1.
நேற்றைகளின் இரவுகளின்
ஒவ்வோர் கதகதப்பான அழைப்பிலும்
பச்சையம் படிந்து உருவான காடுகள்...
கழுத்திலொரு வளையம் அணிவித்து
காலம் நம்மை நெருக்கியபோது
எல்லா இரகசியங்களையும்
தம்மோடு மூடிக்கொண்டு
துயரத்தில் தற்கொலை செய்திருந்தன
'எல்லாமும்' இருக்கின்ற
யாருமற்ற பனிப்பாலையில்
சுழியத்திலிருந்து தொடங்கும் பதியங்கள்...
தவறுகளின் துரிதகதியில் ஊரத்தொடங்குகின்றன புத்தகப்பூச்சிகள்
புத்தகங்களும் வேண்டாம் பூனாவும் வேண்டாமென
மூர்ககமாகி அனைத்தையும் உதைத்துத்தள்ளியபின்
கொளுத்தத்தொடங்கினேன் புத்தகம் + பூச்சிகளை.
2.
இப்போது உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைகளில்
பொழியும் மழை
மீண்டும் கிளர்த்திக்கொண்டிருக்கிறது
கனவுகளை.
'நமக்கான கனவுகள் தனித்துவமானவை'
நூறிலிருந்து சுழியத்துக்கு நகர்ந்துகொண்டிருந்த
விருப்புக்களின் சதுரங்கத்திற்குள் நின்றொலித்திருக்கிறேன்
பாம்பு வாலால் சுழற்றி வீழ்த்தியபோதும்
ஏணியில் ஏற்றிவிட 'தொலைவிலொரு குரல்' காத்திருந்தது
பச்சையங்களில் வளர்த்த
நமக்கான காடு தற்கொலையை நாடியபோது
அதன் கடைசிப்பொழுது கத்தரிப்பூ நிறத்திலிருந்தது
பிடித்தமான கள்ளிச்செடிகளை வளர்க்கக்கூட
மூர்க்கமாய் மறுத்துத் தரிசானது நிலம் (அல்லது காடு).
3.
பிறருக்கான
நன்றிகளையும் விருப்புக்களையும்
மறுதலித்து பாவங்களின் குறுக்குமறுக்குமான
முடிவிலி வலைக்குள் வீழ்ந்தா நானா?
நமக்கான கனவா?
காடெரிந்த கத்தரிப்பூச் சுவாலை
மீண்டும் ஊருலா வருகையில்
காலையில் தருமொரு முத்தமாய்
உன்துயில் கலைக்காது 'போய்விட' விரும்புகின்றேன்
'எரிப்பதை விட வனாந்தரத்தில் புதைப்பதே விருப்பமானது'
அன்பே, தயவுசெய்து மறந்துவிடாதே
கனவு எண் 25ஐ.
காடு தன்னை எரித்ததுபோலவன்றி
அடையாளமின்றிப்போவதை மறுக்கின்றேன்
'இந்தக் கனவுகள் - ஈரலிப்பானவை நித்தியமானவை நிகழக்கூடியவை'
பஞ்சவர்ணக்கிளியின் வழிகாட்டலோடு
கனவுகளை நிகழ்த்திக்காட்ட
வருமொருவரின் காலடித்தடங்களுக்காய்
மிதந்தபடியிருக்கட்டும்
என்னுடலப் பச்சையங்கள்.
(2009)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment