பொய்த்துப் போன பருவங்கள்
'...சிறுவர்கள்
தொலைந்துகொண்டிருக்கும் நாட்டை
பூர்வீகமாய்க் கொண்டவர்க்கு
நேசித்தல் என்பது கூட
நம்மை நாமே சிதைத்து உருவழிப்பதுதான்...'
சிறுவயதிலேயே உயிருக்காய் தப்பியோடி ஓடி அகதி வாழ்க்கை பழக்கமாயிற்று விட்டது. பதினமூன்று வயதுக்குப் பிறகு முற்றாக நான் வாழ்ந்த ஊருக்குப் போக முடியாத அளவுக்கு போர் மிக உக்கிரமாகியிருந்தது. அவ்வப்போது 'சமாதானச் சூழல்' வந்து ஆகக்குறைந்தது தாம் வாழ்ந்த இருப்பிடத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் பலருக்கு வாய்த்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு, இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் (High Security Zone) பகுதிக்குள் வருவதால் ஒருபோதும் ஊரையோ வாழ்ந்த வீட்டையோ பின்னாட்களில் பார்க்க முடிந்ததில்லை. இஃதொரு பெரிய இழப்புமில்லை. இன்றைய காலகட்டத்தில் போர் -நான் ஈழத்தில் வாழ்ந்த காலகட்டத்தைவிட - இன்னும் பலமடங்கு உக்கிரமாய் பல நூற்றுக்கணக்கானவர்களை பலி கொண்டும், இடம்பபெயர்க்கவும் செய்து கொண்டிருக்கும்போது எனக்காய் விதிக்கப்பட்ட அகதி வாழ்வில் நான் ஒரளவு 'ஆசிர்வதிக்கப்பட்டவன்' என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் இன்று ஆகக்குறைந்தது, உயிருக்காவது உத்தரவாதமளிக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்க முடிகிறது; எறிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது விரும்புகின்றபோது அவ்வவ்போது எழுதிக்கொண்டிருக்க முடிகின்றது.
போரிற்குள் சிறுவயதிலிருந்து வாழ்ந்ததாலோ என்னவோ, மூர்க்கமாய் விமர்சனங்களை வைக்கவும் எதிர்கொள்ளவும் பழகிய அளவுக்கு பாராட்டுக்களையோ வாழ்த்துக்களையோ எப்படி ஏற்றுக்கொள்வதென்று தெரியவில்லை. எழுதிய ஒரு படைப்புக்கு எப்போதாவது சிறு பாராட்டுக் கிடைக்கும்போது மிகுந்த பதற்றங்களோடே அதை உள்வாங்கிக்கொள்ள முடிகின்றது.
எழுதுவதில் பிரியமுடைய ஒருவருக்கு தான் எழுதிக்கொண்டிருப்பது மலையிடுக்குகளில் சலனமற்றுப் போய்க்கொண்டிருக்கின்றதோ என்ற நினைப்பை, எவரினதோ கடுமையான விமர்சனமோ, சிறு பாராட்டோ நெகிழச் செய்துவிடுகின்றது. பிறர் தனது எழுத்தைக் கவனிக்கின்றார்கள் என்ற நினைப்பு தொடர்ந்து பொறுப்பாக எழுதுவதற்கான ஒருவிதமான மனோநிலையைத் தரத்தான் செய்கின்றது.
ஒரு புதியவனுக்கு, அவன் யாரென்று அவனது பின்புலங்கள் அறியாது, அவனது படைப்பை மட்டுமே முன்னிறுத்தி வழங்கப்படும் ஒரு விருது என்றவகையில், தமிழ்நாட்டு கலை இலக்கிய மன்றம் - தக்கலை சார்பாக நண்பர்கள் நீங்கள் எனது தொகுப்பான 'நாடற்றவனின் குறிப்புகளுக்கு' வழங்கும் 'ஏலாதி இலக்கிய விருதை' ஏற்றுக்கொள்கின்றேன். இவ்விருதை எனக்கான அங்கீகாரமாய் அல்லாது, இனி எழுதுகின்றபோது பொறுப்போடும், முதிர்ச்சியை நோக்கி செல்வதுமாக எழுதவேண்டுமென்ற நினைவூட்டவே -இவ்விருதை- ஏற்றுக்கொள்கின்றேன் எனக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ்விருதை வழங்கும் நண்பர்களுக்கும் தேர்வுக் குழுவிற்கும் நன்றி சொல்கின்ற அதேவேளை 'அடையாளம்' சாதிக்கிற்கும் எனது தனிப்பட்ட நன்றியைச் சொல்லப் பிரியப்படுகின்றேன். எழுதுகின்ற ஒருவனுக்கு ஒரு நல்ல பதிப்பாளர் அதுவும் தமிழ்ச்சூழலில் கிடைப்பது அரிது. எவ்வளவோ தொலைவிலிருந்தாலும், எனது கவிதைகளைத் தொகுப்பாக்க வேண்டுமென்று பிரியப்பட்டபோது, எந்தத் தயக்கமுமில்லாமல் வெளியிட முன்வந்தவர் சாதிக். அது மட்டுமில்லாது, இவ்விருதுக்கும் பிரதிகளை எனது அனுமதியிற்குக் காத்திருக்காது, தனது சுயவிருப்பில் அனுப்பியும் வைத்து உதவியவர். இவ் இனிய கணத்தில் சாதிக்கினதும், உங்கள் அனைவரினதும் கரங்களை நெகிழ்வுடன் பற்றிக்கொள்கின்றேன். இறுதியாக, நான் சிறுவயதில் அகதியாய் அலைந்ததைவிட மிகக் கொடுமையான சூழ்நிலைக்குள் இன்று ஈழத்திலும் உலகெங்கிலும் சிறார்கள் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அகதிகளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அச்சிறார்களுக்கு இவ்விருதைச் சமர்ப்பிக்கின்றேன். இன்னும் இவ்விருதுடன் வழங்கும் பணமுடிப்பைத் தமிழகத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஏதாவதொன்றுக்கு வழங்குமாறு என் சார்பின் இவ்விருதைப் பெற்றுக்கொள்ளும் 'அடையாளம்' சாதிக்கிடம் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
(Aug 15, 2008)
'ஏலாதி' விருதிற்கான ஏற்புரை
In ஏலாதி இலக்கிய விருது, In நாடற்றவனின் குறிப்புகள்Monday, February 01, 2010
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment