உலக அளவில் இன்று அரசியல் என்பது மாற்று, எதிர்ப்பு என்பவற்றை விடுத்து ஒருவித பித்த உறக்கத்தில் இருப்பதன் பயங்கரம் அச்சத்தை அளிக்கிறது. அறங்களைப் பற்றி பேசுவதும் அற அழுத்தங்களைப் பதிவு செய்வதும் பயங்கரவாதம், வன்முறை என்று அடையாளப்படுத்தப்படும் ஒரு காலகட்டத்தில் விடுதலை என்பது பற்றிச் சிந்திப்பது ஒரு கவித்துவமான ஆறுதலை மட்டுமே தரக்கூடியதாக உள்ளது.
(பிரேம் -ரமேஷ்: கட்டுரையும் கட்டுக்கதையும்)
1.
சில புத்தகங்களை அதிக ஆர்வத்தோடு வாசிக்கத் தொடங்கும்போது அவற்றிலிருந்து எடுத்துக்கொள்ள எதுவுமில்லையென்ற வெறுமை வந்துவிடும். எதிர்பார்ப்பில்லாது வாசிக்கும் சில புத்தகங்களோ சிலவேளைகளில் சுவாரசியமான வாசிப்பனுவத்தை எதிர்பாராது தந்துவிடுகின்றன. ஏற்கனவே அங்குமிங்குமாய் உயிர்மையில் வந்திருந்த கட்டுரைகளை வாசித்த காரணத்தால் -ஒரளவு அசுவாரசியமான நிலையிலே- தனிமையின் வழி என்னும் சுகுமாரனின் பத்தித் தொகுப்பை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். பக்கங்களைப் புரட்ட புரட்ட புறக்காரணங்களால் சோர்ந்துபோயிருந்த மனது நெருக்கமான கரங்களினால் இதமூட்டப்பட்டது போன்ற உணர்வுநிலைக்கு வந்திருந்தது. எத்தனைவிதமான மனிதர்களை.., எத்தனை விதமான உணர்ச்சிநிலைகளை சுகுமாரன் எதிர்கொண்டாரோ அவற்றையெல்லாம் வாசிக்கும் நம்மிலும் படிவதுமாதிரியான அனுபவத்தை இத்தொகுப்பு தோற்றுவித்திருந்தது. தன்னை நோகடித்திருந்தாலும், எந்த மனிதரையும் அவமானப்படுத்த விரும்பாத, அவர்களின் பலவீனங்களை ஏற்றுக்கொள்கின்ற ஒரு பத்தியெழுத்தாளராக சுகுமாரன் மாறுகின்றபோது இன்னும் நெருக்கமுடையவராக மாறிவிடுகின்றார்.
கவிஞர்களாலும் நல்ல பத்தியெழுத்தாளராக முடியும் என்ற நம்பிக்கையை பிரமிளுக்குப் பிறகு துல்லியமாகக் கண்டறிந்தது கொண்டது சுகுமாரனிடம் எனச் சொல்லலாம். இத்தொகுப்பில் கூறப்படும் சில (அவமான) அனுபவங்கள் சில பொழுதுகளில் கள்ளிக்காடு பாலச்சந்திரனின் சிதம்பர நினைவுகளை நினைவுபடுத்தியிருந்தது. இருவரினதும் அனுபவங்கள் வெவ்வேறானவை என்றாலும், நிகழும் நிலப்பரப்புக்கள் ஒன்றென்பதால் அவ்வாறான இணைப்பை எனது மனது பொருத்திப் பார்த்ததோ என்ற சந்தேகமும் உண்டுதான்.
