கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தவறவிடப்பட்ட தருணங்களும் விழுங்கப்பட்ட வார்த்தைகளும்

Friday, March 16, 2007

-ஈரானியத் திரைப்படம் Baranஐ முன்வைத்து-

அகதிகளின் வாழ்வை எவராலும் முழுமையாகப் பதிவு செய்துவிடமுடியாது. இருண்ட குகைக்குள் ஒரு மின்மினியின் ஒளியாவது வந்துவிடாது என்றவாறுதான் பல அகதிகள் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எத்தனையோ இழப்புக்களுடன் வாழுகின்ற அகதிகளுக்கு வாழ்வில் சின்னச்சின்னதாய் தம்மை நெகிழ்த்திவிட்டுப்போகும் அழகிய தருணங்கள எத்தகை அருமையானது என்பதை -பிறரைவிட- அவர்களே அதிகம் அறிவர். தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லுதல் சிலருக்கு சில மாதங்களில், சிலருக்கு சில வருடங்களில், சிலருக்கு வாழ்நாட்களில் அப்படியொரு சந்தர்ப்பம் வராமலே போய்விடுவதுமுண்டு. Baran என்கின்ற இப்படம் அகதி வாழ்வில் முளைக்கும் மென்மையான காதலை இயல்பாய்க் காட்சிப்படுத்தியபடி விரிகின்றது.

ஈரானில் ஒரு அடுக்குமாடியைக் கட்டும் பின்புலத்தோடு படம் ஆரம்பிக்கின்றது. அங்கே ஈரானியர்களும் -அரசால் வேலை செய்ய உரிமை மறுக்கப்பட்ட- ஆப்கான் அகதிகளும் வேலை செய்கின்றார்கள். கட்டட வேலை செய்வதற்காய் பதின்மவயது லரீஃவ் (Lateef) அந்த இடத்திற்கு வருகின்றார். அங்கே லரீஃப் பிறரைப்போல சீமெந்துப்பைகளைக் காவுவதையோ, சுவர்களைக் கட்டியெழுப்புவதிலோ ஈடுபடுவதில்லை. அவருக்கான வேலை, அந்த வேலைத்தளத்தில் வேலை செய்பவர்களுக்கு தேநீரும், உணவும் தயாரித்து வழங்குவது. அதன் காரணமாக பிறரால் கேலி செய்யப்பட்டும், அவ்வப்போது சிலரோடு சண்டையும் பிடித்தபடியும் இருக்கின்றார், லரீஃவ்.

ஒருநாள் தவறுதலாய் ஒரு ஆப்கானிய அகதித்தொழிலாளர் மாடியிலிருந்து கீழே வீழ்ந்துவிடுகின்றார். அவரது கால் பலமாய்க் காயப்பட்டு வேலை செய்ய முடியாதுபோக அவரது மகனொருவன் (Rahmat) வேலைக்காய் வருகின்றார். கட்டட மேற்பார்வையாளர், அந்தப் பையன் மிகவும் சிறுவனாயிருக்கின்றான்; இவனால் கடுமையான் வேலைகளைச் செய்ய முடியாது என்று முதலில் நிராகரிக்கின்றார். இறுதியில் இந்தப்பையனுக்கும் வேலை இல்லாது போனால் அந்தக்குடும்பத்தால் சாப்பிடக்கூட முடியாது என்றபடியால் வேலைக்குச் சேர்த்துக்கொள்கின்றார். எனினும் அந்தப்பையன் வாய்திறந்து பேச முடியாத ஊமையாக இருக்கின்றான். ரமட் கடுமையான வேலைகளைச் செய்யக் கஷ்டப்படுவதால், லரீஃவின் வேலை ரமட்க்கு வழங்கப்படுகின்றது. மேலும், ரமட் தயாரிக்கும் தேநீரும், மதியவுணவும் சுவையாக இருக்கின்றது என்று பிறர் கூறுவது லரீஃவிற்கு பொறாமையைத் தருவதோடு, தனது இலகுவான வேலையை புதிதாய் வந்த ரமட் எடுத்துவிட்டார் என்று ரமட் மீது கோபமும் வருகின்றது. எனவே லரீஃவ் தொடர்ந்து ரமட்டை நக்கலடித்தபடியும் காயப்படுத்தியபடியும் வேலைத்தளத்தில் இருக்கின்றார்.

b4

தற்செயலாய் ஒருநாள் ரம்ட் ஆணல்ல -ஆண்வேசம் போட்ட பெண் என்பதை- லரீப்ஃ கண்டுபிடிக்கின்றார். அதன்பிறகு, அதுவரை ரமட் மீது இருந்த வெறுப்பும் பொறாமையும் போய்விட லரீஃப்ற்கு அந்தப்பெண் -rahmat- மீது ஈர்ப்பும் பரிவும் வந்துவிடுகின்றது. சில வாரங்களின் பின், ஆப்கான் அகதிகள் சட்டதிற்கு புறம்பாய் வேலை செய்கின்றார்கள் என்று கேள்விப்பட்டு அரச அதிகாரிகள் வேலைத்தளத்திற்கு வர லரீஃவ், ரமட்டை அவர்களிடமிருந்து காப்பாற்றுகின்றார். எனினும் தொடர்ந்து அந்தப்பகுதியில் ஆப்கான் அகதிகள் வேலை செய்யமுடியாத நெருக்கடிநிலை வருகின்றது.

ரமட் வேலைக்கு வருவதை முற்றாக நிறுத்தியதால், லரீஃவ்வை பிரிவும் வெறுமையும் சுழற்றியடிக்கின்றது. ரமட்டை தேடி லரீஃவ் ஆப்கான் அகதிகள் வாழ்கின்ற ஈரானிய நிலப்பரப்பை நோக்கிச் செல்கின்றார். வேலை எதுவுமின்றி ரமட்டும், காயப்பட்ட அவரது தகப்பனாரும் மிகவும் கஷடப்படுகின்றார்கள் என்பது புரிகின்றது. லரீஃவ் திரும்பவும் தனது வேலைத்தளத்திற்கு மீண்டு, தனது மேற்பார்வையாளரிடம்- ஊரில் தனது சகோதரி கடும்பிணியில் இருக்கின்றார்- ஒருவருடதிற்கான தனது சம்பளத்தை இப்பவே தாருங்கள் என இறைஞ்சுகிறார். மேற்பார்வையாளரும் பரிதாபப்பட்டு பணத்தைக் கொடுக்க, அதை ரம்ட் குடும்பத்தினரிடம் கொடுத்துவும்படி அவர்களின் நண்பரொருவரிடம் லரீஃவ் கொடுத்தனுப்புகின்றார். அந்த நபரோ --ரமட்டின் தகப்பனிடம் பணத்தைக் கொடுக்காது- அந்தப் பணத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு ஓடிவிடுகின்றார்.

இப்படியாக லரீஃவ், ரமட்டுக்கு உதவி செய்யப்போகின்ற ஒவ்வொருமுறையும் ஏதோவொரு தடங்கல் வந்துகொண்டேயிருக்கின்றது. இறுதியில் வேலை செய்வதற்கு அவசியமான த்னது அடையாள அட்டையை விற்று லரீஃவ் பணத்தைத் திரட்டுகின்றார் (அந்தப்பகுதியில் அகதிகள் நிறைய இருப்பதால் அடையாள அட்டை மிகவும் பெறுமதி வாய்ந்தது; புகைப்படத்தை கிழித்துவிட்டு வேறொருவரின் படத்தை அதில் இலகுவாய் ஒட்டி விற்கலாம்) . அந்தப்பணத்தை லரீப்ஃ நேரடியாக ரமட் குடும்பத்திடம் கொடுக்கும்போது அவர்கள் கூறும் ஒரு செய்தி இடியாக லரீஃவ் வின் நெஞ்சினில் இறங்குகின்றது. தன்னைவிட்டு ரமட் விரைவில் விலகப்போகின்றார் என்ற துயரம் லரீஃவ்வின் விழிகளில் கசிகிறது. கடைசிக்காட்ச்யில், ரமட் சிறுகுட்டையில் தனது பாதச் சுவட்டை பதித்துவிட்டுப் போவதை லரீஃவ் வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றார். ரமட், லரீஃவ்வை விட்டு விலகிச்செல்ல செல்ல, பெய்கின்ற மழை ரமட்டின் பாத அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாய் மறைப்பதுடன் படம் முடிகின்றது.

