கெட்டை எந்த இரசிகையும் இல்லாமல் விளையாடி முடிந்ததுதான் மிகுந்த அவலமான விடயம். ஏனென்றால் எங்கள் பாடாசாலை இயங்கிக்கொண்டிருந்த நகரை விட்டு பக்கத்து நகரில்தான் விளையாட்டு மைதானம் இருந்தது என்றபடியால் கிறிக்கெட்டுக்காய் என்று கூறிவிட்டு பயணம் செய்து வருவது பெண்களுக்கு கடினமாயும் இருந்தது. (ஆனால் வகுப்புக்களிடையில் ‘சென்றுவருக தோழர்களே வென்று வருக’ என்று அனுப்பி வைப்பதை மட்டும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நாங்களும் ஓமோம் ஓமோம் என்று தலையாட்டிவிட்டு… அடுத்த நாள் தோற்றகதையை வந்து சொல்வதும் வழமையான நிகழ்வாய் இருந்தது). யுத்தகாலம் என்றபடியால் வாகன வசதிகளும் அவ்வளவாய் இல்லையென்பதால், வரும் பார்வையாளர்களும், விளையாடும் எதிர் அணியினரும் உட்கார்வதற்கு என்று எங்கள் கைகளிலும் தோள்களிலும் நீண்ட வாங்குகளைக் காவிக்கொண்டு எல்லாம் நெடுந்தூரம் நடந்துபோய் இருக்கின்றோம்.
சென் பற்றிக்ஸ், கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் இந்துக்கல்லூரி போன்றவற்றோடு விளையாடி, இரண்டு ஆட்டங்களில் வெற்றிதோல்வியின்றியும், மிகுதி இரண்டு ஆட்டங்களில் தோற்றும் இருக்கின்றோம்.
அதுவும் யாழ் இந்துக்கல்லூரியுடன் தோற்றதையும் அங்கு நிகழ்ந்ததையும் பற்றி இப்போது நினைத்தால் கூட நெஞ்சில் ஒரு அக்கினிக்கோளம் உருவாகின்றமாதிரித்தான் தோன்றுகின்றது. ஆட்டம் இந்துக்கல்லூரி மைதானத்தில்தான் நடந்தது. நாங்கள் விக்கெட்டுக்கு முன்னால் வளைந்துநின்றால் வளைந்த உடம்பிற்கு அளவாய்த்தான் விக்கெட்டும் இருக்கும், ஆனால் இந்துக்கல்லூரிப்பெடியங்களில் பலர் விக்கெட்டைப்போல இரண்டு மடங்களவில் பெரிய உருப்படியாக இருந்தாங்கள். என்றாலும் தாவீதை வென்ற கோலியாத்தின் கதை தெரியும் என்பதால் நாங்கள் இதற்கு எல்லாம் அவ்வளவாய்ப் பயப்பிடவில்லை. அன்றைக்கு என்று என்னோடு ஒப்பினிங் போலிங் போடுகின்றவன் வருத்தம் என்று காரணத்தைக் காட்டி விளையாடவும் வரவில்லை. வருத்தம் என்பதைவிட அவனுக்கு தனக்கு அணித்தலைமை பதவி தரவில்லை என்ற கடுப்பு ஏற்கனவே இருந்தது. எனவே தோற்கப்போவதை படுதோல்வியாக்குவதில் தனது பங்கும் இருக்கட்டும் என்று பெரிய ஃபீலா காட்டிக்கொண்டு வராமல் நின்றான். இந்துக்கல்லூரிக்கு அப்போது யோகிதான் பயிற்சியாளராய் இருந்தார். நாங்கள் 50ற்குளேயே சுருண்டு விட்டோம். அவங்கள் அடிகிறாங்கள் அடிக்கிறாங்கள் முடிகிறபாடாய் காணவில்லை. ஓட்டங்கள் இருநூறைத் தாண்டிவிட்டது…இரண்டு