நீண்டநாள் காணாமற் போயிருந்த புத்தரை இன்று மீண்டும் அவன் தனது கணனி மேசைக்கடியில் ஒளிந்திருப்பதைக் கண்டான். பனிக்காலம் தொடங்கி அறையெல்லாம் சில்லிட்டுக்கொண்டிருக்க புத்தர் நடுநடுங்கியபடி இருந்தார். காடு, மலை, மழை எல்லாவற்றையும் புறக்கணித்து நெடுந்தூரம் அலைந்து திரியும் புத்தர் இப்படிப் பயந்து ஒடுங்கியபடி அவனது அறைக்குள் இருந்ததற்கு இந்தப் பனிக்காலம் மட்டும் காரணமாயிருக்காது என்பது தெளிவாகப் புரிந்தது.
புத்தரை இறுதியாய்ச் சந்தித்த பின்பான இடைவெளியில், நிகழ்ந்த எத்தனையோ விடயங்களை அவரிடம் பகிர்வதற்கு தன்னிடம் இருக்கின்றது என்ற எண்ணம் அவனுக்குள் நிறைந்து வழிய ஆரம்பித்தது. எனினும் வழமைபோல அவனது வீட்டுக்கு வருகைதருபவரைப் போல் இன்று புத்தர் இருக்கவில்லை.... அது ஏன் என்ற கேள்வி அவனுக்குள் சஞ்சலத்தை உருவாக்கத் தொடங்கியிருந்தது. வருகின்ற வழியில் எங்கையேயாவது ஆற்றில் அவனுக்காய் வெள்ளைத் தாமரைகளை ஆய்ந்து வர புத்தர் ஒருபோதும் மறப்பதேயில்லை. இன்றைய நாளில் அவனுக்காய் எந்தப் பூவையும் கொண்டுவரவில்லை என்பதோடு அவரது கரங்கள் சிவப்பு நிறமாய்க் கண்டிப்போய் இருந்ததைப் பார்க்கும்போது மனதிற்குள் சிறுவலி மின்னலாய் வெட்டிவிட்டுப்போயிருந்தது.
அவனது சகோதரர்களின் பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாடும்போது மேசைக்கடியில் ஒளிந்திருப்பதுபோல புத்தரும் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது அவனுக்கு ஒருமாதிரி இருந்தது (கண்ணை மூடினால் எவரும் கண்டுபிடிக்காமாட்டார்கள் என்பது குழந்தைகளின் மனத்துணிபு). சிறியவர்களோடு என்றால், அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தாலும், காணாததுமாதிரி நடிக்கமுடியும், ஆனால் புத்தரோடு அப்படியெல்லாம் விளையாடமுடியாது அல்லவா? இந்தத் தருணத்தை எப்படி எதிர்கொள்வது என்ற ஒரு திணறல் பனிக்காலத்தில் உரிய ஆடைகளை அணியாது வெளியே போனது போன்ற நிலைக்கு நிகராய் அவனுக்குள் உருவாககத் தொடங்கிவிட்டது
சாதாரணமாய் சந்திக்கும் புத்தர் என்றால் இப்போது கிண்ணங்களில் வைனையோ அல்லது கிழக்காசியாவிலிருந்து பிரத்தியேகமாக் புத்தர் தனது காவித்துணியில் மடித்துக்கொண்டுவரும் தேயிலையையோ வைத்து.... உருவாக்கிய தேநீரையோ அருந்திக்கொண்டு உரையாடிக்கொண்டிருப்பார்கள். திரவங்கள் நிறைந்த கிண்ணங்கள் காலியாக ஆக மனதும் விருப்பு வெறுப்புமற்ற ஒரு வெற்றிடமாய் மாறிக்கொள்ளத் தொடங்கும். பிறகு எல்லாமே புதிதாய்த் தோன்றுவதுமாதிரியும் எதையும் எதிர்கொள்ளலாம் என்ற தெம்பும் அந்தக்கணங்களில் பொங்கித் ததும்பத் தொடங்கியிருக்கும். ஆனால் இப்போது புத்தரின் நிலைமையைப் பார்த்தால் அதற்கான சாத்தியமே எதுவும் இல்லாதது போலத் தோன்றியது..
புத்தர் நிறைய விடயங்களை கற்பிக்கின்றோம் என்ற பிரக்ஞையில்லாது அவனுக்குள் ஊட்டியிருக்கின்றார். அவன் கண்ட கனவுகளைக் கூட சில இடங்களில் நிஜமாக்கியிருக்கின்றார். ஒரு மழைநாளில் வந்த புத்தரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது முளைத்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணையும் அவளின் குழந்தையும் நிஜமாகவே -3 வருடங்களின் பின்- அவன் தன் வாழ்வில் சந்திததபோது அவனுக்கு மிகவும் வியப்பாயிருந்தது. இன்று அவளும் அவள் குழந்தையும் துயர் கடந்த காலங்களைக் கடந்து ஒரு இளவேனிலுக்காய்க் காத்திருக்கின்றார்கள் என்பதைப்பற்றியும் புத்தருடன் பகிரவேண்டும் என நீண்டநாட்களாய் நினைத்துக்கொண்டிருந்தான்.
புத்தருடன் ஓர் இரவு
-இளங்கோ
மழைத்தூறல் ஓய்ந்து
ஈரம் இரவை
சிறகுகளால் கோதிக்கொண்டிருந்தபோது
வீட்டுக்கு வந்திருந்தார்
புத்தர்
Santa மட்டுமே
புகைக்கூண்டுக்குள்ளால் இறங்குவார்
என்றெண்ணிய
என் நான்கு வயது மகளுக்கு
கோடையில்
சாம்பர் பூத்திருந்த அடுப்பிலிருந்து
தூசி தட்டியபடி
புத்தர் வந்தது வியப்பாயிருந்தது
நான் அருந்துவதற்கு
மிதமாய் கலந்துவைத்திருந்த
வோட்காவை பகிர்ந்தபோது
ஒவ்வொரு மிடறும்
தாகத்திற்கு இதமாய் இருக்கிறதென்றார்
அரசியல் சினிமா
ஜென் செக்ஸ் என
ஒரு பட்டத்தைப்போல
திசையில்லாது உரையாடல் அசைந்துகொண்டிருக்கையில்
புத்தர் திடீரென வினாவினார்
கடந்துபோன காலத்தில்
நீ இழைத்த தவறுகளுக்கு
வருத்தம் கூற விரும்புகின்றாயாயென
நான்
பாவங்கள் விளைவித்த
மனிதர்கள் நிரையாக நிற்க
வெட்கிக் குனிந்தபடி
நடுங்கும் குரலில்
கோருகின்றேன் மன்னிப்பு
இப்போது
மனது மேகமாய் மிதந்து
குதூகலம் மழைநீராய் திரண்டபோது
DJ drop the s*** என்றலறியபடி
ராப் பாடலுக்கு ஆடத்தொடங்குகின்றோம்
நானும் புத்தரும்
நேரம் நள்ளிரவைக்கடந்தபோது
வெறுமையான மதுக்கோப்பைகளையும்
சில நட்சத்திரங்களையும்
துணைக்கு விட்டுவிட்டு
புத்தரும்
எனது நான்குவயது மகளும்
காணாமற்போயிருந்தனர்.
2.
மதியவுணவு
இடைவெளிகளின்போதுதான்
முகையவிழ்த்திருந்தது அவளுடனான நட்பு
அவளையும் இரண்டுவயதுக் குழந்தையையும்
சில மாதங்களுக்கு முன் கைவிட்டு
இன்னொரு பெண்ணுடன்
தன் துணைவன்
வாழத்தொடங்கியிருக்கின்றான்
என்றாள் விழிநீரைத்துடைத்தபடி
எனக்கு வாய்த்ததைப் போல
புத்தர்
அவள் வீடு தேடி
ஓர் இரவில் போகக்கூடும்
அல்லது
அவளிடமும் அவள் குழந்தையிடமும்
நான் புத்தரையும்
காணாமற்போன என் நான்கு வயதுக்குழந்தையும்
என்றேனும் ஒருநாள்
அடையாளம் காணவும்கூடும்.
(Aug 25/2005)
நன்றி: வைகறை (தை, 2010)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நல்ல புனைவு.
3/02/2010 07:28:00 AMஆசை துறக்க சொன்ன புத்தர்?
Post a Comment