அபத்தமான வாழ்க்கையை அவ்வப்போது வனப்பூட்டுவதற்கென சில அருமையான தருணங்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வந்துபோகின்றன. ஆனால் அவ்வாறான அற்புத கணங்களைச் சந்திப்பதற்கும், தவறவிடுவதற்குமான இடைவெளி என்பதுகூட சிலநொடிப்பொழுதுகளில் இருப்பதாய் அமைந்துவிடுவதுண்டு. நமக்கு சுற்றியிருக்கும் மனிதர்களால பல்வேறு விதமான பிரச்சினைகளும் சிக்கலகளும் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்கின்றபோதும் நம் ஒவ்வொருவருக்கும் நமது தனிமையை, மகிழ்ச்சியை, துன்பத்தை, விரக்தியை பகிர்வதற்கென எப்போதும் மனிதர்கள தேவையாகவும் இருக்கின்றார்கள். 'சொர்க்கதின் விளிம்பு' (The Edge of Heaven) என்கின்ற இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் தம்மளவில் தனித்துவமாக இருக்க விரும்பினாலும், சுற்றியிருக்கும் மனிதர்களையும் மிகவும் நேசிக்கச் செய்கின்றனர். அவ்வாறு நிபந்தனையற்று நேசிக்கும்போது பலவற்றை இழக்கின்றனர், சிலர் தமது உயிரைக்கூட.
ஆறு முக்கிய பாத்திரங்களுள்ள இத்திரைப்படத்தில், எல்லாப் பாத்திரங்களும் ஒருவரையொருவர் சந்திக்காவிட்டாலும், ஏதோ ஒருவிதத்தில் மறைமுகமாகவேனும் பிற பாத்திரங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்துபவர்களாயிருக்கின்றார்கள். அலியும் (Ali) நெஜட்டும் (Nejet) துருக்கியைப் பூர்வீகமாய்க்கொண்ட, ஆனால் ஜேர்மனியில் வசிக்கின்ற தந்தையும் மகனுமாவார்கள். நெஜட் சிறுவயதிலிருக்கும்போதே தாயை இழந்தவர், தந்தை அலியின் பராமரிப்பில் வள்ர்ந்து, ஜேர்மனியப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கின்றார். அலி தனது பாலியல் தேவையைப் பூர்த்திசெய்யப்போகும் ஜேர்மனியிலுள்ள பாலியல் தொழில் செய்யப்படும் பகுதியில், துருக்கியைச் சேர்ந்த ஜெற்றர் (Jeter) என்னும் பாலியல் தொழிலாளியைச் சந்திக்கின்றார். நாட்கள் சில கழிய, அலி தான் தன் துணைவியை இழந்தவன், என்னிடம் ஓய்வூதியத்தால் வந்துகொண்டிருக்கும் பணமிருக்கிறது, நீ தொழில் செய்து சம்பாதிக்கும் பணத்தைத் தருகின்றேன் என்னோடு நீ வந்து தங்கலாம், ஆனால் எனக்கு மட்டுமே உனது 'தொழிலை'ச் செய்பவளாக இருக்கவேண்டும் என்று ஜெற்றரிடம் அலி கூறுகின்றார். இந்தக்காலப்பகுதியில் துருக்கியைச் சேர்ந்த வேறு இரு ஆண்கள், ஜெற்றர் துருக்கியைச் சேர்ந்த ஒருவர் என்பதைக் கண்டுபிடித்து, 'ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு இத்தொழிலை நீ செய்யக்கூடாது, துருக்கிக்குத் திரும்பிப்போ' என்று ஜெற்றரைப் பயமுறுத்துகின்றார்கள். இறுதியில் ஜெற்றர், அலியின் வீட்டில் வந்து தங்குகின்றார். அலி ஜெற்றரை, தனது மகன் நெஜட்டுக்கு அறிமுகப்படுத்துகின்றார். இவ்வாறு ஜெற்றர் தங்கிய காலத்தில், அலிக்கு மாரடைப்பு வந்து வைத்தியசாலையில் தங்கிச் சில நாட்கள் சிகிச்சை எடுக்கவேண்டிவருகின்றது. சிகிச்சை பெற்று வீடு திரும்பும் அலிக்கு, ஜெற்றருக்கும் தனது மகன் நெஜட்டுக்கும் இடையில் புது உறவு முகிழ்ந்திருக்கலாம் என்று சந்தேகம் வருகின்றது. ஒருநாள், மிகுந்த குடிபோதையில், தன்னோடு உடலுறவு கொள்ளும்படி அலி ஜெற்றரை வற்புறுத்துகின்றார். ஜெற்றர் மறுக்க, 'உனக்கான இத்தொழிலுக்கு நான் ஏற்கனவே பணத்தைச் செலுத்தியிருக்கின்றேன்' என்று அதட்டி அடிக்கும்போது, ஜெற்றர் கூரான பகுதியொன்றுபட்டு இறந்துவிடுகின்றார். அலிக்கு கொலைக்குற்றத்திற்கான தண்டனை வழங்கப்படுகின்றது.
அலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற காலத்தில் நெஜட்டிடம், ஜெற்றர் தனது சொந்தக்கதையைக் கூறுகின்றார். தனக்கு ஒரு மகள் (Ayten) துருக்கியிலிருக்கின்றாள் என்றும், வளாகத்தில் படித்துக்கொண்டிருக்கும் அவளுக்குத் தானே பணம் அனுப்பிக்கொண்டிருக்கின்றேன் என்றும், ஆனால் தனது மகளும், துருக்கியிலிருக்கும் உறவுகளும், தான் ஏதோ ஒரு காலணிக் கடையொன்றில் வேலை செய்துகொண்டிருக்கின்றேன் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறுகின்றார். ஜெற்றரின் மரணத்தின் பின், அவரது மகளான அய்ட்டனின் கல்விக்கு உதவுவதற்காய் நெஜட் துருக்கிக்குப் பயணிக்கின்றார். பல்வேறுவிதமாய் முயற்சிகள் செய்தாலும் அவரால் -அய்ட்டனின் படத்தை மட்டும் வைத்துக்கொண்டு- அய்ட்டனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தேடலின் தொடர்ச்சியில் துருக்கியிலுள்ள டொச் மொழி புத்தகங்கள் விற்கும் ஒரு நூற்கடையை நெஜட் வாங்கி நடத்தத் தொடங்குகின்றார்.
2.
படத்தின் ஒரு பகுதி ஜெற்றரின் கொலையோடு முடிய, இரண்டாவது பகுதி துருக்கியிலிருக்கும் ஜெற்றரின் மகளான அய்ட்டனைப் பின் தொடரத்தொடங்குகின்றது. பல்கலைக் கழகத்தில் இருக்கும் அய்ட்டன் மார்க்சியத்தின் மீது மிகுந்த ஈர்ப்புக்கொண்ட ஒரு கலக்காரியாக இருக்கின்றார். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றில் முன்னணியில் நிற்கின்றார். அப்பேரணியில் காவற்துறையோடு ஏற்படும் சச்சரவில் மாணவர்கள் ஒரு பொலிஸ்காரரைக் கூட்டமாய்ச் சேர்ந்து அடிக்கும்போது அப்பொலிஸ்காரரின் கைத்துப்பாக்கியை அய்ட்டன் எடுத்துகொண்டு ஓடிப்போய் ஒரு மொட்டை மாடியில் மறைத்துவிடுகின்றார். அப்பேரணியை முன்னின்று நடத்திய மாணவர்கள் பலர் தொடர்ந்து வரும் நாட்களில் கைதுசெய்யப்படுகின்றார்கள். அய்ட்டனையும் கைதுசெய்ய காவல்துறை நெருங்கிவருகின்ற காலப்பகுதியில் மாணவர்கள் அய்ட்டனை துருக்கியிலிருந்து வெளியே தப்பவைக்கின்றார்கள். ஜேர்மனிக்கு வந்து தாயோடு தங்கியிருக்கலாம் என்ற நம்பிககையில் வரும் அய்ட்டன், தாய் முகவரி தந்த காலணிக்கடையில் வேலை செய்யவில்லை என்பதை அறிகின்றார். ஆனால் முயற்சியைத் தளரவிடாது நகரிலுள்ள எல்லாக் காலணிக் கடைகளையும் தொடர்புகொள்கின்றார். இதற்கிடையில் அவர் தங்கிநிற்கும் துருக்கி மாணவர்களோடு முரண்பட்டு வெளியே வருகின்றார், ஆனால் கையில் காசில்லாததால் பட்டினியில் வாடத்தொடங்குகின்றார்.
