கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மு.தளையசிங்கத்தை வாசித்தல் - பகுதி 01

Monday, December 20, 2010

"இலக்கியம் என்பதன் மூலம் கட்சி இலக்கியத்தை நான் கருதவில்லை. கட்சி இலக்கியத்தை அடியோடு வெறுக்கிறேன். கலை கலைக்காக என்ற வாதம் பிழையானது. ஆனால் அதைவிடப் பிழையானது கலை கட்சிக்காக என்ற வாதம். முன்னதில் கொஞ்சமாவது தனித்தன்மைக்கும் புதிய தத்துவங்கள் பிறப்பதற்கும் வசதி இருந்தது. பின்னதில் அந்த வசதி கொஞ்சமும் இல்லை. ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு! ஒரே ராகம்! எல்லாப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு ஒரே formula கலை மக்களுக்காக - நானும் கை தூக்குகிறேன். ஆனால், மக்கள் என்பதைக் கட்சியாக மாற்றுவதை நான் அடியோடு எதிர்க்கிறேன். கட்சி என்பது மக்களாக விரிய வேண்டும். ஆனால் அது இன்றைய அரசியல் கட்சிகளால் முடியாது. வேறு எந்தக் கட்சிகளாலும் முடியாதது. காரணம் மனிதத் தன்மைகள், எண்ணங்கள், மன எழுச்சிகள் என்பவற்றை ஒரு formulaவைக் கொண்டு அளக்க முடியாது. அவை விசாலமானவை. மிகச் சிக்கலானவை. ஒவ்வொரு கட்சியும் அந்தச் சிக்கலான பரந்த அளவில் ஒரு சிறு பின்னந்தான். ஒரு பின்னம். அது, முதலாளித்துவ ஜனநாயகத்திலும் சரி தொழிலாளித்துவ சர்வாதிகாரத்திலும் சரி ஒன்றேதான்."

(மு.த‌ளைய‌சிங்க‌ம், 'முற்போக்கு இல‌க்கிய‌ம்')

1.
மு.த‌ளைய‌சிங்க‌ம், ஈழ‌த்தில் முகிழ்ந்த‌ முக்கிய‌ ப‌டைப்பாளி ம‌ட்டுமில்லாது க‌வ‌னிக்க‌த்த‌க்க‌தொரு சிந்த‌னையாரும் கூட‌.  அவ‌ருக்கு எழுத்தில் இருந்த‌ ந‌ம்பிக்கையைப் போல‌ க‌ள‌ப்ப‌ணியாற்றுவ‌திலும் அக்க‌றையிருந்த‌து. எழுத்து என்ப‌து உன்ன‌த‌மான‌து என்றும் அத‌ற்கு த‌னிம‌னித‌ர் ஒவ்வொருவ‌ரின் நேர்மையும், த‌னித்த‌ன்மையும் முக்கிய‌மான‌து என்றும் தொட‌ர்ந்து வ‌லியுறுத்திய‌வ‌ர். அவ்வாறு ப‌டைப்பில் நேர்மை அற்ற‌வ‌ர்க‌ளையும், க‌ட்சி/கொள்கை என்ற‌ ச‌ட்ட‌க‌ங்க‌ளுக்கு அட‌ங்கிப்போன‌வ‌ர்க‌ளையும், அதிகார‌ மைய‌ங்க‌ளாக‌ மாறுப‌வ‌ர்க‌ளையும் தொட‌ர்ச்சியாக‌ விம‌ர்சித்து வ‌ந்திருக்கின்றார். தானொரு ஆக்க‌ இல‌க்கிய‌வாதியே அன்றி ஒரு விம‌ர்ச‌க‌ன் அல்ல‌ என்று த‌ளைய‌சிங்க‌ம்  கூறிவ‌ந்தாலும், அவ‌ரை அறியாம‌லேயே ஈழ‌த்துச் சூழ‌லில் ஒரு த‌னித்துவ‌மான‌ திற‌னாய்வுச்செல்நெறியை உருவாக்கியிருக்கின்றார் என்ப‌தைக் க‌வ‌னித்தாக‌ வேண்டும்.

ப‌ல‌ ப‌டைப்பாளிக‌ளைப் போல‌ எழுத்தில் ஒரு க‌ற்ப‌னாவாத‌ புர‌ட்சியை உருவாக்கி த‌மக்குப் பின் ஒளிவ‌ட்ட‌ங்க‌ளையும், ப‌க்த‌ கோடிக‌ளையும் உருவாக்காது, தான் விரும்பிய‌/ந‌ம்பிய‌ மாற்ற‌ங்க‌ளுக்காய் க‌ள‌த்திலும் தளையசிங்கம் இற‌ங்கிய‌வ‌ர். அன்றைய காலத்து தமிழ் அரசியல் கட்சிகளோடு முரண்பட்டு 'சர்வோதய' இயக்கத்தைத் தோற்றுவித்தவர். மாற்றங்கள் பிறரால்/பிறதால் உருவாகும்வரை காத்திருக்காது தாம் விரும்பும் மாற்றங்கள் தம்மிலிருந்து முகிழவேண்டும் என நினைத்து சர்வோதயத்தை ஒரு அரசியல் முன்னணியாக்கி, தேர்தலில் தம் இயக்கம் சார்பில் ஒரு வேட்பாளரையும் நிறுத்தியவர்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் அள்ளும் உரிமை மறுக்கப்பட்டதற்கு -சாதி வெறிய‌ர்க‌ளுக்கு எதிராக- உண்ணாவிரதப் போராட்டத்தை தளையசிங்கம் தொடங்குகின்றார். இதனால் இவரும், அன்றைய காலத்தில் மாணவராய் இருந்த கவிஞர் சு.வில்வரத்தினமும் பொலிசால் மிக‌க்க‌டுமையாக‌த் தாக்க‌ப்ப‌ட்டு சிறையில் அடைக்க‌ப்படுகின்றனர், இதன் நீட்சியில் தளையசிங்கம் நோயில் வீழ்ந்து, இரண்டு வருடத்திற்குள் த‌ன‌து இள‌வ‌ய‌திலேயே (38) ம‌ர‌ண‌ம‌டைகின்றார். தளையசிங்கம் அவ‌ர‌து கால‌த்தில் இல‌க்கிய‌ அதிகார‌ம் ஒரு குறிப்பிட்ட‌ க‌ட்சியிட‌ம்/முகாமிலும் குவிவ‌தை மிகக் கடுமையாக எதிர்த்த‌தைப் போல‌, நிஜ வாழ்விலும் அதிகார‌த்திற்கு/சாதிவெறியர்களுக்கு எதிராக‌ நின்ற‌ ஒரு சமூகப்பணியாளர் என்ப‌தையும் நாம் நினைவுகூர்ந்து கொள்ள‌லாம்.

காலத்துக் காலம் நிறைய‌ப் பேர் எழுதிக்கொண்டும், எழுத‌ ஆசைப்ப‌ட்டுக் கொண்டும், த‌ங்க‌ளைத் தாமே திருவுருவாக்கும் தீராத‌ ஆசையோடும் இருக்கின்றார்க‌ள், ஆனால் ஒரு த‌னித்துவ‌மான‌ க‌லை இல‌க்கிய‌வாதி என்பவர் த‌ன‌க்குப் பின்பான‌ தலைமுறைக்கும் சில‌வ‌ற்றை த‌ன் சுவ‌டுக‌ளாய் விட்டுச் செல்கின்றார். மு.த‌ளைய‌சிங்க‌ம் அந்த‌வ‌கையில் ஒரு த‌னித்துவ‌மான‌, ஈழ‌த்து இல‌க்கிய‌ப்ப‌ர‌ப்பில் மிக‌ அரிதாக‌த் தோன்றி ஒளிர்ந்துவிட்டு எரிந்துபோன‌ ஒரு விண்மீனென‌ச் சொல்ல‌லாம். த‌னித்துவ‌மான‌ எல்லாப் ப‌டைப்பாளிக்கும் நிக‌ழ்வ‌தைப் போல‌ த‌ளையசிங்க‌ம் அவ‌ர‌து கால‌த்தில் எழுச்சிக‌ளையும், ச‌ரிவுக‌ளையும் க‌ண்டிருக்கின்றார்.  அவ‌ரின் பாதிப்பில் பின்பு 'உள்வ‌ட்ட‌ம்/வெளிவ‌ட்ட‌ங்க‌ளை' உருவாக்கிய‌வ‌ர்க‌ள் மு.த‌வை ஏற‌க்குறைய‌ இன்றைய‌ கால‌த்தில் ம‌றந்தே விட்டார்க‌ள். இவ‌ர்க‌ளுக்குத் த‌ம‌க்குத்தாமே ஆல‌வ‌ட்ட‌மும் ஒளிவ‌ட்ட‌மும் பிடிக்க‌வே நேர‌ம் போதாமையால் ந‌ல்ல‌வேளையாக‌ மு.த‌ அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து விடுத‌லை பெற்றுவிட்டார். மேலும் உள்வ‌ட்ட‌த்தில் வைத்து பொத்தி பொத்திக் க‌லையை வ‌ள‌ர்த்து, இறுதியில் வெளிவ‌ட்ட‌த்திற்கு (ம‌க்க‌ளிட‌ம்) கொண்டுவ‌ருவ‌தையே 'உள்வ‌ட்ட‌ம்' கூறுகின்ற‌தென‌ பழைய தும்புக்கட்டைக்குப் புதுக்குஞ்சம் க‌ட்டுகின்ற‌வ‌ர்க‌ள், ஏன் உள்வ‌ட்ட‌த்தில் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ப‌ர‌த‌நாட்டிய‌மும், க‌ர்நாட‌க‌ ச‌ங்கீத‌மும் 'உன்ன‌த‌ க‌லைக‌ளாக்க‌ப்ப‌டுவ‌தும்', யாருமே எடுத்துக்கொள்ளலாமென‌ எவ்வித‌க் க‌ட்டுப்பாடுக‌ளும‌ற்றிருந்த‌ நாட்டாரிய‌ல் க‌லைக‌ள் இன்ன‌மும் 'உன்ன‌த‌க‌லைக‌ளாக‌' எல்லோராலும் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட‌வில்லையென்ப‌தைப் ப‌ற்றியெல்லாம் மூச்சுக்கூட‌ விட‌மாட்டார்க‌ள். உள்வ‌ட்ட‌ ம‌ண்குதிரையை ந‌ம்பி இல‌க்கிய‌ ஆற்றில் இற‌ங்கிய‌வ‌ர்க‌ள், இவ்வாறான‌ கேள்விக‌ளை நேர்மையாக‌வும் நேர‌டியாக‌வும் எதிர்கொள்வார்க‌ள் என‌ நாம் எதிர்ப்பார்ப்ப‌திலும் நியாய‌மில்லைத்தான்.

'க‌லை க‌லைக்காக‌ அல்ல‌, க‌லை ம‌க்க‌ளுக்காக‌த்தான். ஆனால் க‌லை க‌ட்சிக்காக‌ மாறுவ‌தை ம‌ட்டும் எதிர்ப்பேன்' என‌ தெளிவாக‌ச் சொல்கின்ற‌ மு.த‌வை கவனமாய் ம‌றைத்து 'க‌லை க‌லைக்காக‌த்தான்' என‌ அவ‌ரை முன்னிறுத்திய‌வ‌ர்க‌ள் எங்க‌ளுக்கு இதுவரை காலமும் கூறியிருக்கின்றார்க‌ள் என்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌வும் கூடாது. த‌ன‌து குறுகிய‌ வாழ்க்கைக் கால‌த்தில் ‍அச்சிலேயே 1000 ப‌க்க‌ங்க‌ளுக்கு மேலாய் வ‌ர‌க்கூடிய‌வ‌ள‌வுக்கு- நிறைய எழுதிய‌வ‌ரை ஒரு த‌னித்த‌ அடையாள‌த்திற்குள் அடைக்க‌வும் முடியாது. மு.த‌ளைய‌சிங்க‌ம் எழுதிய‌ சிறுக‌தைக‌ள், நாவ‌ல், விம‌ர்ச‌ன‌ங்க‌ள், கோட்பாட்டு முய‌ற்சிக‌ள் என‌ ஒவ்வொன்றையும் விரிவாக‌ப் பார்ப்ப‌தே இக்க‌ட்டுரைத் தொட‌ரின் நோக்க‌ம். இத்தொட‌ரின் முத‌ல் ப‌குதியிற்கு தளைய‌சிங்க‌த்தின் 'முற்போக்கு இல‌க்கிய‌ம்', மூன்றாம் பக்கம்', 'ஏழாண்டு இல‌க்கிய‌ வ‌ள‌ர்ச்சி', ம‌ற்றும் 'விம‌ர்ச‌ன‌ விக்கிர‌க‌ங்க‌ளை' முத‌ன்மை எழுத்துப் பொருளாக‌ எடுத்துக்கொள்கின்றேன். 'முற்போக்கு இல‌க்கிய‌ம்' ம‌ற்றும் 'ஏழாண்டு இல‌க்கிய‌ வ‌ள‌ர்ச்சி' ஆகிய‌வை த‌னித்த‌னி நூற்க‌ளாக‌ ஏற்க‌ன‌வே வெளிவ‌ந்திருக்கின்ற‌ன‌ என்ப‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும்.

இனி இக்க‌ட்டுரைக‌ளில் மு.த‌ முன்வைப்ப‌தை விள‌ங்கிக்கொள்வ‌த‌ற்கு முன், இவை எழுத‌ப்ப‌ட்ட‌ கால‌ப் பின்ன‌ணியை நாம் அவ‌தான‌த்தில் கொள்ள‌வேண்டும். 1948ல் இல‌ங்கைக்கு பிரித்தானியரிட‌மிருந்து விடுத‌லை கிடைக்கிற‌து. எப்போதும்போல‌ ஆங்கிலேய‌ரிட‌மிருந்தும் இந்திய‌ர்க‌ளிட‌மிருந்தும் கிடைப்ப‌தைப் பெற்றுக்கொண்டு சுக‌ம் பெறும் ஈழத்த‌மிழ‌ர்க‌ளிடையே சுத‌ந்திர‌ம் என்ப‌து பெரிதாக‌ எதையும் புதிதாக விதைத்துவிட‌வில்லை என மு.த‌ளைய‌சிங்க‌ம் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்றார் . இப்ப‌டி மேலே ஆட்சி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு குனிந்து நின்று சேவ‌க‌ம் செய்து, தமது தனித்துவங்களை இழந்து நிம்ம‌தி காணும் த‌மிழ‌ர்க‌ளை 'சோம்பேறிக‌ள்' என‌ மு.த‌ காட்ட‌மாக‌வே விம‌ர்சிக்கின்றார் ம‌ட்டுமின்றி இப்ப‌டி இருப்ப‌வ‌ர்க‌ளால் எப்ப‌டி க‌லை இல‌க்கிய‌ங்க‌ளில் புதிதாய் சாதித்துவிட‌முடியுமென‌வும் கேள்வி எழுப்புகின்றார். த‌மிழ‌க‌த்தில் ஒரு பார‌தியும் புதுமைப்பித்த‌னும் தோன்றிய‌தைப் போல‌ த‌னித்துவ‌மான‌ எந்த‌ப் ப‌டைப்பாளியும் எம்மிடையே தோன்ற‌வில்லை என்ற‌ ஆத‌ங்க‌த்தை மு.த‌ முன்வைக்கின்றார்.

2.
1956ல் ஒரு புதிய‌ நம்பிக்கை கீற்று தோன்றத்தொட‌ங்குகின்ற‌து என‌ மு.த‌ ஏழாண்டு இல‌க்கிய‌ வ‌ள‌ர்ச்சியில் குறிப்பிடுகின்றார். அந்த‌ ஆண்டிலேயே ப‌ண்டார‌நாய‌க்காவினால் த‌னிச் சிங்க‌ள‌ச் ச‌ட்ட‌ம் கொண்டுவ‌ர‌ப்ப‌டுகின்ற‌து. இல‌ங்கையில் அதுவ‌ரை அர‌ச‌க‌ரும‌ மொழியாக‌ இருந்த‌ ஆங்கில‌த்திற்குப் ப‌திலாக‌ சிங்க‌ள‌ மொழி அர‌ச‌க‌ரும‌ மொழியாக‌க் கொண்டுவ‌ர‌ப்ப‌ட‌,. த‌மிழ் மொழி த‌ள்ள‌ப்ப‌டுகின்ற‌ நெருக்க‌டி நிலை தோற்றுவிக்க‌ப்ப‌டுகின்ற‌து. 56 த‌னிச் சிங்க‌ள‌ச் ச‌ட்ட‌ம் அர‌சிய‌லில் உற‌ங்கியிருந்த‌ த‌மிழ‌ரை எப்ப‌டி விழித்தெழ‌ச் செய்த‌தோ அப்ப‌டியே க‌லை இல‌க்கிய‌த்திலும் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ மாற்ற‌த்தைக் கொண்டுவ‌ந்த‌து என்கின்றார் த‌ளைய‌சிங்க‌ம். இவ்வாறான‌ ஒரு உயிர்ப்புக்கு கைலாச‌ப‌தி தின‌கரன் ப‌த்திரிகைக்கு ஆசிரிய‌ராக‌ வ‌ந்த‌தையும் முத‌ன்மைக் கார‌ண‌மாக‌ அவ‌ர் கவனப்படுத்துகின்றார்.

'மூன்றாவது பக்கம்' கட்டுரையை பண்டிதர்களுக்கும், சிவத்தம்பி உள்ளிட்ட முற்போக்கு இலக்கியக்காரர்களுக்கு இடையில் தினகரனில் நடைபெறும் விவாதத்தின் எதிர்வினையாக மு.த எழுதுகின்றார். இந்த இரண்டு பக்கங்களின‌தும் போதாமையை விளக்கப்படுத்தினாலே மூன்றாவது பக்கம் தேவை என்றொரு நிலைமை உருவாகிவிடும், அந்த 'மூன்றாவது பக்கமே' தனக்கு உரியதெனத் த‌ளைய‌சிங்க‌ம் கூறுகிறார். 'பண்டிதர்களையும் குறை சொல்ல முடியாதுதான். அவர்கள் நிற்கவேண்டிய இடத்தில்தான் நிற்கின்றார்கள்.ஜம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பின்னால்! நம் தமிழ் இலக்கியப் பிரயாணத்தில் மூட்டை தூக்குபவர்கள் அவர்கள்தான். பழுவின் காரணத்தால் பின்னுக்கு நின்று இழுபட்டுக்கொண்டு கத்துகிறார்கள்' என கால‌த்தோடு மாற‌முடியாத‌ பண்டிதர்களை சரியாக அடையாளங்காட்டுகின்றார் மு.த. அதேபோல் எப்படி பண்டிதர்களுக்கு தொல்காப்பியமும் நன்னூலும் தெய்வ நூல்களாகிவிட்டனவோ அப்படியே புதிய வகை விமர்சகர்களுக்கு 'புதிய ஸ்ராலின் - சடனோவ் யந்திர விளக்கங்கள் தெய்வ வாக்குகளாகி விட்டன' என்கின்றார். மேலும் 'மார்க்ஸுக்கும் சரி, ஏங்கல்ஸுக்கும் சரி, லெனினுக்கும் சரி கலை இலக்கியத்தைப் பற்றிய நல்ல ரசனை எவ்வளவோ இருந்தது. ஆனால் சிருஷ்டி தெரியாத பின்பு வந்த யந்திரங்கள்தான் எல்லாவற்றையும் திருகிவிட்டன' என்பதையும் மு.த குறிப்பிடத் தவறவில்லை. பண்டிதர்கள் பாலுணர்ச்சி பற்றி எழுதுவதை, அரசியல் கொள்கைகள் புகுத்தி எழுதுவதை, பழைய இலக்கியத்துக்கு மாறாக எழுதுவதை எல்லாம் 'கூடாது' என்று கூறுவதைப் போல, புதிய விமர்சகர்கள் 'பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயம் ஒன்றைப் பற்றித்தான் எழுதவேண்டும்' என்று கூறுகின்றனர் எனச் சுட்டிக்காடுகின்றார் தளையசிங்கம்.

கலைச்செல்வி இதழில் தொடராக எழுதிய 'முற்போக்கு இலக்கியம்' கட்டுரையில் 'மனிதனின் பிரச்சினைகளை அக்கறையோடு அணுகும் கலை நிறைந்த இலக்கியங்கள் எல்லாம் முற்போக்கு இலக்கியங்கள் தான்' எனக் குறிப்பிடும் மு.த, ஆனால் ஈழத்தில் மட்டுந்தான் கட்சி சார்ந்து தமக்கு மட்டும் முற்போக்கு இலக்கியம்' என்ற பெயரை patent right வாங்கி விட்டவர்கள் போல வைத்திருக்கின்றார்கள் என்று கேலி செய்கின்றார். அதேபோல் முற்போக்கு முகாமில் ஒரளவு நன்றாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களும் இறுதியில் தம் தனித்துவத்தை இழந்து கட்சிக்கொள்கைகளுக்கு ஏற்ப எழுதுகின்றவர்களாய் மாறிவிடுகின்|றார்கள் என்பதை மு.த கூறுகின்றார். மேலும் 'கட்சிரீதியில் விற்பனை செய்யப்படும் கொள்கைகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவக்கூடினாலும், இலக்கிய வளர்ச்சியைக் கைப்பற்ற உதவா....அத்தனை பேர்கள் கூடி எழுதியும் அத்தனி பேர்கள் கூடிச் சங்கம் நடத்தியும் இலங்கையில் அவர்கள் ஒரு தனிமனிதன் சாதித்ததை விட அதிகமாகவோ புதிதாகவோ சாதித்துவிடவில்லை' என்பதையும் சுட்டிக்காடுகின்றார்.

'முற்போக்கு இலக்கியக் கட்டுரையில்' பாலுணர்ச்சி எழுத்தில் மறைக்கக்கூடிய விடயமேயல்ல என‌க்கூறி, அவ்வாறு பாலுண‌ர்வு வெளிப்ப‌டையாக‌ எழுதப்பட்ட 'தீ'யை மிகவும் பாராட்டுகின்றார். பாலுணர்ச்சி, பசியுணர்ச்சி ஆன்மீக உணர்ச்சியைப் போன்ற ஒருவகை உணர்ச்சி, ஆகவே ஏன் பாலுணர்ச்சியை நாம் தவிர்க்கவேண்டும் என வினாவுகிறார்.  'ஆன்மீக உணர்ச்சி, மனிதன் கடவுளாக மாற முயலும் ஞானியின் உணர்ச்சி! அதைத் தெரிவதற்கு முதலில் அதன் ஆரம்ப உணர்ச்சியான பாலுணர்ச்சியில் திளைப்பதற்கு, திளைத்துத் திருப்தியடைவதற்கு வசதி இருக்கவேண்டும். ஆனால், மனிதனை யந்திரமாக்கி விடுவதில் முனைத்து கொண்டிருக்கும் இன்றைய உலகம் அந்த வசதியைக் கொடுக்க மறுக்கிறது. ஒளித்து மறைத்து மூடி வைத்து, சாகும் வரைக்கும் அந்த அடிப்படை உணர்ச்சியைக்கூட ஒரளவுக்காவது புரிந்துகொள்ள முடியாத நிலையைத்தான் உருவாக்குகிறது. இந்த நிலையில் ஒன்றில் மனிதன் யந்திரமாக வாழவேண்டும் அல்லது சுத்தப் பைத்தியமாகவோ அல்லது ஓர் psychopathy ஆகவோதான் வாழவேண்டும். பின்னதில் கொஞ்சமாவது தனித்தன்மை கலந்த உயிரோட்டம் இருக்கிறது. எந்திரத்தை விட மிருகம் மேலானதுதானே?' என மிகத் தெளிவாக அடக்கப்படுகின்ற பாலுணர்ச்சி பற்றி மு.த இந்தக் கட்டுரையில் உரையாடுகின்றார்.

அதேபோன்று அன்றையகால இடதுசாரிகளால் பிரபல்யப்படுத்தப்பட்ட பிரதேசவாதக் கதைகளை (வட்டாரக் கதைகள்) ,அவற்றுக்கு முன்பாக தப்பும் (Escapism) மனப்பான்மையோடு ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட கனவுக்கதைகளோடு ஒப்பிடும்போது எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கின்றார். ஆனால் 'சர்வாதிகாரச் சங்கந்தான் சட்டம் ஒன்று வைத்துவிட்டது போல இன்று ஈழத்து எழுத்தாளர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரே ரீதியில் எழுதுகின்றார்கள்' என்பதையும் கவனப்படுத்துகின்றார். இன்னும் 'பாலுணர்ச்சியைக் கலந்து மனிதத்தன்மையைக் கலையோடு தருவதால் மாறுபடும் எஸ்.பொன்னுத்துரையின் தனித்தன்மைக் கதைகளையும், மிக இலகுவில் இலக்கியத் தரத்தைத் தொட்டுவிடுமோர் இலாவகமான நடையால் தனித்தன்மை பெறும் வ.அ.இராசரத்தினத்தின் கதைகளையும் தவிர மற்றவர்களின் கதைகள் பெரும்பாலும் பிரதேசமணம் என்றரீதியில் ஒரே type ஆகவே இருக்கின்றன! அதே யந்திரச் சாயல்! அதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை' எனக் கூறி எஸ்.பொவையும், வ.அ.இராசரத்தினத்தையும் த‌னித்துக் கவனப்படுத்துகின்றார்.