வீட்டை விட்டு (இரண்டு முறை) ஓடிபோதல், அப்பாவைப் பிரிந்து அம்மாவோடும் சகோதரிகளோடும் வாழ்வது என்று பலவேறு துயர நினைவுகளைச் சுமந்திருந்தாலும், அவற்றைக் கூட வாழ்வில் இயல்புகளில் சிலவாய் இருக்கக்கூடும் என்று சுகுமாரன் எழுதிப்போவது பிடித்தமானது. ஆர்.ஷண்முகசுந்தரத்தை சந்திக்கும்போது அவர் படைப்புச் சார்ந்து கதைக்காது பிற விடயங்களைக் கதைத்து, இலக்கியம் சோறு போடாது என எச்சரிப்பதும், காஃப்காவினால் பரிட்சயமாகும் சிற்றிதழ் வெளியிடும் நண்பரொருவர் கடும்போதையால் இளவயதில் இறந்துபோவதையும் வாசிக்கும்போது இலக்கியம் சார்ந்த கசப்பே கவியத்தொடங்குகின்றது. ஆனாலும் இவ்வாறான கடந்தகால கசப்பான நிகழ்வுகளையும் தாண்டி ஏதோ ஒரு மர்மமான சுழல்தான் பலரை இன்னுமின்னும் படைப்பிலக்கியம் சார்ந்து தீவிரமாய் இயங்கவைத்துக்கொண்டிருக்கின்றது போலும்.
ஒரு பத்திரிகையாளராக சில்க் சுமிதாவைச் சந்திப்பதும், சுமிதா கவிஞராக இருக்கும் தனது சுயமரியாதையைக் கேலிபண்ணிவிட்டதாக பத்தியெழுத்தாளர் மனங்கோணுவதும், பிறகு சில்க் சுமிதாவின் தற்கொலை செய்த உடலைப் பார்க்கும்போது, எத்தனையோ ஆயிரமாயிரம்பேர்களின் கனவுகளில் வந்த ஒரு உடல், யாருமே கவனிக்காத உடலமாகிப்போன அபத்தத்தையெல்லாம் மனதில் ஊடுருவிச்செல்லும்படியாக சுகுமாரன் எழுதியிருக்கின்றார். சுகுமாரன் தன்னளவில் கவிஞராக இருப்பதோடு வெகுசன ஊடகங்கங்களிலும் பணிபுரிந்ததால் விசாலமான நிலப்பரப்புகளில் நிகழ்ந்த பலவேறு சம்பவங்கள் நினைவூட்டப்படுகின்றன.
2.
தனிமையின் வழி தொகுப்பைவிட அண்மையில் அதிகம் பாதித்த/வியந்த ஒரு நிகழ்வென்றால் லிவிங் ஸ்மைல் வித்யாவினது நான் வித்யா என்ற சுயசரிதை நூலை முன்வைத்து ஆஹா எப்ஃ எம்மில் நிகழ்ந்த நேர்காணல். எத்தனையோவிதமான அவமானங்களையும், துயரங்களையும் வித்யா பெற்றிருப்பார். நமது சமூகம் கொடுத்த/கொடுத்துக்கொண்டிருக்கும் வலிகளையும் தழும்புகளையும் மனதில் இருத்திக் காழ்ப்புக்கொள்ளாது (அவ்வாறிருப்பதற்கான அனைத்து உரிமையும் வித்யாவிற்கும் இருந்தும்) மிக நிதானமாய் தனது வலிகளை -மெல்லிய சிரிப்பால் கடந்து- இன்னும் திருநங்கைகளுக்காய் இச்சமூகம் மாறவேண்டிய முக்கிய புள்ளிகளை அந்நேர்காணலில் தொகுத்து அளித்திருந்தார். நாம் எல்லோருமே கொஞ்ச நேரம் ஒதுக்கியேனும் இந்நேர்காணலைக் கேட்பதென்பது நாமின்னும் திருநங்கைகளை அணுக்கமாக அணுக உதவக்கூடும். லிவிங் ஸ்மைல் வித்யா வெளிப்படையாக தனது சுயசரிதையாக எழுத வந்தது... திருநங்கையாக இல்லாதவர்களை மட்டுமில்லை, திருநங்கைகள் என்று அறிந்தும் சமூகத்தின் முன் வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குகின்றவர்களையும் பாதித்திருக்கிறது என்றே நம்புகின்றேன். திருநங்கைகளாக தங்களுக்கான உரிமைகளைக் கேட்கும்போதுகூட காலங்காலமாய் நாங்கள் வைத்திருக்கும் வெளியில் தங்களுக்கான இடத்தைக் கூடக் கோரவில்லை; தமக்கான தனித்துவமாயிருக்கும் ஒரு வெளியை அங்கீகரிகக மட்டுமே வித்யா போன்றோர் வேண்டுகின்றார்கள்; திருநங்கைகள் போன்ற விளிம்புநிலை மனிதர்கள் மட்டுமில்லை ஏனைய மாற்றுப் பாலினத்தவர்களும் இதையேதான் கேட்க விழைகின்றார்கள்.
