கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வவுனியாவிலுள்ள முகாங்களைப் பற்றிய நேரடி அனுபவம்

Sunday, February 22, 2009


வவுனியா 'உள்ளே இடம்பெயர்ந்த மக்கள்'
(IDP) நல்வாழ்வு மையங்களுக்கான எனது பயணம்

-வைத்தியர் தயா தங்கராஜா

தமிழில்: டிசே தமிழன்

வன்னியில் நடக்கும் போர் பற்றியும், அதனால் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அறிந்துகொண்டிருந்தாலும், நான் நேரே சென்று அறியும்வரை இவ்வளவு கொடூரமாய் அது இருக்குமென ஒருபோதும் நினைத்ததில்லை. எங்கள் வளர்ப்புப் பிள்ளையொருவர் போரில் கொல்லப்பட்டுவிட்டாரென்று ஒரு அழைப்பு தற்காலிக (அகதி)முகாமிலிருந்த சபை உறுப்பினரிடமிருந்து வந்திருந்தது. துயரத்தைப் பற்றி நான் எனது மாணவர்களிடம் பலமுறை விரிவுரை செய்திருந்தாலும், துயரத்தின் ஆழத்தை அறிவது இதுவே எனக்கு முதல்முறையாக இருந்தது. 'இல்லை, இல்லை, இப்படி (நடந்து) இருக்க முடியாது' என நான் அழுதேன். நான் நேராக அங்கிலிக்கன் ஆயரின் அலுவலகத்திற்குச் சென்றேன். மதிப்புக்குரிய நேசகுமாரை நான் சந்தித்தபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர் (வளர்ப்புப் பிள்ளை) தப்பிவிட்டார் என்றும் இப்போது ஏதோ ஒரு முகாமில் இருக்கின்றார் எனவும் அவர்கள் சொன்னார்கள்.

அடுத்த நாள் ஒரு இருக்கையைப் பதிவுசெய்து வவுனியாவிற்கு புகைவண்டியில் போனேன்.அதிகாலையில் வெளிக்கிட்டு நான் வவுனியாவைப் பிற்பகலில் போய்ச்சேர்ந்தேன். எனது வளர்ப்புப் பெண் எனக்காக ஸ்ரேசனின் காத்துக்கொண்டிருந்தார். நான் நேராகவே முகாமுக்குச் சென்றேன். ஒருவரும் முகாமிற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

பாடசாலைகள் தற்காலிக முகாங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை கொட்டகைகளாக அமைக்கப்பட்டிருந்தன; எப்படிச் சொல்வதென்றால் 5-6 மீற்றர் உள்ள கூடாரங்களைப் போன்று. இராணுவ முகாங்களைச் சுற்றி எப்படி முள்ளுக்கமபிகள் இருக்குமோ அப்படியே இந்த (அகதி) முகாங்களைச் சுற்றியும் முள்ளுக்கம்பிகள் இருந்தன. உள்ளேயிருப்பவர்களை வீதியின் மற்றப்பக்கத்தால் மட்டுமே பார்க்க முடியும். பாதுகாப்பு மிகவும் இறுக்கமாய் இருந்தது. 'கிட்ட வரத் துணியாதே, இங்கிருந்து போ, இங்கிருந்து போ' என்ற மற்ற இராணுவத்தினரின் வெருட்டல்களை அசட்டை செய்து, நான் முகாமுக்குப் பொறுப்பான இராணுவ வீரரை நோக்கிச் சென்றேன்.

நான் அவரை அணுகி, எனது சிங்களம் மிகவும் மோசமாக இருந்ததால் ஆங்கிலத்தில் பேசினேன். நான் இம்முகாமிலுள்ள மதகுருவாயுள்ள எனது மகனைப் பார்க்க விரும்புவதாய் அவரிடம் கூறினேன். அவர் எனது வார்த்தைகளை எனது மகனிடம் கொண்டுசெல்லக்கூடிய கனிவானவராய் இருந்தார், ஆனால் என்னை வீதியின் மறுமுனையில் நிற்கச் சொன்னதோடு, எனக்கு ஜந்து நிமிடங்கள் மட்டுமே தருவேன் என்றும் சொன்னார். பத்து நிமிடத்தில் டானி வெளியே வந்தார். அவர் மிகவும் களைப்பாகவும், மன உளைச்சலுக்குள்ளானவர் போலவும் இருந்தார்.

அவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றுவதற்காய் ஒவ்வொரு இடங்களாய் ஓடியிருந்தனர். எறிகணைகள் மிகவும் கோரமாய் இருந்ததால் அவர்களால் பதுங்குகுழியை விட்டு வெளியே வருவதே மிகவும் கடினமாய் இருந்தது. ஒவ்வொரு கணமும் (விமானக்)குண்டு வீச்சாகவும் துப்பாக்கி வேட்டுக்களாகவும் இருந்தன. அவர் கருணா நிலையத்தின் பொறுப்பாளாராக இருந்தார். கருணா நிலையத்தில் உளநிலை குறைந்தவர்களோடு பாடசாலைக்குப் போகும் சிறுமிகளும் தங்கியிருந்தனர். ஒரு ஞாயிறு இரவு (பெப்ரவரி 15, 2009) சிறிய பிரார்த்தனையின் பின், மாலையில் (வன்னியை விட்டு)வெளியேறுவதாய் முடிவு செய்தனர். எனினும் விடிகாலை 1.30க்கே வெளியேறினர். எவ்வளவு கொடூரமாய் அது இருந்திருக்குமென்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