பிரதேச வாதமாக இருக்கும் நம் எழுத்தாளர்களின் பார்வை சர்வதேசமாகவும் விரியவேண்டும். அவ்வாறு அகலிக்கும்போதேதான் நம்முடைய போதாமைகள் தெரியும் ஆனால் 'ஈழத்து எழுத்தாளர்களுக்கு அந்தப் பிரதேசவாதம் ஒரு fetish ஆக மாறி'விட்டதென மு.த கவலைப்படுகின்றார் . அதேபோன்று தனி மனிதனின் கேள்விகளுக்கும் சிந்தனைகளுக்கும் இடங்கொடுக்காத எந்தச் சமூகமும் என்றும் முன்னேறிவிடாது என்கின்றார். பிரஞ்சுப் புரட்சிக்கு பின் வந்த நெப்போலியன் காலமும்,, ரஷ்சியப் புரட்சிக்கு பின் வந்த ஸ்ராலின் காலமும் எதையெதையோ எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தையே கொண்டுவந்திருக்கின்றது எனக்கூறும் முத,  'பழைய நிலைக்கு ஒரு புதிய பெயர் கிடைத்திருக்கிறதே ஒழிய புதிய மாற்றம் கிடைக்கவில்லை' என்கின்றார். தனிமனிதனைச் சாதாரண எண்ணாக நினைத்து மறந்தோ மறுத்துவிடவோ முடியாது. ஒவ்வொரு தனிமனிதனையும் பற்றிச் சிந்திக்கவேண்டியவனாக அவர்களை வழிநடத்தும் தலைவன் இருக்கவேண்டும் என்கின்றார். 'இன்றைய யந்திர அமைப்போடு சேர்ந்து தானும் யந்திரமாக வாழ விரும்பாதவன் ஒன்று சாகவேண்டும் அல்லது தானாகப் புரட்சி செய்து ஒரு புது வழி கண்டுபிடிக்க வேண்டும்' என்கிறார். அதற்காய் கோதேயின் (Gothe) Faust மற்றும் Werther ஐ உதாரணமாக எடுத்து விரிவாக மு.தளையசிங்கம் விளங்கப்படுத்துகின்றார். 'Werther போல தற்கொலை செய்யவோ அல்லது Faust போல டொக்டராகத் தொடங்கி எஞ்சினியராக முடிக்கத் தேவையில்லை'. நம் எல்லோருக்கும் வேண்டியது தனித்தன்மை. அதுவே முக்கியம் என வலியுறுத்தும் மு.த, 'டி.எச்.லோறன்ஸ் தொட்டு பெர்னாட்ஷா வரை ஹக்ஸ்லி வரை ரகம் வேறுபடலாம்; அல்லது அமெரிக்க Hipsters Beatniks ஆகவும் ஜரோப்பிய  Existentialists ஆகவும் மாறுபடலாம். ஆனால் அத்தனை வேறுபாடுகளும் ஒன்றை உணர்த்துகின்றன. அதுதான் தனித்தன்மை' என முற்போக்கு இலக்கியம் கட்டுரையில் அழுத்தமாக மு.த குறிப்பிடுகின்றார். இவ்வாறான தனித்தன்மையிலே ஈழத்து கலை இலக்கியப் படைப்புக்களும் முகிழவேண்டுமே அன்றி குறிப்பிட்ட சட்டகங்களுக்குள் அடக்கிப் போய் நிகழக்கூடாது என 'முற்போக்கு இலக்கியம்' கட்டுரையை மு.த முடிக்கின்றார்.


'பிறத்தியாள்' தொகுப்பை முன்வைத்து...

Friday, December 10, 2010


1.
பானுபார‌தியின் 'பிற‌த்தியாள்' தொகுப்பு. போர்க்கால‌ச் சூழ‌லில் உயிர்த்திருத்த‌லுக்கான‌ த‌த்த‌ளிப்பையும், புல‌ம்பெய‌ர் வாழ்வின‌து நெருக்க‌டிக‌ளையும், அதிக‌ம் க‌வ‌னிக்காது புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணின் அக‌வுல‌க‌த்தையும் பேசுகின்ற‌து. இத்தொகுப்பிலுள்ள‌ 31 க‌விதைக‌ளில் அரைவாசிக் க‌விதைக‌ள் ஈழ‌த்தில் இருந்த‌போதும், மிகுதிக் க‌விதைக‌ள் புல‌ம்பெய‌ர் தேச‌த்திலிருந்தும் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. 'அமைதிப‌டை'யாக‌ இந்தியாவிலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் எப்ப‌டி த‌ம‌து முக‌மூடிக‌ளைக் க‌ழ‌ற்றி அழிவின் சித்திர‌ங்க‌ளை வ‌ரைந்தார்க‌ள் என்பதை ஈழ‌த்திலிருந்த‌போது பானுபார‌தி எழுதிய‌ சில‌ க‌விதைக‌ள் ப‌திவு செய்கின்ற‌ன‌. க‌லாவின் ச‌ர்ச்சைக்குரிய‌ க‌விதையான   'கோணேஸ்வ‌ரிக‌ள்', ஆடைக‌ளைக் க‌ழ‌ற்றி அம்மாவின்/த‌ங்கையின் யோனிக‌ளை, ஒடுக்கும் இராணுவ‌த்தின் 'ப‌சி'க்குத் திற‌க்க‌ச் சொல்லி ஒருவித‌ இய‌லாமையுட‌னும் கோப‌த்துட‌னும் எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.. அத‌ற்கு நிக‌ரான‌ அற‌ச்சீற்ற‌த்துட‌ன் 'ஏய் பார‌த‌மே/ எல்லைக‌ள் தாண்டி/வெண்கொடிக‌ள் நாட்டுவ‌திருக்க‌ட்டும்/முத‌லில்/ உன்புத்திர‌ரின் வேக‌ம் த‌ணியும‌ட்டும்/பிசைந்து உருட்டி விளையாட‌/திர‌ண்ட உன் முலைக‌ளை/ அவ‌ர்க‌ளுக்குக் கொடு' (ப‌ 29) என்கின்ற‌ பானுபார‌தியின் 'வெடிகுண்டு பிசையும் பாண்ட‌வ‌ர்' கவிதையும் எழுதப்‌ப‌ட்டிருக்கிற‌து. கால‌ அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது கலாவின் க‌விதைக்கு முன்பாக‌ பானுபார‌தியின் க‌விதை எழுத‌ப்ப‌ட்டிருகின்ற‌து என்ப‌தையும் நாம் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும்.

இந்திய‌ இராணுவ‌ கால‌த்தின் கொடுமிருளை, வெளியுல‌கிற்குத் தெரியாத‌ அச்ச‌ம் சூழ்ந்த‌ நாட்க‌ளை, நாளாந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளைக் காட்சிப்ப‌டுத்துவ‌த‌ன் மூல‌ம் பானுபார‌தி நுட்ப‌மாக‌ப் ப‌திவு செய்கின்றார். 'தெரு நாய்க‌ள் கூட‌/ க‌ட‌லை எண்ணெயின் நாற்ற‌ம்/ தூர‌த்தில் வ‌ர‌வே/ வாலை ம‌ட‌க்கி/ யோனியைப் பொத்திக் கொண்டோட‌/ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌' (ப‌ 24) என்கிறார். நாய்க‌ளே இவ்வ‌ள‌வு அச்ச‌முறுகின்ற‌து என்றால் அங்கு வாழும் மாந்தர்க‌ளின் நிலை ப‌ற்றி நாம் எதுவும் விரித்துக் கூற‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே இல்லை. அதேபோல் இராணுவ‌ ஆக்கிர‌மிப்புக் கால‌த்தில் எழுதுவ‌த‌ற்கான‌ பேசுவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் எந்த‌ள‌வில் ம‌ட்டுப்ப‌ட்டிருந்த‌து என்ப‌தை 'ஒரு க‌விதையையோ/ காகித‌த்தையோ/ அல்ல‌து சிறு குறிப்பையோ/பெண்ணின் ம‌ர்ம‌ப் பிர‌தேச‌ங்க‌ளென‌/ சுட்ட‌ப்ப‌டும் இட‌ங்க‌ளில் கூட‌/ ம‌றைத்து வைப்ப‌தென்ப‌து/ த‌ற்கொலைக்குச் ச‌ம‌மான‌ செய‌ல்' (ப‌ 24) என்ற‌ வ‌ரிக‌ளிலிருந்து நாம் அறிந்துகொள்ள‌லாம். இவ்வாறான‌ ஒரு கொடுங்கால‌த்தில் தான் இன்றும் காஷ்மீர், ம‌ணிப்பூர், ஈராக், ஈழ‌ ம‌க்க‌ள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தை நாம் நினைவூட்டிக் கொள்ள‌லாம்

புல‌ம்பெய‌ர் வாழ்வு குறித்தும் அநேக‌ பெண் ப‌டைப்பாளிக‌ளிலிருந்து மாறுப‌ட்ட‌ ஒரு பார்வையை பானுபார‌தியின் க‌விதைக‌ள் த‌ர‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌. வ‌ச‌ந்தி ராஜா, 'தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம். என் மகள்களுக்கும். நம் பெண்களுக்கும்' என‌ப் பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தும்போது, பானுபார‌தியோ இன்ன‌மும் ஈழ‌த்திலிருந்த‌போது தாங்கியிருந்த‌ சிலுவைக‌ளையே இன்னும் சும‌க்க‌ வேண்டியிருக்கின்ற‌து என்கிறார். 'ஏய் க‌ள்ள‌ ஞானிக‌ளே' என்ற‌ க‌விதையில் 'சிலுவையில்/ அறைய‌ப்ப‌ட்ட‌ப‌டியே புண‌ர‌ப்ப‌ட்டேன்/நித்திய‌த்தின் பெய‌ரால்' என புல‌ம்பெய‌ர் தேச‌த்திலும் பாலின‌ வித்தியாச‌த்தால் ஒடுக்குத‌ல் நிக‌ழ்வ‌தைச் சுட்டிக்காட்டுகின்றார்.

அதேபோல் த‌னி ஈழ‌ம் கேட்டுப் போராடிய‌ இய‌க்க‌ங்க‌ளின் ச‌ன‌நாய‌க ம‌றுப்பைப் ப‌ற்றியும் பானுபார‌தி ப‌ல‌ இட‌ங்க‌ளில் குறிப்பிடுகின்றார். 'எலும்பும் நெருப்பும்' க‌விதையில் 'ஒன்றும‌ட்டும் புரிந்த‌து/எங்கையாவ‌து எதையாவ‌து/புதைத்த‌லே இவ‌ர்க‌ளுக்குத் தெரிந்த‌வை'(ப‌ 38) என‌க் கேலி செய்கின்றார். மேலும் ஈழ‌ப்போர் முடிவுக்கு வ‌ந்த‌ 2009ல் எவ‌ரெவ‌ர் என்ன‌ அர‌சிய‌ல் செய்தாலும் பிர‌ச்சினையில்லை, ஆனால் 'அத‌ற்காக‌ நீங்க‌ள்/எங்க‌ள் வாழ்வை/ மீண்டும்/பாயாய் விரித்து/ ப‌டுத்துருள‌ முடியாது க‌ண்டீரோ' (ப‌ 74) என‌ எச்ச‌ரிக்க‌வும் செய்கிறார்

2.

புல‌ம்பெய‌ர‌ முன்ன‌ர் த‌ம‌க்கான‌ விடுத‌லை த‌னிநாட்டுப் போராட்ட‌ம் மூல‌ம் வ‌ருமென‌ ந‌ம்புகின்ற‌ ப‌டைப்பாளி, ப‌ல்வேறு இய‌க்க‌ங்க‌ளின் பெருக்க‌ங்க‌ளிலும், அவ‌ர்க‌ளின் 'நாட்டாமை'த்த‌ன‌ங்க‌ளாலும் அந்த‌ ந‌ம்பிக்கையை இழ‌ந்துவிடுகின்றார். த‌ன‌க்கான‌ இனியான‌ விடுத‌லை என்ப‌து பெண் என்ப‌த‌ன் அடையாள‌த்தின் மூல‌மே க‌ண்ட‌டைய‌ப்ப‌டும் என்ற‌ ஒரு புள்ளியைப் 90க‌ளின் பின்பான‌ க‌விதைக‌ளில் வ‌ந்த‌டைகின்றார். த‌ன்னைப் போன்ற‌ பெண்க‌ள் வீட்டில் சிறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, த‌ங்க‌ளைச் சிறைப்ப‌டுத்திய‌வ‌ர்க‌ளே பெண் விடுத‌லை வேண்டுமென்ற‌ ஊர்வ‌ல‌ங்க‌ளில் முன்னிற்கும் முர‌ணை 'வ‌ண்டுக‌ளின் த‌லைம‌றைவில்' எள்ளி ந‌கையாடுகின்றார். அதுபோல‌ இன்னொரு க‌விதையில் ஆணை ஓரிட‌த்தில் த‌ரித்து நிற்கும் நில‌மாக‌வும், பெண்ணைக் கோப‌மாய் ஓடிக்கொண்டிருக்கும் அருவியாக‌வும் உவ‌மிக்கின்றார். இவ்வ‌ள‌வு ஆவேச‌ம் இருந்தும் இறுதியில் 'வாளெடுத்த‌ பெண் தெய‌வ‌ங்க‌ளெல்லாம்/ நில‌த்த‌டியிலும் அருவியிலும்/ க‌டலிலும் ச‌ங்க‌ம‌மாகி/ சாதிக்கொரு/ பிள்ளை பெற்றுக்கொண்ட‌ன‌' (ப‌ 20) என்கின்ற‌ சோக‌த்தையும் சொல்கின்றார்.

பெரியார் பெண் விடுத‌லைக்கான‌ ஒரு முன் நிப‌ந்த‌னையாக‌ 'ஆண்மை' ஒழிக்க‌ப்ப‌டுவ‌து குறித்துப் பேசுகின்றார். அதுபோல‌வே பானுபார‌தியும் 'அம்மிக் க‌ல்லில் அடித்து நொறுக்க‌ப்ப‌டும்/ சித‌று தேங்காய் போல‌/ ஆண்மை நொறுக்கி' வ‌ரும் திராணியுள்ள‌ ஆண்க‌ளோடே த‌ன்னால் சுத‌ந்திர‌மாக‌ப் பேசிக் க‌ளிக்க‌முடியுமென‌க் கூறுகின்றார்.

இவ்வாறாக‌ ஒடுக்குமுறைக்கு எதிரான‌ தெளிவான‌ புரித‌ல்க‌ளோடு இருக்கும் பானுபார‌தி 'வ‌லிவுடைய‌ ம‌னுக்க‌ள்' என்ற‌ க‌விதையில் 'பிர‌ப‌ஞ்ச‌ம‌றியும்/ நானும் ம‌னுவென்று/ வ‌லிவுடைய‌ ம‌னுவென்று' என‌ ம‌னுவை முன்னிறுத்தும்போது நெருட‌ச் செய்கின்ற‌து. ம‌னுவை முன்வைத்து விரிவாக‌ நாம் பேச‌த் தேவையேயில்லை. பானுபார‌தி 'க‌டைசிப்ப‌க்க‌ம்' க‌விதையில் 'ந‌ள‌த்தியென்றும்/ ப‌ள்ளி ப‌றைச்சியென்றும்/அழுக‌ல் வாயால் சொல்லெறிந்து/ அடித்து விர‌ட்டிய‌தும்/ இந்த‌/க‌டைசிக் க‌ல‌ட்டி வெளிக்குள்தான்' (ப‌ 77) என எழுதுகிறார். இவ்வாறு ம‌னித‌ர்க‌ள் சாதிக‌ளாக‌ பிரிக்க‌ப்ப‌ட்டு ஒடுக்க‌ப்ப‌டுவ‌த‌‌ன் ஆதிமூல‌மே ம‌னுவில் இருந்து தொட‌ங்கும்போது 'நானும் ம‌னுவென்ப‌து' பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்துவ‌து மிகுந்த‌ முர‌ணாக‌ இருக்கிற‌து  (பானுபார‌தி பாவிக்கும் ம‌னு, பைபிளில் வ‌ரும் ம‌னு என்று ஷோபாச‌க்தி ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கின்றார். என‌வே என‌து இந்த‌ப் ப‌குதி த‌வ‌றான‌தாகும் என்ப‌தால் இதை எடுத்துவிடுகின்றேன். ~டிசே). இத்தொகுப்பில் சில‌ க‌விதைக‌ள் மிக‌ எளிமையாக‌ சொற்க‌ளைத் தாண்டி எவ்வகையிலும் வாசிப்பு அனுப‌வ‌த்தில் நீட்சிய‌டைய‌வில்லை என்றாலும், 'வாக்களிக்கப்பட்ட பூமியும் ஏழாற்றுப் படுகை நடந்த வழியும்', 'அஞ்சறைப்பெட்டியில் அடங்கிய நீரும் நிலமும்', 'வெடிகுண்டு பிசையும் பாண்டவர்' போன்ற‌வை இத்தொகுப்பிலுள்ள‌ முக்கிய‌ க‌விதைக‌ள் என்ப‌தையும் குறிப்பிட‌வேண்டும்

ச‌ங்க‌கால‌ம் தொட‌ங்கி த‌மிழில் க‌விதைக்கென‌ நீண்ட‌ பராம்ப‌ரிய‌ம் உண்டு. நெடுங்கால‌மாய்ப் பெண்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு க‌விதைக‌ளில் இருந்த‌போதும் அதை அவ்வ‌ள‌வாக‌ பேசாது விட்ட‌ ம‌ர‌பும் த‌மிழ‌ருக்கு உரித்தான‌தே. இன்றைய‌ கால‌த்தில் ஒருவித‌மாய் உறைந்துபோயிருக்கும் ஈழக்க‌விதையின் ஊற்றுக்க‌ளை திற‌ந்து முன்ன‌க‌ர்த்திக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் பெண் க‌விஞ‌ர்க‌ளே என்ற‌ க‌ருத்தைத் தொட‌ர்ந்து வ‌லியுறுத்தி வ‌ருகின்றேன்.அவ்வாறான‌ ஓர் ஊற்றை பானுபார‌தின் 'பிற‌த்தியாள்' திற‌ந்து வைத்திருக்கின்ற‌து என்ப‌தைத் துணிந்து கூற‌லாம். முக்கிய‌மாய் ஈழ‌த்த‌மிழ‌ரின் க‌விதைப்ப‌ர‌ப்பில் இன்றைய‌ கால‌த்தில் நிறைய‌ப் பெண் ப‌டைப்பாளிக‌ளின் தொகுப்புக்க‌ள் வெளிவ‌ர‌த் தொட‌ங்கியிருப்ப‌து மிக‌வும் உற்சாக‌ம் த‌ர‌க்கூடிய‌து. பாலின‌ அடிப்ப‌டையில் ஒரு பெண்ணாக‌வும், சாதிய‌ அடுக்குமுறையில் ஒரு த‌லித்தாக‌வும் தொட‌ர்ச்சியாக‌ ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்ற‌ பானுபார‌தியின் க‌விதைக‌ளிலிருந்து நாம் க‌ற்றுக்கொள்வ‌த‌ற்கு நிறைய‌வே இருக்கின்ற‌து

(பதிப்பகம்: கருப்புப் பிரதிகள்)

-Nov 09, 2010

சிறகு வளர்ந்த குரல்களுடன் பறந்தவன்

Wednesday, December 01, 2010

-இளங்கோ

1.
நீண்ட‌கால‌மாய் க‌விழ்ந்திருந்த‌ குளிர்கால‌ம் மெல்ல‌ மெல்ல‌ வில‌க‌, குழந்தமைக்காலக் குதூகலத்தோடு ச‌ன‌ங்க‌ள் தெருக்க‌ளில் பெருந்திர‌ளாய் ந‌ட‌மாடிக்கொண்டிருந்தார்க‌ள். இவன் ஏழாவ‌து மாடியிலிருந்து ரொறொண்டோவின் முக்கிய‌ தெருக்க‌ள் ச‌ந்திக்கும் ட‌ன்டாஸ் ஸ்குய‌ரைப் பார்த்தபோது ஏதோ எறும்புக்க‌ள் நிரை நிரையாக‌ ம‌றைவிட‌த்தை விட்டு வெளியே வ‌ருவ‌துபோல‌ ம‌னித‌ர்க‌ள் மிக‌ச் சிறிதாக‌த் தென்ப‌ட்டார்க‌ள். இப்ப‌டியொரு ம‌னித‌ எறும்பாக‌ மாறி தானும் பெரும் திர‌ளுக்குள் கலக்காது, தூர‌த்திலிருந்து எல்லாவ‌ற்றையும் வில‌த்திப் பார்த்துக்கொண்டிருப்ப‌துதான் அனைத்துப் பிர‌ச்சினைக‌ளும் கார‌ண‌மென்ற‌ நினைப்பு மேலிட‌, ச‌‌லித்துக்கொண்டு மீண்டும் தான் வேலை செய்துகொண்டிருந்த‌ உண‌வ‌க‌த்தின் அடுப்ப‌ங்கரைக்குள் இவ‌ன் நுழைந்தான். ஒரு ப‌த்து நிமிட‌ சிறிய‌ இடைவேளைக்குள், அடுப்ப‌டியில் வ‌ந்து குவிந்த‌ சாப்பாட்டுக் கோப்பைக‌ளைப் பார்க்கும்போது திகைப்பாக‌ இருந்த‌து. இனி இக் கோப்பைக‌ளை தேய்த்து நீரில் அல‌ம்பி dish washerற்குள் போட்டெடுத்துத் துடைத்து வைக்கும்வ‌ரை ஒர் இய‌ந்திர‌மாக‌வே மாற‌வேண்டியிருக்கும். தொலைவிலிருந்து அவ‌தானித்த‌போது ட‌ன்டாஸ் ஸ்குய‌ரில் ச‌ன‌ங்க‌ள் தெரிந்ததைப்போல‌, தானும் இந்த‌க் கோப்பைக‌ளைக் க‌ழுவிக் க‌ழுவி பெரும்பார‌த்தை இழுத்துத் த‌விக்கும் ஓர் எறும்பு போல‌ ஆகிக்கொண்டிருக்கின்றேனோ என்ற‌ நினைப்பு இவ‌னுக்குள் ப‌ர‌வ‌த்தொட‌ங்கிய‌து.

இப்படித் தீவிர‌மாய் யோசிப்பதுதான் இவ‌னுக்கு பெரும் சித்திர‌வ‌தையாக‌ நாளடைவில் மாறியிருந்த‌து. த‌ன‌து சிந்த‌னைக‌ள் அங்குமிங்குமாய் அலைவுற்று ஒரு பெரும் வ‌லையில் சிக்கித் திண‌றுவ‌தைத் த‌விர்க்கும்பொருட்டு, இவ‌ன் க‌ழுவுகின்ற‌ கோப்பைக‌ளோடு உரையாட‌த் தொட‌ங்கிவிடுவான். ஆனால் அங்கு கோப்பைக‌ளோடு நிக‌ழும் உரையாட‌ல்க‌ள் கூட‌ இந்த‌க் கோப்பையில் என்ன‌ சாப்பாடு த‌யாரிக்க‌ப்ப‌ட்டுப் ப‌ரிமாற‌ப்ப‌ட்டிருக்கும்? அதைச் சாப்பிட‌ வ‌ந்த‌வ‌ர் யாராயிருப்பார்? த‌னித்துச் சாப்பிட‌ வ‌ந்த‌வ‌ரா அல்ல‌து வேறு யாரோடும் சேர்ந்து சாப்பிட‌ வ‌ந்த‌வ‌ரா? என்று கேள்விக‌ள் இவ‌ன‌து மூளைக்குள் ப‌ல‌ இலையான்க‌ளைப் போல‌ ப‌ற‌க்க‌த் தொட‌ங்கிவிடும். ச்சீய்..தூ... என்று நினைவின் இலையான்க‌ளைத் துர‌த்த‌த்தொட‌ங்கினாலும் அவ்வ‌ள‌வு எளிதில் அவ‌னை விட்டு இலையான்க‌ள் தூர‌ வில‌கியோடுவ‌தில்லை. ஓர் இலையானை அடித்துக்கொல்ல‌ அது இன்னும் நூறு முட்டைக‌ளை இட்டுவிட்டுச் சாவ‌துபோல‌, ஓரு தீர்க்க‌முடியா வியாதியாய் இவ்வாறான‌ எண்ண‌ங்க‌ள் அவ‌னுக்குள் சடைத்துக் கிளைவிடத் தொடங்கிவிடும்..

2.
க‌ன‌டாவிற்கு வ‌ந்த‌போது அவனுக்கு எல்லாமே ஆச்ச‌ரிய‌மாயிருந்த‌து. மார்க‌ழியில் பொழிந்துகொண்டிருந்த‌ க‌ன‌டாப் ப‌னி ம‌ட்டுமில்லை, பின்பு அது நில‌த்தில் திர‌ட்சியான‌ வெண்முகில்க‌ள் வ‌ந்திற‌ங்கிய‌துமாதிரி ப‌ல‌நாட்க‌ளாய் உறைந்து கிட‌ப்ப‌து வ‌ரை எல்லாமே புதிய‌ அனுப‌வ‌மாய் இருந்த‌து. ப‌டிக்க‌ப் போயிருந்த‌ ப‌ள்ளிக்கூட‌ம் கூட‌ விய‌ப்பைத் த‌ன‌க்குள் புதைத்து வைத்திருந்த‌து. ஆசிரிய‌ர்க‌ள் வ‌குப்பிற்குள் வ‌ரும்போது எழும்பி நிற்க‌த்தேவையில்லை என்ப‌திலிருந்து எழுதும் மேசையில் பிருஷ்ட‌த்தைப் ப‌தித்து, கால்க‌ளை அந்த‌ர‌த்தில் தொங்க‌வைத்துக்கொண்டே வாத்திமாரோடு கேள்விக‌ளைக் கேட்க‌லாம் என்ப‌துவ‌ரை எல்லாமே புது அனுப‌வ‌மாக‌த்தான் இருந்த‌து. ப‌ள்ளிக்கூட‌த்தில் இவ‌ன் க‌ணிதப்பாட‌ங்க‌ளுக்கு மிகவும் விரும்பிச் செல்வான்; வ‌குப்பிலும் இவ‌ன் க‌ணித‌ம் ந‌ன்றாக‌ச் செய்ப‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ன் என்கிற‌ ம‌திப்பும் இருந்த‌து. இத‌ற்கான‌ வ‌ர‌லாறு பெரிதொன்றுமில்லை, ம‌ற்ற‌ப் பாட‌ங்க‌ளுக்கு ஆங்கில‌மொழி அத்தியாவ‌சிய‌த் தேவையாக‌ இருந்த‌து; க‌ணித்த‌தில் எண்க‌ளோடு ம‌ட்டுமே ஒளித்துப் பிடித்து விளையாட‌ ம‌ட்டுமே வேண்டியிருந்த‌து.

ஈழ‌த்தில் இவ‌னுக்கு சிவ‌ச‌ம்பு என்றொரு க‌ணித‌ வாத்தி வாய்த்திருந்தார். ம‌னுச‌னின் ம‌னோநிலை க‌ன‌டா கால‌நிலைபோல‌த்தான் இருக்கும். எப்போது ந‌ல்ல‌ நிலையில் இருப்பார் எப்போது கொதிக்கின்ற‌ எண்ணெய்யாக‌ இருப்பார் என்று எவ‌ரும் எளிதாக‌ அறிந்துவிட‌முடியாது. அதுவும் வீட்டிலிருந்து வெளிக்கிடும்போது அவ‌ரின் ம‌னைவியோடு பிண‌க்குப்ப‌ட்டு வ‌ந்திருந்தால், அன்று வ‌குப்பில் கொப்பிக‌ள் விளாங்காய்க்கு எறிகின்ற‌ க‌ல்லுக‌ள் மாதிரி வ‌குப்புக்கு வெளியே ப‌ற‌க்க‌த் தொட‌ங்கிவிடும். ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவ‌ர் இப்ப‌டி ப‌லிக்க‌டாவாக‌ வேண்டும். பிற‌கு வ‌குப்புக்கு வெளியே வேள்விக்குத் த‌யாராய் நிற்கிற‌ ஆடு மாதிரி வ‌குப்பு முடிகிற‌வரை த‌லைகுனிந்து அவ‌மான‌த்துட‌ன் நிற்க‌வேண்டும். சிவ‌ச‌ம்பு வாத்தியின்ரை இந்த‌ அக்கிர‌ம‌த்தாலேயே ப‌ல‌ பெடிய‌ங்க‌ளுக்கு க‌ணித‌ பாட‌ம் தொட‌ங்க‌ப்போகின்ற‌து என்றாலே -க‌ன‌டாத் த‌மிழ்க்க‌டைக‌ளில் உறைப்பு மிகுந்த‌ கொத்துரொட்டியைத் தின்ற‌பின் வ‌யிற்றுக்கு வ‌ரும் உப‌த்திர‌ம்போல‌- க‌ல‌க்க‌மாயிருக்கும்.