இன்று கூட எழுத்துச்சூழலில் (வலைப்பதிவுகளிலும்) திருநங்கைகள் பிச்சையெடுக்கின்றார்கள், பொதுவெளியில் தங்களைச் சுற்றிக் கூடி 'ஏடாகூடமாய்' கேலிசெய்கின்றார்கள்' என்று இன்னும் அரிவரியில் இருப்பதுபோல பலர் எழுதும்போது/பேசும்போது அலுப்பே மிஞ்சுகின்றது. அவ்வாறானவர்கள் திருநங்கைகள் உட்பட்ட மாற்றுப்பாலினத்தவர்கள் அப்படியிருப்பதற்கான காரணங்களை வித்யா மிக எளிதாக எல்லோருக்கும் விளங்கும்படியாக கூறும் இந்நேர்காணலை நிச்சயம் கேட்டாக வேண்டும்.
தானொரு திருநங்கையாக மாறிக்கொண்டிருப்பதை அறிந்து, ஆனால் இன்னமும் பொதுவெளியில் அவ்வாறாக அறிவித்துக்கொள்ளாத அனிதா என்றொரு திருநங்கை, நான் வித்யா நூலை வாசித்தபோது தன்னாலும் இச்சமூகத்தில் தனித்து நிற்கமுடியும் என்ற நம்பிக்கையை வித்யா தந்திருந்தார் என்று இந்நிகழ்வில் கூறியதைக் கேட்டபோது மிகுந்த நெகிழ்வாயிருந்தது. இவ்வாறு வித்யாவின் இந்த நூல் இன்னும் பலருக்கு உத்வேகத்தையும்.., திருநங்கைகள் பற்றி அறிந்துகொண்டு நெருக்கம் கொள்ளவும்... உதவியிருக்குமென நினைக்கின்றேன்.
ஆணிலிருந்து பெண்ணாக (M 2 F) மாறுவதுபோல, ஒரு பெண்ணாயிருந்து ஆணாய் (F 2 M) மாறுவது அவ்வளவு சுலபமில்லையெனவும், மிகுந்த மனத்திடம் வேண்டியிருக்கிறதென வித்யா குறிப்பிடுவது கவனிக்கவேண்டிய ஒன்று. அத்தோடு இவ்வாறு பால் கலப்புடன் இருப்பவர்கள் உரிய அறுவைச்சிகிச்சை செய்யாதிருக்கும்வரை பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. அண்மையில் இங்கு இதுதொடர்பாய் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்ட ஒருவர் தங்களுக்கு எந்தக் கழிவறைக்குச் செல்வது என்பதே மிகப்பிரச்சினையாக இருக்கிறதெனவும், ஒருமுறை தன்னை காவற்துறை பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேற்றியதாகவும் கூறியதாய் நிகழ்ச்சியைப் பார்த்த தோழியொருவர் கூறியிருந்தார். ஆக, மேற்குலக் நாடுகளில் கூட இன்னமும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான இடைஞ்சல்கள களையப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது. அண்மையில்தான் ஜபிஎம்(IBM) போன்ற சில தனியார் நிறுவனங்கள் இவ்வாறான நிலையிலிருப்பவர்கள் அறுவைச்சிகிச்சை செய்வதற்கான காப்புறுதிப் பொதிகளை (Insurance Packages) தமது தொழிலாளர் நலங்களில் சேர்ந்திருந்திருக்கின்றன.