நாங்கள் வன்னிக்குள் வேலை செய்ததால், என்னால் மழையாகப் பொழியும் எறிகணைகளினதும், விமானக்குண்டுகளினதும் ஆபத்துக்களை எண்ணிப் பார்க்க முடிகிறது. அவர்கள் அடர்ந்த காடுகளிலுள்ள யானையிலிருந்து விசமுள்ள பாம்புகள் வரை சிறியதும் பெரியதுமான எல்லாப் பிராணிகள் மீதும் அவதானமாக இருக்கவேண்டியிருந்தது. இருட்டில் பல மணித்தியாலங்கள் நடந்து, கொல்லப்பட்ட உடலங்கள் மீதும், அங்குமிங்குமாய் பரவியிருந்த மனிதவுடலின் பகுதிகள் மீதும் சரிந்து விழாமல் வரவேண்டியிருந்தது. அவர்கள் இறுதியில் வவுனியாவுக்கு வருகின்ற பேருந்துகளைக் கண்டார்கள். அவர்கள் பேருந்து ஒன்றில் ஏறியபோது, எறிகணை ஒன்று வந்து இன்னொரு பேருந்தின் மீது வெடித்தது. தங்களோடு (கருணா நிலையத்தில்) தங்கிருந்த பதினான்கு பேரைக் காணவில்லை என்று அவர் சொன்னார். (பிறகு ஆறு பேர் கண்டுபிடிக்கப்பட்டார்கள்).

நாங்கள் (அகதிமுகாமில்) காத்திருந்தபோது, மதியவுணவுப் பொதிகள் வானிலிருந்து கொண்டுவரப்பட்டன. மதிய உணவுக்கான பொதி மிகவும் சிறியதாக இருந்ததை நாம் கவனித்தோம். ஒரு உணவுப்பொதி 650 கிராமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக பின்னர் நான் நம்பத்தகுந்த ஒரு நபரிடமிருந்து கேள்விப்பட்டேன். ஆனால் ஒவ்வொரு பொதியும் கிட்டத்தட்ட 300 கிராமாகவே இருந்தது.

அவ்வாறே நான் மற்ற முகாங்களுக்குச் சென்றபோது, வீதியின் மறுமுனையிலிருந்து பார்த்தபோது, நூற்றுக்கணக்கான ஆண்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள், சிலவேளைகள் இதுவே நீண்ட நாட்களுக்குப் பிறகான முதல் குளியலாகவும் அவர்களுக்கு இருக்கலாம். திறந்த வெளியில் பத்து ஷவர்கள் இருக்கையில், எல்லோரும் தண்ணீருக்காய்த் தள்ளுப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டுவிடும். ஆண்களும் இராணுவத்தினரும் இருக்கும் இவ்வாறான ஒரு திறந்தவெளியில் எப்படிப் பெண்களால் சமாளிக்க முடியுமென்று நான் யோசித்தேன்! என்ன கழிவறை வசதிகள் அவர்களுக்காய் செய்யப்பட்டிருக்கும்?

வைத்தியசாலைக்கான எனது பயணம் மனதை உலுக்கக்கூடியதாக இருந்தது. விபத்துப் பகுதியிலிருந்தவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே (ஏதோவொரு) உறுப்பை இழந்தவராக இருந்தார்கள். வெளியே இருந்தும் வேறு எவரும் உள்ளே வந்து இவர்களைப் பார்க்க அவ்வளவாய் அனுமதிக்கப்படவில்லை. நோயாளிகளுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்பதும் தெரியாது. அவர்கள் மிகவும் மன உளைச்சலுக்குள்ளானவர்கள் போல இருந்தார்கள். தங்கள் வலியின் காரணமாகவும், கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவுகளில் அவர்கள் கத்துபவர்களாகவும் அழுபவர்களாகவும் இருந்தார்கள். நிறையப் பேர் தங்கள் இரண்டு கால்களை இழந்தவர்களாகவும், சிலர் தங்கள் கைகளை இழந்தவர்களாகவும் இருந்தார்கள்.

ஒரு கர்ப்பிணித் தாய் தனது இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் இழந்ததோடு, தாதிப்பெண்கள் தான் சாவதற்கு உதவவேண்டுமென கதறிக்கொண்டிருந்தார். இன்னுஞ் சிலர், அவர்களின் முள்ளந்தண்டில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பின் காரணமாக முற்றுமுழுதாக செயலிழந்திருந்தனர். அங்கிருந்த சிறுவன்களில் ஒருவன் என்னை ஈர்த்தான். அவனது தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. நான் அவனை நோக்கிப் போனபோது அவனது கன்னத்தில் கண்ணீர் உருண்டோடியது.

அவனுக்கு மூளையில் ஒரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவன் என்னிடம் தனது தகப்பனும் இளைய சகோதரியையும் எங்கேயிருக்கின்றார்களென கண்டுபிடிக்கமுடியுமா எனக்கேட்டான். அவனது தாயும், இரண்டு சகோதரர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள். அவனது மற்ற குடும்ப உறுப்பினர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதும் கடினமானது. கிண்ணியா, பொலனறுவை, மன்னார், இன்னும் வெவ்வேறு இடங்களுக்கு (வன்னிக்குள்ளிலிருந்து) வந்தவர்கள் அனுப்பப்பட்டபோது, குடும்பத்தினர் ஒன்று சேருவதற்கான சிறு சந்தர்ப்பம் என்பது கேள்விக்குரியதே.

ஒரு தாய் வெறுமையான பார்வையுடன் அமர்ந்திருந்தார். அவர்கள் ஓடத்தொடங்கியபோது, அவரின் ஒரு குழந்தை கொல்லப்பட்டுவிட்டது. அதற்கிடையிலும் ஒரு மண்வெட்டியை எடுத்து மண்ணைத் தோண்டி தனது குழந்தையைப் புதைக்கும் துணிவு அவருக்கு இருந்திருக்கிறது. அவர் தனது குழந்தையின் உடல், காட்டு விலங்குகளால் உண்ணப்படுவதை விரும்பவில்லை. அவர் அழவில்லை ஆனால் உளவியல் பிரச்சினைகளுக்குட்பட்டிருந்தார் என்பது உறுதி. எறிகணைகள் நேரே பதுங்குகுழிக்குள் வந்து விழுந்த பல சம்பவங்கள் இருக்கின்றன.. ஆயிரக்கணக்கானவர்கள் இதனால் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இன்னமும் வன்னிக்குள் தங்கியிருப்பவர்கள் பல்வேறு காரணங்களால் பயத்துடன் (வன்னிக்கு) வெளியே வராது இருக்கின்றார்கள். அவர்களுக்கு தாங்கள் கொல்லப்படுவது (வெளியே வந்து) சித்திரவதை செய்யப்படுவதை விட மேலானதாய் இருக்கிறது.

தீவின் எல்லாப் பக்கமும், முக்கியமாய் கொழும்பில், இராணுவத்தின் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு நபரின் அடையாள அட்டையில் அவரின் பிறந்த இடம் வன்னியாகவோ, முல்லைத்தீவாகவோ, கிளிநொச்சியாகவோ, ஏன் யாழ்ப்பாணமாயிருந்தாலோ, அவனோ/அவளோ பிரச்சினைக்குரியவராகிவிடுவார். எங்கள் குடியிருப்பு சென்ற வாரம் முழுமையாகச் சோதிக்கப்பட்டு, எனது பதினாறு வயது மகளின் அலுமாரி, ஆடைகள் வைக்குமிடமெல்லாம் சோதிக்கப்பட்டு அவளும் விசாரிக்கப்பட்டாள். அவ்வண்ணமே மக்கள் வன்னியை விட்டு வெளியே வரவிரும்பினாலும், இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இப்போது இங்கே இனப்படுகொலை பல்வேறு நிலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. தெரியாத பிரதேசங்களிலும், பழக்கப்படாத இடங்களிலும் சிதறடிக்கப்பட்ட மக்கள், இறுதியில் வலுவற்ற குடிமக்களாகி, அதன் விளைவால் எங்கள் கலாசாரம், கல்வி, உறவு முறைகளில் மிகப்பெரும் பாதிப்பு வரப்போகின்றது என்பதைச் சொல்லவேண்டிய அவசியமில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சந்ததிக்கு இனி எதிர்காலத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதைத்தான் என்னால் உணர்ந்து சொல்லமுடியும். சர்வதேச சமுகங்களால் அறிக்கைகளை வெளியிடமுடியும், ஆனால் அவை எவையும் எந்தக் கவனத்தையும் பெறாது. எனக்கு எதிர்காலம் இருண்டதாகவும் பயங்கரமானதாகவும் தெரிகிறது.

Thanks: TransCurrents

சொர்க்கத்தின் விளிம்பு (The Edge of Heaven)

Saturday, February 07, 2009

அப‌த்த‌மான‌ வாழ்க்கையை அவ்வ‌ப்போது வ‌ன‌ப்பூட்டுவ‌த‌ற்கென‌ சில‌ அருமையான‌ த‌ருண‌ங்க‌ள் ஒவ்வொருவ‌ருடைய‌ வாழ்விலும் வ‌ந்துபோகின்ற‌ன‌. ஆனால் அவ்வாறான‌ அற்புத‌ க‌ண‌ங்க‌ளைச் ச‌ந்திப்ப‌த‌ற்கும், த‌வ‌ற‌விடுவ‌த‌ற்குமான‌ இடைவெளி என்ப‌துகூட‌ சில‌நொடிப்பொழுதுக‌ளில் இருப்ப‌தாய் அமைந்துவிடுவ‌துண்டு. ந‌ம‌க்கு சுற்றியிருக்கும் ம‌னித‌ர்க‌ளால‌ ப‌ல்வேறு வித‌மான‌ பிர‌ச்சினைக‌ளும் சிக்க‌ல‌க‌ளும் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்ற‌ன‌ என்கின்ற‌போதும் ந‌ம் ஒவ்வொருவ‌ருக்கும் ந‌ம‌து த‌னிமையை, ம‌கிழ்ச்சியை, துன்ப‌த்தை, விரக்தியை ப‌கிர்வ‌த‌ற்கென‌ எப்போதும் ம‌னித‌ர்க‌ள‌ தேவையாக‌வும் இருக்கின்றார்க‌ள். 'சொர்க்க‌தின் விளிம்பு' (The Edge of Heaven) என்கின்ற‌ இப்ப‌ட‌த்தில் வ‌ரும் க‌தாபாத்திர‌ங்க‌ள் த‌ம்ம‌ள‌வில் த‌னித்துவ‌மாக‌ இருக்க‌ விரும்பினாலும், சுற்றியிருக்கும் ம‌னித‌ர்க‌ளையும் மிகவும் நேசிக்கச் செய்கின்ற‌ன‌ர். அவ்வாறு நிப‌ந்த‌னைய‌ற்று நேசிக்கும்போது ப‌ல‌வ‌ற்றை இழ‌க்கின்ற‌ன‌ர், சில‌ர் த‌ம‌து உயிரைக்கூட‌.