இவ‌ன‌து வ‌குப்பில் த‌மிழ்ப் பெட்டையொருத்தி இருந்தாள். சும்மாவே அழ‌குதான், ஆனால் அது போதாதென்று ஒவ்வொருநாளும் ஒவ்வொரு க‌ல‌ரில் அல‌ங்கார‌ம் செய்துகொண்டுவ‌ருவாள். ஒருநாள் சிவ‌ப்புவ‌ர்ண‌த்தில் ஆடைக‌ள் அணிந்துவ‌ருகின்றாள் என்றால் க‌ழுத்தில் போட்டிருக்கும் செயின், கால்/கை விர‌ல் ந‌க‌ங்க‌ள், ஏன் சில‌வேளைக‌ளில் த‌லைம‌யிர் கூட‌ அணிந்திருக்கும் ஆடைகளின் வ‌ர்ண‌த்திற்கு ஏற்ப‌ மாறியிருக்கும். உண‌வு இடைவெளிக‌ளில் டொமினோ, பிள‌க் ஜ‌க் என்று காசு வைத்துச் சூதாடும் பெடிய‌ங்க‌ள் சில‌ர் கூட‌, அவ‌ள் இன்றைக்கு என்ன‌ க‌ல‌ரில் வ‌ருவாள் என்ப‌தை வைத்து சூதாடும் அள‌விற்கு அவ‌ளின் அழ‌கும் அல‌ங்கார‌மும் பாட‌சாலை வ‌ட்டார‌த்தில் புக‌ழ் பெற்றிருந்த‌து. இப்படி எல்லாவ‌ற்றையும் பார்த்துப் பார்த்து நேர்த்தியாகச்செய்யும் அவ‌ளுக்கு பிடிக்காத‌ ஒரு விட‌ய‌மிருந்த‌து, அது க‌ணித‌ம்.

இந்த‌ ஒரு விட‌ய‌த்தால்தான் இவ‌னோடு அவ‌ள் முத‌ன்முத‌லில் ப‌ழ‌க‌த்தொட‌ங்கினாள். அவ்வ‌ப்போது த‌ர‌ப்ப‌டும் வீட்டுவேலைக‌ள், அசைன்மென்ட்க‌ள், குயிஸ்க‌ளில் கொஞ்ச‌ம் ந‌ல்ல‌ புள்ளிக‌ள் பெற்றுவிட்டால் பிற‌கு இறுதிப்ப‌ரீட்சை அவ்வ‌ள‌வு செய்யாவிட்டாலும் க‌வ‌லைப்ப‌ட‌த்தேவையில்லை. சில‌வேளைக‌ளில் சில‌ க‌ண‌க்குக‌ளை இவ‌ன் விள‌ங்க‌ப்ப‌டுத்தும்போது அவ‌ள் எங்கையாவ‌து வேடிக்கை பார்த்தோ அல்ல‌து போட்டிருக்கும் அல‌ங்கார‌த்தைச் ச‌ரி செய்தோ கொண்டிருப்பாள். இதைப்பார்த்து இவ‌னுக்கு எரிச்ச‌ல் வ‌ந்து, 'இப்ப‌டி அல‌ங்கார‌ம் போடுகின்ற‌ நேர‌த்தில் கொஞ்ச‌ நேர‌த்தையாவ‌து க‌ண‌க்குப்ப‌டிக்க‌ ப‌ய‌ன்ப‌டுத்தினால் ந‌ன்றாக‌ச் செய்ய‌லாமே' எனக் கூறுவான். 'இவ்வ‌ள‌வு சிர‌த்தையாக‌ அல‌ங்கார‌ம் செய்வ‌தால் உன்னைப் போன்ற‌ பெடிய‌ங்க‌ள் எல்லாம் திரும்பித் திரும்பிப் பார்க்கின்றீர்க‌ள், க‌ண‌க்கு ந‌ன்றாக‌ச் செய்தால் யார் என்னைக் க‌வ‌னிக்க‌ப்போகின்றீர்க‌ள்?' என்று லொஜிக்காய் கேட்டு இவனை ம‌ட‌க்குவாள். உண்மைதான். வ‌குப்புக்கு வ‌ந்து Doriots பையை உடைத்து அதிலிருந்து சிப்ஸை ஒவ்வொன்றாய் வாய்க்குள் எடுத்துப் போடும்போது அவ‌ள் உத‌டுக‌ளின‌தும் சிப்ஸின‌தும் க‌டும் சிவ‌ப்பு வ‌ர்ண‌ம் இவ‌னை வேறெந்த‌ உல‌கிற்கோ அழைத்துப் போவ‌தை இவனால் மறைக்கமுடியாதுதான். இவ‌ர்க‌ளுக்கு க‌ணித‌ம் ப‌டிப்பித்த‌ ஆசிரிய‌ர் இர‌ஷ்ய‌ப் பின‌புல‌த்தைக் கொண்ட‌வ‌ர். ஒஸ்ரோஸ்விஸ்கி என்ற‌ பெய‌ரை உச்ச‌ரிப்ப‌த‌ற்குள் வாய்க்குச் சுளுக்கு வ‌ந்துவிடும், ஆனால் அவ‌ரின் பெயரிலுள்ள‌ 'விஸ்கி' போல‌ மிக‌வும் க‌னிவான‌ மனுச‌ன். மேலும் இவ‌ள் பாட‌ம் ந‌ட‌க்கும்போது பாட‌த்தைக் க‌வ‌னிக்காது எதையாவ‌து செய்துகொண்டிருந்தால் கூட‌, ஒஸ்ரோஸ்விஸ்கி வாத்தி ஊரில் இவ‌னுக்கு வாத்திமார் செய்வ‌துபோல‌,அவ‌ளை வ‌குப்பில் எழும்பி நிற்க‌ச்சொல்லியோ, வ‌குப்பை விட்டு வெளியே போக‌ச் சொல்ல‌வோ -முக்கிய‌மாக‌- பிர‌ம்பை எடுத்து அடிக்க‌வோ மாட்டார்.

3.
இந்த‌ இட‌ம்பெய‌ர்வு முன்னைய‌ கால‌ங்க‌ளில் நிக‌ழ்ந்த‌து போல‌ அல்ல‌வென‌ எல்லோருக்கும் ந‌ன்கு விள‌ங்கிவிட்ட‌து. இனிமேல் நிர‌ந்த‌ர‌மாக‌ இந்த‌ ஊரை... ப‌டித்த‌ பாட‌சாலையை... விட்டுப்பிரிய‌ப் போகின்றோம் என்ற‌ க‌வ‌லை இருந்தாலும் அதை மேவிய‌தாக‌ கொடூர‌ யுத்த‌ம் க‌ண்முன்னே நிக‌ழ்ந்துகொண்டிருந்த‌து. இராணுவ‌ம் முன்னேறி புதிய‌ இட‌ங்க‌ளைப் பிடித்து முகாம் அமைத்த‌பின் குண்டுச் ச‌த்த‌ங்க‌ள் ச‌ற்று ஓய்ந்த‌து மாதிரி இருந்த‌து. ம‌ழை நின்றாலும் தூவான‌ம் நிற்காதது போல‌ அவ்வ‌வ்போது இராணுவ‌மும் இய‌க்க‌மும் முட்டுப்ப‌ட்டுக்கொண்டிருந்தார்க‌ள். ஒவ்வொரு வார‌மும் புத‌ன்கிழ‌மைக‌ளில் பெடிய‌ள் பாதைக‌ளைக் கிளிய‌ர் செய்துகொடுக்க‌, ஊர்ச்ச‌ன‌ம் வீடுக‌ளிலும் தோட்ட‌ங்க‌ளிலும் விட்டுவ‌ந்த‌ உடைமைக‌ளை எடுத்துவ‌ர‌த் தொட‌ங்கியிருந்த‌ன‌ர். அப்போதுதான் இவ‌ன் த‌ன் பாட‌சாலை அதிப‌ரை நீண்ட‌ நாட்க‌ளுக்குப்பிற‌கு க‌ண்டான்.

ச‌ண்டை மூளாத‌ ப‌குதியில் அதிப‌ரின் வீடிந்தும் ஏன் இங்கு வ‌ந்து இந்தாள் க‌ஷ்ட‌ப்ப‌டுகிற‌து என்றுதான் முதலில் நினைத்தான். ஆயிர‌ம் பேருக்கு மேல் ப‌டிக்கும் பாட‌சாலையில் அதிப‌ராய் அவ‌ர் இருந்தாலும் இவ‌னுக்கும் அவ‌ருக்குமான‌ உற‌வு என்ப‌து த‌னித்துவ‌மான‌து. சில‌ச‌ம‌ய‌ங்க‌ளில் சிலவிட‌ய‌ங்க‌ளுக்கு எவ்வ‌ள‌வு கார‌ண‌ங்க‌ளைச் சொன்னாலும் போதாமை இருப்ப‌துபோல‌ அதிப‌ருடான‌ த‌ன‌து உற‌வு எப்ப‌டி முகிழ்ந்த‌தென்பதை நினைக்கும்போதும் இவ‌னால் ஒரு தெளிவான‌ ப‌திலைக் க‌ண்ட‌றிய‌ முடியாதிருக்கும்..

க‌ட‌ந்த‌கால‌த்தைப் ப‌ற்றி இப்போது நினைத்தாலும், அவ‌னுக்கு அது சூறாவ‌ளி வ‌ந்து ஓர் உலுக்கு உலுக்கி விட்டுப்போன‌தைப் போல‌ விதிர்விதிர்க்க‌ச் செய்கிறது. அக்கொடுங்கால‌ம் இந்திய‌ இராணுவம் ஈழ‌த்தில் வ‌ந்து முகாங்க‌ள் அமைத்த‌ கால‌மாய் இருந்த‌து. இய‌க்க‌ம், சாதார‌ண‌ பெடிய‌ங்க‌ள் போல‌ சார‌த்துட‌னும், ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ கிர‌னைட்டுமாக‌த் திரிந்துகொண்டிருந்த‌து. இவ‌ன‌து அப்பாவிற்கு கொழும்பில் க‌டையொன்றில் வேலை. பிர‌ச்சினைக‌ள் தீவிர‌ம் ஆக‌ ஆக‌ வ‌ந்து போகும் பாதை அடிக்க‌டி மூட‌ப்ப‌ட‌ அப்பா ஊருக்கு வ‌ந்தே மாத‌ங்க‌ள் ப‌ல‌ ஆகியிருந்த‌து. வ‌றிய‌ சூழ‌ல் என்றாலும் அவ‌ன‌து அம்மாவிற்கு எல்லோருக்கும் இய‌ன்ற‌ள‌வு உத‌வ‌வேண்டும் என்ற‌ எண்ண‌ம் எப்போதுமிருந்த‌து. இய‌க்க‌த்திலிருந்த‌ பெடிய‌ங்க‌ளுக்கு அவ‌ர‌வ‌ர்க‌ளின் வீட்டில் கூட‌ உள்நுழைய‌ அனும‌திப்ப‌தில்லை; எனெனில் எப்போதும் இந்திய‌ன் ஆமி இய‌க்க‌த்துக்குப் போன‌ ஆக்க‌ளின் வீட்டைக் க‌ழுகுக்க‌ண்ணோடு க‌ண்காணித்துக்கொண்டிருக்கும். இய‌க்க‌ப் பெடிய‌ங்க‌ள் வீட்டை வ‌ந்து போனாங்க‌ள் என்று கேள்விப்ப‌ட்டால் பிற‌கு அக்குடும்ப‌ங்க‌ளின் நிலைமை விப‌ரீத‌மாகிவிடும். ஒரு பிள்ளையைத்தான் நாட்டுக்கு த‌லைமுழுகிவிட்டாச்சு, ம‌ற்ற‌ப் பிள்ளைக‌ளையாவ‌து ஒழுங்காய் வ‌ள‌ர்த்து ஆளாக்குவோம் என்ற‌ எண்ண‌மே அன்றைய‌கால‌த்தில் ப‌ல‌ பெற்றோர்க‌ளுக்கு இருந்த‌து. த‌ம் சாவை நாட்க‌ண‌க்கில் ஒத்திப்போட்டு, இந்திய‌ன் ஆமிக்கு ஒழுங்கைக‌ளுக்குள் நுழைந்து சுழித்துப்போட்டு வாழ்ந்துகொண்டிருந்த‌ இய‌க்க‌ப் பெடிய‌ங்க‌ளுக்கு அன்ற‌ன்றைய‌ சாப்பாடு கிடைப்ப‌து என்ப‌து பெரும் திண்டாட்ட‌மாய் இருந்த‌து.

ஆப‌த்து பின்வீட்டுக்குள் ப‌துங்கி நின்றாலும், பெடிய‌ங்க‌ளுக்கு அவித்துக் கொட்டாம‌ல் இருக்க‌மாட்டேன் என‌ அவ‌ன‌து அம்மா இய‌க்க‌த்திற்கு ச‌மைத்துக்கொடுக்க‌த் தொட‌ங்கினார். அநேக‌மாய் பெடிய‌ள் இர‌வில்தான் வ‌ருவார்க‌ள். அவ‌ன‌து ஊரில் மின்சார‌ம் என்ற‌ ஒரு சாமானே இல்லாத‌தால் ச‌ன‌மெல்லாம் ஆறு ஏழு ம‌ணிக்கே இர‌வுண‌வைச் சாப்பிட்டுவிட்டு எட்டு ஒன்ப‌து ம‌ணிக்குள் உற‌ங்க‌ப் போய்விடும். சாப்பிட‌ வ‌ருகின்ற‌ பெடிய‌ங்க‌ள் த‌னித்து வ‌ர‌மாட்டார்கள். இர‌ண்டு மூன்று பேராய்த்தான் சேர்ந்து வருவார்கள். ஒருவ‌ன் சாப்பிட‌ ம‌ற்றொருவ‌ன் இரண்டு வீடுத‌ள்ளி நின்று ஆமியின் ந‌ட‌மாட்ட‌ம் தென்ப‌டுகின்ற‌தா என‌ச் சென்றி பார்ப்பான். பிற‌கு சென்றி பார்த்த‌வ‌ன் சாப்பிட‌, ஏற்க‌ன‌வே சாப்பிட்ட‌வ‌ன் ஆமியின் அசைவுக‌ள் தெரிகிற‌தா என‌ இருளில் விழியெறிந்து உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பான். இப்ப‌டி வ‌ருகின்ற‌ பெடிய‌ங்க‌ளில் சில‌ர் த‌ங்க‌ள‌து பெற்றோரைக் க‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் சிலவாகியிருக்கும். அவ‌ர்க‌ள் சாப்பிட்ட‌ப‌டி த‌ங்க‌ள‌து அம்மாக்க‌ளின் நினைவுக‌ளை இவ‌ன‌து அம்மாவோடு ப‌கிர்ந்து நெகிழ்ந்தபடி நிற்பார்க‌ள். சில பெடிய‌ங்க‌ள் உண‌ர்ச்சிப்பெருக்கில் 'அம்மா இவ்வ‌ள‌வு பெரும் ஆப‌த்தையும் பார்க்காது எங்க‌ளுக்கு சாப்பாடு ச‌மைத்து த‌ருகிறிய‌ள். உங்க‌ளுக்கு என்ன‌ அம்மா நாங்க‌ள் கைமாறாய்த் த‌ர‌ப்போகின்றோம்?' என்பார்க‌ள். இவ‌ன‌து அம்மாவும், இவ‌னைக் காட்டி 'இவ‌ன் உங்க‌ளின் வ‌ய‌துக்கு வ‌ரும்போது என்னைவிட்டு விட்டு இவ‌னும் உங்க‌ளைப் போல‌ இய‌க்க‌மென‌ ஒளிந்து திரியாம‌ல் நிம்ம‌தியாய் வாழ‌ இந்த‌க் கோதாரிப்ப‌ட்ட‌ பிர‌ச்சினை எல்லாம் கெதியாய்த் தீர‌வேண்டும்' என்பார். அவ‌ர்க‌ள் இந்த‌ வார்த்தைக‌ளைக் காற்றுடன் காவிக்கொண்டு இருட்டினில் ம‌றைவார்க‌ள்.

நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌, ரோந்து போகின்ற‌ இந்திய‌ன் ஆமிக்கு பெடிய‌ங்க‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளில் அடிக்க‌த் தொட‌ங்கிவிட்டாங்க‌ள். இர‌ண்டு ப‌க்க‌மும் தின‌ம் இழ‌ப்புக்க‌ளாய் இருந்த‌து. இது போதாதென்று இய‌க்க‌ம் த‌ங்க‌ளைத் த‌விர‌ வேறு இய‌க்க‌ம் இருக்க‌க்கூடாது என்று ம‌ற்ற‌ இய‌க்க‌ப் பெடிய‌ங்க‌ளையும் போட்டுத் த‌ள்ளத்தொட‌ங்கிவிட்ட‌து. இவ‌ன‌து அம்மா இவ‌ற்றையெல்லாம் கேள்விப்ப‌ட்டு, சாப்பிட‌ வ‌ருகின்ற‌ பெடிய‌ங்க‌ளிட‌ம் இவைப‌ற்றி விசாரிப்பார். 'அவ‌ங்க‌ள் எல்லாம் எங்க‌டை இல‌ட்சிய‌த்தைக் காட்டிக்கொடுக்கின்ற‌ துரோகிக‌ள் அம்மா' என்பார்க‌ள். 'யாராய் இருந்தாலும் அவ‌ங்க‌ளையும் என்னைப் போன்ற‌ அம்மாக்க‌ள்தானே பெத்த‌துக‌ள், எல்லோரும் எங்க‌ளுக்குப் பிள்ளைக‌ள்தானே த‌ம்பிகமார்' என‌ அம்மா மெல்லிய‌ குர‌லில் சொல்வாள். மேலும் தொட‌ர்ந்து க‌தைக்க‌ப்போனால் சில‌ பெடிய‌ங்க‌ள் சாப்பாட்டின் இடைந‌டுவில் கோப‌த்துட‌ன் எழும்பிப் போய்விடுவார்க‌ள். இத‌ற்காக‌வே பிற‌கு அம்மா இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளைக் க‌தைப்ப‌தை நிறுத்தி அவ‌ர்க‌ளின் க‌தைக‌ளை ம‌ட்டும் கேட்க‌த் தொட‌ங்கினார்.

4.
ஒரு நாள் ஐந்தாறு ஆமி இவ‌ங்க‌ளின் ஊர்ப்ப‌க்க‌மாய் ஜீப்பில் விடிய‌க்காலை வ‌ந்திருக்கிறார்க‌ள். பெடிய‌ள் இரைக்காய் இர‌வோடு இர‌வாய் க‌ண்ணிவெடியைப் புதைத்துவிட்டு காத்திருந்திருக்கின்றார்க‌ள். ஜீப் க‌ண்ணிவெடியில் அக‌ப்ப‌ட்டுத் த‌ட‌ம்புர‌ள‌, த‌ப்பியோடிய‌ ஆமியையும் துர‌த்திச் துர‌த்திச் சுட்டிருக்கின்றார்க‌ள். இப்ப‌டி ஆறு ஆமி ஒரே ச‌ம்ப‌வ‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்ட‌து அதுவே முத‌ல் த‌ட‌வையாக‌ இருந்த‌து. இந்திய‌ன் ஆமிக்கார‌ர்க‌ள் இராணித்தேனீயைச் சூழும் தேனீக்க‌ள் போல‌ ஊரைச் சுற்றி வ‌ளைக்க‌த் தொட‌ங்கிவிட்டார்க‌ள். அதிக‌ நெருக்க‌டியின்றி சும்மா க‌ள‌த்தில் இற‌க்காத‌, கொடும் கூர்க்காப் ப‌டையும் கூட வ‌ந்திருந்த‌து. ஊர்ச்ச‌ந்தியில் போற‌ வாற‌ ச‌ன‌த்திற்கு யாரிதைச் செய்த‌து என‌க்கேட்டுக் கேட்டுப் ப‌ய‌ங்க‌ர‌ அடியாம், வீடுக‌ளிலிருக்கும் பெடிய‌ங்க‌ளையும் பிடித்துக் கொண்டு போகின்றாங்க‌ளாம் என்று க‌தைக‌ள் எல்லாத் திசைகளிலிருந்து ப‌ர‌வ‌த்தொட‌ங்கின‌. வீட்டில் அம்மாவும் இவ‌னுந்தான் த‌னித்திருந்த‌ன‌ர். 'அம்மாளாச்சியே எங்க‌டை ச‌ன‌த்துக்கு ஒரு பிர‌ச்சினையும் வ‌ராது காப்பாத்து' என‌ அம்மா முன‌கிக்கொண்டிருந்தார். கிளுவை வேலிக‌ளை வெட்டி வெட்டிக் கொண்டு சிறு சிறு குழுக்காய் ஆமி ஒழுங்கைக‌ளுக்குள் உள்நுழைந்து வ‌ர‌த்தொட‌ங்கிவிட்டார்க‌ள். இந்திய‌ இராணுவ‌த்திற்குரிய‌ ஒருவ‌கை வாச‌னைக்கு ஒவ்வாது நாய்க‌ளும், மாடுக‌ளும் ச‌த்த‌ம் போட‌த்தொட‌ங்கிவிட்ட‌ன‌. இனி ந‌ட‌க்க‌ப்போகும் சம்பவங்களுக்குச் சாட்சியாய் தான் இருக்க‌ப்போவ‌தில்லையென‌ச் சூரிய‌ன் க‌ரும்மேக‌த்தைப் போர்த்திக்கொண்டு ப‌துங்க‌த் தொட‌ங்கிய‌து. இவ‌ன‌து வீட்டுக்குள்ளும் ஒரு ஆமிக் குரூப் ஏறிவிட்ட‌து. வ‌ழ‌மையாய் ரோந்து வ‌ருகின்ற‌ ஆமிக்குழுவாய் இது இல்லை. அவ‌ர்க‌ள் அடிக்க‌டி ரோந்து வ‌ருகின்ற‌ப‌டியால் அவ‌ர்க‌ளின் முக‌ம் இவ‌னுக்குப் ப‌ரிட்ச‌ய‌மாய் இருந்த‌து. அந்த‌க் குழுவில் த‌மிழ் பேசும் ஆமியொருவ‌ர் இருந்த‌தால் அவ‌ரே பிற‌ரைக் காவ‌லுக்கு விட்டுவிட்டு வ‌ழ‌மையான‌ தேடுத‌ல்க‌ளை வீட்டுக்குள் ந‌ட‌த்துவார். 'ம‌ற்ற‌ ஆமி அப்ப‌டி ஏதும் தேடுத‌ல் ந‌ட‌த்த‌ வீட்டுக்குள் வ‌ந்தால் நீங்க‌ள் ஒருவ‌ரும் உள்ளே நிற்க‌வேண்டாம், முற்ற‌த்தில் வ‌ந்து நில்லுங்க‌ள், அதுவே பாதுகாப்பான‌து' என்று ஒருமுறை அவ‌ர் அம்மாவிட‌ம் கூறியிருந்தார். வேறு சில‌ வீடுக‌ளில் உள்ளே பெண்க‌ள் இருந்த‌போது ஏற்ப‌ட்ட‌ சில‌ அச‌ம்பாவித‌ங்க‌ள் அவ‌ருக்கும் தெரிந்திருக்கும் போலும். ஆனால் இம்முறை வ‌ந்த‌ ஆமிக்குரூப்பில் அந்த‌ த‌மிழ் ஆமியையோ அல்ல‌து வேறெந்த‌ தெரிந்த‌ முக‌த்தையோ காணாத‌து அம்மாவிற்குப் ப‌ட‌ப‌ட‌ப்பை இன்னும் கூட்டிவிட்ட‌து.

ஆமி உள்ளே த‌ம் தேடுத‌ல் வேட்டையைச் செய்ய‌ட்டுமென‌ இவ‌னும் இவ‌ன‌து அம்மாவும் முற்றத்தில் வ‌ந்து நின்ற‌போது ச‌ட்டென்று புழுதியைக் கிள‌ப்பிக்கொண்டு ஒரு ஜீப் வ‌ந்து நின்ற‌து. அதிலிருந்து இற‌ங்கிய‌ ஆமியோடு ஒரு த‌லையாட்டியும் கூடவே வ‌ந்து இற‌ங்கினார். இந்திய‌ அர‌சு நிவார‌ண‌ம் த‌ருகின்ற‌ அரிசி பையைத் த‌லைகீழாக‌ த‌லையாட்டியின் முக‌த்தில் க‌விழ்த்து, க‌ண்க‌ளுக்கு ம‌ட்டும் ஓட்டை போட்டிருந்த‌ன‌ர். அவ்விழிக‌ளில் ம‌ர‌ண‌ ப‌ய‌ம் பிதுங்கிக்கொண்டிருந்த‌து, ஏதோ அச‌ம்பாவித‌ம் நிக‌ழ‌ப்போகின்ற‌து என்று இவ‌ன‌து உள்ம‌ன‌ம் சொல்ல‌த் தொட‌ங்கிய‌து. இதுவ‌ரை த‌ன் துடிப்பைக் காட்டாது ப‌துங்கியிருந்த‌ இத‌ய‌ம், இப்போது அதைக் கையில் வைத்து உற்றுப் பார்ப்ப‌துபோல‌ அதிவேக‌மாய்த் துடிக்க‌த் தொட‌ங்கிய‌தை இவ‌னால் உண‌ர‌முடிந்த‌து.