இப்படம் எளிய காட்சிகளாலும் சொல்லாடல்களாலும் நகர்த்தப்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வருகின்ற கதாமாந்தர்கள் வளவளவென்று நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருப்பதில்லை. பருவங்களோடு காட்சிகள் சடுதி சடுதியாய் மாறுவதைக் கமரா கலைநயத்தோடு படம்பிடிக்கின்ற அதேசமயம், கதை நிகழும் நிலப்பரப்பிலிருந்து கமராக் கோணம் நகர்ந்தும் விடுவதில்லை. இப்படம் ஒரு அகதிப்பெண் மீது, இன்னொரு நாட்டு ஆண் காதல் கொளவதை மென்மையாகச் சொன்னாலும், வருகின்ற ஆண்-பெண் பாத்திரங்கள் வாய் திறந்து எந்த உரையாடலையும் நேரடியாக நிகழ்த்தவில்லை. அவர்களுக்கிடையில் முகிழும் இவ்வழகிய உறவு சிறுசிறு காட்சிகளால் மட்டுமே நுட்பமாய் கவனப்படுத்தப்பட்டிருக்கும்.

(2)

இப்படத்தைப் பார்க்கும்போது காலம் எனக்குள் பின்னோக்கி மெல்ல மெல்ல நகர்ந்துகொள்ளத் தொடங்கியது. என்னுடைய பன்னிரண்டு பதின்மூன்று வயதுகளில் மட்டக்களப்பிலிருந்து ஒரு பெண் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்திருந்தார். கிழக்கு மாகாணத்தில் இருந்த சூழ்நிலை அவரையும் அவரது குடும்பத்தையும், வடக்கு நோக்கி துரத்தி அடித்திருந்தது. அதுவரை நாங்கள் -மூன்று பெடியங்கள்- வகுப்பில் முதல் மூன்று இடங்களில் மாறி மாறி வந்துகொண்டிருப்போம். ஆனால் புதிதாய் வந்திருந்த பெண்ணின் அறிவுக்கூர்மை எங்கள் எவரேனும் ஒருவரின் இடத்தை இல்லாமற்செய்துவிடும் என்ற பதட்டத்தை உருவாக்கியிருந்தது. என்னென்ன நேரங்களில் எப்படி எல்லாம் அவர் படிகின்றார் என்பதை எல்லாம் கவனமாய் நாங்கள் உளவு பார்க்கத் தொடங்கியிருந்தோம். எனினும் அவர் ஒவ்வொருமுறையும் பாடங்களில் கூடிய புள்ளிகள் எடுக்கும்போது ஒருவித பொறாமை கலந்த மகிழ்வுடன் பின்னாட்களில் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