ஆறு முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளுள்ள‌ இத்திரைப்ப‌ட‌த்தில், எல்லாப் பாத்திர‌ங்க‌ளும் ஒருவ‌ரையொருவ‌ர் சந்திக்காவிட்டாலும், ஏதோ ஒருவித‌த்தில் ம‌றைமுக‌மாக‌வேனும் பிற‌ பாத்திர‌ங்க‌ளில் பாதிப்புக்க‌ளை ஏற்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளாயிருக்கின்றார்க‌ள். அலியும் (Ali) நெஜ‌ட்டும் (Nejet) துருக்கியைப் பூர்வீக‌மாய்க்கொண்ட‌, ஆனால் ஜேர்ம‌னியில் வ‌சிக்கின்ற‌ த‌ந்தையும் ம‌க‌னுமாவார்க‌ள். நெஜ‌ட் சிறுவ‌ய‌திலிருக்கும்போதே தாயை இழ‌ந்த‌வ‌ர், த‌ந்தை அலியின் ப‌ராம‌ரிப்பில் வள்ர்ந்து, ஜேர்ம‌னியப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் ஒன்றில் பேராசிரிய‌ராக‌ இருக்கின்றார். அலி த‌ன‌து பாலிய‌ல் தேவையைப் பூர்த்திசெய்ய‌ப்போகும் ஜேர்ம‌னியிலுள்ள‌ பாலிய‌ல் தொழில் செய்ய‌ப்ப‌டும் ப‌குதியில், துருக்கியைச் சேர்ந்த‌ ஜெற்றர் (Jeter) என்னும் பாலிய‌ல் தொழிலாளியைச் ச‌ந்திக்கின்றார். நாட்க‌ள் சில‌ க‌ழிய‌, அலி தான் த‌ன் துணைவியை இழ‌ந்த‌வ‌ன், என்னிட‌ம் ஓய்வூதிய‌த்தால் வ‌ந்துகொண்டிருக்கும் ப‌ண‌மிருக்கிற‌து, நீ தொழில் செய்து ச‌ம்பாதிக்கும் ப‌ண‌த்தைத் த‌ருகின்றேன் என்னோடு நீ வ‌ந்து த‌ங்கலாம், ஆனால் என‌க்கு ம‌ட்டுமே உன‌து 'தொழிலை'ச் செய்ப‌வ‌ளாக‌ இருக்க‌வேண்டும் என்று ஜெற்றரிட‌ம் அலி கூறுகின்றார். இந்த‌க்கால‌ப்ப‌குதியில் துருக்கியைச் சேர்ந்த‌ வேறு இரு ஆண்க‌ள், ஜெற்றர் துருக்கியைச் சேர்ந்த‌ ஒருவர் என்ப‌தைக் க‌ண்டுபிடித்து, 'ஒரு முஸ்லிமாக‌ இருந்துகொண்டு இத்தொழிலை நீ செய்ய‌க்கூடாது, துருக்கிக்குத் திரும்பிப்போ' என்று ஜெற்றரைப் ப‌ய‌முறுத்துகின்றார்கள். இறுதியில் ஜெற்றர், அலியின் வீட்டில் வ‌ந்து த‌ங்குகின்றார். அலி ஜெற்றரை, த‌ன‌து ம‌க‌ன் நெஜ‌ட்டுக்கு அறிமுக‌ப்ப‌டுத்துகின்றார். இவ்வாறு ஜெற்றர் த‌ங்கிய‌ கால‌த்தில், அலிக்கு மார‌டைப்பு வ‌ந்து வைத்திய‌சாலையில் த‌ங்கிச் சில‌ நாட்க‌ள் சிகிச்சை எடுக்க‌வேண்டிவ‌ருகின்ற‌து. சிகிச்சை பெற்று வீடு திரும்பும் அலிக்கு, ஜெற்றருக்கும் த‌ன‌து ம‌க‌ன் நெஜ‌ட்டுக்கும் இடையில் புது உற‌வு முகிழ்ந்திருக்கலாம் என்று ச‌ந்தேகம் வருகின்றது. ஒருநாள், மிகுந்த‌ குடிபோதையில், த‌ன்னோடு உட‌லுற‌வு கொள்ளும்ப‌டி அலி ஜெற்றரை வ‌ற்புறுத்துகின்றார். ஜெற்றர் ம‌றுக்க‌, 'உன‌க்கான‌ இத்தொழிலுக்கு நான் ஏற்க‌ன‌வே ப‌ண‌த்தைச் செலுத்தியிருக்கின்றேன்' என்று அத‌ட்டி அடிக்கும்போது, ஜெற்றர் கூரான‌ ப‌குதியொன்றுப‌ட்டு இற‌ந்துவிடுகின்றார். அலிக்கு கொலைக்குற்ற‌த்திற்கான‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌து.