த‌லையாட்டி தன் த‌லையை மேலும் கீழுமாய் 'ஓம்' என்ப‌த‌ற்கு அடையாள‌மாய் அம்மாவைப் பார்த்து ஆட்டினான். அதைத் தொட‌ர்ந்து ஒரு கூர்க்கா அம்மாவின் த‌லைம‌யிரைப் பிடித்து ஜீப்பில் வ‌லுக்க‌ட்டாய‌மாய் ஏற்றத்தொட‌ங்கினான். அம்மா, 'நான் எந்த‌த் த‌வ‌றும் செய்ய‌வில்லை, என்னை எத‌ற்கு ஜீப்பில் ஏத்துகிறிய‌ள்' என‌க் க‌த்தினாள். அவ‌ளின் அல‌ற‌ல், நிச‌ப்த‌ம் பெருகிவ‌ழிந்த‌ வெளியை ஒரு க‌த்தியைப் போல‌ கிழித்துக்கொண்டு போன‌து. ஜீப்பில் ஏறாது த‌ன் கால்க‌ளை நில‌த்தோடு தேய்த்துக்கொண்டு அம்மா பிடிவாதமாய் நிற்கிறாள். ஒரு நேர‌ம் சாப்பிடாது விர‌த‌ம் இருந்தாலே சோர்ந்துவிடும் அம்மாவிற்கு எவ்வாறு இந்த‌ப் பெரும் ப‌ல‌ம் வ‌ந்தென‌ இவ‌னுக்குத் திகைப்பாக‌ இருந்த‌து. அம்மாவின் பிடிவாத‌த்தைக் க‌ண்ட‌, இன்னுமொரு கூர்க்கா ஜீப்பில் அவ‌ளை ஏற்ற‌த் துணைக்கு வ‌ருகின்றான். த‌ன் தோளில் அவ‌ன‌து கை ப‌டிவ‌தைத் த‌விர்க்க‌ அம்மா வாயால் அவ‌னின் கையைக் க‌டித்துவிடுகின்றாள். வெறிகொண்ட‌ நாய்போல அந்த‌க் கூர்க்க்கா வெகுண்டெழுந்து அம்மா வீட்டில் அணிந்திருந்த‌ 'சோட்டி'யைக் கிழித்துவிடுகின்றான். எங்கிருந்தோ வ‌ந்திற்றோ தெரியாது இவ்வ‌ள‌வு பெரும் மூர்க்க‌ம். தேங்காய் வெட்டுவ‌த‌ற்காய் முற்ற‌த்தில் கிட‌ந்த‌ க‌த்தியைத் தூக்கிக்கொண்டு 'வேசை ம‌வ‌னே' என‌ அவ‌னை வெட்ட‌ அம்மா ஓடினாள். அந்த‌ சொற்ப‌ இடைவெளிக்குள் காற்றை விட‌ விரைவாய்த் தோட்டாக்க‌ள் உமிழப்ப‌ட்டிருந்த‌ன‌. அவ‌னுக்கு ம‌ட்டுமில்லாது இய‌க்க‌ப் பெடிய‌ங்க‌ளுக்கும் அம்மாவாயிருந்த‌ அம்மா நில‌த்தில், குருதியில் ச‌ரிந்துபோயிருந்தாள்.

பிற‌கு ந‌ட‌ந்ததெல்லாம் யாருடைய‌ சொற்க‌ளைக் கேட்டு அவ‌ன் செய்த‌து ம‌ட்டுமே. எல்லோரையும் த‌விர்த்து அம்மாவோடு ம‌ட்டும் இவ‌ன் த‌னியே உரையாட‌த் தொட‌ங்கினான். அம்மாவின் குர‌ல்க‌ள் இர‌வில் ம‌ட்டுமில்லாது ப‌க‌லிலும் கேட்க‌த் தொட‌ங்கின. அம்மா எப்போதும் த‌ன்னை அருவ‌மாய் பின் தொட‌ர்ந்துகொண்டிருக்கின்றாள் என்ப‌தை இவ‌ன் மிக‌த் தீவிர‌மாய் ந‌ம்ப‌த்தொட‌ங்கினான். அம்மாவிற்கு ந‌ட‌ந்த‌து அறிந்து அவ‌ன‌து அப்பா கொழும்பிலிருந்து வ‌ந்திருந்தார். அவ‌ரோடு இவ‌னால் அதிகம் ஒட்ட‌ முடிய‌வில்லை. கால‌ம் செல்ல‌ச் செல்ல‌ அம்மா உள்ளிட்ட‌ இற‌ந்த‌ இய‌க்க‌ப்பெடிய‌ள் ப‌ல‌ரின் ப‌ல்வேறுவ‌கையான‌ குர‌ல்க‌ள் இவ‌னுக்குள் ப‌ல்கிப் பெருக‌த்தொட‌ங்கின‌. பாட‌சாலைக்குப் போனாலும் இவ‌னால் பாட‌ங்க‌ளில் க‌வ‌ன‌ஞ்செலுத்த‌முடிய‌வில்லை, அம்மா சுடுப‌ட்டுச் செத்த‌தை ப‌ல்வேறு நிலைக‌ளில் வைத்துப் பார்க்க‌த் தொட‌ங்கினான். எந்த‌த் த‌ருண‌ம் நிக‌ழாது இருந்திருந்தால் அம்மா காப்பாற்ற‌ப்ப‌ட்டிருப்பாள் என்ப‌து ப‌ற்றி அதிக‌ம் யோசிக்க‌த் தொட‌ங்கினான்

5.
இவ்வாறு இவ‌ன் த‌ன‌க்குள்ளேயே த‌ன்னையே தொலைத்துக்கொண்டிருந்த‌ கால‌த்தில்தான் பாட‌சாலை அதிப‌ர் இவ‌னில் த‌னிப்ப‌ட்ட‌ க‌வ‌ன‌ம் எடுக்க‌த் தொட‌ங்கினார். இவ‌னின் த‌ந்தையும் ஊரிலிருந்து ஒன்றும் செய்ய‌முடியாது என‌ கொழும்புக்கு மீண்டும் செல்ல‌ இவ‌ன் அவ‌னின் அம்ம‌ம்மாவோடு இருக்க‌த் தொட‌ங்கினான்.

உள்ம‌ன‌க்குர‌ல்க‌ளை உற்றுக்கேட்க‌ப் ப‌ழ‌கிய‌ இவ‌ன் நாளடைவில் அவை அழைத்துச் செல்லும் திசைக‌ளிற்கு எல்லாம் அலைய‌த்தொட‌ங்கினான். சில‌ இட‌ங்க‌ள் அவ‌ன் இதுவ‌ரை போயிருக்காத‌ இட‌ங்க‌ளாய் இருக்கும். கார‌ண‌ம் எதுவுமின்றி எப்ப‌டி இங்கே வ‌ந்த‌டைந்தான் என‌ப் புதிய‌ இட‌ங்க‌ளைக் க‌ண்டு இவ‌ன் திகைப்பான். எல்லோரையும் விட‌ அவ‌ன‌து பாட‌சாலை அதிப‌ருக்கே அவ‌ன‌து பிர‌ச்சினைக‌ள் துல்லிய‌மாக‌ப் புரிய‌த் தொட‌ங்கின. பாட‌சாலை முடிந்த‌பின் தின‌மும் த‌ன் வீட்டுக்கு வ‌ர‌ச் சொன்னார் அதிப‌ர். நான்கு மைல்க‌ள் சைக்கிள் உழ‌க்கி இவ‌ன் போவான். அங்கு அவ‌ரும் அவ‌ர‌து ம‌னைவியும் அழ‌காய்ப் ப‌ராம‌ரித்த‌ தோட்ட‌த்தில் அவ‌ர்க‌ளோடு சேர்ந்து வேலை செய்வ‌தும், இளைப்பாறுவ‌துமாய் பொழுதுக‌ள் க‌ழிய‌த்தொட‌ங்கின‌. 'உன்னால் ப‌டிப்பில் க‌வ‌ன‌ஞ்செலுத்த‌ முடிய‌வில்லையென்றால் உன‌க்குப் பிடித்த‌து வேறு என்ன‌ என‌ யோசித்து அதில் க‌வன‌ஞ்செலுத்தப்பார் என்றார் அதிப‌ர் ஒருநாள். ம‌ன‌தை ஒருங்கே குவிக்கும்போதுதான் குர‌ல்க‌ள் கேட்கின்றன‌ என‌வே உட‌லை முன்னிறுத்தும் உதைப‌ந்தாட்ட‌த்தில் இவ‌ன் க‌வ‌ன‌ஞ்செலுத்த‌த் தொட‌ங்கினான். இட‌துகால் ப‌ழ‌க்க‌முடைய‌வ‌னாக‌வும், விரைவாக ஓடுப‌வ‌னாக‌வும் இருந்த‌தால் உதைப‌ந்தாட்ட‌த்தில் இவ‌னால் பிர‌காசிக்க‌ முடிந்த‌து. அவ‌ன் எதிர‌ணி வீர‌ர்க‌ளைச் சுழித்துப் ப‌ந்தைக் விரைவாய்க் கொண்டுபோகின்ற‌வ‌னாய் இருந்த‌தால் 'சுழிய‌ன்' என்ற‌ ப‌ட்ட‌ப் பெய‌ர் கூட‌ அவ‌னுக்கு வைக்க‌ப்ப‌ட்ட‌து. அதிப‌ர் ஒருநாள் அவ‌னுக்கு ர‌வுனிலிருந்து அன்றைய‌ கால‌த்தில் பிர‌ப‌ல்ய‌மாயிருந்த‌ ம‌ர‌டோனாவின் ஜேர்சியை வாங்கிக்கொண்டு வ‌ந்து அன்ப‌ளிப்பாக‌த் த‌ர‌ இவ‌ன் நெகிழ்ந்தான். மெல்ல‌ மெல்ல‌ அவ‌னின் உள்ம‌ன‌க்குர‌ல்க‌ள் அட‌ங்கிப்போக‌ இய‌ல்புக்கு வ‌ர‌த்தொட‌ங்கினான்.

6.
மீண்டும் ச‌ண்டைக‌ள் தொட‌ங்கிவிட்ட‌ன. இந்த‌முறை இல‌ங்கை இராணுவ‌த்தோடு. ஊரை விட்டு இர‌வுக‌ளில் வெளியேறுவ‌தும் ப‌க‌லில் வ‌ருவ‌துமாய் இருந்த‌ கால‌ம் போய் முற்றுமுழுதாக‌ ஊரைவிட்டு நீங்க‌ வேண்டிய‌தாக‌ப் போய்விட்ட‌து இவ‌னுக்கு. ஒரு புத‌ன்கிழ‌மை வீட்டிலிருக்கும் மிச்ச‌ உடைமைக‌ளையும் எடுக்க‌ வ‌ந்த‌போதுதான் அதிப‌ரைக் க‌ண்டு, ஏன் இந்தாள் இங்கே வ‌ந்து நிற்கிற‌து என்று யோசித்தான். பிற‌கு அவ‌ருட‌ன் க‌தைத்த‌போதுதான் மாண‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளையும் முக்கிய‌ ஆவ‌ண‌ங்க‌ளையும் எடுக்க வ‌ந்திருக்கின்றார் என்ப‌து தெரிந்த‌து. அதையெல்லாம் எடுத்த‌பின் இட‌ம்பெய‌ர்ந்திருந்த‌ பாட‌சாலைக்குத் தேவையான‌ த‌ள‌பாட‌ங்க‌ளையும் எடுக்க‌வேண்டுமென‌ அதிப‌ர் ஒற்றைக்காலில் பிடிவாத‌ம் பிடித்த‌ப‌டி நின்றார். அங்கே பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டிருந்த‌ இய‌க்க‌ப் பெடிய‌ங்க‌ளும், வீடு பார்க்க‌ வ‌ந்த‌ ச‌ன‌ங்க‌ளுந்தான் இந்த‌நிலையில் பெரிய‌ பொருட்க‌ளை ந‌க‌ர்த்த‌முடியாது, வேறொரு ச‌ம‌ய‌த்தில் அதைச் செய்ய‌லாம் என்று அதிப‌ரைச் ச‌மாளித்து அனுப்பிவைத்தார்க‌ள்.

'நிலைமை போகின்ற‌போக்கைப் பார்த்தால் இன்னும் மோச‌மாக‌ ஆகும் போல‌ இருக்கிற‌து. நீயும் இங்கிருந்தால் இய‌க்க‌த்திற்குத்தான் போக‌வேண்டிவ‌ரும். வெளிநாட்டுக்குப் போகின்ற‌ வ‌ழியைப் பார்' என‌ அதிப‌ர் இவ‌னைப் பார்த்து அக்க‌றையாக‌ச் சொன்னார். அதுதான் அவ‌ரை இவ‌ன் இறுதியாக‌ப் பார்த்த‌து. இட‌ம்பெய‌ர‌ இட‌ம்பெய‌ர‌ அந்த‌ந்த‌ இட‌ங்க‌ளில் இருந்த‌ பாட‌சாலைக‌ளில் த‌ற்காலிக‌மாய் இவ‌ன் ப‌டிக்க‌த்தொட‌ங்கினான். ஏற்க‌ன‌வே இய‌ங்கிக்கொண்டிருந்த‌ இன்னொரு பாட‌சாலையோடு இணைந்து இவ‌ன‌து ஊர்ப்பாட‌சாலையும் எங்கோ தொலைவில் கொஞ்ச‌ப்பிள்ளைக‌ளோடு இய‌ங்க‌ந்தொட‌ங்கிய‌து. இவ‌னால்தான் அங்கே போய்ப் ப‌டிக்க‌ முடிய‌வில்லை.

7.
கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த‌ அப்பா இவ‌னைக் கொழும்புக்கு வ‌ர‌ச்சொன்னார். அம்மா அப்பாவை திரும‌ண‌ஞ்செய்த‌போது சீத‌ன‌மாய்க் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ காணியை விற்று, இவ‌னின் த‌க‌ப்ப‌ன் ஏஜ‌ன்சிக்கு க‌ன‌டாவிற்குப் போக‌ப் ப‌ண‌ம் க‌ட்டினார். ஏழு மாத‌மாய் நாலைந்து நாடுக‌ளில்அலைந்து திரிந்து இறுதியில் க‌ன‌டாவிற்கு வ‌ந்து அஸைல‌ம் அடித்தான்.

புதிய‌ நாடு, புதிய‌ க‌லாசார‌ம், புதிய‌ கால‌நிலையோடு, ஆங்கில‌மொழியும் தெரியாது அவ‌திப்ப‌ட்ட‌போது, உள்ளே இதுவ‌ரைகால‌மும் அட‌ங்கிப்போயிருந்த‌ குர‌ல்க‌ள் மீண்டும் க‌ர‌க‌ர‌க்க‌த் தொட‌ங்கின‌. அவ‌ன‌து அம்மா பொழியும் ப‌னிக்குள் இடையிடையே தோன்றி அவ‌னை மீண்டும் புதிய‌ இட‌ங்க‌ளுக்கு அழைத்துச் செல்ல‌த் தொட‌ங்கினார். ஊரில் போல‌வ‌ன்றி இங்கே குர‌ல்க‌ளைப் பின் தொட‌ர்ந்து சென்று, தொலைந்த‌ இட‌ங்க‌ளில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வ‌ருவ‌து என்ப‌து மிக‌க் க‌டின‌மாக‌ இருந்த‌து. திசை கேட்டு ஒழுங்காய் வ‌ந்து சேர்வ‌த‌ற்கு இவ‌னுக்கு மொழியும் தோலின் நிற‌மும் ஒரு த‌டையாக‌ இருந்த‌து. பூச்சிய‌த்துக்கு கீழே 20 பாகைக்குப் போகும் கால‌ங்க‌ளில் கூட உரிய‌ ஆடைக‌ள் அணியாது, வீட்டுக்குள் அணிந்திருக்கும் ஆடைக‌ளுடன் குர‌ல்களைப் பின் தொட‌ர்ந்து போகின்ற‌வ‌னாக‌வும் ஆகியிருந்தான்.

ந‌ண்ப‌ன் ஒருவனின் உத‌வியால் அதிப‌ரின் த‌ற்காலிக‌ முக‌வ‌ரியைப் பெற்று அதிப‌ருக்கு ஒரு க‌டித‌ம் எழுதினான். தான் மீண்டும் குர‌ல்க‌ளைக் கேட்க‌த் தொட‌ங்கியிருப்ப‌தாக‌வும், முக்கிய‌மாய் தன்னால் ஆங்கில‌ம் இல்லாது இங்கே ஒருவேலையும் செய்ய‌ முடியாது இருக்கின்ற‌து என்ப‌தையும் அதில் குறிப்பிட்டிருந்தான். அதிப‌ரின் ப‌தில் ஆங்கில‌த்தில் வ‌ந்திருந்தாலும் அவ‌னிற்கு அது மிக‌வும் இத‌மாயிருந்த‌து. ஆங்கில‌ம் க‌ற்றுக்கொள்வ‌து அவ்வ‌ளவு ஒன்றும் க‌டின‌மில்லையென‌, தான் ஆங்கில‌ம் க‌ற்றுக்கொண்ட‌ அனுப‌வ‌ங்க‌ளை க‌டித‌த்தில் இவ‌னுட‌ன் அவ‌ர் ப‌கிர்ந்துகொண்டார். இல‌ங்கையைப் போல‌ அன்றி, உள்ளிலிருந்து ஒலிக்கும் குர‌ல்க‌ளுக்கு க‌ன‌டாவில் உரிய‌ சிகிச்சை முறைக‌ள் வைத்திருப்பார்க‌ள் அவ‌ற்றை அணுகிப்பெறுக‌ என்ற‌ அதிப‌ரின் தொட‌ர்ச்சியான‌ அறிவுரையை ஏற்று இவ‌ன் வைத்திய‌ர்க‌ளிட‌ம் ஆலோச‌னை கேட்க‌த் தொட‌ங்கினான்.

8.
க‌‌ன‌டாவின் வாழ்க்கைச் சூழ‌லுக்கேற்று த‌ன்னைத் த‌க‌வ‌மைக்க‌வும், ஆங்கில‌ம் ஒர‌ள‌வு பிடிப‌ட‌வும், அவ‌ன் பாட‌சாலைக்கு விருப்புடன் செல்லத் தொடங்கினான்.. க‌ணித‌த்தில் மீதிருந்த ஆர்வ‌ந்தான் இப்போது இந்த‌ப் பெட்டையையும் இவ‌னோடு நெருங்க‌ வைத்திருக்கிற‌து. அவ‌ளுக்கும் இவனைப் பிடித்திருக்கிற‌து போலும். இப்ப‌டியிப்ப‌டி இன்னின்ன‌ க‌ல‌ரில் நீ ஆடைக‌ள் அணிந்தால் இன்னும் ப‌ளிச்சென‌த் தெரிவாய் என‌ அடிக்க‌டி கூற‌வும் தொட‌ங்கினாள். இவ‌ன் ஒரு காத‌ல‌ர் தின‌த்த‌ன்று அநேக‌மான‌ ஆண்க‌ள் கொடுப்ப‌துபோல‌ ஒரு சிவ‌ப்பு ரோஜாவும் வாழ்த்த‌ட்டையும் கொடுத்து ப்ர‌போஸ் செய்துகொண்டான். 'நீ க‌ணித‌ம் சொல்லித் த‌ரும்வ‌ரை நான் உன்னைக் காத‌லிக்க‌த்தானே வேண்டியிருக்கிற‌து, வேறு வழியில்லை' என‌ ந‌க்க‌லடித்து வாங்கிக்கொண்டாள். இவ‌னுக்கு அவ‌ள் அப்ப‌டிச் சொன்ன‌து கேட்டு முக‌ம் சுருங்கிப்போன‌து. அதைக் க‌ண்டு, 'இல்லை, என‌க்கும் உன்னைப் பிடித்திருக்கிற‌து, இல்லாவிட்டால் ரோஜாவை வாங்கிக்கொள்வேனா?' என‌ அவ‌னைத் தேற்றி ஒரு முத்த‌ங்கொடுத்தாள். அன்று முத‌ன் முத‌லாக‌ அவ‌ளின் கைவிர‌ல்க‌ளைக் கோர்த்துக்கொண்டு அவ‌ள் வீடுவ‌ரை ந‌ட‌ந்து போயிருந்தான்.

பிரிய‌மான‌ பெண்ணும், போரில்லாச் அமைதியான நிலைமையும் க‌ன‌டாவில் இருந்தும் கூட‌, இலையுதிர்கால‌ங்க‌ளிலும் -சூரிய‌ன் முக‌ங்காட்டாது புதைந்திருக்கும்- ப‌னிக்கால‌ங்க‌ளிலும் அம்மா இவ‌னோடு அதிக‌ம் பேச‌த்தொட‌ங்குவ‌தை இவ‌னால் த‌விர்க்க‌ முடிவ‌தில்லை. 'இய‌க்க‌ப் பெடிய‌ள் சாப்பிட‌ வீட்டை வ‌ர‌ப்போகிறாங்க‌ள், த‌ம்பி கெதியாய் இந்த‌ வெங்காய‌த்தை வெட்டித்தாடா..' என்றோ இல்லை 'உந்த‌ப் புளிய‌ங்கோதை உடைத்து புளியைத் த‌ண்ணியில் க‌ரைத்துத் தா, குழ‌ம்பு கொதிச்சிட்டுடா' என்றோ நெருங்கி வ‌ந்து கேட்க‌த் தொட‌ங்கிவிடுவார். அம்மாவில் அவ‌னுக்கு அவ்வ‌ள‌வு பாச‌ம். என‌வே அம்மா நீங்க‌ள் த‌ள்ளிப்போங்கோ என்று சொல்லாம‌ல் அவ‌ர் க‌தைப்ப‌தையெல்லாம் அவ‌ன் பொறுமையாக‌ச் செவிம‌டுக்க‌த் தொட‌ங்கிவிடுவான்.

உய‌ர்க‌ல்லூரி முடிந்து அடுத்து கொலீயிற்கா அல்ல‌து யூனிவேசிட்டியிற்கா போவ‌து என்ற‌ குழ‌ப்ப‌ம் இவ‌னுக்கு வ‌ந்த‌து. த‌ன‌க்கு ப‌டிப்பிலிருந்து ஒருவ‌ருட‌ இடைவெளி வேண்டுமென‌ச் சொல்லி உண‌வ‌க‌ம் ஒன்றில் முழுநேர‌மாய் வேலை செய்ய‌த் தொட‌ங்கினான். அவ‌ள் தான் யூனிவ‌ர்சிட்டிக்கு போக‌ப் போகின்றென‌ தொலை தூர‌ வளாக‌ம் ஒன்றில் அனும‌தி எடுத்துப் போய்விட்டாள். இவ‌ன் ட‌ன்டாஸ் ஸ்குய‌ருக்கு அருகிலிருக்கும் உண‌வ‌க‌ம் ஒன்றில்தான் வேலை செய்ய‌த் தொட‌ங்கினான். முத‌லாம் வ‌ருட‌ம் ப‌டிப்பு முடித்து அவ‌ள் இவ‌னைச் ச‌ந்தித்த‌போது சொல்ல‌வேண்டிய‌ எதையையோ தொண்டைக்குள் வைத்துக்கொண்டு த‌விப்ப‌து போல‌த்தெரிந்த‌து. 'என்ன‌..தயங்காமல் சொல்லு?' என்றான். 'நாங்க‌ள் உய‌ர்க‌ல்லூரியில் ஆர‌ம்ப‌த்தில் இருந்த‌துபோல‌ ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ளாய் இருந்துவிடுவோமா' என்றாள் அவ‌ள். இவ‌னுக்கு க‌ழுவ‌த‌ற்கு காத்திருந்த‌ ஒரு நூறு சாப்பாட்டுக் கோப்பைக‌ள் நில‌த்தில் ஒரேநேர‌த்தில் சித‌றிவிழுந்த‌து மாதிரியான‌ உண‌ர்வு நெஞ்சிற்குள் எழ‌த் தொட‌ங்கிய‌து. 'ஏன் நான் உன்னோடு சேர்ந்து ப‌டிக்க‌ வ‌ராத‌தா, கார‌ண‌ம்? ' என‌ இவ‌ன் கேட்டான். 'அப்ப‌டியில்லை, நீ இன்ன‌மும் உன் அம்மாவோடு உரையாடிக்கொண்டிருப்ப‌துதான் என‌க்கு மிக‌வும் அச்ச‌மூட்டுகிற‌து. எல்லோருக்கும் அவ‌ர‌வ‌ர் வாழ்க்கை முக்கிய‌ம் அல்ல‌வா?' என்றாள். 'Are you seeing someone?' என‌ இவன் கேட்க. 'Hmm, May be' என்றாள் அவ‌ள். Now I know the reason Bitch' என்றான் இவ‌ன். 'Really, When we had sex, I was your soul, Now I'm a F***ing Bitch. I know guy's philosophy. Get a Life' என‌க் கூறிவிட்டு அவ‌ள் ம‌றைந்தாள்.

9.
இவ‌ன் மீண்டும் நீண்ட‌நாட்க‌ளின் பின், தான் அனுப‌வித்துக்கொண்டிருக்கும் எல்லா வேத‌னைக‌ளையும் கொட்டி அதிப‌ருக்குக் க‌டித‌ம் எழுத‌த் தொட‌ங்கினான். அதிப‌ர், தான் இப்போது பாட‌சாலை அதிப‌ர் பொறுப்பிலிருந்து இளைப்பாறி இல‌ங்கை அர‌சின் அபிவிருத்தி ச‌ம்ப‌ந்த‌மான‌ ஒரு துறையில் வேலை செய்வ‌தாக‌ எழுதியிருந்தார். 'ச‌மாதான‌ உட‌ன்ப‌டிக்கை ஏற்ப‌ட்டு இப்போது நிலைமை சுமூக‌மாய் இருக்கிற‌து, உன‌க்கு க‌ன‌டாவிலிருப்ப‌து க‌ஷ்ட‌மென்றால் இல‌ங்கைக்கு வா, தான் ஏதாவ‌து ஒரு வேலை எடுத்துத் த‌ருகின்றேன்' என‌க் கூறியிருந்தார். 'க‌ன‌டா என் க‌ண்ணுக்குத் தெரியாத‌ க‌ண்ணிக‌ளால் என்னைப் பிணைத்து வைத்திருக்கிற‌து, விரைவில் அவ‌ற்றை அறுத்தெறிந்துவிட்டு வ‌ருகின்றேன்' என‌ ந‌ம்பிக்கையுட‌ன் இவ‌ன் ப‌தில் எழுதினான்.

ப‌ருவ‌ம் மாறி இலைக‌ள் உதிர்ந்துகொண்டிருந்த‌ ஒருநாள், எரிபொருள் நிலைய‌த்தில் த‌ன‌து கார் இடைந‌டுவில் பெற்றோல் இல்லாது நின்றுவிட்ட‌து, இந்த‌க் க‌ல‌னின் பெற்றோல் நிர‌ப்பவேண்டுமென‌க் கேட்டு பெற்றோலை நிர‌ப்பினான். த‌ன் காத‌லியும் தானும் பாட‌சாலை முடிந்து, ந‌ட‌ந்துவ‌ரும் புல்வெளியில் ப‌டுத்த‌ப‌டி க‌ருஞ்சாம்ப‌ர் வான‌த்தை நீண்ட‌நேர‌மாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். பிற‌கு 'அம்மா நான் உங்க‌ளிட்டை கெதியாய் வாற‌ன்' என‌ச் சொல்லியபடி உட‌ல் முழுதும் பெற்றோலை ஊற்றித் தீயைப் ப‌ற்ற‌ வைத்தான்.

இவ‌ன் த‌ன் அடையாள‌ங்க‌ளை முற்றாக‌ அழித்துக்கொண்ட‌ மூன்றாம் நாளில் அதிப‌ரும் இன‌ந்தெரியாத‌ ந‌ப‌ர்க‌ளால் அவ‌ரின் வீட்டில் வைத்துச் சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்டார். அவ‌ர் அதிப‌ராயிருந்த‌ பாட‌சாலையில் ப‌டித்த‌ மாண‌வ‌ன் ஒருவ‌ன் தான் அதிப‌ரைச் சுட்டதென‌வும், அவ‌னுக்கு இவ‌னைப் போன்ற‌ முக‌ச்சாய‌ல் இருந்த‌தாக‌வும் ச‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்குள் இர‌க‌சிய‌மாய்க் க‌தைத்துக் கொண்டார்க‌ள்.

(ஆடி,2010)
நன்றி: காலம், இதழ் 36
(thanks- abstract art)
(மீரா பார‌திக்கு...)