லிவிங் ஸ்மைல் வித்யா போன்றவர்கள் விரிவாகவும் ஆழமாகவும் பேசுவதற்கான வெளிகள் எல்லா ஊடகங்களிலும் திறக்கப்படவேண்டும். இதுவரை மற்றவர்கள் அவர்களுக்காய்ப் பேசியது போலவன்றி, அவர்களே அவர்களின் குரல்களில் (தலித்துக்கள் போல) பேசுவதற்கான சூழல் கனியவேண்டும். இவ்வாறான விளிம்புநிலை மனிதர்களின் கருத்துக்களே சீழ்பிடித்து வீங்கிப்போயிருக்கும் சமுதாயத்தின் காயங்களை ஆற்றக்கூடிய வலிமையுடையதாக இருக்குமென நம்புகின்றேன். மில்க்(Milk) படத்தில் ஹார்வி தேர்தலில் நிற்கும்போது ஓரினப்பாலினருக்கு மட்டுமில்லாது வறுமைக்கோட்டிற்குள் வாழ்பவர்கள், வயதானவர்கள், ஹிப்பிகள் போன்றவர்களின் நலத்திட்டங்களையும் முன்வைத்தே போட்டியிருக்கின்றார். வலிகளைப் புரிந்தவர்களாலே பிறரது வலிகளையும் அதிகம் விளங்கிக்கொள்ள முடியும் என்றவகையில் இவ்வாறான விளிம்புநிலை மனிதர்கள் அதிகாரத்திற்கு வருவதையும், அதிகாரங்களைக் கைப்பற்றுவதையும் நாம் ஊக்குவிக்கவேண்டும்.
3.
சேகுவேராவினது வாழ்வின் எந்தப் பகுதியை எடுத்தாலும் அது சுவாரசியமாக ஆழமும் விரிவாக நீளக்கூடியதுதான். மோட்டார் சைக்கிள் டயரியாய் இருந்தாலெனன, கொங்கோ டயரியாயிருந்தாலென்ன, கடைசிக்கால பொலிவியா டயரியாயிருந்தாலென்ன எல்லாமே வியப்பும் திகைப்பும் உடையவை. சிலவேளை இப்படியொரு மனிதன் எமக்கு அண்மைக்காலத்தில் வாழ்ந்தானா என்ற பிரமிப்பும் கூடவே வந்துவிடத்தான் செய்கின்றது. தனது பிரச்சாரத்திற்கெனத்தான் Jorge G. Castañeda சேகுவாரா பற்றி எழுதினார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அதையும் மீறி அந்நூலில் கூட சே தனித்துவமாக ஒளிரத்தான் செய்கின்றான். சூரியனைக் கண்டு நாய் குரைக்கின்றமாதிரி தமிழ்ச்சூழலில் சில குரல்கள் சேயை அசிங்கபடுத்த முயன்றாலும் சேயை உண்மையான விருப்புடன் வந்தடைகின்ற ஆயிரக்கணக்கான இளைஞர் இளைஞிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.
சேயினது மறைவின்போது, ஃபிடல், எங்கள காலத்திற்கு அல்ல, இனி வரும் எதிர்காலத்திற்கு எல்லாவிதத்திலும் ஒரு முன்மாதிரியே சே எனக்கூறுவது பொருத்தமான வார்த்தைகள்தான். எது என்னைச் சேயோடு அதிகம் நெருக்கமுறச் செய்கின்றது என்று யோசித்தால் அவன் தனது பெருங்கனவுகளின் பலவீனங்களை அறிந்து வைத்திருந்தான் என்பதே. ஆனால் வீழ்ச்சி அடைந்துவிடுவேனே என்பதற்கு அஞ்சி தனது கனவுகளைக் கைவிடத்தயாராகவும் இருக்கவில்லை என்பதுதான் அதிகம் வசீகரிக்கின்றது. கியூபாப் புரட்சியின்போது புரட்சியை ஏற்றுமதி செய்யமுடியாது என்கின்றவன், கொங்கோவிற்கு கியூபாக் கெரில்லாப் புரட்சியின் மாதிரிகளை எடுத்துச் செல்கின்றான். கொங்கோவில் தனது வீழ்ச்சியை (ஒருகட்டத்தில் சாகும்வரை அங்கு இருக்கலாமெனவும் முடிவு எடுக்கிறான்) சந்தித்தபின்னும் தனது புரட்சிக்கனவைக் கைவிடாதபடியால்தான் பொலிவியாவிற்குள் நுழைகின்றான். சேயை புரட்சியின் நாயகனாகப் பார்ப்பதைவிட, உயர்ந்த நம்பிக்கைக்காய் தன்னையே இழந்த வீழ்ச்சியின் நாயகனாய்ப் பார்ப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. எனெனில் வெற்றி கொண்டவர்களுக்கு மேலே செல்ல ஏதுமில்லை. தோற்றுக்கொண்டவன் தனக்கான வெற்றியை அடையும்வரை முயற்சித்துக்கொண்டேயிருப்பான அல்லவா. எனவே சேயை வீழ்ச்சியின் நாயகனாக நினைவுகொள்ளும்போது -அவன் ஒடுக்குமுறைகள் உள்ள எல்லா வெளிகளிலும் வழிகாட்டியாக வ்ந்துவிடச் செய்கின்றான்.