b3

பிறகு போர்ச்சூழ்நிலைகளால் பல மாதங்களாய் பாடசாலை நடைபெறாமல் இருந்தவேளை அவரது வீட்டிற்கு சென்று ஆங்கிலமும் கணிதமும் படிப்பது நாளாந்த கடமையாயிற்று. அவரது தந்தையார் ஒரு கணித ஆசிரியர். நான் விடிகாலை எழும்பி முகங்கழுவி -நல்ல மூட் இருந்தால் குளித்துவிட்டு- அவர்களின் வீட்டை போனேனென்றால் மதியவுணவு வரை எங்களுக்கு கணித வகுப்பு நடக்கும் (வெவ்வேறு வயதுகளிலிருந்த பத்துப்பேர்கள் வரை அங்கே படித்துக்கொண்டிருந்தோம்). மதியவுணவின் பின் ஆங்கில வகுப்புக்கள் நடைபெறும். இன்னொரு ஊரில் அவர்களின் வீடு இருந்தபடியால், மதியவுணவுக்காய் வீட்டை வந்தபின் பிறகு பின்னேர வகுப்புக்காய் சைக்கிளை உழக்குவேன். சிலவேளைகளில் அந்தப்பெண்ணின் வீட்டிலையே சாப்பிட்டுவிட்டு நண்பர்களோடு விளையாடுவதும் உண்டு. ஆங்கிலச் சொற்களின் ஸ்பெல்லிங்கை கிளிப்பிள்ளை போல மனப்பாடம் செய்துவந்த பருவத்தில் -அப்படியல்ல- சொற்களை ஒலியாய் உச்சரிப்பதன் மூலம் இலகுவாய் ஸ்பெல்லிங்கூட்டி எழுதலாம் என்ற விளங்கப்படுத்திவிட்டவரும் அவர்தான். எனினும் நாங்கள் ஓம்/இல்லை என்பதற்கப்பால் பெரிதாக எதையும் உரையாடியதில்லை. வகுப்பில் எனது இடத்தை அவர் அபகரித்துவிடுவார் என்ற அச்சமும் பொறாமையும் என்னை அவரிடம் அதிகம் நெருங்க அனுமதிக்கவில்லை போலத்தான் தோன்றுகின்றது. ஆயினும் -இருவரும்- நமக்கிடையிலுள்ள ஈர்ப்பையும் பரிவையும் வேறு விதங்களில் வெளிப்படுத்தியபடி இருந்திருக்கின்றோம். பிறகு எங்கள் ஊர்ப்பக்கம் நிலைமை மிகவும் மோசமாகத் தொடங்கியது. ஒருநாள் ஒழுங்கையொன்றில் சந்தித்த அந்தப்பெண்ணின் தம்பி, தாங்கள் இன்னும் சில நாட்களில் இந்தியாவிற்குப் படகில் போகப்போகின்றோம் என்று கூறினார். அப்போதுதான் முதன்முறையாக அந்தப்பெண்ணோடு -ஓமோம்/இல்லை என்பதற்கப்பால்- சற்று விரிவாக மனந்திறந்து ஒருமுறையேனும் பேசவேண்டும் என்ற ஆசை எனக்குள் அரும்பத்தொடங்கியது.

எனது பொறாமைகள், பதட்டங்களுக்கு அப்பால் அவரை நோக்கி காதல்(?) மெல்லியதாய் வளர்ந்துகொண்டிருந்தது என்பது அந்தச்செய்தியினூடு எனது உள்மனதிற்குள் விளங்கத்தொடங்கியது. அவருடன் பேசுகின்றபோது ஏதேனும் ஒரு வார்த்தையிலேனும் எனது நேசத்தைத் தெரிவித்துவிடவேண்டும் என்ற விருப்பு நுரையாய் ததும்பிக் கொண்டிருந்தது. எனினும் போர் அதற்கெல்லாம் அவகாசம் தராமல் எங்களிருவரையும் வெவ்வேறு திசைகளில் மிக வேகமாய்.... மிக மோசமாய்... அடித்துத் துரத்தியது. தவறவிடப்பட்ட தருணங்களும், விழுங்கப்பட்ட வார்த்தைகளும் காலம்பூரா தொண்டைக்குழிக்குள் சிக்கிய மீன்முள்ளாய் மெல்லிய வலியைத் தந்துகொண்டிருக்கின்றது.

