கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

துப்பாக்கி தின்று விழுங்கிய கவிஞன்

Tuesday, April 17, 2007

-சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்)-

விடிவுபற்றிய ஏக்கமும் தவிப்பும் எல்லா மனிதர்களிடத்திலும் தேசம் கடந்து விரவிக்கிடக்கின்றபோதிலும் இரத்தச் சகதியான இந்த வாழ்வின் மீதான பயணம் குறித்த பீதி எல்லாவற்றையும் தின்றுவிடுகின்றது.
..........
நாங்கள் பயத்தின் மீதும் சிலுவையின் மீதும் அறைந்தறைந்து ஒளியிழக்கச் செய்த எமது சொற்களை மீட்டெடுப்பது எப்போ?
இன்று எழுதப்பட்டவை பற்றியல்ல எழுதாமல் விடப்பட்டவை பற்றியே பேச வேண்டியிருக்கிறது. எல்லாம் எழுதப்பட்டுவிட்டது என நாங்கள் கருதினால் படைப்பின் மூலம் அநீதிகள் என திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டவை மீளவும் மீளவும் தலைவிரித்தாடுகிறது எனின் எமது எழுத்தின் மூலம் சிறிதளவேனும் சமூகமாற்றமோ அரசியல் மாற்றமோ நிகழவில்லை என்ற எண்ணம் எம்முள் மூளும் எனின் அது பற்றியே நாங்கள் சிந்திக்கவும் பேசவும் வேண்டியிருக்கிறது.
.......
வாழ்வு குறித்தான் இந்தப் படைப்பு முறைமையை அல்லது படைப்பாளனைச் சகித்துக்கொள்ள முடியாத, ஒரு துப்பாக்கியையோ அல்லது கத்தி, கோடரியையோ கூட கையில் எடுக்கத் துணியாத, அவற்றின் வருகைக்காக அஞ்சி ஒடுங்கும் அப்பாவி மக்களின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அரசோ அல்லது அது சார்ந்த இராணுவமோ அது சார்ந்த அமைப்புக்களோ பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கை சொல்லில் உயிர்ப்பிக்க முடியாதவை.
......
இந்தக் காலத்தின் மீதும் சூழலின் மீதும் மிகப்பெரிய மாற்றம் வேண்டி விடிவுவேண்டி தமது வாழ்வை நமக்காக அர்ப்பணித்த நமது மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் பலர் தமது கடைசிக் காலத்தில் அநாதைகளாகவோ அல்லது இது தமது மரணகாலம் என்று அறியாமலே சாகடிக்கப்பட்டோரையோ நாங்கள் மிக நன்கு அறிவோம். இதில் துயரமானது என்னவெனில் அது இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான்.

அடக்குமுறையாளர்களின் கொடூரம் ஒருபுறம் இடப்பெயர்வும் வறுமையும் நோயும் மறுபுறம் என சீரழிக்க்கப்படும் ஒரு எழுத்தாளனது குரலை நாங்கள் இந்தத் தேசம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக ஒன்றிணையவும் குரல் கொடுக்கவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமைக்கான குரலாக நிலம் உங்கள் முன் வருகிறது.
....
(நிலம் இதழ் 03, நவம்பர்/2001- தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்...)

Nilam

சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம்

என் அன்புக்கினிய தோழர்களே
எனது காதலியிடம் சொல்லுங்கள்
ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த
வனாந்தரத்திலிருந்து
ஒரு மிருகம் என்னை இழுத்துச்சென்றுவிட்டது;
கடைசியாக நான் அவளுக்கு முத்தமிடவில்லை
அவளது கண்களில் வழமையாயிருக்கும் ஒளியை நான் காணவில்லை
கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது.
கடைசிவரை, நட்சத்திரங்களையோ புறாக்களையோ
எதிர்பார்த்த அவளுக்குச் சொல்லுங்கள்
எனது காலத்திலும் எனது காலமாயிருந்த
அவளது காலத்திலும் நான் அவற்றைக்காணவில்லை;
என்னை ஒரு மிருகம் இழுத்துச்சென்றுவிட்டது.

நான்,
இனிமேல்,
எனது சித்திரவதைக்காலங்களை
அவளுக்கு ஞாபகப்படுத்தமுடியாது
எனவே தோழர்களே,
நான் திரும்பமாட்டேன் என்றோ அல்லது
மண்டையினுள் குருதிக்கசிவாலோ
இரத்தம் கக்கியோ
சூரியன் வெளிவர அஞ்சிய ஒரு காலத்தில்
நான் செத்துப்போவேன் என்பது பற்றிச்சொல்லுங்கள்.