பேர் 50ற்கு மேலாய் அடித்தமாதிரியும் நினைவுண்டு. கடைசியில், சரி இவங்கள் பாவங்கள் என்று மனமிரங்கி ஆட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு எங்களை இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பெடுத்தாட அழைத்தார்கள். ஆட்டம் ஆரம்பித்ததில் இருந்தே என்னைப் பற்றிய பூர்வீகம் ஏற்கனவே தெரிந்து, வெளியாலை இருந்து இந்துக்கல்லுரிப் பெடியங்கள் நக்கலடித்துக்கொண்டிருந்தாங்கள். பூர்வீகம் வேறு ஒன்றுமில்லை.; அதற்கு ஒராண்டு முன்னர்தான் இந்துக்கல்லூரிக்கு படிக்கப்போய் ஒரு மாதம் வரை இருந்துவிட்டு இது நமக்கெல்லாம் ஆகாது என்று பழைய பாடசாலைக்கு மீண்டு(ம்) போயிருந்தேன். அதை தெரிந்து வைத்து அவங்களுக்கு ஒரே நக்கல்…இதெல்லாம் உனக்குத் தேவையா என்று. பந்து வீசும்போதுதான் எதையும் செய்ய முடியவில்லை…துடுப்பாட்டம் செய்யும்போதாவது இவங்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று கறுவிக்கொண்டேன். ஆடிக்கொண்டிருந்தபோது நடுமைதானத்துக்குக் கூடக் கேட்கக்கூடியமாதிரி என்னுடைய ‘புகழை’ கலிங்கத்துப்பரணி ரேஞ்சுக்குப் பாடிக்கொண்டிருக்க, எனக்கு வந்த விசருக்கு அப்போது நல்ல லெந்தாய் வந்த பந்துக்கு கண்ணை மூடிக்கொண்டு விசுக்கினேன். ஒன்டு அடிபட்ட பந்து எல்லைக்கோட்டைத்தாண்டி நிற்கின்ற அவங்களின்ரை தலையில் படவேண்டும், இல்லாவிட்டால் விசுக்கின்ற bat ஆவது கைநழுவிப்போய் இரண்டு பேரின்ரை மண்டைகளையாவது உடைக்கவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு -அந்தமாதிரித்தான் batஜ- விசுக்கினனான். ஆனால் பிறகு -ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது- அந்தப் பந்து நடு ஸ்டாம்பை துவம்சம் செய்துகொண்டு போக மாமியார் முன் நாணிப்போகும் மருமகனாய் என் ‘வீரதீரச்செயல்’ முடிவுக்கு வர பவுலியனை நோக்கித் திரும்பவேண்டியதாயிற்று. அதற்கும், ஒழுங்காய் லெந்தான பந்தைக் கூடப்பார்த்து அடிக்கத்தெரியாதவன் ஒரு அணிக்கு தலைமைதாஙக வந்துவிட்டான் என்று வாய்க்கரிசி போட்டு வாழ்த்தாத குறையாக அவங்களின் ‘வாழ்த்து’க் கிடைத்தது. எனினும் இந்துக்கல்லூரி நண்பர்களோடு அருந்திய அருமையான பால் தேத்தண்ணியினதும் வடையினதும் வாய்ப்பனினதும் சுவையும் நட்புக் கலந்த வார்த்தைகளும்தான் இப்போது அதிகம் நினைவில் நிற்கின்றது என்பபதையும் குறித்துக்கொள்ளத்தான் வேண்டும்.
கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றில் இருந்த விருப்பைப் போல சதுரங்கத்திலும் மிகப்பெரும் விருப்பு எனக்கு ஈழத்தில் இருந்தபோது இருந்தது. இப்போதும் யாகூவின் சதுரங்கத்தளத்துக்கு வந்தால் நான் ஓடித்திரிந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டுபிடிக்கவும் கூடும். சிறுவயதிலேயே -ஏழு அல்லது எட்டு வயதளவில் - சதுரங்கம் விளையாடத்தொடங்கியிருந்தேன் என்று நினைக்கின்றேன். சதுரங்கப் பலகையை முதன்முதலில் எனது அண்ணாவும் அக்காவும் வாங்கித்தந்த நாள் கூட நினைவில் நிற்கின்றது. அதை வாங்கியவன்றுதான், அண்ணாவின் நண்பரொருவரின் வீட்டில் பொம்மர் அடித்து அவர்களின் வீடு சிதைந்துபோனதும், அதிஸ்டவசமாய் அந்த அண்ணாவும் அவர்களின் குடும்பமும் தப்பியிருந்தாலும் பொம்மரைக் கண்டு பாதுகாப்புக்கென ஒதுங்கிய ஒருவர் இறந்துபோனதும்…அந்த கசப்பான நாள் நினைவில் இப்போதும் மிதக்கிறது. சதுரங்கப்பலகையை வாங்கிய சாபத்தால்தான் இப்படி நடந்தது என்று நெடுங்காலத்துக்கு எண்ணிக்கொண்டும் இருந்திருக்கின்றேன். யாழ் நகரில் சனசமூக நிலையங்கள், YMCA போன்றவை நடத்திய அனேக போட்டிகளில் பங்குபற்றி சிலதில் பரிசுகள் வாங்கியதும் இனிமையான தருணங்கள்தான். அந்தப்பொழுதுகளில் அப்பாவோடு சுமூகமான உறவுகள் இருந்ததும் - முக்கியமாய் எதையும் எதிர்த்துக் கதைக்காத ‘நல்ல பண்பும்’ என்னிடம் இருந்ததை அப்பா கூட இப்போது நனவிடை தோய்ந்து அந்தக்காலத்தை மகிழ்வுடன் அசை போடவும் கூடும். பிறகு பாடசாலைகளுக்கு இடையில் நடந்த போட்டிகளில் யாழ் மாவட்டவளவில் தொடர்ந்து runners-up யாய் -யாழ் இந்துக்கல்லூரிக்கு- அடுத்ததாய் வந்திருக்கின்றோம். எங்கள் அணியில் பெண்கள் இருப்பதைப் பார்த்து ஒருவித எகத்தாளத்துடன் விளையாடத்தொடங்கியவர்களை எல்லாம், அசர வைத்து வெற்றி வாகை சூடிய நாளகளும்….பதின்மூன்று பதினான்கு வயதுகளிலேயே வயது வித்தியாசமின்றி உயர்தரம் படிக்கின்றவர்களோடு நண்பர்களாகிக் களித்ததும் அருமையான பொழுதுகள்தான்.
(3)
விளையாடும் காலங்களைப்போல விளையாட்டை வெளியிலிருந்து இரசிக்கும் காலங்களும் மிகவும் அருமையானது. உள்ளூரிலிருந்து சர்வதேசம் வரை வெறிபிடித்தலையும் விளையாட்டு இரசிகர்கள் குறித்து பக்கம் பக்கமாய் எழுதலாம். நமது ஊர்களில்தான் மண்டையை உடைக்கின்றவரை இரசிகர்கள் போவார்கள் என்பதை… ஜரோப்பிய நாடுகளில்/ இலத்தீன் அமெரிக்காவில் நடக்கும் இரசிகர்களின் சண்டைகளைப்பார்த்தால் நாங்கள் எல்லாம் அவர்களின் கால்தூசிக்கும் வரமாட்டோம் என்றுதான் எண்ணிக்கொள்ளவேண்டிவரும். இன்றைய பொழுதில் வடஅமெரிக்கத் ‘தேசியத்தில்’ தவண்டும் புரண்டும் நீந்தியும் எழுந்தும் கொண்டிருப்பதால் கிறிக்கெட்ட் போன்றவற்றின் மீது வெறி போய், ஜஸ் கொக்கி, கூடைப்பந்தாட்டம், பேஸ்போல் போன்றவற்றில் பித்துப்பிடித்தலையும் நிலை வந்துவிட்டாலும் கனடாவில் கால்பதித்த ஆரம்பகாலங்களில் ஒருவித வெறியுடன் கிறிக்கெட் உதைபந்தாட்டம் போன்றவற்றைப் பார்த்திருக்கின்றேன்.