மழைக்காலம்

Wednesday, October 20, 2010

(2006, சேக‌ர‌ம்)

மழையைச் சந்திக்கும் எப்போதும் நினைவில் வருவது இரண்டு விடயங்கள்தான். தடிமன் வந்துவிடுமோ என்ற பயமும், அவளைப் பறறிய நனவிடை தோய்தலும்தான். மழையை- காதலுடன், மனதை வருட வைக்கும் நினைவுகளுடன், துளித்துளியாய் மனதில் பொழியவைக்கும் எழுத்துக்களை எழுதாத படைப்பாளிகள் மிகக் குறைவே என்றாலும் மழைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒழுகாத கூரையில்லாத வீட்டை உடையவர்களும், வீடற்று தெருவில் உறங்குபவர்களும் மழையுடன் வேறுவிதமான உறவுகளைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.

ஊரில் இருந்தபோது நோயின் நிமித்தம் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டதால் மழையில் ஒருநாளும் ஆசை தீர நனைந்ததில்லை. ஓடுகளில் கல்லால் எறிவது போல பேரிரைச்சலுடன் விழும் மழைத்துளிகளைக் கேட்டபடி, வீட்டுக்கூரையின் மூலைகளில் பீலியைப்போல(?) வழிந்து ஓடுகின்ற நீரை விடுப்புத்தான் பார்த்திருக்கின்றேன். மேலும் ஓலையால் வேயப்பட்டிருந்த எங்கள் குசினியின் இடுக்குகளுக்குள்ளால் விழும் மழைத்துளிகள், அம்மா செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாணத்தால் மெழுகும் தரையை குழிகளாக்குவதையும் பார்த்துமிருக்கின்றேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் அம்மா குண்டுத்தோசை சுடும்போது ஒவ்வொரு குழிகளிலும் தோசைமாவை வார்க்கும்போது பொங்கி தோசை வருவதைப் போல இந்தக் குழிகளிலும் நீர் விழுந்து விழுந்து சிலவேளை குமிழிகளை உருவாக்கின்றனவோ என்றுதான் உவமித்துக்கொள்வேன்.

மழைக்காலங்களில் நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணிகள் மீது ஏனோ இனந்தெரியாத பரிவு வந்துவிடுகின்றது. தங்கள் உடலைச் சிலிர்க்கவைக்க மழைத்துளிகளை உதறுகின்ற நாயை, கோழிக் குஞ்சுகளை, ஆட்டுக்குட்டிகளை மிக விருப்புடன் அதிக வேளைகளில் பார்த்துக் கொண்டிருப்பதுண்டு . அதுவும் சிலவேளைகளில் மழை பெருமழையாக உருமாறும்போது வீட்டுப் பிராணிகள் எங்கள் வீட்டு விறாந்தைக்கு பெற்றோரால் புலம்பெயர வைக்கப்படுகையில் இன்னும் நெருக்கமாய் அவற்றின் அசைவுகளை அவதானிக்க முடிந்திருக்கின்றது. மழை தொடர்ந்து பெய்கின்றபோது பாடசாலையும் இல்லாது வீட்டுக்குள் முடங்குகின்றபோது புத்தகங்களோடு விட்டுவிட்டு சில உரையாடல்களை நிகழ்த்த முடிந்ததில் ஒருவிதமான இதம் இருக்கிறது. வீட்டின் ஒரு அறை முழுதும் புத்தகங்களே நிரம்பியிருக்கும். அப்பா, நூலகங்களில் வருட இறுதிகளில் புத்தகங்கள் ஏலத்துக்கு போகும்போது விகடன், கல்கி, கல்கண்டு, கலைக்கதிர் (?), சினிமாப் புத்தகங்கள் என்று அள்ளிக்கட்டி கொண்டு வருவார். இவ்வாறான மழைப் பொழுதுகளில் அந்தப்புத்தகங்களை விறாந்தையில் வாரம்,மாதம் என்ற ஒழுங்கில் அடுக்கி பரப்பி மகிழ்வதுதான் எனது பொழுதுபோக்காய் இருக்கும். அப்படிச் செய்வது என்றுமே அலுக்க்காத விசயமாக இருந்திருக்கின்றது. அப்பாவுக்கு இருந்த புத்தகங்களின் மீதான வாஞ்சையும், அக்காவுக்கு வாசிப்பில் இருந்த தீராத மோகமும்தான் என்னைப் புத்தகங்கள் வாசிக்கத்தூண்டியிருக்கலாம் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது.. இப்படி எடுக்கப்பட்ட சஞ்சிகைகள் அத்தியாயம் அத்தியாயமாய் கட்டப்பட்டுத்தான், சாண்டியல்யனின் கடல் புறா, யவனராணி, சுஜாதாவின் பலகதைகள்(கரையெல்லம் செண்பகப்பூ இப்போதும் நினைவிலிருப்பது) போன்றவற்றை வாசிக்க முடிந்திருக்கிறது. இப்படி தொடராய் வந்தவற்றை அதுவும் ஓவியங்களுடன் வாசிப்பதில் இனம்புரியாத மகிழ்ச்சியும், உயிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

மழைக்காலத்தில் மறக்கமுடியாத இன்னொரு நினைவு என்னவென்றால், அளவெட்டியையும் அமபனையையும் இணைக்கும் வீதியில் சைக்கிளோட்டிப் போவது. அந்த வீதியால போகும்போது இரண்டு பக்கமும் பசுமையாய் விரிந்திருக்கும் வயல்களில் இலயிக்காமல் எவரும் அவ்வளவு இலகுவில் கடந்துவிடமுடியாது. கமம் செய்வதற்கு நிலம் என்று எங்களுக்கு எதுவும் இல்லாதபோதும் வயல் மீது இருக்கும் என் காதல் அளவற்றது. அம்மாவோடு வீட்டில் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு புல்லுச் செருக்குவதாய்ப் போவதிலிருந்து… அறுவடைகள் முடிந்தபின் மிளகாய்ச்செடிகளை இன்னபிற பயிர்களை விறகுக்காய் சேகரிப்பதிலிருந்து… ஊரில் இருந்தவரை எனக்கு வயல்களோடு நெருக்கமான பிணைப்பு இருந்திருக்கின்றது. அவ்வாறான ஒரு பொழுதில்தான் அண்ணா வாங்கிகொண்டுவந்த கொத்துரொட்டியை வாழைத்தோட்டம் ஒன்றில் முதன் முதலாய் சாப்பிட்டதும்… இன்னும் பசுமையாய் இருக்கிறது. இந்த குண்டும் குழியுமான -தாரையே தசாப்தங்களாய் காணாத- வீதியால் போகும்போது, என் வயதொத்தவர்கள் அல்லது குறைந்தவர்கள் வாழைக்குற்றிகளை, முறிந்து மிதக்கும் மரக்கிளைகளை படகாக்கி மழைக்காலங்களில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க பார்க்க ஆசை நுரை நுரையாகப் பொங்கத்தொடங்கும் (வழமையான நிலப்பிரசினைகளால் ஒவ்வொருத்தரும் நிலத்தை வெட்டி வெட்டி வீதி சிறுத்துக் கொண்டுபோனது இன்னொரு சுவாரசியமான விடயம்). நோயின் காரணத்தாலும் பெற்றோர் கண்டு விட்டால் என்னாகும் என்ற பயத்தாலும் வீதியில் நின்று அவர்களை இரசித்துவிட்டு கையசைத்துவிட்டு நகர்ந்தபடி இருந்திருக்கின்றேனே தவிர அவர்களோடு அசைதீர மழைநீரில் ஒருநாளும் சேர்ந்து விளையாடியது கிடையாது.

புலம்பெயர்ந்து வந்தபின்னும் மழையில் ஆசைதீர ஒருநாளும் நனைந்ததில்லை. அவள் -நான் இன்று முழுவதுமாய் மழையில் நனைந்தேன்- என்று சிலிர்த்துக் கூறியபோது என்னால் ஏன் இப்படி ஒருபோதும் இருக்கமுடியவில்லை என்றுதான் எண்ணத்தோன்றியது. வீட்டையே உலகமாய் திணிக்கப்படும் பெண்களுக்கு மழை -என்னால் புரிந்துகொள்ளமுடியாத- பல மொழிகளை அவர்களுக்காய்ப் பேசவும் கூடும். ஒரு மழைப்பொழுதில் பிறர் பற்றிய பிரக்ஞையின்றி நனைதல் என்பது ஒரு பெண்ணுக்கு மிகபெரும் சுதந்திரமாயும் இருக்கலாம். அவள் -உன்னோடு நனையும் ஒரு மழைப்பொழுதுக்காய் காத்திருக்கின்றேன்- என்கின்றாள். மழையை வீட்டுக்குள் இருந்து மட்டும் இரசித்துக்கொண்டிருப்பவனுக்கு அது எவ்வ்ளவு சாத்தியம் சாத்தியமின்மை என்று தெரியாதபோதும் என்றேனும் ஒருநாள் அவளோடு மழையில் முழுதாய் நானும் நனைந்துவிடக்கூடும் போலத்தான் தோன்றுகின்றது.

அப்போது…அந்தப் பொழுதை என்ன பெயரிட்டு அழைப்போம் கண்ணே?

(Friday, May 26th, 2006 at 8:55 am)

North Country (திரைப்படம்)

(2006: சேக‌ர‌த்திற்காய்...)

நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது.. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியதுமாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடிந்துவிடுகின்றது.

தனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்தப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத்தொடங்க நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கப்போகின்றார். வேலைக்குச் சேரமுன்னர் வழமையான ‘கர்ப்பம் தரித்திருக்கின்றாரா’ போன்ற வைத்தியப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வேலையில் சேர்க்கப்பட்டாலும், ‘இது பெண்களுக்கு உரிய தொழில் அல்ல’ என்ற திமிருடன் ஆண்கள வேலைத்ளத்தில் பாலியல் சேட்டைகளைச் செய்தபடி இருக்கின்றனர். சுவர்களில், கழிவறைகளில், கெட்ட கெட்ட வார்த்தைகள் எழுதுவது, பெண்களின் உணவுப் பெட்டிகளில் sex toysஜ வைத்து ‘நீ வாறியா’ என்று பல்லிளிப்பது, அதற்கும் மேலாய் பெண்கள் வேலையின் பளுவில் இருக்கும்போது அவர்களின் முலைகளைப் பிடித்து, உறுப்புக்கள் பற்றி வக்கிரமான நக்கல்கள் செய்வது என்று பலவிதமான உடல் உள பாலியல் பாதிப்புக்கள் பெண்களுக்கு ஏற்படுகின்றது.

ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் சகிக்கமுடியாது என்று, ஜோஸி அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளில் இருப்பர்களிடம் முறையிடப் போகின்றார். அங்கே அவர்கள் இவரின் முறைப்பாட்டைக் கேட்கமுன்னரே, ‘நீ என்ன சொல்லப்போகின்றாய் எங்களுக்குத் தெரியும், ஆனால் அதற்கு முன் உனக்கு ஒரு சந்தோசமான செய்தியைத் தருகின்றோம் என்று கூறி, அவரை வேலையில் இருந்து நிறுத்துகின்றோம் என்கின்றார்கள். I’m not quiting என்றும் தனக்கு இந்த வேலை கட்டாயம் தனது வாழ்க்கைச் செலவுக்கு தேவை என்கின்றபோது, அப்படி என்றால் முறைப்பாடு எதுவும் செய்யாது ‘வேலையில் மட்டும் கவனம் செலுத்து’ என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.

மீண்டும் ஜோஸி வேலைக்குபோனாலும், அங்கே நடைபெறும் வன்முறைகள் முன்பு இருந்த்தைவிட இன்னும் மோசமாகின்றது. தொழிலாளர்களுக்கு என்று தொழிற்சங்கம் இருந்து அதில் பெண் பிரதிநிதிகள் இருந்தாலும் இப்படி ஜோஸி செய்ததால் ‘தொழிற்சங்க நண்பர்களும்’ கைவிட்டுவிடுகின்றனர். சக பெண் தொழிலாளிகளும் ‘உன்னாலை எங்களுக்குத்தான் பிரச்சினை’ என்று ஜோஸியை விலத்தி வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் சக தொழிலாளி மிக மூர்க்கமாய்த் தாக்க, எதுவும் செய்யவியலாத நிலையில் வேலையை விட்டு ஜோஸி விலகுகின்றார்.

ஜோஸி வேலை செய்யும் சுரங்கத்தில்தான் ஜோசியின் தகப்பனார் வேலை செய்தாலும் ‘பெண்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யக்கூடாது’ என்று அதிக ஆண்கள் நம்புவதைப்போல நினைக்கும் ஒரு ஆணாய் அந்தத் தகப்பனும் இருப்பதால், தனது மகள் அங்கே வேலை செய்வதால் தனது ‘கெளரவம்’ பாதிக்கப்படுகின்றது என்ற கோபத்தில் ஜோஸியுடன் பேசுவவதை நிறுத்திக் கொள்கின்றார். அதைவிட தனது மகள் பதின்மங்களிலேயேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, அதற்கு யார் தகப்பன் என்று கேட்டபோது, தெரியாது என்று கூறிய பழைய கோபமும் தகப்பன் - மகள் உறவு உடைந்துபோனதற்கு இன்னொரு காரணமாய் இருக்கிறது.

தான் வேலைக்குப் போவதை நிறுத்தினாலும் ஜோஸி தளர்ந்துவிடவில்லை. நிலக்கரிச் சுரங்ககத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக வழக்குப் போட ஒரு வழக்கறிஞரை நாடுகின்றார். வழக்கு தங்களுக்குப் பாதகமாய்ப் போகின்றது என்று அறிகின்றபோது எதிர்த்தரப்பு ஜோசியின் தனிமனித ஒழுக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றது. ஜோஸியின் இரண்டு பிள்ளைகளில், முதல் மகனுக்கு யார் தந்தை? என்று கேள்வி கேட்கின்றார்கள். ஜோஸி அத்ற்குப் பதிலளிக்கத் தயங்க, அவருக்கு பல sexual partners இருந்திருக்கின்றார்கள் என்று நிரூபணமாகின்றது, அவ்வாறே நிலக்கரிச் சுரங்கத்திலும் நடந்துகொண்டு பாலிய்ல வன்முறை நடப்பதாய் பொய்யான குற்றச்சாட்டை தங்கள் மீது சுமத்துகின்றார்கள் என்று நிலக்கரிச் சுரங்க நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகின்றது. இறுதியில் அந்த உண்மையை ஜோஸி உடைக்கின்றார். தனது பதின்ம வயதில் தனது ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்புணரப்பட்டு, ஆனால் அந்தக் கொடூரத்துக்காய் தனது வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல வளர்ந்த கருவை அழிக்க மனமில்லாதால் குழந்தையாய்ப் பெற்றுக்கொண்டேன் என்கின்றார். ஆனால் எதிர்த்தரப்பு இந்த வல்லுறவு நடந்துபோது சாட்சியாய் இருந்த ஜோஸியின் பாடசாலை ஆண் நண்பனையும் ‘ஜோஸி விரும்பித்தான்’ பாலியல் உறவு வைத்துக்கொண்டார்’ என்று கூறவைத்து வழக்கை திசைமாற்றுகின்றது. இதுவரை காலமும் வேறொரு காரணத்தைக் கூறி வளர்க்கப்பட்ட ஜோஸியின் மகனும், she is a liar, she is a whore… என்று தாயைக் குற்றஞ்சாட்டி விலகிப்போக ஜோஸி உடைந்துபோகின்றார். மேலும் நகரும் இத்திரைப்படம், எப்படி இந்த வழக்கு முடிந்தது என்பதையும், ஜோஸியின் தகப்பன் - மகள் உறவும் ஜோஸி- மகன் உறவும் என்னாவாயிற்று என்பதையும் இயல்பாய் காட்சிப்படுத்துகின்றது.

Charlize Theron எனக்குப் பிடித்த கொலிவூட் நடிகைகளில் ஒருவர். Monster படம் பார்த்தபோதே ‘பெண்களின் அழகு’ என்று நமக்குப் போதிக்கப்ப்ட்ட விடயங்களை உதறித் தள்ளிவிட்டு அந்தக் க்தாபாத்திரமாய் -முக்கியமாய் ஒரு கொலிவூட் நடிகை- மாறியிருந்தது வியப்பாயிருந்தது.. இத்திரைப்படத்திலும் பாத்திரத்துக்கேற்ற இயல்பான அழகையும் நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறான் படங்களில் தேர்ந்தெடுப்பதற்கும் நடிப்பதற்கும் தனி துணிச்சல் வேண்டும் என்றுதான் நினைக்கின்றேன். (இப்படியே நடித்துக்கொண்டிருந்தால் இவர் ‘ஒருமாதிரியான’ ஆள் என்று கொலிவூட்டில் ஓரங்கட்டியும்விடவும் கூடிய அபாயமும் உண்டு என்பதால்).

இந்தப்படத்தில் காட்டப்படும் வழக்கு முடிந்தபின்னரே முதன்முதலாய் அமெரிக்காவில் (1984ல்) sexual harassment policy என்ற சட்டம் (நிலக்கரிச் சுரங்கங்களில்) வேலை செய்யும் பெண்களுக்காய் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது முக்கியமானது. இன்று நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமில்லாது, பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்கூட கூட, நிஜத்தில் இதைச் சாதித்துக்காட்டிய அந்தப்பெண்ணை நினைவுகூரத்தான் செய்வார்கள். A long journey begins with a single step என்பதற்கு இணங்க சின்னக் காலடியை அந்தப் பெண் எடுத்து வைத்திருக்கின்றார், நீண்ட நெடும்பயணம் பெண்களுக்காய் காத்திருக்கின்றது அதன் அழகோடும், அசிங்கங்களோடும் குரூரங்களோடும்.

(Friday, March 10th, 2006 at 11:34 am )

Magic Seeds by V.S.Naipaul

Tuesday, October 19, 2010

-நாவல் பற்றிய சில குறிப்புகள்-
(2006ல் எழுதியது, சேகரத்திற்காய்...)

(1)
மத்திய வயதிலிருக்கும் விலி சந்திரனின் (Willie Chandran) வாழ்க்கையின் ஒரு பகுதியை இந்நாவல் கூறுகின்றது. இந்தியாவில் பிறந்து படிப்பின் நிமித்தம் இங்கிலாந்து சென்று, அங்கே போர்த்துக்கேய‌ப் பின்புலமுள்ள ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்து, பதினெட்டு வருடங்கள் ஆபிரிக்காக்கண்டத்தில் வசித்த விலி சந்திரன், உரிய அனுமதியின்றி ஜேர்மனியிலுள்ள தனது சகோதரி சரோஜினியுடன் தங்கி நிற்பதுடன் நாவல் ஆரம்பிக்கின்றது. சரோஜினி மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் திரைப்பட முயற்சிகளில் ஈடுபாடுடையவர்.அவ்வாறான செயற்பாடுகளால் பல (இடதுசாரி) தலைமறைவு இயக்கங்களுடன் நேரடித்தொடர்புகளும் உடையவர்.

 வாழ்க்கையின் பெரும் பகுதியை நோக்கமில்லாது கழித்து mid-life crisisல் அவதிப்படும் சந்திரனை, இந்தியாவுக்குச் சென்று அங்கே ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடும் ஒரு இயக்கத்துடன் இணைந்து செய்ற்பட சரோஜினி ஆலோசனை கூறுகின்றார். சந்திரனுக்கு தனிப்பட்ட ரீதியாக எந்த அடக்குமுறைக்கும் பாதிக்கப்படாது விட்டாலும் ஒருவித ஆர்வத்த்தாலும், வாழ்க்கையின் வெறுமையாலும் இந்தியாவுக்குச் சென்று ஒரு இயக்கத்துடன் இணைகின்றார்.

சந்திரன் இந்தியா சென்று இயக்கமொன்றில் சேர்கின்றபோது, சரோஜினி வழிகாட்டிய இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டு இருக்க, சந்திரன் பிரிந்த இரு குழுக்களில் ஒன்றில் இணைகிறார். ஆனால் அது இவர் நினைத்த தலைமையின் கீழ் இயங்கிய (கண்டபலியின் கொள்கைகளுக்கு) நேர்மாறாக இருப்பதைக் கண்டு சலித்தாலும் வேறு வழியில்லாது அவர்களுடன் இணைந்து போராடுகின்றார். ஆரம்பத்தில்- பொலிஸ் பதிவுகள்- எதுவுமில்லாததால் ஒரு தகவலாளியாக இயக்கத்துக்குச் செயற்படுகின்றார். வேறு இரகசிய இடங்களிலிருந்து வரும் ஆயுதங்களை இயக்கத்தின் கரங்களுக்கு மாற்றவும், நிதியைச் சேகரிக்கவும் இன்னொரு போராளியுடன் நகரத்தில் சில வருடங்களைக் கழிக்கின்றார். பிறகு பொலிஸ் சந்திரனின் நண்பரைக் கைதுசெய்து, சந்திரனுக்கும் வலைவிரிக்க, நகரை விட்டு நீங்கி, இயக்கத்தின் தலைமை இருந்த காட்டுக்குள் இருந்து செயற்படத் தொடங்குகின்றார். இவர் சார்ந்த இயக்கத்தில் இருப்பவர்கள் அனேகர் இவரைப் போல மத்திய வயதில் இருப்பவர்களாகவும்- சிலர் இயக்கத்தில் 30,40 வருடங்கள் இருப்பவர்களாயும்- என்றோ ஒரு நாள் தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் புரட்சி நிகழ்ந்துவிடும் என்ற கனவை இறுகப்பற்றிப் பிடித்தவர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு உயர் சாதிக்காரர்கள் இயக்கத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களாகவும், தீர்மானங்களை எடுப்பவர்களாய் இருப்பதுவும் சந்திரனுக்கு ஆச்சரியமளிக்கிறது.

நகரங்களுக்கும் தங்கள் செயற்பாடுகளை விரிவாக்கவேண்டும் என்று விரும்பிய இயக்கத்தின் தீர்மானம், அரசு, பொலிஸ் போன்றவற்றின் கண்காணிப்பால் மாற்றமடைகிறது. தாங்கள் தங்கியிருக்கும் காடுகளை அண்டிய கிராமஙகளை முதலில் மீட்டெடுத்து அங்கிருக்கும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு நாடு முழுதும் புரட்சியை விரிவாக்க திட்டத்தை மாற்றி அமைக்கின்றனர்.

இயக்கம் பண்ணையாட்களிடம் இருந்து நிலங்களை மீட்டெடுத்து ஒடுக்கப்பட்டவர்களுக்காய் கொடுத்தாலும், அவர்கள் காலம் காலமாய் பழக்கப்பட்ட பழக்கத்திலிருந்து மாறமுடியாது, 'இது பண்ணையாட்களின் நிலம் எங்களால் பயிரிடமுடியாது' என்று ஒவ்வொருமுறையும் கூறிக்கொள்கின்றனர். இவர்களை, ஆயுதங்களை வைத்து மிரட்டினால்தான் மாறுவார்கள் என்றும், பொலிஸை சுட்டுக்கொன்றால்தான் இயக்கம் என்ற ஒன்று இருக்கிறது என்று நமபுவார்கள் என்றும் சந்திரன் தனக்குள் அலுத்துக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் சந்திரன் இயக்கத்தை விட்டு இன்னொரு தோழருடன் தப்பியோடி பொலிஸில் சரணடைகின்றார். தனக்கு சொற்ப சிறைத்தண்டனையே கிடைக்கும் என்று நம்பிய சந்திரனுக்கு பத்து வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட சந்திரன் சோர்வும் வெறுமையும் அடைகிறார். இதற்கிடையில் இவரது சகோதரியும் தங்கள் தகப்பன் மரணத்தின் விளிம்பில் இருப்பதைக்கண்டு இந்தியாவுக்கு வருகின்றார். பிறகு தந்தையாரும் இறந்துவிட, அவர் நடத்திய ஆச்சிரமத்தை நடத்தப்போவதாயும் இனி இந்தியாவில் தங்கப்போவதாயும் சிறையிலிருக்கும் சந்திரனுக்கு சரோஜினி கூறுகின்றார்.

இலண்டனில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சந்திரன் வெளியிட்ட ஒரு புத்தகத்தின் பதிப்பாளரின் உதவியால், குறைந்த கால சிறைத்தண்டனையுடன் சந்திரன் விடுதலையாகின்றார். பிறகு தனது கடந்தகால கசப்பான நினைவுகளைத் தாங்கிக்கொண்டு இங்கிலாந்திலிருக்கும் நண்பரொருவரின் வீட்டில் சென்று தங்குகின்றார். அங்கே அந்த நண்பருடன் நடைபெறும் நீண்ட உரையாடல்களும், வாழ்க்கை என்பது என்ன என்ற மாதிரியான கேள்விகளளுககு விடைகளைத் தேடுவதாயும், அந்த நண்பரின் மனைவியுடன்  உறவும் புதியவேலையும், முதலாளித்துவ உலகைப் புரிந்துகொள்வதுமாயும் நாவல் நீள்கிறது.

(2)
ஆரம்பத்தில் சுவாரசியமாகப் போகும் நாவல் பின்பகுதியில் மிக மெதுவாக நகர்ந்து, தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தை குறைக்கிறது. கவனமாக உற்றுப்பார்த்தால், வாசகர்களை ஆரம்பத்தில் எந்த அபிப்பிராயங்களை உருவாக்காமல் நாவலுக்குள் இழுத்துவிட்டு, அத்தியாங்கள் நீள நீள தனது வலதுசாரிக் கொள்கைகளை நாவலின் ஆசிரியர் திணிக்கத் தொடங்குவது கண்கூடு. நாவலின் ஆரம்ப அத்தியாயத்தில் ஜேர்மனியில் இருக்கும் தமிழர்கள் வ்ருகின்றார்கள். சந்திரனும் சரோஜினியும் மூன்றாம் உலகநாடுகளின் (தேசிய) போராட்டங்களைப் பற்றி உரையாடும்போது, ரோசாப்பூக்களை விற்கும் தமிழனைப் பார்த்து இந்த ரோசாப்பபூக்கள் எல்லாம் இவர்களின் நாட்டில் ஆயுதங்களாய் மாறும் என்ற மாதிரி சரோஜினி கூறினாலும், விமர்சனங்களை மீறி அவர்கள் போராடுவதற்கான நியாயங்களும் காரணங்களும் இருக்கின்றன என்கிறார். நாவலின் நீட்சியில் நாவலாசிரியர் தனது சொந்தக்கருத்துக்களை கதாபாத்திரங்களில் திணித்தாலும், சரோஜினியை ஒரு இடதுசாரி நம்பிக்கை உள்ள ஒருவராக அடையாளப்படுத்துவதால், தமிழர் போராட்டம் அரையும் குறையுமான மேற்கத்தைய புரிதல்களிலிருந்து தப்பிவிடுகின்றது.