ஜேர்மனிய பல்கலைக்கழக வளாகம் ஒன்றுக்குச் செல்லும்போது தற்செயலாய் ஜேர்மனியைப் பூர்விகமாய்க் கொண்ட லொற்றைச் சந்திக்கின்றார்(உண்மையில் இப்பல்கலைக்கழகத்தில்தான் நெஜட் பேராசிரியராக இருக்கின்றார்; அவரது வகுப்புக்கு ஒன்றுக்குப்போய் அய்ட்டன் தூங்கிக்கொண்டுமிருக்கின்றார் என்று படத்தின் தொடக்கத்தில் காட்டப்படுகின்றது. ஆக ஒவ்வொருவரின் கதையும் பிரித்து பிரித்துக் காட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் தனது தாய் ஜெற்றர் உயிருடன் இருக்கும்போதே அய்ட்டன் ஜேர்மனிக்கு வந்துவிட்டார்). கையில் காசில்லாது தாயைத் தேடும் அய்ட்டனின் மீது லொற்றுக்குப் பரிவு வந்து, தஙகள் வீட்டில் அய்ட்டன்- தனது தாயைக் கண்டுபிடிக்கும்வரை- தங்கியிருக்கலாம் என்று கூறுகின்றார். அய்ட்டன், லொற்றோடு தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர்கள் இருவருக்குமிடையில் ஒருபால் உறவு ஏற்படுகின்றது. லொற்றின் தாயோடு அய்ட்டன் ஒருநாள் அரசியல் பேசுகின்றார். துருக்கியிலிருக்கும் அடக்குமுறை ஆட்சிபற்றி அய்ட்டன் குறிப்பிடும்போது, நீங்கள் அய்ரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்தால் பல ஒடுக்குமுறைகள் குறைந்துவிடும் எனகின்றார். அய்ட்டன் இந்த அய்ரோப்பிய ஒன்றியமே முழுச் சுத்துமாத்து, அவர்கள் உலகமயமாதலை இன்னும் தீவிரமாய் செய்து வறிய நாடுகளை இன்னும் ஒடுக்குகின்றார்கள் என்று அய்ரோப்பிய ஒன்றியத்தை கெட்டவார்த்தைகள் கலந்து மிகக்கடுமையாக விமர்சிக்கின்றார். லொற்றின் தாயும் ஒருகட்டத்தில், நீ எங்கள் வீட்டில் இருப்பதாயிருப்பின் இப்படியெல்லாம் கதைக்கக்கூடாது என்று எச்சரிக்கின்றார். இனியும் இந்த வீட்டிலிருக்க முடியாது என்று வெளியேறி, லொற்றோவோடு காரில் வீதியில் போகும்போது, ஜேர்மனியப் பொலிஸால் அய்ட்டன் ஜேர்மனியில் சட்டவிரோதமாய் இருக்கின்றார் என்று கைதுசெய்யப்படுகின்றார். லொற்றும் அவரது தாயாரும், அய்ட்டன் துருக்கிக்கு அனுப்பப்பட்டால் அவரது உயிருக்கு உத்தரவாதமில்லை என்று கூறி, தங்கள் பணத்தை அகதி வழக்கிற்காய் நிறையச் செலவழித்தும் அய்ட்டனைக் காப்பாற்றமுடியவில்லை; அய்ட்டன் துருக்கிக்கு நாடு கடத்தப்படுகின்றார். துருக்கிச் சிறையில் அடைக்கப்படும், அய்ட்டனைக் காப்பாற்ற லொற் துருக்கிக்கு பயணிக்கின்றார். லொற்றோவின் தாய் சுசான் தான் நிறையச் செலவழித்துவிட்டேன் இனி அய்ட்டனின் விடயத்துக்கு தன்னால் செலவழிக்கமுடியாது என்கிறார். லொற்றோ தான் அய்ட்டனைச் சிறையிலிருந்து வெளியே எடுக்கும்வரை துருக்கியிலிருந்து வெளியேறப்போவதில்லை என்று தாயிடம் உறுதியாகக் கூறுகின்றார்.