கனடா வந்தசமயத்தில்தான் இலங்கை கிறிக்கெட் அணி உலகக்கோப்பையை சுவீகரித்திருந்தது. நான் இலங்கையணியின் இரசிகனாவே என்றும் இருந்திருக்கின்றேன். இப்போது அல்ல, சிறுவயதிலிருந்தே டிலிப் மெண்டிஸ், அர்ச்சுன இரணதுங்கா போன்ற தொப்பை வண்டிக்காரர்களால் இலங்கை அணி நிரப்பட்டு எல்லா நாடுகளும் வந்து மொங்கு மொங்கு என்று அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்த காலத்திலிருந்தே நான் இலங்கையணியின் தீவிர இரசிகன்தான். அதற்கு அடுத்து மேற்கிந்தியத்தீவுகளுக்கு. எனது அண்ணாமார், அப்பா போன்றவர்கள் மேற்கிந்த்தியத்தீவின் தீவிர இரசிகர்கள். கொஞ்சம் ஆழமாய் அவதானித்தால் ஈழத்துக்கும் இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகளுக்கும் நிரம்ப ஒற்றுமை இருப்பது புரிபடும். சுமூகமற்ற அரசில் சூழ்நிலைகள், போராட்ட இயக்கங்கள், காலநிலை, அழிவுகள், மீண்டும் உயிர்ப்புடன் எழுதல்… என்று பல புள்ளிகளில் ஒன்றுபடமுடியும். இப்படியான ஒரு ‘தீவிரமான ஆராய்ச்சியின்’ ஈடுபடும் என்னைப் போன்றவர்களுக்கு ஸ்பானியப் பெண்கள் மீது ஈர்ப்பு வருவதும் அதிசயமில்லைதானே (அப்பாடா ஒருமாதிரி நான் நெடுங்காலமாய் கூற நினைத்த விடயத்தை காரணகாரியங்களுடன் நிரூபித்துவிட்டேன்).
எனக்குத் தெரிந்து, அண்ணா ஊரில் இருந்தபோது நடத்தி விளையாடிக்கொண்டிருந்த் அணிக்குக் கூட Gary Sobers என்று பெயரிட்டதாய்தான் நினைவில் இருக்கிறது. கிறிக்கெட் வேல்ட் கப் நடந்துகொண்டிருந்தபோது நாங்கள் இங்கே பேப்பர் போட்டுக்கொண்டிருந்தோம். தனியே பேப்பர் போடுவது -அதுவும் வின்ரர் காலங்களில்- கடினமென்பதால் நானும் அவ்வவ்போது அண்ணாக்களுடன் உதவிக்கு என்று போவதுண்டு. ஆனால் இங்கு விடிகாலை நேரத்துக்கே வேல்ட் கப் ஆட்டங்கள் தொடங்கிவிடும் என்பதால், பேப்பர் போடப்போகாது தூங்குவது போலக் கள்ளமாய் நடிக்கத்தொடங்கிவிடுவேன். ஆரம்பத்திலிருந்தே ஆட்டத்தை பார்க்காவிட்டால் அது ஒரு ஆட்டம் பார்த்ததுமாதிரி இல்லை என்று வெறிபிடித்த இரசிகனாய் இருந்த காலம் அதுவாம். அண்ணாக்களும் என்ரை கள்ளம் விளங்கியோ அல்லது பாவப்பட்டோ விட்டுவிட்டுப்போக நான் கொஞ்சநேரத்தில் எழும்பி ஆட்டம் பார்க்கத் தொடங்கிவிடுவேன். பிறகு கொஞ்ச நேரத்தில் அண்ணாக்களின் நண்பர்களும் வந்து குவிய, இடைக்கிடை ஆட்டம் பற்றிய கதைகள், ஈழத்தில் அவர்களின் நனவிடைதோய்தல்கள் என்று விரிந்துபோக ஆட்டங்களைப் பார்ப்பது சுவாரசியமாகும் (இங்கே சாதாரண ரீவி சானல்களில் கிறிக்கெட்டை