நம்பிக்கையற்ற இந்த வார்த்தைகளை
நான் அவளுக்குப் பரிசளிப்பது
இதுவே முதற்தடவை, எனினும் அவளிடம் சொல்லுங்கள்
அவர்கள் எனது இருதயத்தை நசுக்கிவிட்டார்கள்
மூளையை நசுக்கிவிட்டார்கள்
என்னால் காற்றை உணரமுடியவில்லை.

எஸ்போஸ்
-10.09.2001 கைது செய்யப்படுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர் எழுதியது-

......
எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர் தனது முப்பத்திரண்டாவது வயதில் துப்பாக்கிகளுக்கு வாழ்வை இரைகொடுத்தவர். துப்பாக்கிகள் ஆளும் காலத்தில் துப்பாக்கிகளால் வேறெதைச் செய்ய ஏலும்? அல்லது நம்மால்தான் ஏது செய்ய இயலும்?

எஸ்போஸ், கவிதைகளுக்காய் 'நிலம்' என்ற காலாண்டிதழை நடத்தியவர். தெரிந்த கவிஞர்களின் கவிதைகளை மட்டுமில்லாது, கவிதைகளுக்கான விமர்சனங்களையும், புதிய கவிஞர்களை இனங்காட்டவும் 'நிலம்' காலாண்டிதழின் ஊடாக எஸ்போஸ் முயன்றிருக்கின்றார். யாழ் இடப்பெயர்வுகளை (?) காலச்சுவட்டில் எழுதியபோது -காலச்சுவட்டின் அசிரத்தையால்- எஸ்போஸின் சொந்தவிபரங்கள் வெளியிடப்பட்டு 2001 ஆண்டில் அரச இயந்திரத்தினால் கைதுசெய்யப்பட்டவர் (மேலே தரப்பட்ட கவிதை அவர் கைதுசெய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எழுதப்பட்டது). 'நிலத்தில்' மட்டுமின்றி பலவேறு இதழ்கள்/சஞ்சிகைகளில் பரவலாக எழுதியவர்.


அவரது ஏழு வயது மகன் சாட்சியாய் இருக்க நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது மிக அவலமானது. முன்னர் -2001ல்- கைதுசெய்து சித்திரவதைக்கு பின் எஸ்போஸை விடுதலை செய்த 'மனிதாபிமானம்' கூட இந்தமுறை துப்பாக்கிகளோடு வந்தவர்களுக்கு இருக்கவில்லை.

மக்கள் இல்லாமற்போய்க்கொண்டிருப்பதை இலக்கங்களில் மட்டுமே கணக்கில்கொள்ளும் ஒரு நிலப்பரப்பில் தனித் தனியாக ஒவ்வொருத்தருக்கும் அஞ்சலியோ சொட்டுக்கண்ணீரோ விடுவதுகூட அருகதையற்றதாகிப் போய்க்கொண்டிருக்கின்றது.....

4 comments:

கானா பிரபா said...

சற்று முன்னர் தான் புதினம் தளத்தின் மூலம் சேதி அறிந்தேன். உங்கள் பதிவில் அவரைப்பற்றி மேலும் அறியமுடிகின்றது. இன்னொரு பேனாப் போராளியின் மரணம் :-(

4/17/2007 11:38:00 PM
வசந்தன்(Vasanthan) said...

டி.சே,
நான் சற்றுமுன்தான் செய்தியைப் பார்த்தேன். உடனே செய்தியைப் பதிவாக்கினேன். கானாபிரபா சொல்லித்தான் நீங்கள் இடுகை இட்டிருந்தது தெரிந்தது.
முப்பத்திரண்டு வயதென்பதை நம்பமுடியவில்லை. நானறிய பத்தாண்டுகளுக்கு முன்பே எஸ்போஸ் வன்னியில் பிரபலமாயிருந்தார். அவரைச் சந்தித்ததில்லை. அவர் வவுனியா வரமுன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில்தான் வசித்து வந்ததாக அறிந்தேன். பின் ஜெயசிக்குறு நேரத்தில்தான் வவுனியாவுக்கு வந்திருக்க வேண்டும். மிகக்குறைந்த வயதில் காத்திரமான படைப்புக்களை வழங்கியிருக்கிறார்.

4/18/2007 08:53:00 AM
இளங்கோ-டிசே said...