சேயினைப் பற்றி இரண்டு பாகங்களாய் எடுக்கப்பட்ட Steven Soderbergன் இந்நீளத்திரைப்படம் ஐந்து மணித்தியாலங்களுக்கு ஓடக்கூடியது. முதலாவது பாகம் சே ஃபிடலைச் சந்திப்பதிலிருந்து தொடங்கி, சேயினது பிரசித்துபெற்ற சான்ரா கிளாரா இராணுவ வெற்றியுடன் ஹவானாவை நோக்கி நகர்வதுடன் முடிகின்றது. இரண்டாம் பாகம் சே பொலிவியாவில் நுழைவதில் தொடங்கி சேயினது இறப்பில் நிறைவுபெறுகின்றது. ஏற்கனவே கூறியதுபோல இது சேயினது முழு ஆளுமையை காட்சிப்படுத்தும் ஒரு படமல்ல. சேயினது வாழ்வும் ஒரு திரைப்படத்தில் அடங்கக்கூடியதுமல்ல.
முதலாம் பாகம் தொடங்கும் காட்சி சுவாரசியமானது. சே அமெரிக்காவில் (ஐநா சபையில்) அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் முகத்திரையை கிழிப்பதுடன் ஆரம்பிக்கின்றது. அமெரிக்காவில் கூட சேயைக் கொல்வதற்கான சில முயற்சிகள் நடைபெறுகின்றன. சந்திக்கும் செனட்டர்களுடன், அமெரிக்கா இன்னும் Bay of Pigsஐ மறந்துவிடவில்லைத்தானே என சீண்டிப்பார்கவும் செய்கின்றார். அங்கிருந்து தொடங்கும் காட்சிகள் பிறகு பின்னோக்கி கியூபாவின் புரட்சியின் ஆரம்பக்கட்டங்களுக்கு நகரத்தொடங்குகின்றது. ஒரு மருத்துவராக இருக்கும் சே எப்படி போராளியாக மாறுகின்றார் என்பதையும், சேயினது அந்நியத்தன்மையைக் களைக்க எப்படி ஃபிடலும் ராகுலும் முயற்சிக்கின்றன்ர் என்பதும் கவனத்திற்குரியது (இந்த அந்நியத்தன்மையே ஏற்றுக்கொள்ள உள்ளூர் மக்கள்/போராளிகள் விரும்பாததாலேயே பொலிவியாவில் சேயினது வீழ்ச்சி மிகவிரைவாக நிகழ்கிறது என்பதையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்). சான்ரா கிளாராவில் ஆயுதத்தளபாடங்கள் ஏற்றிவரும் புகைவண்டியைத் தகர்ப்பதன் மூலம் சே ஒரு சிறந்த கெரில்லாத தள்பதியாக மாறுகின்றார். அதேவேளை குடிமக்களை சித்திரவதை செய்யும்.., பெண்களைப் பாலிய்ல் வன்புணர்சியிற்கு உள்ளாக்கும்... போராளிகளுக்கு கடுமையான தண்டனைகளையே -மரணதண்டனை உட்பட- கொடுக்கின்றார்.