ஒளிபரப்பமாட்டார்கள்). நான் இங்குசந்தித்த நண்பர்களில் மட்டுமில்லை, 2004ல் இலங்கைகுச் சென்றபோது சந்தித்த நண்பர்கள் வரை 90% மேற்பட்டவர்கள் தீவிர இந்திய இரசிகர்களாக்வே இருக்கின்றார்கள் எனபதில் இந்தியாவின் பாதிப்பு ஈழத்துமக்களிடையே எவ்வளவுதூரம் என்பது வெள்ளிடை மலை. அதுவும் 2004ல் திருகோணமலையில் நின்றபோது ஏதோ ஒரு கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடியபோது இருந்த சனம் முழுதும் இந்தியாவுக்கு ஆதரவாய் நிற்க - சித்தியின் மகள் மட்டுமில்லை சித்தி கூட - இலஙகை வீரர்களைத் திட்டித்திட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, என்னுடைய மானத்தைக் காக்கவேனும் இலங்கையணி வெல்லவேண்டும் என்று நேர்ந்துகொண்டேன். அவர்கள் இறுதியில் வென்றுகாட்டி, ஒரு இரசிகனுக்குத் தரவேண்டிய மிகப்பெரும் சந்தோசத்தை எனக்கு அன்று அளித்துமிருந்தார்கள்.
ஆனால் 96ல் நடந்த உலகக்கோப்பையை இலங்கையணியின் இரசிகன் என்றவகையில் - என்னால் என்றுமே மறக்கமுடியாது. உலகக்கோப்பையைத் தமதாக்கிக்கொள்ளும்வரை எந்தப்போட்டியிலும் தோற்காமல் அருமையாக அவர்கள் ஆடியிருந்தார்கள். அதிலும் இந்தியாவுடனான அரையிறுதி ஆட்டமும், ஆஸ்ரேலியாவுடனான இறுதியாட்டமும் உயர்தர ஆட்டங்கள். கைதராபாத்தில்(?) நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஜெயசூரியாவின் பந்துகள் -துடுபடுத்தாடியவர்க்ள் வெளியே போகின்றது என்று விலத்திவிட- பின்னங்கால்களுக்குள் சுழன்றாடி விக்கெட்டுக்களை விழுத்திய காட்சிகளையெல்லாம் அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியுமா என்ன? அதேபோல இறுதியாட்டத்தில் அசைக்கமுடியாது என்று நினைத்த ஆஸ்திரேலியா அணி 250 தாண்டிவிட்டு பெருமிதமாய் நிற்க, இலஙகையின் அன்றைய ஆரம்பநிலை ஆட்டக்காரர்களான ஜெயசூரியாவும், களுவிதானவும் கொஞ்ச ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ந்துபோக, அரவிந்த டீ சில்வா- அசங்க் குருசிங்கா, அர்ஜூன இரணதுங்கா, மகாநாமவுடன் very coolயாய் இணை துடுப்பெடுத்தாடி, சதமும் அடித்து அணியை உலகின் உச்சிக்கு கொண்டுபோய கிண்ணத்தை கைப்பற்ற வைத்த ஆட்டம், என்னைப்பொறுத்தவரை ஒரு classicதான். அதுபோல் பிரான்சோடு இறுதி ஆட்டத்தில் 3-0 தோற்று, அதற்கடுத்த உலகக்கோப்பையில் ரொனால்டோ ஒரு படைப்பின் நேர்த்தியுடன் பந்தின் இலயத்தோடு இயைந்து, ஜேர்மனியை மண்கவ்வச் செய்த பிரேசிலின் ஆட்டமும் அவ்வளவு இலகுவில் மனதைவிட்டு அகலாது.