(3)
மஜீத் மஜீதியின், இப்படம் (Baran) அவரின் Children of heaven, Colour of Paradise போன்ற படங்களுக்குப் பிறகு 2001ல் வெளிவந்திருந்த படம். தணிக்கையும், ஒடுக்குமுறைகளும்(?) இருக்கும் ஈரானிலிருந்து இப்படியான படங்கள் வருகின்றன் என்பதோடு ஈரானில் குறிப்பிடத்தக்க பெண் நெறியாள்கையாளரும் இருகின்றார்கள் என்பதை மேற்கத்தேய சிந்தனைகள் ஈரான் பற்றி கட்டியெழுப்பும் விம்பங்கள குறித்து நிறைய யோசிக்கவேண்டி இருக்கின்றது. ஈரானின் பல்வேறு பகுதிகளில் அடிப்படைவாதத்தை மீறிய இஸ்லாம் இருப்பதைப்போன்று கூட, அமெரிக்கா பின்புலத்தில் இருக்கும் சவுதி அரேபியாவின் பலபகுதிகளில் இல்லையென்பது கவனிக்கத்தக்கது.

மஜீதியின் பிறபடங்களைப் பார்த்தவர்கள் இந்தப்படத்திலும் அவற்றின் தொடர்ச்சியைக் காணமுடியும். தேநீர் பரிமாறுகின்ற நேர்த்தி, நகர- புறநகர் பாகுபாடுகள் தொடர்ச்சியாக மஜீத்தின் படங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. Children of Heaven படத்தின் இறுதியில் வரும் சிறு மீன் குட்டையும், சிவப்பு மீன்களும் இந்தப்படத்திலும் வருகின்றது. மீன் குட்டையையும், மீன்களையும் ஒரு படிமமாய் நாங்கள் பார்க்கமுடியும். நாமெல்லோரும் பல நேரங்களில் தொட்டிக்குள் அகப்பட்ட மீன்கள்தான். நாம் விரும்பினாலும் நம்மால் அதன் கரைகளை உடைத்து நினைத்த விடயங்களைச் சாதிக்கமுடியாமல் பல சந்தர்ப்பங்களில் யதார்த்ததில் இருக்கின்றோம் அல்லவா? இப்படத்தில் வரும் லரீப்ஃ, ரமட்டும் கூட, நமக்கு தொட்டிக்குள் அகப்பட்ட மீன் குஞ்சுகளாய்த்தான் தெரிகின்றார்கள்.

b2

Baran படம், காதல் அரும்புவதை மென்மையாகச் சொல்வதைப் போன்றிருந்தாலும் அடிநாதமாய் இருப்பது அக்திகளில் துயரவாழ்வுதான். அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களும் சக மனிதர்களாய் மதிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கபபட ஒவ்வொரு நாடும் உதவ வேண்டும் என்ற அவாவே இப்படத்தில் முக்கிய இழையாக இருக்கின்றது. 9/11 தாக்குதல் அமெரிக்காவில் நடப்பதற்கு முன்னரே, ஈரானில் 1.5 மில்லியன் ஆப்கான் அகதிகள் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படக்கூடியது. தலிபான காலத்து ஆப்கானிஸ்தானை சித்தரிக்கும் ஒசாமா (Osama) படத்தைப் பார்க்கும் ஒருவர், அப்படத்தில் Baran படத்தின் பாதிப்புக்கள் சில இடத்தில் இருப்பதை தெளிவாகக் காணமுடியும்.