அலி வைத்திய‌சாலையில் சிகிச்சை பெற்ற‌ கால‌த்தில் நெஜ‌ட்டிட‌ம், ஜெற்றர் த‌ன‌து சொந்தக்க‌தையைக் கூறுகின்றார். த‌ன‌க்கு ஒரு ம‌க‌ள் (Ayten) துருக்கியிலிருக்கின்றாள் என்றும், வ‌ளாக‌த்தில் ப‌டித்துக்கொண்டிருக்கும் அவ‌ளுக்குத் தானே ப‌ண‌ம் அனுப்பிக்கொண்டிருக்கின்றேன் என்றும், ஆனால் த‌ன‌து ம‌க‌ளும், துருக்கியிலிருக்கும் உற‌வுகளும், தான் ஏதோ ஒரு கால‌ணிக் க‌டையொன்றில் வேலை செய்துகொண்டிருக்கின்றேன் என்று ந‌ம்பிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்றும் கூறுகின்றார். ஜெற்றரின் ம‌ர‌ண‌த்தின் பின், அவ‌ர‌து ம‌க‌ளான‌ அய்ட்ட‌னின் க‌ல்விக்கு உத‌வுவ‌த‌ற்காய் நெஜ‌ட் துருக்கிக்குப் ப‌ய‌ணிக்கின்றார். ப‌ல்வேறுவித‌மாய் முய‌ற்சிக‌ள் செய்தாலும் அவ‌ரால் ‍ -அய்ட்ட‌னின் ப‌டத்தை ம‌ட்டும் வைத்துக்கொண்டு- அய்ட்டனைக் ‍ க‌ண்டுபிடிக்க‌ முடிய‌வில்லை. இத்தேட‌லின் தொட‌ர்ச்சியில் துருக்கியிலுள்ள‌ டொச் மொழி புத்த‌க‌ங்க‌ள் விற்கும் ஒரு நூற்க‌டையை நெஜட் வாங்கி ந‌ட‌த்த‌த் தொட‌ங்குகின்றார்.

2.
ப‌ட‌த்தின் ஒரு ப‌குதி ஜெற்றரின் கொலையோடு முடிய‌, இர‌ண்டாவ‌து ப‌குதி துருக்கியிலிருக்கும் ஜெற்றரின் ம‌க‌ளான‌ அய்ட்ட‌னைப் பின் தொட‌ர‌த்தொட‌ங்குகின்ற‌து. ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் இருக்கும் அய்ட்ட‌ன் மார்க்சிய‌த்தின் மீது மிகுந்த‌ ஈர்ப்புக்கொண்ட‌ ஒரு க‌ல‌க்காரியாக‌ இருக்கின்றார். அர‌சின் அட‌க்குமுறைக‌ளுக்கு எதிராக‌ மாண‌வ‌ர்க‌ள் ந‌ட‌த்தும் ஆர்ப்பாட்ட‌ப் பேர‌ணியொன்றில் முன்ன‌ணியில் நிற்கின்றார். அப்பேர‌ணியில் காவ‌ற்துறையோடு ஏற்ப‌டும் ச‌ச்ச‌ரவில் மாண‌வ‌ர்க‌ள் ஒரு பொலிஸ்கார‌ரைக் கூட்டமாய்ச் சேர்ந்து அடிக்கும்போது அப்பொலிஸ்கார‌ரின் கைத்துப்பாக்கியை அய்ட்ட‌ன் எடுத்துகொண்டு ஓடிப்போய் ஒரு மொட்டை மாடியில் ம‌றைத்துவிடுகின்றார். அப்பேர‌ணியை முன்னின்று ந‌ட‌த்திய‌ மாண‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் தொடர்ந்து வரும் நாட்களில் கைதுசெய்ய‌ப்ப‌டுகின்றார்க‌ள். அய்ட்ட‌னையும் கைதுசெய்ய‌ காவ‌ல்துறை நெருங்கிவ‌ருகின்ற‌ கால‌ப்ப‌குதியில் மாண‌வ‌ர்க‌ள் அய்ட்ட‌னை துருக்கியிலிருந்து வெளியே த‌ப்ப‌வைக்கின்றார்க‌ள். ஜேர்ம‌னிக்கு வ‌ந்து தாயோடு த‌ங்கியிருக்க‌லாம் என்ற‌ ந‌ம்பிககையில் வ‌ரும் அய்ட்ட‌ன், தாய் முகவரி த‌ந்த‌ கால‌ணிக்க‌டையில் வேலை செய்ய‌வில்லை என்ப‌தை அறிகின்றார். ஆனால் முய‌ற்சியைத் த‌ள‌ர‌விடாது ந‌க‌ரிலுள்ள‌ எல்லாக் கால‌ணிக் க‌டைக‌ளையும் தொட‌ர்புகொள்கின்றார். இத‌ற்கிடையில் அவ‌ர் த‌ங்கிநிற்கும் துருக்கி மாண‌வ‌ர்க‌ளோடு முர‌ண்ப‌ட்டு வெளியே வ‌ருகின்றார், ஆனால் கையில் காசில்லாத‌தால் ப‌ட்டினியில் வாட‌த்தொட‌ங்குகின்றார்.