இந்தக் காலப்பகுதியிலேயே லொற், நெஜட்டை அவரது புத்தகக்கடையில் சந்திக்கின்றார். தான் ஒருவரின் வழக்கிற்காய் இங்கு வந்திருக்கின்றேன், ஆனால் பணக்கஷ்டத்தில் இருக்கின்றேன் என்கின்றபோது, நெஜட் தான் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு அறையை குறைந்த வாடகையுடன் லொற்றொவுக்குக் கொடுக்கின்றார். பல வித கஷ்டங்களுக்கு மத்தியில் லொற்றோ அய்ட்டனைச் சிறையில் சந்திக்கின்றார். அப்போது அய்ட்டன் தான் ஒளித்துவைத்திருக்கும் துப்பாகியைப் பிறர் எடுக்க முன்னர், லொற்றை எடுத்து எங்கையாவது பாதுகாப்பாய் வைக்கும்படிகூறி, அதன் வரைபடத்தை சிறைக்காவலர்களின் கண்ணில் தெரியாது கொடுக்கின்றார். அக்கைத்துப்பாக்கியை எடுத்து, தனது கைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டு லொற் அறை திரும்புகையில் சேரிச் சிறுவர்கள் சிலர் இவரது கைப்பையை திருடிக்கொண்டு ஓடுகின்றார்கள். அதற்குள் லொற்றின் அடையாள அட்டைகள், பாஸ்போர்ட் உட்பட துப்பாக்கியும் இருப்பதால் அச்சிறுவர்களைத் துரத்திக்கொண்டு லொற்றும் ஓடுகின்றார். ஒரு ஒதுக்குப்புறத்தில் கைப்பையைத் தோண்டிக்கொண்டிருக்கும் சிறுவர்களிடம் பையைத் தரும்படி லொற் கேட்க, கிட்ட வராதே சுட்டுவிடுவேன் என்று பையிலிருந்த துப்பாக்கியைக் காட்டி ஒரு சிறுவன் பயமுறுத்துகின்றான். கிட்ட நெருங்கிவரும்போது அந்தப்பையன் விசையை இழுத்துவிடுகின்றான். லொற் துப்பாகிக்குண்டுபட்டு சாவதை அதிர்ச்சியுடன் அப்பையன்கள் பார்த்துவிட்டு ஓடியொளிகிறார்கள். முதலாம் பகுதி ஜெட்டரின் மரணத்தை முடிந்ததுபோல, இரண்டாம் பகுதி லொற்றின் மரணத்துடன் முடிகின்றது.
3.
மூன்றாம் பகுதியில், லொற்றின் தாயார், லொற் இறக்கமுன்னர் இருந்த இடத்தைப் பார்க்க துருக்கியிற்கு வருகின்றார். அங்கே லொற் தங்கியிருந்த வீட்டில் நெஜட்டைச் சந்தித்து, தான் சில காலம் லொற் தங்கியிருந்த அறையில் தங்கியிருக்கப் போவதாகக் கூறுகின்றார். தனது மகளின் தோழியான அய்ட்டனைச் சிறையிலிருந்து வெளியே எடுக்கும்வரை துருக்கியை விட்டுப்போவதில்லையென, அதாவது தனது மகள் எதற்கு துருக்கியிற்கு வந்து இறந்துபோனாரோ அந்தவேலையைச் செய்துமுடிக்கவேண்டுமென விரும்புகின்றார். அதேசமயம் லொற்றின் கொலை துருக்கி - ஜேர்மனி என்ற இரண்டு நாடுகள் சம்பந்தமான கொலையாகையால், துருக்கிப் பொலிஸ் நடந்த உண்மைகளை அறிய சிறையிலிருக்கும் அய்ட்டனின் உதவியை நாடுகின்றது. அய்ட்டன், லொற்றோ குறித்த நடந்த முழு உண்மைகளைச் சொன்னால், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்ற உறுதிமொழியைப் பொலிஸ் தரப்பு வழங்குகின்றது. அய்ட்டன் உண்மைகளைக் கூறி சிறையிலிருந்து விடுவிக்கப்படும்போது, சிறையிலிருக்கும் அவரது சகமாணவ நண்பர்கள், அய்ட்டன் தங்கள் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த துரோகி அய்ட்டன் என முத்திரை குத்துகின்றார்கள். இவ்வாறு அய்ட்டன் வெளியே வரும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும்போது, நெஜட் அய்ட்டனைத் தேடும் முயற்சியில் நம்பிக்கையிழந்து, எல்லா முயற்சிகளையும் நிறுத்திவிடுகின்றார். அதேசமயம், நெஜட்டின் புத்தகக்கடைக்கு வரும் உறவினர் ஒருவர், நெஜட்டின் தந்தை ஜேர்மனியில் கொலைக்கான குற்றத்தை அனுபவித்துவிட்டு நாடு கடத்தப்பட்டு அவர்களின் கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதைச் சொல்கின்றார். தனது தந்தை அலி கொலை செய்தபோது கொலைகாரனோடு இனியிந்த உறவும் வேண்டாம் என்று ஒதுங்கி தனித்து வாழ்ந்த நெஜட், என்னவானாலும் தன்னை இப்படி வளர்த்து ஆளாக்கியவர் தந்தையென்று எண்ணி அவரைச் சந்திக்க தொலைவிலுள்ள ஊருக்குச் செல்வதுடன் படம் முடிகின்றது.