பலவேறு மொழிகளைப் பேசுபவர்களாய், வெவ்வேறுபட்ட நிலப்பரப்புகளிலிருந்து வருகின்றவர்களாய் இருப்பினும் அகதிகளின் சோகங்களும் வெறுமைகளும் ஆளுக்காள் அவ்வளவு வேறுபடுவதில்லை. எல்லா அகதிகளும் தம் சொந்த நாட்டிற்கு/ ஊரிற்கு திரும்புவதைப் பற்றியே நிறையக் கனவுகளைக் கண்டுகொண்டிருக்கின்றார்கள். பலருக்கு அவை வெறும் கானல் கனவுகளாய்ப் போய்க்கொண்டுமிருக்கின்றன. பலர் தங்கள் நாட்டில்/ஊரில் அழகான ஆறுகளும், உயர்ந்த மலைகளும், அற்புதமான வாழ்வும் ஒருகாலத்தில் இருந்ததென -தேவதைக்கதைகள் போல- தமது சந்ததிகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். போர்ச்சூழலில், எல்லாமே எங்களைக் கைவிட்டபொழுதிலும் உயிர்வாழ்வதற்கு நல்ல தண்ணீரைத் தருவதை மட்டும் எங்கள் ஊர்க்கிணறுகள் ஒருபோதும் நிறுத்தியதேயில்லை என்று அகதியாக்கப்பட்ட நானும் பிள்ளைகளுக்குச் சொல்லவென சில கதைகளை மனதினுள் தேக்கிவைத்திருந்தேன். ஆனால் இப்போது தண்ணீருக்குப் பதிலாய் மனித உடல்கள் எங்களூர்க்கிணறுகளிலிருந்து மிதந்துகொண்டிருக்கின்றன என்பதை அறிந்தபின்னும் எப்படி கிணறுகள் பற்றிக் கதைகள் சொல்லமுடியும்?

(அண்மையில் கொலைசெய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்ட யாழ் வளாக மாணவி, மயூராவிற்கு....)

18 comments:

Anonymous said...

Children of Heaven படத்தின் இறுதியில் வரும் சிறு மீன் குட்டையும், சிவப்பு மீன்களும் இந்தப்படத்திலும் வருகின்றது

another iranian film White Balloon has recurring scene of gold fishes and ponds.

Osama is very much similar to the films Boys don't cry and another iranian film, Daughters of the Sun.

3/16/2007 09:35:00 AM
Anonymous said...

Afgan refugees in Iran is also shown in The Cyclist. Also, Kandahar, in spite of Afgan theme shot in Iran with Afgan refugees.

3/16/2007 09:37:00 AM
இளங்கோ-டிசே said...

தகவல்களுக்கு நன்றி அநாமதேய் நண்பர்.
....
Baran படத்தை அண்மையில் தேடகம் அமைப்பு திரையிட்டபோது இங்கே
பார்த்திருந்தேன். Kandhar, Osama, Children of Heaven போன்றவற்றை ஒரு நண்பர் அனுப்பிய DVDக்களில் பார்த்திருக்கின்றேன். நீங்கள் குறிப்பிடும் பிற ஈரானியப் படங்களையும் பார்க்கவேண்டும்.

3/16/2007 05:47:00 PM
இளங்கோ-டிசே said...

மஜீத் மஜீதியின் இரண்டு படங்கள் குறித்து நிவேதா எழுதிய பதிவுகள்...
Children of Heaven
http://rekupthi.blogspot.com/2006/08/blog-post_20.html

Colour of Paradise
http://rekupthi.blogspot.com/2006/10/blog-post.html

3/16/2007 05:48:00 PM
அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நான் முதலில் பார்த்த மஜீதி படம் இது. கடைசிக் காட்சியின் அழகும் நயமும் ஆயிரம் கவிதைகளுக்குச் சமமாய் இருக்கும்.

அடுத்து children of heaven , color of paradise பார்த்தேன். children of heaven மட்டும் ஒரு 30 தடவையாவது பார்த்து இருப்பேன். இந்த மாதிரி படங்கள் நம் ஊரில் என்று வரும்? குறைந்தபட்சம் subtitle உடனாவது ஒளிபரப்பலாம்.

உங்கள் சொந்த அனுபவங்களோடு இந்தக் கதையைப் பொருத்திப் பார்க்கையில் கதையின் ஆழம் இன்னும் கூடிய வலியுடன் புரிகிறது..

3/16/2007 08:01:00 PM
இளங்கோ-டிசே said...