இரண்டாம் பாகம் தொடங்கும்போது சேயினது பொருளாதராச் சீர்திருத்தஙகள் தோற்பது குறித்தோ, ஃபிடலுக்கும் சேயுக்குமிடையில் முகிழும் சோவியத்து X சீன கம்யூனிச விரிசல் குறித்தோ எதுவுமில்லாது படம் உடனேயே பொலிவியாவுக்கு பாய்ந்துவிடுகின்றது. முதலாம் பாகத்தில் ஒரு வெற்றிகரமான கெரில்லாத் தளபதியாக இருக்கும் சே, இரண்டாம் பாகத்தில் வீழ்ச்சிக்குரிய நாயகனாக ஆகிக்கொண்டிருப்பது காட்சிப்படுத்தப்படுகின்றது. சேயைக் காயங்களுடன் பொலிவியா-சிஜஏ கூட்டில் கைதுசெய்யும்போது, 'நான் சே என்னைக் கொல்வதை விடக் கைது செய்வது பலமடங்கு பிரயோசனமானது' என்று உறுதியுடன் கூறுவதெல்லாம் படத்தில் இல்லை. கொல்லப்படுவதற்கு முன்னர் அங்கிருக்கும் உள்ளூர் ஆசிரியையுடன் சே உரையாடும்போது, இத்தகைய படுமோசமான வகுப்புக்களிலிருந்தா பிள்ளைகள் கல்விகற்கின்ற்னர்.... இவ்வாறான ஏற்றத்தாழ்வுகளுக்காய்த்தானே நாம் போராட் விரும்பினோம் என்று கூறுவது நெகிழ்ச்சிதரக்கூடியது. சேயின் பிரசித்தம் பெற்ற இறுதிவாக்கியமான நீங்கள் என்னைக் கொல்லலாம் ஆனால் புரட்சி பற்றிய எனது நம்பிக்கையை என்றைக்கும் கொல்லமுடியாது என்பதன் சாட்சியாகத்தான் சே இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
படமாகப் பார்க்கும்போது பல போதாமைகளை இத்திரைப்படம் கொண்டிருக்கின்றது. அதில் முக்கியமானது மிக ஆறுதலாக நகரும் திரைக்கதை. புரட்சியின் துளி பட்டிடாத மோட்டார் சைக்கிள் டயரி அழகாகப் படமாக்கப்பட்ட விதத்தில் சேயினது புரட்சி பற்றிய இத்திரைப்படம் எடுக்கப்படவில்லை எனத்தான் கூறவேண்டியிருக்கிறது. ஆனால் சேயாக நடித்த Benicio del Toro சேயை நன்றாகப் பிரதியெடுத்து நடித்திருக்கின்றார். முக்கியமாய் ஆஸ்மாவால் கஷ்டபபடும் சேயின் காட்சிகள் மிகத் தத்ரூபமாய் இருக்கின்றன. சேயைப் பற்றி எத்தனை கோணத்திலும் படமாய்ப் பார்த்தாலும் ஒருபோதும் அலுக்கப்போவதில்லை. எனெனில் உண்மையான போராளிகளின் வாழ்க்கை ஒரு திரைப்படத்திற்குள் என்றுமே அடங்குவதில்லை.
(அருண்மொழிவர்மனுக்கு...)
படங்கள் - உரியதளங்களுக்கு நன்றி
சே குவேரா, சுகுமாரன், லிவிங் ஸ்மைல் வித்யா: சில குறிப்புகள்
In பத்திWednesday, September 02, 2009
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
DJ,
9/02/2009 10:04:00 PMthanks for this interesting post.
அருமையான பதிவு சகா!
9/03/2009 02:30:00 AMநீங்கள் கூறியது போல் 'சே' யை ரசிக்கும் இளைஞர்களில் நானும் ஒருவன். 'சே'யைப் படிப்பதற்கு எத்தனை வழிகள் வந்தாலும் தொடர்ந்து கொண்டே இருக்கலாம். என்னால் சே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மாத்திரமே பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. முதலாவது பாகத்தை தேடி வருகின்றேன். இதுவரை கிடைக்கவில்லை. இரண்டாம் பாகத்தில் நானும் போதாமைகள் சிலவற்றை உணர்ந்தேன். சே என்ற மனிதனின் வாழ்க்கையை புத்தகங்களில் வாசித்ததிலிருந்தே இந்த ஒப்பீட்டை நான் மேற்கொண்டேன். நிச்சயமாக சேயாக நடித்திருந்த Benicio del Toro சேயை நம்முன்னே கொண்டுவந்து நிறுத்தி விடுகின்றார்.