வாழ்க்கையின் அரைவாசிக்கும் மேற்பட்ட காலத்தை வெளிநாடுகளில் வசித்த ஒருவர், முறையான காரணங்கள் இன்றி இந்தியாவுக்கு போராடப்போவதும், எந்தக் கேள்வியும் இல்லாது அவரை இயக்கம் ஏற்றுக்கொள்வதும், ஊர்/நகர மக்களும் வித்தியாசம் காட்டாது இயல்பாய் பழகுவதும் நாவலில் மட்டுமே நடக்ககூடிய விடயம். நாவலாசிரியர் ஒரு தெளிவான காரணத்தைக் காட்டாது சந்திரனின் பாத்திரத்தை -ஏதோ ஷொப்பிங்கு போவதுபோல- போராடவும் போவதாய் காட்சிப்படுத்தும்போதே நாவலின் சரிவும் ஆரம்பித்துவிடுகின்றது. எப்படி தங்கள் கொள்கைகள், கருத்துக்களை பரப்ப ஒரு கதைக்களன் தேவைப்படுகின்றதோ, அப்படியே தனது நம்பிக்கைளை விதைக்க நைபாலும், சந்திரன் என்ற முக்கிய பாத்திரத்தையும், இந்தியத் துணைக்கண்டத்தையும் பயன்படுத்திக்கொள்கிறார்.
இங்கிலாந்தில் வாழும் வாழ்வுதான் யதார்த்தமான வாழ்வு எனவும், தத்துவங்களால், புரட்சிகளால் ஆகப்போவதில்லை ஒன்றுமில்லையெனவும் இறுதியில் நாவலை முடித்துவிடுகின்றார் நாவலாசிரியர். தனது தந்தை ஏழை மக்களுக்காய் நடத்திக்கொண்டிருந்த ஆச்சிரமத்தை தன்னால் தொடர்ந்து நடத்த முடியாது இருக்கின்றதென சரோஜினியும் முடிவில் நம்பிக்கை இழந்துவிடுகின்றார். ஆரம்பத்தில் கட்டியமைக்கப்படுகின்ற அனைத்து நம்பிக்கைகளும் இறுதியில் தகர்ந்துவிடுவதாய்க் காட்டுவது தனி மனிதர்களின் வீழ்ச்சி என்பதைவிட, மூன்றாம் உல நாடுகளில் எதையும் செய்தல் சாத்தியமில்லை என்ற தொனிதான் எல்லாவற்றையும் மீறி ஒலிக்கிறது. ரின்னாட்டில் (Trindnad) பிறந்து இங்கிலாந்தில் பெரும்பகுதியைக் கழித்து, பிரிட்டிஷ் இராணியில் செல்லப்பிள்ளை பரிசான நைற் (Knight) விருதைப் பெற்ற ஒருவரிடமிருந்து மூன்றாம் உலப்பிரச்சினைகளையும் அங்குள்ள மக்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதுகூட ஒருவகையில் தவறுதானோ.

(Thursday, March 16th, 2006 at 10:03 am)

க‌ம்ப‌ராமாய‌ண‌ம் ப‌டித்த‌ க‌தை அல்ல‌து புல‌ம்பெய‌ர் Fusion க‌தை

Wednesday, August 18, 2010

ச‌ம‌ர்ப்ப‌ண‌ம்:

'விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.'
என‌க் க‌ம்ப‌ன் க‌ண்ட‌ பெண்டிர்க்கு...!

முன்னீடு
சென்ற‌ மாத‌ம் 'ம‌ழைக்குள் காடு'  நிக‌ழ்வில் க‌விதைக‌ள் ப‌ற்றிய‌ ஓர் உரையாட‌ல் ந‌டைபெற்றிருந்த‌து. என‌க்குப் பிரிய‌மான‌  செல்வ‌ம் புதிதாய்க் கவிதை எழுத‌ வ‌ருகின்ற‌வ‌ர்க‌ள் க‌ட்டாய‌ம் க‌ம்ப‌ இராமாய‌ண‌த்தை வாசிக்க‌வேண்டும் என்று கூறியிருந்தார். க‌ம்ப‌ராமாய‌ண‌த்தில் இருக்கும் ச‌னாத‌ன‌க் க‌ருத்துக்க‌ளை ம‌றுத்துக்கொண்டே அதேச‌ம‌ய‌ம் க‌ம்ப‌னில் ஊற்றாய்ப் பெருகும் அழ‌குத் த‌மிழுக்காய்த்தான் செல்வ‌ம் அவ்வாறு கூறியிருப்பார் என‌ நினைக்கின்றேன். ம‌ர‌புக‌ளையும் தொன்ம‌ங்க‌ளையும் க‌ற்றுத்தேர்வ‌தால் நாம் எதையாவ‌து அடைய‌க்கூடுமே த‌விர‌ இழ‌க்க‌ப்போவ‌து எதுவுமில்லைத்தான். எனினும் என‌க்கு இந்த‌ 'வ‌ர‌லாற்றை'க் க‌ற்றுக்கொள்வ‌தால் ந‌ம‌க்கு ஊட்ட‌ப்ப‌டும் ப‌ழ‌ம்பெருமைக‌ளும், வீர‌மும், தியாக‌மும் இன்ன‌மின்ன‌மும் அநேக‌மாய் எம்மை எதிர்கால‌த்தில் வெறியூட்ட‌ப் ப‌ய‌ன்ப‌டுப‌வையே என்ற‌ எண்ண‌மேயுண்டு.

செல்வ‌ம் என் பிரிய‌த்துக்குரிய‌வ‌ர் என்று கூறிய‌தற்குக் கார‌ண‌ம், அவ‌ர்மீது எவ்வ‌ள‌வு விம‌ர்ச‌ன‌ம் எழுத்திலும் நேரிலும் வைத்தால்கூட‌ அதே நேச‌த்துட‌ன் தொட‌ர்ந்து ப‌ழ‌க்கூடிய‌வ‌ர் என்ப‌து ம‌ட்டுமின்றி க‌தைப்ப‌த‌ற்கான‌ வெளியைத் த‌ந்து என‌து க‌ருத்துக்க‌ளைச் செவிம‌டுப்ப‌வ‌ர். ஆனால் இந்த‌ப் பிரிய‌ம் என்ப‌து உண்மையில் எங்க‌ளின் எதிர்ம‌றைக‌ளினூடே உருவான‌து என்றுதான் கூற‌வேண்டும். உதார‌ண‌த்திற்கு செல்வ‌த்திற்கு ஜெய‌மோக‌னைச் சுத்த‌மாக‌ப் பிடிக்காது என‌க்கு ஜெமோவை பிற‌ எந்த‌ ப‌டைப்பாளியை விட‌வும் மிக‌வும் பிடிக்கும். எந்த‌ச் ச‌பையிலும் ஜெமோவை நான் ஒருபோதும் விட்டுக் கொடுப்ப‌தில்லை. செல்வ‌த்திற்கு ஜெமோவில் இருக்கும் எரிச்ச‌லினால்தான், அவ‌ர் த‌ன் வீட்டில் குடிபெய‌ர்ந்த‌ ஒரு பெண்ம‌ணிக்கு 'விஷ்ணுபுர‌ம்' வாசிக்க‌க் கொடுத்திருக்கின்றார். அடுத்த‌ ஓரிரு வார‌ங்க‌ளில் அப்பெண்ம‌ணி பேய‌றைந்த‌மாதிரி வீட்டையே காலி செய்து போயிருக்கின்றார். இப்ப‌டியொரு 'க‌தை' ந‌ட‌ந்ததாக‌ க‌ன‌டாவில் இருப்ப‌வ‌ர்க‌ள் பேசிக்கொள்கின்றார்க‌ள் என‌ செல்வ‌மே 'கூர்' நேர்காண‌லில் கூறியிருக்கிறார். இத‌ன் மூல‌ம் செல்வ‌ம், 'உங்க‌ளுக்குப் பிடிக்காத‌வ‌ர்க‌ள் எவ‌ரேனும் வீட்டில் இருந்தால் 'விஷ்ணுபுரத்தை'க் கொடுத்து எளிதாக‌ வெளியேற்றுங்க‌ள்' என்ப‌தை ம‌றைமுக‌மாய்ச் சொல்ல‌வ‌ருகின்றார் என்ப‌தை -ஜெமோவின் தீவிர‌ வாச‌க‌னாக- என்னால் புரிந்துகொள்ள‌ முடிகிறது. அத‌னால்தான் சொல்கின்றேன் செல்வ‌த்துட‌னான என‌து ந‌ட்பும் பிரிய‌மும் முர‌ண்க‌ளின் அடுக்குக‌ளில் க‌ட்ட‌ப்ப‌டுப‌வை.

க‌ம்ப‌ராமாய‌ண‌த்தைப் செல்வ‌ம் ப‌டிக்க‌ச் சொன்ன‌து இது முத‌ற் த‌ட‌வையும‌ல்ல‌. என‌து தொகுப்பான‌ 'க‌ழுதைக‌ளின் குறிப்புக‌ளுக்கான‌' விம‌ர்ச‌ன‌க்கூட்ட‌மொன்றிலும்  இதையே அவ‌ர் கூறியுமிருந்தார். ஆக‌வே எங்க‌ள் மீதிருக்கும் பிரிய‌த்தில்தான் செல்வ‌ம் வ‌லியுறுத்துகிறார் என்ப‌தில் என‌க்கு எவ்வித‌ச் ச‌ந்தேக‌முமில்லை. ஆக‌வே நான் இப்போது க‌ம்ப‌ராமாய‌ண‌த்தைப் ப‌ற்றி ஒரு க‌தை சொல்ல‌ப்போகின்றேன்.

உள்ளீடு
1.
'தேரிடைக் கொண்ட அல்குல், தெங்கிடைக் கொண்ட கொங்கை,
ஆரிடைச் சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள்,
வாரிடைத் தனம் மீது ஆட மூழ்கினாள்; வதனம், மை தீர்
நீரிடைத் தோன்றும் திங்கள் நிழல் என, பொலிந்தது அன்றே! '
(க‌ம்ப‌ராமாய‌ண‌ம்; பால‌காண்ட‌ம்)

த‌மிழின் தொன்ம‌ங்க‌ளையும் ம‌ர‌புக‌ளையும் அழ‌காய்த் த‌ன் க‌விதைக‌ளில் பொருத்திய‌வ‌ர் சு.வில்வ‌ர‌த்தின‌ம். 'சொற்றுணை வேதிய‌ன்' என்ற‌ தேவார‌த்தை ம‌ன‌ப்பாட‌ம் செய்வ‌தே வேப்ப‌ங்காயாக‌ இருந்த‌வ‌னுக்கு காற்றுவெளிக்கிராம‌த்தில் 'சொற்றுணை வேதிய‌ன்' கல‌ந்தொரு க‌விதையை சு.வி எழுதிய‌போது விய‌ப்பில் புருவ‌ம் உய‌ர்ந்து வில்லாய் வ‌ளைந்த‌து (ம‌ன்னிக்க‌: க‌ம்ப‌னை வாசித்த‌ பாதிப்பு).  அதே போன்று நாட்டுப்புற‌ப்பாட‌ல்களிலும் மர‌புக்க‌விதைக‌ளிலும் இருந்த‌ ப‌ரிட்சய‌ம் வ‌.ஜ‌.ச‌.ஜெய‌பால‌னின் க‌விதைக‌ளில் ச‌ந்த‌த்தையும் இல‌ய‌த்தையும் நேர்த்தியாக‌க் கொண்ர்ந்திருந்த‌ன‌. ஆக‌வே ப‌ழ‌ம் இல‌க்கிய‌ங்க‌ளைக் க‌ற்றுக்கொள்வ‌தால் மொழிவ‌ள‌ம் விரியும் என்ப‌தில் என‌க்கும் ச‌ந்தேக‌ம் எதுவும் இருக்க‌வில்லை.

நான் க‌ம்ப‌னையும் க‌ம்ப‌ராமாய‌ண‌த்தையும் முத‌ன்முத‌லில் அறிந்துகொண்ட‌தென்றால் அள‌வெட்டிக் கும்பிளாவ‌ளைப் பிள்ளையார் கோயிலில்தான். அனுமான‌ வ‌ர‌வேண்டிய‌ இட‌த்தில் இதென்ன‌ பிள்ளையார் குறுக்கே புகுந்துவிட்டார் என்று எண்ணுகின்றீர்க‌ளா? பொறுமை! பொறுமை! வியாச‌ர் ம‌காபார‌த‌ம் சொல்ல‌ச் சொல்ல‌ பிள்ளையார்தான் வியாச‌ரின் வேக‌த்திற்கு ஈடுகொடுத்து எழுதினார் என்ப‌து ஜ‌தீக‌ம். அதுவும் ஒருக‌ட்ட‌த்தில் எழுத்தாணி முறிய‌ வியாச‌ர் பார‌த‌ம் பாடுவ‌தை ஒருக‌ண‌ம்கூட நிறுத்த‌க்கூடாது என்ப‌த‌ற்காய் த‌ன் த‌ந்த‌த்தையே முறித்து எழுதிய‌ அற்புத‌ ம‌னித‌ர‌ல்ல‌வா பிள்ளையார்? மேலும் நாங்க‌ள் போரின் நிமித்த‌ம் இட‌ம்பெய‌ர்ந்திருந்த‌ அள‌வெட்டியில் அம்ம‌ன்கோயில்க‌ளுக்கும் பிள்ளையார் கோயில்க‌ளுக்கும் ப‌ஞ்ச‌மில்லாது இருந்த‌து. எனினும் என‌க்குப் பிடித்த‌து பெருமாக்க‌ட‌வைப் பிள்ளையார் கோயில்தான். வ‌ய‌ல்க‌ளுக்குள் ந‌டுவில் இருக்கும் அத‌ன் அமைதியும் செழுமையும் என்றுமே ம‌ற‌க்க‌முடியாத‌து.  மேலும் ஊரில் வீதிக்கு ம‌றுபுற‌மாய் விரிந்திருந்த‌ பெரும்வ‌ய‌லை  விட்டுவ‌ந்திருந்த‌ என‌க்கு, பெருமாக்க‌ட‌வை பிள்ளையார் கோயில் எப்போதும் இழ‌ந்துவ‌ந்த‌ ஊரை நினைவுப‌டுத்திக் கொண்டிருந்த‌து. 80க‌ளில் தொட‌ங்கிய‌ இய‌க்க‌ங்க‌ளின் உள் முர‌ண்பாடுக‌ளில் சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்ட‌ இறைகுமார‌னும் உமைகுமார‌னும் இங்கேதான் உட‌ல‌மாகப் போட‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர்.  க‌ம்ப இராமாய‌ண‌ம் ப‌ற்றிச் சொல்ல‌ வ‌ந்து பிள்ளையார் கோயில்க‌ளைப் ப‌ற்றிக் க‌தைக்கிறேன் என‌ நீங்க‌ள் முணுமுணுப்ப‌து கேட்கிற‌து. நீங்க‌ள் எப்போதாவ‌து சொன்ன‌ இட‌த்திற்கோ சொன்ன‌ விட‌ய‌த்தையோ குறித்த‌ நேர‌த்தில் செய்து முடித்திருக்கின்றீர்க‌ளா? இல்லைத்தானே!

'பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்தன் படர் அல்குல்
ஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு ஆம் என்று, அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சி, கொம்பின் ஒதுங்கி, துணர் ஈன்ற
சாகைத் தம் கை, கண்கள் புதைத்தே தளர்வாளும்; '
(க‌ம்ப‌ராமாய‌ண‌ம்; பால‌காண்ட‌ம்)

ச‌ரி க‌ம்ப‌ராமாய‌ண‌த்திற்கு மீண்டும் வ‌ருவோம். கும்பிளாவ‌ளைப் பிள்ளையார் கோயில் திருவிழாக்கால‌ங்க‌ளில் க‌ம்ப‌ராமாய‌ண‌க் க‌தாட்சேப‌ம் ந‌டைபெறும். ஒவ்வொருநாளும் ஒரு க‌தையென‌ 12 நாட்க‌ளும் இராம‌ன் க‌தை சொல்ல‌ப்ப‌டும். இந்த‌க் க‌தையை க‌ம்ப‌வாரிதியோ புழுதியோதான் சொல்லிக்கொண்டிருப்பார். ம‌னுச‌னுக்கு ந‌ல்ல‌ குர‌ல்தான். பேச்சால் கேட்ப‌வ‌ர்க‌ளைக் க‌ட்டிப்போடும் வித்தை தெரிந்த‌வ‌ர்க‌ள் ஈழ‌த்தில் சொற்ப‌ப் பேர்தான். பின்னாளில் சுன்னாக‌த்தில் இட‌ம்பெய‌ர்ந்து இருந்த‌போது ஆறு.திருமுருக‌ன் 'திருமுருகாற்றுப்ப‌டை'(?)யைச் செப்பி, தான் 'புழுதியை அட‌க்க‌ வ‌ந்த‌ தூற‌ல்' என‌ நிரூபிக்க‌ முய‌ன்றிருக்கிறார்.  ஆனால் நான் கும்பிளாவ‌ளைப் பிள்ளையார் கோயிலுக்குப் போன‌து க‌ம்ப‌ராமாய‌ண‌ம் கேட்ப‌த‌ற்காய் அல்ல‌. ஒவ்வொரு இர‌வும் புழுதியும் -ம‌ன்னிக்க‌- வாரிதியும் புய‌லும் பூசையும் ஓய்ந்த‌பின், இறுதியில் நிக‌ழும் பாட்டுக் க‌ச்சேரிதான் என் விருப்புக்குரிய‌ தேர்வு.

க‌ண்ண‌ன், சாந்த‌ன் என்று அன்றைய‌கால‌த்தில் புக‌ழின் உச்சியிலிருந்த‌வ‌ர்க‌ள் இசைக்குழுவோடு வ‌ந்து பாடுவார்க‌ள். நான் பாட்டுக்க‌ளைக் கேட்ட‌ கால‌த்தில் சாந்த‌ன் ஏதோ பிர‌ச்சினையில் மாட்டுப்ப‌ட்டு புலிக‌ளின் 'ப‌ங்க‌ருக்குள்' இருந்து, பாடுவ‌த‌ற்காய் ம‌ட்டும் வெளியே வ‌ர‌ அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ கால‌மாய் இருந்த‌து. என‌வே உயிரைக்கொடுத்து உண‌ர்ச்சியாக‌ப் பாடியேனும் வெளியே வ‌ந்துவிடும் நிர்ப்ப‌ந்த‌ம் அவ‌ருக்கு இருந்திருக்க‌லாம். இவ‌ர்க‌ளின் க‌ச்சேரியைக் கேட்ப‌து மிக‌வும் பிடித்த‌து என்றாலும் க‌ச்சேரி தொட‌ங்க‌ ந‌ள்ளிர‌வு ஆகிவிடும். அத‌ற்குள் நான் நித்திரையாகிவிடுவேன். ஆனாலும் 'இந்த‌ ம‌ண் எங்க‌ளின் சொந்த‌ம‌ண், இத‌ன் எல்லையை மீறி யார் வ‌ந்த‌வ‌ன்?' என்றோ 'ந‌ட‌ரா ராசா ம‌யிலைக் காளை பொழுது விடிய‌ப் போகிற‌து' என்றோ பாடும்போதோ நான் விழித்தெழும்பிவிடுவேன். (த‌மிழ்) 'உண‌ர்வுள்ள‌ த‌மிழ‌ன் ஒருபோதும் உற‌ங்க‌மாட்டான்' என்ப‌த‌ற்கு நான் ந‌ல்ல‌தொரு உதார‌ண‌மாக‌ இருந்தேன். நான் திடுக்கிட்டு விழித்தெழும்போது முக்கால்வாசி ச‌ன‌ம் நித்திரா தேவியினதோ/தேவன‌தோ க‌த‌க‌த‌ப்பான‌ அணைப்பிலிருப்பார்க‌ள். எனினும் ம‌ன்ம‌த‌னின் அருட்ட‌லில் இள‌ம் அண‌ங்குக‌ளும் அன‌க‌ர்க‌ளும் (ந‌ன்றி க‌ம்ப‌ன்) விழித்த‌ப‌டி த‌த்த‌ம் காத‌ற்காரிய‌த்தை விழிய‌சைவாலும் ந‌ளின‌ச்சிரிப்பாலும் தீவிர‌மாக‌ச் செய்துகொண்டிருப்பார்க‌ள். இராம‌னைப் பார்த்த‌ நொடியிலே காத‌லெனும் பெருந்தீயில் ஜான‌கியே விழுந்து துடித்த‌போது, இச்சின்ன‌ஞ்சிறு மானிட‌ப்ப‌த‌ர்க‌ள் என்ன‌தான் செய்யும்? ஆனால் இராம‌னை முத‌ற்பார்வையிலே க‌ண்டு காத‌லில் வீழும் சீதையின் நிலையை க‌ம‌ப‌ன் வ‌ர்ணித்த‌தைப் பார்க்கும்போது சீதையை இனியெவ‌ராலும் காப்பாற்ற‌முடியாது என‌ Intensive Care Unitல் போட‌ப்ப‌ட்டிருந்த‌தை மாதிரித்தான் உண‌ர்ந்தேன். ந‌ல்ல‌வேளை ந‌ம‌க்கு இராம‌ன் என்னும் ஒருக‌ட‌வுள் ம‌ட்டும் மானிட‌ராய்ப் பிற‌க்க‌ப் ப‌ணிக்க‌ப்ப‌ட்டிருந்திருக்கின்றார். இந்து ச‌ம‌ய‌த்திலுள்ள‌ எல்லாக்க‌ட‌வுளும் இப்ப‌டி வ‌ந்திருந்தால் எத்த‌னை பெண்க‌ள் காத‌லின் ப‌ச‌லையில் த‌ற்கொலையை நாடியிருப்பார்க‌ள்?

செம்மாந்த தெங்கின் இளநீரை, ஓர் செம்மல் நோக்கி,
'அம்மா! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்' என்ன,
'எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன?' என்று, ஒர் ஏழை,
விம்மா, வெதும்பா, வெயரா, முகம் வெய்துயிர்த்தாள்.
(க‌ம்ப‌ராமாய‌ண‌ம்; பால‌காண்ட‌ம்)

க‌ம்ப‌வாரிதியின் சொற்பிள‌ம்பின் வெம்மையிலிருந்து த‌ப்பிவிட்டேன் என்ற என் நிம்ம‌திப் பெருமூச்சை 9ம் வ‌குப்பில் நான் க‌ற்க‌வேண்டியிருந்த‌ த‌மிழ் இல‌க்கிய‌ம் விதி என்ற‌ பெய‌ரில் குறுக்கே ம‌றித்து நின்று எக்காளித்துச் சிரித்த‌து. க‌ம்ப‌ராமாய‌ணப் பாட‌ல்க‌ள் பாட‌த்திட்ட‌த்தில் சேர்க்க‌ப்ப‌ட்டிருந்த‌து. க‌ம‌ப‌னின் இராமாய‌ண‌மும் வான்மீகியின் இராமாய‌ண‌மும் எவ்விட‌ங்க‌ளில் மாறுப‌டுகின்ற‌து என்று ப‌டித்த‌தும் அன்றைய‌ கால‌ங்க‌ளில்தான். இப்போதும் க‌ம்ப‌னின் அவைய‌ட‌க்க‌ப் பாட‌ல்க‌ள் சில‌ நினைவில் வ‌ருகின்ற‌ன‌.'ஒரு ச‌முத்திர‌த்தை ந‌க்கிக் குடிக்க‌முடியுமென‌ பூனை நினைப்ப‌துபோல‌ நானும் வான்மீகியின் இராமாய‌ண‌த்தைப் பாட‌ப் புற‌ப்ப‌ட்டுவிட்டேன்' என‌வும் 'ம‌ர‌ங்கள் ஏழையும் த‌ன் அம்பால் துளைத்த‌வனின் பெருங்க‌தையை நொய்மையிலும் நொய்மையான‌ சொற்களால் சொல்ல‌ வ‌ந்தேன்' என‌வும், 'அன்பெனும் ம‌துவை அள‌வுக்க‌திக‌மாய்க் குடித்த‌வ‌ன் வான்மீகி எழுதிய‌ இராமாய‌ண‌த்தை த‌ன் மூக்கால் பாட‌ வ‌ந்திருக்கின்றேன்' என‌வும் க‌ம்ப‌ன் அவை அட‌க்க‌ம் பாடுவ‌து நினைவினிலுண்டு.

ச‌ர‌யு ந‌தியின் வ‌ள‌மையைப் பாடும் பாட‌ல்க‌ள் கூட‌ எங்க‌ள் பாட‌ப்புத்த‌க‌த்தில் இருந்திருக்கிற‌து.. கோச‌லை நாட்டையோ அயோத்தியையோ விப‌ரிக்கும்போது 'வாளை உள்ளிட்ட‌ ப‌ல‌வ‌கை மீனின‌ங்க‌ள் வ‌ள‌ர்ந்து நிற்கும் க‌முக‌ம் ம‌ர‌ங்க‌ளுக்கு மேலாய்த் தாவி விளையாடுகின்ற‌ன‌' என்று வ‌ரும்  இதைப் ப‌டிப்பித்த‌ எங்க‌ளின் த‌மிழ் வாத்தி இது அந்நாட்டின் செழுமையைச் சித்த‌ரிக்கின்ற‌து என‌த்தான் சொல்லித்த‌ந்தார். ஆனால் இப்போது யோசிக்கும்போது க‌முக‌ம் ம‌ர‌த்திற்கு மேலால் மீன்க‌ள் பாய்கின்ற‌ன‌ என்றால், சுனாமி போன்ற‌ இய‌ற்கையின் அழிவுக‌ள் நிக‌ழும்போது ம‌ட்டுமே ந‌ட‌க்க‌ச் சாத்திய‌முண்டு போல‌த் தெரிகிற‌து. ஓர் அன‌ர்த்த‌த்தை அழ‌கிய‌லாக்க‌ க‌ம்ப‌ன் போன்ற‌ க‌விஞ‌ர்க‌ளால் முடியும்,  'க‌விதைக்குப் பொய்ய‌ழ‌கு' என்று அவ‌ர்க‌ள் நியாய‌ப்ப‌டுத்த‌வும் கூடும். ஆனால் எங்க‌ளின் த‌மிழ் வாத்தி எங்க‌ளுக்கு அந்த‌ வ‌ய‌திலேயே பொய் சொல்ல‌க் க‌ற்றுத்த‌ந்தார் என்ப‌தைத்தான் என்னால் இன்ன‌மும் ஏற்றுக்கொள்ள‌ முடியாதிருக்கிற‌து.

இவ‌ற்றைக் கூட‌ ம‌ன்னிக்க‌லாம்; ஆனால் என்றைக்குமே ம‌ன்னிக்க‌முடியாத‌ ஒரு குற்ற‌த்தை எங்க‌ளுக்கு க‌ம்ப‌ராம‌ய‌ண‌த்தைக் க‌ற்றுத்த‌ந்த‌வ‌ர்க‌ள் இழைத்திருக்கின்றார்க‌ள் என்ப‌தைக் க‌ம்ப‌ ராமாய‌ண‌த்தைப் ப‌டித்த‌போதுதான் அறிய‌முடிந்த‌து. சின்ன‌ வ‌ய‌தில் என‌க்குத் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் 'ஆ...ஊ' என்று க‌த்திக்கொண்டு ச‌ண்டைபிடிக்கும் ப‌ட‌ங்க‌ள்தான் அதிக‌ம் பிடிக்கும். ஒரு ப‌ட‌த்தில் ச‌ண்டைக்காட்சிக‌ள் இல்லாவிட்டால் அது பார்ப்ப‌த‌ற்குரிய‌ ப‌ட‌மே அல்ல‌ என்ப‌துதான் என் அள‌வுகோலாக‌ இருந்த‌து. 'ராம்போ', 'கொம‌ண்டோ' போன்ற‌ ப‌ட‌ங்க‌ளைப் பார்த்துவிட்டு 'அட‌ இய‌க்க‌த்தில் நாலைந்து பேர் இப்ப‌டி இருந்தாற்கூட‌ப் போதும் நாங்க‌ள் விரைவில் த‌மிழீழ‌ம் அடைந்துவிட‌லாம்' என்றும் நினைத்துமிருக்கிறேன். ஆனால் 8ம் வ‌குப்பிற்கு வ‌ந்த‌பின் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளின் ச‌ண்டைக்காட்சிக‌ளை விட‌ பாட்டுக்காட்சிக‌ள் பிடிக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ன‌. அதுவ‌ரை 'அப்பாவி'யாய் ச‌ண்டைக்காட்சிக‌ளையும் நகைச்சுவைக்காட்சிக‌ளையும் பார்த்துக்கொண்டிருந்த‌ என்னை வ‌ய‌து மூத்த‌ ஒரு  ந‌ண்ப‌ரொருவ‌ன் 'உழைப்பாளி' ப‌ட‌ம் மூல‌ம் மாற்றிவிட்டான். ம‌ண்ணெண்ணெயில் மூசிமூசி ஜென‌ரேட்ட‌ர் இய‌ங்கிக்கொண்டிருக்க‌ எப்ப‌ க‌ர‌ண்ட் நிற்க‌ப்போகின்ற‌தோ என்ற‌ ப‌த‌ற்ற‌த்தில் ப‌ட‌ம் பார்த்துக்கொண்டிருந்த‌போதுதான் ந‌ண்ப‌ன் மெல்லிய‌ குர‌லில் சொன்னான் 'பாருடா இன்னும் கொஞ்ச‌ நேர‌த்தில் ரோஜா த‌ன்ரை முன்ப‌க்க‌த்தாலே ர‌ஜினியை முட்டுவா' என்று.  அத‌ற்குப் பிற‌கு எந்த‌ப் ப‌ட‌த்தில் எந்த‌ ச‌ண்டைக்காட்சி இருக்கும் என்ப‌தை நினைவுப‌டுத்துவ‌த‌ற்குப் ப‌திலாக‌ எந்த‌ப் பாட‌லில் எந்த‌ ந‌டிகை த‌ன் மார்ப‌க‌ங்க‌ளைக் குலுக்குவா என்ப‌துதான் நினைவில் நிற்க‌த்தொட‌ங்கிய‌து. ஆனால் இவ்வாறான‌ காட்சிக‌ளைப் பார்ப்ப‌து என்ப‌து அன்றைய‌கால‌த்தில் மிக‌வும் க‌டின‌மாக‌ இருந்த‌து. எங்க‌ளிட‌ம் ரீவியோ டெக்கோ(VCR) ஜென‌ரேட்ட‌ரோ இல்லாத‌து அல்ல‌ முக்கிய‌ கார‌ணம். ந‌ண்ப‌ர்க‌ளின் வீட்டில் ப‌ட‌ம் போட்டால் கூட‌ 'ம‌ண்ணெண்ணெய் விற்கின்ற‌ விலைக்கு ப‌ட‌ம் பார்ப்ப‌து ஒரு கேடா?' என்று ச‌ன‌ம் பேசும். மேலும் புலிக‌ள் த‌ணிக்கையைக் அறிமுக‌ப்ப‌டுத்தி, க‌ண்ணுக்குள் விள‌க்கெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு  'ஒருமாதிரி'யான‌ பாட‌ல்க‌ளை எல்லாம் க‌வ‌ன‌மாக‌க் க‌த்த‌ரித்தும் விடுவார்க‌ள்.

இந்த‌ அல்லாட‌ல்க‌ளுக்கு இடையில் எங்க‌ளுக்கு கிடைத்த‌ ஒரு செய்தி இன்னும் அச்ச‌மூட்ட‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து. சுண்டிக்குழிப்ப‌க்க‌மாய் பெண்கள் சில‌ர் ஒன்றாய்ச்சேர்ந்து 'த‌ணிக்கை' செய்யாத‌ ஒரு ப‌ட‌த்தைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றார்க‌ள். ப‌ட‌ம் திரையிட‌ப்ப‌ட்ட‌ வீட்டில் பெண்ணின் பெற்றோர் திரும‌ணாத்துக்கு எங்கையோ போயிருக்கின்றார்க‌ள். அந்த‌ ச‌ம‌ய‌த்தில் ஜென‌ரேட்ட‌ரோ டெக்கோ இடையில் நின்றுவிட பெற்றோர் வ‌ர‌முன்ன‌ர் டெக்கிற்குள் இருக்கும் க‌செட்டை எடுத்துவிட‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம். பெற்றோர் வ‌ந்துவிட்டால் இவ‌ர்க‌ளின் க‌ள்ளம் பிடிப‌ட்டுவிடும்.  யாரிட‌மாவ‌து உத‌வி கேட்டு கசெட்டை வெளியில் எடுத்தால் போதும் என்ற‌ அவ‌ச‌ர‌த்தில் ரோட்டில் சைக்கிளில் போன‌ பெடிய‌ன் ஒருவ‌னை ம‌றித்து டெக்கைக் க‌ழ‌ற்றி க‌ஸெட்டை எடுத்துத் த‌ரும்ப‌டிக் கேட்டிருக்கின்ற‌ன‌ர். பெடிய‌னும் எடுத்துக் கொடுத்திருக்கின்றான். ஆனால் அவ‌ன் ஓர் இய‌க்க‌ப்பெடிய‌ன். புலி மூளை உட‌னே வேலை செய்ய‌, பிற‌கென்ன‌ க‌டைசியில் பெட்டைய‌ளைப் ப‌ங்க‌ருக்குள் ப‌னிஷ்மென்டிற்காய் போட்டுவிட்டிட்டாங்க‌ளாம்.  நான் இந்த‌க் க‌தையைக் கேள்விப்ப‌ட்டுவிட்டு 'இது சும்மா புளுகுக்க‌தைய‌டா, பெட்டைய‌ளை இய‌க்க‌ம் ப‌ங்க‌ளுக்குள் போட‌மாட்ட‌ங்க‌ள்' என்றேன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த‌ ஒருத்த‌ன் 'அப்ப‌ நீ இப்ப‌டியொரு க‌ச‌ட்டை கையில் வைத்துக்கொண்டிரு, அவ‌ங்க‌ள் உன்னைக்கொண்டுபோய் ப‌ங்க‌ருக்குள் போட‌ட்டும். பிற‌கு உள்ளே பெட்டைய‌ள் இருக்கினமா இல்லையா என்று தெரிந்துவிடும்' என்றான்.  உந்த‌க் கோதாரிக‌ளோடு இதுதான் ஒரு பிர‌ச்சினை, ஒன்றை ஏதும் ம‌றுத்துச் சொன்னால் போதும், உட‌னே வேள்விக்குப் போகின்ற ப‌லியாடாக‌ எங்க‌ளையே அனுப்பிவிடுவாங்க‌ள்.

வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றிக்
கம்பிக்கின்ற நுண் இடை நோவ, கசிவாளும்;
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி, பயில்கின்ற
கொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிக்க, குழைவாளும்;
(க‌ம்ப‌ராமாய‌ண‌ம்; பால‌காண்ட‌ம்)

இப்போது க‌ம்ப‌ராமாய‌ண‌த்தை வாசிக்கும்போதுதான் நாங்க‌ள் கையில் வெண்ணெய்யை   வைத்துக்கொண்டு நெய்யிற்காய் அலைந்திருக்கின்றோம் என்ப‌து ந‌ன்கு புரிகிற‌து. க‌ம்ப‌ர் பெண்க‌ளை விப‌ரித்து எழுதிய‌தைப் ப‌டிக்கும்போதுதான் அவ‌ன் க‌விச்ச‌க்க‌ர‌வ‌ர்த்திய‌ல்ல‌, காத‌ல் பேர‌ர‌ச‌னாக‌வோ பேராச‌னாக‌வோ இருக்க‌த் த‌குதியுரிய‌வ‌ன் போல‌த் தோன்றுகிற‌து. ந‌ல்ல‌ காத‌ல் சுவை கொட்டும் க‌ம்ப‌ராமாய‌ண‌ப்பாட‌ல்க‌ளை எங்க‌ள் பாட‌த்திட்ட‌த்தில் வைத்திருந்தால் நாங்க‌ள் 'த‌ன‌ங்க‌ளைப் ப‌ற்றி அறிகின்ற‌ ஆர்வ‌த்தில் த‌மிழையும் க‌ற்றிருப்போம்' அல்ல‌வா?  இப்ப‌டியொரு வ‌ர‌லாற்றைத் த‌வ‌றைச் செய்த‌ ந‌ம் த‌மிழ்ச்ச‌மூக‌த்தையோ ஆசிரிய‌ர்க‌ளையோ என்னால் இனி எப்ப‌டி ம‌ன்னிக்க‌முடியும்?

2.
இடையீடு

க‌தையோடு க‌தையாக‌ என் திருக்குற‌ள் க‌தையையும் சொல்லிவிட‌வேண்டும். தெல்லிப்ப‌ளையில் துர்க்கைய‌ம்ம‌ன் கோயில் இருக்கிற‌து. அப்போது த‌ங்க‌ம்மா அப்பாக்குட்டிதான் அக்கோயிலை நிர்வ‌கித்து வ‌ந்தார். மாண‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்னெறி காட்டுவ‌த‌ற்காகவும், 'மேன்மை கொள் சைவ‌ நீதி' யாழ்ப்பாண‌ம் எங்கும் விள‌ங்குவ‌த‌ற்காக‌வும் அடிக்க‌டி திருக்குறள் போட்டிக‌ள் வைப்பார்க‌ள்.  5, 10 அதிகார‌ங்க‌ளை ம‌ன‌ன‌ம் செய்துவிட்டு அவ‌ற்றை ம‌ற‌ந்துவிடாது போட்டியின்போது எழுத‌வேண்டும். சில‌வேளைக‌ளில் அத‌ன் பொருளையும் எழுத‌வேண்டும். நானும் இந்த‌ப் போட்டிக‌ளில் ப‌ங்குபெறுத‌லில் சிக்குப்ப‌ட்டுவிட்டேன். அறிவுட‌மை, ஒழுக்க‌முட‌மை, க‌ல்வியுட‌மை என்று அற‌த்துப்பாலில்தான் தெரிவு செய்து பாட‌மாக்க‌ச் சொல்வார்க‌ள். இப்போது என்ற‌ல்ல‌ அப்போதே  'ஐந்தில் வ‌ளையாது ஐம்ப‌தில் வ‌ளையாது' என்ப‌துமாதிரி என‌க்கு இந்த‌ 'ந‌ன்னெறி' விட‌ய‌ங்க‌ளை எவ்வ‌ள‌வு பாட‌மாக்கினாலும் ம‌ன‌ப்பாட‌மாகாது. ஆனால் ம‌ன‌ந்த‌ள‌ராத‌ விக்கிர‌மாதித்த‌னாக‌ப் ப‌ங்குபெற‌ என‌து பெற்றோரால் தொட‌ர்ந்தும் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டிருந்தேன்.

திருக்குற‌ளும், க‌ம்ப‌ராமாய‌ண‌ம் போல‌ ஓர் அமுத‌சுர‌பி தான் என்ப‌து நான் க‌ன‌டாவிற்கு வ‌ந்து ப‌தின்ம‌வ‌ய‌தில் ஒரு பெண்ணைத் 'தீவிர‌மாய்க்' காத‌லித்துக்கொண்டிருந்த‌போதுதான் தெரிந்த‌து. ஈழ‌த்திலிருந்து வ‌ரும்போது 9ம் வ‌குப்பில் 6 பாட‌ங்க‌ளில் முத‌ன்மைச் சித்தி பெற்ற‌த‌ற்காய் ஒரு திருக்குற‌ள் புத்த‌க‌த்தைப் ப‌ரிச‌ளித்திருந்த‌ன‌ர். அதையொரு பொக்கிச‌மாய் நான் க‌ன‌டாவிற்கு க‌ண்ட‌ங்க‌ளும் க‌ட‌ல்க‌ளுந்தாண்டிக் கொண்டுவ‌ந்திருந்தேன். காத‌லித்துக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு என் காத‌லைக் க‌விதையாய்ச் செப்ப‌, அவ‌ரை வ‌ர்ணிக்க‌ புதிய‌ புதிய‌ சொற்க‌ள‌ தேவைப்ப‌ட்டிருந்த‌ன‌. ஒருநாள் த‌ற்செய‌லாய் திருக்குற‌ளை காம‌த்துப்பாலைப் புர‌ட்டிக்கொண்டிருந்த‌போதுதான் திருவ‌ள்ளுவ‌ர் ம‌ன்ம‌த‌னிற்குப் ப‌க்க‌த்துவீட்டுக்கார‌ன் என்ப‌து புரிந்த‌து. அற‌த்துப்பால் என்ற‌ அலுப்பான‌ விட‌ய‌ங்க‌ளை எழுதிய‌ இந்த‌ ம‌னுச‌ன் தானா இப்ப‌டி காத‌லில் புகுந்துவிளையாடுகின்றார் என்ற‌ திகைப்பு வ‌ந்த‌து. பெண்க‌ளைப் ப‌ற்றி என்ன‌ வ‌ர்ணிப்பு, விர‌க‌த்த‌விப்பை ப‌ற்றி என்ன‌ எழுத்து...ஆகா ஆகா?  பிற‌கென்ன‌ திருக்குற‌ள் என்னும் வ‌ற்றாச் சுர‌ங்க‌த்திலிருந்து த‌ங்க‌க்குவிய‌ல் கிடைக்க‌ நான் காத‌ல் வானில் த‌ங்கு த‌டையின்றி ப‌ற‌க்க‌த் தொட‌ங்கினேன். இவ்வாறு நான் திருக்குற‌ளின் க‌ருத்துக்க‌ளை அங்குமிங்குமாய்த் தெளித்து நூற்றுக்க‌ண‌க்கில் க‌விதைக‌ள் எழுதிக்கொடுத்த‌ பெண்ணிட‌ம்,  'எப்ப‌டியிருக்கிற‌து என் க‌விதைக‌ள்?' என்கின்ற‌போது ஒரு புன்ன‌கையாலோ வெட்க‌த்தோலோ ம‌ட்டும் ப‌தில் கூறுவார். அட‌டா க‌ன‌டா ப‌றந்து வ‌ந்த‌போதும் ப‌ருப்பு சோறு க‌றி எப்ப‌டிச் ச‌மைக்கிறது என்ற‌ பெண்ணாக‌ ம‌ட்டுமின்றி அச்ச‌ம் நாண‌ம் ம‌ட‌ம் ப‌யிர்ப்பு போன்ற‌வை க‌ல‌ந்துருவாகிய‌ த‌மிழ் அண‌ங்காக‌வும் இவ‌ர் இருக்கிறார் போலும் என‌ நினைத்து விய‌ந்தேன்.

வ‌ழ‌மையாக‌ என் 25 காத‌ல்க‌ளுக்கும் நிக‌ழ்ந்த‌துபோல‌ இவ‌ரும் பிரிந்து போன‌ பிற்பாடுதான் அறிந்துகொண்டேன், அந்த‌ப் பெண்ணுக்குத் த‌மிழில் க‌தைக்க‌ ம‌ட்டுந்தான் முடியும், ஆனால் த‌மிழ் எழுத‌ வாசிக்க‌த் தெரியாது என்று.  என்ன‌ ஒரு கொடுமை?  எனினும் என‌க்கும் வ‌ள்ளுவ‌ருக்கும் ம‌ன‌ம் நோக‌க்கூடாது என்ப‌த‌ற்காய், எந்த‌ ம‌றுப்புத் தெரிவிக்காது நாம் எழுதிய‌ க‌விதைகளை ஏற்றுக்கொண்ட‌ அவ‌ரை ந‌ன்றியுட‌ன் நினைவில் இருந்திக்கொள்ள‌த்தான் வேண்டும் (எங்கிருந்தாலும் வாழ்க‌; என் பெய‌ரை உங்க‌ள் பிள்ளைக்குச் சூட்டுக‌).

'கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்'
(குற‌ள்)

அண்மையில் ந‌ல்லூர்க்கோயிலுக்கு வ‌ரும் பெண்க‌ளுக்கு(க‌வ‌னிக்க‌: பெண்க‌ளுக்கு ம‌ட்டும்)ஆடைக் க‌ட்டுப்பாட்டு விதிக‌ள் நீதிம‌ன்ற‌த்தால் விதிக்க‌ப்ப‌ட்ட‌து.  இது குறித்த‌ விவாத‌த்தில் இவ்வாறான‌ ஆடைக்க‌ட்டுப்பாடு த‌ங்க‌மம்மா அப்பாக்குட்டியால் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் முன்பே தெல்லிப்ப‌ளை துர்க்கைய‌ம்ம‌ன் கோயிலில் விதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து என‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் நினைவூட்டினார். 'சிவ‌த்த‌மிழ்ச்செல்வி' த‌ங்க‌ம்மா அப்பாக்குட்டி இப்ப‌டியான‌ விட‌ய‌ங்க‌ளில் இராணுவ‌க் க‌ட்டுப்பாடோடுதான் ந‌ட‌ந்துகொள்வார் என்றே நினைக்கிறேன். சிறுவ‌ர்க‌ளாயிருக்கும்போது கோயிலுக்குப் போய் ஏதும் ச‌த்த‌ம் போட்டு விளையாடினாலோ ஏதேனும் க‌ஞ்ச‌ல் போட்டாலோ ம‌னுஷி க‌த்த‌த் தொட‌ங்கிவிடும். ஆனால் இவ‌ற்றுக்க‌ப்பால் பெற்றோரை இழ‌ந்த‌ அநாத‌ர‌வான‌ நிறைய‌ப் பெண்பிள்ளைக‌ளை -வ‌ருகின்ற‌ கோயில் வ‌ருமான‌த்தில் வைத்து -ப‌ராம‌ரித்துக்கொண்டிருந்த‌து என‌க்கு ந‌ன்கு நினைவிலுண்டு. பிற‌கு பிர‌ச்சினையின் நிமித்த‌ம் தெல்லிப்ப‌ளையில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்த‌போதும் அப்பிள்ளைக‌ளை ம‌ருத‌னாம‌ட‌த்தில் வைத்துக் க‌வ‌னித்திருக்கின்றார். ஆனால் ந‌ல்லூரில் ஒரு ஆதின‌ம் இருக்கின்ற‌தைத் த‌விர‌ அங்கே அவ‌ர்க‌ள் என்ன‌ செய்துகொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தை நான‌றியேன்.

ந‌ல்லூர்க்கோயிலுக்குள் நான்  போன‌தில்லை. ஈழ‌த்தில் இருந்த‌கால‌ங்க‌ளில் அப்பாவின் சைக்கிளில் இருந்து அத‌ன் வெளிவீதிக‌ளால் போன ஞாப‌க‌ங்க‌ளுண்டு. அப்பா ஒரு நாத்திக‌ராக‌ இருந்ததால் கோயில்க‌ளுக்குள் அழைத்துப் போவ‌தில்லை. ஆனால் என‌க்கு ந‌ல்லூர்க்கோயிலை ந‌ன்றாக‌ நினைவில் வைக்க‌ ஒரு ச‌ம்ப‌வ‌ம் இருக்கிற‌து. அது திலீப‌னின் உண்ணாவிர‌த‌ ம‌ர‌ண‌ம் நிக‌ழ்ந்த‌ கால‌ம். திலீப‌ன் இற‌ந்த‌போது ம‌க்க‌ள் உண்மையில் த‌ன்னெழுச்சியாக‌ அலைய‌லையாக‌வே வ‌ந்த‌ன‌ர். யாழ் நக‌ர‌த்தை விட்டொதுங்கிய‌ ஒதுக்குப்புற‌ச் சிறு ஊரிலிருந்து நாங்க‌ள் கூட‌ ஒரு வான் பிடித்து ந‌ல்லூருக்குப் போயிருந்தோம். அப்போது என‌க்கு ஏழெட்டு வ‌ய‌து இருக்கும். காலையில் போன‌ நாங்க‌ள் வ‌ரிசையில் நின்று திலீப‌ன் உட‌லைப் பார்ப்ப‌த‌ற்குள் இருள் க‌விழ்ந்துவிட்டிருந்த‌து. அவ்வ‌ள‌வு ச‌ன‌ம்; நெடுமாற‌ன் உரையாற்றிக்கொண்டிருந்தார். க‌றுத்தும் சுருங்கியும் போயிருந்த‌ திலீப‌னின் உட‌லைப் பார்த்த‌போது 'ஓ ம‌ர‌ணித்த‌ வீர‌னே உன‌து ஆயுத‌ங்க‌ளை என‌க்குத்தா உன‌து கால‌ணிக‌ளை என‌க்குத்தா' என்ற‌ பாட‌ல் ஒலிப‌ர‌ப்பான‌து ம‌ட்டுமில்லை; 'ம‌க்க‌ள் புர‌ட்சி வெடிக்க‌ட்டும், நான் வானிலிருந்து 690? போராளியாக‌ இருந்து சுத‌ந்திர‌ த‌மிழீழ‌ம் ம‌ல‌ருவ‌தைப் பார்ப்பேன்' என்ற‌ திலீப‌னின் வாச‌க‌ங்க‌ள் கூட‌ என‌க்கு அந்த‌ வ‌ய‌தில் ந‌ன்கு நினைவிருந்தது. ஏழு எட்டு வ‌ய‌தில் இப்ப‌டி அர‌சிய‌ல் தெரிய‌ நீயென்ன‌ உமையின் முலைப்பால் குடித்த‌ ஞான‌ப்ப‌ழ‌மா அல்ல‌து வாழைப்ப‌ழ‌மா என்று சில‌ர் முத்திரை குத்த‌வும் கூடும் என்ப‌தால் இங்கே மேலும் அர‌சிய‌ல் பேசுவ‌தைத் த‌விர்க்கிறேன். ச‌ரி விட‌ய‌த்திற்கு மீண்டும் வ‌ருகிறேன், ஆண்க‌ளை அரை நிர்வாண‌மாக‌ (மேலாடை இல்லாது) வ‌ர‌ச்சொல்கின்ற‌ ந‌ல்லூர்க்க‌ந்த‌ன் பெண்க‌ளையும் தாவ‌ணியோ சேலையோ க‌ட்டாது ப்ள‌வுஸும் பாவாடையுமாக‌ அல்ல‌வா வ‌ர‌ச்சொல்லியிருக்க‌வேண்டும்? பெண்க‌ள் சேலையோ half சாறியோ அணியாம‌ல் வ‌ந்தால் "என்ன‌ கெட்டுப்போகுமென்று" நினைக்கின்றார்க‌ளே அதையே ஆண்க‌ள் மேலாடையின்றி வ‌ரும்போது கெட்டுவிடாதா என்ன‌? மேலும் இப்ப‌டி செக்சியாய் மேலாடை இல்லாது வ‌ரும் ஒரு ஆணைப் பார்த்து யாரேனும் பெண் -க‌ம்ப‌னையோ வ‌ள்ளுவ‌னையோ வாசித்த‌ பாதிப்பில்- ஏக்க‌மாய்ப் பெருமூச்சுவிட்டு ஏதும் ஏடாகூடாமாய் கோயிலுக்குள் ந‌ட‌ந்துவிட்டால் பிற‌கு அப்பெண்ணின் பெற்றோருக்கு க‌ந்த‌னா ப‌தில் சொல்லுவார்?

இப்போது என்னைப்போன்ற‌ யாழ்ப்பாணிக‌ள் நிறைய‌த் த‌மிழ்ப்ப‌ட‌ம் பார்ப்ப‌தாக‌வும் புதுப்ப‌ட‌ங்க‌ள் வ‌ந்தால் ந‌டிக‌ர்/ந‌டிகைக‌ளுக்கு பாலாபிஷேக‌ம் செய்வ‌தாவும் சொல்கின்ற‌ன‌ர். ப‌ட‌ங்க‌ளில் அநேக‌மாய் நாய‌கிக‌ள்தான் -இய‌ல்பு வாழ்க்கைக்கு மாறாய்-  'ஏய் மாமோய் வாய்யா போ'வ்'வோம் ஆத்துப்ப‌க்க‌மாய் அல்ல‌து guest house ப‌க்க‌மாய்' என்று ஒரு 'ஹிக்'காய் அழைப்பு விடுகின்ற‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். இதையே வேத‌வாக்காக‌ ந‌ல்லூர்க் கோயிலுக்குப் போகின்ற‌ பெண்க‌ள் செய்துவிடும் அபாய‌மும் உண்டு என்பதையும் ஆடைக‌ள் அணிய‌ ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ந்த‌ நீதிக்குச் சுட்டிக்காட்ட‌வேண்டியிருக்கிற‌து.

3.
இது கம்ப‌ இராமாய‌ண‌ம் ப‌டித்த‌ க‌தைய‌ல்ல‌; க‌ம்ப‌னின் காம‌ர‌ச‌ம் சொட்டும் பாட‌ல்க‌ளை இடையில் புகுத்தி எழுதிய‌, ஒரு நீல‌ப்ப‌ட‌ம் பார்த்த‌ க‌தையென‌ யாரேனும் ஒரு விம‌ர்ச‌க‌ர் ‍என் மீதான‌ காழ்ப்புண‌ர்வில் எழுத‌லாம். நிச்ச‌ய‌மாக‌ எவ‌ரும் இந்த‌க் க‌தையை விம‌ர்சிக்க‌லாம், ஆனால் அத‌ற்கு முன் நீங்க‌ள் இதேமாதிரியான‌ 'நொந்த இராம‌ய‌ண‌ம் அல்ல‌து வெந்த‌ இராமாய‌ண‌ம் வாசித்த‌ அனுப‌வ‌ம்' என்றொரு க‌தையை எழுதியிருந்தாலே நீங்க‌ள் கூறுவ‌து ச‌பையிலேறும் என்ப‌தை அவைய‌ட‌க்க‌த்துட‌ன் கூற‌ விரும்புகின்றேன். க‌ம்ப‌ன் எத்த‌னையோ காண்ட‌ங்க‌ள் எழுதியிருக்க‌ பால‌காண்ட‌த்தில் ம‌ட்டுமே நிறுத்திக்கொண்ட‌ ப‌ன்னாடையென‌ என்னைத்திட்ட‌ப் போகின்ற‌வ‌ர்க‌ள் த‌ய‌வுசெய்து -நாக‌ரிக‌மாக‌- நீரை ம‌ட்டும் அருந்திவிட்டு பாலை விட்ட‌ அன்ன‌ப்ப‌ற‌வையென‌ புதிய‌ உதார‌ண‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்துமாறு அன்புட‌ன் வேண்டிக்கொள்கிறேன். என‌க்கு பாலகாண்ட‌மே தேவ‌ர்க‌ளும் அசுர‌ர்க‌ளும் க‌டைந்த‌ பாற்க‌ட‌லாக‌ இருக்கும்போது,  அதில் நீச்ச‌ல‌டித்தே என்னால் க‌ரைதாண்ட முடியாதிருக்கும்போது எப்ப‌டி என்னால் பிற‌ காண்ட‌ங்க‌ளைத் தாண்ட‌முடியும் என்ப‌தையும் நீங்க‌ள் நினைவில் இருத்திக் கொள்ள‌வேண்டும்.