ஜேர்மனிய பல்கலைக்கழக வ‌ளாக‌ம் ஒன்றுக்குச் செல்லும்போது த‌ற்செய‌லாய் ஜேர்ம‌னியைப் பூர்விக‌மாய்க் கொண்ட‌ லொற்றைச் ச‌ந்திக்கின்றார்(உண்மையில் இப்பல்கலைக்கழகத்தில்தான் நெஜட் பேராசிரியராக இருக்கின்றார்; அவரது வகுப்புக்கு ஒன்றுக்குப்போய் அய்ட்டன் தூங்கிக்கொண்டுமிருக்கின்றார் என்று படத்தின் தொடக்கத்தில் காட்டப்படுகின்றது. ஆக ஒவ்வொருவரின் கதையும் பிரித்து பிரித்துக் காட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் தனது தாய் ஜெற்றர் உயிருடன் இருக்கும்போதே அய்ட்டன் ஜேர்மனிக்கு வந்துவிட்டார்). கையில் காசில்லாது தாயைத் தேடும் அய்ட்ட‌னின் மீது லொற்றுக்குப் ப‌ரிவு வ‌ந்து, த‌ங‌க‌ள் வீட்டில் அய்ட்ட‌ன்- த‌ன‌து தாயைக் க‌ண்டுபிடிக்கும்வ‌ரை- த‌ங்கியிருக்க‌லாம் என்று கூறுகின்றார். அய்ட்ட‌ன், லொற்றோடு த‌ங்கியிருக்கும் கால‌ப்ப‌குதியில் அவ‌ர்க‌ள் இருவ‌ருக்குமிடையில் ஒருபால் உற‌வு ஏற்ப‌டுகின்ற‌து. லொற்றின் தாயோடு அய்ட்ட‌ன் ஒருநாள் அர‌சிய‌ல் பேசுகின்றார். துருக்கியிலிருக்கும் அட‌க்குமுறை ஆட்சிப‌ற்றி அய்ட்ட‌ன் குறிப்பிடும்போது, நீங்க‌ள் அய்ரோப்பிய‌ ஒன்றியத்துடன் சேர்ந்தால் ப‌ல‌ ஒடுக்குமுறைக‌ள் குறைந்துவிடும் எனகின்றார். அய்ட்ட‌ன் இந்த‌ அய்ரோப்பிய‌ ஒன்றிய‌மே முழுச் சுத்துமாத்து, அவ‌ர்க‌ள் உல‌க‌மய‌மாத‌லை இன்னும் தீவிர‌மாய் செய்து வ‌றிய‌ நாடுக‌ளை இன்னும் ஒடுக்குகின்றார்க‌ள் என்று அய்ரோப்பிய‌ ஒன்றிய‌த்தை கெட்ட‌வார்த்தைக‌ள் க‌ல‌ந்து மிக‌க்க‌டுமையாக‌ விம‌ர்சிக்கின்றார். லொற்றின் தாயும் ஒருக‌ட்ட‌த்தில், நீ எங்க‌ள் வீட்டில் இருப்ப‌தாயிருப்பின் இப்ப‌டியெல்லாம் க‌தைக்க‌க்கூடாது என்று எச்ச‌ரிக்கின்றார். இனியும் இந்த‌ வீட்டிலிருக்க‌ முடியாது என்று வெளியேறி, லொற்றோவோடு காரில் வீதியில் போகும்போது, ஜேர்ம‌னிய‌ப் பொலிஸால் அய்ட்ட‌ன் ஜேர்ம‌னியில் ச‌ட்ட‌விரோத‌மாய் இருக்கின்றார் என்று கைதுசெய்ய‌ப்ப‌டுகின்றார். லொற்றும் அவ‌ர‌து தாயாரும், அய்ட்ட‌ன் துருக்கிக்கு அனுப்ப‌ப்ப‌ட்டால் அவ‌ரது உயிருக்கு உத்த‌ர‌வாத‌மில்லை என்று கூறி, த‌ங்க‌ள் ப‌ண‌த்தை அகதி வ‌ழ‌க்கிற்காய் நிறைய‌ச் செல‌வ‌ழித்தும் அய்ட்ட‌னைக் காப்பாற்ற‌முடிய‌வில்லை; அய்ட்ட‌ன் துருக்கிக்கு நாடு க‌ட‌த்த‌ப்ப‌டுகின்றார். துருக்கிச் சிறையில் அடைக்க‌ப்ப‌டும், அய்ட்ட‌னைக் காப்பாற்ற‌ லொற் துருக்கிக்கு ப‌ய‌ணிக்கின்றார். லொற்றோவின் தாய் சுசான் தான் நிறைய‌ச் செலவ‌ழித்துவிட்டேன் இனி அய்ட்ட‌னின் விட‌ய‌த்துக்கு த‌ன்னால் செல‌வ‌ழிக்க‌முடியாது என்கிறார். லொற்றோ தான் அய்ட்ட‌னைச் சிறையிலிருந்து வெளியே எடுக்கும்வ‌ரை துருக்கியிலிருந்து வெளியேற‌ப்போவ‌தில்லை என்று தாயிட‌ம் உறுதியாக‌க் கூறுகின்றார்.

இந்த‌க் கால‌ப்ப‌குதியிலேயே லொற், நெஜ‌ட்டை அவ‌ர‌து புத்த‌க‌க்க‌டையில் ச‌ந்திக்கின்றார். தான் ஒருவ‌ரின் வ‌ழ‌க்கிற்காய் இங்கு வ‌ந்திருக்கின்றேன், ஆனால் ப‌ண‌க்க‌ஷ்ட‌த்தில் இருக்கின்றேன் என்கின்ற‌போது, நெஜ‌ட் தான் த‌ங்கியிருக்கும் வீட்டில் ஒரு அறையை குறைந்த‌ வாட‌கையுட‌ன் லொற்றொவுக்குக் கொடுக்கின்றார். ப‌ல‌ வித‌ க‌ஷ்ட‌ங்களுக்கு ம‌த்தியில் லொற்றோ அய்ட்ட‌னைச் சிறையில் ச‌ந்திக்கின்றார். அப்போது அய்ட்ட‌ன் தான் ஒளித்துவைத்திருக்கும் துப்பாகியைப் பிற‌ர் எடுக்க‌ முன்ன‌ர், லொற்றை எடுத்து எங்கையாவ‌து பாதுகாப்பாய் வைக்கும்ப‌டிகூறி, அத‌ன் வ‌ரைப‌ட‌த்தை சிறைக்காவ‌ல‌ர்க‌ளின் க‌ண்ணில் தெரியாது கொடுக்கின்றார். அக்கைத்துப்பாக்கியை எடுத்து, த‌ன‌து கைப்பையில் ப‌த்திர‌மாக‌ வைத்துக்கொண்டு லொற் அறை திரும்புகையில் சேரிச் சிறுவ‌ர்க‌ள் சில‌ர் இவ‌ர‌து கைப்பையை திருடிக்கொண்டு ஓடுகின்றார்கள். அத‌ற்குள் லொற்றின் அடையாள‌ அட்டைக‌ள், பாஸ்போர்ட் உட்ப‌ட‌ துப்பாக்கியும் இருப்ப‌தால் அச்சிறுவ‌ர்க‌ளைத் துர‌த்திக்கொண்டு லொற்றும் ஓடுகின்றார். ஒரு ஒதுக்குப்புற‌த்தில் கைப்பையைத் தோண்டிக்கொண்டிருக்கும் சிறுவ‌ர்க‌ளிட‌ம் பையைத் த‌ரும்ப‌டி லொற் கேட்க‌, கிட்ட‌ வ‌ராதே சுட்டுவிடுவேன் என்று பையிலிருந்த‌ துப்பாக்கியைக் காட்டி ஒரு சிறுவ‌ன் ப‌ய‌முறுத்துகின்றான். கிட்ட‌ நெருங்கிவ‌ரும்போது அந்த‌ப்பைய‌ன் விசையை இழுத்துவிடுகின்றான். லொற் துப்பாகிக்குண்டுப‌ட்டு சாவ‌தை அதிர்ச்சியுட‌ன் அப்பைய‌ன்க‌ள் பார்த்துவிட்டு ஓடியொளிகிறார்க‌ள். முத‌லாம் ப‌குதி ஜெட்ட‌ரின் ம‌ர‌ண‌த்தை முடிந்த‌துபோல‌, இர‌ண்டாம் ப‌குதி லொற்றின் ம‌ர‌ண‌த்துட‌ன் முடிகின்ற‌து.