இப்படம் சாதாரணமாகப் பார்க்கும்போது எளிமையான கதையாக இருந்தாலும், அது எடுக்கப்பட்ட விதமும், கதாபாத்திரங்களின் செதுக்கலும் மிக அழகாக இருக்கின்றன. இப்படத்திலுள்ள் பாத்திரங்கள் தம்மளவில் மிகுந்த தனிமையில் உழன்று கொண்டிருந்தாலும், சக மனிதர்களின் மீதான நேசிப்பில் ஒரு நதியைப் போல பரந்து பாய்கின்றவர்களாய் ஆகிவிடுகின்றனர். முக்கியமாய் நாம் ஒவ்வொரு மனிதர்களையும் பிரித்து அடையாளம் இடுதலை இப்படம் நிராகரிக்கின்றது. நம்மைப் போன்ற கீழைத்தேச நாடுகளிலிருந்து வருவோருக்கு மேலைத்தேய நாடுகளில் உள்ளோருக்கு உறவுகள் மீதும் மனிதாபிமானம் மீதும் அவ்வளவு மதிப்பிருப்பதில்லையென்ற ஒரு கருத்தாக்கம் இருக்கிறது. இங்கே முற்றுமுழுதாக ஜேர்மனிய கலாசாரத்திலிருக்கும் லொற் ஒரு அகதியாக வரும் அய்ட்டனைத் தன்னைப்போன்ற இன்னொரு சகமாணவியென்ற பரிவுடன் -பிற அடையாளங்கள் குறித்து எந்தப்பிரக்ஞையுமின்றி- அடைக்கலம் கொடுக்கின்றார். லொற்றுக்கும் அய்ட்டனுக்கும் வரும் ஒருபால் உறவு கூட நிறங்களை, கலாசாரங்களைத் தாண்டி, இயல்பானதே. அதேபோன்று லொற்றினது தாயாக வரும் சூசனுக்கும் முதலில் துருக்கியைச் சேர்ந்த அய்ட்டனை ஏற்றுக்கொள்வதில் தயக்கமிருப்பினும், பிறகு ஒரு சக மானுடஜீவியின் நேசிப்புடன் அய்ட்டனைச் சிறையிலிருந்து வெளியே எடுக்க முயற்சிக்கின்றார். பேராசிரியராய் நல்ல நிலையிலிருக்கும் நெஜட் கூட, எல்லாவற்றையும் உதறி அய்ட்டனைத் தேடி துருக்கிக்குப் பயணித்து மிக எளிமையான வாழ்வுக்குத் தன்னை தகவமைத்துக்கொள்கின்றார். அய்ட்டன் கூட ஒரு சாதாரண மாணவியாக வளாகத்தில் படித்து பிடித்த வேலையைச் செய்துகொண்டு வாழ்ந்துபோயிருக்கலமென்றாலும் அவர் வளாகத்திலிருந்து அதிகாரங்களின் அடக்குமுறைக்கு எதிராய் மிக உறுதியாகப் போராடுகின்றார்; படிப்பைத் தொலைக்கின்றார். ஆக லொற், நெஜட், சூசன், அய்ட்டன் ஆகியோருக்கு மிகப் பாதுகாப்பானதும் வசதியானதுமான வாழ்வு கிடைத்தும், சக மனிதர்களின் பொருட்டு தங்களுக்கு உரிய வாழ்வை இழந்து பிறருக்காய் போராடுகின்றார்கள். இப்பூமியில் இவ்வாறான மனிதர்களைக் காண்பது என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. ஆனால் நம் எல்லோரையும் விட அவர்களே உண்மையான வாழ்வை வாழ்வதால் நாம் அவர்களை வியந்து பார்த்தபடி தொடர்ந்து பேசியபடியிருக்கின்றோம்.
4.