பதிவுக்கு மிக்க நன்றி சகா...
முதலில் நன்றிகள் டிசே, அருண்மொழிவர்மனுக்கு என்ற கௌரவிப்பிற்காக.
9/03/2009 10:57:00 PMஇதில் அதிசயம் என்னவென்றால் இந்தக் கட்டுரையில் நீங்கள் சொன்ன மூவருமே எனக்கு அதிகம் பிடித்தவர்கள். அதிலும் சே மீதான என் அபிமானம் கிட்டத்தட்ட ஒரு பிரமிப்புதான். மிக விரைவில் புது வீடொன்றுக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் வீடு பார்க்கும் அதே அளவுக்கு நான் வீட்டில் வைக்க ஆசைப்படும் சேயின் படத்துக்கும் மினக்கெடுகிறேன். வழமையான தொப்பி அணிந்த படத்தைவிட, தொப்பி அணியாத, வாரி இழுத்த தலையுடன் கூடிய, வாயில் சுருட்டும் சிருப்புமாய் இருக்கும் சேயின் படம் என் நெடுநாளைய விருப்புகளில் ஒன்று....
அதுபோல சுகுமாரன், அவர் மொழிபெயர்த்த பப்லோ நெருதாவின் கவிதைகள் பற்றிய காட்டமான பல விமர்சனங்கள் உண்டென்றாலும், முன்னர் இலங்கையில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது படித்த ஒரு கவிதையுடன், ஆசிரியர் தன் விருப்பில் படிப்பித்த சில கவிதைகளும் பிடித்தே இருந்தன. அதில் பலவற்றை தமிழ் மொழிபெயர்ப்பில் படிப்பது ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. (முழுத் தொகுப்பையும் இன்னும் படிக்கவில்லை)
வித்யாவின் புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை ஆனால் அவர் பதிவுகளை பெருமளவுக்கு வாசித்திருக்கிறேன். அவர் சினிமாத் துறையில் ஈடுபடுவது குறித்த மகிழ்ச்சி இருந்தாலும் அது அவர் எழுத்துக்களை குறைத்து விட்டதோ என்ற கவலையும் உண்டு.....
பகிர்வுகளுக்கு நன்றிகள்
சுரேஷ் கண்ணன், கோபிநாத், அருண்: நன்றி.
9/04/2009 09:49:00 AM....
கோபிநாத்:
சேயின் முதலாம் பாகத்தையும் சந்தர்ப்பம் வாய்த்தால் பாருங்கள். நீங்கள் குறிப்பிட்டதுமாதிரி சேயை ஏற்கனவே அறிந்துகொண்டவர்க்கு இத்திரைப்படத்திலிருந்து அறிந்துகொள்ள பெரிதாக எதுவுமில்லை என்றே நினைக்கின்றேன். மோட்டார் சைக்கிள் டயரிகளை ஏற்கனவே பார்த்திருப்பீர்களென்றே நம்புகின்றேன்.
.......
அருண்: சலித்திருந்த ஒரு பொழுதொன்றில் வாசிக்கத்தொடங்கிய 'தனிமையின் வழி' மிகவும் நெகிழ்ச்சியூட்டக்கூடியதாக இருந்தது. அண்மையில் 'கட்டுரையும் கட்டுக்கதையும்' தொகுப்பை மீண்டும் வாசித்த நண்பரொருவர், அது தன்னை மீண்டும் புத்துணர்ச்சியிற்கு இட்டுச்சென்றதென்றார். இப்படிச் சில புத்தகங்கள் அமைந்துவிடுவது அற்புதமல்லவா?