(4)
மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள், ஒரு ப்னீக்ஸ் பறவையைப் போல எழுந்துவரும் நம்பிக்கையைத் தருவதும், இன்று ஆரம்பிக்கின்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் -ஏதாவது பெருந்தவறுகள் விட்டாலன்றி- பிரேசில் வெல்லப்போகின்றது என்ற கட்டியங்களும் மீண்டும் கிறிக்கெட்ட்டிலும், உதைபந்தாட்டதிலும் எனக்கு ஈர்ப்பைக் கொண்டுவரச்செய்கின்றன. அதைவிட ரெக்கேயும், சம்பாவும் ஆடியும் பாடியும் ஆட்டங்களை ஒரு திருவிழாவின் கொண்டாட்டங்கள் போல ஆக்கும் இரசிகைகளைப் பார்க்கும்போது -எனக்குள் இருக்கும் இரசிகன் என்றும் உறைந்துபோய்விடமாட்டான் போலதான் தோன்றுகின்றது. இரசிகைகள் விளையாட்டு வீரர்கள் மீது பித்துப்பிடித்தலைவதும், என்னைப் போன்ற இரசிகன்கள் இரசிகைகள் மீது மையல் கொள்வதும் காலங்காலமாய் நடப்பதுதானே.
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//நாளை, உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்போகின்றன. காற்பந்தாட்டத்தில் பிரேசில் வெல்லவேண்டும் என்று விரும்ப, சென்றவருடம் நிலைமை தலைகீழாய் மாறியிருந்தது. எனவே அவுஸ்திரேலியா வெல்லட்டும் என்று வெளியே உரக்கச்சொல்லிக்கொண்டு//
3/12/2007 04:59:00 PMஆசை தோசை அப்பளம் வடை. எனக்கு மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை கிடையாது ;)
அவுஸ்திரேலியா இரசிகர்களுக்கு மூடநம்பிக்கைகளில் நம்பிக்கையில்லைப் போலும் :-).
3/12/2007 05:05:00 PMடி ஜே
3/12/2007 09:48:00 PMஎனக்கு கிறிக்கறில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும், உங்கள் பதிவில் இருந்த நனவிடை தோய்தலை ரசித்தேன்.
வணக்கம் ஐயா DJ
3/13/2007 12:19:00 AMஇப்பவாவது உம்முடைய உண்மையான் வயதை கண்டுபிடிக்க முடிந்ததே..... நீர் யாழ் இந்துவடன் ஆடிய னத ஆட்டத்தை நானும் பார்த்தவன் தான். யாழ் இந்துவில் திலீபனும் காண்டீபனும் 50 அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர் என்று நினைக்கிறேன்..... 94 அல்லது 95 ல் நடந்த ஆட்டம்
மதியம் வாசிக்கும் போது முந்தி வாசிச்ச ஞாபகம் வந்தது . இப்ப மறு பதிவு எண்டு போட்டிருக்கிறீங்க.
3/13/2007 01:17:00 AMஎனாக்கும் விளையாட்டுகளுக்கும் வெகுதூரம். பார்வையாளர் மட்டும் தான்.
உங்க எழுத்து நடை நல்ல ரசிக்க தக்க நடை.
பிரபா, எங்களின் கிறிக்கெட் pitch இருந்தது உங்கள் ஊரில்தான்.
3/13/2007 08:26:00 AM......