3.
மூன்றாம் பகுதியில், லொற்றின் தாயார், லொற் இறக்கமுன்னர் இருந்த இடத்தைப் பார்க்க துருக்கியிற்கு வருகின்றார். அங்கே லொற் தங்கியிருந்த வீட்டில் நெஜட்டைச் சந்தித்து, தான் சில காலம் லொற் தங்கியிருந்த அறையில் தங்கியிருக்கப் போவதாகக் கூறுகின்றார். தனது மகளின் தோழியான அய்ட்டனைச் சிறையிலிருந்து வெளியே எடுக்கும்வரை துருக்கியை விட்டுப்போவதில்லையென, அதாவது தனது மகள் எதற்கு துருக்கியிற்கு வந்து இறந்துபோனாரோ அந்தவேலையைச் செய்துமுடிக்கவேண்டுமென விரும்புகின்றார். அதேசமயம் லொற்றின் கொலை துருக்கி - ஜேர்மனி என்ற இரண்டு நாடுகள் சம்பந்தமான கொலையாகையால், துருக்கிப் பொலிஸ் நடந்த உண்மைகளை அறிய சிறையிலிருக்கும் அய்ட்டனின் உதவியை நாடுகின்றது. அய்ட்டன், லொற்றோ குறித்த நடந்த முழு உண்மைகளைச் சொன்னால், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்ற உறுதிமொழியைப் பொலிஸ் தரப்பு வழங்குகின்றது. அய்ட்டன் உண்மைகளைக் கூறி சிறையிலிருந்து விடுவிக்கப்படும்போது, சிறையிலிருக்கும் அவரது சகமாணவ நண்பர்கள், அய்ட்டன் தங்கள் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த துரோகி அய்ட்டன் என முத்திரை குத்துகின்றார்கள். இவ்வாறு அய்ட்டன் வெளியே வரும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும்போது, நெஜட் அய்ட்டனைத் தேடும் முயற்சியில் நம்பிக்கையிழந்து, எல்லா முயற்சிகளையும் நிறுத்திவிடுகின்றார். அதேசமயம், நெஜட்டின் புத்தகக்கடைக்கு வரும் உறவினர் ஒருவர், நெஜட்டின் தந்தை ஜேர்மனியில் கொலைக்கான குற்றத்தை அனுபவித்துவிட்டு நாடு கடத்தப்பட்டு அவர்களின் கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதைச் சொல்கின்றார். தனது தந்தை அலி கொலை செய்தபோது கொலைகாரனோடு இனியிந்த உறவும் வேண்டாம் என்று ஒதுங்கி தனித்து வாழ்ந்த நெஜட், என்னவானாலும் தன்னை இப்படி வளர்த்து ஆளாக்கியவர் தந்தையென்று எண்ணி அவரைச் சந்திக்க தொலைவிலுள்ள ஊருக்குச் செல்வதுடன் படம் முடிகின்றது.

