1.
நேசத்தின் கசப்பு
மரங்களில் துளிர்த்து
நிலவொன்று தன்னை
தீமூட்டிக் கொன்ற கரியவிரவொன்றில்
இத்தெருக்களின் விளிம்புகளில் தொலைந்திருக்கிறேன்
புராதனத்து மணத்தை
*வளாகத்துப் புறாக்கள் சிறகடித்து பரப்பிய
தேவாலயத்தின் வாசலில்
நாடற்றவனாகவும்
ஒருத்தியின் வெறுப்புக்குரியவனாகவும்
ஒருபொழுதில் கிடந்துமிருக்கிறேன்.
தன் மூதாதையர் நெய்துகொடுத்த
போர்வையைப் பகிர்ந்த பூர்வீகக்குடி
தங்களின் களவாடப்பட்ட நிலங்களின்மேல்
கட்டப்பட்ட இப்பெருநகரத்தின
வரலாற்றைத் துப்புகையில்
சூரியன் யாரையோ தொலைவில்
சுட்டுவிட்டு தலைமறைவாவது தெரிந்தது
வானம் கருஞ்சாம்பலைப் போர்த்தியபடி
கொல்லப்பட்ட உடலைத்தேடி
பகலில் இரகசியமாய் அலைந்தது
இன்னமும் உலர்ந்துவிடாத
உயிர்த்தலுக்கான பச்சையத்தை
நேசமாயொருத்தி பகிர வந்தபோது
நாடற்றவர்களான நாமிருவரும்
இன்னமுமித்தெருக்களில்
திசைகளற்று அலைவதற்கான
சந்தர்ப்பங்கள் விழித்திருக்கின்றதென்றபடி
விடைதந்தார் பூர்வீகக்குடி
2.
இன்று
நிகழ்கின்ற ஊழிப்பெருங்கூத்தில்
நின்று அழுவதற்கான காலங்கூட இல்லை
விழி நிரப்புகின்ற கண்ணீர்த்துளிகளை
குரல்களிலும் பதாதைகளிலும்
மறைத்து வைத்து
எவருமே செவிமடுக்காத சூனியத்தில்
எங்களைக் காப்பாற்றுங்களெனக் கெஞ்சுகின்றோம்
படுகொலைகளை நிறுத்தச்சொல்லி
எங்களோடு கூடவே
உரத்துக் கத்தும் 9 வயது கீர்த்தி
தமிழ் மக்களைக் காப்பாற்ற
ஏனோர் சீனப்பெருஞ்சுவர் கட்டியிருக்கக்கூடாதென்கிறான்
சிறுவர்களுக்கு கடந்த காலமோ
யார் நல்லவர் கெட்டவரென்ற
பகுப்பாய்வுகளுக்கோ அவசியமிருப்பதில்லை
இருள்கின்ற இக்கணத்து வானத்திலிருந்து
தெறிக்குமொரு மின்னலைப்போல
இறந்தவர்கள் நாளை உயிர்ப்பார்களென
கனவு காண்கிறார்கள் அவர்கள்
பிரிய கீர்த்தி,
என்றேனும் ஒருநாள்
எல்லோரும் நிதானமாய்க் கேட்கக்கூடிய
உனக்கதிகாரமுள்ள சபையிலிருந்து...
நெடுஞ்சாலையில் வாத்துக்கள் நடந்துபோனாலே
கார்களை மணிக்கணக்கில் நிறுத்தி
வழிவிடும் இம்மக்கள்
பல்லாயிரக்கணக்கானோர் அழிவின்போது
மவுனம் சாதித்து தங்களை நிர்வாணமாக்கியதையும்
எங்களைப் பகடைகளாக்கி
சூதாடிய வல்லரசுகள் அடையாளமின்றி
உடைந்து போனதையும்
என் கல்லறை முன்வந்து செப்பு
அப்போது ஓர் ஊற்றாய் அழுது தீர்க்கிறேன்
ஏன் சிச்சியா
எல்லோரும் அழும்போதும்
நீயின்னும் அழவில்லையெனும் உன் கேள்விக்கு.
May 10, 2009
*Toronto Campus
(அரசியல் முரண்களிற்கு அப்பாற்பட்டு, தீக்குளித்த முருகதாசனின் ஓராண்டு நினைவுகளிற்கு Feb 12, 2009)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
எங்களின் விருப்பமின்மைகளை தங்களின் விருப்பமாய் எம்மீது எழுதிச் செல்லும் கரங்களை ஏற்பு மறுப்பின்றிச் சகித்தாக வேண்டியிருக்கிறது எல்லாவிடத்தும் -கணங்களை புரட்டும் வெறி மனதோடும் .
2/21/2010 01:54:00 AMஓவென்றழுத பெருங்குரலில் உறைந்த காலம் திரும்ப வந்து உங்களிடம் நியாயம் கேட்கும் அப்போதும் வைத்திருங்கள் ஒரு நீசத்தனம் நிறைந்த வார்த்தையை நாமெல்லாம் நாகரீகம் நிறைந்தவர்கள் என்று நயம்பட பேச
Post a Comment