இப்படத்தின் இயக்குநர் Fatih Akin இயக்கிய இன்னொரு படமான In July (காதலைத் தேடி ஜெர்மனியிலிருந்து துருக்கிக்கு போகும் ஒருவனின் அழகான பயணம்), மற்றும் துருக்கியிலுள்ள பலவேறுவிதமான இசை வகைகளைப் பற்றிய ஆவணப்படமான, Crossing the Bridge: The Sound of Istanbul பார்க்கும் சந்தர்ப்பம் இதே காலகட்டத்தில் கிடைத்திருந்தது. The Edge of Heavenனில் பின்னிணைப்பாக இருக்கும் இப்படத்தையெடுத்த பின்னணி பற்றிய குறிப்புகள் சுவாரசியம் தரக்கூடியன. தனது ஒவ்வொரு முழுநீளப்படத்துக்கும், படப்பிடிப்பிற்கான முதலிரு வாரங்களையும் முற்றாக நடிப்பவர்களின் ஒத்திகைக்காய் ஒதுக்குவதாகவும், அந்தக்காலப்பகுதியில் ஒவ்வொரு பாத்திரங்களையும் தாங்கள் இயல்புபடி நடிக்கச் செய்து அதிலிருந்து தனது பாத்திரங்களை இன்னும் செழுமைப்படுத்துவதாகவும் அகின் அதில் கூறுகின்றார். அத்துடன் இவ்வாறான வாரக்கணக்கான ஒத்திகையின்போது நடிப்பவர்கள் எல்லோரும் தங்களுக்குள்ளேயே அறிமுகமாகிவிடுவதால் ஒருவரையொருவர் விளங்கி நடிப்பது இலகுவாகவாகும், பாத்திரப்படைப்புகள் இயல்பாகவும் வரக்கூடியதாகவும் இருக்கிறதென்கிறார். 1973 பிறந்த அகில் திரைப்படங்களுக்கான பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பதுடன், நடப்பு அரசியல் குறித்த பிரக்ஞையுமுடையவர். ஜோர்ஜ் புஷ்ஷின் நிர்வாகம் இன்னொரு ஹிட்லரின் ஆட்சி என்று நாஸி சுவாஸ்ரிக்காவுடன் (Nazi swastika) ரீசேர்ட் ஒன்றை அணிந்ததற்காய் ஜேர்மனிய பொலிஸால் விசாரிக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அகினின் வார்த்தைகளில் சொல்வதனால், "Bush's policy is comparable with that of the Third Reich. I think that under Bush, Hollywood has been making certain films at the request of the Pentagon to normalise things like torture and Guantanamo. I'm convinced the Bush administration wants a third world war. I think they're fascists."
புகைப்படங்கள் 1,2, 3: The Edge of Heavenல் இருந்து
புகைப்படம் 4: Faith Akin
Faith Akin பற்றிய தகவலுக்கு: http://www.spiegel.de/international/0,1518,430542,00.html
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
நாயகன், நாயகன் , விலன் என்ற முத்திரை குத்தப்பட்ட கதாபாத்திரங்களாஇயே தமிழ் சினிமாக்களில் பார்த்து வளர்ந்து சலிப்புற்ற என் போன்ற ஒரு தலைமுறைக்கு உலக சினிமா மோகத்தை இன்னும் அகலப்படுத்தியுள்ள பதிவு.
2/07/2009 03:30:00 PMஇயன்றவரை முயன்று படம் பார்க்கின்றேன்,
பாரதி சொன்ன வேடிக்கை மனிதர்களையே தலைவர்களாஅய் பார்த்து வளர்ந்த ஒரு சமூகத்துக்கு நீன்கள் எடுத்து சொன்ன, ரத்தமும் சதையும் மனித நேயத்தால் மட்டுமே உருவான மனிதர்களின் அறிமுகம் / அவதாரம் அவசியமாகவே இருக்கின்றது
அருண், நமது மொழிப்படங்களில், நாம் வாழும் நிலம் சார்ந்த கவனிப்பு மிக அரிதே. பிறமொழிப்படங்களைப் பார்க்கும்போது, பலவேளைகளில் கதைகள் மிகச் சாதாரணமாகவே இருந்தாலும், கதை நிகழும் களனுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தில் நாம் இன்னும் அந்தக் கதைகளோடு ஒன்றிவிடமுடிகிறது. கதை நிகழும் களத்தை ஒரு இயக்குனரால் அழகாய் பதிவுசெய்யமுடியுமெனில், அங்கிருந்து எழும் கதாபாத்திரங்களை வடிவமைப்பது அவ்வளவு கடினமில்லை. தமிழ்ப்படங்களில் எல்லாமே 'நாயகர்களோடு' மட்டுமே முடிந்துவிடுகின்றன. அதைத்தாண்டாதவரை, உயரங்களை அடைதல் சாத்தியமில்லை.
2/09/2009 03:09:00 PMஇதில் மிகப்பெரும் குறையாக நான் காணுவது புலம்பெயர் படங்கள் கூட அதே ஹீரோயிச கனவுகளுடனேயே தொடர முயலுகின்றன என்பது.
2/09/2009 07:30:00 PMஎத்தனையோ கதைக்கருக்களும் களங்களும் இருக்கின்றபோது நாடகப்பாணியில் எடுக்கப்படும் படங்கள் பலசமயங்களில் சலிப்பையே தருகின்றன.
motor cycle diaries ல் ஒரு புரட்சியாளன் எப்படி உருவாகின்றான் என்று அணு அணுவாக காண்பித்தது போல தமிழ் பட இயக்குணர்கள் ஒருபோதும் காட்ட முயலுவதில்லை, ஒரே பாடல் காட்சியில் எல்லாவற்றையும் முடித்துவிடுகின்றனர்.
தமிழ்படங்களை பார்ப்பது இப்பொழுதெல்லாம் நிறைய சோதனை காலமாகிவிட்டது.