இப்படம் சாதாரணமாகப் பார்க்கும்போது எளிமையான கதையாக இருந்தாலும், அது எடுக்கப்பட்ட விதமும், கதாபாத்திரங்களின் செதுக்கலும் மிக அழகாக இருக்கின்றன. இப்படத்திலுள்ள் பாத்திரங்கள் தம்மளவில் மிகுந்த தனிமையில் உழன்று கொண்டிருந்தாலும், சக மனிதர்களின் மீதான நேசிப்பில் ஒரு நதியைப் போல பரந்து பாய்கின்றவர்களாய் ஆகிவிடுகின்றனர். முக்கியமாய் நாம் ஒவ்வொரு மனிதர்களையும் பிரித்து அடையாளம் இடுதலை இப்படம் நிராகரிக்கின்றது. நம்மைப் போன்ற கீழைத்தேச நாடுகளிலிருந்து வருவோருக்கு மேலைத்தேய நாடுகளில் உள்ளோருக்கு உறவுகள் மீதும் மனிதாபிமானம் மீதும் அவ்வளவு மதிப்பிருப்பதில்லையென்ற ஒரு கருத்தாக்கம் இருக்கிறது. இங்கே முற்றுமுழுதாக ஜேர்மனிய கலாசாரத்திலிருக்கும் லொற் ஒரு அகதியாக வரும் அய்ட்டனைத் தன்னைப்போன்ற இன்னொரு சகமாணவியென்ற பரிவுடன் -பிற அடையாளங்கள் குறித்து எந்தப்பிரக்ஞையுமின்றி- அடைக்கலம் கொடுக்கின்றார். லொற்றுக்கும் அய்ட்டனுக்கும் வரும் ஒருபால் உறவு கூட நிறங்களை, கலாசாரங்களைத் தாண்டி, இயல்பானதே. அதேபோன்று லொற்றினது தாயாக வரும் சூசனுக்கும் முதலில் துருக்கியைச் சேர்ந்த அய்ட்டனை ஏற்றுக்கொள்வதில் தயக்கமிருப்பினும், பிறகு ஒரு சக மானுடஜீவியின் நேசிப்புடன் அய்ட்டனைச் சிறையிலிருந்து வெளியே எடுக்க முயற்சிக்கின்றார். பேராசிரியராய் நல்ல நிலையிலிருக்கும் நெஜட் கூட, எல்லாவற்றையும் உதறி அய்ட்டனைத் தேடி துருக்கிக்குப் பயணித்து மிக எளிமையான வாழ்வுக்குத் தன்னை தகவமைத்துக்கொள்கின்றார். அய்ட்டன் கூட ஒரு சாதாரண மாணவியாக வளாகத்தில் படித்து பிடித்த வேலையைச் செய்துகொண்டு வாழ்ந்துபோயிருக்கலமென்றாலும் அவர் வளாகத்திலிருந்து அதிகாரங்களின் அடக்குமுறைக்கு எதிராய் மிக உறுதியாகப் போராடுகின்றார்; படிப்பைத் தொலைக்கின்றார். ஆக லொற், நெஜட், சூசன், அய்ட்டன் ஆகியோருக்கு மிகப் பாதுகாப்பானதும் வசதியானதுமான வாழ்வு கிடைத்தும், சக மனிதர்களின் பொருட்டு தங்களுக்கு உரிய வாழ்வை இழந்து பிறருக்காய் போராடுகின்றார்கள். இப்பூமியில் இவ்வாறான மனிதர்களைக் காண்பது என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. ஆனால் நம் எல்லோரையும் விட அவர்களே உண்மையான வாழ்வை வாழ்வதால் நாம் அவர்களை வியந்து பார்த்தபடி தொடர்ந்து பேசியபடியிருக்கின்றோம்.

4.
இப்படத்தின் இயக்குநர் Fatih Akin இயக்கிய இன்னொரு படமான In July (காதலைத் தேடி ஜெர்மனியிலிருந்து துருக்கிக்கு போகும் ஒருவனின் அழகான பயணம்), மற்றும் துருக்கியிலுள்ள பலவேறுவிதமான இசை வகைகளைப் பற்றிய ஆவணப்படமான, Crossing the Bridge: The Sound of Istanbul பார்க்கும் சந்தர்ப்பம் இதே காலகட்டத்தில் கிடைத்திருந்தது. The Edge of Heavenனில் பின்னிணைப்பாக இருக்கும் இப்படத்தையெடுத்த பின்னணி பற்றிய குறிப்புகள் சுவாரசியம் தரக்கூடியன. தனது ஒவ்வொரு முழுநீளப்படத்துக்கும், படப்பிடிப்பிற்கான முதலிரு வாரங்களையும் முற்றாக நடிப்பவர்களின் ஒத்திகைக்காய் ஒதுக்குவதாகவும், அந்தக்காலப்பகுதியில் ஒவ்வொரு பாத்திரங்களையும் தாங்கள் இயல்புபடி நடிக்கச் செய்து அதிலிருந்து தனது பாத்திரங்களை இன்னும் செழுமைப்படுத்துவதாகவும் அகின் அதில் கூறுகின்றார். அத்துடன் இவ்வாறான வாரக்கணக்கான ஒத்திகையின்போது நடிப்பவர்கள் எல்லோரும் தங்களுக்குள்ளேயே அறிமுகமாகிவிடுவதால் ஒருவரையொருவர் விளங்கி நடிப்பது இலகுவாகவாகும், பாத்திரப்படைப்புகள் இயல்பாகவும் வரக்கூடியதாகவும் இருக்கிறதென்கிறார். 1973 பிறந்த அகில் திரைப்படங்களுக்கான பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பதுடன், நடப்பு அரசியல் குறித்த பிரக்ஞையுமுடையவர். ஜோர்ஜ் புஷ்ஷின் நிர்வாகம் இன்னொரு ஹிட்லரின் ஆட்சி என்று நாஸி சுவாஸ்ரிக்காவுடன் (Nazi swastika) ரீசேர்ட் ஒன்றை அணிந்ததற்காய் ஜேர்மனிய பொலிஸால் விசாரிக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அகினின் வார்த்தைகளில் சொல்வதனால், "Bush's policy is comparable with that of the Third Reich. I think that under Bush, Hollywood has been making certain films at the request of the Pentagon to normalise things like torture and Guantanamo. I'm convinced the Bush administration wants a third world war. I think they're fascists."



புகைப்படங்கள் 1,2, 3: The Edge of Heavenல் இருந்து

புகைப்படம் 4: Faith Akin
Faith Akin பற்றிய தகவலுக்கு: http://www.spiegel.de/international/0,1518,430542,00.html