வசந்தன், இப்பதிவுக்கு முன் பொடிச்சியும் இச்செய்தியைப் பதிவாக்கியிருந்தார்.
.....
கருணாகரனின் ஆகர்சத்தால் உத்தேசம் பெற்ற பல வன்னிக்கவிஞர்களில் இவரும் ஒருவர் என நினைக்கின்றேன். எஸ்போஸ் 2000 அளவில் அவரது கவிதைகளினூடாக எனக்கு அறிமுகமாயிருந்தார்.

'பரதேசி'களின் தொகுப்பை முன்வைத்து கருணாகரனிற்கும் வாசுதேவனிற்கும் இடையில் நடந்த -தாயகம் X புலம்பெயர்- விவாதத்தை அண்மையில் 'அப்பால தமிழில்' வாசித்தபோது கருணாகரனின் வார்த்தைகள் மிகவும் பாதித்தது.

'..இவ்வளவு அவலங்கள் துயரங்கள் கொடுமைகள் நிறைந்ததுதான் புலம்பெயர் வாழ்வென்று தெரிந்தபோதும் இன்னும் சனங்கள் புலம்பெயரத்தான் காத்திருக்கிறார்களே தவிர யாரும் புலத்திலிருந்து அதாவது அந்தக்கொடுமைகளிலிருந்து மீண்டு பரதேசித்தனத்திலிருந்து விடுபட்டு தாய்நாடு திரும்பத்தயாரில்லையே. ஏனென்றால் அவல வாழ்க்கைதான் அது என்றாலும் அதற்கு உத்தரவாதமுண்டு. உயிருக்கு உத்தரவாதம். பொருளாதாரத்துக்கு உத்தரவாதம். சிரமங்கள் அவமானங்கள்தான் என்றாலும் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் என அதற்கு நிலைத்தன்மை இருக்கிறது. இது போர் நடக்கும் தாய்நாட்டில் இல்லை. எவ்வளவுதான் தாய்மண்ணின் சுவை அதிகம் என்றாலும் யதார்த்தத்தில் அந்தச்சுவையை அனுபவிகக்க எத்தனை பேருக்கு விருப்பம். எத்தனை பேர் அதற்காக மீண்டும் இப்போது விரும்பிவரத்தயார். இப்படி யாரும் வரவேண்டும் என்று இங்கே கேட்கவில்லை. அப்படிக்கேட்பது சுத்த அபத்தமானது. இதை யாரும் தவறாக விளங்கி விடவேண்டாம். அது பல எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன். நான் சொல்லவருவது யதார்த்;தத்தை நாம் கணக்கிலெடுக்காமல் வெறும் கற்பனாவாதத்தில் சிலிர்க்கக்கூடாது. உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் கொண்டுவிடவும் கூடாது...'
(http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=592&Itemid=60)


எத்தனையோ விமர்சனங்களுடன் புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்; ஈழத்தில் இருப்பவர்களின் வாழ்க்கைதான் எவ்வளவு துயரமானது; எஸ்போஸைப் போல தினம் தினம் எத்தனைபேர் எல்லாப்பக்கத்திலிருந்தும் இல்லாமற்போய்க்கொண்டிருக்கின்றார்கள்?

4/18/2007 04:02:00 PM
தமிழ்நதி said...

"இவ்வளவு அவலங்கள் துயரங்கள் கொடுமைகள் நிறைந்ததுதான் புலம்பெயர் வாழ்வென்று தெரிந்தபோதும் இன்னும் சனங்கள் புலம்பெயரத்தான் காத்திருக்கிறார்களே தவிர யாரும் புலத்திலிருந்து அதாவது அந்தக்கொடுமைகளிலிருந்து மீண்டு பரதேசித்தனத்திலிருந்து விடுபட்டு தாய்நாடு திரும்பத்தயாரில்லையே. ஏனென்றால் அவல வாழ்க்கைதான் அது என்றாலும் அதற்கு உத்தரவாதமுண்டு. உயிருக்கு உத்தரவாதம்."
இந்த வார்த்தைகளை வாசித்தபோது எனது வாழ்வோடு அதனை ஒப்பிட்டுப் பார்த்தேன். அந்த நிலத்தில் வாழும் ஆசையோடு காத்திருப்பவர்களின் நம்பிக்கையை அறுத்தெறிகிறது எஸ்போஸ் போன்றவர்களின் மரணங்கள். எல்லாவற்றையும்... எல்லாவற்றையும் விட உயிர்தான் பெரிது என்ற உண்மை எவ்வளவு கசப்பானது குரூரமானது மேலும் கோபங்கொள்ளத் தூண்டுவது. ஆம்!துப்பாக்கிகள் ஆளும் காலத்தில் மெளனமாயிருத்தல் நன்றே.

4/18/2007 09:24:00 PM