2/11/2009 09:47:00 AMஉலகெங்கும் நல்ல அரசியல், சமூகம் சார்ந்த படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன்.
உங்கள் பதிவு நல்ல பதிவு. தெளிவான கதை சொல்லி நீங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
/இதில் மிகப்பெரும் குறையாக நான் காணுவது புலம்பெயர் படங்கள் கூட அதே ஹீரோயிச கனவுகளுடனேயே தொடர முயலுகின்றன என்பது.
2/11/2009 01:54:00 PMஎத்தனையோ கதைக்கருக்களும் களங்களும் இருக்கின்றபோது நாடகப்பாணியில் எடுக்கப்படும் படங்கள் பலசமயங்களில் சலிப்பையே தருகின்றன./
அருண், இங்குள்ள புலம்பெயர் தமிழர்களின் அநேக படங்கள், கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி மாதிரி ஆகிக்கொண்டிருப்பதைப் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். இறுதியாய் எழுதிய இந்தப்பதிவில், 'இப்படத்தை எடுத்தவருக்கு செவிட்டில் அறைந்தால் என்ன என்றமாதிரி இருந்தது.' என்று உள்ள நிலையை எழுதியதற்கே எனக்குத் தெரிந்த ஒரு நண்பரிடம், 'யார் இவன் இப்படியெல்லாம் எழுதலாமா?' என்று காரத்தோடு ஒருவர் தொலைபேசியிருக்கின்றார். நல்லவேளை கோபமுற்றவர் அரோப்பாவிலிருந்தததால் கிடைக்கவிருந்த 'அறையிலிருந்து' தப்பினேன். விமர்சனம் என்பதே நம்மை இன்னும் மேம்படுத்துவதற்கே என்ற புரிதல் இல்லாதவர்களோடு எப்படி உரையாட முடியும்? அல்லது உரையாடலுக்குள் எப்படி அவர்களால் நுழைய முடியும்?
குருத்து: உங்கள் அன்புக்கு நன்றி.
(நீங்கள் சென்னையில் இருப்பவரானால்) நிறைய அயல்தேசத்துப்படங்கள் திரையிடப்படுவதாய் அறிகின்றேன். Fatih Akinனின் படங்கள் சில கூட அண்மையில் சென்னையில் திரையிடப்பட்டிருக்கின்றன என நினைக்கின்றேன்.
பிற மொழியறிவின் நிறைவின்மை இருந்தாலும் உண்மைத்தன்மையொடு சொல்லப்படுகிற, உணர்வுகளோடு கதைசொல்லுகிற திரைப்படங்களளை ஒன்றுக்கு மூன்று தரமேனும் பார்த்து புரிந்து கொண்டுவிடுவது என் வழக்கம் இதையும் பார்த்துவிட்டாலாம், ஆனால் என்ன திரைப்படங்கள் கிடைப்பதுதான் அரிதாக இருக்கிறது
2/11/2009 03:08:00 PMபகிர்வுக்கு நன்றி அண்ணன்.. பின்னூட்டங்களுக்கும் அருண்...
நல்ல அறிமுகம். பார்க்க முயற்சிக்கிறேன். துருக்கியைப் பற்றி பேசுவதால் நினைவுக்கு வந்தது. முடிந்தால் paradise now பாலஸ்தீனத் திரைப்படம் பாருங்கள். பார்க்க வேண்டிய படம்.
2/12/2009 07:15:00 AMடிசே, கொழும்பில் 100ரூபாய்க்கு இந்த டிவிடி கிடைத்து இப்போது Canterbury-இல் இருக்கிறது. எனக்கென்னவோ படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் வாழ்வின் எதிர்பாராத் தன்மைகள் என்று தோன்றுகிறது. இப்போது சரிவர ஞாபகப் படுத்த முடியவில்லையாயினும், படம் முடிவதற்கு கொஞ்ச நேரம் முன்பாக இக்கதாபாத்திரங்கள் ஒருவரையொருவர் கடந்து செல்வர், தாயைத் தேடும் மகள் ரோட்-இல் செல்லும் போது மிக அருகில் பஸ்ஸினுள் தாயும் அந்த விரிவுரையாளரும் இருப்பார்கள். அக் கிழவர் சிறை ஜன்னலால் பார்க்கும் போது லொற்-இன் உடலம் கொண்ட சவப்பெட்டி வந்திறங்குகிறது. - இப்படியான தருணங்கள்.