ரவிசங்கர், பின்னூட்டத்திற்கு நன்றி.
.....
உங்களைப்போலத்தான் நானும் children of heaven ஆறேழு முறை பார்த்திருக்கின்றேன். முக்கியமாய் -தமிழ்ப்படங்கள் பார்க்கப்பிரியப்படாத/subtitles வாசிக்கமுடியாத- அண்ணாவின் பையனுக்குக் கூட அது மிகவும் பிடித்திருந்தது. அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு அப்படி வேறு படங்கள் இருந்தால் தனக்கு பார்க்க விருப்பம் என்று கூறியிரூந்தான். chidren of heavenனில் நடிக்கும் சிறுவனின் விழிகளே -மொழியில்லாது- கதை நூறு பேசும்.

3/17/2007 09:50:00 AM
கார்த்திக் பிரபு said...

ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்

நேரம் இருந்தா என் பக்கம் வந்து உங்கள் கருத்துக்க்ளை சொல்லவும்

3/21/2007 07:10:00 AM
செல்வநாயகி said...

அறிமுகத்திற்கு நன்றி டிசே.

3/21/2007 11:50:00 AM
Narain Rajagopalan said...

Good intro DJ. Will see if i can get here in Chennai. Have seen other films of Majeed. Have you seen Micheal Winterbottom's The Road to Guantanamo (2006)- a must watch movie in the same refugee backdrop from Pakistan to US. http://www.imdb.com/title/tt0468094/

3/21/2007 02:29:00 PM
இளங்கோ-டிசே said...

கார்த்திக் பிரபு: தவறான ஆளிடம் வந்து சேர்ந்துவிட்டீர்களென நினைக்கின்றேன். எனது வலைப்பதிவு எங்கும் தெரிவுசெய்யப்படவில்லை.

பின்னூட்டம் இடவில்லையெனினும் உங்கள் பதிவுகள் தமிழ்மணத்து முகப்பில் வரும்போது தொடர்ந்து வாசித்துவருகின்றேன்.
.....
செல்வநாயகி நன்றி.
.....
நரேன்:மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி :-).

நீங்கள் குறிப்பிட்ட Road to Guantanamo படத்தை பார்க்கவில்லை. அத்தோடு -இன்று கையில் கிடைத்த புதியபார்வையில்- விமர்சனம் எழுதப்பட்டுள்ள Micheal Winterbottomன் மற்றொரு படமான In the world ஐயும் பார்க்கவேண்டிய பட்டியலில் சேர்க்கவேண்டும்.

3/22/2007 07:25:00 PM
பிச்சைப்பாத்திரம் said...

Thanks for the intro

3/23/2007 05:46:00 AM
Anonymous said...

///அகதிகளின் வாழ்வை எவராலும் முழுமையாகப் பதிவு செய்துவிடமுடியாது. இருண்ட குகைக்குள் ஒரு மின்மினியின் ஒளியாவது வந்துவிடாது என்றவாறுதான் பல அகதிகள் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எத்தனையோ இழப்புக்களுடன் வாழுகின்ற அகதிகளுக்கு வாழ்வில் சின்னச்சின்னதாய் தம்மை நெகிழ்த்திவிட்டுப்போகும் அழகிய தருணங்கள எத்தகை அருமையானது என்பதை -பிறரைவிட- அவர்களே அதிகம் அறிவர். தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லுதல் சிலருக்கு சில மாதங்களில், சிலருக்கு சில வருடங்களில், சிலருக்கு வாழ்நாட்களில் அப்படியொரு சந்தர்ப்பம் வராமலே போய்விடுவதுமுண்டு. ///

எவ்வளவு அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்...சிறப்பு..!!

3/23/2007 07:45:00 AM
Anonymous said...

சுரேஷ் கண்ணன் & ரவி: நன்றி.

3/26/2007 09:15:00 AM
Anonymous said...