உண்மையில் இந்த‌க்க‌தையை எழுதிய‌த‌ற்கு என‌து ஆசான் Xமோவிற்கு ந‌ன்றி கூற‌வேண்டும். எனெனில் அவ‌ர்தான் தின‌மும் 2 ம‌ணித்தியால‌ம் காலையும் மாலையும் எழுதுகின்றார் என்று ப‌லர் முன்னுரையிலும் முக‌ப்புநூல்க‌ளிலும் ப‌திவுசெய்கின்ற‌ன‌ர். என‌க்கு காலைப்பொழுதின் 1 ம‌ணித்தியால‌ம்  காலைக்க‌ட‌ன்க‌ளிலும் குளிப்ப‌திலும் போய்விடுகின்ற‌து.  ஏன் எவ‌ரும் 'க‌விதை எழுதுவ‌து, க‌தை எழுதுவ‌து போல‌' மிக‌ உன்ன‌த‌மான‌து காலைக்க‌ட‌ன் க‌ழிப்ப‌தும் குளிப்ப‌தும் என‌ச் சொல்ல‌வில்லை? இது போன்ற‌ இருட்ட‌டிப்புக்க‌ள் வ‌ர‌லாற்றின் பல்‌வேறு க‌ட்ட‌ங்க‌ளில் நிக‌ழ்ந்திருக்கின்ற‌ன‌ என்ப‌தை நான் உங்க‌ளுக்கு நினைவூட்ட‌த் தேவையில்லை என‌ நினைக்கிறேன்.

இவ்வாறாக‌க் கூற‌ப்ப‌டாத‌தால்தான் நான் இன்று காலை இந்த‌க் க‌தையை -என‌து காலைக்க‌ட‌னிற்கான‌ நேர‌த்தில்- எழுத‌வேண்டிய‌தாக‌ப் போய்விட்ட‌து. சில‌ ஆண் க‌விஞ‌ர்க‌ள் க‌விதை ஒன்றை எழுதி முடிப்ப‌து பிர‌ச‌வ‌வேத‌னையைப் போன்ற‌து என்கின்ற‌ன‌ர். ஏன் காலைக்க‌ட‌ன் க‌ழிப்ப‌து கூட‌ சில‌ருக்கு மாபெரும் வேத‌னையாக‌ இருக்கின்ற‌து என்ப‌தை இவ‌ர்க‌ளால் புரிந்துகொள்ள‌ முடியாதிருக்கின்ற‌து?

இறுதியாக‌ இக்க‌தையை முடித்தாக‌ வேண்டியிருக்கிற‌து. நான் 'திருக்குற‌ளாய்க் காத‌லித்த‌' பெண் வ‌ரும் மாத‌ம் த‌ன‌க்குத் திரும‌ண‌ம்,,, வ‌ர‌ச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கின்றார். அவ‌ர் என்னைச் சில‌ மாத‌ம் காத‌லித்திருந்தார். பிற‌கு என் ந‌ண்ப‌னை 6 வ‌ருட‌ங்க‌ள் நேசித்திருந்தார். இப்போது என‌க்கும் என‌து ந‌ண்ப‌னுக்கும் தெரிந்த‌ எங்க‌ளின் ந‌ண்ப‌ன் ஒருவ‌னை ம‌ன‌தார‌ நேசித்து ம‌ண‌விழாக் காண‌ப்போகின்றார். என‌து '25 த‌ட‌வைக‌ள் காத‌லித்த‌ சாத‌னை'யை முறிய‌டிக்க‌ இவ‌ரும்  முய‌ற்சித்திருக்கின்றார் என்ற‌ வ‌கையில்  மிகுந்த‌ பாச‌ம் இவ‌ர் மீது என‌க்குத் த‌னிப்ப‌ட்ட‌வ‌ளவில் உண்டு.   இப்போது இங்கே திரும‌ண‌ விழாக்க‌ளின்போது தென்னிந்திய‌த் திரைப்ப‌ட‌ப்பாட‌ல்க‌ளைப் போல‌ இணைக‌ள் ஆடுவ‌தாக‌வும் அபிந‌ய‌ம் பிடிப்ப‌தாக‌வும் ஒளிப்ப‌திவு செய்து திரையிடுகின்றார்க‌ள். குற‌ள் மீது அபினாக‌ நான் இருப்ப‌தால் என்னைத் த‌ங்க‌ளை வாழ்த்தியொரு க‌விதை பாட‌ச்சொல்லிக் கேட்டிருக்கின்றார். உங்க‌ள் வாழ்வு என‌க்கு 'ஆட்டோகிராப்' ப‌ட‌த்தை நினைவுப‌டுத்துவ‌தால் 'ஞாப‌க‌ம் வ‌ருகிற‌தே' பாட‌ட்டுமா என்று கேட்டிருந்தேன். அவ‌ர் புன்ன‌கைத்தார். அந்த‌ப் புன்ன‌கை வீட்டில் ரொறொண்டோத் தெருவில் பிர‌ப‌ஞ்ச‌வெளியில் அலைய‌லையாய் ந‌ம் முடியாக் காத‌லின் துய‌ரை நிர‌ப்பிச் செல்கிற‌து.

000000000000000

மேலும் இந்த‌க்க‌தை த‌மிழ்ச்சினிமாவில் இறுதியில் வ‌ந்து முடிவ‌தால் இஃதொரு புல‌ம்பெயர்க‌தைதான் என்ப‌தை நீங்க‌ள் உறுதியாக‌ நம‌ப‌லாம்.

(என் த‌மிழ் ஊழிய‌ம் இப்போதைக்கு நிறைவுற்ற‌து)

M.I.Aயின் 'மாயா'

Wednesday, July 21, 2010

-மாயா அருட்பிர‌காச‌த்தின் 'மாயா' இசைத்தொகுப்பை முன்வைத்து-

'Did you like this?
They can rewrite History
But we can re write it back faster
We have speed on our hands'
-M.I.A


மாயா அருட்பிர‌காச‌த்தின் (M.I.A) மூன்றாவ‌து இசைத்தொகுப்பான‌ 'மாயா' அண்மையில் வெளிவ‌ந்துள்ள‌து. ஏற்க‌ன‌வே மாயாவின் 'அருள‌ர்', 'க‌லா' போன்ற‌ இசைத்தொகுப்புக்க‌ள் வ‌ந்து அதிக‌ க‌வ‌னிப்பைப் பெற்றிருக்கின்ற‌ன‌. அவ‌ர‌து அநேக‌ பாட‌ல்க‌ளிலுள்ள‌ அர‌சிய‌லைப் போல‌, அவ‌ர் நேர‌டியாக‌வும் த‌ன‌க்குச் ச‌ரியான‌து என்று நினைக்கின்ற‌வ‌ற்றைப் பேசுவ‌தால் மாயாவை நேசிக்க‌வும், வெறுக்க‌வும் செய்கின்ற‌ நிறைய‌ப்பேர் இருக்கின்ற‌ன‌ர். த‌ன‌க்குக் கிடைத்த‌ த‌ள‌ங்க‌ள் அனைத்திலும், ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக‌ளுக்கு எதிராக‌த் த‌ன் குரலைத் தொட‌ர்ச்சியாக‌ மாயா உர‌த்து ஒலித்திருக்கிறார். இத‌னால்தான் இல‌ங்கையின் பாதுகாப்புச் செய‌லாள‌ர் கோத்த‌பாய‌ ராஜ‌ப‌க்சா ஒருமுறை 'மாயா த‌ன் பாட‌ல்க‌ளைப் பாடுவ‌தோடு நிறுத்திக்கொள்ள‌ட்டும்; இல‌ங்கையின் உள்விவ‌கார‌ங்க‌ளில் த‌லையிட‌வேண்டாம்' என்று எச்ச‌ரித்துமிருக்கிறார் மாயாவின் வெளிப்ப‌டையாக‌ ஒலிக்கும் அரசிய‌ல் குர‌லால் அமெரிக்காவிற்குச் செல்வ‌த‌ற்கான‌ விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தையும் இதையிட‌த்தில் நாம் நினைவுகூர‌ வேண்டும். 'தீவிர‌வாதி'க‌ளென‌ தடைசெய்ய‌ப்ப‌ட்ட‌ விடுத‌லை இய‌க்க‌ங்க‌ளை முன்னிலைப்ப‌டுத்தி எவ‌ராலும் த‌ம் இர‌சிக‌ர்க‌ளைப் பெரும‌ள‌வில் க‌வ‌ர‌முடியாது, ஆனால் மாயா ம‌ட்டுமே விதிவில‌க்காக‌ த‌ன‌து பாட‌ல்க‌ளில் 'தீவிர‌வாத‌' இய‌க்க‌ங்க‌ளென‌ அடையாள‌ப்ப‌டுத்தப்ப‌ட்ட‌ இய‌க்க‌ங்க‌ளை அடிக்க‌டி குறிப்பிட்டும் கூட‌ பெரும‌ள‌வு இர‌சிக‌ர்களைக் கொண்டிருக்கின்றார்'  என‌க் கூறுகின்றார் ஓர் இசை விம‌ர்ச‌க‌ர்.

மாயாவின் மூன்றாவ‌து இசைத்தொகுப்பு வ‌ர‌முன்ன‌ரே ப‌ல்வேறுவித‌மான‌ ச‌ர்ச்சைக‌ள் தொட‌ங்கிவிட்ட‌ன‌. 'மாயா' இசைத்தொகுப்பில் உள்ளாட‌க்க‌ப்ப‌ட்ட‌ 'Born Free' பாட‌ல் காணொளியாக‌(video) வ‌ந்த‌போது மிக‌ப்பெரும் ச‌ர்ச்சைக‌ள் எழும்ப‌த் தொட‌ங்கிய‌து. அந்த‌க் காணொளியில் அமெரிக்க‌ இராணுவ‌ம் சிவ‌ப்புத்த‌லை  ம‌னித‌ர்க‌ளை நிர்வாண‌மாக‌ சுற்றி வ‌ளைப்பதாய், சுட்டுக்கொல்வ‌தாய், குழ‌ந்தைக‌ளைப் ப‌லியெடுப்ப‌தாய் காட்ட‌ப்ப‌ட்ட‌தால் YouTube அப்பாட‌லை 'வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க்கு ம‌ட்டும் உரிய‌து' என‌ எளிதாக‌க் கூறித்  த‌டைசெய்தது;  ஆனால் அதேவேளை மாயா 'தீவிர‌வாதப்புலிக‌ளின் பாட‌கி'யென‌ துவேச‌த்துட‌ன் வெட்டி ஒட்ட‌ப்ப‌ட்ட‌ காணொளிக‌ளை 'சுத‌ந்திர‌மாக‌' YouTube அனும‌தித்த‌து. மாயாவின் பாட‌ல்க‌ளிலுள்ள‌ அர‌சிய‌லைப்போல‌ இப்பாட‌ல் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ வித‌த்திற்கும் ப‌ல‌வேறு வித‌மான‌ வாசிப்புக்க‌ள் விம‌ர்ச‌க‌ர்க‌ளாலும் இர‌சிக‌ர்க‌ளாலும் முன்வைக்க‌ப்ப‌ட்டு விவாதிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இக்காணொளியில் அமெரிக்க இராணுவ‌த்தால் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ சிவ‌ப்புத்த‌லை இளைஞ‌ர்க‌ளுக்கு இர‌ண்டு வித‌மான‌ தெரிவுக‌ள் கொடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒன்று க‌ண்ணிவெடிக‌ள் புதைக்க‌ப்ப‌ட்ட‌ நில‌ங்க‌ளினூடாக‌ ஓடுத‌ல், ம‌ற்ற‌து ஒட‌ம‌றுத்தால் துப்பாக்கியால் ஈவிர‌க்க‌மின்றிச் சுட்டுக்கொல்ல‌ப்ப‌டுவார்க‌ள். இர‌ண்டு தெரிவுக‌ளின‌தும் முடிவு ஒன்றுதான், அது ம‌ர‌ண‌ம். இன்று வெளிநாடுக‌ளை ஆக்கிர‌மித்து நிற்கும் அமெரிக்கா/பிரித்தானியா ம‌ற்றும் அத‌ன் நேச‌ப்ப‌டைக‌ள் ஆக்கிர‌மிப்பு நாடுக‌ளில் நிக‌ழ்த்தும் கொடூர‌மான‌ வ‌ன்முறையை நாளை த‌ன‌து சொந்த‌ நாட்டின் ம‌க்க‌ளுக்கு எதிராக‌க் கூட‌ நிக‌ழ்த்தும் என்கின்ற‌ ஒருவ‌கையான‌ வாசிப்பைக்கூட‌ நாம் இக்காணொளியினூடு செய்ய‌லாம். எவ்வாறான‌தாயினும் இது அர‌சு/இராணுவ‌ம் போன்ற‌வ‌ற்றிற்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ அளவ‌ற்ற அதிகார‌த்திற்கு எதிரான‌ க‌ல‌க‌க் குர‌லே. மேலும் இப்பாட‌லைப் ப‌ற்றிய‌ விப‌ர‌த்தைத்த‌ரும் சிறுகுறிப்புப் புத்த‌க‌த்தில், ஈழ‌த்தில் நிர்வாண‌மாக்க‌ப்ப‌ட்டு க‌ண்க‌ளும் கைகளும் க‌ட்ட‌ப்ப‌ட்டு சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்ட‌ இளைஞ‌னின் ப‌ட‌ம் இணைக்க‌ப்ப‌ட்டிப்ப‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும் (இந்நிக‌ழ்வு காணொளியாக‌ வ‌ந்த‌து ந‌ம் அனைவ‌ருக்கும் நினைவிருக்கும்).

இந்த‌ இசைத்தொகுப்பு ப‌ற்றி மாயா எம்ரீவியிற்கு நேர்காண‌ல் கொடுத்த‌போது, 'இது ஒரு முப்ப‌ரிமாண‌ இசைத்தொகுப்பு' என்று கூறியிருக்கின்றார். முப்ப‌ரிமாண‌ம் என்ப‌தில் எவ‌ற்றை மாயா உள்ள‌ட‌க்க‌ விரும்புகின்றார் என்று தெளிவாக‌த் தெரியாத‌போதும், இர‌ண்டு வ‌கையில் இவ்விசைதொகுப்பு மூன்று ப‌ரிமாண‌ங்க‌ளைத் தொட‌ முய‌ன்றிருக்கிற‌து போல‌த் தெரிகிற‌து. ஒன்று, தொகுப்பிலுள்ள‌ பாட‌ல்க‌ள் மாயாவின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்வின் த‌த்த‌ளிப்புக்க‌ளையும், வெளிப்ப‌டையான‌ அர‌சிய‌லையும் ம‌ற்றும் காத‌லையும் கூறுவ‌தால் இது ஒருவ‌கையான‌ முப்ப‌ரிணாம‌ம் என‌ நாம் எடுத்துக்கொள்ள‌லாம். மாயாவின் இர‌ண்டாவ‌து இசைத்தொகுப்பான‌ 'க‌லா'வில் காத‌ல் த‌வ‌ற‌விட‌ப்ப‌ட்டிருந்த‌து அல்ல‌து மென்மையாக‌ ஒலித்திருக்கிற‌து. ஆனால் இத்தொகுப்பில் நான்கிற்கு மேற்ப‌ட்ட‌ காத‌ற்பாட‌ல்க‌ள் இருக்கின்ற‌ன‌; சில‌ பொப் (electro pop) இசையில் பின்ன‌ணியில் க‌சிகின்ற‌ன‌. இர‌ண்டாவ‌து வ‌கையான‌  முப்பரிமாண‌மாக‌ கொள்ள‌க்கூடிய‌து இங்கே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் வெவ்வேறான‌ வாத்திய‌ங்க‌ள்...பொப், எலெக்ரோ, ரக்கே, ராப் பல்வேறுவித‌ இசைக் க‌ல‌வைக‌ள் -சில‌வேளைக‌ளில் த‌னிப்பாட‌ல்க‌ளில் கூட‌-க‌ல‌க்க‌ப்ப‌ட்டு முப்ப‌ரிணாம‌மாக‌ விரிவ‌டைகின்ற‌ன. இவ்வாறான வித்தியாச‌மான‌ இசைக்கோர்வைக‌ளோடு பல்வேறுவித‌மான‌ புதிய‌ முய‌ற்சிக‌ளையும் மாயா பாட‌ல்க‌ளில் புகுத்தியிருக்கிறார். இத‌னால் ம‌ர‌புவ‌ழியான‌ அல்ல‌து த‌ட‌ம்ப‌திக்க‌ப்ப‌ட்ட‌ பாதையிலான‌ இசைத்துணுக்குக‌ளைக் (genre) கேட்க‌விரும்புப‌வ‌ர்க‌ளுக்கு இவ் இசைத்தொகுப்பு ஏமாற்ற‌த்தை ஏற்ப‌டுத்த‌லாம். கேட்கும்போது ச‌வால்க‌ளை ப‌ல்வேறு த‌ள‌ங்க‌ளில் ஏற்ப‌டுத்தும் 'மாயா' இசைத்தொகுப்புட‌ன் ஒருவ‌ரால் அவ்வ‌ள‌வு எளிதாக‌ நெருக்க‌ம் கொண்டுவிட‌முடியாது என்ப‌தையும் குறிப்பிடாக‌ வேண்டும்.

'மாயா' தொகுப்பில் 'XXXO' சிற‌ந்த‌ காத‌ல்பாட‌லென‌ ப‌ல‌ரால் அடையாள‌ங்காண‌ப்ப‌ட்ட‌போதும் எவ‌ராலும் க‌வ‌னிக்காத‌ அருமையான‌ இன்னொரு காத‌ற் பாட‌லொன்று இருக்கிற‌து. அது 'Space' என்கின்ற‌ பாட‌ல். 'புவியீர்ப்பு என‌து எதிரி/ அது என்னைக் காசைப் போல‌ இழுக்கிற‌து/ நான் வாழ்வின் ஓடிசியில் மித‌ந்துகொண்டிருக்கும்போது/விண்மீன்க‌ள் என்ன‌ருகில் மோதுகின்ற‌ன‌/ என‌து தொலைபேசி இணைப்புக்க‌ள் செய‌லிழந்துவிட்ட‌ன்/ உன்னால் இனி என்னை (தொலைபேசியில்) அழைக்க‌முடியாது' என‌ பிரிந்துபோகின்ற‌ காத‌லை அருமையாக‌ மாயா சொல்கின்றார். மேலும் மிக‌ மென்மையோடும் ஒருவித‌ கெஞ்ச‌லோடும் த‌தும்பும் மாயாவின் குர‌ல் ந‌ம்மை இன்னொரு வெளிக்கு அழைத்துச் செல்கிற‌து. 'XXXO','Space' பாட‌ல்க‌ளைப் போல‌, 'It takes a muscle to fall in love', 'Tell Me Why' போன்ற‌வையும் காத‌லின் கொண்டாட்ட‌த்தையும் பிரிவின் வேத‌னைக‌ளையும் காம‌த்தின் கிற‌க்க‌ங்க‌ளையும் பாடுகின்ற‌ன‌.

மாயா இசைத்தொகுப்பில் இருக்கும் 'Teqkilla', Stepping Up', 'Illy Girl' ஆட்ட‌ அர‌ங்குக‌ளில் ஆடுவ‌த‌ற்குரிய‌வை; கொண்டாட்ட‌த்தையும் குதூக‌ல‌த்தையும் ஒருங்கே வ‌ழிய‌விடுப‌வை. காதலும், கொண்டாட்ட‌மும் அநேக‌ இசைஞ‌ர்க‌ளிட‌ம் இருப்ப‌வை, இவ‌ற்றோடு அர‌சிய‌லையும் இணைக்கும்போதே மாயாவின் இசை பிற‌ரிட‌மிருந்து வேறுப‌ட‌க்கூடியதாக‌ மாறுகின்ற‌து. 'Born Free' பாட‌லின் கூற‌ப்ப‌ட்ட‌ உக்கிர‌ அர‌சிய‌லைப் போல‌ 'Love a Lot'ல் 'நான் என‌து க‌ன்ன‌த்தைக் காந்தியைப் போல‌ (அடிக்க‌)காட்ட‌ மாட்டேன்/ என்னோடு ச‌ண்டை பிடிப்ப‌வ‌ர்க‌ளோடு நான் ச‌ண்டையிடுவேன்' என‌ மாயா கூறுகின்றார். அதேபோல‌ இன்னொரு பாட‌லான‌ 'Believer'ல் 'நான் போராட்ட‌ங்க‌ளைத் தேர்ந்தெடுக்க‌வில்லை/ போராட்ட‌ங்க‌ள் என்னைத் தேர்ந்தெடுக்கின்ற‌ன‌' என்கின்றார்.அதேபோல‌ நாம் எவ்வாறு நுண்ணிய‌த‌ள‌த்தில் க‌ண்காணிப்ப‌டுகின்றோம் என்ப‌தை 'Message' பாட‌லில் 'இணைய‌ம் கூகிளோடு இணைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து/ கூகிள் அர‌சாங்க‌த்தோடு இணைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து' என்று பாடுகிறார். உண்மைதான் அமெரிக்காவில் ம‌ட்டுமில்லை, சீனாவில் கூட‌ அர‌சாங்க‌ம் த‌ன‌க்குரிய‌வ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ளைச் சேக‌ரிக்க‌க் கேட்க‌  யாகூ போன்ற‌ பெருநிறுவ‌ன‌ங்க‌ள் வ‌ழ‌ங்கிய‌மை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியுள்ள‌து. 'Story to be Told' என்கின்ற‌ பாட‌லில் எதுவானாலும் ‍அது மிக‌ச் சாதார‌ண‌ க‌தையாக‌ இருந்தாலும் அனைவ‌ரும் த‌த்த‌ம‌து க‌தைக‌ளைச் சொல்வ‌தை அனும‌திக்கும் சுத‌ந்திர‌மான‌ வெளி வேண்டும் என்கிறார் மாயா. அதேபோன்று 'Meds and Feds' என்ற‌ பாட‌லில் 'யார் சொன்ன‌து எல்லாச் ச‌ட்ட‌ங்க‌ளும் எதோவொரு ச‌ட்ட‌த்தால் ஆக்க‌ப்ப‌ட்ட‌து என்று/ நாங்க‌ள் அவ‌ற்றை உடைப்போம், அவ‌ர்க‌ளின் க‌ண‌னிக‌ளையும்' என்கிறார்.

இன்று அநேக‌மான‌ க‌லைஞ‌ர்க‌ளும், இல‌க்கிய‌க்கார‌ர்க‌ளும், அறிவுஜீவிக‌ளும் வ‌ச‌தியான‌ இட‌த்திலிருந்துகொண்டு எவ‌ரையும் நோகாது முன‌கிய‌ குர‌லில் அதிகார‌ங்க‌ளுக்கும்/அர‌சுக‌ளுக்கும்/ஒடுக்குமுறைக‌ளுக்கும் எதிரான‌ குர‌லை வெளிப்ப‌டுத்துகிறார்க‌ள். இவ் மெல்லிய‌ குர‌லை ம‌றுத்து தெளிவான‌ உறுதியான‌ குர‌லில் மாயாவின் க‌ல‌கக் குர‌ல் ஒலிக்கிற‌து. அதிகார‌ப் பெரும‌ர‌த்தின் ஒரு சில‌ இலைக‌ளையாவ‌து மாயாவின் இசை அதிர‌ச் செய்வ‌தால்தான் இல‌ங்கை அர‌சும், அமெரிக்க‌ உள‌வுத்துறையும் மாயாவிற்கு எதிர்வினை செய்கின்ற‌ன‌. இப்ப‌டியே தொட‌ர்ந்திருந்தால் உன்னை ஒடுக்கி ஓரிட‌த்தில் சுருட்டி வைப்போமென‌ அவ்வ‌ப்போது இவ‌ர்க‌ள் மாயாவை அத‌ட்ட‌வும் செய்கின்ற‌ன‌ர். இத‌ற்கு மாயா ப‌ய‌ப்பிடுகின்ற‌வ‌ர் இல்லை. அத‌னால்தான் 'You get off easy. I speak direct 2 the CIA FBI China Sri Lankan Gov on Aim' என‌ அவ‌ர்க‌ளை நோக்கி மீண்டும் பேசுகிறார்.

இது ம‌ட்டுமில்லாது ப‌டிப்பு ப‌டிப்பென‌ 'வ‌ளாக‌ங்க‌ளுக்குச் செல்வ‌தே வாழ்வின் உன்ன‌த‌ம்' என்கின்ற‌ த‌மிழ்ச் ச‌மூக‌த்திற்கு ப‌டிப்பைப்போல‌வே இசைத்துறையில் நுழைந்தால் கூட‌ உய‌ர‌ங்க‌ளை அடையால‌மென‌ முன்னுதார‌ண‌மாக‌ இசையில் சாதிக்கும் மாயா ம‌திக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌வ‌ரும் கூட‌. இன்றைய‌ உல‌க‌ப் ப‌ர‌ப்பில் ஒவ்வொரு ச‌மூக‌த்திற்கும் த‌ம‌து சாத‌னையாள‌ர்க‌ளாக‌ப் ப‌ட்டிய‌லிட‌ நீண்ட‌தொரு வ‌ரிசையிருக்க‌ ந‌ம‌க்கு எவ‌ருமேயில்லையென்கின்ற‌ வ‌ருத்த‌த்தை துடைத்து மாயா என்ற‌ ஈழ‌த்த‌மிழ‌ப்பெய‌ர் உல‌க‌ அர‌ங்கில் ஒளிருகிற‌து. த‌ன‌க்கு குழ‌ந்தை பிற‌ந்த‌போது 'என் பிள்ளைக்கு இருக்கும் வ‌ச‌திக‌ளில் ஒன்றுகூட‌ இல்லாது ஈழ‌த்த‌மிழ்ப்பிள்ளைக‌ள் வ‌ன்னியில் இற‌க்கின்ற‌ன‌வே' என‌ உண்மையான‌ ம‌னிதாபிமான‌த்தோடு த‌ன் ம‌ன‌தைத் திற‌ந்த‌ மாயாவை நாம் கொண்டாடத்தான் வேண்டும், அவ‌ர‌து பாட‌ல்க‌ளைப் போன்று.

ந‌ன்றி: அம்ருதா (செப்ரெம்ப‌ர்-2010)