அருண்மொழி: நான் மறக்க நினைக்கும் சோகமான விடயத்திற்கு எல்லாம் ரொரண்டோவிலும் சாட்சிகள் இருக்கின்றன்வா? அப்படியெனில் அங்கே நக்கலடித்த பெடியங்களில் ஒருவராய்த்தான் நீங்கள்
இருக்கவேண்டும் :-)?
...............
சந்திரன்: மாங்காய்ப்படங்களுக்கு எப்போது பதில் சொல்ல உத்தேசம்?
டிசே..,
3/14/2007 10:11:00 AMபெரிய ஆள்தானப்பா நீங்கள்.. சும்மா சொல்லக்கூடாதென்ன.. நானும் உங்களை என்னமோ என்டெல்லோ நினைச்சுக் கொண்டிருந்தன்..:-)
//திலீபனும் காண்டீபனும்.//
3/14/2007 01:17:00 PMஅட.. நம்மாளுங்க.
மத்தும்படி நமக்கு விளையாட்டு என்றால் விடுமுறைதான். 2ம் ஆண்டில குளுக்கோசை வாங்கி சாப்பிட்டு விட்டு ஓடிப்போனவன் தான். அதன் பிறகு விளையாட்டுக்கும் விளையாடப் போனதில்லை. ஊரில பேணியெறிஞ்சு விளையாடியிருக்கிறன். (அது மாதிரி நமது பண்பாட்டு விளையாட்டுக்கள் தெரியும்)
//இலஙகை வீரர்களைத் திட்டித்திட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, என்னுடைய மானத்தைக் காக்கவேனும் இலங்கையணி வெல்லவேண்டும் என்று நேர்ந்துகொண்டேன். அவர்கள் இறுதியில் வென்றுகாட்டி, ஒரு இரசிகனுக்குத் தரவேண்டிய மிகப்பெரும் சந்தோசத்தை எனக்கு அன்று அளித்துமிருந்தார்கள்//
3/14/2007 02:01:00 PMஇது எனது வீட்டிலும் நடக்கும் விடயம். ஆனாலும் எனக்குத் துணையாய் தம்பியும் என்னுடன் கூட்டுச் சேர்ந்துவிடுவான்.
சரி நனவிடை என்றால் என்ன??? :S :$
அநாமதேய நண்பர் 1: எழுதுகின்ற விதத்தைப் பார்த்தால் நக்கல்தொனி தெரிகிறது. 'வரலாற்றில்' வென்றவர்களை மட்டுமில்லை தோற்றவர்களையும் நினைவுகொள்ளும் காலம் ஒருநாள் வரும் :-).
3/14/2007 09:50:00 PM.....
/ஊரில பேணியெறிஞ்சு விளையாடியிருக்கிறன். (அது மாதிரி நமது பண்பாட்டு விளையாட்டுக்கள் தெரியும்)/
சயந்தன், நானும் பேணியெறிஞ்சு எல்லாம் விளையாடியிருக்கின்றேன். 'நமது பண்பாட்டு விளையாட்டுக்கள்' குறித்து சற்றுக்குழப்பம் உண்டு; தெளிவுபடுத்தவும் :-).
.......
அநாமதேய நண்பர் 2: வருகைக்கு நன்றி.
/சரி நனவிடை என்றால் என்ன??? /
கனவு ---> நனவு. நனவிடைதோய்தல் என்றால் கடந்தகாலங்களை அசைபோடுதல்....எஸ்.பொ, 'நனவிடை தோய்தல்' என்றபெயரில் ஒரு தொகுப்புக் கூட வெளியிட்டிருக்கின்றார்.
'நனவிடை தோய்தல்'
3/15/2007 01:15:00 AMஅருமையான எழுத்து நடை
நன்றி திலகன்.
3/16/2007 12:59:00 AM....
உங்கள் வலைப்பதிவு வெறுமையாக இருக்கின்றதே. அங்கே எதையாவது எழுதத்தொடங்கலாமே...!
Post a Comment