நீங்கள் விரும்பியபடி ஒரு சேயின் படம் நீங்கள் குடிபுகும் புது வீட்டிற்குக் கிடைக்க என் வாழ்த்துக்கள்
//சிலவேளை இப்படியொரு மனிதன் எமக்கு அண்மைக்காலத்தில் வாழ்ந்தானா என்ற பிரமிப்பும் கூடவே வந்துவிடத்தான் செய்கின்றது//அவன் தனது பெருங்கனவுகளின் பலவீனங்களை அறிந்து வைத்திருந்தான் என்பதே. ஆனால் வீழ்ச்சி அடைந்துவிடுவேனே என்பதற்கு அஞ்சி தனது கனவுகளைக் கைவிடத்தயாராகவும் இருக்கவில்லை என்பதுதான் அதிகம் வசீகரிக்கின்றது.//
9/08/2009 09:05:00 AMஇந்த வரிகளை நானும் உணர்ந்திருந்த காரணத்தினால் உங்களையும் அணுக்கமாக உணர்கிறது மனசு
நல்ல பகிர்வுகள் சுகுமாரன் குறித்ததும் வித்யாவை குறித்ததும்
நன்றி
At 9/09/2009 10:03:00 AM, yamuna rajendran
9/09/2009 11:25:00 AManpulla dj - just i want to say some words about 'che'the film. soderburgs che is incomparable to walters film 'motor cycle diary'. soderburgs che is his personal film. one thing i noticed and amazed about soderburgs che is this : he sidelined all the pre-conceived 'images' and 'ideas' about che in his film. can you imagine, that a che film has been made with out the images of him with a baret and his classic death ? i was thinking long time to write about soderburgs che. this is the film i like persoanlly of all the films made on che by yester year hollywood, south american and spanish directors, altogether six films on ches life. by the way yours is the first review of che in tamil by the 'seen' experience unlike s.ramakrishnan who recommends che not even seeing the film but with gathered informations - anpudan yamuna rajendran
(யமுனாவின் மேலுள்ள பின்னூட்டம் தவறுதலாக வேறொரு பதிவில் இடப்பட்டதால் இங்கே நான் மீள் பதிவிலிடுகின்றேன் ~டிசே)
நன்றி நேசமித்திரன்.
9/09/2009 01:52:00 PMஉங்கள் வலைப்பதிவின் முகப்பிலும் சே இருக்கின்றார் அல்லவா?
அன்பின் யமுனா,
9/09/2009 02:03:00 PMநேரமிருக்கும்போது விரிவாக soderburgன் சே பற்றி எழுதுங்கள். சே பற்றி நிறையப் படங்கள் பார்த்திருக்கும் நீங்கள் இப்படம் குறித்து எழுதும்போது ஆழமானதொரு கட்டுரையாக அமையும். இந்தப்படத்தில் குறிப்பிடும்படியாக -இதுவரையறியாத சேயென்று- எதுவுமில்லையென்றே எனக்குத் தோன்றுகின்றது. 4 வருட உழைப்பும், பெரும் பணச்செலவழிப்பும் சேயை இப்படிக் காட்சிப்படுத்தவா என்ற அலுப்பே மிஞ்சியிருந்தது.
....
இப்படம் திரைப்படவிழாக்களுக்கு மட்டுமே திரையிடலுக்காய்ப் போய்க்கொண்டிருந்தபோது எஸ்.ரா இதையொரு சிறந்தபடமென்று குறிப்பிட்டெழுதியபோது வியப்பாய்த்தானிருந்தது. எஸ்.ரா சிறந்த 10 படங்களில் இதுவும் ஒன்று எழுதியபோது இங்குள்ள சாதாரண தியேட்டர்களுக்கே திரையிடலுக்காய்ச் சே படம் வந்திருக்கவில்லை :-(.
/ he sidelined all the pre-conceived 'images' and 'ideas' about che in his film. can you imagine, that a che film has been made with out the images of him with a baret and his classic death ?/
Exactly. I felt this too Yumuna.
i need the film names of CHE.
10/02/2009 03:35:00 PManyone can tell me that
anpulla dj- i am on the process of writing a book on che's impact on worldwide art, literature and film. a book of my origional articles and translations. there will be an article on whole films on che including soderburg's che. i am planning to bring the book around the middle of 2010 - anpudan rajendran
11/17/2009 05:32:00 AMPost a Comment