கார்திக்வேலு says:
April 12, 2007 at 5:18 am

டி.சே
அருமையான படம் இது.
நாடகத்தனமில்லாமல் ஒரு நாடகத்தை எப்படி எடுக்கலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.இதில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருக்கும் நடிப்பில் எந்த முன் அனுபவமும் கிடையாது.

இந்த வகை சினிமா இந்திய ரசிப்புத்தன்மையை வழிநடத்தும் தற்போதிருக்கும் “அதீத நாடகத்தன்மை முறை” படங்களுக்கு சிறந்த மாற்றாக அமையும்.

Special mention goes to Zahra Bahrami who acted as Rahmat

//மஜீதியின் பிறபடங்களைப் பார்த்தவர்கள் இந்தப்படத்திலும் அவற்றின் தொடர்ச்சியைக் காணமுடியும். //
உண்மையே ..very poignant in style and content.

மிகக் கடுமையான தணிக்கை அமைப்பைக் கடந்து மிக நளினமாக
சொல்லவந்ததை சொல்லி விடுகிறார்.

Osama is not that subtle in the narration .. ex the scene where the children in the madarassa/ school tease the her girl who is pretending to be a boy ..still effective nonetheless.

வெகு நாட்கள் முன்பு பாரன் பற்றி எழுதியது இங்கு
http://blog.360.yahoo.com/blog-LrKemvg6erTXy65kEwi89Z6r36CuCw–?cq=1&p=12

(எனது மற்ற வலைப்பதிவில் இடப்பட்ட கார்த்திக்கின் பின்னூட்டம், வாசிப்புத் தொடர்ச்சிக்காய் இங்கே பதிப்பிக்கப்படுகின்றது. ~டிசே)

4/12/2007 09:24:00 AM
இளங்கோ-டிசே said...

கார்த்திக் பின்னூட்டத்திற்கு நன்றி.
....
அண்மையில் ஒரு ஈரானியத் தோழியுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர்களின் புத்தாண்டு விழாக்கொண்டாட்டத்தில் (சென்ற மாதமளவில்தான் அவர்கள் புதுவருடத்தைக் கொண்டாடியிருக்கின்றார்கள்)gold fishம் ஒரு அடையாளமாய் இருப்பதாய் கூறியபோது, அது எதை அடையாளப்படுத்துகின்றது என்று கேட்டிருந்தேன். செழிப்பு,சுதந்திரம் போன்றவற்றை அடையாளப்படுத்துகின்றது என்றவகையில் கூறியிருந்தார். ஒரு இனத்தின் கலாச்சாரத்தின் வேர்களை அறியும்போது, அவர்களினூடாக வருகின்ற படைப்பு நமக்கு மேலும் நெருக்கமாக்கூடும் போலும்.

4/14/2007 07:34:00 PM
ஹரன்பிரசன்னா said...

டிஜே, இன்றுதான் படித்தேன். நன்றாக இருக்கிறது.

நீங்கள் எழுதிய திரைப்பட விமர்சனங்களை மட்டும் தனியே படிக்க, Tags சேர்க்கவில்லையா?

11/25/2007 04:32:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி ஹரன் பிரசன்னா.
......
/நீங்கள் எழுதிய திரைப்பட விமர்சனங்களை மட்டும் தனியே படிக்க, Tags சேர்க்கவில்லையா?/
ஒருவித சோம்பல்தான். இனி இயன்றளவு Tagsல் சேர்த்துவிட முயல்கின்றேன் (கூடவே இது இன்னும் பழைய வார்ப்புருவில்தான் இயங்குகின்றது). இந்த வலைப்பதிவில், 'திரைப்படம்' பகுதியில் எழுதியவற்றை ஒன்றாக்கி வைத்திருக்கின்றேன் (அங்கேயும் எழுதிய எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்படவில்லைத்தான் :-).)

11/26/2007 09:09:00 AM
ஹரன்பிரசன்னா said...

Thanks DJ.

11/26/2007 10:35:00 AM