2/12/2009 12:32:00 PMஎன்னதான் அய்ரோப்பிய யூனியனை கெட்ட வார்த்தைகளால் திட்டினாலும், வெளி-ஆள் எடுத்த படம் என்று அப்பட்டமாகவே தெரிந்தது. அந்த கலகக்காரர்கள் குறித்து படம் நேர்மையுடனிருப்பதாய் தெரியவில்லை. நீ எதற்காக சண்டை பிடிக்கிறாய் என்று லொற்-இன் அம்மா கேட்கும் போது அய்ட்டன் சொல்கிற பதில் சப்-என்று இருந்தது.
2/12/2009 12:37:00 PMஇன்னொரு ஐரணி: விரிவுரையாளர் பாடம் நடத்தும் போது அங்கு தூங்கிக் கொண்டிருந்தது அய்ட்டன்.
அய்ட்டன் ஜெர்மானியப் பல்கலைக்கழகத்தில் `Rebel Studies' என்று எழுதியிருக்கும் பலகை ஒன்றைக் கடந்து செல்வார். நானும் அப்பிடி எங்கயாவது ஒரு Studies இருக்குமா எண்டு தேடிப் பாக்கோணும். ;)
2/12/2009 12:40:00 PMபின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
2/13/2009 01:30:00 PM....
/துருக்கியைப் பற்றி பேசுவதால் நினைவுக்கு வந்தது. முடிந்தால் paradise now பாலஸ்தீனத் திரைப்படம் பாருங்கள். பார்க்க வேண்டிய படம்./
போராட்டம், நீங்கள் குறிப்பிடும் படத்தைப் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கின்றேன்/வாசித்திருக்கின்றேன். ஒஸ்காருக்கும் வேற்றுமொழிப் படப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ஜந்து படங்களில் ஒன்று. நண்பர்கள் இங்கே இதைத் திரையிட்டபோது, பார்க்க முடியாமற் போய்விட்டது. விரைவில் பார்க்க முயற்சிக்கின்றேன்.
Unbound Urchin
2/13/2009 01:43:00 PM/எனக்கென்னவோ படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் வாழ்வின் எதிர்பாராத் தன்மைகள் என்று தோன்றுகிறது./
உங்கள் அவதானமும் சரியானதே. நீங்கள் எதிர்பாராத சந்தர்ப்பம் என்பதை, நான் தவறவிடப்படுகின்ற தருணங்களாகப் பார்த்தேன் (...அவ்வாறான அற்புத கணங்களைச் சந்திப்பதற்கும், தவறவிடுவதற்குமான இடைவெளி என்பதுகூட சிலநொடிப்பொழுதுகளில் இருப்பதாய் அமைந்துவிடுவதுண்டு.)
படித்துக்கொண்டிருக்கும் காலங்களில் (பிறகும் கூட) எல்லாவற்றையும் முழுதாய்ப் புரிந்துகொள்ள முடியாது என்று எடுத்துக்கொண்டால் பலவீனமுள்ள அய்ட்டனையும் நேசிக்க முடியுமென்றே நினைக்கின்றேன். வளாக வாழ்வில் எப்போதும் உணர்ச்சிவசப்படுகின்ற, எதையாவது செய்தாகவேண்டுமென்ற கொந்தளிப்பது இருப்பது இயல்பானதே. சிலவேளைகளில் நாம் தீவிரமாய் நம்பும் எத்தனையோ விதமான கருத்தியல்கள் பிறகான நாட்களில் உடைந்துபோவதில்லையா? லொற்றின் அம்மாவோடு அய்ட்டனுக்கு வருகின்ற முரண்கூட, என்னை எதிர்த்து பேச நீ யாரென்ற இளவயதுக்குரிய ஈகோவாய்த்தான் -அவருடைய சிறுபிள்ளைத்தனமான பதிலுக்கு அப்பால்- பார்க்கின்றேன். அவ்வாறான வகையில் பார்க்கையில் அய்ட்டனின் பாத்திரம் பிடித்திருந்தது.
/அய்ட்டன் ஜெர்மானியப் பல்கலைக்கழகத்தில் `Rebel Studies' என்று எழுதியிருக்கும் பலகை ஒன்றைக் கடந்து செல்வார். நானும் அப்பிடி எங்கயாவது ஒரு Studies இருக்குமா எண்டு தேடிப் பாக்கோணும். ;)/
அப்படியொன்று இருந்ததா? நான் படத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டேன். நிகழாது என்றும் சொல்லமுடியாது :-).
//தவறவிடப்படுகின்ற தருணங்களாகப் //
2/13/2009 02:23:00 PMThamiz, thamiz!! ezuthum poathu pala murai yosiththu vaarththai pidipadaatha kaaraNaththaal appadi ezuthinean. :)
and the rebel study thing, I'm def sure abt that.
Post a Comment